Home Historical Novel Jala Deepam Part 2 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

63
0
Jala Deepam Ch5 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book
Jala Deepam Part 2 Ch5 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –5 அல்லி மலர்

Jala Deepam Part 2 Ch5 | Jala Deepam | TamilNovel.in

மயக்கமுற்றிருந்த வெள்ளைக்காரப் பெண்ணை தோள்மேல் தூக்கிப் போட்டுக்கொண்டு முதுகுப்புறம் அவள் தலையும் பாதி உடலும் தொங்கவும் முன்புறம் அவள் கால்களைத் தனது இடது கை சுற்றிப் பிடிக்கவும், வலது கையை அனாயாசமாக வீசிக்கொண்டு ஜல தீபத்தின் தளத்துக்கு வந்த இதயசந்திரன் சுற்றுமுற்றும் ஒருமுறை நோக்கினான். சற்று தூரத்தில் கனோஜி ஆங்கரேயின் கடற்படையைச் சேர்ந்த இரு குராப்புகள் கரைப்புறமிருந்து வேகமாக வந்து கொண்டிருந்ததையும் பிரிட்டிஷ், போர்க் கப்பலான டிபையன்ஸ் வெகுவேகமாக வடக்கு, நோக்கி ஓடிக் கொண்டிருந்ததையும், பம்பாய் கவர்னரின் ஆயுதக் கப்பலும் கெட்ச் ஆன் என்ற வணிகக் கப்பலும், பாய்கள் பற்றி எரியவும் பாய்கள் உடைந்து பாதி கடல் நீரிலும் பாதி கப்பலிலுமாகக் கிடக்கவும், சிறகொடிந்த. பட்சிகள் போல தத்தளித்துக் கொண்டிருந்ததையும் கண்ட இதயசந்திரன் ஒரு மாலுமியை அழைத்து ஹர்கோவிந்தை அழைக்கக் கட்டளையிட்டான்.

அடுத்த விநாடி ‘ஹர்கோவிந்த்! ஹர்கோவிந்த்!’ என்று மாலுமி குரல் கொடுக்க தளத்தை நோக்கி விரைந்து வந்த ஹர்கோவிந்தை நோக்கி, “ஹர்கோவிந்த்! போர் அநேக. மாக முடிந்துவிட்டது! எதிரி கப்பல்கள் இரண்டிலும் சரணடையும் மாலுமிகளை அந்தந்தக் கப்பலின் கீழ்த் தளத்தில் அடைத்துவிடு. எதிர்ப்பவர்களைச் சுட்டுவிடு. ஆன் என்ற கப்பலில் வர்த்தகச் சரக்கு நிரம்ப இருக்க வேண்டும். அதை ஜாக்கிரதையாக நடத்தி விஜய துர்க்கத்துக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை அதோ வரும் குராப்புகளிடம் ஒப்படைத்துவிடு கவர்னர் ஆயுதக் கப்பல் அதிகச் சேதமடைந்துவிட்டது. அதையும் இழுத்துச் செல்ல குராப்புகளுக்கு உத்தரவிடு” என்று உத்தரவுகளை மடமடவெனப் பிறப்பித்துவிட்டுக் கப்பல் தலைவியின் அறையை நோக்கி நடந்தான்.

அறைக் கதவு திறந்து கிடந்ததால், மஞ்சு ஆன் கெட் சிலோ கவர்னர் ஆயுதக் கப்பலிலோ போரில் சிக்கியிருக் கிறாளென்பதைப் புரிந்து கொண்ட இதயசந்திரன் அறைக்குள் சென்று அங்கிருந்த மஞ்சுவின் பஞ்சணையில் தோளில் சுமந்து வந்த வெள்ளைக்காரியைப் படுக்க வைத்தான். கடற்காற்றில் அணைந்து போயிருந்த அவ்வறை விளக்கையும் மெல்ல தீக்குச்சி கொண்டு கொளுத்தினான். ஜல தீபத்தின் தலைவியறைத் தீபத்தில் அந்த வெள்ளைக்காரி அளித்த காட்சி இதயசந்திரனைப் பிரமிக்கவே வைத்தது. அவளுக்கு வயது பதினாறுக்கு மேலில்லையென்பதை அவள் குழந்தை முகம் சொல்லிற்று. ஆனால் வயது பதினெட்டுக்கு மேலிருக்க வேண்டுமென்று உடலெழுச்சிகள் வலியுறுத்தின. ரத்தக்கறை அவள் உடலாடையிலும் கன்னத்திலும் நடு நெற்றியிலும் திட்டை திட்டையாகவும் பட்டை பட்டையாகவும் காணப்பட்டதால் வெள்ளை அல்லி மலரில் யாரோ திராக்ஷை மதுவை ஊற்றி விட்டுச் சென்றது போன்ற பிரமையை அளித்தது அவள் தோற்றம். ரத்தக்கறை படாத இடங்களில் வெளேரென்று தெரிந்த அவள் கன்னப் பகுதிகளும் கழுத்தும் இருந்த வழவழப்பு சலவைக் கல்லுக்குக்கூட இராதென்று நினைத்தான் இதயசந்திரன். சிவந்த சிறு பூவைப் போலிருந்த உதடுகளில் தெரிந்த ஈரம் அவற்றுக்குத் தனி மெருகைக் கொடுத்து தேனை உள்ளடக்க முடியாத மலரிதழ்களுக்கு உவமை காட்டியது. வெள்ளைக்காரியாதலால் அவள் கேசம் தங்க நிறம் பெற்றிருந்தது. மூடிய கண்களும் இமைகளும் தங்க நிறத்தில் வெள்ளைக் கன்ன முகப்புகளில் படுத்துக் கிடந்தன. அளவுடனிருந்த சிறு மார்பும் இருபுறமும் உட்புறமாக வழித்துவிடப்பட்ட இடைப் பகுதியும், லேசாக எழுந்து பிறகு கீழ்ப்புறம் விர்ரென்று சரிந்து இறங்கிவிட்ட வயிறும், சற்றே அகன்று கிடந்த அழகுக் கால்களும், ஏதோ புதுதேவதை ஜல தீபத்தின் பஞ்சணையில் விழுந்துவிட்ட பிரமையை அளித்திருந்தன. அவள் மார்பு முழுவதும் வயிறுவரை படிந்திருந்த ரத்தக்கறையைக் கண்ட இதயசந்திரன் அவள் அந்த வெள்ளைக் காரனை அணைத்துப் பிடித்திருக்க வேண்டுமென்று ஊகித்தான். அந்த ஊகம் அவனுக்குச் சற்று வேதனையைக் கூட அளித்தது. அதை நினைத்து அவன் பெரிதும் வியப்படையவும் செய்தான்.

சற்று நேரம் தூரதிருஷ்டிக் கண்ணாடியில் பார்த்த பெண், போர் முடிந்ததும் தூக்கி வரப்பட்டவள், அவளிருந்த நிலை காரணமாக, இதைப் பற்றித் தன் மனம் ஏன் சஞ்சலப் படவேண்டும் என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்ட தமிழனுக்கு உடனடியாக விடை ஏதும் கிடைக்காவிட்டாலும் சிறிது நேரம் கழித்துக் கிடைக்கவே செய்தது. விடையை மஞ்சுவே அளித்தாள். அந்தப் பெண்ணின் மூர்ச்சையைத் தெளிவிக்க அறையிலிருந்த ஜலத்தை எடுத்து அந்தப் பெண்ணின் கண்களைத் துடைத்த இதயசந்திரன் அவள் மூச்சை நன்றாக விடுவதற்காக இறுகக் கட்டப்பட்டிருந்த அவள் கௌனில் கழுத்து முடிப்பையும் அவிழ்த்துக் கையை விட்டு ஆடையை நன்றாக விலக்கினான். பிறகு சிறிது நீரை எடுத்து விரல்களால் முகத்தில் தெளித்தான்.

மெள்ள மெள்ள அவள் கண்களை அகல விரித்தாள். கைகளை உயரத் தூக்கி எதையோ தடவ முயன்றாள். ஏதும் கிடைக்காததால் பஞ்சணையில் கைகளைத் தொப்பென்று போட்டாள். திறந்த கண்களில் நீர் வழிந்து ஓடியது. பிரமை பிடித்த கண்கள் தமிழனை ஒரு விநாடி பார்த்தன. பிறகு கூரையை நோக்கின. உதடுகள் உளறின, “மிர்ரர் மிர்ரர்” என்று. பார்வையில் கனவிருந்தது, பித்து இருந்தது, தெளிவு மட்டும் அறவே இல்லை. விரிந்த இமைகள் மீண்டும் மூடின. கை ஊர்ந்து வந்து பஞ்சணை பக்கத்திலிருந்த இதயசந்திரன் தொடையைத் தொட்டது. பிறகு வாளைத் தடவியது. அந்தக் கையை மெல்லத் தனது கையால் பிடித்துக்கொண்ட இதயசந்திரன் அந்தக் கை நடுங்குவதைக் கண்டான். “மிர்ரர் மிர்ரர்” என்று அவள் முகம் பார்க்கும் கண்ணாடியைக் குறிப்பிட்டது ஏதோ பழைய நினைவு என்பதைப் புரிந்துகொண்ட அவன், அவள் கையை ஆதரவுடன் இறுக்கிப் பிடித்து, “பெண்ணே பயப்படாதே” என்று ஆங்கிலத்தில் கூறினான்.

சில விநாடிகள் கழித்து அவள் கண்களை மீண்டும் விழித்தாள். அப்பொழுது அத்தனை பிரமையில்லை, கண்களில் வேறு சுரணையிருந்ததுபோல் தென்பட்டது. “லேஸ் லேஸ்” என்று மார்பைச் சுட்டிக் காட்டினாள்.

சுருக்கிட்ட உடைக் கயிற்றைப் பற்றி அவள் கூறுகிறா ளென்பதை உணர்ந்துகொண்ட இதயசந்திரன், “கயிற்றை அவிழ்த்துவிட்டேன்” என்று தமிழில் கூறினான்.

அவள் கண்கள் வியப்பால் மலர்ந்தன. ”உனக்குத் தமிழ் தெரியுமா?” என்று தமிழிலேயே கேட்டாள் அவள் பாதி மயக்க நிலையிலும்.
“தெரியும்” என்று கூறி முறுவல் செய்தான் இதய சந்திரன்.

அவள் கண்களில் மயக்கம் நன்றாக அகன்றது. “எனக் கும் தெரியும்” என்று கூறிய அவள் மார்புச் சட்டைக் கயிற்றை நன்றாகப் பிரித்து சட்டையைத் தளர்த்தி விடும் படி சைகை காட்டினாள். அப்படி அவன் தளர்த்தியதும் மெள்ளப் படுக்கையில் புரண்டு ஒருக்களித்து, “மேல் கௌனை எடுத்து விடுங்கள்” என்றாள்.

அவன் தயங்கினான். பெண்ணின் சட்டையைத் தான் எப்படிக் கழற்றுவது என்று திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில், “ஏன் கழற்றி விடுவது தானே? கேட்கிறாளே” என்ற குரலைக் கேட்டு வாயிற்படியை நோக்கித் திரும்பிய இதயசந்திரன் அங்கு ரத்தக்கறை படிந்த உருவிய வாளுடன் மஞ்சு நிற்பதைக் கண்டு, செய்யத்தகாததைச் செய்து விட்டவன் போல் மிரள மிரள ஒரு விநாடி விழித்தான். பிறகு அதிகாரத்துடன் அவளையும் நோக்கினான். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த பர்னாண்டோவையும் மற்ற மாலுமிகளையும் நோக்கினான். “இவர்களை யெல்லாம் எதற்காக அழைத்து வந்தாய்?” என்று மஞ்சுவை நோக்கிச் சீறவும் செய்தான்.

“நான் அழைத்து வரவில்லை ” என்ற மஞ்சுவின் விழி களிலும் சீற்றமிருந்தது.

“எதற்காக வந்திருக்கிறார்கள்?” என்று வினவினான் இதயசந்திரன் குரலில் சீற்றத்தின் எல்லையைக் காட்டி.

“உபதளபதியின் உத்தரவு பெற வந்திருக்கிறார்கள்” என்றாள் மஞ்சு இகழ்ச்சியுடன்.

“எதற்கு உத்தரவு?”

“அந்தச் சீமாட்டியின் சட்டையைக் கழற்ற அல்ல…”

“மஞ்சு!”

“கோபிக்கவேண்டாம் உபதளபதி. இவளிருந்த கப்பலை நீங்கள் பிடித்த நேரத்தில் நானும் கவர்னர் கப்பலைப் பிடித்துவிட்டேன். அவற்றை எங்கு கொண்டு போவது என்று என்னைக் கேட்டார்கள் …”

“நீதானே தளபதி, நீயே சொல்லலாமே.”

“நான் பெயருக்குத்தானே தளபதி. உபதளபதியானது முதல் உங்கள் அதிகாரந்தானே அதிகமாயிருக்கிறது?”

“மஞ்சு!”

”ஏன் இரைகிறீர்கள், இந்தப் போரை நானா நடத்தினேன்?”

இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் முரண்டு கொண்டு நின்றதைக் கண்ட பர்னாண்டோ, “உபதளபதி! பிரிட்டிஷ் போர்க்கப்பல் ஓடிவிட்டது. வணிகக் கப்பலும்

கவர்னர் ஆயுதக் கப்பலும் பிடிப்பட்டுவிட்டாலும் பாய்மரங்களை இழந்து நிற்பதால் அவற்றைத் துடுப்புகளைத் துழாவிதான் கொண்டு போகவேண்டும். எங்கு கொண்டு போவது? எப்படிக் கொண்டு போவது?” என்று வினவினான்.

இதயசந்திரன் பர்னாண்டோவை நோக்கிக் கோபத்துடன் கேட்டான், “ஹர்கோவிந்த் எங்கே?” என்று.

“தங்கள் கட்டளைப்படி வணிகக் கப்பலின் மாலுமி களைச் சிறை செய்து வணிகப் பொருள்களையும் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்” என்றான் பர்னாண்டோ.

“நமது குராப்புகள் எத்தனை தூரத்திலிருக்கின்றன?” என்று வினவினான் இதயசந்திரன்.

“அருகில் வந்துவிட்டன” என்று சற்று எட்ட வந்து கொண்டிருந்த மகாராஷ்டிரப் போர்க் கப்பல்களைக் கையால் சுட்டிக்காட்டினான் பர்னாண்டோ.

அறை வாயிற்படி மூலம் நேராகத் தெரிந்த அந்தக் கப்பல்களைக் கண்ட இதயசந்திரன், “அந்தக் கப்பல் களிடம் வணிகக் கப்பலையும் கவர்னர் கப்பலையும் ஒப்படைத்து நம்மைத் தொடர்ந்து வரும்படி சொல்லிவிடு. அதற்காக முரசுகளை அடித்து அறிவித்துவிடு” என்று உத்தரவிட்ட இதயசந்திரன் அவனையும் மற்ற மாலுமி களையும் அனுப்பிவிட்டு, “மஞ்சு! நீ இவளைக் கவனி” என்று கூறிவிட்டு அறைக்கு வெளியே நடந்துவிட்டான்.

அன்றிரவு முழுவதும் அவன் திரும்ப அந்த அறைக்கு வரவேயில்லை. பிடிபட்ட இரு கப்பல்களையும் குராப்பு களிடம் ஒப்படைப்பதிலும், தனது மாலுமிகளைத் திரும்ப ஜல தீபத்துக்கு வரவழைப்பதிலும், இறந்த மாலுமிகளைக் கடலில் எறிந்துவிடவும், இறவாதவர் எண்ணிக்கை, அவர்கள் பதவி அந்தஸ்து இவற்றைக் கணக்கெடுப்பதிலும் ஹர்கோவிந்த், இப்ரஹீம், பர்னாண்டோ இவர்களுடன் காலங்கழித்தான்.

இந்த விவரங்களைச் சேகரித்த பின்பு ஜல தீபத்தின் பாய்களை உயர்த்தி நன்றாக விரிக்கச் செய்த இதய சந்திரன் “சுக்கானைத் திருப்பிக் கப்பலை விஜய துர்க்கத்தை நோக்கிச் செலுத்து” என்று ஹர்கோவிந்துக்கு உத்தரவிட்டான்: தளத்தை நன்றாகச் சுத்தம் செய்யும்படி மாலுமிக்குக் கட்டளையிட்டுத் தானே நேரிலிருந்து சுத்திகரிப்பு வேலையைக் கவனிக்கவும் தொடங்கினான். எதிரிக் கப்பல்களிலிருந்து பிரிட்டிஷ் மாலுமிகள் சுட்ட சில துப்பாக்கி ரவைகள் தளத்தில் சில இடங்களில் பொத்திக் கிடந்தன. இரண்டொன்று பக்கப் பலகைகளில் பதிந்திருந்தன. ஜல தீபம் வணிகக் கப்பலை இணைத்துப் போர் தொடுத்தபோது ஜல தீபத்தின் தளத்தில் பாய்ந்து மகாராஷ்டிர மாலுமிகளின் வளைந்த வாட்களுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட வெள்ளைக்காரர் சிலரின் உடல்கள் ஆங்காங்கு அலங்கோலமாகக் கிடந்தன. ஜல தீபத்தின் வெடிகுண்டு வீச்சுக்குப் பலியான எதிரியின் பாய்மரத் தண்டு சிலாம்புகள் தளத்தில் சிதறிக் கிடந்தன. ரத்தக்கறை பல இடங்களில் படிந்திருந்தது. இவையனைத் தையும் மாலுமிகள் வெகு துரிதமாகச் சுத்தப்படுத்தினார்கள். வெள்ளையர் சடலங்கள் கடலரசனிடம் சரணடைந்தன. சிலாம்புகளும் துப்பாக்கி ரவைகளும் பொறுக்கப்பட்டு நீரில் எறியப்பட்டன. கடல் நீர் கொண்டு ரத்தக் கறைகள் தேய்த்துக் கழுவப்பட்டன. வெகு விரைவில் நன்றாகச் சுத்தப்பட்டுப் பளபளத்த ஜல தீபத் தின் தளத்தை மகிழ்ச்சியுடன் பார்த்த இதயசந்திரன் பெருமூச்சு விட்டான். ஜல தீபத்தை அவன் பெரிதும் நேசித்தான். ஒவ்வொரு போர் முடிந்ததும் அதை வெகு சீக்கிரம் கழுவிச் சீர்படுத்தினான். அதைப்பற்றி பர்னாண்டோ ஒரு முறை கேட்டதற்கு, “ஜல தீபம் என் உடலைப் போன்றது. அதில் படும் காயம் என் உடல்மீது படும் காயம். அதன் அசுத்தம் என் உடலின் அசுத்தம்” என்று பதில் கூறினான் இதயசந்திரன்.

ஆகவே ஒவ்வொரு போர் முடிந்ததும் ஜலதீபத்தைத் துப்புரவுப்படுத்துவதை மாலுமிகள் முக்கியப் பணியாகக் கொண்டிருந்தனர். அதில் உபதளபதி செலுத்தும் அக்கறை அவர்களைப் பெரிதும் கவர்ந்திருந்ததால் ஜல தீபம் என்றும் எப்பொழுதும் பார்ப்பதற்குப் பரம சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது. அதைப் பார்ப்பதிலேயே இதயசந்திரனுக்குப் பேரானந்தம் இருந்தது. ஒவ்வொரு வெற்றி முடிவிலும் பெருமிதமும் இருந்தது அவனுக்கு, ஜல தீபத்தைப் பற்றி. ஆனால் அன்றிரவில் அவனுக்குப் பேரானந்தமும் இல்லை, பெருமிதமுமில்லை. அன்று அவனடைந்த வெற்றி பெருவெற்றிதான். இருப்பினும் அவன் மனத்தை அந்த வெள்ளைக்கார யுவதி அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். அந்த வெள்ளைக்கார வாலிபன் இறந்ததும் அவள் கிறீச்சிட்டு அலறியது, மயக்கமுற்றது, விழித்த பின்பு மலைத்தது, அத்தனையும் அவன் உள்ளத்தில் வலம் வந்து கொண்டிருந்தன. ‘அந்த வாலிபனை அவள் மிகவும் நேசித்திருக்க வேண்டும். இல்லையேல் அவள் எதற்காக அப்படி அலறினாள்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் இதய சந்திரன். ‘அப்படியிருந்தால் தமிழ் பேசி மகிழ்ச்சி காட்டினாளே என்னிடம்? அது எப்படி சாத்தியம்?’ என்றும் கேள்விகளை எழுப்பிக் கொண்டான் சித்தத்தில்.

எத்தனைக் கேள்விகள் சித்தத்தில் எழுந்தாலும் எத்தனை சந்தேகங்கள் மனத்தில் உலாவினாலும் இடையே அவள் அழகிய வதனமும் கொடி போன்ற கட்டுடலும் அவன் இதயத்தை விடாப்பிடியாகப் பிடித்து இருந்தன. ” அல்லி மலரைப் போலவா ஒருத்தியின் வெளுப்பிருக்கும்?” என்று வியந்தான் தமிழன் ஆனந்தத்துடன். இந்த நினைப்புகளுக்கிடையே புகுந்தன இரு விழிகள் மஞ்சுவின் விழிகள்! கூர்ந்து நோக்கின வெறுப்புடன். ”பெண்ணைக் கண்டதும் பித்துப் பிடிக்கும் நீயும் ஓர் ஆடவனா?” என்று கேட்டன அவள் உதடுகள்.

அந்த விழிகளும் உதடுகளும் ஊடுருவியதால் இதயத் திலிருந்து விலக்கப்பட்ட அந்த அல்லி மலரிடத்திலிருந்து தப்பியதாக அவன் எண்ணிப் பெருமூச்செறிந்தான். அவன் தப்பவில்லை. மறுநாள் அவனுக்கு மேலும் சோதனை அளித்தது. கதிரவன் கிளம்பியதும் நீராடிப் புத்துடை புனைந்து கப்பலின் தலைவியின் அறையை நாடிச் சென்ற தமிழனுக்கு அங்கு பெரும் வியப்பும் காத்திருந்தது; திகைப்பும் காத்திருந்தது. அவன் கதவைத் தட்டியதும் மஞ்சு கதவைத் திறந்தாள். அவளருகில் நின்றிருந்தாள் அந்த அல்லி மலர். கறுப்புடை அணிந்திருந்ததால் அவள் உடல் நிறம் அதிக வெண்மையாகத் தெரிந்தது. இரு பெண்களின் முகத்திலும் துன்பம் தோய்ந்து கிடந்தது. வாயிற்படி தாண்டி உள்ளே நுழைந்தான் இதயசந்திரன். அல்லி மலர் அவனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து அவனை இரு கைகளாலும் கட்டிக் கொண்டு மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். மஞ்சு இருக்கிற பயத்தில் அவளை விலக்கக் கையை எடுத்த இதயசந்திரனை மஞ்சுவின் துயரக் கண்கள் நோக்கின. “வேண்டாம் அவளை விலக்க வேண்டாம்” என்ற சொற்கள் உதிர்ந்தன மஞ்சுவின் உதடுகளிலிருந்து.

இதயசந்திரனுக்கு ஏதும் புரியவில்லை. மஞ்சுவுக்கு மிதமிஞ்சிய பொறாமையால் சித்தப் பிரமை ஏற்பட்டு விட்டதோ என்று அஞ்சினான். அத்தகைய அச்சம் புகுந்த இதயத்தைத் தாங்கி நின்ற மார்பில் அல்லி மலர் அழுந்திக் கிடந்தது. அருகே வந்த மஞ்சு அவள் பொன்னிறக் குழல் களைத் தடவினாள். தன் அனுதாபத்தின் காரணத்தை இரண்டு வார்த்தைகளில் சொன்னாள். அந்தச் சொற்கள் இதயசந்திரன் பிரமையை உச்சநிலைக்குக் கொண்டு சென்றன.

Previous articleJala Deepam Part 2 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch6 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here