Home Historical Novel Jala Deepam Part 2 Ch30 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch30 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

63
0
Jala Deepam Ch30 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch30 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch30 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –30 திருவுள ஓலை

Jala Deepam Part 2 Ch30 | Jala Deepam | TamilNovel.in

மௌன நிலை பயத்திலும் ஏற்படுகிறது. பக்தியிலும் ஏற்படுகிறது. பயத்தில் ஏற்படும் மௌனம் மன உளைச் சலால் ஏற்படுகிறது. பக்தியில் விளையும் மௌனம் ஆறுதலாலும் ஆனந்தத்தாலும் ஏற்படுகிறது. ஆறுதலும் ஆனந்தமும் கலந்து நிலவும் நிலையை சாந்தி என்கிறோம். அந்த ஆறுதலில், ஆனந்தத்தில், இரண்டும் கலந்த சாந்தியில், நீண்ட நேரம் மௌனமாகவே நின்ற இருவரில் முதன் முதலாக சுயநிலையை அடைந்த இதயசந்திரன் நிலத்தில் நிலைக்க விட்டிருந்த கண்களை மெள்ளத் தூக்கிக் கடற்படைத் தளபதியை நோக்கினான். “ஸார்கேல்!” என்று மெதுவாக அழைக்கவும் செய்தான். ஏதோ ரகசிய வார்த்தை கூறுவதுபோல் உதிர்ந்த அந்த ஒற்றைச் சொல். கனோஜியைக் கனவிலிருந்து நனவுக்கு இழுக்கவே அவர் முகத்தில் பழைய புன்சிரிப்பும் விஷமக் களையும் நன்றாகப் படர்ந்தன. “தமிழா, உன் வியாதி எனக்குப் பிடித்துக் கொண்டது” என்று கூறிய கனோஜி அவன் முதுகில் அறைந்தார் மகிழ்ச்சியுடன்.

தடித்த அவர் கை கொடுத்த அறையின் வலியால் சற்று முகம் சுளித்த தமிழன், “என் வியாதியா? எதைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று வினவினான். !

“சற்று முன்பு குலாபி கோயிலில் நீ காட்டிய பக்திப் பரவசம், அது என்னையும் பிடித்துக்கொண்டது போல் தோன்றுகிறது” என்று சற்று முன்பு தாம் எட்டிய நிலையை மறைக்க எண்ணி வேடிக்கையாகப் பதில் கூறி நகைக்கவும் செய்தார். அத்துடன் அவனைத் தோளைப் பிடித்து அழைத்துக்கொண்டு தோர்லாவாடாவிலிருந்து: மீண்டும் வெளியே சென்றார்.

ஸார்கேலும் ஜல தீபத்தின் தளபதியும் இணைபிரியாத தோழர்கள் போல வெளியே சென்றதை அரண்மனைக் காவலர்கள் வியப்புடன் பார்த்தனர்.

சுமார் கால் ஜாமத்திற்கு முன்பே அரண்மனைக்கு வந்த இருவரும் கோட்டையே உறங்கப்போகும் சமயத்தில் எதற்காக வெளியே செல்கிறார்கள் என்ற கேள்வியைக் காவலர் உள்ளூர எழுப்பிக்கொண்டாலும் வாய்விட்டுக் கேட்கத் திராணியிராததால் தலை வணங்கி வழிவிட்டு நின்றார்கள். அவர்கள் கிளம்பும்போது எதிரே வந்த கோட்டைக் காவலர் தலைவன் மட்டும் ஏதோ கேட்க வாய் திறந்தாலும் அவனை ஒரு கையால் வழியிலிருந்து ஒதுக்கி விட்டு ஆங்கரே மேலே நடந்தாராதலால் அவனும் வாயடைத்து நின்றான். காவலர் தலைவன் பிரமையையோ காவலர் வியப்பையோ சிறிதும் லட்சியம் செய்யாமல் தமது கால்களை வீசி சிங்கம்போல் நடந்த கனோஜி ஆங்கரே சுமார் இருநூறு அடிகளுக்கு மேல் நடந்து சென்று . மஹாதர்வாஜாவுக்கு வந்து அதன் பக்கப் படிகளில் ஏறி கோட்டை மதிள்சுவரின்மீது நின்று கொண்டார். தன்னைத் தொடர்ந்து ஏறிவந்து அருகில் நின்று கொண்ட இதயசந்திரனை நோக்கி, “தமிழா! சுற்றுமுற்றும் பார். இங்கிருந்து உனக்குக் கடல் கேந்திரங்கள் அனைத்தும் தெரியும். இந்தக் கோட்டையின் பிரதானச் சுவர் சிறியது; வெளிச் சுவர் பெரியது. சுமார் 25அடி உயரமுள்ளது. உள் சுவரைக் காக்க வெளிச்சுவர் பெரிதாகக் கட்டப்பட்டிருக்கிறது. எத்தனை பெரிய கப்பல்; எத்தனை பெரிய பீரங்கி கொண்டு சுட்டாலும் உள் கோட்டையைத் தொடமுடியாது. இதைத் தாக்க ஒரே ஒரு வழிதான். கரையில் இறங்கி வந்து தாக்க வேண்டும். கரையில் இறங்கி வருபவர்களை அழிக்க இக்கோட்டையில் பலமான பீரங்கிகள் இருக்கின்றன. இதன் பதினேழு ஸ்தூபிகளில் பதினேழு பீரங்கிகள் இருப்பதால் இறங்கும் படை எந்தப் பக்கம் இறங்கினா லும் அழிக்கப்படும். இந்தப் பதினேழு பீரங்கிகள் தவிர வேறு பல பீரங்கிகளையும் உள்மதிள் சுவரிலும், வெளி மதில் சுவரிலும் பொருத்தலாம். இப்பொழுது உள் வெளிச் சுவர்களில் பீரங்கிகளில் சிலவே இருக்கின்றன. நாம் மேலும் பீரங்கிகளை அமைத்து இக்கோட்டைச் சுவர்களுக்குப் பயங்கரத் தீ நாக்குகள் பலவற்றை அளிப்போம். குலாபியின் சுடர் நாவைப்போல் இவை இயங்கினால் இக்கோட்டையை யாரும் அணுக முடியாது’ என்று கூறிக் கொண்டே பதினேழு ஸ்தூபிகளையும் மதிள்களில் தாம் பீரங்கிகளை அமைக்க உத்தேசித்திருக்கும் இடங்களையும் சுட்டிக் காட்டினார்.

இதயசந்திரன் கண்கள் அவர் கை காட்டிய இடங்களி லெல்லாம் சென்றன. கொலாபாவின் இரவுத் தோற்றமே அவனுக்குப் பயங்கரமும் இன்பமும் நிறைந்த தோற்றமாகத் தெரிந்தது. அத்துடன் பதினேழு ஸ்தூபிகளின் அமைப்பையும் அப்பொழுதுதான் சரியாகப் பார்த்தான் அவன். அந்த ஸ்தூபி ஒவ்வொன்றிலும் விளக்கு ஏதும் எரியாவிட்டாலும் உள்ளே ஒரு வீரனும், கடலை எட்டிப் பார்த்து ஒரு பீரங்கியும் இருக்கும் என்று திட்டமாகப் புரிந்துகொண்டான் தமிழன். அந்தப் பதினேழு ஸ்தூபி களிலும் சரி, கோட்டை மத்தியிலிருந்த மாபெரும் ஸ்தூபியான மாணிக்கவாடாவிலும் சரி, விளக்கேது மில்லாவிட்டாலும் கோவில் உச்சிகளிலும் வாயில்களிலும் எரிந்த விளக்குகள் அக்கோட்டையின் அழகை அந்த இரவில் மிகைப்படுத்திக் காட்டின. எதிரே துறைமுகத்தில் நின்ற கப்பல்களின் விளக்குகள் வேறு அக்கோட்டையின் கழுத்துக்குக் கெம்பு மாலை அணிவித்திருந்த பிரமையை அளித்தன. நாற்புறமும் விர்ரென்று வீசிய கடற்காற்றும் அலை ஓசையும் அவன் உடலுக்கும் இதயத்துக்கும் பெரும் சாந்தியை அளித்தன. அதனால் பெருமுச்செறிந்த இதயசந்திரன் தோளைப் பிடித்து அழுத்திய ஆங்கரே, “தமிழா! இக்கோட்டையை நான் முன்பே பலப்படுத்தி யிருப்பேன். அதற்குப் பல இடையூறுகள் இருந்தன. போர்ச்சுக்கீஸியர் இந்தக் கொலாபாவுக்கு அருகிலுள்ள சேவூலில் பெரும் பலத்துடன் இருந்தார்கள். அடுத்து ஜன்ஜீராவிலுள்ள ஸித்திகளின் பலமும் அபரிமிதமாயிருந்தது. அவ்விருவர் ஆதிக்கத்தையும், பூராவாக ஒடுக்க முடியவில்லையாயினும், ஓரளவு சமாளிக்கும் நிலைக்குக் கொண்டு வர இத்தனை ஆண்டுகள் பிடித்தன எனக்கு. இனி நான் தெற்கே நீண்ட தூரத்திலுள்ள விஜயதுர்க்கத்தில் இருக்கத் தேவையுமில்லை. ஆங்காங்கு உள்ள நமது துறைமுகக் கோட்டைகள் சில இப்பொழுது வலுவாக இருக்கின்றன. இதை வலுப்படுத்தித் தலைக் கோட்டையாக்கிக் கொண்டால் இது நமது கடலாதிக் கத்தின் வடகோடியாகவும் விஜயதுர்க்கம் தென்கோடி யாகவும் இருக்கும். நம்மை மீறிக் கப்பல்கள் இந்த கடலில் சஞ்சரிக்க முடியாது” என்றும் கூறினார்.

ஸார்கேலின் தெளிவையும் திடீரென அவர் திட்டம் வகுத்து அதைச் செயல்படுத்த வந்துவிட்ட வேகத்தையும் எண்ணிப் பார்த்த தமிழனுக்கு அவரிடமிருந்த பக்தி அதிக மாயிற்று. ”ஆம்! ஆம்! இரு துருவங்களில் நமது பலமிருந் தால் இடையில் எதிரிகள் நடமாடுவது கஷ்டம்” என்றான் இதயசந்திரன் அவர் கூறியதை ஆமோதித்து.

“ஆம் தமிழா! எதிரிகள் சஞ்சாரத்தை ஓரளவு கடலில் நிறுத்தலாம். ஆனால் அதற்கு நமது பலம் மட்டும் போதாது” என்றார் ஆங்கரே.

“வேறு என்ன வேண்டும் ஸார்கேல்?” என்று வினவினான் இதயசந்திரன்.

“பிறர் பலவீனமும் அதற்குத் தேவை” என்று சுட்டிக் காட்டினார் ஸார்கேல்.

ஜலதீபம் “பிறர் பலவீனமா?” என்ற தமிழன் கேள்வியில் வியப்பு மண்டிக் கிடந்தது.

“ஆம். பிரிட்டிஷ்காரர்கள், போர்ச்சுகீஸியர், ஸித்திகள் ஆகிய மூவரும் சேர்ந்து விட்டால் நமது நிலைமை இங்கு ஆபத்தாகிவிடும். அவர்கள் பலம் அதிகமாகும். அவர்கள் பிரிந்து நின்றால் அவர்களுக்குப் பலவீனம், நமக்கு அனுகூலம். பிரிட்டிஷார், போர்ச்சு கீஸியர் ஸித்திகள் இவர்களுக்குள் எப்பொழுதும் ஒற்றுமை கிடையாது. ஆனால் நம்மை எதிர்க்க ஒன்றுபடு வார்கள். ஆகவே ஒருவரையோ இருவரையோ நமக்கு நண்பர்களாக்கிக் கொள்வது நல்லது. முதலில் பிரிட்டிஷா ரிடம் நட்புக் கொள்வோம். மூவரில் ஒருவரைப் பிரிப்போம். பிரிட்டிஷாரை நாம் பிரித்தால் யுக்தியுள்ள வர்களைப் பிரிக்கிறோம். யுக்தியைப் பிரித்துவிட்டால் தீர்ந்தது மற்றவர் பலம்” என்று சுட்டிக் காட்டினார் கனோஜி.

மீண்டும் மீண்டும் கனோஜி பிரிட்டிஷாரின் நட்பிலேயே மனத்தை ஊன்றுவதைக் கவனித்த இதய சந்திரன் ஏதோ பெரும் திட்டத்தை கனோஜி முன்னோடியாக வகுத்துவிட்டாரென்பதைப் புரிந்து கொண்டான். அதுவும் மகாராஷ்டிரர் கடல் பலத்தை விருத்தி செய்யும் பிற நாட்டாரை அடியோடு இந்த நாட்டில் கால் ஊன்றாமல் அடிக்கவும் அவர் ஏற்பாடு செய்கிறாரென்ப தையும் தெளிவாகத் தெரிந்து கொண்டான். தன்னை அவர் தரைப்படைக்கு மாற்றுவதுகூட அந்தத் திட்டத்தின் ஒரு பகுதிதானென்பது சந்தேகமறத் தெரிந்தது அவனுக்கு. கனோஜியின் அரசியல் சதுரங்கத்தில் மற்ற காய்களைப் போல் தானும் ஒரு காய்தானென்பது மிகத் தெளிவாகப் புரிந்தது தமிழனுக்கு. ஆகவே பதிலேதும் சொல்லாமல் மௌனமே சாதித்தான். ஆனால் கனோஜி மௌனம் சாதிக்கவில்லை. “தமிழா, நீ நினைக்கலாம். நான் ஏதோ மனிதர்களைச் சதுரங்கக் காய்கள் போல் நகர்த்த முயற்சிக்கிறேனென்று. நகர்வது நானல்ல. என்னையும் உன்னையும் இதோ இந்தக் கடலையும் காற்றையும் திருவுளப்படி திருப்பும் மஹிஷேசுவரியான குலாபிதான் சகலத்தையும் நிர்வகிக்கிறாள், நகர்த்துகிறாள், விசிறுகி றாள், கொந்தளிக்கச் செய்கிறாள். நாளை அவள் சொல்லுவாள் நமக்கும் நாட்டுக்கும் எது நல்லது என்று” என்று கூறிய கனோஜி ஆங்கரே, கோட்டையைப் பலப்படுத்தும் வழிகளைப் பற்றி ஏதோ முணுமுணுத்துக் கொண்டு மதிள்சுவரிலிருந்து படிகளில் இறங்கி தோர்லா வாடாவை நோக்கிச் சென்றார். சென்றதும் மறு நாள் பூஜைக்கு வேண்டிய அனைத்தையும் செய்யக் கோட்டைக் காவலனுக்கு உத்தரவிட்டு இதயசந்திரனையும் இளைப் பாறப் பணித்து சயன அறைக்குள் நுழைந்து விட்டார்.

மறுநாள் விடியற்காலையிலேயே கொலாபா புதுக்கோட்டையாக மாறியது. குலாபியின் கோயிலில் மணி டணார் டணார் என்று ஒலித்ததால் எழுந்திருந்து தோர்லாவாடாவின் வாயிலுக்கு வந்த இதயசந்திரன் அங்கிருந்த வீரர்கள் அணிவகுப்பையும் பணியாட்கள் பலர் நாலா திசையிலும் பறந்து கொண்டிருந்ததையும் கவனித்து வியந்து நின்றான். எங்கிருந்தோ வந்த புஷ்பக் கூடைகள் தோர்லாவாடாவின் வாயிலில் இறக்கப்பட்டு அங்கிருந்த அதிகாரி பார்த்து அங்கீகரித்த பின்பு குலாபியின் கோயிலை நோக்கி விரைந்தன. எங்கும் சாதாரண ஜனங்களின் நடமாட்டமும் அதிகமாயிருந்தது. குலாபி ஆலய மணியைத் தவிர பவானி ஆலயம், பத்மாவதி ஆலயம், கணேசர், மாருதி ஆலயங்கள் இவற்றிலிருந்து சங்கங்கள் ஊதப் பட்டன. மணிகள் ஒலித்தன. அந்தந்தக் கோயில்களிலிருந்து எழுந்த பிரார்த்தனை கீதங்களும் கொலாபாவைத் திருமண வீடாகவும் தெய்வீகத்தின் இருப்பிடமாகவும் அடித்துக் கொண்டிருந்தன.

இந்த ஏற்பாடுகளைவிடப் பெரும் ஏற்பாடுகளையும் திருவிழாக்களையும் இதயசந்திரன் தமிழகத்தில் பார்த் திருந்தானாகையால் அவற்றைப்பற்றி வியப்படைய வில்லை. அவன் முந்திய இரவில் இரண்டாவது ஜாமத்தில் படுப்பதற்குச் சற்று முன்பு கனோஜி இட்ட உத்தரவு அந்த பஞ்ச உஷத் காலத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது! இடையிலிருந்த காலம் எவ்வளவு? இரவோடு இரவாக ஒரு தீவுக்கோட்டையை விழாத் தலமாக்க வேண்டுமென்றால் தூங்காமலே காரியம் நடந்திருக்க வேண்டும்! இப்படிப் பலபடி நினைத்தாலும், கனோஜியின் உத்தரவின் சக்தியையும் ஆட்களின் ஜரூரையும் எண்ணியதாலும் வியப்படைந்த இதயசந்திரனும் வேகமாக உள்ளே ஓடி, தானும் நீராடிக் கோயிலுக்குச் செல்லத் தயாரானான். மற்றவர்களுக்குத் தான் பின்னடையக்கூடாதென்ற நினைப்பால், வெகு துரிதமாக நீராடி, நீறணிந்து, குங்குமம் தீட்டி, இடையே பட்டுக் கட்டி மேலே பட்டுத் துணி மூடி தோர்லாவாடா வின் வாயிலுக்கு வந்தவன் வாயடைத்து நின்றான். வாயிலில் அவனுக்கு வரவேற்புக் கோஷ்டியொன்று காத்திருந்தது. கனோஜி ஆங்கரே நீராடித் தலையைத் துவட்டியிருந்தாலும் அந்த முரட்டு மயிர்கள் ஈரம் போகாமல் இரண்டொரு நீர்த்துளிகளைச் சொட்டிக் கொண்டிருக்க, இடையே பட்டு மூலக்கச்சமாகக் கட்டி யிருக்க அதில் குறுக்கே ஒரு பட்டு சுற்றிப் பாய்ந்திருக்க, முரட்டு மயிர் பரந்த மார்பு திறந்து கிடக்க, அதில் பட்டை பட்டையாக விபூதி குறுக்கே காட்சியளிக்க, பெருங் கைகளிலும் முகத்திலும் கட்டுக் கட்டாக விபூதி தீட்டியிருக்க, நெற்றிக்கு நடுவே குங்குமம் துலங்க, மீசை பயங்கரமாக அகன்றிருக்க, சாட்சாத் இரணியன் போல் நின்றுகொண்டிருந்தார். அந்தப் பக்தி வேஷத்திலும் அவரது இடுப்புப் பட்டில் இரு கைத்துப்பாக்கிகள் துலங்கின. அவரைச் சுற்றி நீராடி நீறணிந்த வீரர்கள் ஆயுதங்களுடன் நின்றிருந் தார்கள். இதயசந்திரன் வெளியே வந்ததும், “வா! தமிழா! உனக்காகத்தான் காத்திருக்கிறோம்” என்று சொல்லி கனோஜி வரவேற்க, மற்ற வீரர் தலை தாழ்த்த ஏற்பட்ட நிலை கண்டு மலைத்த தமிழன் ஏதும் பேசாமல். கனோஜியின் அருகே சென்று வணங்கினான். பிறகு கூட்டம் குலாபியின் கோயிலை நோக்கி நடந்தது.

குலாபியின் கோயில் வாயிலிலும் பெருங்கூட்டம் முன்னதாகவே நின்றிருந்தது. கோயில் தூண்களிலும் மகுடத்திலுங்கூடப் புஷ்பாலங்காரம் பிரமிக்கத்தக்கதா யிருந்தது. கோயிலை அணுகுமுன்பாகவே உள்ளிருந்து கிளம்பிய சாம்பிராணிப் புகை மற்ற மலர்களின் நறுமணத்துடன் கலந்து இன்பமாக வெளியே வந்ததால் தெய்வீக சாந்நித்யம் எங்கும் நிரம்பி நின்றது. கனோஜி கோயிலை அடைந்ததும் கூட்டம் வழி கொடுக்கக் காவலர் அணிவகுத்து வெளியிலேயே நின்றுவிட கனோஜி உள்ளே நுழைந்தார், இதயசந்திரன் பின்தொடர.
கர்ப்பக்கிருகத்தை அடைந்ததும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். பிறகு எழுந்து நின்று தலை வணங்கி ஏதோ தோத்திரங்களை முணுமுணுத்தார். அடுத்து பூஜை துவங்கியது. இதயசந்திரன் கனோஜியைப் போலவே வணங்கி எழுந்தான். தனக்குத் தெரிந்த தமிழ்ப் பாடல்கள் ஓரிரண்டைச் சொன்னான். பிறகு குலாபியை ஏறிட்டு நோக்கினான். அழகும் பயங்கரமும் கலந்த மஹிஷேசுவரியின் திருவதனம் உள்ளத்திற்குப் பயத்தையே அளித்தது. குலாபியின் மூக்கிலிருந்த ஒரு வைரம் தூண்டிவிட்ட விளக்கைப் போல சுடர்விட்டு எரிந்தது. கால் ஆபரணங் களில் பட்ட பக்க விளக்குகள் அவள் திருவடி ஆபரணங் களிலும் பிரதிபலித்து அங்கும் பல தீபங்கள் ஒளிவிடும் பிரமையை அளித்தன. சாஸ்திரி பூஜையைத் துவங்கினார். நூற்று எட்டு நாமங்களை உச்சரித்துக் குங்குமம் கொண்டு அர்ச்சித்தார். நூற்று எட்டு தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ஆயிரத்து எட்டு வாழைப்பழங்கள் நைவேத்தியம் செய்யப்பட்டன. பூஜை கிட்டத்தட்ட ஒரு ஜாமம் நடந்தது. அந்த ஒரு ஜாமமும் குலாபியின் தரிசனத்தில் லயித்து நின்றிருந்தார் ஆங்கரே. பூஜை முடிந்ததற்கு அறிகுறியாகத் தீபாராதனை செய்த சாஸ்திரி கனோஜிக்குச் சைகை செய்யவே கனோஜி உள்ளே சென்று குலாபியின் காலிலிருந்த மையை வழித்து நெற்றியில் இட்டுக்கொண்டார். பிறகு மடியிலிருந்த இரு ஓலைச் சுருள்களை எடுத்து ஈசுவரியின் திருவடிகளில் வைத்து விட்டுக் குலாபியைப் பார்த்தவண்ணம் பின்னால் நடந்து கர்ப்பக்கிருகத்திலிருந்து வெளியே வந்து தியானத்தில் இறங்கினார்.

இதயசந்திரன் கண்களைத் தீட்டிக்கொண்டு ஓலை களைக் கவனித்தான்.

திடீரென விர்ரென்று கேட்டது ஓர் ஒலி. அதைத் தொடர்ந்தது காற்று! ஓலையில் ஒன்று காற்றில் எழுந்தது, விழுந்தது, உருண்டது திருவடியிலிருந்து.

பிரமிப்பால் நிலைத்தன தமிழன் கண்கள். அந்த ஓலை களில் உருண்டது ஒன்றுதான். அதுவும் காற்று வந்த திசையிலிருந்த ஓலையல்ல அது. எதிர்ப்புறம் இருந்த ஓலை. அது இருந்த இடத்தில் காற்றுப்பட நியாயமே இல்லை .

“ஆச்சரியம்! ஆச்சரியம்!” என்று அவன் உள்ளக் குரல் ஒலி கிளப்பியது. கனோஜி மிகுந்த பக்தியுடன் எடுத்தார் அந்த ஓலையை. பிரித்தார் பயத்துடன், படித்தார் தலை வணங்கி. பிறகு கண்ணில் ஒற்றிக்கொண்டு ஓலையைப் பின்னால் நின்றிருந்த இதயசந்திரனிடம் கொடுத்தார். ஓலையைப் படித்த தமிழன் கண்களில் பிரமை தட்டியது. குலாபியின் உத்தரவு திட்டமாக இருந்தது. ஓலையைப் படித்துவிட்டு ஸார்கேலை நோக்கினான் தமிழன். கனோஜியின் கண்கள் ஈட்டிகளைப்போல் ஜொலித்தன. குலாபியின் கண்களைப் போலவே அவர் கண்களும் இருப்பதாகத் தோன்றியது தமிழனுக்கு. அந்தச் சில விநாடிகளில், சக்தியின் விழிகள் பக்தனுக்கும் புது சக்தியை ஊட்டி யிருக்க வேண்டும் என்று நினைத்த இதயசந்திரன், “ஆண்டவனை அடியார்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார் கள்!” என்று இதயத்துக்குள் சொல்லிக்கொண்டான். “இனிப் பெரும் போர்கள் மகாராஷ்டிரத்தில் நடக்கும்” என்று சற்று இரைந்தே சொன்னான்.

Previous articleJala Deepam Part 2 Ch29 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch31 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here