Home Historical Novel Jala Deepam Part 3 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

55
0
Jala Deepam part 3 Ch1 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch1 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 1 கொங்கணியின் மடி

Jala Deepam Part 3 Ch1 | Jala Deepam | TamilNovel.in

பிரிட்டிஷாரின் கிழக்கு இந்தியக் கம்பெனியின் கவர்னரான வில்லியம் ஏஸ்லாபி துறைமுகத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்த தமது மாளிகையின் மாடி அறையில் மிகுந்த மனச் சஞ்சலத்துடனும் எரிச்சலுடனும் உலாவிக் கொண்டிருந்தார். சற்று நேரத்திற்கொருமுறை மேற்குச் சாளரத்தண்டை சென்று அதன் மூலம் எதிரே இருந்த கடல் பகுதிகளை நோக்கிக் கொண்டுமிருந்தார். இப்படி இரண்டு மூன்று முறை கடலை நோக்கிவிட்டு அறையின் நடுவுக்கு வந்த கவர்னரைப் பார்த்தவண்ணம் அறையிலிருந்த அவரது மேஜையிலிருந்து நாலைந்தடி தள்ளி நின்றிருந்த வில்லியம் கிப்போர்ட், “தங்கள் மனவருத்தத் திற்குக் காரணம் தெரியவில்லையே” என்றான் மெதுவாக. அவன் குரலில் போதிய அளவு பயமும் ஒலித்தது.

கவர்னர் ஏஸ்லாபி நீண்ட நேரம் அவன் கேள்விக்குப் பதில் சொல்லவும் இல்லை, அவனைத் திரும்பிப் பார்க்கவு மில்லை. துறைமுகத்தில் நின்றிருந்த கிரந்தாம், ஸாமர்ஸ் என்ற கப்பல்களை மட்டுமே ஊன்றி ஊன்றிப் பார்த்தார். பிறகு ஏதோ நினைத்துக்கொண்டு, “என்ன சொன்னாய் கிப்போர்ட்?” என்று வினவினார்.

“தங்கள் மன வருத்தத்திற்குக் காரணம் தெரியவில்லை யென்று சொன்னேன்” என்று மீண்டுமொருமுறை தான் கூறியதைத் திருப்பிச் சொன்னான் கிப்போர்ட்.

கவர்னர் ஏஸ்லாபி சாளரத்தின் பக்கத்திலிருந்து உள்ளுக்குள் நடந்து வந்ததும் நடுவிலிருந்த தமது நாற்காலியில் அமர்ந்து மேஜைமீது கையை ஊன்றிக் கொண்டு, “காரணம் தெரியவில்லை உனக்கு?” என்று வினவியதன்றி, தமது கண்களை அவன்மீது நிலைநாட்ட வும் செய்தார். கவர்னர் ஏஸ்லாபி நல்ல உயரமும் பருமனுமாய் இருந்ததன்றி அவர் பார்வையில் தீட்சண்யமும் தீர்க்காலோசனையும் இருந்தது. பம்பாயின் மிகச் சிறந்த கவர்னர்களில் ஒருவரெனப் பெயர் பெற்ற ஏஸ்லாபியின் தீர்க்கதரிசனத்தைப் பற்றியும், விஷயங் களை நுண்ணறிவோடு ஆராயும் திறனைப் பற்றியும் மகாராஷ்டிர மன்னர் வட்டாரங்களில் கூடச் சிலாகிக்கப் பட்டு வந்தது. அவருடன் அலுவல் புரிந்த வெள்ளைக் காரர்கள், இந்தியர்கள் அனைவருமே அவரை மதித்து வந்தனர். கனோஜி ஆங்கரேகூட அவரிடத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து வந்தார். ‘கவர்னரின் பார்வைக்கும், பேச்சுக்கும் எப்பொழுதும் ஒரு பொருள் உண்டு’ என்று எல்லோரும் கருதி வந்தனர். ஆகவே, அவர் கிப்போர்ட்டின் கேள்வியைத் திருப்பி அவனை உற்றுப் பார்த்ததும் கிப்போர்ட் சிறிது சலனமே அடைந்தான்.

“தெரியவில்லையே பிரபு” என்று அடக்கமாக உரைக்கவும் செய்தான்.

கவர்னர் ஏஸ்லாபியின் அழகிய உதட்டின் மேல் புறத்தில் சீராகக் கத்தரித்து விடப்பட்ட மீசை லேசாக ஒருபுறம் இழுபட்டது. “கிப்போர்ட்! வரவர உனக்குப் பல விஷயங்கள் புரிவதில்லை. மனிதர்களுடைய சக்தியை எடை போடுவதிலும் சற்றுக் கவனக்குறைவுடன் இருக்கிறாய்” என்று கூறி, அவன் மணிக்கட்டிலிருந்த காயத்தின் கட்டை லேசாகப் பார்த்தார்.

கிப்போர்ட்டின் முகம் வெட்கத்தால் சிவந்தது. கவர்னர் எதைக் குறிப்பிடுகிறாரென்பதை அவன் நன்றாக உணர்ந்து கொண்டான். கொலாபாவின் நிகழ்ச்சிகளை அவன் பூர்ணமாக மறைப்பதற்கு வேண்டிய முன்னேற் பாடுகளைச் செய்து கொண்டுதான் பம்பாய்க்குள் நுழைந்தான். நடந்ததைச் சொல்லுவதில்லையென்று காதரைனிடமும் தனது மெய்க்காவலரிடமும் உறுதிமொழி வாங்கிக்கொண்ட பிறகே பம்பாய் கவர்னர் மாளிகைக்குள் நுழைந்தான்.

உண்மையில் மெய்க்காவலர் யாரும் சொல்லவில்லை விஷயத்தை என்பது அவனுக்குத் தெரிந்தேயிருந்தது. தனது மையலில் கட்டுண்டு கிடந்த காதரைனும் சொல்ல வில்லையென்பதும் அவனுக்கு நிச்சயம். அப்படியிருக்க நடந்ததையார் சொல்லியிருப்பார்கள் கவர்னருக்கு என்று சென்ற பதினைந்து நாட்களில் அவன் தன்னைத்தானே ‘கேட்டுக் கொண்டான்.

ஒருவேளை கவர்னருக்குத் தெரிந்து விட்டதாக நினைப்பது தனது பிரமையோ என்றுகூடச் சிந்தித்தான். ஆனால் அது இருக்காது என்பதற்குச் சான்றுகளைக் கவர்னர் அவ்வப்பொழுது அளித்துக் கொண்டிருந்தார். காதரைனைக் கொண்டுவந்து கவர்னரிடமும் ஒப்படைத்து விட்டு, கெட்ச் ஆனும், கவர்னர் ஆயுதக் கப்பலும் இரண்டு மூன்று நாட்களில் வந்து சேருமென்று செய்தி கூறியபோது கவர்னரின் கண்கள் தனது மணிக்கட்டை நோக்குவதைப் பார்த்தான். அந்தக் காயத்துக்குக் காரணம் கேட்கவில்லை கவர்னர். காதரைனை ஏற்றுக்கொண்டு அவள் தமது மாளிகையில் தங்க இடமளித்தார். கிப்போர்ட்டின் மெய்க் காவலரை வேறு அலுவல்களுக்கு நியமித்தார். அன்றைய பேட்டி பதினைந்து நிமிடங்களில் முடிந்துவிட்டது.

அன்றைக்குப் பிறகு பல நாட்கள் கவர்னரைச் சந்தித்த போதெல்லாம் அவர் பேச்சு மிக இடக்காயிருப்பதைக் கவனித்தான் கிப்போர்ட். கொலாபா நிகழ்ச்சிகளை அவர் எப்படியோ அறிந்து கொண்டு விட்டார் என்பது புலனாயிற்று அவனுக்கு. மெள்ள மெய்க்காவலரை அணுகி அவர்களை விசாரித்தான் காரணம் அறிய.

தாங்கள் மூச்சு விடவில்லை என்று மெய்க்காவலர் கூறி விட்டார்கள். காதரைனையும் விசாரித்தான், சரசமாடிய சமயங்களில். அவளும் சொல்லவில்லையென்பதைப் புரிந்து கொண்டான். அப்படியானால் கவர்னர் என்ன மந்திர வாதியா என்று தன்னைத்தானே பலமுறை கேட்டுக் கொண்டும் விடை கிடைக்கவில்லை அவனுக்கு. விடை கிடைக்க வேண்டுமானால் ஒருவரை விசாரிக்கலாம். ஆனால் அவர் வாயைத் திறக்கமாட்டாரே!

அவர் தான் கவர்னரின் அந்தரங்கக் காரியதரிசியான வால்டர் ப்ரௌன். எப்பொழுதும் கவர்னரின் அந்தரங்க அறையில் ஒரு மூலையில் இருந்த மேஜைக்கருகில் உட்கார்ந்து குனிந்த தலை நிமிராவண்ணம் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் ப்ரௌன், எதையும் கவனிக்காதது போலிருந்தாலும் எல்லாவற்றையும் கவனிப்பவரென்பதை. எல்லோரும் அறிந்திருந்தனர். ஆனால் அவரிடமிருந்து வார்த்தையைப் பிடுங்குவது நடக்காத காரியமென்பதும் பிரசித்தம். அது மட்டுமே போதும் கிப்போர்ட்டுக்கு அவரிடம் வெறுப்பு உண்டாக்க. போதாக்குறைக்கு கவர்னர் தன்னைப் பார்த்து இகழ்ச்சியுடன் பேசும்போ தெல்லாம் மிஸ்டர் ப்ரௌன் கண்களை மெல்லத் தூக்கிப் பார்ப்பதைக் கவனித்த கிப்போர்ட் முடிந்தால் அவரைக் ‘கொன்றிருப்பான். முடியாத தோஷத்தால் உள்ளூர அவரைச் சபித்துக் கொண்டிருந்தான். அந்த ப்ரௌன் இன்றும் அதே மூலையில் உட்கார்ந்திருந்தார். கவர்னர் ஏஸ்லாபி கிப்போர்டின் மணிக்கட்டைப் பார்த்த ‘போதெல்லாம் அவரும் பார்த்துவிட்டுத் தலை குனிந்தார்.

தனக்கு விஷயங்கள் பல புரிவதில்லையென்றும், மனிதர்களை எடை போடுவதிலும் சக்தி குறைந்துவிட்ட தென்றும் கவர்னர் கூறியபோது காரியதரிசி ப்ரௌன் மீண்டும் நிமிர்ந்து பார்த்துத் தலைகுனிந்ததைக் கண்ட கிப்போர்டின் முகம் வெட்கத்தினால் மட்டுமின்றிச் சீற்றத்தினாலும் சிவந்தது. அந்தச் சீற்றத்துடன் சொன் னான், “கவர்னர் மகாப்பிரபு! எனக்கு விஷயங்கள் புரியா திருக்கலாம். ஆனால் தங்கள் வருத்தத்திற்குக் காரணம் இப்பொழுது ஏதும் இருக்க முடியாதென்பது மட்டும் புரிகிறது எனக்கு. பிரிட்டிஷ் கப்பல்கள் எதையும் மடக்கி முறியடித்துவிடும் கனோஜி ஆங்கரேயையும் முறியடித்துத் துரத்திவிட்டு, நமது போர்க் கப்பல்கள் கிரந்தாமும், ஸாமர்ஸும் வந்திருக்கின்றன. போரில் வெற்றியே மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம். தவிர வேறொரு நுட்பமும் இதில் இருக்கிறது” என்று.

கவர்னர் ஏஸ்லாபியின் கண்களில் விஷமம் தாண்டவ மாடியது. “அந்த நுட்பத்தை நாம் அறியலாமா?’ என்று அவர் கேட்ட கேள்வியிலும் கேலி இருந்தது.

அதை லட்சியம் செய்யாத கிப்போர்ட், “அரபிக் கடலில் ஆங்கரேயையும் துரத்தி பிரிட்டிஷ் கப்பல்கள் வருவது இதுதான் முதல் தடவை. இதிலிருந்து என்ன தெரிகிறது!” என்றான்.

“என்ன தெரிகிறது கிப்போர்ட்?” என்றார் கவர்னர் சர்வ சாதாரணமாக.

“அரபிக் கடலில் கனோஜியின் வலு குறைகிறதென்று தெரிகிறதல்லவா?” என்று வினவினார் கிப்போர்ட்.

“தெரிகிறதா!” என்ற கவர்னர் கிப்போர்ட்டை நோக்கிப் புன்முறுவல் செய்தார். அதுவரையில் அவர் முகத்திலிருந்தகவலையும் சிறிது அகன்றது.. “கிப்போர்ட்!” என்று மீண்டும் அழைத்தார்.

. “என்ன பிரபு?” என்ற சந்தேகத்துடன் கண்களை உயரத்தூக்கிக் கவர்னரைப் பார்த்தான் கிப்போர்ட்.

”கிரந்தாம், ஸாமர்ஸ் இந்த இரண்டு கப்பல்களின் தலைவர்களைச் சந்தித்தாயா நீ’ என்று வினவினார் கவர்னர்.

“இல்லை பிரபு” என்றான் கிப்போர்ட், எதற்காக அதை கவர்னர் கேட்கிறார் என்பது புரியாமல்.

”நான் சந்தித்தேன்” என்று சுட்டிக் காட்டினார் கவர்னர்.

“தாங்கள் கவர்னராதலால் அந்த வசதியிருக்கிறது” என்று குத்தலாகப் பேசினான் கிப்போர்ட்.

“ஆம் கிப்போர்ட். வசதியிருப்பதால் ஊகங்களுக்கு அவசியமில்லை. தவிர எனது ஊகங்களும் அவ்வளவு! தவறாயிருப்பதில்லை” என்ற கவர்னர் மீண்டும் அவனது மணிக்கட்டை உற்றுப் பார்த்தார். அறைக் கோடியிலிருந்த மிஸ்டர் ப்ரௌனும் இம்முறை அனாவசியமாகச் சிரித்தார்.

கிப்போர்ட் சங்கடத்தால் நின்ற நிலையில் சிறிது அசைந்தான். “தங்கள் ஊகங்கள் தவறுமென்று யாரும் சொல்லவில்லையே” என்று சலிப்புடன் கூறவும் செய்தான்.

“இல்லை. யாரும் கூறவில்லை” என்று ஆமோதித்த . கவர்னர், “கிப்போர்ட்! இங்கிலாந்திலிருந்து வந்துள்ள கப்பல் தலைவர்கள் எழுதிக் கொடுத்த ரிப்போர்ட் இதோ இருக்கிறது … படி” என்று கூறித் தமது மேஜை டிராயரிலிருந்த ஒரு நீண்ட கவரை எடுத்து மேஜைமேல் போட்டார்.

அதை எடுத்து உள்ளிருந்த நாலைந்து தாள்களைப் படிக்கப் படிக்க கிப்போர்டின். முகத்தில் கவலை அதிக மாயிற்று. படித்து முடித்தபின் பணிவுடன் கவர்னரிடம் நீட்டிய கிப்போர்ட், “ஆனால் வதந்தி வேறுவிதமாயிருக்கிறதே” என்றான்.

“இருக்கும். ஆனால் கவர்னர் வதந்திகளைக் கொண்டு கம்பெனியை நடத்த முடியாதல்லவா?” என்ற கவர்னர், “கிப்போர்ட்! கனோஜி ஆங்கரே தனது ஒரு குராப்பையும் இரண்டொரு காலிவாத்துக்களையும் கொண்டு கிரந்தாம், ஸாமர்ஸ் போன்ற இரு பெரும் பிரிட்டிஷ் கப்பல்களைத் தாக்கியிருக்கிறாரென்றால் கடற்போரில் அவரது துணிவையும் திறமையையும் நாம் அலட்சியம் செய்வதற்கில்லை . தவிர…” என்று கூறிச் சிறிது சிந்தனையிலும் இறங்கினார்.

சிறிது நேரம் கிப்போர்ட் மௌனம் சாதித்தான். பிறகு கேட்டான், “தவிர?” என்று.

“எப்பொழுது இரு பெரும் கப்பல்களை ஆங்கரே தாக்கியிருக்கிறாரோ அடுத்துவரும் கப்பல்களையும் அவர் தாக்குவார். அடுத்த முறை ஒரு குராப்பைக் கொண்டு தாக்கமாட்டார். சரியான பலத்துடன் தாக்குவார்” என்று சுட்டிக்காட்டினார் கவர்னர்.

“அப்படியானால் அபாயந்தான்” என்று இழுத்தான் கிப்போர்ட்.

“மகிழ்ச்சி” என்றார் கவர்னர்.

“எதற்கு மகிழ்ச்சி?”

“மெள்ள மெள்ள உனது புத்தியிலும் விஷயம் ஏறுவது பற்றி. அதில் லாபமிருக்கிறது.”

“என்ன லாபம் இருக்கிறது?”

“உனது புத்தியில் உண்மை ஏறினால் நான் சொல் லாமலே எனது மனவருத்தத்துக்கும் கவலைக்கும் காரணம் புரியுமல்லவா?” என்ற கவர்னர் ஆரம்பத்தில் கிப்போர்ட் கேட்ட கேள்வியைத் திரும்பவும் வலியுறுத்தினார்.

கிப்போர்டின் முகம் குங்குமக் குழம்பாகச் சிவந்தது. கவர்னரின் ஏளனத்தால். “அப்படியானால் கனோஜியிடம் சரணாகதி அடைந்துவிட வேண்டியதுதானா?” என்று வினவவும் செய்தான் கிப்போர்ட் மிகுந்த எரிச்சலுடன்.

கவர்னரின் உதடுகள் இகழ்ச்சியை அதிகமாகக் காட்டின. “அடைந்தால் சரணாகதி, இல்லையேல் போர், இந்த இரண்டைத் தவிர வேறு வழிகள் இல்லையா கிப்போர்ட்?” என்று வினவினார்.

“என்னை ஏன் கேட்கிறீர்கள்?” என்று வினவினான் பதிலுக்கு கிப்போர்ட்.

“நீ பெரிய வர்த்தகன். தவிர எனது கௌன்சில் மெம்பர். அதுவுமின்றி ஆங்கரேயின் முக்கிய தளமான கொலாபாவுக்கே போய்வந்த அனுபவமும் உனக்கு இருக்கிறது. ஆகவே உன்னைக் கேட்காமல் யாரைக் கேட்பேன்” என்றார் கவர்னர்.

கவர்னரின் ஒவ்வொரு சொல்லிலும் ஏளனமிருப்பது புரிந்தது கிப்போர்ட்டுக்கு. “சண்டை அல்லது சமாதானம் என்ற இரண்டு வழியைத் தவிர வேறு என்ன வழியிருக் கிறது?’ என்று வினவினான் ஆத்திரத்துடன்.

“இப்பொழுது ஒரு புதுச் சொல்லை நீயே சொல்லி யிருக்கிறாயே” என்றார் ஏஸ்லாபி.

“என்ன சொல்?”

”சமாதானம்.”

“சமாதானமா! ஆங்கரேயுடனா!”

“ஆம்.”

இதைக் கேட்ட கிப்போர்ட்டின் முகத்தில் வியப்பு மிதமிஞ்சி விரிந்தது. சினமும் அதில் கலந்து கிடந்தது. ‘சமாதானமா! கொள்ளைக்காரனுடனா!” என்று கேட்டான் கிப்போர்ட் ஆத்திரத்துடன்.

“ஆம்” என்ற ஏஸ்லாபி அவனை விஷமத்துடன் நோக்கினார்.

“கொள்ளைக்காரனுடன் சமாதானத்தை நாடினால் பிரிட்டிஷ் கௌரவம் என்ன ஆகும்?” என்று கேட்டான் கிப்போர்ட்.

“தோல்வியடைவதைவிட அதிக கௌரவக் குறை விருக்காது” என்றார் ஏஸ்லாபி. அத்துடன், “கிப்போர்ட், பிரிட்டிஷ் சரித்திரம் படித்திருக்கிறாயா?” என்றும் கேட்டார் கிப்போர்ட்டை நோக்கி.

“சரித்திரப் பாடத்தில் முதன்மையாகத் தேறியவன். மெடல் வாங்கியிருக்கிறேன்” என்றான் கிப்போர்ட்.

“அப்படியானால் உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே ஸர் வால்டர் ராலே முதலிய பிரிட்டிஷ் கடற்கொள்ளைக் காரர்களைப்பற்றி?” என்றார் கவர்னர்.

“தெரியும்’ என்றான் கிப்போர்ட்.

“அவர்களைப் போல்தான் ஆங்கரேயும் நாட்டுக்காகப் போராடுபவர். கோழையான சில பிரிட்டிஷ்காரர்களை விட வீரனான ஆங்கரேயை நம்பலாம். தவிர, கிப்போர்ட், மகாராஷ்டிரத்தில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் பெரும் போர்கள் ஏற்படும். பெரும் குழப்பங்கள் உண்டாகும். இந்த நிலையில் ஆங்கரேயின் பாதுகாப்பு பிரிட்டிஷ்

கப்பல்களுக்கு அவசியம். ஆங்கரேக்கு நமது உறவு அவசியம். அவரிடமிருந்து ஒரு தூதன் வந்திருக்கிறான்” என்று விஷயத்தை மெள்ள அவிழ்த்தார்.

”யாரவன்?” என்று வினவினான் கிப்போர்ட்.

கவர்னர் பதில் சொல்லவில்லை. வாயிற்படியில் நின்ற ஆர்டர்லியைக் கூப்பிட்டு, ” வரச்சொல்” என்றார்.

சற்று நேரத்திற்கெல்லாம் கவர்னர் அறைக் கதவைத் திறந்துவிட்ட ஆர்டர்லி, “இதயசந்திரன் ! ஸார்கேல் கனோஜி ஆங்கரேயின் தூதர்” என்று அறிவித்தான்.

Previous articleJala Deepam Part 2 Ch35 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here