Home Historical Novel Jala Deepam Part 3 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

62
0
Jala Deepam part 3 Ch11 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch11 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 11 இரண்டாவது சிகிச்சை

Jala Deepam Part 3 Ch11 | Jala Deepam | TamilNovel.in

சிறிதளவு சினமோ வேறு உணர்ச்சியோ இன்றி, கவர்னர் ஏஸ்லாபியின் உதடுகளிலிருந்து உதிர்ந்த ‘போதும்’ என்ற ஒற்றைச் சொல்லே அந்தச் சிற்றறையி லிருந்த மூவரையும் திக்பிரமையடையச் செய்யப் போது மானதாயிருந்ததால், காஸ்ட்ரோவின் கையிலிருந்த கைத் துப்பாக்கி மெல்ல அவன் இடைக் கச்சையிலிருந்த தோல் உறைக்குள் சென்று பதுங்கிற்று. தரையிலிருந்து எழுந் திருந்த மிஸ்டர் ப்ரௌன், உதட்டிலிருந்த ரத்தத்தைப் பையிலிருந்த கர்ச்சிப்பை எடுத்துத் துடைத்துக் கொண்டு, சட்டையைச் சரிப்படுத்திக் கொண்டு நேராகக் காலுடன் கால் சேர்த்து நின்றார். இதயசந்திரன் அசல் பிரதிமையாகி கவர்னர்மீது பிரமை தட்டிய கண்களை ஓட விட்டான்.

மூவர் நிலையையும் கவர்னர் ஏஸ்லாபி கண்டாரானா லும் மேஜைமீது இருந்த பணமுடிப்பின் மீதும் அவர் கண்கள் ஒரு வினாடி நிலைத்தனவென்றாலும் அவர் எந்தவித உணர்ச்சியையோ பதட்டத்தையோ காட்டாமல், “மிஸ்டர் ப்ரௌன், நீங்கள் சென்று நடனத்தில் கலந்து கொள்ளுங்கள். காஸ்ட்ரோ நீயும் சென்று பானுதேவியை அவர்கள் மாளிகையில் விட்டுவிடு” என்று ஏதோ படைத் தலைவன் தன் வீரர்களுக்குக் கட்டளையிடுவதுபோல் கட்டளையிட்டுக் கடைசியாக இதயசந்திரனை மட்டும் ஒரு விநாடி உற்று நோக்கினார். பிறகு “கனோஜியின் தூதுவனே! தூதுவன் என்ற முறையில் உனக்கு சகல பாதுகாப்புகளையும் அளிக்க வேண்டியது என் கடமை. இருப்பினும் இன்று நீ பம்பாய் கவர்னர் கௌன்ஸிலின்
முக்கிய மெம்பரொருவரைத் தாக்கியிருக்கிறாய். இனி உன் கதியை நிர்ணயிக்க வேண்டியது எங்கள் நீதிஸ்தலம். விசாரணை வரையில் நீ சிறையிலிருப்பாய். வா என்னுடன்” என்று கூறி அவனைத் தம்முடன் அழைத்துச் சென்றார்.

அவர் சென்ற பிறகு பரஸ்பரம் பார்த்துக்கொண்டு மிஸ்டர் ப்ரௌனும் காஸ்ட்ரோவும் மௌனமாகவே நீண்ட நேரம் நின்றனர். பிறகு மௌனமாகவே அறையை விட்டு வெளியே நடந்து நடன மண்டபத்துக்குச் சென்றனர். அவர்கள் படிகளில் இறங்கும்போது இரண்டு பிரிட்டிஷ் சோல்ஜர்கள் மண்டபத்தின் பின்புற வழியாக இதயசந்திரனை அழைத்துச் செல்வதையும் கண்டனர். சற்றுத் தூரத்தில் கவர்னர் ஏஸ்லாபி தமது மனைவியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட மிஸ்டர் ப்ரௌன், ”பார்த்தாயா கவர்னரை. காஸ்ட்ரோ ?” என்று சீறினார்.

டீ காஸ்ட்ரோவும் கவர்னரின் உற்சாக நிலையைக் கவனிக்கவே செய்தான். “பார்த்தேன் ப்ரௌன், நல்ல நெஞ்சழுத்தம் கவர்னருக்கு” என்று கூறினான், வெறுப்பும் கோபமும் கலந்த குரலில்.

“கவர்னர் நமது உரையாடல் முழுவதையும் கேட்டிருப்பாரென்று நினைக்கிறாயா?” என்று வினவினார் மிஸ்டர் ப்ரௌன் மீண்டும்.

“அவர் வந்ததே தெரியவில்லை எனக்கு?” என்றான் டீ காஸ்ட்ரோ.

“எனக்கும் தெரியவில்லை. பூனனபோல் வந்திருக்க வேண்டும்.”

“ஆம்.”

“வந்து எத்தனை நேரம் வாயிற்படியில் நின்றிருப்பார்?”

“அதுதான் தெரியவில்லை” என்று மிஸ்டர் ப்ரௌன் வெறுப்புடன் நோக்கினார் கவர்னரை. “காஸ்ட்ரோ! கவர்னர் சில நாட்களாகப் பல விஷயங்களில் அனாவசிய மாகத் தலையிடுகிறார். கௌன்ஸில் செய்ய வேண்டிய முடிவுகளைத் தாமே செய்கிறார். இதைப் பிரிட்டனிலுள்ள கம்பெனி நிர்வாகிகள் ஒப்பமாட்டார்கள்” என்று கூறினார்.

மிஸ்டர் ப்ரௌன் சிந்தனையில் ஓடிய எண்ணங்களை ஓரளவு புரிந்துகொண்டான் காஸ்ட்ரோ. கௌன்ஸிலில் உள்ள பெரிய விஷமி மிஸ்டர் ப்ரௌன் தானென்பதையும் சில ரகசிய கடிதங்களை அவர் பிரிட்டனிலுள்ள கம்பெனி யின் நிர்வாகிகளுக்கு அனுப்பி விடுகிறாரென்பதையும் டீ காஸ்ட்ரோ உணர்ந்திருந்தான். மற்ற வெள்ளைக்காரர் களிடையே மிஸ்டர் ப்ரௌனின் ரகசிய நடவடிக்கைகள் வெறும் வதந்திகளாக உலாவினாலும், அந்த வதந்திகள் பொய்யாயிருக்க முடியாதென்பதை மிஸ்டர் ப்ரௌனுடன் நேரில் பழகிய சில நாட்களுக்குள்ளாகவே டீ காஸ்ட்ரோ, புரிந்து கொண்டான். பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் மிஸ்டர் ப்ரௌனின் எண்ணங்களைச் சில நாட்களுக்குள்ளாகவே எடை போட்டுவிட்ட காஸ்ட்ரோ பிற்காலத்தில் கவர்னர்களை ஆட்டவல்ல சக்தி மிஸ்டர் ப்ரௌனுக்கு ஏற்படுமென்ற காரணத்தால் அவருடைய அடிமைபோல் நடித்து, அவர் துணிந்த காரியங்களை நிறைவேற்றவும் முயன்றான். அப்படி முயன்ற காரணத் தால் அவருடைய நம்பிக்கைக்கும் ஓரளவு பாத்திரமாகி அவரை மிகச் சாமர்த்தியமாக பானுதேவியின் பக்கத்தி லும் இழுத்தான். இத்தகைய நெருக்கடியான உறவால் மிஸ்டர் ப்ரெளன் மனப்போக்கை ‘அறிந்திருந்த காஸ்ட்ரோ, “ஆம் மிஸ்டர் ப்ரௌன்! கவர்னர் வரம்பு மீறித்தான் நடக்கிறார்” என்று ஒத்துப் பாடினான்.

“உதாரணமாக மகாராஷ்டிர வல்லரசுக்கும் கடற் கொள்ளைக்காரன் ஆங்கரேயுக்கும் உள்ள சச்சரவிலும்,

போரிலும் கொள்ளைக்காரன் பக்கம் சாய்வதைச் சட்டத் தில் கண்ணும் கருத்துமுள்ள பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்பாது” என்றார் மிஸ்டர் ப்ரௌன்.

“ஆம் ஒப்பாது” என்றார் காஸ்ட்ரோ.

”கனோஜியின் தூதனை, வந்ததும் சிறை செய்திருக்க வேண்டும்.”

“ஆம்.! “அவனோடு பேசுவது பிரிட்டிஷ் கௌரவத்துக்குக்
குறைவு.”

“ஆம், ஆம்.”

”அவனை நடன விருந்துக்கு அழைத்தது…”

“மிகமிகத் தவறு. இங்கு வந்துள்ள பல பிரிட்டிஷ் கனவான்கள் அவன் ஒரு பிரிட்டிஷ் பெண்ணுடன் நடனமாடியதை வெறுக்கிறார்கள்.”
மிஸ்டர் ப்ரௌன் அதற்குமேல் பேசவில்லை. நீண்ட நேரம் சிந்தனையில் இறங்கினார் ”சரி, பிறகு பார்ப்போம் காஸ்ட்ரோ . பானுதேவியிடம் சொல், கனோஜி ஒப்புக் கொள்ளாத நிபந்தனைகளாக நான் எழுதியனுப்புவதாக” என்று கூறிவிட்டு, காஸ்ட்ரோவைப் போகச் சொல்லி விட்டுத் தானும் நடன மண்டபத்திலிருந்து வெளியே சென்றார். வெளியில் வந்ததும் சற்றுத் தூரத்திலிருந்த கவர்னர் இருப்பிடத்தை நோக்கிச் சென்று மாடியறையை அடைத்து தமது பழைய ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டு, மேஜை அறைகளிலிருந்த பல தஸ்தாவேஜிகளை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். பிறகு இதயசந்திரன் கொண்டு வந்த தூதுக்கடிதத்தை எடுத்து நீண்ட நேரம் படித்தார். படித்ததும் சிந்தனையில் இறங்கினார். அவர் மனத்தில் பம்பாயில் பிரிட்டிஷார் நிலை, பிரிட்டனில் உள்ள கம்பெனி நிர்வாகிகளின் மனப்போக்கு இவை யனைத்தும் வலம் வந்தன. சீரிய சிந்தனைக்குப் பிறகு ஒரு நீண்ட காகிதத்தை எடுத்து அதை மயிலிறகுப் பேனாவினால் விடுவிடு என்று நீண்ட நேரம் எழுதினார். பிறகு. காகிதத்தை மடித்து ஓர் உறையில் போட்டு விலாசமெழுதி, மெழுகுவத்தியைக் கொளுத்தி அரக்கைக் காய்ச்சி முத்திரையையும் வைத்தார். இதை முடித்ததும் அவரது உதடு களில் அதுவரை காணாத புன்முறுவல் தோன்றியது. “இது சென்றால் ஏஸ்லாபியின், பதவி பறிபோகும்” என்றும் சொல்லிக் கொண்டார். “ஏஸ்லாபி, பிரபுக் குலத்தில் பிறந்த கர்வம் போகவில்லை உனக்கு. ஆனால் கர்வத்தைவிடத் தந்திரம் சிறந்த சாதனமென்பதைச் சீக்கிரம் புரிந்து கொள்வாய்” என்று கறுவினார். பிறகு அந்தக் கவரை மேஜைக்குள் வைத்துவிட்டு வேறொரு தாள் எடுத்து அதில் சில குறிப்புகளை எழுதினார். அதையும் மடித்து மேஜையில் வைத்து டிராயரைப் பூட்டிக் கொண்டு வெளியே சென்றார். வாயிற்படியில் காவலிலிருந்த ஆர்டர்லி அவருக்குத் தலைவணங்கி வழிவிட்டான்.

மிஸ்டர் ப்ரௌன் எங்கு சென்றார். என்ன செய்தா ரென்பதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாத கவர்னர் ஏ ஸ்லாபி நடன மண்டபத்திலேயே கடைசிவரை நின்றிருந்தார். டீ காஸ்ட்ரோ பானுதேவியை அழைத்துக் கொண்டு கிளம்பியதும், “மகாராஷ்டிர மன்னர் குலமகள் வரவால், பிரிட்டிஷ் தளம் பெருமையடைகிறது” என்று கூறித் தலைதாழ்த்தி அவளையும் தோழிகளையும் அனுப்பி வைத்தார்.

பானுதேவியின் உள்ளத்தில் உணர்ச்சிகள் ஏதேதோ ஓடிக் கொண்டிருந்தாலும் அவள் எதையும் வெளிக்குக் காட்டவில்லை. மிகுந்த கண்ணியத்துடன் கவர்னரை நோக்கிப் புன்முறுவல் செய்துவிட்டு வெளியேறினாள். மகாராஷ்டிரப் பிரபுக்கள் பலரும் வெளியேறுவதற்கு. அவள் வெளியேறியதே காரணமாயிற்று. மற்ற வெள்ளைக்காரர் விருந்தினரும் கவர்னரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டுச் சென்றுவிடவே சுமார் இரவு பன்னிரண்டு மணிக்கு மண்டபம் யாருமின்றிச் சூன்ய நிலையை அடைந்தது.

அப்பொழுதும் மண்டபத்தை விட்டுச் செல்லவில்லை கவர்னர் ஏஸ்லாபி. தமது மனைவியை மட்டும் தமது ராணுவக் காரியதரிசியுடன் செல்லப் பணித்துவிட்டு, தனது மெய்க்காவலன் ஒருவனை மட்டும் நிறுத்திக் கொண்டு. மண்டபத்தின் ஒரு கோடியிலிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு, ஆழ்ந்த சிந்தனைக்குள்ளானார். சிற்றறையில் நடந்த நிகழ்ச்சிகளை மீண்டும் மனக்கண்ணில் வளரவிட்டு நுட்பங்களையும் ஆராய்ந்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராய் மெய்க்காவலனை அழைத்து, “ராபர்ட்! கிளம்பு” என்று கூறி உத்தரவிட்டு நடன மண்டபத்தின் வாசலுக்கு வந்து தமது மாளிகையை நோக்கிச் செல்லாமல் நேர் எதிர்ப்புறம் நோக்கிச் சென்றார். நல்ல உயரத்தின் காரணமாகவும் கால்கள் மிக நீண்டிருந்ததன் விளைவாகவும் வெகு வேகமாக நடந்த ஏஸ்லாபியுடன் ஓடவே செய்தான் மெய்க்காவலன். கவர்னர் நேராகச் சிறைக் கூடத்தை நோக்கிச் சென்றார். சிறைக் கூடத்தை அடைந்ததும், ”எங்கே அந்தக் கைதி?” என்று அதட்டி னார் காவலரை.

“உள்ளறையில் பூட்டி வைத்திருக்கிறோம்” என்றான் காவலரில் ஒருவன்.

“திற கதவை” என்று உத்தரவிட்ட ஏஸ்லாபி, காவலன் கதவைத் திறந்ததும் உள்ளறைக்குச் சென்று அங்கு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த இதயசந்திரனைச் சில விநாடிகள் நோக்கிவிட்டு, ஈட்டி செருகிய துப்பாக்கியுடன் தனக்குக் காவலாகத் தன் பின்னால் நின்ற சிறைக் காவலனையும் நோக்கினார். பிறகு சிறைக் காவலனை வெளியே செல்ல உத்தரவிட்டு “இதயசந்திரா!” என்று அழைத்தார்.

இருப்பிடத்திலிருந்து மெல்ல எழுந்திருந்த இதய சந்திரன், “பிரபு!” என்ற ஒற்றைச் சொல்லை மெல்ல தயக்கத்துடன் கூறினான்.

அந்த அறையின் சிறு விளக்கில் ஏஸ்லாபியின் கண்கள் பளபளத்தன. “நீ இன்று புரிந்தது பெரும் குற்றம்” என்ற கவர்னர் சொற்களில் கவலை தெரிந்தது.

”ஆம் பிரபு. ஆனால், வேறு வழியில்லை. நடந்தது என்னவென்பது தங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ” என்றான் இதயசந்திரன்.

“முழுதும் தெரியாது. உனக்கு லஞ்சம் கொடுக்க மோகரா முடிப்பை ப்ரௌன் எடுத்து மேஜைமீது வைத்த போதுதான் நான் அங்கு வந்தேன்” என்றார் கவர்னர்.

“பிரபு! மிஸ்டர் ப்ரௌன் கனோஜியிடமிருந்து விலக எனக்கு லஞ்சம் கொடுத்தார். அந்த மோகரா முடிப்பைக் கொண்டு இரண்டு கப்பல்களை வாங்கலாமென்றும் சொன்னார். நான் பல கப்பல்களைக் கொள்ளையடித் திருக்கிறேன் பிரபு. போரிட்டுக் கப்பல்களையும் பெரும் பணத்தையும் கைப்பற்றியிருக்கிறேன். ஆனால் நாணயம் தவறி, கேவலமான வேலைக்காகக் கை நீட்டிப் பணம் வாங்கியதில்லை. ஆகவே ப்ரௌன் பணம் கொடுத்தபோது நிதானமிழந்தேன் தவிர, அந்தப் பணம் என்னை மாலுமி யாக்கி, ஜல தீபத்தின் உபதளபதியாகவும் பிறகு தளபதி யாகவுமாக்கிய ஆங்கரேயிடமிருந்து என்னைப் பிரிப்பதற் காகத்தான் கொடுக்கப்பட்டதென்ற நினைப்பு என்னை அடியோடு நிலைகுலையச் செய்தது. ஆகையால்தான்…” இத்துடன் நிறுத்தினான் இதயசந்திரன். வாசகத்தை அவன் மேலே முடிக்கவில்லை.

“ஆகையால்தான்?”

கவர்னர் கேள்வி சகஜமாக எழுந்தது. ” அந்தச் சம்பவம்” என்றான் இதயசந்திரன்.

அவன் ‘அந்தச் சம்பவம்’ என்று குறிப்பிட்டதை கவர்னர் கவனித்தார். “அதைக் குற்றமென்று நீ நினைக்க வில்லையா?” என்று வினவினார்.

“இல்லை. அயோக்கியனுக்கு நான் அளித்த தண்டனை அது” என்றான் இதயசந்திரன்.

கவர்னர் இதழ்களில் புன்முறுவல் படர்ந்தது. முகத்தில் கவலை படர்ந்தது. “இதயசந்திரா! நாளை கௌன்ஸிலில் இந்த விஷயம் விசாரணைக்கு வரும்போது நான் உன் பக்கம் ஏதும் பேசமுடியாது. வெள்ளைக்காரர் நடனத்தில் உன்னை நுழைய விட்டதாலேயே பலர் என்மீது சீற்றம் கொண்டிருக்கிறார்கள். தவிர, நீ எனது ‘கௌன்ஸிலின் முக்கிய மெம்பரை அடித்திருக்கிறாய். நீ தண்டனையிலிருந்து தப்புவது கஷ்டம்” என்று கூறிய கவர்னர் பெருமூச்சு விட்டார்.

இதயசந்திரன் அவரது கவலையைக் கவனித்தான். “பிரபு! எனக்காக வருந்தாதீர்கள். கொள்ளைக்காரர் வாழ்க்கையில் இத்தகைய முடிவுகள் சகஜம். தண்டனை எதுவாயிருந்தாலும் ஏற்கத் தயாராயிருக்கிறேன்” என்றான் தமிழன்.

அவன் துணிவைக் கண்டு பெரிதும் வியந்தார் கவர்னர். பிறகு திடீரென அவரது முகத்தில் கோபம் துளிர்த்தது. “தண்டனை எதுவாயிருந்தாலும் ஏற்கத் தயாராயிருக்கிறாயா?” என்று வினவினார். “தயாராயிருக்கிறேன்” என்றான் தமிழன்.

கவர்னர் ஏஸ்லாபி காரணமில்லாமல் திடீரெனக் கூறினார், “என்னை எதிர்த்துப் பேச உனக்கு என்ன துணிவு” என்று. அதே சமயத்தில் கையிலிருந்த சோல்ஜர் பிரம்பின் தங்கப் பிடியால் அவன் தலையில் பலமாக அடிக்கவும் செய்தார். முன்பு காயம்பட்ட இடத்தில்
மீண்டும் அடிபட்டதால் இதயசந்திரன் காயத்திலிருந்து ரத்தம். பிரவகித்தது. அதைக் கண்ட ஏஸ்லாபி மெய்க் காவலனை அழைத்து, “இவனை மிஸ் எமிலியிடம் அழைத்துச் சென்று காயத்தைச் சரியாகக் கட்டச் சொல்” என்று உத்தரவிட்டு வெளியே சென்றார்.

கவர்னர் உத்தரவுப்படி இதயசந்திரன் மிஸ் எமிலியின் சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். ரத்தத்துடன் வந்த அவனைப் படுக்கையில் படுக்க வைத்துக் காயத்தைக் கழுவி மீண்டும் கட்டுப் போட்டாள் எமிலி. பிறகு அவனுக்குச் சிறிது மருந்தையும் புகட்டினாள். மருந்துண்ட சிறிது நேரத்திற்கெல்லாம் இதயசந்திரன் ஆழ்ந்த நித்திரையிலிருந்தான். மெய்க்காவலனைப் போகச் சொல்லிவிட்ட எ மி லி இதயசந்திரன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். இதயசந்திரன் உலகை மறந்து கிடந்தான். அவன் முகத்தைக் கவலையுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் மிஸ் எமிலி.

Previous articleJala Deepam Part 3 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here