Home Historical Novel Jala Deepam Part 2 Ch6 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch6 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

83
0
Jala Deepam Ch6 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch6 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch6 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –6 அவள் கதை

Jala Deepam Part 2 Ch6 | Jala Deepam | TamilNovel.in

மலர்ந்த அல்லி மலரைப் போல் தமது மார்பில் புதைந்துவிட்ட மதிமுகத்தாலும், அல்லிக் கொடிகளைவிட வழவழப்புடன் தன்னைச் சுற்றிக்கொண்ட இரு கைகளா லும், அந்தக் கோலத்தை மஞ்சு பார்த்துக் கொண்டிருக் கிறாளே என்ற பயத்தாலும் மிதமிஞ்சிய திகைப்பை அடைந்திருந்த இதயசந்திரனுக்கு மஞ்சு வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவன் திகைப்பையும் பிரமிப்பையும் ஆயிரம் மடங்கு அதிகப்படுத்தவே செய்தன. “இவள் இப்பொழுது விதவை. இவள் கணவனை நீங்கள் அழித்து விட்டீர்கள்” என்று கூறினாள் மஞ்சு அந்தப் பெண்ணின் குழல்களைக் கோதி விட்டுக் கொண்டே.

இதைக் கேட்ட இதயசந்திரன் கண்கள் மஞ்சுவின் கண்களை ஏறெடுத்துச் சந்தித்தன துணிவுடன். அதுவரை செயலற்றிருந்த அவனது கைகளில் ஒன்று எழுந்து அந்தப் பெண்ணின் முதுகில் ஆதரவுடன் பதிந்தது. “என்ன! என்ன சொல்கிறாய் மஞ்சு? அவள் கணவனைக் கொன்று விட்டேனா? நானா!” என்று அனுதாபமும் வியப்பும் கலந்த சொற்களும் அவனது உதடுகளிலிருந்து உதிர்ந்தன.

மஞ்சுவின் விழிகளில் பரிதாபம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. “ஆம்! நீங்கள் அன்று கண்ணாடி மூலம் பார்த்தீர்களே ஒரு வாலிபனை. அவன் தான் இவள் கணவனாம்” என்று விளக்கினாள் மஞ்சு. அத்துடன் மேலும் சொன்னாள்: “என்ன பயங்கரம்! பீரங்கிக் குண்டு கையைப் பிய்த்துக் கொண்டு அவனைத் தள்ள அவனைத் தாங்கிய இவள் மீது அவன் உடல் வீழ, கணவன் ரத்தமெல்லாம் உடைமீது பாய, அவன் பிணத்தின் கீழ் இவள் அகப்பட்டுக் கிடப்பதென்றால், என்ன விபரீதம், என்ன விபரீதம்!” என்று.

இதயசந்திரன் அந்தக் காட்சியை ஏற்கெனவே கண் கூடாகக் கண்டிருந்தாலும் போர் மும்முரத்தில் அது அத்தனை பயங்கரமாகவோ விபரீதமாகவோ தெரியா விட்டாலும், அமைதி நிலவிவிட்ட அந்தக் காலையில் அதன் கோரம் தெள்ளெனப் புரிந்தது அவனுக்கு. அதுவும் மஞ்சு அதை விவரித்த முறையில் வெள்ளைக்காரன் சாவுக்கும் வெள்ளை யுவதியின் துயரத்துக்கும் தான் தான் காரணம் போல் தென்படவே, “அப்படியா!” என்ற ஒற்றைச் சொல் மட்டும் அவனிடமிருந்து வெளிவந்தது.

“அது மட்டுமல்ல. அவள் இரண்டாம் முறையாக விதவை. பாவம்! இவள் கதையைத் தாங்க என்னால் முடியவில்லை. கொஞ்சம் தைரியம் சொல்லுங்கள் இவளுக்கு” என்று கூறிய மஞ்சு அறையிலிருந்து வெளியே சென்றுவிட்டாள், ‘மஞ்சு மஞ்சு” என்று அவசரமாக அழைத்த இதயசந்திரன் குரலுக்குச் செவி மடுக்காமலே.

அறையில் இருந்த அல்லி மலருடன் தனித்து விடப்பட்ட இதயசந்திரன் என்ன சொல்வதென்று தெரியாமல் பல விநாடிகள் தவித்தான். மற்ற மாலுமிகள் அவளும் தானுமிருந்த கோலத்தை கண்டுவிட்டால் வீண் பேச்சுக்கும் விபரீத விமர்சனத்திற்கும் இடமேற்படுமே என்ற காரணத்தால் அவளைத் தன்னிடமிருந்து விலக்க முயன்றான். அந்த முயற்சி அவன் எதிர்பார்த்த பலனுக்கு நேர் எதிர்விதமான பலனையே அளித்தது. அவள் கைகள் அவனைச் சுற்றி வலுவாக இறுகின. விசும்பி விசும்பி அவள் அழுததால் முகம் அவனது பரந்த மார்பில் எழுந்து எழுந்து விழுந்தது. உடலும் குலுங்கியதால். அவன் வேதனை அதிகப்படவே அவன் மெல்ல அவள் குழல்களைக் கோதி, “அழாதே. போர்களின் விளைவு எப்பொழுதுமே பயங்கரமானது” என்று ஆறுதலும் சொன்னான். சொன்னதோடு நில்லாமல் அவளை மெள்ளத் தழுவிய வண்ணமே அழைத்துச் சென்று பஞ்சணையில் உட்கார வைத்துச் சற்று விலகி நின்றுகொண்டான்.

அவள் மெள்ள தலைநிமிர்ந்து இதயசந்திரனை ஏறெடுத்து நோக்கினாள். அவள் கண்களிரண்டும் செக்கச் செவேலென்று சிவந்து அல்லிமீது பங்கயங்கள் முளைக்க முடியும் என்பதற்கு அத்தாட்சி காட்டின. பலபலவெனக் கண்களிலிருந்து உதிர்ந்து கன்னங்களில் வழிந்தோடிய அருவிகள் சலவைக் கல்லில் நீரோட்டமிருந்தால் இப்படித் தானிருக்க முடியும் என்று நிரூபித்தன. அவள் முகம் துயரக் களஞ்சியமாயிருந்தது. “என்னைப் போன்ற துரதிர்ஷ்ட ம் படைத்தவள் யாரிருக்க முடியும்?” என்று உதிர்ந்த சொற்கள் இதயசந்திரன் இதயத்தில் கூர்வேல்க ளெனப் பாய்ந்தன.

இதயசந்திரனுக்கும் கப்பல் போரும் புதிதல்ல. அதன் விபரீதங்களும் புதிதல்ல. கொங்கணிக்கு வந்தபோது அதன் விபரீதத்துக்கு அவனே ஆளானவன். தவிர அரபிக் கடலின் அலைக்கரங்கள் அவனைக் கொங்கணியின் வரலாற்றுக் கரங்களில் தள்ளிவிட்ட சம்பவங்களையும் அவன் மறக்கவில்லை. இருப்பினும் அந்தச் சமயத்தில், அந்தப் பெண்ணின் வேதனையில், வேதனை தோய்ந்த முகத்தில், ஒடுங்கி உட்கார்ந்திருந்த அவள் தோற்றத்தில் அவன் அத்தனையும் மறந்து அவள் துன்பத்தையே நினைத்தான். ஆகவே வேதாந்தமாகப் பேசத் தொடங்கி, “பெண்ணே! நமது அதிர்ஷ்டத்தையும் துரதிர்ஷ்டத்தையும் தீர்மானிப்பது நாமல்ல. நம்மிலும் பெரிய சக்தி ஒன்றிருக்கிறது. ஒரு துரதிர்ஷ்ட த்துக்குப் பின் பெரும் அதிர்ஷ்ட மும் வரக்கூடும்” என்று ஆறுதல் கூறினான்.

கண்களை அவள் மெள்ள தலைப்பால் துடைத்துக் கொண்டாள். தலைப்பை எடுத்த பிறகுதான் அவள் கறுப்புப் புடவை கட்டிக் கொண்டிருக்கிறாளென்பதையும் அந்தப் புடவை மஞ்சுவினுடையதென்பதையும், சில உல்லாச வேளைகளில் மஞ்சு அதைக் கட்டிக்கொண்டு நிற்பது வழக்கமென்பதையும் அவன் உணர்ந்து கொண்டான். அதிலும் ஒரு விபரீதமிருப்பதைப் புரிந்து கொண்ட இதயசந்திரன், ‘ஒருவருக்கு மகிழ்ச்சிக்குக் காரணமாயிருப்பது இன்னொருவரின் துன்பத்துக்குக் காரணமாயிருக்கிறது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவன் அந்தப் புடவையைக் கவனிப்பதைக் கண் களைத் துடைத்துக் கொண்டபின் பார்த்த அந்த வெள்ளைக்காரப் பெண் கூறினாள்: “வீரரே! இது உமது மனைவியுடையதுதான். அவள் தான் கொடுத்தாள் எனக்கு. கணவன் இறந்ததும் துக்கம் கொண்டாட நாங்கள் கறுப்பாடை கட்டவேண்டும்” என்று.

வெள்ளைக்காரரோடு சென்னையில் ஓரளவு பழக்க மிருந்ததால் அவர்கள் ஆசார விவகாரங்களைப்பற்றி அதிகமறியாத இதயசந்திரன், “அப்படியா!” என்று கேட்டுவிட்டு, “பெண்ணே ! அவள் என் மனைவியல்ல…” என்று திருத்தினான் அவள் வாசகத்தை.
”மஞ்சு உங்கள் மனைவியல்லவா?” என்ற சொற்கள் வியப்புடன் வந்தன வாயிலிருந்து.

இதயசந்திரன் வியப்பு விழிகள் அவளை ஊன்றி நோக்கின. “அவள் பெயர்கூட உனக்குத் தெரியுமா?” என்ற அவன் கேள்வியிலும் வியப்பு நன்றாக ஊடுருவியிருந்தது.

“தெரியாமலென்ன? அவள் உங்களைப்போல இதய மற்றவளா? இதயசந்திரன் என்ற பெயர் தான் பெரிய பெயராயிருக்கிறது உங்களுக்கு” என்று மேலும் வெடிகளை வீசினாள் அந்தப் பெண்.

இதயசந்திரன் பிரமை பிடித்து நின்றான். ‘ஒரே இரவில் மஞ்சு தன் கதை பூராவையும் இவளிடம் அளந் திருக்கிறாள் போலிருக்கிறது. அப்படியானால் ஒருவேளை அவளே தன்னை என் மனைவி என்று கூறியிருக்கிறாளோ இவளிடம்?’ சற்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட அவன் பல விநாடிகள் மௌனமாக நின்றான்.

அந்த மௌனத்தை அந்தப் பெண்ணே கலைத்தாள். “வீரரே! இரு பெண்கள் தனித்திருந்தால் மனம்விட்டுப் பேசாமலிருப்பார்களா? அதுவும் ஒருத்தி துயரத்திலாழ்ந் திருக்கும் போது. ஆனால் அவள் எத்தனை நல்ல பெண்! உங்களிடம் எத்தனை அன்பு அவளுக்கு! என்னைப்பற்றிச் சகலத்தையும் அறிந்தாள். உங்களைப்பற்றிச் சகலத்தையும் சொன்னாள். ஆனால் நீங்கள் என்னை ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. ஏன் என் பெயரைக்கூடக் கேட்கவில்லை. என்ன கல்நெஞ்சு உங்களுக்கு?” என்றாள் அந்தப் பெண்.

இதயசந்திரன் குழப்பம் அதிகமாகியதே தவிரக் குறையவில்லை. “ஆமாம், உன் பெயர் என்ன?” என்று வினவினான்.

“மிஸஸ் சௌன்.”

“மிஸஸ் சௌனா?”

“மிஸஸ் என்பது மனைவிப் பதவியைக் குறிக்கும். இறந்த என் கணவர் பெயர் தாமஸ் சௌன். நான் மிஸஸ் தாமஸ் சௌன். சுருக்கமாக மிஸஸ் சௌன் என்று எல்லோரும் அழைப்பார்கள்.”

“அப்படியானால் உனக்குச் சொந்தப் பெயர் எதுவும் கிடையாதா?” என்று கேட்டான் இதயசந்திரன்.

அவள் கண்கள் நிலத்தை நோக்கித் தாழ்ந்தன. “உண்டு வீரரே! ஆனால் அந்தப் பெயரைச் சொல்லி தந்தை அழைக்கலாம், காதலன் அழைக்கலாம். கணவன் அழைக்கலாம். மற்றவர் அழைக்கக்கூடாது” என்று கூறிய அவள், “என் பெயர் காதரைன். காட்டீ என்றும், கேட் என்றும் குறுக்கி அழைப்பார்கள்” என்றாள் அந்தப் பெண்.

இதயசந்திரன் அதற்குப் பதிலேதும் சொல்லவில்லை. அவளும் பதிலை எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டு அவனைப் பஞ்சணையில் தனது பக்கத்தில் உட்காரச் சொன்னாள். இதயசந்திரன் சிறிது தயங்கினான். பிறகு அறைக் கதவைச் சாத்தச் சென்றான்.

“கதவைச் சாத்த வேண்டாம், கணவனை இழந்தவள் மறுநாளே இன்னோர் ஆடவனுடன் சாத்திய அறைக்குள் தனித்திருப்பது தவறான ஊகத்துக்கு இடங்கொடுக்கும்’” என்று அவனைத் தடுத்த அந்தப் பெண், “பாதகமில்லை, உட்காருங்கள்” என்று தன் பக்கத்தில் இடம் காட்டினாள்.

வேறு பேச வழியில்லாமல் இதயசந்திரன் உட்கார்ந் தான், தலையைக் குனிந்த வண்ணம். அவள் தனது கதை யைச் சொல்ல துவங்கினாள்: “வீரரே! நேற்று உமது. மனைவியிடம் என் துர்ப்பாக்கியங்களைச் சொன்னேன். இன்று உங்களிடம் சொல்கிறேன் கேளுங்கள்…” என்று துவங்கிய அவளை, “என்னிடம் வேறு எதற்காகச் சொல்ல வேண்டும். அவளிடந்தான் சொல்லியாகி விட்டதே’” என்று தேக்க முயன்ற இதயசந்திரனை, “வீரரே! துன்பத்தைப் பகிர்ந்துகொண்டால் துன்பம் குறைகிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி பன்மடங்கு அதிகப்படுகிறது என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு” என்றாள் அவள். மெள்ள மெள்ள தனது கதையைச் சொல்லவும் முற்பட்டாள்.

“வீரரே! என் தந்தையின் பெயர் காப்டன் ஜெரார்டு குக். ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் என்ஜீனியராக நியமிக்கப்பட்டார். நானும் அவரும் லாயல் ப்ளிஸ் என்ற கப்பலில் இங்கிலாந்திலிருந்து கிளம்பி வந்தோம். ஆறு: மாத காலம் கஷ்டமான பயணம் செய்து இந்தியா வந்து கார்வார் துறைமுகத்தை அடைந்தோம். கார்வாரை அடைந்தபோது எனக்கு வயது பதின்மூன்று; அப்பொழுதே பருவமடைந்து இரண்டாண்டுகள் ஆகியிருந்தன. பதின்மூன்று வயதில் நல்ல வளர்த்தியாயும் இருந்தேன். கார்வார் பாக்டரி தலைவர் ஜான் ஹார்வே என்பவர் எங்களை வரவேற்றார். சகல வசதிகளும் செய்து கொடுத்தார். என்னைக் காதலித்தார். அப்படி

இப்படியென்று காதலிக்கவில்லை. என்னைவிட்டு அரை விநாடி பிரியவில்லை. அவரிடமிருந்த பணபலம் ஆள்பலம் அனைத்தையும் என் காலடியில் சமர்ப்பித்தார். என்னை மயக்கிய மயக்கில் அவரை மணக்கச் சம்மதித்தேன். என் தகப்பனாரும் மணம் முடித்துக் கொடுத்தார். என் கணவருக்கு அப்பொழுது வயதென்ன தெரியுமா…” என்று கேட்ட மிஸஸ் கௌன் சிறிது பேச்சை நிறுத்திப் பக்கவாட்டில் திரும்பி இதயசந்திரனை நோக்கினாள்.

“இருபத்தி ஐந்து இருக்குமா?” என்று கேட்டான் இதயசந்திரன்.

“இல்லை; அறுபது?” என்றாள் அந்தப் பெண்.

இதயசந்திரன் அதிர்ச்சியடைந்து சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான். “என்ன அறுபதா!” என்று வினவினான் அதிர்ச்சி குரலிலும் ஒலிக்க. “அது மட்டுமல்ல…” என்று இழுத்தாள் அவள். “வேறு என்ன!” என்று கேட்டான் தமிழன். “வியாதியும் படைத்தவர்” என்றாள் அவள்.

இதயசந்திரன் வாயடைத்து உட்கார்ந்து விட்டான். அவள் மேலே தொடர்ந்தாள். “அவர் வயோதிகர், வியாதி படைத்தவர். ஆனால் நல்ல மனமுள்ளவர். என்னை ராணிபோல் நடத்தினார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். என்னை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து செல்லத் தீர்மானித் தார். நாங்களிருவரும் பம்பாய் வந்தோம். அங்குதான் நான் “இந்த வாலிபரை தாமஸ் சௌனை சந்தித்தேன். எங்களுக்கு வயதுப் பொருத்தமிருந்தது. இருவரும் காந்தமும் ஊசியும் போலானோம். நானும் என் கணவரும் இங்கிலாந்து புறப்படுவதற்குள் கணவர் இறந்து போனார். கம்பெனி விவகாரங்களும் என் கணவர் செல்வாதார விவகாரங்களும் கலந்து கிடந்ததால் கம்பெனி அதிகாரிகள் அதைச் சரி செய்யும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். தாமஸ் சௌனை கார்வார் பாக்டரித் தலைவராக நியமித்து எனக்குத் துணையாக அவரை அனுப்பினார்கள். எங்கள் கப்பல் கார்வார் கரையை அடைந்தது. கரையை அடையும் வரை என் காதலராயிருந்த சௌன், கரையை அடைந்ததும் என் கணவரா னார். நாங்கள் ஓராண்டு மிக உல்லாசமாகக் காலம் கழித்தோம். சௌன் கம்பெனிக் கணக்குகளைச் சீர்பார்த் தார். அதைவிட என்னை அதிகமாகச் சீர்பார்த்தார். எங்கள் வாழ்வு பெரும் நிலவாயிருந்தது. எங்கள் தேன் நிலவு சில நாட்களல்ல, ஆண்டு பூராவும் தேன் நிலவாயிருந்தது. பிறகு நாங்கள் பம்பாய் புறப்பட்டோம். இடையே நீங்கள் குறுக்கிட்டீர்கள். என் இரண்டாம் கணவரையும் இழந்து விட்டேன். உங்களிடம் நானும் எனது மரக்கலங்களும், மாலுமிகளும் கைதி. எனது அதிர்ஷ்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று வினவினாள் காதரைன்.

இதயசந்திரன் பெருமூச்செறிந்தான். “உன் வாழ்வு கதை போலிருக்கிறது” என்று கூறினான் அந்தப் பெரு மூச்சைத் தொடர்ந்து.

”ஆம் வீரரே! ஆனால் உண்மைக் கதை” என்றாள் காதரைன்.

“அதிசயத்திலும் அதிசயம்” என்றான் இதயசந்திரன்.
“ஆனால் உண்மை” என்று மீண்டும் வலியுறுத்திக் காதரைன் மேலும் ஒரு வெடியை எடுத்து வீசினாள். “இப்பொழுது மூன்றாவது ஆடவராக என் வாழ்வில் நீங்கள் புகுந்திருக்கிறீர்கள்,” என்று.

காதரைன் கதை உண்மைக் கதை. வரலாற்றில் இது அப்படியே காணப்படுகிறது.

அவள் கதை இதயசந்திரன் கட்டிலிலிருந்து சட்டென எழுந்தான். “என்ன! என்ன சொல்கிறாய்?” என்றும் கோபத்துடன் வினவினான்.

“கோபப்பட்டுப் பயனில்லை வீரரே. விதிக்கு நாம் பணியத்தான் வேண்டும்” என்றாள்.

“என்ன விதி! யார் விதி?”

“நம் இருவர் விதியும்.”

“நம் இருவர் விதிக்கும் என்ன?”

“பிணைப்பு இருக்கிறது.”

“என்ன பிணைப்பு?”

காதரைனும் எழுந்திருந்தாள் கட்டிலிலிருந்து. எங்கள் நாட்டில் எந்த வீரனும் ஓர் அபலையைக் காக்காமல் விடமாட்டான். அந்தப் பாதுகாப்பை வீரனான உங்களிடமும் எதிர்பார்க்கிறேன்” என்றாள் கம்பீரமாகத் தலையை நிமிர்த்தி .
“பாதுகாப்பா? எதிலிருந்து? யாரிடமிருந்து?” என்று குழப்பமும் நடுக்கமும் தெரிந்த குரலில் கேட்டான் இதய சந்திரன்.

அவள் கம்பீரமாகவே பதில் கூறினாள். அத்தனை துயரத்திலும் அவள் பெரிய ராணிபோல் தோற்றமளித் தாள். அவள் வாயிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு சொல்லி லுங்கூட கம்பீரமிருந்தது. அது மட்டுமல்ல இதயசந்திரன் இதயத்தை அசக்கிக் கலக்கி அச்சமுறுத்தும் முறையில் உதிர்ந்தன அவள் சொற்கள். இந்தப் பிசாசிடம் ஏன் அகப்பட்டுக் கொண்டோம் என்று ஏங்கினான் அந்த நேரத்தில் தமிழக வாலிபன்.

Previous articleJala Deepam Part 2 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch7 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here