Home Historical Novel Jala Deepam Part 2 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

57
0
Jala Deepam Ch4 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch4 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –4 கடற்போர்

Jala Deepam Part 2 Ch4 | Jala Deepam | TamilNovel.in

பிரிட்டிஷ் போர்க் கப்பலான டிபையன்ஸ்’ ஜல தீபத்தின் மீது வீசிய வெடிகுண்டு ஜல தீபத்தின் வேகத்தின் காரணமாக அதன்மீது விழவில்லையாதலால் எந்தச் சேதமும் ஜல தீபத்திற்கு ஏற்படவில்லை. வீணாக்கப் பட்ட அந்த வெடிகுண்டு ஜல தீபத்துக்கு அருகில் விழுந்து நீரைப் பளேரென்று அள்ளித் தெளித்ததே தவிர வேறு பயனெதுவும் ஏற்படாததைக் கண்ட இதயசந்திரன் முகத்தில் மகிழ்ச்சிக்குறி உலாவுவதைக் கண்ட மஞ்சு, “அந்தக் குண்டு இங்கு விழாததைப் பற்றி உற்சாகம் போலிருக்கிறது?” என்று வினவினாள் கோபத்துடன்.

தூரதிருஷ்டிக் கண்ணாடியை மீண்டும் கண்ணில் பொருத்திக் கொண்டு போர்க் கப்பலைக் கவனித்த இதய சந்திரன், “ஆம்” என்று மிகுந்த அசட்டையுடன் பதில் கூறினான்.

“ஓடுவதில் உங்களுக்கிருக்கிற சாமர்த்தியம் எதிரிக்கில்லை” என்று குத்தினாள் மீண்டும் மஞ்சு.

“இல்லை. இருந்திருந்தால் அந்தக் குண்டு இந்தத் தளத்தில் விழுந்திருக்க வேண்டும். குண்டு வீச்சின் எல்லையைக் கவனித்து அந்த எல்லைக்குள் ஜல தீபம் இருக்கிறதா என்பதைப் பார்த்த பின்பு எதிரி பீரங்கியைப் பிரயோகித் திருந்தால் குண்டு இங்கு விழுந்திருக்கும். ஏதோ பீரங்கியை வெடிக்க வேண்டுமென்பதற்காகக் குண்டு வீசுவது வீண் நஷ்டம்” என்றான் இதயசந்திரன் கண்களிலிருந்து கண்ணாடியை எடுக்காமலே.
“அந்த நஷ்டத்திற்கு நீங்கள் உள்ளாக மாட்டீர்கள்?” மஞ்சுவின் குரல் இகழ்ச்சியைக் காட்டியது.

“மாட்டேன். ஒரு குண்டுகூட வீணாவதை நான் விரும்பவில்லை .”

“போரையும் விரும்பவில்லையா?”

“இல்லை.”

“ஓடத்தான் விரும்புகிறீர்கள்?”

“ஆம்.”

“ஏன்?”

“ஓடுபவனைக் கண்டால் துரத்துபவனுக்கு எளிது” என்று சொல்லிக் கொண்டிருந்த இதயசந்திரன் திடீரென “துடுப்புகள் நிற்கட்டும் துழாவ வேண்டாம்’ என்று கூறினான். உடனே தளத்தில் ஓடி, “பர்னாண்டோ! அந்தத் தளபீரங்கியை டிபையன்ஸை நோக்கித் திருப்பு. அதோ அதன் முகப்புப் பாய்மரத்தின் நடுவில் ஒரு பெரிய விளக்கு தெரிகிறது பார். அதைப் பார்த்துச் சுடு” என்று உத்தரவிட்டான். அத்துடன் தளபீரங்கிகளில் இன்னொன்றின் அருகில் தான் சென்று அதை இரு கைகளாலும் பிடித்துத் திருப்பி டிபையன்ஸுக்குப் பின்னால் வந்திருந்த ஆயுதந் தரித்த சிறு கப்பலின் பாயை நோக்கிச் சுட்டான்.

திடீரென எதிர்பாராத விதமாக வெடித்த அந்த இரு பீரங்கிகளும் விளைவித்த நாசத்தால் எதிரிக் கப்பல்களின் தளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பர்னாண்டோவின் குறி தப்பவில்லை. பாய்மர விளக்கு படு தூளாக, பாய்மரமும் முறிந்து, பாயும் தீப்பிடிக்கவே டிபையன்ஸ் சட்டென்று வேகத்தை அடக்கிக் கொண்டது. ஒரு பாய் நாசமடைந்தாலும் நடுமரப் பெரும் பாயும் பின் பாயும் நன்றாக விரிந்திருந்ததால் அதன் வேகத்தில் அதிகத் தடை ஏற்படவில்லையென்றாலும் போர்க்கப்பலின் தலைவன் சட்டென்று துடுப்புத் துழாவுவதை நிறுத்தி சற்று வேகத்தைக் குறைத்தான்.

மஞ்சு மெள்ள மெள்ளப் புரிந்து கொண்டாள் இதய சந்திரன் போர் முறையை. பிரிட்டிஷ் கப்பலை வேண்டு மென்றே தன்னைத் துரத்தவிட்டு அந்தக் கப்பல் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பாயைச் சுட்டுவிட்டான்.

இதயசந்திரன் என்பதைப் புரிந்து கொண்டதால், அடுத்து அவன் அந்தப் போர்க் கப்பலின் மற்ற பாய்களையும் சுட்டுவிடுவான் என்று எதிர்பார்த்தாள். தவிர அந்தச் சிறு கப்பலின் பாயை எதற்காக உடைத்தான் என்பதும் புரியவில்லை அவளுக்கு.

இதயசந்திரன் இட்ட அடுத்த உத்தரவுகள் அவளுக்கு வியப்பை அளித்தன. “இப்ரஹிம்! சுக்கானைத் திருப்பி ‘ஆன்’ என்ற சிறு கப்பலை நோக்கிச் செல். துடுப்புகள் துழாவட்டும். அதோ பார் அந்த இரு சிறு கப்பல்களும் பெரிய கப்பலைவிட்டுப் பிரிந்து நிற்கின்றன. பர்னாண்டோ ! நாம் போர்க் கப்பலிடமிருந்து சற்று எட்டவே செல்வோம். நம்மை அந்த மூன்று கப்பல்களும் வளைத்துக் கொள்ளவே பிரிந்து நிற்கின்றன. நாம் அவற்றைச் சேர்ந்து தாக்க முடியாது, ஒவ்வொன்றாகத் தாக்குவோம்” என்று கூறிவிட்டு, “மஞ்சு! இந்தா! இந்த பீரங்கியைப் பிடித்துக் கொள். ‘ஆன்’ என்ற கப்பலின் இரண்டு பாய்களில் ஒன்றை நான் சுட்டுவிட்டேன். இன்னொன்றை நீ சுட்டுவிடு” என்று உத்தரவிட்டுக் கப்பலின் அடித்தளத்துக்குச் சென்று அங்கு சில உத்தரவு களை ஹர்கோவிந்துக்கு இட்டான். தூரதிருஷ்டிக் கண்ணாடியை அவனிடம் கொடுத்து எதிரிக் கப்பல்களைப் பார்க்கச் செய்தான். பிறகு துடுப்புகளை எவ்வப்பொழுது எந்த வேகத்தில் துழாவ வேண்டும் என்று கூறினான்.

“டிபையன்ஸ் பெரிய போர்க்கப்பல், ஹர்கோவிந்த்! ஜல தீபத்தைவிட அதிகப் பீரங்கிகளை, அதுவும் பெரிய பீரங்கிகளை உடையது. அதை நெருங்கித் தாக்கிப் பயனில்லை. அதன் பாய்மரங்களை ஒவ்வொன்றாக நாம் உடைத்து அதன் வேகத்தை உடைக்க வேண்டும். பிறகு வேகமாக நெருங்கி இடித்து நமது வீரர்களை அதன்மீது தாவச் செய்து போரிட வேண்டும். அது கடைசிப் பகுதி. இப்பொழுது நாம் அந்த ‘ஆன்’ என்ற கப்பலை நோக்கிச் செல்கிறோம். பலமாகத் துழாவு துடுப்புகளை!” என்று கூறிவிட்டுத் தளம் வந்தான்

அங்கு வந்து தூரதிருஷ்டிக் கண்ணாடியால் எதிரி கப்பல்களை ஆராய்ந்தான். ஆராய்ந்ததில் திருப்தியும் கொண்டான். எதிரிக் கப்பல்கள் மூன்றாகப் பிரிந்து அர்த்தசந்திர வளையமாக நகர்ந்து கொண்டிருந்தன. அந்த வளையத்தின் நடுவில் ‘ஆன்’ கொண்டு வரப்பட்டிருந்ததைக் கவனித்த இதயசந்திரன் அதில் தான் வர்த்தகச் சரக்குகள் அதிகமிருக்க வேண்டுமென்று தீர்மானித்தான். அவன் பார்த்த சமயத்தில் மற்றொரு ஆயுதக் கப்பலில் பறக்க விடப்பட்ட கொடியிலிருந்து அது பம்பாய் கவர்னரின் கப்பலென்பதையும் புரிந்து கொண்டான். ஒரு புறம் டிபையன்ஸ் என்ற போர்க் கப்பலும் இன்னொரு புறம் கவர்னரின் ஆயுதக் கப்பலும் பாதுகாப்பளிக்க நடுநாயகமாய் நின்றிருந்த ஆன் என்ற கெட்சின் இரு பீரங்கிகளும் ஜல தீபத்தை நோக்கித் திருப்பப்பட்டிருந்தன. அந்தச் சிறு கப்பலை நோக்கி ஜல தீபத்தை நேராகச் செலுத்த உத்தரவிட்டான் இதயசந்திரன்.

அந்த உத்தரவை இதயசந்திரன் கூவ, அதை மற்றொரு மாலுமி கீழ்த்தளத்துக்கு இரைந்து அறிவிக்க ஜல தீபம் அந்த நடுக்கப்பலை நோக்கி நகர்ந்தது. இதைக் கண்ட மஞ்சு கேட்டாள், “இப்பொழுது போர்க் கப்பலின் பீரங்கிகள் ஜல தீபத்தைச் சுடாதா?” என்று. “சுடாது” என்றான் இதயசந்திரன். “ஏன்?” என்றாள் மஞ்சு.

“இந்தா, இந்தக் கண்ணாடியில் எதிரிக் கப்பல்களின் வளைவைப் பார்” என்று அவளிடம் கண்ணாடியைக் கொடுத்தான்.

“அதோ பார். இப்பொழுது அந்தக் கப்பல்கள் நன்றாக வளையமாகி ஜல தீபத்தைக் கௌவ வரும் நண்டைப் போல ஆகிவிட்டன. நண்டின் நீண்ட முன்புறக் கொடுக்குகளைப் போல் போர்க்கப்பலும் கவர்னரின் சிறு ஆயுதக் கப்பலும் ஜல தீபத்தை நெருங்குகின்றன.

அவற்றின் கொடுக்குக்குள் கால்வாசி செல்லும். பிறகு நின்றுவிடும்” என்று விளக்கினான்.

மஞ்சு கண்ணாடியை அவனிடம் கொடுத்தாள். “இப்படி வாருங்கள் ஒரு விநாடி’ என்று அழைத்தாள் பக்கத்திலிருந்த பாயின் மறைவுக்கு, இதயசந்திரன் சென்றான் அவளைத் தொடர்ந்து. பாயின் மறைவில் நின்ற மஞ்சு சொன்னாள் “உங்களிடம் அபராதப்பட்டு விட்டேன்” என்று.

“என்ன அபராதம்?”

“நீங்கள் ஜல தீபத்தைப் புறமுதுகு காட்டச் செய்ததால் உங்களைக் கோழை என்று நினைத்தேன். அது அபராதமல்லவா?”

“ஆம் மஞ்சு” என்றான் இதயசந்திரன்.

“இந்தாருங்கள் அபராதக் காணிக்கை!” என்று தனது இரு கைகளாலும் அவன் கழுத்தைச் சுற்றி வளைத்துக் கீழே இழுத்து இதழ்களை அவன் கன்னத்தில் அழுத்தி விட்டுப் பிறகு சரேலென்று ஓடிவிட்டாள் தளத்தின் மற்றொரு பகுதிக்கு.

இதயசந்திரன் திக்பிரமை பிடித்து நின்றான். தனது போர்த் திறமையை உணர்ந்து மஞ்சுவிடமிருந்து எதிர் பாராதவிதமாகக் கிடைத்த அந்த வீரப் பரிசு அவனை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது. உடலெல்லாம் புல்லரிக்க, உணர்ச்சியெல்லாம் ஊசி முனையில் நிற்க, சற்று நேரம் குழம்பிவிட்ட அவனை இப்ரஹீமின் குரல், இவ்வுலகுக்குக் கொண்டு வந்தது, “தலைவரே! நாம் நடுக்கப்பலை அணுகப் போகிறோம்!” என்று கூறினான் இப்ரஹீம்.

“போர்க் கப்பலுக்கும் சிறு ஆயுதக் கப்பலுக்கும் இடையில் ஜல தீபம் தீப முகத்தை நீட்டுகிறது” என்று கூவினான் பர்னாண்டோ.

அந்தக் கூவல்களால் அழைக்கப்பட்ட இதயசந்திரன் வெகுவேகத்துடன் பர்னாண்டோ இருந்த இடம் வந்து, ”பர்னாண்டோ ! சற்று ஜலதீபம் நிற்கட்டும்!” என்றான், பிறகு எதிரே தனது கப்பலின் முகப்பிலிருந்து சற்றுத் தள்ளி இரு புறமும் நின்ற கப்பல்களையும், எதிரே சற்று தள்ளி நின்ற ‘ஆன்’ என்ற கெட்சையும் கவனித்துத் திருப்தியடைந்தான்.

எதிரிக் கப்பல்களில் திடீரெனக் குழப்பமுண்டாயிற்று. கவர்னரின் சிறு கப்பலிலிருந்த தலைவன் ‘சுடு எதிரி மீது’ என்று போர்க்கப்பலுக்கு விளக்கச் சைகை செய்தான்.

போர்க் கப்பலின் தலைவன் சுடவில்லை. தனது கப்பலும் கவர்னர் ஆயுதக் கப்பலும் நேருக்கு நேர் நிற்பதாலும் இடையே ஜலதீபம் மூக்கை மட்டும் நுழைத்திருப்பதாலும் தனது பக்கப் பீரங்கிகள் சுட்டால் கவர்னரின் ஆயுதக் கப்பல் மீது தான் விழுமே தவிர ஜல தீபத்தைத் தொடாதென்பதை உணர்ந்து கொண்ட தால் ‘சுடமுடியாது’ என்று பதில் விளக்குக் காட்டி பிரிக்கவும் செய்தான்.

அடுத்த விநாடி ஜல தீபம் பிசாசுபோல் இயங்கியது. திடீரென இரு கப்பல்களுக்கும் இடையே அது புகுந்து போர்க் கப்பலின்மீது பக்கப் பீரங்கிகளைப் பலபலவென்று வீசியது. எதிரிப் போர்க் கப்பல் பீரங்கிகளை இயக்குவதற்கு முன்னால் வீசப்பட்ட குண்டுகள் அதன் தளத்தில் திடீர் திடீரென விழவே, அதன் தலைவன் கப்பலை வேகமாக நகர்த்தினான் குண்டுவீச்சின் எல்லையிலிருந்து.

அந்தப் பெரும் தவறை . செய்திருக்கா விட்டால் ஜல தீபம் அன்று உருக்குலைந்து இருக்கும். அந்தத் தவறால் நண்டுவளையமும் உடைந்துவிடவே, இன்னொரு பக்கத்திலிருந்த கவர்னர் கப்பலின் பாய்களை ஜல தீபத்தின் இன்னுமிரு பீரங்கிகள் உடைத்தன. போர்க் கப்பலின் தளத்தில் குழப்பமிருந்தது. தீப்பற்றிய ஒரு பாயின் நுனியை மாலுமிகள் அணைத்துக் கொண்டிருந்தார்கள். மற்ற பாய்கள் நன்றாக விரிந்திருந்ததால் போர்க் கப்பல் வேகமாகப் பின்வாங்கியது. கவர்னர் கப்பலின் பாய்மரங்கள் உடைந்து பாய்கள் தீப்பிடித்து எரிந்தன. இரு கப்பல் களிலும் குழப்பமும் கூச்சலும் அதிகமாக இருந்த சமயத்தில் இதயசந்திரன் ஜல தீபத்தை ‘ஆன்’ என்ற நடுக் கப்பலை நோக்கி வெகுவேகமாகச் செலுத்தி, “பர்னாண்டோ ! அதன் பாய்களையும் எரித்து விடு” என்றான். அத்துடன் கீழ்த்தள பீரங்கிகளை இருபுறமும் இயக்கி கவர்னர் கப்பல் மீதும் போர்க்கப்பல் மீதும் வெடி குண்டுகளை வீசித் தாக்கினான்.

பூம்பூம் என்று சப்தித்துக் கடலை நடுங்க வைத்த ஜல தீபத்தை நெருங்க முடியாவிட்டாலும், கவர்னர் கப்பலின் தலைவன் தனது பீரங்கிகளை அதை நோக்கி இயக்கினான். கையில் வைத்திருந்த நீளத் துப்பாக்கியால் பீரங்கி இயக்கிய பர்னாண்டோவைச் சுட்டுவிடவும் முயன்றான். அதே போல பீரங்கிகளை வெடித்து டிபையன்ஸும் ஜலதீபத்தை நெருங்கியிருந்தால் முடிவு வேறுவிதமாயிருக்கும். ஆனால் கோழையான அந்தப் போர்க் கப்பலின் தலைவன் பாய் விரித்துப் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தான்..

அவன் ஓடினாலும் கவர்னர் கப்பல் தலைவன் மும்மர மாகப் போரிட்டான். தைரியத்துடன் ஜல தீபத்தை நெருங்கி பீரங்கிகளை வேகத்துடன் இயக்கிச் சரமாரியாகக் குண்டுகளை வீசினான்.

அந்தக் கப்பல்மீது பதில் குண்டுகளை வீசிக் கொண்டே நடுக்கப்பலான ‘ஆனை’ நோக்கிச் சென்ற இதயசந்திரன் ஜல தீபத்தின் பீரங்கிகளைக் கொண்டு அந்தக் கப்பலை மீண்டும் சுட்டான். தள பீரங்கிகளிலொன்றைத் தானே இயக்கிப் பாய்மரத்தை உடைத்தான். அத்துடன் ஜல தீபத்தை அதனுடன் நெருக்கி, “ஹர் ஹர் மகாதேவ்!” என்று கூவினான்.

ஜல தீபத்தின் மாலுமிகள் அந்தக் கூவலைக் கேட்டு உருவிய வாட்களுடன் தளத்துக்கு ஓடிவந்து, “ஹர் ஹர் மகாதேவ்!” என்ற மகாராஷ்டிரர் போர்க்கூச்சலை எழுப்பினர். இரு கப்பல்களையும் இணைக்கக் கொக்கிகள் வீசப் பட்டன. ‘ஆன்’ நெருங்கி ஜல தீபத்துடன் உராய்ந்தது.

எங்கும் பயங்கர இரைச்சல்! துப்பாக்கிச் சூடு பயங்கரமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக எழுந்தது, “ஹர் ஹர் மகாதேவ்” என்ற மகா ராஷ்டிரர் போர்க்கூச்சல்! ஜல தீபத்தின் மாலுமிகள் ‘ஆன்’ மீது தடால் தடாலெனப் பாய்ந்தனர். வளைந்த அவர்கள் வாட்கள் எதிரிகளை வெட்டின. எதிரிகளும் போரிட்டார் கள் பலமாக. எல்லாவற்றுக்கும் மேலாகப் போரிட்டான் கண்ணாடியில் தெரிந்த பிரிட்டிஷ் வாலிபன். ஆனால் ஜல தீபத்திலிருந்து ஒரு பீரங்கி குண்டு அவன் வாட் கையைப் பிய்த்துக் கொண்டு போயிற்று, அந்தச் சமயத்தில் உள்ளிருந்து வந்த வெள்ளைக்காரப் பெண் அவனைக் கையால் தாங்கிக் கொண்டு கிரீச்சிட்டு ஓவென்று அலறினாள்..

சற்றுத் தூரத்தில் மீண்டும் வெடிகுண்டு சத்தம் கேட்டது: கனோஜியின் கடற்படையைச் சேர்ந்த இரு கப்பல்கள் தூரத்தில் தென்பட்டன. போர் முடிந்ததென் பதைப் புரிந்துகொண்ட இதயசந்திரன் தனது சைத் துப்பாக்கியைக் கச்சையில் செருகிக்கொண்டு வாளையும் உறையில் போட்டுக்கொண்டு அந்தப் பெண்ணை அணுகினான். வெள்ளைக்கார வாலிபன் வெடியால் மரணமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவனைக் கையில் தாங்கிய அந்த ஆங்கிலப் பெண் மேற்கொண்டு அலறக்கூடச் சக்தியின்றி மயக்கமுற்றிருந்தாள். இறந்தவனை அகற்றி அந்தப் பெண்ணைத் தூக்கித் தோள் மேல் போட்டுக் கொண்ட இதயசந்திரன் குறுக்குப் பலகை மீது நடந்து ஜல தீபத்தின் தளத்தை அடைந்தான்.

Previous articleJala Deepam Part 2 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here