Home Historical Novel Jala Deepam Part 2 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

67
0
Jala Deepam Ch33 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch33 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –33 விதியின் பதில்

Jala Deepam Part 2 Ch33 | Jala Deepam | TamilNovel.in

மஞ்சு இருக்கிறாள் ஜல தீபத்தில் என்று கனோஜி ஆங்கரே சொன்னதும் இதயசந்திரன் இதயத்திலிருந்து அரசியல் அகன்றது, போர் அகன்றது, சூழ்நிலை அகன்றது. அனைத்தும் அகன்று, சூன்ய நிலை நிலவத் தொடங்கிய சமயத்தில் மஞ்சுவின் எழில் முகம் புகுந்தது அந்த வாலிபன் இதயத்திலே. அந்த முகம் புகுந்து விரிந்து இதயம் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டதால் பிரமை பிடித்து நின்ற இதயசந்திரன் காதில், ”ஏன் நிற்கிறாய் போ” என்ற கனோஜியின் செல்ல அதட்டல்கூட விழவில்லை. அவர் கடகடவென நகைத்து முதுகில் ஓர் அறை கொடுத்து, “தமிழா! பெண் பெயரைக் கேட்டாலே இப்படிப் பயந்து சாகிறாயே? கிட்டே நெருங்கினால் பிராணனையே விட்டுவிடுவாய் போலிருக்கிறதே” என்று கூறிய பின்பே சற்று சுரணை வந்தது தமிழக வீரனுக்கு. சுரணை வந்த பின்னும், “ஸார்கேல், ஸார்கேல்” என்று இருமுறை தடுமாறி ஏதோ சொல்ல முயன்று முடியாமல் பெயரைச் சொல்வதோடு நிறுத்திக் கொண்டான்.

“என்ன தமிழா?” என்று வினவினார் ஸார்கேல் இகழ்ச்சி கலந்த இள நகை உதடுகளில் உலாவ.

“மஞ்சு…” என்று இழுத்தான் தமிழன் தட்டுத் தடுமாறி.

“என்ன மஞ்சுவுக்கு? நன்றாகத்தானிருக்கிறாள்?” என்றார் ஸார்கேல் உற்சாகத்துடன்.

“அதைக் கேட்கவில்லை ஸார்கேல்?” என்றான் மெல்ல இதயசந்திரன்.

“வேறெதைக் கேட்கிறாய்?” என்று கேட்ட ஸார்கேல் தமது விழிகளைப் பரிதாபத்துடன் அவன்மீது நிலை நாட்டினார்.

அவர் விழிகளில் படர்ந்த பரிதாபத்தைப் பார்க்கவே செய்தான் இதயசந்திரன். அவர் மனப்போக்கும் அடிப்படைக் குணமும் தெரிந்திருந்ததால் அதைப்பற்றி ஏதும் சொல்லாமலே கேட்டான், “மஞ்சுவின் மனநிலை எப்படியிருக்கிறது?” என்று.

அவன் எதைக் குறிப்பிடுகிறானென்பதைப் புரிந்து கொண்ட ஆங்கரே, “காதரைனை நீ மணந்துகொள்ள முயன்றது அவளுக்குத் தெரியுமா என்று கேட்கிறாயா?” என்று வினவினார்.

“ஆம்” என்ற இதயசந்திரன் தாபத்தால் பெருமூச்சு விட்டான்.

“இதயசந்திரா!” என்ற கனோஜியின் குரல் அதிகாரத் துடனும் சிறிதளவு சினத்துடனும் ஒலித்தது.

“என்ன ஸார்கேல்?” என்று வினவினான் இதய சந்திரன், அவர் சினத்துக்குக் காரணம் புரியாமல்.

‘முதலில் பெருமூச்சை நிறுத்தப் பழகிக்கொள்.”

“உம்.’

“அடுத்தபடி பெண்கள் என்ன நினைப்பார்கள், ஏது நினைப்பார்கள் என்று எண்ணி எண்ணி உயிர் விடுவதை நிறுத்திக் கொள்.”

“ஸார்கேல்.”

“உஷ். பேசாதே. சொல்வதைக் கேள்! பெண்களைப் பற்றி நினைத்துக் கொண்டேயிருப்பவன் நினைப்பதோடு சாக வேண்டியதுதான். பெண்களை நினைப்பதைவிடப் பெரிய காரியங்கள் உலகில் இருக்கின்றன. அவற்றைக் கவனிக்க வேண்டுமானால் வாழ்க்கையின் சில்லறை விஷயங்களை நெஞ்சிலிருந்து கூடியவரை ஒதுக்கவேண்டும். நம்முன் பெரும் போர்களிருக்கின்றன. அவற்றை நினைத்தால் மஞ்சு, காதரைன், பானுதேவி, கஹினா எல்லோரும் துரும்புகள். வீரனாயிருப்பவன் பெரும் செயல்களால் வாழ்கிறான். சாதனைகள் தான் அவன் வாழ்வு, வாழ்வின் லட்சியம். அந்த லட்சியப் பாதையில் நடப்பவன் இடையே வேண்டிய சுகங்களைப் பெறுகிறான். முடிந்தால் சுலபமாகப் பெறுகிறான். இல்லையேல் வலுவில் அடைகிறான்…” இதைச் சொல்லிச் சிறிது பேச்சை நிறுத்தினார் ஸார்கேல். அவனை உற்றும் நோக்கினார்.

இதயசந்திரன் அவரைப் பார்க்கவும் சக்தியற்று நிலத்தை நோக்கி நின்றான். அவர் பெரிய நோக்கு, மனித வாழ்க்கையின் சிறிய சுக துக்கங்களை அவர் துரும்புபோல் மதித்தல், இவையனைத்தும் அவன் அறிந்தேயிருந்தான். ஆகவே அன்று அவர் சொன்னது அவனுக்கு அதிகமாக உறைக்கவில்லை. ஆகவே நிலத்தை நோக்கியபடி சொன் னான், “வாழ்க்கையைப் பற்றிய பெரிய விஷயங்களைக் கூறுகிறீர்கள் ஸார்கேல். ஆனால் எனது மனத்தில் சிறிய விஷயங்களே நிரம்பி நிற்கின்றன” என்று.

“உதறு அவற்றை” என்றார் ஸார்கேல்.

“முடியாது ஸார்கேல். எனக்கு அந்தத் திறனில்லை. காதரைனை நான் மணந்துகொள்ள முயன்றதை இத்தனை நேரம் ஹர்கோவிந்தோ, பர்னாண்டோவோ யாராவதோ சொல்லியிருப்பார்கள். ஆகவே மஞ்சு என்னைத் திரும்பியும் பார்க்கமாட்டாள்” என்று கூறினான் இதயசந்திரன் தழுதழுத்த குரலில்.

“திரும்பிப் பார்க்கச் சொல்வது உன் திறமையிலிருக்கிறது.”

“என் திறமையா?”

“ஆம்.’:

“எனக்கு அந்தத் திறமையில்லை ஸார்கேல்” என்று முடிவாகக் கூறினான் இதயசந்திரன்.

ஸார்கேல் அவனைப் பரிதாபத்துடன் பார்த்தார். “இதயசந்திரா” என்று மெல்ல அழைக்கவும் செய்தார். அவன் தோள்மீது தன் கையைப் போட்டுக் கொள்ளவும் செய்தார். மெல்ல அவனை நடத்தி தோர்லாவாடாவுக்கு வெளியே அழைத்தும் வந்தார் தைரியம் சொல்லிக் கொண்டே “இதயசந்திரா! வாழ்க்கையில் தவறு செய்யாதவன் இல்லை. வழுக்கி விழாதவர் மிகச் சொற்பம். அதுவும் பெண்களிடம். ஆண்களைப் பித்துக்கொள்ளச் செய்யவே பெண்களை ஆண்டவன் கவர்ச்சியாகப் படைத் திருக்கிறான். நாம் தவறினால் அதற்கும் அவர்கள் தான் காரணம். காதரைன் இடையே வந்த ஒரு பூங்காற்று. நித்யமான தென்றலல்ல. நித்யமான தென்றலை நோக்கிப் போ” என்றார் ஸார்கேல்.

“தென்றல் சூறாவளியாயிருந்தால்?” என்று கேட்டான் இதயசந்திரன்.

ஸார்கேல் அவனைத் தன்னை நோக்கித் திருப்பி, “கப்பல். சூறாவளியில் அகப்பட்டுக்கொண்டால் என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்.

“பாய்களை அவிழ்த்துவிடுகிறோம், சுக்கானைச் சரியாகப் பிடித்தும், துடுப்புகளை மும்முரமாகத் துழாவியும் சூறாவளியைச் சமாளிக்கிறோம். எப்படியும் சமாளித்து ஒரு நிலைக்குக் கொண்டு வரும்வரை போராடு கிறோம். சூறாவளி அடங்கியதும் சாந்தப்படுகிறோம்” என்றான் இதயசந்திரன்.

“அதுதான் வழி. போய் வா” என்ற ஸார்கேல் அவனைத் தோர்லாவாடாவின் வாயிலில் விட்டு, திரும்பி உள்ளே சென்றார்.

தோர்லாவாடாவின் படிகளில் இறங்கிக் கீழே நின்று சிறிது நேரம் அந்தப் பெரும் மாளிகையைப் பார்த்துக் கொண்டிருந்த இதயசந்திரன் மறுபடியும் படிகளில் ஏறிச் சென்று தனது அறையிலிருந்த தனது மாலுமி உடைகளி லொன்றை அணிந்துகொண்டான். பிறகு கைத்துப்பாக்கி யொன்றையும் கச்சையில் செருகிக்கொண்டு படகொன்றை எடுத்துக்கொண்டு ஜல தீபத்தை நோக்கிச் சென்றான்.

அப்பொழுது உச்சி வேளை தாண்டி ஒரு ஜாமம் முடிந்து விட்டதால் கடலில் அலைகள் அமைதியுடன் எழுந்து தாழ்ந்தன. கதிரவன் கொடுமை ஓரளவு குறைந்து மிருந்தது. துறைமுகத்தில் காலையில் காணப்பட்ட கப்பல் களைத் தவிர வேறு கப்பல்களும் வந்து நங்கூரம் பாய்ச்ச முயன்றுகொண்டிருந்தன. நங்கூரம் பாய்ச்சிய கப்பலி லிருந்து பல மாலுமிகளும் மாலுமிகளல்லாத வீரரும் சாரி சாரியாகப் படகுகளில் சென்றுகொண்டிருந்தார்கள் கரை நோக்கி. புதிதாக வந்த கப்பல்களும் கனோஜியின் குராப்பும் போரில் காயமடைந்த காலிவாத்தும் இன்னும் நாலைந்து பெரும் கப்பல்களும் நிறைந்திருந்ததால் பெரும் கடல் தளமாகும் அறிகுறிகளைப் பெற்றுக்கொண்டிருந்தது கொலாபா துறைமுகம். இத்தனையையும் பார்த்தும் அவற்றைப்பற்றி ஏதும் நினைக்கச் சக்தியில்லாமலே படகைச் செலுத்திக் கொண்டு சென்ற இதயசந்திரன் பிற்பகல் பதினெட்டு நாழிகைக்கு மேல் ஜல தீபத்தை அடைந்தான். அவன் வருவதைத் தூரத்திலிருந்தே கவனித்த இப்ரஹீம் அவன் ஏறிவர நூலேணியொன்றை முன்னதாகவே தொங்கவிட்டிருந்ததால் அதிலேறித் தளத்தில் குதித்த இதயசந்திரன் சுற்றுமுற்றும் கவனித்தான்.

மாலுமிகள் அவரவர்கள் அலுவல்களைப் புரிந்து கொண்டிருந்தார்கள். கப்பல் தளத்தை இரண்டு பேர் கழுவிக் கொண்டிருந்தார்கள். பர்னாண்டோ ஒரு மூலையில் உட்கார்ந்து பாய்ச் சீலையின் கிழிந்த இடங் களைப் பெருஊசியும் நூலும் கொண்டு தைத்துக் கொண்டிருந்தான். ஹர்கோவிந்த் பீரங்கியின் முதுகுக்கு எண்ணெய் போட்டுத் துடைத்துக் கொண்டிருந்தான். எங்கும் கப்பல் சுத்திகரிப்பு வேலை நடந்து கொண் டிருந்தது. மாலுமிகளில் சிலர் புதிதாகவும் இருந்தார்கள். “இப்ரஹீம்! புதிதாகச் சில மாலுமிகள் இருக்கிறார்களே” என்று கேட்டான் இதயசந்திரன்.

”ஆம். இப்பொழுது புதிதாகச் சிலரை நியமித்திருக்கிறோம்” என்றான் இப்ரஹீம்.

“யார் நியமித்தது இவர்களை?” என்று சீறினான் இதயசந்திரன்.

“கப்பல் தளபதி” என்று அடக்கமாக வந்தது இப்ரஹீம் பதில்.

“ஏன், என்னைக் கேட்க வேண்டியதில்லையா?” என்ற இதயசந்திரன் குரலில் அதிகாரமும் அதட்டலும் இணைந்திருந்தன.

“இந்தக் கேள்வியைத் தளபதியைத்தான் கேட்க வேண்டும்” என்ற இப்ரஹீம் மெள்ள அவ்விடத்திலிருந்து நகர்ந்தான்.

பீரங்கிக்கு எண்ணெய் போட்டுக் கொண்டிருந்த ஹர்கோவிந்திடம் விரைந்து சென்ற இதயசந்திரன், ”ஹர்கோவிந்த்!” என்று சற்று அதிகாரத்துடன் அழைத்தான்.

ஹர்கோவிந்த் மெள்ள இதயசந்திரனைத் திரும்பிப் பார்த்து, “ஓகோ தாங்களா?” என்றான் அப்பொழுது தான் அவனைப் பார்ப்பது போல்.

“ஆம். நான்தான்.” கடுமையிருந்தது தமிழன் குரலில்.

“இப்பொழுதுதான் வந்தீர்களா?” சர்வ சாதாரண மாகயிருந்தது ஹர்கோவிந்தின் கேள்வி.

“ஆம் வந்ததும் வரவேற்பு பலமாயிருக்கிறது!” என்ற இதயசந்திரன் சீறினான்.

அதை ஹர்கோவிந்த் கவனித்ததாகக்கூடத் தெரியவில்லை. “தளபதி அவர்கள் அறையிலிருக்கிறார்கள்” என்று சுட்டிக் காட்டினான் ஹர்கோவிந்த்.

இதயசந்திரன் அசந்துபோனான். இப்படி ஓர் அலட்சியத்தைத் தனது மாலுமிகள் தன்னிடம் காட்டுவார் களென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன். தான் தளபதியல்லாவிட்டாலும் உபதளபதியென்ற முறையிலாவது தனக்கு உட்பட வேண்டிய ஹர்கோவிந்தும் இப்ரஹீமும் தன்னை மூன்றாவது மனிதன் போல் நடத்துவது அவனுக்குப் பெருவிசித்திரமாயிருந்தது. கடைசியாக பர்னாண்டோ எப்படியிருக்கிறான் என்பதைப் பார்க்க அவனிருந்த இடத்துக்குச் சென்றான். பர்னாண்டோ பாய்ச் சீலையைத் தைப்பதில் மும்முரமாயிருந்ததால் தலையைத் தூக்கவில்லை. ‘பர்னாண்டோ!” என்று அழைத்த பின்புதான் ஏறிட்டுப் பார்த்தான். பிறகு உட்கார்ந்தபடியே கேட்டான்: “தாங்களா! வாருங்கள். இப்படி உட்காருங்கள்” என்று சற்றுப் பாய்மரத் தண்டிலிருந்து தள்ளி இடங்கொடுத்தான்.

இதயசந்திரன் உட்காரவில்லை. ”பர்னாண்டோ!” என்று இடியென ஒலித்த குரலில் கூறினான் தமிழன்.

அந்தக் கூவலால் சிறிது அதிர்ச்சியடைந்த பர்னாண்டோ எழுந்து நின்றான். “உங்களுக்கெல்லாம் என்ன வந்து விட்டது பர்னாண்டோ?’ என்று இரைந்த குரலில் கேட்டான் தமிழன்.

”என்ன கேட்கிறீர்கள்?” என்றான் பர்னாண்டோ ஏதும் புரியாததுபோல்.

இதயசந்திரன் பொறுமையை இழந்து திடீரென பர்னாண்டோவின் சட்டையைக் கழுத்தருகில் இழுத்துப் பிடித்து அவனைப் பாய்மரத்தில் சார்த்திப் பிடித்தான் பலமாக. “இப்பொழுது பேசு. என்னை இப்படி அலட்சியப்படுத்தும்படி யார் உத்தரவிட்டிருக்கிறது, உங்களுக்கு? கனோஜியின் மகளா?” என்று சீறினான். அத்துடன் கழுத்திலிருந்த கையையும் சற்றுப் பலமாக அழுத்தினான்.

பர்னாண்டோ சிறிது அசையாமல் நின்றான். பிறகு இதயசந்திரன் கை கழுத்தில் அழுத்தியிருந்ததால் சற்றுச் சிரமப்பட்டு பேசவும் செய்தான். ”தெரிந்திருந்தும் ஏன் கேட்கிறீர்கள் என்னை?” என்று கேட்டான் பர்னாண்டோ.

“உபதளபதியை அவமானப்படுத்தும்படி உத்தரவிட தளபதிக்கும் அதிகாரம் கிடையாது தெரியுமா?” என்று சீறினான் தமிழன்.

அடுத்து பர்னாண்டோ பேசவில்லை . ”நீங்கள் உப தளபதியென்று யார் சொன்னது?” என்ற குரல் பின்னா லிருந்து ஒலித்தது அதிகாரத்துடன். பர்னாண்டோவின் சட்டையை விட்டுத் திரும்பிப் பார்த்த இதயசந்திரன் தனக்குப் பின்னால் சிறிது தூரத்தில் மஞ்சு நின்றிருப்பதைக் கவனித்தான். அவள் கண்களில் கனல் பொறிகள் பறந்தன. சிறிதும் அசைவற்று நின்றிருந்தாள் அவள்.

இதயசந்திரன் கண்களில் கோபாக்கினி துளிர்த்தது. “நான் உபதளபதியல்லவென்று யார் சொன்னது?” என்று சீற்றம் மிதமிஞ்சி ஒலித்த குரலில் பதில் கேள்வியை வீசினான்.

“நான் சொல்லுகிறேன் ஜல தீபத்தின் தளபதி” என்றாள் மஞ்சு. அந்தச் சமயத்தில் அவள் நெருப்பை உள்ளடக்கிய வன்னிமரம் போலிருந்தாள்.

இதயசந்திரன் நிதானம் தவறி இரண்டெட்டில் அவளிருந்த இடத்தை எட்டி அவள் தோள்களை இறுகப் பிடித்தான். “என்ன துணிவு உனக்கு, என்னை ஜலதீபத்தின் உபதளபதியல்லவென்று சொல்ல?” என்று சீறினான், அவள் விழிகளுடன் தனது விழிகளைக் கலந்து.

”விடு அவளை.” சற்று எட்ட இருந்து கேட்டது ஒரு புதுக்குரல். அந்தக் குரல் வந்த திசையை நோக்கிய இதய சந்திரன் தான் சற்றும் முன்பின் அறியாத ஒரு மனிதன் நிற்பதைக் கண்டான். சுமார் ஐம்பது வயதுடையவனென்று மதிக்கக்கூடிய அம்மனிதன் கையில் ஆயுதமேது மில்லையென்றாலும் அவன் தோரணையில் கம்பீர மிருந்தது.

“யார் நீ!” இதயசந்திரன் குரல் அதிகாரத்துடன் ஒலித்தது.
அந்த மனிதன் பதற்றம் ஏதும் காட்டவில்லை. அவன் பதிலைச் சர்வ சாதாரணமாகத்தான் கூறினான். அவன் சொன்னது பதிலல்ல அது, விதியின் பதில் என்பதைப் புரிந்துகொண்ட இதயசந்திரன் சிலையெனச் சமைந்து நின்றான். ‘இருக்காது இருக்க முடியாது. என்று குழறவும் செய்தான்.

Previous articleJala Deepam Part 2 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch34 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here