Home Historical Novel Jala Deepam Part 2 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

60
0
Jala Deepam Ch8 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch8 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –8 அச்சம் தவிர்

Jala Deepam Part 2 Ch8 | Jala Deepam | TamilNovel.in

கப்பல்களிரண்டையும் காதரைனையும் பிடித்துக் கொண்டு கேரியா என்றழைக்கப்பட்ட விஜயதுர்க்கத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்த ஜலதீபத்திலிருந்த அனைவர்க்குமே அடுத்த இரண்டு நாட்களுக்குள் காதரைன் பெரும் பிரச்னைகளைக் கிளப்பி வைத்தாள். மஞ்சுவும் இதயசந்திரனும் இருந்த நிலையைச் சுட்டிக்காட்டி அவர்களிருவரும் கணவன் மனைவியென்பதற்கு அதுவே ருசு என்று கூறியதைத் தளத்திலிருந்த மாலுமிகள் கேட்டு லேசாக முதலில் நகைத்தார்கள். பிறகு சந்தேகப்பட்டார்கள். தளபதிக்கும் உபதளபதிக்கும் இருந்த உறவு உத்தியோக உறவைவிடச் சற்று அதிகப்பட்ட உறவு என்பதை மாலுமிகள் அறிந்தேயிருந்தாலும் கணவன் மனைவியாகும் அளவுக்கு அது முற்றவில்லையென்று நினைத்தார்களாதலால் காதரைன் விதைத்த சந்தேக வித்து, ‘ஒருவேளை அப்படியும் இருக்குமோ’ என்ற எண்ணத்தை விளைவித்தபடியால் அதைப் பற்றித் தனிப்படப் பேசவும் முற்பட்டார்கள். வெள்ளைக்காரி சொன்னதை, சுக்கான் திருப்புவதில் முனைந்திருந்தது போல கள்ளத்தனமாகக் கேட்டு கொண்ட இப்ரஹிம், தளத்து மாலுமிகளுடன் நகைத்ததல்லாமல், கீழறையி லிருந்த ஹர்கோவிந்தின் துடுப்புத் துழாவும் கோஷ்டிகளிடையேயும் அதைப் பற்றித் தெரியப்படுத்தினான். அதைத் தவிர, உபதளபதியாரை நட்ட நடுத்தளத்தில் கட்டியணைத்த காட்சியையும் சற்று அளவுக்கு அதிகமாக வர்ணித்தான். இத்தகைய சந்தேகமும் வதந்தியும் மாலுமி களிடையே உலாவியதை மஞ்சுவோ இதயசந்திரனோ அறியாமலில்லை. மாலுமிகளின் பார்வை தங்களிடத்தில் அதிகமாகி விட்டதையும், தாங்கள் பாய்மரத்தடியில் தனித்து உட்கார்ந்திருந்த சமயங்களில் முன்பெல்லாம் லட்சியம் செய்யாமல் அருகில் வந்து பேசிய மாலுமிகள் தங்களைத் தனித்துவிட்டு விலகிச் செல்வதையும், தங்களிடம் சாதாரணமாகச் சிரித்துச் சிரித்துச் சம்பாஷித்த மாலுமிகள் திடீரென அதிக மரியாதை காட்ட ஆரம்பித்து விட்டதையும் கண்ட உபதளபதிக்கும் தளபதிக்கும் அவர்கள் போக்குக்குக் காரணம் புரியாமலில்லை. அதனால் இருவரும் முன்போல் நெருங்கிப் பழகாமல் சற்று விலகி யிருக்க முற்பட்டார்கள். அதற்கும் மாலுமிகள் அர்த்தம் கற்பித்தார்கள். அந்த அர்த்தத்தின் சுருதியை அதிகமாக மீட்டினாள் வெள்ளைக்காரி காதரைன்.

இரண்டு நாள்கள் கழித்துத் தளத்தின் அடியறையில் மேல் கதவைச் சாத்திக்கொண்டு உட்கார்ந்த இப்ரஹீம், “ஹர் கோவிந்த்! தளபதியும் உபதளபதியும் இரண்டு நாள்களாக ஒருவருக்கொருவர் பேசவில்லை” என்றான் மெல்ல.

“ஆமாம்! நானும் கவனித்தேன். இருவருக்கும் ஏதாவது சண்டையா?’ என்று கேட்டான் ஹர்கோவிந்த்.

“இத்தனை. நாளில்லாத சண்டை இப்பொழுது ஏன் வந்தது ஹர்கோவிந்த்?’ என்று வினவினான் இப்ரஹீம்.

“எல்லாம் அந்த வெள்ளைக்காரியால் தான் வந்திருக்க வேண்டும் இப்ரஹீம்” என்றான் ஹர்கோவிந்த்.

வெள்ளைக்காரியைச் சொன்னவுடன் பர்னாண்டோ சீறினான். “அவளுக்கும் இவர்கள் உறவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று.
“அப்படிக்கேள் பர்னாண்டோ,” என்ற குரல் மாலுமிகளைத் திகைக்க வைத்ததன்றித் திரும்பவும் வைத்தது.

கதவருகில் படிகளின் உச்சியில் நின்றிருந்தாள் காதரைன் கறுப்பு உடையில். அவள் இதழ்களில் இளநகை அரும்பி நின்றது. மாலுமிகள் பயத்துடன் எழுந்தார்கள். அவர்களைக் கையமர்த்தி உட்காரச் செய்த காதரைன், “ஒரு விதவையின்மீது ஏன் அபாண்டமாகப் பழி சுமத்துகிறீர்கள்? அவர்கள் உறவை நான் எப்படி வெட்டவோ ஒட்டவோ முடியும்?” என்று வினவினாள்.

அப்பொழுது அவள் மராத்தியில் பேசினாள். மராத்தி நல்ல மராத்தியாகவுமிருந்தது. “மன்னிக்க வேண்டும். தவறாக நினைக்கவேண்டாம். நீங்கள் வந்தபின் உப தளபதியும் தளபதியும் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்” என்று குறிப்பிட்டான் ஹர்கோவிந்த்.

”அவர்கள் பேச்சும் சிரிப்புமில்லாதது கப்பலில் ஏதோ இல்லாதது மாதிரித் தெரிகிறது” என்றான் இப்ரஹீம்.

தளபதியிடமும் உபதளபதியிடமும் மாலுமிகள் வைத் திருந்த அன்பைக் கண்டு பிரமித்தாள் காதரைன். ஜல தீபத் தின் பல வெற்றிகளைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந் தாள் கார்வாரிலிருந்த காலத்தில். அதைப் பற்றிப் பெருவியப்பும் அடைந்திருந்தாள். ஆனால் அந்த வியப்பு அன்று அந்தக் கீழ்த்தளத் துடுப்புத் துழாவும் அறையில் அடியோடு அகன்றது. இதயசந்திரனும் மஞ்சுவும் மாலுமிகளின் இதயங்களின்மீது அடைந்துள்ள அபரிமிதமான வெற்றிக்கு ஜலதீபத்தின் போர் வெற்றி ஒரு வெற்றியா என்று நினைத்தாள்.
தளபதியும் பெரும் செயல்களைப் புரிய முடியுமென்ப தைப் புரிந்துகொண்ட காதரைன் கூறினாள் மெதுவான குரலில், “அவர்கள் சிரிக்காததைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்” என்று.

”அவர்கள் பேசாததைப் பற்றி?” என்று வினவினான் ஹர்கோவிந்த்.

“அதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்” என்றாள் காதரைன். மேலும் சொன்னாள்: “அவர்கள் மௌனமும் சண்டையும் துக்கமும் உங்களுக்குப் புரியாது. அத்தனையும் அவர்கள் காதலின் அஸ்திவாரங்கள், அப்படிச் சண்டை போடுபவர்கள் முந்தா நாளன்று அப்படிக் கட்டிக்கொண்டு நிற்பானேன், அத்தனைபேர எதிரிலும் வெட்கமில்லாமல்? இல்லை ஹர்கோவிந்த்! காதலின் வழிகள் உங்களுக்குப் புரியாது. அது விளைவிக்கும் சிந்தனைப் போராட்டங்களை நீங்கள் உணர முடியாது. உங்கள் உபதளபதியும், தளபதியும் துன்பப் படவில்லை , இன்பமேபடுகிறார்கள்.”

“அப்படியா?” என்று எல்லா மாலுமிகளும் ஏககாலத்தில் கேட்டார்கள்.

“வேண்டுமென்றால் கவனித்துப் பாருங்கள். என்மீது வீண்பழி போடாதீர்கள்’ என்று கூறிவிட்டு எழுந்து மேல் தளம் சென்றாள் காதரைன்.

அந்த வினாடியிலிருந்து மாலுமிகள் பார்வையெல்லாம் கள்ளப் பார்வையாயிற்று. மஞ்சுவும் இதயசந்திர னும் ஓரிரு முறை கப்பல் சம்பந்தமான விஷயங்களைப் பேசியபோது கூட அவர்கள் பார்வையில் ஏதோ விசேஷ மிருப்பதாக நினைத்தான் இப்ரஹீம். இந்த இரண்டு நாள்களிலும் இருவரும் காதரைனிடமிருந்து விலகியே நின்றதையும் மாலுமிகள் கவனிக்கத் தவறவில்லை. மஞ்சு காதரைனுக்குத் தனது அறையைக் கொடுத்துவிட்டு உபதளபதி அறையைத் தான் வைத்துக்கொண்டாள். காதரைன் தனது துயரத்தைத் தனிமையில் கழிக்கட்டும் என்று. ஆகவே, உபதளபதி இதயசந்திரன் கீழ்த் தளத்தில் துடுப்புத் தள்ளும் அறையில் ஒருபுறம் படுத்தான். அப்படிப் படுத்த சமயத்தில் இரவில் ஒருமுறை மேல்தளத்திற்குச் சென்ற போது மாலுமியொருவன் அரைக் கண்ணால் பார்த்தான். ஜல தீபம் பாய்களை விரித்து ஓடிக் கொண்டிருந்ததால் துடுப்புத் துழாவும் வேலையும் இல்லாத சமயம் அது. ஆகவே, இதயசந்திரன் மேல் தளம் சென்றதும் கண் விழித்த மாலுமியும் மெள்ள அவனைப் பின்பற்றிச் சென்று கதவிடுக்கில் அவனைக் கவனித்தான். நேராக உபதளபதி அறைக்கு இதயசந்திரன் சென்று கொண்டிருந்ததைக் கவனித்த உடனே கீழே வந்து மற்றவர்களுக்கு அதைத் தெரிவித்தான்.

உண்மையில் இதயசந்திரன் மஞ்சு படுத்திருந்த் தனது: அறைக்குச் செல்லவில்லை. உறக்கம் பிடிக்காததாலும் பலப்பல சிந்தனைகள் சித்தத்தை உலுக்கியதாலும், மன நிம்மதிக்காக ஜல தீபத்தின் தீப முகப்பை நோக்கிச் சென்றான். வழியிலிருந்தது அவள் அறை அவ்வளவுதான். ஆனால் சந்தேகத்தின் சிறகுகள் பலபலவென அடித்தன. ஜல தீபத்தில் அந்தச் சந்தேகங்கள் மஞ்சுவுக்கு மகிழ்ச்சியா யிருந்ததென்றாலும் சற்று அச்சமும் விளைவித்ததால் அவள் ஒருக்களித்த கதவு வழியாக இதயசந்திரன் போவதைக் கவனித்தும் மஞ்சத்திலிருந்து எழுந்திருக்கவும்மில்லை. வெளிவந்து அவனை அழைக்கவுமில்லை. கதவைக் காலால் நன்றாகச் சாத்தவே செய்தாள்.

இதயசந்திரன் முகப்பு நோக்கிப் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தது அவள் மட்டுமல்ல, காதரைனும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அறைக் கதவும் ஒருக்களித்துத் தானிருந்தது. இதயசந்திரன் தீவிர சிந்தனையுடன் செல்வதை ஒருக்களித்த கதவின் மூலமே கவனித்தாள் அவள். அவனுடைய வீரத்திருமேனி அவளைப் பெரிதும் வியப்புக்கு உள்ளாக்கியது. பின்னால் நடந்து சென்ற உறுதியான கால்கள் அவன் மன உறுதிக்கு அத்தாட்சியா யிருந்தாலும், இடுப்புக்கு மேல் அசைந்த உடல் அவன் உள்ளக்கலக்கத்தை நிரூபித்தது. ‘அப்பா! என்ன புருஷன்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் காதரைன். கணவன் இறந்த இரண்டு நாட்களில் தான் இத்தகைய எண்ணங்களைக் கொள்வது தவறென நினைத்தாள். இருப்பினும் தனது வாழ்வை எண்ணினாள். ‘பதின்மூன்று பிராயத்தில் அறுபது வயதுக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு மூன்று ஆண்டுகள் எந்தச் சுகமும் காணாமல், வாலிபனைக் கைப்பிடித்த ஓராண்டுக்குள் அவனையும் இழந்த நிலையில் நான் வேறு எப்படியிருக்க முடியும்?’ என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். ஏதோ நினைத்துக் கொண்டு ஒரு போர்வையை எடுத்துப் போர்த்துக்கொண்டு இதயசந்திரன் நின்றிருந்த இடத்தை நாடி அவனை, ”வீரரே” என்று மெல்ல அழைத்தாள்.

திடுக்குற்றுத் திரும்பிய இதயசந்திரன், ”நீயா!” என்று கேட்டான்.

“ஆம்” என்றாள் அவள் மெதுவாக. “இங்கு ஏன் வந்தாய்?” என்று கேட்டான் மறுபடியும் ஜல தீபத்தின் முகப்பையும் அப்பாலிருந்த அலைகளையும் நோக்கிக் கொண்டு.

“ஏன், வரக்கூடாதா?” என்று கேட்டாள் மெதுவாக.

“இரவு இப்பொழுது.”

“தெரியுமே எனக்கு.”

“இங்கு நீ தனித்து வருவது…”

“தவறு என்கிறீர்களா?”

“ஆம்.”

காதரைன் துயரம் சொட்டும் குரலில், “அபலை! ஒரு கைம்பெண்! அவள் அலங்கோலமடைந்து இரண்டே நாட்கள் ஆகியிருக்கின்றன. இதற்குள் அவள்மீது அபவாதமா? இது என்ன உலகம்?” என்று கூறினாள்.

இதயசந்திரன் அவளை நோக்கித் திரும்பினான். “மிஸஸ் சௌன்!” என்று அழைக்கவும் செய்தான்.

“ஏன்?” என்று கேட்டாள்.

“என் மாலுமிகளின் மனோபாவம் மாறிவிட்டது” என்று சுட்டிக் காட்டினான் இதயசந்திரன்.

“மாறிவிட்டதா!”

“ஆம். என்னைச் சந்தேகிக்கிறார்கள்…”

“உங்களையா!”

“ஆம். மஞ்சுவைக்கூடச் சந்தேகிக்கிறார்கள்.”

“என்ன சந்தேகம்!”

“எங்கள் உறவு முற்றிவிட்டதாக.”

“கணவன் மனைவிக்குள் உறவு முற்றினால் தவறென்ன!”

“இதயசந்திரன் அவளை எரித்துவிடுவது போல் பார்த்தான். “அவள் என் மனைவியல்லவென்று எத்தனை முறை சொல்வது உனக்கு?” என்று சீறவும் செய்தான்.

காதரைன் முகத்தில் வியப்பைக் காட்டினாள். “எப்பொழுது சொன்னீர்கள் என்னிடம்? அவள் உங்கள் மனைவியென்று நான் சொன்னபோதுகூட நீங்கள் மறுக்க வில்லையே!” என்று கூறி வியப்பைக் குரலிலும் காட்டினாள்.

இதயசந்திரன் சிந்தித்தான். உண்மையில் அவளிடம் தான் அப்படி ஏதும் மறுக்கவில்லையென்பதைப் புரிந்து கொண்டான். இருப்பினும் கணவன் மனைவி உறவுக்கு. ருசு காட்டியவள் அவள் தானே என்று நினைத்து, “நீதான் நாங்கள் நின்ற நிலையை ருசுவாகக் காட்டி இல்லாத உறவைக் கிளப்பியது” என்று கூறிக்கொண்டேயிருக்கை யில் காதரைன் குறுக்கிட்டாள்.
“கணவன் மனைவியை அணைப்பதைவிட வேறு ருசு என்ன வேண்டும்?”

“காதலர்கள்…”

“அணைப்பதுண்டு. ஓகோ… அப்படியா…”

பேசத் தெரியாமல் தவித்த இதயசந்திரன், “இரு இரு. மறுபடியும் ஏதாவது முடிவு கட்டிவிடாதே” என்று குழறினான்.

அச்சம் தவிர் “உபதளபதி! என் அறைக்கு வாருங்கள்” என்றழைத் தாள் காதரைன்.

“எதற்கு?” என்று வினவினான் இதயசந்திரன் குழப்பத்துடன்.

“இங்கு நான் தனித்து உங்களுடன் பேசுவதை மாலுமிகள் பார்த்தால் தவறாக நினைப்பார்கள்” என்று தளபதி அறையை நோக்கி நடந்தாள்.

இதயசந்திரன் ஒரு விநாடி சிந்தித்தான். சுற்றுமுற்றும் பார்க்கவும் செய்தான். கப்பல் தளத்தில் முகப்பு விளக்கைத் தவிர மற்ற விளக்குகள் அணைந்து கிடந்தன. இப்ரஹீம் சுக்கானைப் பிடித்துக் கடலைப் பார்த்துக் கொண்டிருந் தான். பாய்மரத்தடியிலிருந்த பர்னாண்டோ குனிந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். இன்னும் இரு மாலுமிகள் பீரங்கிகளைச் சுற்றிலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்த்த இதயசந்திரன் சற்று வேகமாக நடந்து தளபதி அறைக்குள் சென்றான்.
காதரைன் அப்பொழுது தனது போர்வையை நீக்கி மஞ்சத்தில் எறிந்துவிட்டு மஞ்சத்தின் முனையில் உட்கார்ந்திருந்தாள்.

உபதளபதி உட்காரவில்லை. நின்றுகொண்டே கேட்டான், “எதற்காக என்னை வரச் சொன்னாய்?” என்று.

“என்ன அவசரம்? சற்றுப் பொறுங்கள்” என்று கூறி முதுகை அவனை நோக்கி திருப்பி, “இந்தக் கயிற்றைச் சற்று அவிழ்த்து விடுங்கள்” என்றாள்.

இதயசந்திரன் அவளை நெருங்கவில்லை. “அதை நீயே அவிழ்த்துக் கொள். சொல்லவேண்டியதைச் சொல்” என்றான்.

“இதோ பாருங்கள், முதுகுப்பக்கம் கை எட்டவில்லை” என்று தனது கைகளைக் கொண்டுபோய்க் காட்டினாள்.

“கட்டியது யார்?” என்று சீறினான் உபதளபதி.

“மஞ்சு” என்றாள் காதரைன். ” அவளையே அவிழ்க்கச் சொல்.”

“அவள் இங்கில்லையே?”

“கூப்பிட்டு வா.”

“இப்பொழுது போனால் நன்றாயிருக்குமா?’

“ஏனிருக்காது.”

“நான் முதலில் போவேன் அறையிலிருந்து. பிறகு நீங்கள் வெளியில் வருவீர்கள். இப்படி ஒருவர் பின் ஒருவ ராய் இந்த அறையிலிருந்து வெளியே போனால், உங்கள் மாலுமிகளில் ஒருவன் பார்த்துவிட்டால் போதும், ஆனால் உங்களுக்குப் பயமில்லையென்றால் எனக்கென்ன?” என்று காதரைன் எழுந்தாள்.

“இரு இரு” என்று தடுத்தான் இதயசந்திரன்.

“அப்பொழுது நீங்களே….’’ என்று இழுத்தாள் காதரைன்,

“உதவுகிறேன்” என்றான் அவன்.

”உதவுங்கள், உதவுங்கள்” என்ற அவள் முதுகைத் திருப்பினாள். கௌனின் மேல் முடிச்சை அவன் அவிழ்த் தான்.

“உதவி இத்துடன் முடிவா?” அவள் அவனை நோக்கித் திரும்பினாள்.

உபதளபதி மேலே உதவத் தயார்தான் என்பது அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. அத்துடன் கண்களில் அச்சமும் படர்ந்து நின்றது.

காதரைன் தனது கண்களை அவன் கண்களுடன இணைத்தாள். “அச்சம் தவிர்!” என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன.

Previous articleJala Deepam Part 2 Ch7 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here