Home Historical Novel Jala Deepam Part 3 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

127
0
Jala Deepam part 3 Ch12 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch12 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 12 காயமில்லாத இடத்தில் கட்டு

Jala Deepam Part 3 Ch12 | Jala Deepam | TamilNovel.in

நினைவிழந்த நிலையில் இதயசந்திரன் எத்தனை நேரம் படுத்துக் கிடந்தானோ, அது அவனுக்கே தெரியாது. ஆனால் கண்விழித்த போது அவன், மலர் மடியொன்றில் படுத்துக் கிடப்பதை உணர்ந்தான். அதைத் தவிர லேசாக ஆட்டங் கொடுத்த ஏதோ ஓர் இடத்தில் தான் இருப்பதை யும் உணர்ந்தான். ‘ஏன் இப்படித் தரை ஆடுகிறது? தரை யின் ஆட்டத்தினால்தான் இந்த அழகிய மடியும் ஆடுகிறது?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். ஆட்டத்திற்குக் காரணமானது எதுவா யிருப்பினும் அது தன்னிடத்தில் மிகுந்த அனுதாபமுள்ளது என்றும் நினைத்தான். ‘இல்லாவிட்டால் வழவழத்த அழகிய கால்களின் இணைப்பு சிருஷ்டித்த இந்த மடியில் தலை புரளும் பாக்கியத்தை அளிக்குமா அது?’ என்றும் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அந்த ஆட்டத்தி னின்றும் தலையை ஒரு நிலையில் நிறுத்தவோ, அல்லது வேறு எண்ணத்தாலோ மெள்ளக் குப்புறத் திரும்பி முகத்தை அந்த மலர் மடியில் புதைத்துக் கொண்டான் தமிழன். அந்தக் கால்களின் உருண்ட மேற்பகுதிகள் இணைந்த இடத்திலிருந்த மடியின் இடம் மிக இதமாயிருந்தது அவனுக்கு. இதம் தலைவலிக்கா மனவலிக்கா என்பது மட்டும் புரியாமல் தவித்தான் அவன்.

குப்புறப் படுத்த அவன் முகத்தின் ஒரு கன்னத்தை ஒரு மலர்க்கரம் தடவியது. தலைவியின் குழலைப் பிரித்து ஆசுவாசப்படுத்தியது மற்றொரு கரம். அந்தக் கரத்திலிருந்த ஒரு பெரிய வளையத்தின் கடுமையான பகுதியும் அவன் தலையில் சற்று அழுத்தினாலும் அப்படி அழுத்தியதால் தலைகூட மெல்ல வலித்தாலும், அந்த அழுத்தத்தையும் பொருட்படுத்தவில்லை மனம். அத்தனை வலிக்கும் சாந்தியை முகம் புதைந்த இடம் அளித்துக் கொண்டிருந்தது. அவன் முகத்தை மடியில் புரட்டியதால் லேசாகக் கலைந்த ஆடையும் நல்ல பட்டிலிருந்ததால் அது கூட அவன் நிலைக்கு மிக இதத்தையே அளித்தது. அந்த. மடியே சொர்க்கமாகக் கிடந்தான் அவன் பல வினாடிகள், சொர்க்கத்தை விட்டு அசைய இஷ்டமில்லாததால்.

திடீரென அவர்கள் இருந்த இடம் பெரிதாக ஆடிய தால் அவள் மடி அசைந்து கால்களும் சிறிது இடைவெளி கொடுத்தன. ‘ஏன் இப்படித் தரை ஆடுகிறது? எங்கிருக்கிறேன் நான்?’ என்று மறுபடியும் சிந்தையில் கேள்வி எழும்பவே, குப்புறப் படுத்த நிலையிலிருந்து திரும்பி மல்லாந்து படுத்தான். கண்களைத் திறந்தால் அந்த இன்பக் கனவு மறைந்து விடுமோ என்ற எண்ணத்தால்: கண்களை மூடியவண்ணம் “எமிலி!” என்று மெள்ள அழைத்தான் உதடுகளைத் திறந்து.. அந்த அழைப்புக்குப் பதிலேதும் வராது போகவே சற்றுக் கோபத்துடன், “எமிலி! மிஸ் எமிலி!” என்று அழுத்தமாக இருமுறை அவள் பெயரை உச்சரித்தான்.

எமிலியிடமிருந்து பதிலேதும் வரவில்லை. அதற்குப் பதில் பயங்கர நகைப்பு ஒன்று ஒலித்தது அந்த இடத்தில்.. கண் விழித்த இதயசந்திரன் பிரமிப்பின் எல்லையை: அடைந்தான், அச்சத்தின் உச்சத்தையும் அடைந்தான். அந்த அச்சத்துடன் கண் விழித்த அவனெதிரே கனோஜியின் பயங்கர உருவம் எழுந்தது. அவர் வாயிலிருந்து திரும்பத் திரும்ப உதிர்ந்த பயங்கரச் சிரிப்பு, சூழ்நிலையைப் பயங்கரமாகவும் கேலிக் கூத்தாகவும் அடிக்கத் தொடங்கியது. அடுத்த விநாடி மலர் மடியிலிருந்து தயை தாட்சண்யமின்றி அவன் தலையை இரு கைகள் எடுத்து ஒரு தலையணையில் தள்ள, பஞ்சணையிலிருந்து எழுந்த மஞ்சு விடுவிடுவென நடந்து வெளியே சென்றாள்.

கனோஜியின் சிரிப்பினாலும் தனது தலை அலட்சிய மாக எடுத்துத் தலையணைமீது விசிறப்பட்டதாலும் தான் இருக்குமிடத்தையும், தலையிருந்த மடிக்குச் சொந்தக் காரியையும் சந்தேகமறப் புரிந்து கொண்ட தமிழன் நிலை பரிதாபமாயிருந்தது. அதுவரை ஆட்டங்கொடுத்துக் கொண்டிருந்தது ஜல தீபமேயென்பதையும், தான் படுக்க வைக்கப்பட்டிருந்த இடம் ஜல தீபத்தின் தலைவி அறை யென்பதையும் உணர்ந்து கொண்டதால் கனோஜியை நோக்கி மிரள மிரள விழித்தான் அவன். கனோஜி அவனை நோக்கிக் கண்ணைச் சிமிட்டினார், விஷமமாக. அவருடைய பயங்கர மீசை, இதழ்களின் கோடியில் விஷமத்துடன் இழுபட்டது. அந்த அறைக்கதவுக்கு வெளியே கண்களை ஓட்டிய கனோஜி, விடுவிடுவென்று அவன் படுத்திருந்த பஞ்சணையின் முகப்புக்கு வந்து, “தமிழா! உனக்கு இன்னும் பயம் போகவில்லை?” என்று கூறினார், புன்முறுவல் செய்து.

பயமெதற்கு என்பது புரியவில்லையாதலால் இதய சந்திரன் கேட்டான், “எதற்குப் பயம்?” என்று.

” அனுபவிப்பதற்கு’ என்றார் ஸார்கேல்.

“எதை அனுபவிப்பதற்கு” என்று கோபத்துடன் மீண்டும் கேட்டான், இதயசந்திரன்.
“சுகத்தை.”

“எந்தச் சுகத்தை?”

“நல்ல தமிழில் சொல்லட்டுமா?”

“சொல்லுங்கள்.”

“இன்பத்தை’ என்று கூறிய கனோஜி பலமாக நகைத் தார் ஒரு விநாடி. மறுவிநாடி குரலைத் தாழ்த்தி, ”இதய சந்திரா! அந்த வெள்ளைக்காரியைத்தான் கோட்டை விட்டாய். இந்தப் புது வெள்ளைக்காரியையும் விட்டுவிட்டாயே. இவள் அவளைவிட நன்றாகயிருக்கிறாளே!” என்று ரகசியமாகக் கேட்டார் ஆங்கரே.

இதயசந்திரனுக்குக் கோபம் தலைக்கேறியதால் அவரைச் சுட்டுவிடுபவன் போல் பார்த்தான். “தலைவரே!” என்று சீறி அழைக்கவும் செய்தான்.

“என்ன தமிழா?” என்று கேட்டார் ஆங்கரே மிக விஷமமான குரலில்.

“வீணாக விளையாடுகிறீர்கள்…’ என்றான் தமிழன்.

“நான் விளையாடவில்லை, தமிழா!”

“அப்படியானால் நான் விளையாடுகிறேனா?”

“ஆம்.”

“யாரிடம்?”

“பெண்களிடம். சாதாரணமாக விளையாடுவதோடு நிறுத்திக்கொள்கிறாய்.”

இதயசந்திரன் அவர் சுபாவத்தை அறிந்திருந்தாலும் அவனுக்கு அவர் சொன்ன விஷயம் ஆத்திரத்தையே அளித்தது. “நீங்கள் பேசுவது உங்கள் அந்தஸ்துக்குச் சரியில்லை ” என்று சீறினான்.

கனோஜி அவன்மீது வேடிக்கை விரிந்த பார்வை யொன்றை வீசினார். “இதில் அந்தஸ்து எங்கிருந்து வருகிறது!” என்று வினவவும் செய்தார்.

“பெண்களை நான் ஏன் கெடுக்கவில்லை என்று கேட்கிறீர்களே?” என்று கேட்டான் கோபத்துடன் தமிழன்.

“சே! சே! நான் அப்படிக் கேட்கவில்லை.”

“விளையாடுவதோடு நிறுத்திக் கொள்கிறாய் என்று சொன்னதற்கு என்ன பொருள்?”

“வீணாக அவர்களையும் இம்சைப்படுத்தி நீயும் இம்சைப்படுகிறாயே என்று சொன்னேன்.”

“தலைவரே!” என்ற இதயசந்திரன் குரல் அழுத்தத்துடனும் ஆங்காரத்துடனும் ஒலித்தது.

“என்ன தமிழா?” என்ற கனோஜியின் கேள்வியில் அலட்சியமிருந்தது. அவரே மேற்கொண்டு ஒரு கேள்வி போட்டார். “நீ சிறந்த மாலுமிதானே?” என்று.

“ஆம்” என்றான் தமிழன்.

“கப்பல் போரில் திறனுள்ளவன்” என்றார் ஆங்கரே.

“தங்கள் தயவால் திறமை பெற்றிருக்கிறேன்.”

“அது கிடக்கட்டும். இந்த ஜலதீபம் கடலில் போய்க் கொண்டிருக்கையில் இரண்டு கப்பல்கள் எதிர்ப்படுகின்றன. என்ன செய்வாய்?”

“அவற்றை நோக்கிச் செல்வேன், ஒவ்வொன்றாகத் தாக்குவேன். பிறகு இரண்டையும் கைப்பற்றுவேன்.”

“ஏன் ஜல தீபத்தைத் திருப்பிக்கொண்டு தப்பினாலென்ன?”

“அது ஆண்மையல்ல. தவிர, ஓடினால் அந்தக் கப்பல்களும் விரட்டும் என்னை.”

கனோஜி ஆங்கரே தமது பெரும் உருவம் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். அந்த நகைப்பைச் சிறிதும் ரசிக்காத இதயசந்திரன் கேட்டான், “எதற்கு நகைப்பு?” என்று.

கனோஜி மீண்டும் நகைத்தார். “உன் நிலைக்குக் காரணம், பரிகார்ம் அனைத்தையும் நீயே கூறிவிட்டாய். இதயசந்திரா! கப்பல்களும் பெண்களைப் போலத்தான். அகப்படுமானால் நாம் எதிர்கொண்டு தாக்கிக் கைப்பற்ற வேண்டும். இல்லையேல் அவர்கள் நம்மை விரட்ட நாம் ஓடவேண்டும்” என்று விளக்கினார்.

இதயசந்திரன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு அவரை நோக்கி இகழ்ச்சி நகை புரிந்தான். “நல்ல உவமை!” என்றும் கூறினான் இகழ்ச்சி குரலிலும் ஒலிக்க.

கனோஜி அந்த இகழ்ச்சியைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் கூறினார். “இதயசந்திரா! என் லட்சியம் வேறு. உன் லட்சியம் வேறு. என் லட்சியம் மகாராஷ் டிரத்தின் உன்னதப் பதவி! யாரும் தொடமுடியாத அரசை மகாராஷ்டிரத்தில் நிறுவுதல். மற்ற விஷயங்கள் எனக்குச் சாதாரணம். பெண்கள், என் வாழ்க்கையில் சோறு மாதிரி. கிடைத்த போது நன்றாக உண்ண வேண்டியது. இல்லையேல் கவலைப்படாமல் இருப்பது. ஆண் பெண் உறவு மனித வாழ்க்கையில் ஒரு சிறு அங்கம். அந்தப் பணியில் சகல ஜீவராசிகளும் ஈடுபடுகின்றன. ஆனால் குறிக்கோள் உள்ளவன் பெண் உறவை லட்சியம் செய்வ தில்லை. வந்தால் அனுபவம், இல்லையேல் கவலையில்லை. பெண்ணையே நினைத்து நினைத்துப் பிராணனை விடுபவன் அவளுக்கும் திருப்தியளிப்பதில்லை; நாட்டுக்கும் உதவுவதில்லை…’ என்று சொல்லிக் கொண்டு போன ஆங்கரே சிறிது தாமதித்துவிட்டு, “இப்பொழுது என்னைக் கவனி. எனக்கு மூன்று மனைவியர் இருக் கின்றனர். மூன்றும் மூன்று விதம். அதில் ஒருத்தி எனக்கெதிராகச் சதி செய்பவள். நான் சற்றுப் பல்லிளிப்பவனாயிருந்தால் நானும் அவள் பக்கம் இழுபட்டிருப்பேன். ஆனால் என் வழி தனி வழி. நான் இங்கு பார்ப்பது மகாராஷ்டிரம் ஒன்றுதான். என் கண்ணில் படுவது அதன் எதிரிகள். அந்த எதிரிகள் யாராக இருந்தாலும் என்னால் அழிக்கப்படுவார்கள். நீயும் இந்த முறையில் வாழ்க்கையைச் சிந்தித்துப் பார்” என்று கூறி முடித்துவிட்டு, அவனை முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு வெளியே செல்ல முற்பட்டார்.

“சற்று இருங்கள்” என்று தடுத்தான் தமிழன்.

காலை எடுத்து வாயிற்படியை நோக்கித் திரும்பிய கனோஜி தலையை மட்டும் திருப்பினார். ‘நான் தூது சென்ற விஷயத்தைப்பற்றி ஏதும் கேட்கவில்லையே?” என்றான் தமிழன்.

“அந்த நர்ஸ் சொல்லிவிட்டாள்” என்று சொல்லி விட்டு வெளிநடந்தார் ஆங்கரே.

அவர் சென்ற சில விநாடிகள் கழித்து மிஸ் எமிலி அந்த அறைக்குள் நுழைந்தாள். அன்று அவள் பிரிட்டிஷ் ராணுவ நர்ஸுக்கான வெள்ளை உடையை அணிந்திருந்தாள். கௌன் முழங்காலுக்குமேல் அளவுக்குச் சற்று அதிகமாகவே ஏறி இருந்தது. கழுத்துப் பகுதியிலும் துணி அளவுக்கதிகமாகவே வெட்டியெடுக்கப்பட்டிருந்தது. அதற்குப் பதில் பெரிய காட்டு ரோஜா ஒன்றை அணிந்திருந்தாள். அந்தக் காட்டு ரோஜா மிகச் சிவப்பா யிருந்தது. ஆனால் அவள் அழகிய கன்னத்தின் சிவப்பு காட்டுரோஜாவின் சிவப்பைத் தோற்கடித்திருந்தது. இந்தக் கோலத்தில் மிஸ் எமிலி பஞ்சனையை நெருங்கி ஒய்யார நடை நடந்து வந்தாள். வந்து பஞ்சணை முகப்பில் உட்காரப் போனாள்.

“உம், உம். உட்காராதே” என்றான் இதயசந்திரன்.

“தலைக்கட்டைப் பரிசோதிக்க வேண்டும்” என்று கூறி அவனைப் பார்த்துச் சிரித்தாள் எமிலி.

“பரிசோதிக்க வேண்டாம்.” தமிழன் குரலில் பிடிவாதம் இருந்தது.

மிஸ் எமிலி மெல்லப் புன்முறுவல் கோட்டினாள். “ஏன் பரிசோதிக்க வேண்டாம்?” என்று வினவினாள் புன்முறுவலின் ஊடே. தனது இடது கையை அவன் தலையிலும் வைத்தாள்.

“எடு கையை” என்று சீறினான் தமிழன்.

“ஏன்?”

“தலையில் ஒன்றுமில்லை.”

”தெரிகிறது.”

“என்ன தெரிகிறது உனக்கு?”

“உங்கள் தலையில் ஏதுமில்லையென்பது. இல்லாவிட்டால் காயத்துக்குக் கட்டுப்போடவிடாமல் பிடிவாதம் செய்வீர்களா?”

இதயசந்திரன் கூறினான் சிறிது நேரங்கழித்து. “என் தலையை நீ தொட்டால் என் தலையே போய்விடும்” என்று.

“உங்கள் மனைவி அத்தனை கோபக்காரியா?” என்று வினவினாள் எமிலி.
“உஸ்! உஸ் மெதுவாகப் பேசு” என்று கெஞ்சினான். தமிழன்.

“ஏன்?”

“அவள் காதில் விழப்போகிறது?”

“உங்கள் மனைவியின் காதிலா?”

“இல்லை இல்லை. அடக் கஷ்டமே? அவள் என் மனைவியல்ல.”

மிஸ் எமிலியின் கண்கள் வியப்பால் மலர்ந்தன. “உண்மையாகவா?” என்ற கேள்வியும் அவள் சிவந்த இதழ்களிலிருந்து ரகசியமாக உதிர்ந்தது.

மிஸ் எமிலியின் ரகசியக் கேள்வியில் புதைந்து கிடந்த பொருளைப் புரிந்து கொண்ட இதயசந்திரன் நிலை பெரும் சங்கடத்திலிருந்தது. “உண்மைதான். ஆனால் நீ நினைக்கிற படியில்லை விஷயம்” என்று விளக்கினான் அவனும் மெல்ல.

“உங்கள் மனைவியல்ல. ஆனால்…” என்று மிஸ் எமிலி இழுத்தாள்.

“ஐயோ! அப்படியெல்லாம் எதுவுமில்லை” என்றான் இதயசந்திரன் கிலியுடன்.

மிஸ் எமிலி சற்றுச் சிந்தித்துவிட்டு, “உங்களை பம்பாயிலிருந்து நான் இங்கு கொணர்ந்தபோது என்ன நடந்தது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டாள்.

இதயசந்திரன் கண்களில் ஆவல் உதயமாயிற்று. ”பம்பாயிலிருந்து எப்படி இங்கு வந்தேன்?”

“அதைப் பிறகு சொல்கிறேன். உங்களை நான் கப்பலுக்குக் கொண்டு வரவில்லை. கொலாபாவுக்குத் தான் கொண்டு வந்தேன். அங்கு இருந்தாள் இந்தப் பெண் மஞ்சு. உங்களைப் பார்த்ததும் பதைபதைத்தாள். பிறகு உங்களை ஜல தீபத்திற்குக் கொண்டு வரச்சொல்லி எனக்கு உத்தரவிட்டாள். முதலில் நான் மறுத்தேன். கப்பலின் ஆட்டத்தைவிடக் கொலாபா அரண்மனையின் அறை உங்கள் நிலைக்கு நல்லதென்று கூறினேன். ‘உன்னைவிட எனக்குத் தெரியும்’ என்று கூறி உங்களை ஜல தீபத்திற்குள் கொண்டு வந்து தன் அறையில் வைத்துக் கொண்டாள். நான் உங்கள் தலைக்குக் கட்டுப்போட்ட நேரம் போக பாக்கி நேரம் உங்கள் தலை அவள் மடியில்தானிருந்தது. அதாவது நான் பார்த்த சமயங்களைச் சொல்கிறேன். பார்க்காத சமயங்களில்…” என்ற எமிலி மேற்கொண்டு வாசகத்தைத் தொடராமல் பேச்சை அரைகுறையாகவே விட்டாள்.

அரைகுறையாக அவள் நிறுத்தினாலும் மீதியுள்ளதை அவன் பூர்த்தி செய்து கொண்டான். அத்தனை தூரம் தன்னைப் பாதுகாத்த மஞ்சு, தான் மிஸ் எமிலியின் பெயரை உச்சரித்ததால் மடியிலிருந்த தலையைத் தலையணையில் எறிந்துவிட்டுச் சென்றதையும் உணர்ந்து கொண்டான். எப்படி அவளை மீண்டும் சமாதானப் படுத்துவது என்று நினைத்துப் பார்த்து வழி தெரியாமல் சிந்தித்தான். ஏதும் புரியாமல், “மிஸ் எமிலி! நீ சென்று மஞ்சுவை அனுப்பு’ என்று கூறினான் அவளிடம்.
“அவசியம் அவளைத்தான் அனுப்ப வேண்டுமா?”

“ஆம்.”

“தலைக்குக் கட்டு?”

“இப்பொழுது வேண்டாம்.”

“ஏன்?”

“நான் வேறு கட்டுப் போட்டுக் கொள்ளத் தீர்மானித்து விட்டேன்.”

“வேறு எங்கும் காயமில்லை?”

“காயமில்லாத இடத்தில் கட்டுப் போட்டுக்கொள்ளப் போகிறேன்.”

“எங்கு?”

“காலுக்கு.”

“காலுக்கா?”

“ஆம். கால்கட்டுப் போட்டுக் கொள்ளப் போகிறேன். நீ போய்ச் சீக்கிரம் மஞ்சுவை அனுப்பு’ என்று கூறிய இதயசந்திரன் பஞ்சணையில் படுத்துக் கொண்டான்.

சிறிது நேரங் கழித்து மஞ்சு வந்தாள் உள்ளே. கோபச்சாயை அவள் முகத்தில் விரிந்து கிடந்தது. “எதற்குக் கூப்பிட்டீர்கள்?” என்று வினவினாள்.

“திருமணம் எனக்கு” என்றான் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து.

“சரி போகிறேன்” என்று திரும்பினாள் மஞ்சு.

“எதற்குப் போகிறாய்?”

“மிஸ் எமிலியை அனுப்ப.”

“தேவையில்லை.”

“யாரை அனுப்ப?”

“கனோஜியை” என்ற இதயசந்திரன் சொற்கள் அவன் வாயிலிருந்து அழுத்தந்திருத்தமாக வந்தன.

Previous articleJala Deepam Part 3 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here