Home Historical Novel Jala Deepam Part 2 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

57
0
Jala Deepam Ch32 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch32 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –32 அமைதிக்கும் அனுபவத்துக்கும் பெண்!

Jala Deepam Part 2 Ch32 | Jala Deepam | TamilNovel.in

கஹினாவின் உத்தரவை நிறைவேற்றி விடும்படியும் பானுதேவியைச் சந்திக்கும்படியும் கனோஜி ஆங்கரே கூறி யதைக் கேட்டதும் இதயசந்திரன் மிதமிஞ்சிய உணர்ச்சிகளால் திக்பிரமையடைந்து பல நிமிடங்கள் நின்ற இடத்தில் சிலையென நின்று விட்டதன்றி, பேச நா எழாமலும் தவித்தானென்றால் அதற்குக் காரணங்கள் பல இருந்தன. கஹினா மிக ரகசியமாகத் தன்னிடம் ‘அனுப்பி வைத்த கடிதத்தைப்பற்றி கனோஜி ஆங்கரேக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும் என்ற யோசனை ஒரு காரணம். அப்படி காகிதமனுப்பியிருந்ததை அறிந்திருந் தாலும் அது பானுதேவிக்குத்தான் தெரியும் என்பதை அவர் எப்படி உணர்ந்திருக்க முடியும் என்று இதயத்தில் எழுந்த கேள்வி மற்றொரு காரணம். ஒருவேளை கடிதம் கொண்டு வந்தவனை வழிமறித்துக் கடிதத்தின் விலாசத்தைப் பார்த்திருந்தாலும் அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமிருக்க முடியுமென்று ஏன் நினைக்கவேண்டும் கடற்படைத் தலைவர் என்ற குழப்பம் இன்னொரு காரணம். அப்படி அரசியலுக்கும் அக்கடிதத்திற்கும் சம்பந்தமிருப்பது ஸார்கேலுக்குத் தெரியாது என்றால், அரசியலைப்பற்றியும் போர்களைப்பற்றியும் பேசிவிட்டுத் திடுதிப்பென்று தமது மனைவியின் கடிதத்தைப் பற்றி உத்தரவிடுவானேன் என்ற நினைப்பும் காரணங்களில் ஒன்றாயிற்று.

இப்படிப் பல நினைப்புகளால் திண்டாடித் திக்பிரமை பிடித்து நின்ற இதயசந்திரனை நோக்கிய கனோஜி மெல்லத் தமது உதடுகளில் புன்முறுவலைத் தோற்றுவித்தார். ”தமிழா! உனக்குப் பெண்களென்றாலே திக்பிரமை பிடிக்கிறது. வர வர உனது துணிவு காற்றில் பறந்து விடுகிறது” என்று கூறி மெல்ல நகைக்கவும் செய்தார்.

இதயசந்திரன் நகைக்கும் நிலையிலோ நகைப்பை ரசிக்கும் நிலையிலோ இல்லாததால் சீரிய நோக்கு நிறைந்த விழிகளை அவர்மீது திருப்பினான். “ஸார்கேல்! நீங்கள் மனைவிமீதே வேவு பார்க்கிறீர்களா?” என்று வினவவும் செய்தான் வெறுப்பு நிறைந்த குரலில்.

“ஆம். அதனாலென்ன?” என்றார் ஸார்கேல் மிக அலட்சியமாக. அதில் என்ன தவறு என்ற கேள்வி அந்தப் பதிலில் தொக்கியிருந்தது.

இதயசந்திரன் அந்த அலட்சியத்தைக் கவனிக்கவே செய்தான். மனைவியையே வேவு பார்ப்பவர் யாரைத் தான் நம்புவார் என்று புரியவில்லை அவனுக்கு. ஆகவே கேட்டான் மீண்டும், “மனைவியை வேவு பார்ப்பது நியாயமா? அவர்களிடம் அது நம்பிக்கைக் குறைவைக் காட்டாதா?” என்று.

“தமிழா! உலக ரீதியும் உனக்கு இன்னும் புரியவில்ல . மனைவியை நான் நம்பவேண்டுமென்கிறாய்? அவள்மீது ஒரு கண்ணை வைத்திருப்பது தவறென்கிறாய்?” என்று வினவினார் சிரித்துக்கொண்டே.

“ஆம். நம்பிக்கையில்தான் வாழ்வு மலர்கிறது, மணக்கிறது” என்று கூறினான் தமிழன்.

“அப்படியா!” என்ற கனோஜி ஆங்கரேயின் கேள்வியில் இகழ்ச்சி அபரிமிதமாக ஒலித்தது.

இதயசந்திரன் அந்த இகழ்ச்சியைக் கவனிக்கத் தவற வில்லை. அதனால் இன்னும் சற்று உறுதியாகவே சொன்னான்: “ஆம்” என்று.

“மனைவியும் நம்மை நம்பவேண்டுமல்லவா?” என்று வினவினார் ஸார்கேல்.

“ஆம். அவசியம் நம்பவேண்டும்” என்று பதிலிறுத்த பிறகுதான் விழித்துக்கொண்டான் இதயசந்திரன். ஸார்கேல் தன்னை எங்கு இழுத்துச் செல்கிறாரென்ற உண்மையைப் புரிந்துகொண்டான். ஆகவே சொற்களை உச்சரித்ததும் சற்றுக் குழம்பவே செய்தான்.

அவன் குழப்பத்தைக் கவனித்த ஆங்கரே பலமாகச் சிரித்தார். வழக்கம்போல் அவன் முதுகில் தட்டவும் செய்தார். ”புரிகிறதா தமிழா உனக்கு. எந்த மனைவியும் புருஷனை நம்புவதில்லை. எந்தப் புருஷனும் மனைவியை நம்புவதில்லை . இதுதான் உலக ரீதி, உலக தர்மம், மனித குலத்தின் இயற்கை. கஹினா என் கொள்கைகளை ஒப்பவில்லையென்பது எனக்குத் தெரியும். அவளுக்கு ஷாஹுதான் மகாராஷ்டிர மன்னன். அந்த ராஜ பக்திக்காகக் கணவனுக்கெதிராகச் சதியும் செய்வாள். ஆகையால் அவளை நம்பாமல், அவள் மீது நான் ஒரு கண் வைத்திருப்பதில் தவறென்ன?” என்று வினவவும் செய்தார் கடற்படைத் தலைவர்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று இதயசந்திரனுக்குத் தெரியாததால் அவனுக்குக் கோபமே வந்தது. “சிறிய விஷயங்களை மிகைப்படுத்துகிறீர்கள். தவிர உங்கள் மீதும் தவறிருக்கிறது” என்று சம்பந்தமில்லாமல் சிறிது சினத்தைக் காட்டிப் பேசினான்.

கனோஜி, “பலே பலே!” என்று கூறி ராட்சதச் சிரிப்பாகச் சிரித்தார்.

“என்ன பலே!” என்றான் தமிழன் ஆத்திரத்துடன். “தமிழா! உன்னைத் தமிழன் என்று அழைப்பது கூடத் தவறு. பார்க்கப் போனால் நான்தான் தமிழன்” என்றார் கனோஜி.

“நான் தமிழனல்லவா?”

”அல்ல.”

“ஏன்?”

“தமிழ்க்காவியங்களில் காதல் நிரம்ப இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். கள்ளத்தனமாகக் காதல் புரிவதும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருப்பதாகத் தஞ்சை மகாராஷ்டிரர் சொல்லக் கேள்வி. அது சரியானால் அதைக் கடைப்பிடிப்பவன் நான். அப்படி நான் காதலிக்கிறேன் பல பெண்களை, அனுபவித்துமிருக்கிறேன் பல அழகிகளை. நீ ஓரிரண்டு பெண்களைக் கண்டு பல்லிளித்து விட்டு அவர்களை அணுகவும் அனுபவிக்கவும் அஞ்சி ஒதுங்குகிறாய். இப்படிப்பட்ட நீ எப்படித் தமிழனாயிருக்க முடியும்?” இதைச் சொன்ன கனோஜி ஆங்கரே மீண்டும் கட்டிடம் அதிரும்படியாக நகைத்தார்.

இதயசந்திரன் அவர் பேச்சு எதையும் ரசிக்கவில்லை. தமிழர்களெல்லாம் காதல் சுவையிலேயே திளைத்துக் கிடப்பவர்கள் என்று அவர் கூறியது வேப்பங்காயாயிருந்தது அவனுக்கு. அவர் தம்மைத் தமிழரென்று சொல்லி மார்தட்டிக் கொண்டதும் அவனுக்கு வேடிக்கையா யிருந்தது. “நீங்கள் சொல்வதை நான் ஒப்பவில்லை. தமிழரை நீங்கள் அறிய மாட்டீர்கள். அவர்கள் வீரர்கள். எதிலும் ஒரு வரையறைக்கு உட்பட்டு நடப்பவர்கள்” என்று வினவினான் கோபத்துடன்.

“வரையறை பெண்களிடம் கூடாது. அவர்களுக்கு வரையறை கிடையாது. எந்தப் பெண்ணுடன் நாம் உறவு வைத்துக்கொண்டாலும் அவள் நம்மைச் சந்தேகிப்பாள். வேறு பெண்களைப் பார்க்கிறோமா , பேசுகிறோமா என்பதையும் கண்காணிப்பாள். நம்பிக்கையில்லாத சிருஷ்டிதான் பெண்! ஆகவே அவர்களை நாம் நம்புவதும் தவறு. அவர்களை அனுபவிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். உபயோகத்துக்குப் பெண் சிருஷ்டி. அதற்கு மேல் அவர்களுக்கு இடம் கொடுப்பது மடத்தனம்” என்றார் ஆங்கரே.

“பெண்கள் ஆளப் பிறந்தவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்றான் தமிழன்.

“தமிழா! வடமொழியில் ஒரு பழமொழி உண்டு. அது சொல்கிறது. ‘ஸ்திரீ நாயகம், பாலநாயகம், பகுநாயகம், அநாயகம்’ என்று. ஸ்திரீ ஆட்சி, வீட்டுக்கும் பயனளிக் காது, நாட்டுக்கும் பயனளிக்காது. அநாயகமும், அராஜகமுமே இவற்றில் விளையும். நான் ஏதோ சுலோகம் சொல்கிறேனென்று மலைக்காதே. யாரோ சொல்லிக் கேள்வி. ஆனால் இதில் உண்மை அதிகம் இருக்கிறது. என் அனுபவமும் அப்படித்தான். சபல புத்தியுள்ள பெண் திட்டமான முடிவுகளை எடுக்க முடியாது. சிந்திக்க முடியாது. பத்துப் பேர் சேர்ந்து குட்டை குழப்பும் நிர்வாகத்தில் எ ஜமான் யார் என்று தெரியாது. இதெல்லாம் வீட்டுக்கும் அனர்த்தம், நாட்டுக்கும் அனர்த்தம்’ என்று தமது சித்தாந்தத்தை வெளியிட்ட ஆங்கரே மேலும் கூறினார், “ஆகையால்தான் நான் மனைவிமார்களை நம்புவதில்லை. எனது வீரர்களை, மாலுமிகளை நம்புகிறேன். அதனால்தான் நான் காரியங் களைச் சாதிக்க முடிகிறது. கஹினா உனக்குக் கடிதம் அனுப்பியதும் வீரன் நேரடியாகக் கடிதத்தை என்னிடம் தான் கொண்டு வந்தான். அதை நான் படிக்கவில்லை, விலாசத்தை மட்டும் பார்த்துக் கொண்டேன்…”

வியப்பு நிரம்பிய விழிகளை கனோஜியின்மீது திருப்பிய இதயசந்திரன் கேட்டான், விலாசத்தை மட்டும் பார்த்து என்ன லாபம்?” என்று.

கனோஜி சொன்னார்: “அந்த விலாசத்திலிருப்பவரைக் கண்காணிக்க உடனடியாக ஏற்பாடு செய்துவிட்டேன்.

அங்கு யார் யார் வருகிறார்கள் என்பதையும் அவ்வப்போது அறிந்து வருகிறேன். பானு தேவி மாமனிருக்கும் ஸதாராவை விட்டுப் பம்பாயிலுள்ள உறவினர்களோடு ஏன் தங்கவேண்டும்? ஸதாரா அரண்மனையைவிட வெள்ளைக்காரர் அதிகமாக வசிக்கும் கவர்னர் படை வீட்டுக்கருகில் ஏன் வசிக்கிறாள்? பம்பாயைப் பார்க்க வந்திருந்தால், உறவினருடன் சீராட வந்திருந்தால் சுமார் இரண்டு மாத காலமாக அவள் பம்பாயிலேயே தங்கியிருப்பானேன்? இக்கேள்விகளுக்கு விடை காண முயன்றேன்.”

இதயசந்திரன் சிந்தனை துரிதமாக வேலை செய்தது. “விடை கிடைத்துவிட்டதா?” என்று வினவினான் சிறிது வேகத்துடன்.

“கிடைத்துவிட்டது. அது உனக்கும் புரிந்திருக்கிறது” என்றார் கனோஜி.

”எனக்குப் புரிந்திருக்கிறதா?”

“ஆம். கஹினா மகாராணி தாராபாய்க்கு எதிரான திட்டங்களை அக்கடிதத்தில் எழுதியிருக்க வேண்டும். அதைப்பற்றி உன்னிடமும் பிரஸ்தாபித்திருப்பாள் அவள்.”

இதயசந்திரன் அசந்துபோனான். கஹினா தன்னிடம் கூறியதைக்கூட கனோஜி ஊகித்துக்கொண்டதை அறிந்த அவன் அவருடைய அபார புத்தி கூர்மையைக் கண்டு வியந்தான். அவர் சகலத்தையும் உணர்ந்து கொண்டு தன்னைச் சதுரங்கக் காயாக்குகிறார் என்பதைப் புரிந்து கொண்டதால் கேட்டான், “கஹினா அம்மையாரின் கடிதத்தை நான் கொண்டுபோய்க் கொடுப்பதால் பயனுண்டா ?”

என்று . ”உண்டு” என்றார் ஆங்கரே.

“என்ன பயன்? உங்களுக்குத்தான் பம்பாயில் நடப்பது தெரிந்திருக்கிறதே?” என்றான் இதயசந்திரன்.
”அதனால் தான் பயன், இதயசந்திரா! இப்பொழுது பானுதேவி ஷாஹுவின் சார்பில் பிரிட்டிஷாரைத் திருப்ப முயன்று வருகிறாள். ஒரு மாத காலமாக அவள் உள்ள மாளிகைக்கு பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள் பலர் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அது தவிர ஒரு போர்ச்சு கீஸியனும் வருகிறான்…” என்று ஆங்கரே குரலைத் தாழ்த்தி, “அவன் உனக்கும் தெரிந்தவன்” என்றார் ரகசியமாக.

“எனக்குத் தெரிந்தவனா?” என்று வினவிய இதய சந்திரன் குரலில் வியப்புமிருந்தது, குழப்பமுமிருந்தது.

கனோஜி ஆங்கரே சற்று நிதானித்தார், இதயசந்திரன் உஷ்ணம் குறைவதற்காக. பிறகு கூறினார், “என் மகளை அடையப் போட்டியிட்டவன், மானுவல் டி காஸ்ட்ரோ ” என்று .

கனோஜி அவரது இடையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து முகத்துக்கு நேரே நீட்டியிருந்தால் கூட அடைய முடியாத பெரும் திகைப்பை அடைந்தான் இதயசந்திரன். பரம அயோக்கியனான காஸ்ட்ரோ பானுதேவி யிருக்குமிடம் போய் வருகிறானென்பதைக் கேட்டவுடன் அவன் சிந்தை மட்டுமின்றி அவன் உடலெல்லாம்கூடக் கொதித்தது பானுதேவிக்கு காஸ்ட்ரோவால் என்ன அபாயம் நேரிடுமோ என்ற எண்ணம் அவன் அச்சத்தை உச்சநிலைக்குக் கொண்டு சென்றது. அந்த அச்சத்துடன் கேட்டான் தமிழன், “தளபதி! இது பயங்கரமான செய்தியல்லவா?” என்று.

”எது?” கனோஜியின் பதில் கேள்வியில் அசட்டை இருந்தது. “காஸ்ட்ரோ பானுதேவியிருக்குமிடம் போய்வருவது?”

“அதில் பயங்கரமென்ன இருக்கிறது?”

“காஸ்ட்ரோ அயோக்கியன். மஞ்சுவிடமே அலன் சரியாக நடந்து கொள்ளவில்லை.”
“ஆம். அதற்குத்தான் நீ தண்டனை அளித்துவிட்டாய் அவனுக்கு.”

“இப்பொழுது பானுதேவி?”

“என்ன பானுதேவிக்கு?”

“அபாயம் ஏதாவது நேரிட்டால்?”

“அதற்கு அவள் தான் பொறுப்பாளி.”

“அவளா!”

“ஆம்.”

“நீங்கள் சொல்வது புரியவில்லை எனக்கு.”

“புரியும்படி சொல்கிறேன் கேள்” என்ற கனோஜி, “தமிழா! அவன் நாடவில்லை பானுதேவியை. அவள் அழைப்பின் மேல் அவன் போயிருக்கிறான். அதுவும் நீ நினைக்கிற காரணத்துக்கல்ல. பானுதேவி எனக்கெதிராக என் விரோதிகளைத் திரட்டுகிறாள். என் கடற்படை மர்மங்களை அறிந்தவர்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொள்ள முயலுகிறாள். அந்த முயற்சியில் காஸ்ட்ரோவை யும் அழைத்துப் பேசுகிறாள். காஸ்ட்ரோ இப்பொழுது பிரிட்டிஷாரிடம் வேலையாயிருக்கிறான். இவை அனைத்தையும் இணைத்துப் பார்” என்று கூறினார்.

போர் மேகங்கள் பம்பாயில் உற்பத்தியாவதை உணர்ந்தான் இதயசந்திரன், அவர் விளக்கத்திலிருந்து. பம்பாயில் தனது அலுவல் என்ன என்பதையும் புரிந்து கொண்டான். பிரிட்டிஷ் ஷாஹு ஒப்பந்தம் ஏற்படாது தவிர்க்க வேண்டிய முக்கிய கடமையைச் செலுத்தவும், பிரிட்டிஷாரைக் கனோஜி பக்கம் இழுக்க ஏற்பாடு செய்யவும் கனோஜி தன்னை அனுப்புவதை உணர்ந்ததால், அவருக்குத் தன்னிடம் உள்ள நம்பிக்கையை நினைத்துப் பெருமிதம் கொண்டான். ஆகவே இடையே ஏற்பட்ட உணர்ச்சிகளை உதறி நிமிர்ந்து கடற்படைத் தளபதியை நோக்கினான். “என்று புறப்பட வேண்டும் நான்?” என்று வினவினான்.

“சொல்கிறேன் நாளைக்கு” என்றார் ஆங்கரே. அத்துடன் “இன்று என்ன செய்யப் போகிறாய்?’ என்றும் வினவினார்.

“உத்தரவிடுங்கள்” என்றான் இதயசந்திரன்.

“ஜல தீபத்திற்குப் போ” என்று உத்தரவிட்டார் ஆங்கரே.

”அங்கு சென்று…”

“இளைப்பாறு.”

“இங்கு இளைப்பாறினால் என்ன?”

”அமைதியிருக்காது.”

“அங்கு மட்டும் அமைதி இருக்கிறதா?”

“இருக்கிறது.”

“என்ன அமைதி?”

“அங்கு ஒரு பெண்ணிருக்கிறாள்.”

“எனக்கென்ன அதைப்பற்றி?”

“அமைதிக்கும் அனுபவத்துக்கும் பெண் இனம் சிறந்தது.”

இதயசந்திரன் வெறுப்புடன் நோக்கினான் அவரை. “நீங்கள் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் கூறும் அழகி எனக்குத் தேவையில்லை” என்றான் வெறுப்பு குரலிலும் ஒலிக்க.

கனோஜியின் இதழ்களில் இள நகை புலர்ந்தது.. “அந்தப் பெண் மஞ்சுவாயிருந்தால்கூடவா?” என்ற கேள்வியும் அந்த இள நகையின் ஊடே உதிர்ந்தது.

“என்ன! மஞ்சுவா!”

இதயசந்திரன் வாயைப் பிளந்துகொண்டு நின்றான். “ஏன் நிற்கிறாய்? போ” என்று அதட்டினார் ஸார்கேல்.

Previous articleJala Deepam Part 2 Ch31 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here