Home Historical Novel Jala Deepam Part 2 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

53
0
Jala Deepam Ch3 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch3 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –3 கண்ணாடியில் தெரிந்த கட்டழகி

Jala Deepam Part 2 Ch3 | Jala Deepam | TamilNovel.in

அபாயத்தை வலியுறுத்தக் கப்பல் சங்கு அலறிய தாலும், அறைக் கதவும் தடதடவெனத் தட்டப்பட்ட தாலும், பரஸ்பரப் பிணைப்பிலிருந்தும் அணைப்பின் இணைப்பிலிருந்தும் பிரிந்தெழுந்த காதலரிருவரும் ஒருவரையொருவர் சிறிது நேரம் பார்த்துக் கொண்டனர். அந்த இருவர் பார்வையிலும் ஏமாற்றமிருந்தது, மஞ்சுவின் பார்வையில் ஏமாற்றத்துடன் வெட்கமும் கலந்திருந்தது. அசடு வழிய விழித்த இதயசந்திரனை நோக்கி, “கதவைத் திறவுங்கள். மாலுமி ஏதாவது தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறான்” என்று கூறிப் புன்முறுவலும் செய்தாள் மஞ்சு.

“சரி” என்று அலுத்துக்கொண்டு கதவைத் திறக்கப் போன இதயசந்திரனை, “இருங்கள்! இருங்கள்! ஒரு போர்வையை மேலே சுற்றிக் கொள்கிறேன். சட்டையின் பித்தான்களைப் பிய்த்து விட்டீர்களே!” என்று அவசர அவசரமாகப் பஞ்சணையிலிருந்து இறங்கி ஒரு. துப்பட்டியை எடுத்து மேலே போர்த்திக் கொண்டாள்.

பிறகு கதவைத் திறந்த இதயசந்திரன், எதிரே நின்ற ஹர்கோவிந்தை நோக்கி, “எதற்கு இப்படிக் கதவை இடித்தாய்?’ என்று வினவினான் கோபத்துடன்.

“முக்கிய விஷயமில்லாவிட்டால் கதவை இடிப்பேனா?” என்றான் ஹர்கோவிந்த் அவசரத்துடன்.

“நாங்களும் முக்கிய விஷயத்தைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று சுட்டிக் காட்டினான் இதய சந்திரன்.

“இருக்கும். இல்லாவிட்டால் கதவைத் தாளிட்டுப் பேசுவீர்களா?’ என்று ஹர்கோவிந்த் மிகுந்த தாழ்மையுடனும் அடக்கத்துடனும் பதில் சொன்னான்..

அது மேலுக்கு அடக்கமென்றும் உண்மையில் ஹர்கோவிந்த் தன்னைக் கேலி செய்கிறான் என்றும் புரிந்து கொண்ட இதயசந்திரன் கேட்டான்: “சரி: அப்படி என்ன தலை போகிற காரியம்? சொல்” என்று.

“தலை மட்டுமல்ல போகக்கூடியது, கப்பலே போகிறகாரியம்” என்று விளக்கினான் ஹர்கோவிந்த்.

“கப்பல் போகிற காரியமா?”

“ஆம்.”

“எந்தக் கப்பல்? ஜல தீபமா?”

“ஆம்.”

“ஏதாவது சொப்பனம் கண்டாயா?”

“கண்டது சொப்பனமாயிருந்தால் கதவை இடிக்கத் துணிந்திருக்க மாட்டேன். நீங்களே வந்து பார்க்கலாம்” என்ற ஹர்கோவிந்த் தனது கையிலிருந்த தூரதிருஷ்டிக் கண்ணாடியை இதயசந்திரன் கையில் கொடுத்தான்.
பிடுங்காத தோஷமாக அதை ஹர்கோவிந்தின் கையிலிருந்து வாங்கிக் கொண்ட இதயசந்திரன் அறையைவிட்டு வெளியே வேகமாக நடந்தான். தளமெங்கும் மாலுமிகள் நடமாட்டம் பலமாயிருந்தது. இரண்டாண்டுகள் இதய சந்திரன் தலைமையில் பணியாற்றியதால் எந்தெந்த நிலையில் எதெதை எப்படியெப்படிச் செய்ய வேண்டுமென்றறிந்த அந்த மாலுமிகளில் சிலர் பாய்மரத்தின் நடுத் தண்டிலிருந்த பெரு விளக்கைத் தவிர மற்ற விளக்குகளை அணைத்தனர். இன்னும் சில துடுப்புத் துழாவுவோர் களைக்கும்போது கை கொடுக்கக் கீழ்த்தளத்துக்கு ஓடினர். சிலர் சுக்கானைத் திருப்புவதிலும், தள பீரங்கிகள் சரியாக இருக்கின்றனவா என்று பரிசோதிப்பதிலும் முனைந்தனர். உபதளபதி உத்தரவை அந்தந்தப் பகுதிகளுக்குத் தெரிவிக்க அறைகூறுவோர் ஆங்காங்கு நின்றனர். இப்படி மேல் தளத்திலும் கீழ்த் தளத்திலும் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டே நடுப்பாய்மரத்துக்கு வந்த இதயசந்திரன் பாய்மரக் கயிற்றில் தொற்றி விடுவிடு என்று மேலே ஏறி அம்மர உச்சிக்குச் சிறிது கீழிருந்த பலகைமீது நின்று கொண்டான். பலமாக வீசிய காற்று பாய்மரத்தை ஆட்டிக் கொண்டிருந்தது. அலைகள் சற்றுப் பெரிதாகிக் கப்பலின் சீரான கதியை அசைத்து மாற்றிக்கொண்டிருந்தது. அத்தனை ஆட்டத்தையும் அசைக்கலையும் லட்சியம் செய்யாமல் பாய்மரத்தில் சாய்ந்து தூரதிருஷ்டிக் கண்ணாடியை கண்ணில் வைத்துக் கைகளால் அதை நீட்டியும் குறைத்தும் சரி செய்து கொண்ட இதயசந்திரன், தனது கப்பலை எதிர்நோக்கி மூன்று கப்பல்கள் வருவதை உணர்ந்தான். அவன் அவற்றைப் பரிசீலித்து முடித்த சமயத்தில் மஞ்சுவும் புதுச்சட்டையையும் சராயையும் அணிந்து தலையிலொரு துண்டையும் குழலை அடக்கக் கட்டி மேலேறி வந்து பாய்மர உச்சித் தட்டில் இதயசந்திரனுடன் நின்றாள். “எதிரிக் கப்பலா வருவது?” என்றும் வினவினாள்.

பதிலுக்குத் தூரதிருஷ்டிக் கண்ணாடியை அவளிடம் அளித்த இதயசந்திரன், “நீயே பார்!” என்றான். அவள் நீண்டநேரம் பார்த்துவிட்டு, “மூன்று கப்பல்கள் வருகின்றன” என்றாள் அவனை நோக்கி.

‘ஆம்” என்று ஆமோதித்தான் அவன்.

”ஒன்றுதான் போர்க் கப்பல், மற்ற இரண்டும் சிறியவை, சாதாரணக் கப்பல்கள்” என்று கூறினாள், அவள் தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலம் பார்த்துக் கொண்டே.

“வேறென்ன தெரிகிறது?’ என்று கேட்டான் இதயசந்திரன்.

“மூன்றும் பிரிட்டிஷ் கப்பல்கள். பிரிட்டிஷ் கொடி இருக்கிறது.”

“அவ்வளவுதானா?”

“அவ்வளவுதான் எனக்குத் தெரிகிறது. உங்களுக்கு” என்று வினவினாள் மஞ்சு.

இதயசந்திரன் அவளிடமிருந்து தூரதிருஷ்டிக் கண்ணாடியை வாங்கி மீண்டும் அக் கப்பல்களைக் கவனித்துக் கொண்டே, “மஞ்சு! ஒன்று பெரிய போர்க் கப்பல். ஜல தீபத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. இரண்டு பக்கங்களிலுமாகச் சேர்ந்து பதினெட்டு பீரங்கிகள் அடித்தள வாய்களில் மட்டும் இருக்கின்றன. தவிர , தளத்தில் இரு பெரும் சுழல் பீரங்கிகள் இருக் கின்றன. கூட வருபவை சிறிய கப்பல்கள் தான். ஆனால் பெரிய கப்பலின் பயங்கரம் அவற்றுக்கும் உண்டு. மூன்றில் ஒன்று ப்ரிகேட், இன்னொன்று யாக்ட், மூன்றாவது கெட்ச்” என்று கூறினான்.

“விளக்கிச் சொல்லுங்கள்” என்றாள் மஞ்சு. மஞ்சு அவனைக் கேட்டதற்குக் காரணம் இருந்தது. கப்பல் பாகுபாடுகள், பிரிவுகள் அவளுக்குத் தெரியாததல்ல. இருப்பினும் அவன் சென்ற இரண்டாண்டுகளில் அடைந் துள்ள அனுபவத்தை எடை போடுவதிலும், எதையும் அவன் வாயால் கேட்பதிலும் அவளுக்குத் திருப்தியிருந்தது
.
எப்போதும் கேட்கிற பாணியில்தான் அவள் கேட்டாளென்றாலும், அவன் எப்பொழுதும் சொல்கிற முறையில் பதில் சொல்லவில்லை. இம்முறை அவன் பதிலில் சிறிது கலக்கமும் இருந்தது.

“ப்ரிகேட் இரண்டு தளங்களுள்ள போர்க் கப்பல். பூர்ண ஆயுத பலமுள்ளது. அதன் பெயர்கூட அதோ பக்கப் பலகையில் பெரிதாக எழுதப்பட்டிருக்கிறது. ‘டிபையன்ஸ்’ என்று எழுதியிருக்கிறார்கள், பொருள் தெரியுமா மஞ்சு அதற்கு?” என்று வினவினான் இதய சந்திரன்.

“தெரியாது” என்றாள் மஞ்சு.

“எந்த ஆபத்தையும், யாரையும் அலட்சியம் செய்யக் கூடியது. போரை லட்சியமின்றி நடத்தக் கூடியது என்று பெயர். தவிர, ப்ரிகேட் என்ற சொல் ப்ரிகேடா என்ற சொல்லிலிருந்து வந்தது. ப்ரிகேடா ஒரு கடற்பறவை. அந்தப் பறவை எதையும் கொத்திக் கொன்றுவிடும் குரூரத் தன்மையுள்ளது” என்றான் இதயசந்திரன்.

“அப்படியானால் இதுவும் நம்மைக் கொத்திக் கொன்று விடுமா?” என்று கேட்டாள்.

“பார்ப்போம்” என்ற இதயசந்திரன், “மஞ்சு, இன்னொன்று கெட்ச் என்று சொன்னேனல்லவா? அது கடலோரமாகச் செல்லும் சிறு வணிகக்கப்பல். அதன் பெயர் ‘ஆன்’ என்று எழுதியிருக்கிறது. அதிலும் பீரங்கிகள் இருக்கின்றன. ஆயுதம் தரித்த மாலுமிகள் இருக்கிறார்கள். அது தவிர, ‘யாக்ட்’ என்பது உல்லாசப் படகு. சிறு கப்பல் போன்றது. ஆனால் இந்த யாக்டில் சின்னஞ்சிறு பீரங்கிகள் இரண்டிருக்கின்றன. தோற்றத்தில் சிறிதானாலும் பெரும் சேதம் விளைவிக்கக் கூடியவை. அதன் பக்கத் துவாரங்களிலும் பீரங்கிகள் எட்டிப் பார்க்கின்றன. ஜல தீபத்தை வேட்டையாட மூன்று பலமுள்ள நாவாய்கள் நெருங்குகின்றன’ என்றும் கூறினான்.

அப்படி அவன் கூறிக்கொண்டே யிருக்கையில் திடீரென சொற்களை நிறுத்தினான். அவன் முகத்தில் போர்க் கவலை போய் வியப்பின் குறி ‘நன்றாகப் படர்ந்தது. அந்த முக மாறுதலை மஞ்சுவும் கவனித்தாள். “என்ன பார்க்கிறீர்கள்? வியப்பதற்கு ஏதாவதிருக்கிறதா?” என்று வினவவும் செய்தாள்.

”ஒன்றுமில்லை மஞ்சு, சீக்கிரம் கீழே சென்று போருக்கு ஏற்பாடு செய். இந்தப் பாய்மரத் தண்டிலுள்ள நடு விளக்கையும் அணைத்துவிடச் சொல், எதிரிக் கப்பல்கள் முழு விளக்குகளுடன் ஜாஜ்வல்யமாக வருகின்றன” என்று கூறினான்.

மஞ்சு போகவில்லை. “என்ன பார்க்கிறீர்கள்? எதைப் பார்த்து வாயைப் பிளந்தீர்கள்?” என்று கேட்டு, “அதை இப்படிக் கொடுங்கள்” என்று தூரதிருஷ்டிக் கண்ணாடியைப் பிடுங்கிக் கொண்டு பார்த்தாள்.

‘ஆன்’ என்ற சிறு வணிகக் கப்பலில் அழகியொருத்தி நிலவுபோல் நடுவில் நின்றிருந்தாள். அந்த வெள்ளைக் காரிக்குப் பதினைந்து வயதிருக்கலாம். பருவத்தின் திரட்சி பரிபூர்ணமாயிருந்தது அவள் தோற்றத்தில். அவள் பக்கத்தில் ஒரு வெள்ளைக்கார வாலிபனும் நின்றிருந்தான். அவன் கை அவள் கழுத்தைச் சுற்றி வளைந்து கிடந்தது. இதைக் கண்ட மஞ்சு , ”வீரரே! அவள் உங்களுக்கு எட்டாப் பழம். இந்தாருங்கள். வேண்டு மானால் பார்த்துப் பல்லிளித்துக் கொண்டிருங்கள்” என்று முரட்டுத்தனமாக அவனிடம் தூரதிருஷ்டிக் கண்ணாடியைத் திணித்துவிட்டுப் பாய்மரக் கயிற்றில் தொற்றி இறங்கிச் சென்றாள் கடுவேகத்துடன்.

‘அவள் எட்டாப் பழமாம்! இவள் மாத்திரம் என்னவாம்? இரண்டு வருஷமாகக் கூட இருக்கிறேன். கிட்டே நெருங்க விட்டாளா? இன்று நெருங்க முற்பட்டேன். முடிவு என்ன? மறுபடியும் போர்’ என்று முணுமுணுத்துக் கொண்டே இதயசந்திரனும் கீழே கயிற்றில் இறங்கினான். இறங்கியதும் உத்தரவுகளைக் கிடுகிடுவெனப் பிறப்பித் தான். ஹர்கோவிந்தைப் பார்த்து, நீ கீழே துடுப்புத் துழாவும் இடத்திற்குப் போ” என்று கூறிவிட்டு, சற்று எட்ட இருந்த ஒரு மாலுமியை நோக்கி, “இப்ரஹீம்! சுக்கானை நீ கவனித்துக் கொள். யாரங்கே மாலுமி! நடுப்பாயைத் தவிர மற்ற இரு பாய்களையும் அவிழ்த்து விடு, ஜலதீபத்திற்கு வேகம் வேண்டாம். யாராவது ஒருவன் காம்பஸ் (திசை காட்டும் கருவி) எடுத்துவா” என்று உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு ஜல தீபத் தின் முகப்பில் நின்று கொண்டிருந்த மஞ்சுவிடம் சென்று, “தலைவியின் உத்தரவை எதிர்பார்க்கிறேன். இக்கப்பலின் வேகத்தைத் தளர்த்தி முதலில் அந்த ஆயுதப் படகைச் சுடப்போகிறேன். பிறகு போர்க்கப்பலின் பாய்மரங்களைச் சுட்டு வீழ்த்தப் போகிறேன். கடைசியாக அந்த வணிகக் கப்பலைத் தாக்க உத்தேசம்” என்று தனது போர்த் திட்டத்தை விவரித்தான்.

மஞ்சு சரேலென்று திரும்பி அவனை நோக்கினாள். “ஆன் என்று பெயர் போட்டிருக்கிறதே அக்கப்பலா?” என்று வினவினாள் துரிதமாக.

“ஆம் தலைவி” என்றான் இதயசந்திரன்.

“கூடியவரை சேதமில்லாமல் அதைப் பிடியுங்கள்.”

“செய்கிறேன்.”

“செய்கிறேன் என்ன! அப்படித்தான் செய்யப் போகிறீர்கள்” என்ற மஞ்சு பல்லைக் கடித்தாள்.

“எதற்குக் கோபிக்கிறாய் மஞ்சு?” என்று வினவினான்.

“ஏனா? அந்த வெள்ளைக்காரியிருக்கிற கப்பலைப் பற்றி என்ன அக்கறை உங்களுக்கு? அதைக் கடைசியில் தாக்க வேண்டுமாம்!”

“மஞ்சு! மஞ்சு! இதென்ன பைத்தியம்? அதைக் கடைசியில் தாக்குவதில்லாபமிருக்கிறது.”

“ஆமாம். இருக்கிறது லாபம் உங்களுக்கு” என்று கூறிய மஞ்சு வேகமாக நடந்து மாலுமிகள் இரண்டு பாய்களை இறக்குவதைக் கவனிக்கத் தொடங்கினாள்.

இதயசந்திரன் இதயத்தில் கோபம் பொங்கி எழுந்தது.

சுக்கான் பிடித்த இப்ரஹிமிடம், “இப்ரஹிம்! வழக்க மாகப் போரிடுகிறபடி போர்க் கப்பலுக்கு எதிரில் நமது மரக்கலத்தின் பக்கப் பகுதியைத் திருப்பாதே. போர்க் கலத்துக்கு எந்தப் பழுதையும் ஆரம்பத்தில் ஏற்படுத்த நான் விரும்பவில்லை. போர்க் கப்பல் வந்தால் அதற்கு நேர் எதிர்த் திக்கில் அதைவிட்டு விலகி ஜலதீபம் ஓடட்டும், அதைத் தொடர்ந்து இரு சிறு கப்பல்கள் வருகின்றன. ஜல தீபம் அவற்றை நோக்கி மட்டும் போகட்டும். பாய்களில் இரண்டை இறக்கி விட்டதால் சுக்கானை நீ அளவுடன் திருப்பலாம்” என்று உத்தரவிட்ட இதய சந்திரன் கீழ்த்தளம் சென்று, “ஹர்கோவிந்த்! துடுப்புக்களை நான் உத்தரவிடும் வரை வேகத்துடன் துழாவ வேண்டும். ஜல தீபம் அதிகமாக நகராமல் தத்தளிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறிவிட்டு, ‘பர்னாண்டோ’ என்ற போர்ச்சுகீஸியனைத் தன்னுடன் வரும்படி அழைத்துக் கொண்டு மேல்தளம் வந்தான். அவனுக்குப் பின்வருமாறு உத்தரவிட்டான்: “பர்னாண்டோ! நாம் கரைக்கு அருகிலிருக்கிறோம். ஆகவே கரையை நோக்கி இருமுறை பீரங்கியால் சுடு. பிறகு ஜல தீபம் தப்பித்துக்கொள்ளப் போகிற நிலையில் அது எதிரி போர்க் கப்பலுக்கு நேர் எதிர்த் திக்கில் கரை நோக்கி ஓடட்டும்.”

“போர்க் கப்பலிடமிருந்து ஓடினால் அது நம்மை விடுமா?’ என்று பர்னாண்டோ வினவினான்.

“விடக்கூடாது என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.”

“தரையை நோக்கி பீரங்கி வெடி வீசினால் உதவி அழைப்பதாக அர்த்தமல்லவா?”

“அப்படித்தான் அர்த்தம்.”

“இது தங்கள் பெயருக்கும் கீர்த்திக்கும் தகுந்த தல்லவே!”

“பெயரில் என்ன இருக்கிறது” என்று கூறிய இதய சந்திரன் கப்பலின் முனைக்குச் சென்று தூரதிருஷ்டிக் கண்ணாடியால் எதிரிக்கப்பல்களைச் சில விநாடிகள் நோக்கினான். பிறகு கூவினான், “திருப்பு சுக்கானை” என்று. ஜல தீபம் மெல்லத் திரும்பியது. “துழாவுங்கள் பலமாக” என்று மீண்டும் கூவினான். தளத்திலிருந்து கீழ்த்தளம் செல்லும் வாயிலில் நின்றிருந்த மாலுமி, “துழாவுங்கள் பலமாக” என்று அதைத் திருப்பிக் கூவினான் கீழ்ப்புறம் நோக்கி.

“பர்னாண்டோ? சுடு தரையை நோக்கி” என்றான்.

தரையை நோக்கி இருமுறை பீரங்கி பலமாகச் சப்தித்தது. ஜல தீபம் கரை நோக்கி நகர்ந்தது. அதே சமயத்தில் எதிரிகளின் கப்பல்களில் பெரும் சுறுசுறுப்புக் காணப்பட்டது. அவற்றின் பாய்கள் புடைத்து எழுந்தன. இரண்டொரு பீரங்கிகள் வெடித்து ஜல தீபத்தை எச்சரிக்கை செய்தன. அந்தக் கப்பல்களிலிருந்து தப்பி ஜல தீபம் புறமுதுகு காட்டி ஓடிக் கொண்டிருந்தது.

மஞ்சு தடதடவென்று இதயசந்திரனை நோக்கி நடந்து வந்தாள். “புறமுதுகு காட்ட வெட்கமாயில்லை உங்களுக்கு?” என்று சீறினாள்.

“இல்லை” என்ற பதில் இதயசந்திரனிடமிருந்து திட்டமாக வந்தது.

அதே சமயத்தில் பிரிட்டிஷ் போர்க் கப்பலான டிபையன்ஸ் பெரும் வெடிகுண்டு ஒன்றை ஜல தீபத்தின் மீது வீசியது.

Previous articleJala Deepam Part 2 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here