Home Historical Novel Jala Deepam Part 2 Ch31 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch31 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

56
0
Jala Deepam Ch31 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch31 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch31 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –31 உதடுகள் அசையவில்லை, ஒலியும் எழும்பவில்லை!

Jala Deepam Part 2 Ch31 | Jala Deepam | TamilNovel.in

“போர்கள் துவங்கும். பிரிட்டிஷ்காரர்களிடம் நட்பு கொள்” என்று வாசகம் தீட்டப்பட்ட ஓலையைக் கையிலேந்திக் கொண்டே வரப்போகும் பெரும் போர் களைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்த இதயசந்திரன் அடுத்து நிகழ்ந்த தீபாராதனையைக் கூடப் பார்க்க வில்லை. சாஸ்திரியடித்த மணியோசைகூட எங்கிருந்தோ அடிப்பதாகவே தோன்றியது அவன் சித்தத்துக்கு. அவன் கையிலிருந்த ஓலையைக் கனோஜி ஆங்கரே பிடுங்கித் தனது மடியில் செருகிக்கொண்ட பிறகுதான் இதயசந்திரனுக்குக் கோவில் ஸ்மரணை வந்தது. சற்று நேரம் குலாபியின் திவ்யரூபத்தைப் பார்த்து மிரள மிரள விழித்தான். பிறகு சாஸ்திரி கொண்டுவந்த தீபாராதனைத் தட்டிலிருந்த கற்பூரச் சுடரைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண் டான். அந்தத் தட்டிலிருந்தே சாஸ்திரிகள் அர்ச்சனைக் குங்குமத்தை எடுத்து முதலில் கனோஜியின் நெற்றியிலும் பிறகு இதயசந்திரன் நெற்றியிலும் இட்டதும் கனோஜி மற்றுமொருமுறை குலாபித் தாய்க்குத் தலை வணங்கி விட்டு வெளியே சென்றார். இதயசந்திரனும் ஏதோ மந்திரத்தால் இயக்கப்பட்டவன் போல் அவரைத் தொடர்ந்து சென்றான்.

கோயிலிலிருந்து தோர்லாவாடாவுக்கு இவ்விருவரும் வரத் துவங்கிய போது கிட்டத்தட்ட உச்சிவேளை நெருங்கி விட்டதால் கதிரவன் ஆட்சி சற்றுத் தீட்சண்யமாகவே எங்கும் நடந்து கொண்டிருந்ததன் காரணமாக, தூரத்தே இருந்த கடலலைகள் பெரும் கண்ணாடிகளைப் போல் பளபளத்தன. கரிய பாறைகள் காலைத் தகிக்கும் நிலையை அடைந்திருந்தன. கோயிலுக்குச் செல்லும் காரணத்தால் பாதரட்சையின்றியே வந்த கனோஜி ஆங்கரே அந்தப் பாறைகளின் சூட்டைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் பல இடங்களில் நின்று நின்று கோட்டைப் புறத்தையும் கடற் புறத்தையும் ஆராய்ந்து ஆராய்ந்து பிறகு நடந்தார். இதயசந்திரன் கால்கள் பாறைக் கனலைத் தாங்க முடியாததால் சில வேளைகளில் அவன் சற்றுப் பெரும் பாறைகளளித்த நிழல்களில் ஒதுங்கியும் காலைச் சிறிது மாற்றிப் போட்டுத் தத்தளித்தும் ஆங்கரேயைத் தொடர்ந்து சென்றான்.

கொலாபா அன்று பெரிதும் மாறுபட்டிருந்தது. வேறு இரண்டு மூன்று கப்பல்கள் புதிதாகத் துறைமுகத்துக்கு. வந்திருந்ததால், அவற்றிலிருந்து மாலுமிகளைத் தாங்கிய படகுகள் தரையை நோக்கி வந்து கொண்டிருந்த தல்லாமல், ஏற்கெனவே கரையிறக்கப்பட்டிருந்த கும்பல்கள் கூச்சலிட்டுக் கொண்டும், ஆடிப் பாடிக் கொண்டும் கோட்டையை நோக்கி வந்துகொண்டிருந்ததன் விளைவாகக் கடற்கரை அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. ஏற்கனவே பலர் கோட்டைக் கதவுகளையும் தாண்டிவந்து விட்டதால் கோட்டையின் பிரதான பாதுகாப்புச் சுவருக்கும் இரண்டாவது பாதுகாப்புச் சுவருக்குமிடையே இருந்த பிரதேசத்தில் அவர்கள் பாதரட்சை ஒலிகளும், ஆயுத ஒலிகளும் பெரிதாகக் கிளம்பிக் கோட்டைப் பகுதியை நிரப்பிக் கொண்டிருந்தன. அந்த ஒலிகளைக் கேட்டதாலோ என்னவோ குலாபி கோயிலைத் தாண்டியிருந்த சண்டையிடும் மிருக, பட்சிக் காட்சிச் சாலைகளிலிருந்த ஆட்டுக் கடாக்கள், கோழிகள், கிளிகள், கடம்பைகள் இவற்றில் சில பெரிதாகக் கத்தியும், சில கிலகிலா சப்தங்களைக் கிளப்பிக் கொண்டும் இருந்ததால் சுரம் தப்பிய வாத்தியங்கள் பல ஏக காலத்தில் சப்திக்கும் சூழ்நிலை பரவிக் கிடந்தது கோட்டைப் பகுதியில். இவற்றையெல்லாம் அடிக்கடி பார்த்தும் ஆராய்ந்தும். கேட்டும் சென்ற ஆங்கரே ஏதும் பேசாமலே தோர்லா வாடாவிற்கு வந்து தமது பிரதான அறையை அடைந்தார். பிறகு மேஜைமீதுள்ள தேசப்படத்தைப் பிரித்து அதன்மீது தமது இடையிலிருந்த கைத்துப்பாக்கி யொன்றையும் வைத்து ஒரு காலைத் தூக்கிப் பக்கத்திலிருந்த நாற்காலிமீது ஊன்றிய வண்ணம் தேசப்படத்தை ஆராய்ந்தார். சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக தேசப்படத்தை ஆராய்ந்த பின்னர் பக்கத்தில் நின்றிருந்த இதயசந்திரனை நோக்கி, “உபதளபதி! கொலாபா இருக்குமிடத்தைப் பார்” என்று அந்த இடத்தைக் கைத்துப்பாக்கியின் நுனியால் சுட்டிக் காட்டினார்.

அவர் கூறுவதற்கு முன்பே அந்தப் படத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த உபதளபதி தலையை அசைத்தான் பார்ப்பதற்கு அறிகுறியாக. ஆனாலும் பதிலேதும் சொல்ல வில்லை அவன், ஆங்கரேயிடமிருந்து மேற்கொண்டு கேள்விகள் எழும் என்ற காரணத்தால்.

அடுத்த கேள்வி உடனடியாக எழுந்தது, “இதன் நிலைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று.

உபதளபதியின் பதிலும் தாமதமின்றி வந்தது, “மிக அபாயமான நிலை” என்று.

“என்ன அபாயமிருக்கிறது இங்கே?” என்று மற்றுமொரு கேள்வியையும் வீசினார் கனோஜி துரிதமாக.

‘கொலாபாவைச் சுட்டி காட்டியதும் அவர் படத்தின் மீது இருக்கவிட்ட கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்ட இதயசந்திரன், “இந்தக் கோட்டைக்கு நேர் வடக்கே வெகு அருகிலிருக்கிறது பிரிட்டிஷாரின் தளமான பம்பாய்த் தீவு. நேர் தெற்கே அதைப்போலவே வெகு அருகிலுள்ள சேவூலில் அடுத்த பலமான எதிரிகள் போர்ச்சுகீஸியர் இருக்கிறார்கள். சேவூலுக்குச் சற்றுத் தெற்கே ஸித்திகளின் ஜன்ஜீராத் தீவு இருக்கிறது. அதற்கும் அடுத்து ஸாத்ஸித்தியின் அஞ்சன்வேல் கோட்டை இருக்கிறது. கோடியிலிருக்கிறது. விஜயதுர்க்கம். கொலாபாவும் விஜயதுர்க்கமும் பலமான எதிரிகளால் துண்டிக்கப்பட் டிருக்கிறது. எதிரே வடக்கில் பிரிட்டிஷார் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு” என்று கூறியதன்றி ஒவ்வோர் இடத்தையும் துப்பாக்கியின் நுனியால் காட்டவும் செய்தான்.

கனோஜி உற்சாகத்துடன் தலையை அசைத்தார். அவரது பெரிய விழிகள் தமிழன் மீது அன்புடன் நிலைத்தன. “தமிழா! நாம் பெரும் அபாயத்திலிருக்கிறோம் என்பது புரிகிறதா உனக்கு?” என்று வினவினார்.

“நன்றாகப் புரிகிறது” என்று கூறினான் இதய சந்திரன் கவலையுடன்.

“இந்த நிலையில் விஜய துர்க்கத்திலிருந்து கொலாபாவிற்குத் தலைமைத் தளத்தை மாற்றியது அறிவுள்ள காரியமா அறிவுகெட்ட காரியமா?” என்று வினவினார் ஆங்கரே அவனை நோக்கி.

இதயசந்திரன் பதில் சொல்லத் தெரியாமல் திணறி னான். அறிவுகெட்ட காரியமென்று சொல்லத்தான் நினைத்தான் அவன். ஆனால் மகாராஷ்டிரத்தில் இணைலா கடற்படைத் தலைவரின் முடிவை அறிவுகெட்ட காரியமென்று சொல்லத் துணிவில்லாததால் வெறித்து நோக்கினான் அவரை.

கனோஜி பெரிதாக நகைத்தார். ”இதயசந்திரா! அறிவுகெட்ட முடிவென்று உன் நெஞ்சிலிருக்கிறது. சொல்ல நடுங்குகிறாய்” என்று அந்த நகைப்பைத் தொடர்ந்து கூறிய ஸார்கேல், “நெஞ்சிலுள்ளதைச் சொல்ல அஞ்சாதே. படைத் தலைவர்களின் முடிவுகளில் போர்களோ அன்றி அமைதியோ ஏற்படுகிறது. அந்த முடிவுகள் மனித உயிர்களின் பெரு நாசத்திற்கோ பேரமைதிக்கேர் காரணமாகின்றன. ஆகவே ஆலோசனை சொல்பவன் விளைவைப் பார்க்காமல் நெஞ்சில் படுவதைச் சொல்லிவிட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இதயசந்திரன் சிறிது நேரம் மௌனம் சாதித்தான். இவன் மௌனத்தைப் பற்றிக் கவலைப்படாமலும், அவன் பதிலை எதிர்பார்க்காமலும் ஸார்கேல் மீண்டும் தமது இன்னொரு கைத்துப்பாக்கி கொண்டு தேசப் படத்தின் பல பகுதிகளை ஆராய்ந்தார். பிறகு திடீரென்று இதய சந்திரனை நோக்கித் திரும்பி, ”உபதளபதி! கடல் தளங்களைப் பார்த்தாய் இதுவரை. இப்பொழுது நிலத்தளங்களையும் கோட்டைகளையும் பார். இங்கிருந்து நேர் கிழக்கிலுள்ள கல்யாணி நகரத்திலிருந்து, கொங்கணியின் மலைக் கூரை மீதுள்ள ராஜ் மச்சிலிருந்து, பூனா, ஸதாரா, பன்ஹாலா வரையில் நீண்ட மலைப் பிரதேசமும் கீழுள்ள பீடபூமியின் பெரும் பகுதியும் சேர்ந்தது மகாராஷ்டிரம். இவையனைத்திலும் மொகலாயரால் ஆதரிக்கப்பட்ட ஷாஹு மகாராஜாவின் படைகள் இருக்கின்றன. அப் படைகள் நேரே கடலோரம் இறங்கினால் என்ன ஆகும்?” என்று வினவினார் கனோஜி அந்த இடங்களையும் அவற்றைத் தொடர்ந்த நிலப் பகுதிகளையும் தொட்டுத். தொட்டுக் காட்டி.

“நாம் அழிக்கப்படுவோம்” என்றான் இதயசந்திரன்.

“நாம் மட்டுமல்ல, இதயசந்திரா! ராஜாராமின் இளைய மனைவி தாராபாயும் அடியோடு அழிக்கப் படுவாள். தாராபாயைத் தரையில் வென்று முடிசூடி விட்டார் ஷாஹு. ஆனால் கடலில் அவர் தாராபாயை வெற்றி கொள்ளவில்லை” என்று சுட்டிக் காட்டினார் ஸார்கேல்.

ஸார்கேல் தம்மையே குறிப்பிடுகிறாரென்பதைப் புரிந்துகொண்டான் இதயசந்திரன். தாராபாயால் ஸார்கேலாகவும் தார்யஸாரங்கரராகவும் நியமிக்கப்பட்ட ஸார்கேல் மகாராஷ்டிரப் போர்களில் தாராபாய் முறியடிக்கப்பட்ட பின்பும் கடலில் அவள் பெயரால் போரிடுவது உண்மையில் தாராபாய்க்காக அல்லவென்றும், தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கு அதிகார பூர்வமான ஏதோ ஒரு போலிக் காரணத்தை ஏற்படுத்திக் கொள்கிறாரென்றும் புரிந்து கொண்டதால் மெல்லப் புன்முறுவலும் காட்டினான்.

ஸார்கேல் அந்தப் புன்முறுவலைக் கவனித்தார். அதற்குக் காரணமும் அவருக்குத் தெளிவாக விளங்கியது. இருப்பினும் மெல்லக் கூறினார்: “தமிழா! நான் ஷாஹுவை எதிர்ப்பதற்குச் சுய நலம் காரணமில்லை” என்று.

“இல்லை இல்லை” என்று ஆமோதித்த இதயசந்திரன் குரலில் லேசாகக் கேலி ஒலித்தது.

கனோஜி மெள்ள நகைத்தார் பதிலுக்கு. “தமிழா! நில ஆதிக்கத்தையும் கடலாதிக்கத்தையும் தவிர வேறு முக்கிய விஷயங்கள் இந்தப் போர்களில் கலந்திருக்கின்றன. ஷாஹுவின் பலம் தற்சமயம் மொகலாயர் அளித்துள்ள -பலம். ஷாஹுவை ஆதரித்தால் மொகலாயர் செல்வாக்கை மகாராஷ்டிரத்தில் ஆதரிக்கிறோம். ஷாஹு வலுத்தால் மொகலாயர் வலுக்கிறார்கள். அதன் விளைவு எல்லோருக் கும் புரிந்தது. ஆகவே தாராபாயோ அல்லது தாராபாயின் பெயரையோ நாம் ஆதரிக்க வேண்டியது அவசியமாகிறது. தரைப் போர்களில் தாராபாய் தோற்றுவிட்டாள். இப்பொழுது கடல் ஒன்றில் தான் அவள் ஆதிக்கம் இருக்கிறது. என் மூலமாக அதை நிலைநிறுத்த வேண்டியது அவசியம். அதை நிலைநிறுத்தத் தரைப் படை உதயமாகிறது” என்றும் கூறினார்.

இதயசந்திரன் அவரது எண்ணங்களின் போக்கைப் புரிந்துகொண்டான். “கடலைக் காக்கத் தரைப் படை எதற்கு?” என்று வினவினான் சிறிது யோசனைக்குப் .பிறகு.

“நிலத்தைக் காக்கக் கடல் வலு தேவையில்லையா?” என்று வினவினார் கடற்படைத் தளபதி. “ஆம்” என்று ஆமோதித்தான் உபதளபதி.

“அதுபோலத்தான் இன்னொன்றும். கடலைத் தாக்க நிலத்தில் வலு தேவை. கப்பல்களாலும் தீவுக் கோட்டைகளாலும் துறைமுகங்களை வலுப்படுத்துகிறோம் நிலத்தைக் காக்க. அந்தத் துறைமுகங்களையும் கப்பல்ளையும் காக்க நிலத்திலுள்ள வீரர் தேவைப்படுகின்றனர். உணவும், ஆயுதங்களும் தேவைப்படுகின்றன. ஆகவே, ஒன்றைவிட்டு ஒன்றைக் காக்க முடியாது. இதனால்தான் நமது தரைப்படை வலுப்படுகிறது. மொகலாயர் கடற்படைத் தலைவர்களான ஸித்திகளைக் கொண்டு ஷாஹு நம்மை அடக்கச் செய்த முயற்சிகள் பலிக்காததால் நமது துறைமுகக் கோட்டைகளைப் பிடிக்கத் தரைப்படையை ஏவுகிறார். அந்தச் சவாலை நாம் ஏற்போம். இன்னும் பத்து நாட்களில் நமது தரைப்படை எத்தன்மையது என்பதை நீயே பார்க்கப் போகிறாய்” என்று கூறினார் கனோஜி.

இதயசந்திரன் அவரது நுண்ணறிவைக் கண்டு மிக வியந்தான். ஸார்கேல் மேலும் சொன்னார், “ஆகையால் தான் தமிழா, கொலாபாவைத் தலைமைத் தளமாக்குவது. அபாயமானாலும் இதைத் தலைமைத் தளமாக்குவது ஏனென்றால் இங்கிருந்து நாம் ஷாஹுவைச் சமாளிப்பது எளிது. கொலாபாவைத் தாக்குவது இப்பொழுதுதான் எளிது. இன்னும் இரண்டு நாள் கழித்தால் எளிதல்ல” என்று .

“ஏன்? இரண்டு நாளில் என்ன நடந்துவிடும்?” என்று வினவினான் தமிழன் ஏதும் புரியாமல்.

“நமது கடற்படையில் பாதி இங்கு வந்துவிடும். இவற்றில் சில இந்தத் தீவுக்கோட்டையைப் பாதுகாத்துக் கடலில் நிற்கும். இன்னும் சில இங்கிருந்து ஜன்ஜீரா வரையிலுள்ள கடற்பகுதியில் சதா தெற்கு நோக்கி சஞ்சரிக்கும்.

லிஜயதுர்க்கத்திலுள்ள பாதிப் படை விஜயதுர்க்கத்தி லிருந்து ஜன்ஜீரா வரை வடக்கு நோக்கி சஞ்சரித்தவாறு இருக்கும். அரபிக் கடலின் இந்தப் பகுதியை இரண்டாகப் பிரித்து விட்டேன். ஸித்திகளின் ஜன்ஜீராவிலிருந்து லிஜயதுர்க்கம் வரை தென்பகுதி. கொலாபா வரை வடபகுதி- இந்த இரண்டு பகுதிகளில் நமது கடற்படை யின் ஒவ்வொரு பகுதி உலாவும். ஆலிபாக்கில் தரைப் படையின் சிறு பகுதிகள் இணைந்து பெரும் படையொன்று ஒரு தமிழன் இஷ்டப்படி வளையும். இதற் கிடையில் அந்தத் தமிழன் ஒருமுறை பம்பாய் சென்று வருவான்” என்று விளக்கினார் கனோஜி.

தமிழன் திகைத்தான் அவர் ஏற்பாடுகளைக் கேட்டு. அந்தத் திகைப்புக்கிடையே கேட்டான், ”பம்பாய்க்கா?” என்று .

“ஆம்.”

“எதற்கு?”

“குலாபியின் உத்தரவை நிறைவேற்ற.”

“பிரிட்டிஷார் நட்பை நாடவா?”

“ஆம்.”

“அவர்களாக நமது நட்பை நாடுவார்கள் என்று கூறினீர்களே நேற்று?”

“ஆம். அவர்களாகத்தான் நாடுவார்கள்.”

“அப்படியானால் நான் போவானேன்?”

“நட்பை நாட அல்ல நீ செல்வது.”

இதயசந்திரன் விழித்தான். “பிரிட்டிஷாரிடம் தூது போகச் சொல்கிறீர்களா, அவர்கள் நோக்கமறிய?” என்று வினவினான் குழப்பத்துடன்.

“இல்லை. அவர்களிடம் போகச் சொல்லவில்லை உன்னை ” என்றார் ஆங்கரே திட்டமாக.

“வேறு யாரிடம்?” என்று கேட்டான் தமிழன் குழப்பம் அதிகரிக்க.

“உன் காதலியிடம்’ என்ற ஆங்கரே அவனை உற்று நோக்கினார்.

அந்த நோக்கில் பரிகாசமில்லை, விஷமமில்லை. ”யார் காதரைனிடமா?” என்று வினவினான் அவர் முகத்திலிருந்த தீர்க்க சிந்தனைக்குக் காரணம் புரியாமல்.

அவர் கூறிய பதில் அவனைத் திக்பிரமையடைய வைத்தது. “அவளிடமில்லை. பானுதேவியிடம். கஹினா வின் உத்தரவையும் நிறைவேற்றிவிடு’ என்ற ஆங்கரேயின் சொற்கள் அவன் திக்பிரமையை உச்சநிலைக்குக் கொண்டு சென்றது.

”பானுதேவி, கஹினா…’ என்ற சொற்களை உச்சரிக்க அவன் உள்ளம் துடித்தது. உதடுகள் அசைய வில்லை. ஒலியும் எழும்பவில்லை!

Previous articleJala Deepam Part 2 Ch30 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here