Home Historical Novel Jala Deepam Part 3 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

75
0
Jala Deepam part 3 Ch14 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch14 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 14 மணவரைப் பாறை

Jala Deepam Part 3 Ch14 | Jala Deepam | TamilNovel.in

ஜல தீபத்தின் தளபதியின் அறையில் பேஷ்வா பிங்களே பெரும் படையுடன் நம்மை நசுக்கப் புறப்பட்டு விட்டதாக கனோஜி ஆங்கரே அறிவித்த நாளிலிருந்து மூன்றாவது நாள் குலாபிக்கு மகாபிஷேகம் நடந்தது. அது நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே கொலாபா தீவு அமர்க்களப்படுவதை ஜலதீபத்தின் தளத்திலிருந்தே கவனித்தான் இதயசந்திரன். கொலாபாவின் தோர்லாவாடாவின் ஐந்தாவது உப்பரிகையின் பெரு. விளக்குகள் இரவு முழுவதும் எரிந்ததையும், பல பந்தங்களும் பிரிட்டிஷ் அரிக்கன் விளக்குகளும் தீவு முழுவதும் நடமாடியதையும் அவன் கண்டதன்றி காலை நேரங்களில் சதா குலாபி கோயிலில் மணி அடிக்கப்படும் அரவத்தைக் கவனித்தான்.

பகலிலும் சரி, இரவிலும் சரி, சதா படகுகள் பல கரைக்கும் ஜலதீபத்துக்கும், அதனருகே நின்றிருந்த மற்றுமிரண்டொரு மரக்கலங்களுக்குமாகப் போய் வந்து கொண்டிருந்ததும் புலனாயிற்று தமிழன் பார்வைக்கு. அத்துடன் மெல்லத் தனது முழு பலமும் இரண்டு நாட்களில் திரும்பிவிட்டதும் தமிழக வீரனுக்கு மிகுந்த திருப்தி அளித்தது. கரையிலும் கடலிலும் துரித நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது, தான் மட்டும் தலைக் கட்டுடன் சிறகொடிந்த பட்சிபோல் ஜல தீபத்தில் இருந்து கொண்டிருந்தது பெரும் வேதனையாக முதலில் இருந்தாலும், மிஸ் எமிலி இரண்டாவது நாள் அவன் தலைக்கட்டைப் பிரித்துப் பார்த்து காயம் பூராவாக ஆறிவிட்டதென்றும், இனி கட்டு வேண்டியதில்லை யென்றும் கூறியதும் மகிழ்ச்சியால் நிதானத்தை அறவே இழந்தான் இதயசந்திரன்.

தளபதியின் அறையில் தான் அவள் அவன் கட்டை அவிழ்த்துப் பரிசோதித்தாள். அந்தப் பழைய பஞ்சணை யில் உட்கார வைத்துத்தான் கட்டை அவிழ்த்தாள். கட்டை அவிழ்த்தவள் உடனடியாகக் காயத்தைப் பார்க்காமல் நீண்ட நேரம் அவன் முரட்டுக் குழல்களில் கையை விட்டுத் துழாவிக் கொண்டிருந்தாள். அப்படி அத்தனை நேரம் அவள் பரிசோதித்ததைக் கவனித்த இதயசந்திரன், “மிஸ் ‘எமிலி! இன்னும் காயம் ஆறவில்லையா? மீண்டும் கட்டுப்போடப் போகிறாயா?” என்று வினவினான் குழந்தையைப் போல்.

குழலைப் பிரித்துக் கொண்டிருந்த எமிலி மெள்ள அவன் தலையை இழுத்துத் தன் மார்பில் சாத்திக் கொண்டாள். “என்ன குழந்தை மாதிரி கேள்விகள் கேட்கிறீர்கள்? காயத்தை நன்றாகப் பார்த்துத்தானே சொல்லவேண்டும்” என்று கூறி மெல்ல நகைத்தாள்.

மார்பில் முகம் புதைந்து கிடந்ததால் உணர்ச்சிகளை மெல்ல மெல்லப் பறக்கவிட்டுக் கொண்டிருந்த இதய சந்திரன், “எத்தனை நேரம் காயத்தைப் பார்ப்பாய் எமிலி? அதில் ஆராய்ச்சிக்கு என்ன இருக்கிறது?” என்று வினவினான். மெல்லத் தலையைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ளவும் செய்தான்.

“உம். சும்மா இருங்கள். இப்பொழுதுதான் காயத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் பஞ்சை எடுக்கப் போகிறேன்” என்றாள் எமிலி.

‘காயத்தில் ஒட்டியிருக்கும் பஞ்சை எடுக்கத் தலையை அத்தனை தூரம் மார்பில் ஒட்டுவானேன்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்ட இதயசந்திரன், தான் ஏன் அந்த நிலையை அனுமதிக்க வேண்டும் என்று மற்றொரு கேள்வியையும் மனத்துக்குள் எழுப்பிக் கொண்டான்.

அவன் அந்த நிலையிலிருந்து விலகுவதை எமிலி யொன்றும் அதிகமாகத் தடை செய்துவிடவில்லை. தலையையும் லேசாகத்தான் கையால் அழுத்தியிருந்தாள். இஷ்டப்பட்டால் தமிழன் திமிறி எழுந்து சென்றிருக்கலாம். அப்படிச் செல்லத் திராணியில்லையோ, அல்லது பிணைத்த அழகுகளில் அந்த இணைப்பு, அவள் மூச்சு விட்டபோது பக்கங்களில் அவை கன்னங்களைத் தடவித் தடவி நீங்கிய இதம், இவை அவனுக்குத் தேவையாகத் தானிருந்ததோ, அவனுக்கே தெரியவில்லை. ஆகவே அர்த்தமில்லாமல் அவன் கேள்விகளைக் கேட்டான். அவளும் அர்த்தமில்லாமல் பதில்களைச் சொன்னாள்.

“மிஸ் எமிலி…!’ என்று மெல்லக் கூப்பிட்டான் தமிழன்.
”என்ன வீரரே?” என்றாள் அவளும் அவன் தலைமீது குனிந்து காயத்தைப் பார்த்த வண்ணம். அவள் அப்படி நன்றாகக் குனிந்ததால் அவன் முகத்தில் அழகுகளின் அழுத்தம் அதிகமாயிற்று. தலையில் அவள் விட்ட மூச்சு தலைக்குழல்களை லேசாக அலைக்கழித்தது.

”பஞ்சு, காயத்தில் நன்றாக ஒட்டிக்கொண்டிருக்கிறதா எமிலி?” இது அவன் அடுத்த கேள்வி.

அந்தக் கேள்வியில் ‘மிஸ்’ உதிர்ந்து விட்டதைக் கவனித்தாள் எமிலி. “ஆம், நன்றாக ஒட்டிக் கொண்டிருக்கிறது” என்றாள்.

“சிறிது நீர் தெளித்து வலிக்காமல் எடுக்க முடியாதா?”

”எடுக்கலாம். ஆனால் சிறிது காயமிருந்தாலும் நீர்பட்டால் மீண்டும் அது சீறும்.”

”அப்படியானால் என்ன செய்யப் போகிறாய்?”

“ஏதாவது செய்துதானே ஆகவேண்டும்?”.

“ஆம்.”

“செய்தால் சும்மா இருப்பீர்களா?”

“அப்படியென்றால்?” “கத்தாதிருப்பீர்களா?”

“நான் என்ன குழந்தையா?”

“சில வேளைகளில் குழந்தை மாதிரி இருக்கிறீர்கள், சில வேளைகளில் பெரிய ஆண்மகனாகக் காட்சியளிக்கிறீர்கள். உங்களைக் குழந்தையென்றும் கண்டிக்க முடியாது, வாலிபரென்றும் விலக்க முடியாது. பெரிய தர்மசங்கடம் நீங்கள்.”

இதற்கு மேல் அவளும் பேசவில்லை, அவனும் பேச வில்லை, தர்மசங்கடம் அதிகமாகிக் கொண்டிருந்தது. காயத்தை அவள் நீண்ட நேரம் பரிசோதித்தாள். பஞ்சை வெகு லாவகமாக எடுத்தாள். பிறகு அறைக்கு வெளியே சென்று பஞ்சை எறிந்துவிட்டு வந்தாள். அந்த இடைக்: காலத்தில் முழுச்சுரணையையும் வரவழைத்துக்கொண்ட இதயசந்திரன் அறையில் எழுந்து நின்றான். பிறகு வெளியே செல்ல முயன்றான். வழியில் எமிலி நின்றிருந்தாள், நின்ற இடத்தைவிட்டு அசைய மறுத்தாள்.

“எமிலி, வழி விடு!” என்று கெஞ்சினான் தமிழன். “நான் குறுக்கே நிற்கிறேனா?” என்று கேட்டாள் அவள் கோபத்துடன்.

“ஆம்.”

“உங்களுக்கும் உங்கள் காதலிக்குமா?”

“சேச்சே. இரையாதே. மஞ்சுவின் காதில் விழப்போகிறது.”

“விழுந்தால் என்ன செய்வாள்?”

“ஜல தீபத்தை விட்டு ஓடிவிடுவாள்.”

“அவ்வளவுதானே?”

“இல்லை. இந்தப் பிராந்தியத்திலிருந்தே ஓடி விடுவாள்.”

“அதுதான் முடியாது” என்று திட்டமாகச் சொல்லிய எமிலி, சரேலெனத் திரும்பி, அந்த அறையை விட்டு வெளி யேறினாள். அவள் சொல்லும் போக்கும் அடியோடு புரிய வில்லை இதயசந்திரனுக்கு. பம்பாய் கவர்னர் மாளிகையில் சிகிச்சைக்காகவே நியமிக்கப்பட்டிருக்கும் எமிலி எத்தனை நாள் கொங்கணியிலிருக்க முடியும் என்று தன்னைத்தானே வினவிக் கொண்டான். ஒருவேளை அவள் தன்னை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக வதந்தி இருப்பதால் திரும்பப் பம்பாய் செல்ல அஞ்சுகிறாளோ என்றும் எண்ணினான். காரணம் அதுவாகத்தானிருக்கும் என்றும் தீர்மானித்தான். அந்தத் தீர்மானத்தால் சிறிது தைரியமும் அடைந்து, எந்தக் காரணத்தாலும் எமிலியைத் தன்னை அணுக விடாமலிருக்கவும், மஞ்சுவை மணக்கும்போது நிர்மலமான மனது தனக்கு இருக்கும்படி தனது நடத்தையை மாற்றிக் கொள்ளவும் முடிவு செய்து கொண்டான். திரும்பவும் படைத் தளத்துக்குப் போவதே இதற்கெல்லாம் வழி என்ற தீர்மானத்துக்கும் வந்தான்.

அந்தத் தீர்மானத்துக்கு வந்த விநாடி முதல் தனது நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டான். நீராடி மாலுமிச் சராய் புனைந்து கொலாபாவிலிருந்து வந்துகொண்டிருந்த படகுகளில் ஜலதீபத்திலிருந்து ஏற்றப்பட்ட துப்பாக்கிகள், பீரங்கிகள் முதலியவற்றை ஏற்ற, மற்ற மாலுமிகளைப்போல் தானும் உதவினான். அடிக்கடி ஜல தீபத்தின் படகொன்றில் ஏறி, மற்றக் கப்பல்களுக்குச் சென்று, அங்கிருந்த கரைக்குச் செல்லும் ஆயுத வகையறாக்களையும் உணவு வகையறாக்களையும் மேற் பார்வை பார்த்தான். அன்றிரவு தளபதி அறையைக் காலி செய்து உபதளபதி அறையில் உட்கார்ந்து மகாராஷ்டிரப் பகுதிகளுக்குப் பிரிட்டிஷார் தயாரித்த தேசப்பட மொன்றைப் பிரித்து வைத்துக்கொண்டு நள்ளிரவு வரை ஆராய்ந்து கொண்டிருந்தான். நள்ளிரவுக்குப் பிறகு தூக்கம் வரவே அந்தப் படத்தின்மீதே தலையை வைத்துத் தூங்கிவிட்டான்.

மறு நாட் காலையில் அவன் அறைக்கு வந்த மஞ்சு அந்த நிலையில் அவனைப் பார்த்தாள். தலை படத்தின்மீது கிடந்ததால் குழல்களுக்கிடையே இருந்த காயத்தின் வடு அவள் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது. மெல்லத் தன் கையால் அவன் குழல்களைத் தடவினாள். பிறகு தலையை அசைத்து, “எழுந்திருங்கள். நேரமாகிவிட்டது” என்றும் கூறினாள்.

இதயசந்திரன் கண் விழித்து மஞ்சுவை நோக்கினான். அவள் அப்பொழுது பூராவாக மாலுமி உடை அணிந் திருந்தாள். காலில் அரபு நாட்டுச் சராயும், மேலே பிரிட்டிஷ் ஷர்ட்டும், தலையில் குழல் கலையாதிருக்க சிவப்புத் துணிக்கட்டும் அவள் அழகை அபரிமிதமாகக் காட்டின. முதன் முதலில் அவள் தன்னைப் பரசுராம புரத்தின் மலையில் அந்தப் பெரிய பாறைக்கருகில் சந்தித்த அதே கோலத்தை அணிந்திருந்ததால் இதயசந்திரன் அவளை நோக்கி, “மஞ்சு! இது பரசுராமபுரமா, கொலாபாவா?” என்று வினவினான்.

“இருப்பிடம் வைகுந்தம்” என்றாள் அவள் பதிலுக்கு.

இதயசந்திரன் அவள் அழகிய இடையில் தன் கையைச் செலுத்தி தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான். ‘என் மனைவிக்குப் பொறாமை போய்விட்டதா?” என்று வினவவும் செய்தான்.

“மனைவியைக் கேளுங்கள்” என்றாள் அவள் நகைத்து.

”அவளைத்தான் கேட்கிறேன்” என்றான் இதய சந்திரன்.

“அப்படியாக நீண்ட காலம் இருக்கிறது.”

“ஏன் நீண்ட காலம் இருக்க வேண்டும்?”

“தந்தைதான் சொல்லிவிட்டாராமே?”

“ஆம் சொன்னார். அதை உன்னிடமும் சொல்லி விட்டாரா?”

“ஆம்.”

“போர் முடிந்து தான் திருமணமா?”

“ஆம்.’’

இதயசந்திரன் சிறிது யோசித்தான். “இல்லை” என்று கூறினான் முடிவாக.

“என்ன இல்லை?” என்று கேட்டாள் மஞ்சு துடிப்புடன்.

“போர் முடியும்வரை காத்திருப்பதற்கில்லை” என்ற இதயசந்திரன் முகத்தில், சிந்தனையின் சாயை பெரிதாகப் படர்ந்தது.

மஞ்சுவின் முகத்தில் காதல் சொட்டியது. வெட்கமும் கலந்தது அத்துடன். “ஏன்? அவசரமா? காத்திருக்க. முடியாதா?” என்று வினவினாள் அவள், இதயசந்திரன் கன்னத்துடன் தன் கன்னத்தை இழைத்து.

படுத்த நிலையைவிட்டு, கன்னத்துடன் கன்னமிழைய எழுந்திருந்து உட்கார்ந்துகொண்ட இதயசந்திரன் கை மஞ்சுவின் இடையை நன்றாக அழுத்தியது. “மஞ்சு!” என்று அழைத்த அவன் குரலில் அன்பு பெருகி வழிந்தது..

“ஏன்?”‘. என்றாள் அவளும் இன்பம் சொட்டிய குரலில்.

“இப்பொழுது நடைபெறப் போவது முந்திய போர் களைப் போன்றதல்ல” என்றான் இதயசந்திரன்.

“என்ன வித்தியாசம் இந்தப் போரில்?” என்று கேட்டாள் மஞ்சு.

“மஞ்சு! கடலில் போர்க்கலங்களைத் திருப்பி எப்பொழுதாவது வரும் கப்பல்களுடன் போரிடுவது ஒரு வகை. பயிற்சி பெற்ற அணிவகுத்த பெரிய படை நகரும் போது நிலத்தில் நடக்கும் போர் முறை வேறு வகை. அந்த வகையை நான் அறிவேன். இன்று நாம் ஏதோ ஈரொரு எதிரிக் கப்பல்களுடன் மோதவில்லை. போர் பயிற்சி பெற்ற மகோன்னத சாம்ராஜ்யப் படைகளுடன் மோதப் போகிறோம். அந்தப் படையில் பாரதத்தை அடிமைப்படுத்திய மொகலாயர் இருக்கிறார்கள். அடிமைப்படுத்த விரும்பும் போர்ச்சுக்கீசியர் இருக்கிறார்கள். அத்துடன் மகாராஷ்டிரத்தின் சிறந்த குதிரைப் படையும் இருக்கிறது. இத்தகைய ஒரு படையுடன் மோதும்போது வெற்றி தோல்வி எப்படியென்று கூற முடியாது. இப்போரில் நான் கொல்லப்பட்டாலும் படலாம்.”

இதை இதயசந்திரன் சொன்னதும் அவன் வாயைப் பொத்தினாள் மஞ்சு. “சே சே! இந்தப் பேச்சை விடுங்கள்” என்றாள்.

அவன் மேலே சொன்னான்: “அப்படி நான் இறந்தால் எனக்கொரு மனைவியுண்டு கண்ணீர் சிந்த என்ற நினைப்பில் இறக்க வேண்டும். போரிடும்போது மனைவியிருக்கிறாள். அவளுக்காக நான் திரும்பவேண்டும் என்ற உறுதி வேண்டும். இரண்டுக்கும் மனைவி வேண்டும். அந்த மனைவியை அடைய நிச்சயம் செய்துவிட்டேன்” என்று கூறிய இதயசந்திரன், அவள் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு காலைக் கடன்களை முடித்துக் கொள்ளச் சென்றான்.

அப்பொழுது பொழுது விடிந்து நேரமாகி விட்டதால் கதிரவன் ஆட்சி எங்கும் நடந்து கொண்டிருந்தது.

தூரத்தே தெரிந்த தோர்லாவாடாவும் மஹா தர்வாஜாவும் மிகக் கம்பீரமாயிருந்தன. கொலாபாவின் கோட்டைத் துளையிலிருந்து. பீரங்கிகள் நாலா பக்கமும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் கண்டு மகிழ்ந்த வண்ணம் நீராடி ஆடை புனைந்து ஒரு படகை எடுத்துக் கொண்டு கொலாபாவை அடைந்தான் இதய சந்திரன். நேராகக் குலாபியின் ஆலயத்துக்குச் சென்றான்.

அவனுக்கு முன்பே கனோஜி அங்கு நின்று கொண் டிருந்தார். குலாபிக்குத் திருமஞ்சனம் முடிந்து தீபாராதனை நடக்கும் வரையில் யார் வந்திருப்பதையும் கவனிக்காத கனோஜி கடைசியாகத்தான் இதயசந்திரன் அருகில் நிற்பதைக் கவனித்தார். ”நல்ல சமயத்திற்கு வந்தாய். திருவுள ஓலை போட்டிருக்கிறோம்” என்று வரவேற்றார் அவனை. வழக்கம் போல் தீபாராதனை நடக்க, மணியோசை கொலாபாவை ஊடுருவிச் செல்ல, சங்கம் முழங்க காற்றடித்து ஓலை ஒன்று புரண்டது. ஓலையை எடுத்துக் கொடுத்தார் அர்ச்க்கர். வாங்கிப் பிரித்துப் படித்துப் பார்த்த கனோஜியின் முகத்தில் மகிழ்ச்சிக் குறி படர்ந்தது. “உத்தரவு கிடைத்து விட்டது, இந்தா” என்று ஓலையை இதயசந்திரனிடம் நீட்டினார். போருக்கு உத்தரவு கிடைத்திருந்ததைக் கண்ட இதய சந்திரன் தலைவணங்கினான் குலாபிக்கு.

”உன் படைகள், ஆலிபாக்கில் காத்திருக்கின்றன தமிழா” என்றார் ஆங்கரே. அத்துடன் பக்கத்திலிருந்த தனது மகனை அழைத்து, “சேகோஜி! கடற்படையில் பாதியை என் கப்பலில் இருந்து நீ தலைமை வகித்து நடத்து. மீதிப் பாதியை மஞ்சு நடத்துவாள்” என்று ஆணையிட்டார்.

“தாங்கள்?” என்று வினவினான் இதயசந்திரன்.

“உன்னுடன் வருகிறேன்” என்றார் கனோஜி.

அன்று அவருடன் ஆலயத்திலிருந்து சென்ற இதய சந்திரன் ஆலிபாக்கில் கனோஜி திரட்டியிருந்த தரைப் படையைக் கவனித்து வியப்பின் எல்லையை எய்தினான். படை, பெரும் படையுமல்ல சிறு படையுமல்ல, மத்தியமாயிருந்தது. ஆனால் அவர் அதை இயக்கி வைத்திருக்கும் முறை பயங்கரமாயிருந்தது. ஆலிபாக்கில் அணிவகுத்து நின்ற படைகளின் ஒரு பகுதியை நோக்கி ஆகாயத்தில் கைத்துப்பாக்கியால் சுட்டார் கனோஜி. அடுத்த வினாடி ஒரே சீராக மின்னல் வேகத்தில் அந்தப் படை இயங்கியது. அடுத்த பிரிவு அடுத்தபடி, அதற்கடுத்த பிரிவு அதற்கும் அடுத்தபடி, இப்படி ஆறு பிரிவுகள் இயங்கின. மிகப் பலமான ராணுவ இயந்திரத்தை ஆங்கரே சிருஷ்டித்து விட்டதைப் புரிந்து கொண்டான் இதயசந்திரன்.
அந்தப் படைகள் அளித்த மயக்கம் அவனுக்கு அன்று பூராவும் தீரவில்லை. ஜல தீபத்துக்குத் திரும்பிய பிறகும் அதையே நினைத்துக் கொண்டிருந்தான். தீபங்கள் ஏற்றப் பட்ட பிறகுதான் முக்கிய விஷயம் நினைவுக்கு வந்தது. மஞ்சுவின் அறையை நோக்கி நடந்து, ”மஞ்சு! இந்த மாலுமி உடையைக் கழற்றிவிட்டு நல்ல சேலை அணிந்து புறப்படு” என்றான்.

“எங்கு?” என்று கேட்டாள் மஞ்சு வியப்புடன்.

“குலாபியைத் தரிசிக்க” என்றான் இதயசந்திரன்.

“இப்பொழுது எதற்கு?”

”சொல்கிறபடி செய்.”

அவன் கண்டிப்புக்குக் காரணம் அவளுக்குப் புரிய வில்லை. இருப்பினும் அவன் சொன்னபடி சேலையுடுத்தி முக்காடிட்டு அவனுடன் குலாபி ஆலயத்துக்குச் சென்றாள்.

குலாபியின் அபிஷேக ஆராதனைகள் முடிய அர்த்த ஜாமம் ஆகிவிட்டது. பூஜை முடிந்ததும் அர்ச்சகரைக் கேட்டான் இதயசந்திரன், “மஹிஷேஸ்வரியின் மஞ்சள் கயிறு ஒன்று வேண்டும்” என்று:

அர்ச்சகர் மஞ்சள் கயிறு ஒன்றை எடுத்து அம்பிகை யின் பாதத்தில் வைத்து புஷ்பமும் கயிறுமாகக் கொடுத் தார் இதயசந்திரன் கையில். புஷ்பத்தை அவன் மஞ்சுவின் தலையில் செருகினான், கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டினான். பிறகு, ”குலாபியின் ஆணை, நீ இன்று முதல் என் மனைவி” என்று கூறி, “வணங்கு மஞ்சு” என்று: கூறித்தானும் வணங்கினான்.

மஞ்சுவின் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் இருந்தன. எதற்கும் அஞ்சாத அவள் இதயத்தில் ஏதோ அச்சம் உதய மாயிற்று. மார்பு, பயத்தால் படபடவென அடித்துக் கொண்டது. ஏதும் பேசாமல் மௌனமாக அவனைப் பின்பற்றி வெளியே நடந்தாள் மஞ்சு. ஆலயத்துக்கு வெளியில் வந்த பின்பும் அவள் பேசவில்லை. சிறிது தூரத்தில் யாருமற்ற இடத்திலிருந்த பாறையின் மறைவுக்கு. அவளை அழைத்துச் சென்ற போதும் அவள் பேசவில்லை. பேச்சை மீறிய சந்தர்ப்பம் அது.

பாறையின் மறைவிலிருந்த மற்றொரு பாறையில் அவனுடன் உட்கார்ந்தாள் அவள். அவனும் பேசாமல் பக்கத்தில் உட்கார்ந்தான்.. வானில் நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. தூரத்தே விளக்குகள் எரிந் தாலும் அந்தப் பாறை வரையில் எட்டவில்லை விளக்குகளின் வெளிச்சம். உணர்ச்சிகளின் மிகுதியால் உட்கார மாட்டாமல் பாறையில் படுத்தாள் மஞ்சு.

அந்தப் பாறையின் மறைவு மணவரையாயிற்று. பாறையே பஞ்சணையாயிற்று. ஒன்று கடினம், ஒன்று மென்மை. ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள முயல்வது வாழ்க்கை.

Previous articleJala Deepam Part 3 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch15 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here