Home Historical Novel Jala Deepam Part 3 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

67
0
Jala Deepam part 3 Ch13 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch13 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 13 போர்ப் புயல்

Jala Deepam Part 3 Ch13 | Jala Deepam | TamilNovel.in

மஞ்சுவின் அழகிய பெருவிழிகள் அவனை வியப் புடன் பார்த்தன. அவள் செம்பவள உதடுகளும் வியப்பின் காரணமாக லேசாக மெல்லத் திறந்து மூடின. அந்தக் கண்களும் உதடுகளும் இதயசந்திரனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாலும் இதயத்தின் சீற்றம் மட்டும், அடங்காமலிருக்கவே, “போய் அனுப்பு கனோஜியை” என்று இரண்டாம் முறையும் இரைந்தான் அவன்.

மஞ்சுவின் முகத்தில் வியப்பு, சந்தேகம் ஆகிய இரண்டின் சாயையும் கலந்து உலாவின. “எதற்குத் தந்தை?” என்று வினவினாள் அவள் குரலிலும் சிறிது சந்தேகத்தைக் காட்டி.

இதயசந்திரன் பார்வை முரட்டுப் பார்வையா யிருந்தது. “அதை நீ கேட்கத் தேவையில்லை’ என்ற அவன் பதிலிலும் முரட்டுத்தனம் சொட்டியது.

மஞ்சு நன்றாகத் திரும்பி நின்று கொண்டு அவனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தாள். “உங்களுக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையே?” என்று வினவவும் செய்தாள்.

அவள் என்ன கேட்கிறாளென்பது இதயசந்திரனுக்கும் புரிந்ததால், “எனக்குப் பைத்தியமில்லை” என்று தெளிவு படுத்தினான்.

“சில பைத்தியங்கள் இப்படியும் சொல்வதுண்டு.” சற்று சினத்துடன் பேசினாள் மஞ்சு.

“இன்னும் சிறிது நேரம் நீ இங்கு இப்படிப் பேசிக் கொண்டே நின்றால் எனக்குப் பைத்தியம் நிச்சயமாகவே பிடித்துவிடும்.”

”ஓகோ!”

“ஆமாம்.

அப்புறம் என் நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பாளியல்ல.”

“என்ன செய்துவிடுவீர்கள்?”

“பைத்தியம் பிடித்த நிலையில் என்னென்ன செய்வேனோ எனக்கென்ன தெரியும்?”

மஞ்சு அவனை உற்று நோக்கினாள், அவள் இதழ். களில் இகழ்ச்சிக்குறி பெரிதும் மண்டியது. “ஆம் உண்மை தான்” என்றாள் சிறிது நேரம் கழித்து.

“என்ன உண்மையைத் தெரிந்து கொண்டு விட்டாய்?” என்று கேட்டான் இதயசந்திரன் கோபம் மங்காத குரலில்.

“உங்களுக்குப் பைத்தியம் தான் என்பது” என்றாள் மஞ்சு.

“புரிந்து கொண்டது பற்றி சந்தோஷம்.”

”உங்களுக்கு இருப்பது ஒரே பைத்தியம் தான்.”

“அது என்னவோ?”

”பெண் பித்து” என்று பதில் கூறிய மஞ்சு அதிக வேகத்துடன் நடந்து அறைக் கதவைத் தடாலென்று சாத்திக் கொண்டு சென்றாள்.

இதயசந்திரன் பஞ்சணையில் உட்கார்ந்த நிலையில் ஜல தீபத்தின் அந்த அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த அறைக் கோடியிலிருந்தன இரு மரத்தூண்கள். அந்தத் தூண்களிலொன்றில் ஆணியில் மாட்டியிருந்த ஒரு பிரிட்டிஷ் அரிக்கேன் விளக்கு, இன்னொரு மூலையில் ஆணியில் மாட்டிக் கிடந்த மஞ்சுவின் மேலாடை, இன்னொரு மூலையில் மூடப்பட்டுக் கிடந்த தளபதியின் பெரிய மரப்பெட்டி, இவையனைத்தும் எத்தனையோ கதைகளைக் கூறின. எத்தனையோ நினைப்புகளைக் கிளப்பி விட்டன. அவன் உட்கார்ந் திருந்த அந்தப் பஞ்சணைகூட எத்தனை விதமான, எத்தனை வித உணர்ச்சிகளுள்ள சம்பவங்களை எடுத்துக் கூறியது!

அதே பஞ்சணையில் தான் காதரைனும் கிடந்தாள். மஞ்சுவும் கிடந்தாள்! ஆனால் இருவரிடமும் எத்தனை மாறுபட்ட அமைப்பு! ‘நல்லவேளை! இதே பஞ்சணையில் மிஸ் எமிலி கிடக்கவில்லையே, தப்பினேன்’ என்று முந்திய சம்பவங்களுடன் அடுத்தபடி ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியை நினைத்துப் பெருமூச்சு விட்டான் தமிழன். ஆனால் இனிமேல், தான் மனத்தைத் திடப்படுத்திக் கட்டுப் படுத்திக் கொள்ளாவிட்டால் தன் வாழ்வே பயனற்றதாகி விடுமென்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அவன்.

அத்தனை நினைப்பிலும் மஞ்சுவின் நினைப்பைப் போல் தனக்கு இன்பம் தருவது வேறு ஏதுமில்லை யென்பதை உணர்ந்தான் இதயசந்திரன். அவளும் தானும் வாசிஷ்டி நதிக்கரையில் அக்கம்பக்கத்தில் படுத்திருந்த நாள், அதே ஜல தீபத்தின் மரத்தளத்தில் அவள் கிடந்த நாள், பின்பு அதே பஞ்சணையில் அவள் அடியோடு தன்னை அர்ப்பணித்துவிட்ட நாள், இவையனைத்தும் அவன் மனத்தில் வலம் வரவே, மற்றப் பெண்கள் தன் வாழ்வில் மோதியதற்கும் மஞ்சு தனது வாழ்வில் தலையிட்டதற்கும், சூறாவளிக்கும் தென்றலுக்குமிருந்த மிகுந்த வேறுபாடிருந்ததை அவன் சந்தேகமறப் புரிந்து கொண்டான். மஞ்சுவின் உடல், ஆத்மா இரண்டும் தன். உடல் ஆத்மாவுடன் ஒன்றிவிட்டதைப் புரிந்துகொண்டதால் பஞ்சணையிலிருந்து எழுந்து அறையின் மரத்தடியில் நின்றும் கொண்டான்.

நின்றவன் உணர்ந்தான் தன் கால்கள் திடப்பட்டு விட்டதை. பழைய மயக்க நிலை அகன்றுவிட்டதையும் புரிந்து கொண்டான். இருமுறை அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து தனக்குப் பலவீனம் ஏதுமில்லையென்பதையும் அறிந்து கொண்டதால் மகிழ்ச்சிப் பெருமூச்சும் விட்டான். பலவீனம் அகன்றதற்கு மஞ்சுவின் நினைப்புத்தான் காரணம் என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டு மகிழ்ச்சிப் புன்முறுவலொன்றையும் இதழ்களில் படரவிட்டுக் கொண்டான். அந்தச் சமயத்தில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த கனோஜி அவனைப் பார்த்து, ‘பலே, பேஷ்!” என்று சிலாகித்தார்.

இதயசந்திரன், அவர் உட்கார ஓர் ஆசனத்தை எடுத்துப் போட்டான். “தயவு செய்து உட்கார வேண்டும்” என்று வணக்கத்துடன் கூறினான். அவன் பேச்சும் வணக்கமும் கனோஜிக்கே சிறிது குழப்பமாயிருந்தது. “சரி சரி. அதுவும் சரிதான்” என்று கூறிக்கொண்டு உட்கார்ந்து கால்களைப் பரப்பிக்கொண்டு தொடைகளில் தமது பெரும் கைகளை அழுத்திக் கொண்டார்.

அவர் சகஜ தோரணையைக் கவனித்தான் இதய சந்திரன். ‘சரி, சரி; அதுவும் சரிதான்’ என்று அவர் சொன்னதில் ஏதோ பொருளிருப்பதையும் புரிந்து கொண்டான். அது என்னவென்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளக் கேட்டான், ‘முதலில் பலே பேஷ் என்று பாராட்டினீர்கள். பிறகு அதுவும் சரிதான் என்கிறீர்கள். என்ன இதெல்லாம்?” என்று.

கனோஜி சொன்னார்: “இதயசந்திரா! நோயாளி போல் படுத்திருப்பவனைக் கண்டால் எனக்குப் பிடிக்காது. ஆகவே, நீ அச்சத்தை உதறி எழுந்து உலாவியதைக் கண்டதும் நீ ஆண்மகன் தான் என்பதை அறிந்து பாராட்டினேன். நீ எனக்கு ஆசனம் போட்டு உபசரித் ததும் முழுக்க முழுக்க நீ ஆண்மகன் தான் என்ற உறுதி ஏற்பட்டு, நீ எனக்கு மரியாதை செய்தது நியாயம் என்று உற்சாகமடைந்தேன்…” இவ்வளவுதான் கனோஜி சொன்னார். ஆனால் அவர் கண்களில் சொட்டிய விஷமம் இன்னும் ஏதேதோ சொல்லியது.

அவர் பேச்சு இதயசந்திரனுக்கு வெறுப்பை அளித்தது. “என்னை ஆண்மகனென்று தீர்மானித்து விட்டீர்கள்?” என்றான் வெறுப்புடன்.

“ஆம்.’ கனோஜி குரல் பழையபடி விஷமமாகவே இருந்தது.

“என் உபசரணையையும் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்?”

“ஆம்.”

“எதற்காக உபசரணை செய்தேன் என்று கேட்கவில்லையே?”

“அவசியமில்லை.”

“ஏன் அவசியமில்லை?”

பதிலுக்குப் பெரிய வெடியை எடுத்து வீசினார் ஸார்கேல். “மாமனாருக்கு உபசாரம் செய்வது கலியுக தர்மம்” என்று கூறிய ஸார்கேல் அந்த அறை இடிந்து விழும்படியாக நகைத்தார்.

“ஸார்கேல்” என்று எரிச்சலுடன் கூவினான் இதய சந்திரன்.

ஸார்கேல் தமது அசுரச் சிரிப்பைச் சிறிது தளர்த்தி, “இதயசந்திரா! மஞ்சுவைக் கல்யாணம் செய்து கொள்ள அனுமதி கேட்கிறாய்…” என்று துவங்கினார் சற்று ரகசியமாக.

ஸார்கேலுக்குச் சோதிடம் தெரியுமோ என்று நினைத்ததால் அவரைப் பிரமிப்புடன் நோக்கினான் இதயசந்திரன். அவன் பிரமிப்பைக் கவனித்த ஸார்கேல், “இதயசந்திரா! இது பெரும் விந்தையல்ல. சிறு ஊகம். நீயும் மஞ்சுவும் சதிபதிகளாகிவிட்டது எனக்குத் தெரியும்.

இடையில் மறுபடியும் ஒரு பெண் வந்ததால் சிறு சபலம் ஏற்படுகிறது உனக்கு! அதிலிருந்து தப்ப மஞ்சுவை மணக்கப் பார்க்கிறாய்” என்று கூறியதன்றி, “அப்படித். தானே விஷயம்?” என்றும் வினவினார்.

பிரமை தட்டிய விழிகளை இதயசந்திரன் ஸார்கேல் மீது நிலைக்கவிட்டான். ”ஆம் ஸார்கேல்! தகுந்த வயதில் ஒரு கால்கட்டுப் போட்டுவிட்டால் ஆண்மகன் நெறியாயிருப்பான் என்று எங்கள் ஊரில் சொல்கிறார்கள்…” என்று சொல்லிச் சிறிது தயங்கினான்.

ஸார்கேலின் பதில் தடங்கலின்றி வந்தது. “இதய சந்திரா! கட்டு காலில் கூடாது, மனத்தில் இருக்க வேண்டும். ஒன்று ஒரே பெண்ணிடத்தில் மன உறுதியுடனிரு அல்லது இரண்டு மூன்று பேரைத் திருமணம் செய்து கொள். வீணாக இந்தச் சிறு விஷயத்தில் மனத்தை அலையவிடாதே” என்றார் ஸார்கேல்.

இதயசந்திரன் சற்றுச் சிந்தித்துவிட்டுச் சொன்னான், “ஸார்கேல்! பிரமைகள் மனிதனுக்குப் பல முறை ஏற்படலாம். ஆனால் காதல் ஒரு முறைதான் ஏற்படுகிறது” என்று.

”பிரமை வேறு, காதல் வேறு அல்ல” என்றார் ஸார்கேல்.

“இரண்டுக்கும் வித்தியாசமிருக்கிறது.”

“அறிவு நூல்களில் இருக்கலாம். அனுபவத்துக்கு ஏற்றதல்ல. பெண்ணைக் கண்டால் மனிதனுக்குச் சபலம். எத்தனை பெண்களை அனுபவித்தாலும் அந்தச் சபலம் குறைவதில்லை.”

“இது தங்கள் அனுபவமாயிருக்கலாம். ஆன்றோர் அப்படி நினைக்கவில்லை.”

கனோஜி இடியென நகைத்தார். ”இதயசந்திரா! நமது ஆன்றோர்கள் சமயத்துக்கு நமக்கு உபயோகப்படுகிறார்கள். ஆன்றோரைச் சுட்டிக் காட்டுபவன் பரம அயோக்கியன். தன் குற்றங்களை மறைக்க ஆன்றேர்ரை இழுக்கிறான். தன் பலவீனத்துக்குச் சப்பைக் கட்டு கட்ட ஆன்றோர்களை வாதத்தில் புகுத்துகிறான்” என்றார்.

இதயசந்திரன் அவரை மிகுந்த சீற்றத்துடன் நோக்கி, “அப்படியானால் நான் அயோக்கியனா!” என்று கேட்டான், கோபக் கனல் குரலில் கொழுந்துவிட.

கனோஜி ஆசனத்தை விட்டு எழுந்தார். “சந்தேக மென்ன? இப்பொழுதுகூட ஒரு எமிலியை இழுத்து வந்திருக்கிறாய்?” என்று கூறினார் அவனை நோக்கி.

“அபாண்டம். நான் இழுத்து வரவில்லை அவளை” என்று மன்றாடினான் இதயசந்திரன். அவன் முகத்தில் சஞ்சலம் படர்ந்தது.

கனோஜி பரிதாபத்துடன் அவனை நோக்கினார். பிறகு அவன் பஞ்சணைக்குச் சென்று உட்கார்ந்தார். அவர் பளுவைத் தாங்காமல் பஞ்சணையின் கால்கள் கரகரவென்று சத்தம் போட்டன. ஆங்கரே அவனை நோக்கிக் கூறினார்: “இதயசந்திரா! பம்பாயில் நடந்தது அனைத்தையும் கவர்னர் ஏஸ்லாபி மிஸ் எமிலியிடம் கூறியனுப்பியிருக்கிறார். உன் தலையில் அவர் பிரம்பு கொண்டு அடித்ததற்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்” என்று .

இதயசந்திரன் நினைப்பில் அந்தச் சிறை சம்பவம் நினைவுக்கு வந்தது. அந்தப் பிரம்படி பட்டுப் பழைய காயத்தின் கட்டுத் திறந்துரத் தம் கொட்டிய பிறகு, தனக்கு எதுவும் அதிகமாக நினைப்பில்லையென்பதும், மிஸ் எமிலி கட்டுப் போட்டு ஏதோ மருந்து கொடுத்ததும் தூங்கி விட்டதும் தெரிந்தது அவனுக்கு. அப்புறம், தான் ஜல தீபத் திற்கு வந்ததைப் பற்றி மிஸ் எமிலி சொன்ன இரண்டொரு வார்த்தைகளைத் தவிர வேறெதுவும் தெரியாததால் கேட்டான், “மிஸ் எமிலி என்ன சொன்னாள்” என்று.

”மிஸ்டர் ப்ரௌனை நீ அடித்ததால் பெரும் விவாத மும் சர்ச்சையும் பம்பாய் கௌன்ஸிலில் ஏற்படுமென்று அஞ்சினார் ஏஸ்லாபி. கௌன்ஸிலில் இஷ்டப்பட்டால் உன்னைத் தூக்கிலும் போட முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்ததால் அவர்கள றியாமல் உன்னைத் தப்புவிக்க உன்னை முதலில் சிறையில் தள்ளினார். பிறகு தலையிலடித்துக் காயத்தை மீண்டும் ரத்த விளாறியாக அடித்தார். அதைச் சாக்கு வைத்து மிஸ் எமிலியிடம் அழைத்துச் சென்றார் உன்னை. உனக்கு மருந்தில் மயக்கம் சேர்க்க உத்தரவிட்டு இரவோடு இரவாக வர்த்தகர் வண்டியொன்றில் உன்னையும் மிஸ் எமிலி யையும் அனுப்பிவிட்டார் இங்கு. மறுநாள் மிஸ் எமிலி உன்னை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும் வதந்தி பரப்பப்பட்டது…” என்று கூறிய கனோஜி ஆங்கரே, மெல்ல நகைத்தார்.

இதயசந்திரன் கல்லாய்ச் சமைந்து நின்றான். “இப்படி வதந்தியிருப்பது மஞ்சுவுக்குத் தெரியுமா?” என்றான்.

“பாவம், தெரியாது” என்று அனுதாபப் பெருமூச்சு விட்டார் ஆங்கரே.

“இதில் அனுதாபப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டான் இதயசந்திரன் சற்று சினம் துளிர்க்க.

“என் பெண் கல்மிஷமற்றவள். கண்ட பெண்களை இழுத்துக்கொண்டு ஓடும் ஓர் அயோக்கியனிடம் மனத்தைப் பறிகொடுத்திருக்கிறாள்…” என்றார் கனோஜி.

இதயசந்திரன் கெஞ்சினான், ”ஸார்கேல், இது அழகல்ல” என்று.

“அழகென்று யார் சொன்னது? கண்ட பெண்களை இழுத்துக்கொண்டு ஓடுவது அழகா?” என்று பொய்க் கோபம் காட்டினார் ஸார்கேல்.

“ஸார்கேல்! ஸார்கேல்!” என்று கெஞ்சினான் பரிதாபத்துடன் இதயசந்திரன்.

”என்னைக் கெஞ்சிப் பயனில்லை. என் முடிவை நான் மாற்றிக்கொள்ள முடியாது” என்றார் ஸார்கேல்.

”என்ன முடிவு?”

“மஞ்சுவை உனக்கு மணமுடித்துத் தர முடியாது.’’
“ஏன்?”

“காரணங்கள் பல இருக்கின்றன.”

“காரணங்களெல்லாம் பொய்யென்பது உங்களுக்கே தெரியும்.”

“எனக்கேதும் தெரியாது.”

“ஒன்றுமறியாத குழந்தை நீங்கள். என்னைக் கெடுத்த தெல்லாம் நீங்கள் தான்” என்று சீறிய இதயசந்திரன், “நீங்கள் தான் என்னை மஞ்சுவிடம் ஜல தீபத்தில் பணிபுரிய நியமித்தீர்கள். நீங்கள் விஜயதுர்க்கத்தில் மஞ்சுவை எனக்கு மணமுடித்துத் தர மறுத்தீர்கள். நீங்கள் தான் என்னைக் காதரைனோடு தனித்து ஜல தீபத்தில் அனுப்பினீர்கள்” என்று குற்றமும் சாட்டினான் கடைசியாக.

கனோஜியின் இதழ்களில் விஷமப் புன்னகை படர்ந்தது. ”நான்தான் மிஸ் எமிலியிடம் உன்னைத் தனித்து விட்டேனா?” என்று வினவிய கனோஜி, லேசாக நகைக்கவும் செய்தார்.

தனது மனச் சபலத்துக்குக் கனோஜி எந்த விதத்திலும் பொறுப்பாளியல்ல என்பதைப் புரிந்து கொண்டான் இதயசந்திரன். ஆனால், மஞ்சுவை மணம் முடித்துத் தராததற்கு இவையல்ல காரணங்கள் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, உண்மைக் காரணத்தை அறியக் கேட்டான், “ஸார்கேல்! ஏன் எனக்கு மஞ்சுவை அளிக்க மறுக்கிறீர்கள்?” என்று.

கனோஜியின் முகத்தில் திடீரெனப் பெரு மாறுதல் படர்ந்தது. ஆழ்ந்த சிந்தனை புத்தியில் உலாவுவதும் முகத்தில் பளிச்சிட்டது. சிறிது நேரங்கழித்து அவர் எழுந்திருந்து இதயசந்திரனருகில் வந்து அவன் தோள்மேல் ஒரு கையை வைத்தார். “தமிழா! மஞ்சுவை மணமுடித்துத்தர நான் மறுத்தாலும் அவள் மசியமாட்டாள். அவள் உனக்குத்தான். ஆனால் உடனடியாக அவளை மணமுடிப்பதில் சில கஷ்டங்களிருக்கின்றன. அவளுக்கென்று ஒரு தகப்பன் ஏற்பட்டிருக்கிறான். அவன் தகப்பனல்ல வென்பது எனக்குத் தெரியும். ஆனால் ருசுக்கள் அவனிடம் அதிகமிருக்கின்றன. அந்த ருசுக்களை அளித்தவர்கள் ஸித்திகள். அவளுடைய உண்மைத் தந்தையோ, தந்தையைப் பற்றிய தகவலோ அவர்களிடம் சிக்கிக் கொண்டிருப்பது தெளிவு. அவற்றைக் கொண்டு இந்தப் போலியை இங்கு அனுப்பியிருக்கிறார்கள், என்மீது வேவு பார்க்க. மஞ்சுவின் நிலை இப்பொழுது பரிதாபமானது. தந்தை என்ற உரிமையால் அவளை அழைத்துச் செல்ல இந்தப் போலி அடிக்கடி என்னிடம் உத்தரவு கேட்கிறான். நான் மறுத்துவிட்டேன். இருப்பினும் அந்த உரிமையை வலியுறுத்தி. அவன் ஸித்திகளுக்கு எழுதலாம். ஸித்திகள் அதை ஒரு காரணமாகக் கொண்டு என்னிடம் சண்டைக்கு வர ஏற்பாடு செய்யலாம். ஸித்திகள் நிலை இப்படி யென்றால் பம்பாயிலிருந்து ஒரு தூதுவனை அனுப்புவதாக ஏஸ்லாபி மிஸ் எமிலியிடம் சொல்லியனுப்பியிருக்கிறார். அந்தத் தூதுவன் சொல்வதை ஒப்புக்கொள்ளும் படியும் வேண்டிக் கொண்டிருக்கிறார். அவன் என்ன சொல்லப் போகிறானோ எனக்குத் தெரியாது. தவிர, மன்னர் ஷாஹுவும் போர் முரசு கொட்டி விட்டார்” என்று கூறினார்.

இதயசந்திரன் பிரமிப்பு உச்ச நிலையை அடைந்தது. “என்ன, மன்னர் போர் முரசு கொட்டிவிட்டாரா?” என்று வினவினான் அதிர்ச்சியுடன்.

“ஆம். பேஷ்வா பிங்களே புறப்பட்டுவிட்டார் பெரும் படையுடன்” என்று கூறினார் ஆங்கரே.

”அப்படியானால் போர் மூண்டுவிட்டது” என்றான் இதயசந்திரன்.

“ஆம். இந்த நிலையில் கடலில் என் மரக்கலங்களை நடத்த இரு தளபதிகளாவது தேவை. ஒருவன் என் புதல்வனிருக்கிறான், இன்னொரு தலைவன் இல்லை. தலைவி மஞ்சுதான் இருக்கிறாள். ஆகையால் திருமணம் இப்பொழுது சாத்தியமில்லை” என்றார் கனோஜி ஆங்கரே.

மகாராஷ்டிரத்தைப் போர் சூழ்ந்த நிலையில் திருமணம் சாத்தியமில்லையென்பது இதயசந்திரனுக்கும் புரிந்ததால் அவன் பதிலேதும் சொல்லவில்லை. தவிர, அன்றைக்குப் பிறகு திருமணப் பேச்சை எடுக்க அவனுக்கு அவகாசமும் இல்லை . போர் ஏற்பாடுகள் துரிதமாகத் தரையிலும் கடலிலும் நடந்தன. குலாபிக்குத் திருமஞ்சனமும் அர்ச்சனைகளும் நடந்தன. மூன்றாவது நாள் பெரிய அர்ச்சனையொன்று நடத்த உத்தரவு கேட்டார் கனோஜி, அம்மாளிடம். ‘போர்க்குப் போ!’ என்று திருவுள ஓலை கிடைத்தது. அப்பொழுது மகாராஷ்டிரத்தில் புயலில்லா காலம். ஆகவே போர்ப் புயல் மூண்டது.

Previous articleJala Deepam Part 3 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here