Home Historical Novel Jala Deepam Part 3 Ch16 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch16 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

56
0
Jala Deepam part 3 Ch16 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch16 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch16 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 16 மத்தளம்

Jala Deepam Part 3 Ch16 | Jala Deepam | TamilNovel.in

மந்திராலோசனையில் கலந்து கொண்ட மற்றவர் களனைவரையும் போகச் சொல்லிவிட்டு இதயசந்திரனும் தானும் மட்டும் தனித்திருந்த சமயத்தில், “நேற்றிரவு எங்கிருந்தாய்” என்று கனோஜி திடுதிப்பென வினவிய தால் பேரதிர்ச்சியடைந்த இதயசந்திரன், நீண்ட நேரம் அவர் கண்களைச் சந்திக்காமலும் பதிலேதும் சொல்லாமலும் மௌனம் சாதித்தான். பிறகு ஏதோ செய்ய வேண்டுமென்பதற்காக கவர்னர் தூதுவர் கடிதத்தின்மீது செங்குத்தாக இருந்த கனோஜியின் கத்தியைப் பிடித்து ஆட்டினான். கடைசியாகச் சொன்னான், “இங்குதான் இருந்தேன்” என்று.

கனோஜி மீண்டும் வினவினார், “இங்கு என்றால்?” என்று .
”இங்குதான் கொலாபாவில்” என்று கூறினான் இதய சந்திரன் அவரை ஏறெடுத்துப் பார்க்காமலே.

கனோஜியின் கண்கள் அவனைக் கூர்ந்து நோக்கின. ‘தோர்லாவாடாவுக்கு நீ வரவில்லை. உன் அறையில் இல்லை” என்று சுட்டிக் காட்டினார் கனோஜி.

“இல்லை.”

“வேறெங்கு இருந்தாய்?”

“வெளியில் படுத்திருந்தேன்.”

“வெளியிலென்றால்?”

“மலைப்பாறையில்.”

“மலைப்பாறையில் படுக்க வேண்டிய அவசியமென்ன?”

“வெப்பம் அதிகம். வெளியிடம் இதமாயிருந்தது. கடற்காற்று சுகமாயிருந்தது.”

கனோஜி பதில் சொல்லவில்லை நீண்ட நேரம். பிறகு, பதில் கூறிய போது அதில் சற்றுக் கடுமையிருந்தது, “ஒரு. வகையில் அவளும் கடற்காற்றுத்தான்” என்றார் கனோஜி.

இதயசந்திரன் திடுக்குற்று அவரை நோக்கினான். “நீங்கள் சொல்வது…” என்று ஏதோ குழறினான்.

கனோஜியின் இதழ்கள் இகழ்ச்சியால் மடிந்தன. அவரது பெருமீசையின் அசைவிலும் ஒரு வெறுப்பு இருந்தது. ”நேற்றிரவு நீயும் மஞ்சுவும் ஜல தீபத்தை விட்டுக் கொலாபாவுக்கு வந்திருக்கிறீர்கள், குலாபி மாதாவின் கோவிலுக்குப் போயிருக்கிறீர்கள், இன்று காலை நீ மட்டும் தோர்லாவாடாவில் உன் அறையிலிருக்கிறாய்” என்ற கனோஜி ஆங்கரேயின் சொற்களிலும் இகழ்ச்சி ஒலித்தது பலமாக. மேலும் கனோஜி கூறினார்: “என் வளர்ப்பு மகளை நீ ஏற்றுக் கொள்வதுபற்றி எனக்கு ஆட்சேபணை – இல்லை. ஜல தீபத்திலுள்ள மஞ்சுவிடம் போகும்படி உன்னை நானே அனுப்பியிருக்கிறேன். மஞ்சு உன்னிடம் உயிரை வைத்திருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே உங்கள் உறவுக்கு நான் குறுக்கே நிற்க வில்லை. ஆனால் உன்னிடம் இந்த விஷயங்களில் ஒரு கோழைத்தனத்தையும், அச்சத்தையும் பார்க்கிறேன். ஒருத்தியை மணக்க வேண்டுமென்றால் பகிரங்கமாக மணக்கலாம்.”

கனோஜியின் சொற்களைக் கேட்டதால் உணர்ச்சியால் தூண்டப்பட்ட இதயசந்திரன், “ஸார்கேல்! நீங்கள் தானே திருமணத்திற்கு ஆட்சேபித்தீர்கள் முன்பு?” என்று கேட்டான்.

“நிரந்தரமாக ஆட்சேபிக்கவில்லை. அந்தச் சமயத்தில் திருமணத்துக்கு ஆட்சேபித்தேன். நீ விஜயதுர்க்கத்துக்கு முதன் முதலாக வந்தபோது போர்கள் லேசாகத் தலை காட்டின. போர்க் குறிகளும் இருந்தன எங்கும். திட்டமான நிலைமை உருவாகவில்லை. அந்தச் சமயத்தில் நல்ல தலைவன் ஒருவன் பாதுகாப்பில் காதரைனை அனுப்ப வேண்டியிருந்தது. அதற்குத் தகுந்தவன் நீதானென்று முடிவு செய்தேன். ஆகவே, திருமணத்தை நடத்த அப்பொழுது முடியவில்லை. இன்றைய நிலை வேறு. போர் மகாராஷ்டிரத்தில் மூண்டு விட்டது. இன்னும் பதினைந்து நாட்களில் நமது படைகள் அலிபாக் கிலிருந்து நகரும். இப்பொழுது மஞ்சுவின் அனுமதி யோடு நீ போர்க்களம் போவதுதான் முறை” என்ற கனோஜி ஆங்கரே, “சரி சரி. அது சிறிய விஷயம். கொங்கணியிலுள்ள லட்சக்கணக்கான மக்களில் இரண்டு ஆத்மாக்களைப் பற்றியது. இனி நாம் தூது விஷயத்தைக் கவனிப்போம்’ என்றார்.

அதைச் சொன்னதோடு மட்டுமில்லாமல், ”கவர்னரின் பதிலைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று வினவி, தமது பெரும் விழிகளைக் கவர்னர் கடிதத்தின் மீது நிலைக்க விட்டார்.
இதயசந்திரனுக்குக் கனோஜியின் போக்குப் பெரும் புதிராயிருந்தது. மகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு, முந்திய இரவு நடந்ததை ஊகித்துவிட்டு, சிறிதும் கொந்தளிப்பின்றிக் கவர்னர் தூது விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டதைக் கண்ட இதயசந்திரன், ‘இவர் மனிதர் தானா? தன் மகளுடன் உறவாடிய ஒருவன் எதிரே உட்கார்ந்திருக்கிறான். அவனை வெட்டிப் போடா மலிருப்பதே விந்தை. அந்த விஷயத்தைச் சாதாரண விஷயமாக உதறிவிட்டுப் போர் விவகாரங்களில் இறங்கும் இவருக்கு இதயம் என்று ஒன்று உண்டா?’ என்றும் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

அவன் மனத்திலோடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட ஆங்கரே சொன்னார், “தமிழா! உனக்கும் மஞ்சு வுக்கும் உள்ள ஆசாபாசங்கள், உறவு முறைகள்.

இன்றுள்ள கொங்கணியின் போர் நிலையில் கவனிக்கத் தகாதவை. இன்று நான் இந்தக் கொலாபாவிலிருந்து கொண்டு சிந்திப்பது உங்கள் இருவரை மட்டுமல்ல; மகாராஷ்டிர சாம்ராஜ்யம், குஜராத்திகளும், மகாராஷ்டிரர்களும் கொங்கணிகளும் கோளிகளும் கொண்ட பெரும் ஜனசமூகம். அதைத் தவிர, சதா நசுக்கப்பட்டு வரும் ஹிந்து சமுதாயம். அந்தப் பெருங் கூட்டத்தில் நீங்கள் சிறு துரும்புகள். மஞ்சுவிடம் எனக்குள்ள ஆசையும் அன்பும் அதிகம். ஆனால் மகாராஷ்டிர சமுதாய ஆசைக்கு அந்த ஆசையும் அன்பும் அடங்கியவைதான்” என்று அத்துடன் அப்பேச்சை நிறுத்திவிட்டு, “கவர்னர் நிபந்தனைகளைப் பற்றிக் கேட்டேன் உன்னை ” என்று மறுபடியும் பழைய விஷயத் திற்கு வந்தார்.

இதயசந்திரன் நீண்ட நேரம் சிந்தித்துவிட்டு, “ஸார்கேல்! நிபந்தனைகள் கடினம். சந்தேகமில்லை” என்றான்.

“இதுவரை எங்களிடமிருந்து கைப்பற்றிய அனைத் தையும் திருப்பித் தரவேண்டும் என்று கவர்னர் கேட்கிறார்” என்றார் கனோஜி.

“ஆம். அதுதான் ஆரம்ப நிபந்தனை” என்று ஒப்புக் கொண்டான் இதயசந்திரன்.

“ஆரம்பத்திலிருந்து கைப்பற்றியதையெல்லாம் திருப்பிக் கொடுக்க முடியுமா?” என்று வினவினார் ஆங்கரே.

“முடியாது. எங்கிருக்கிறது நம்மிடம்? அவ்வப் பொழுது பொருள்களை விற்று விடுகிறோம்” என்று தெரிவித்தான் இதயசந்திரன்.

“இதயசந்திரா! இரண்டாவது நிபந்தனை என்ன தெரியுமா?”

“தெரியும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பிரிட்டிஷ் கப்பல்களைத் தடை செய்யக்கூடாது. பிடிக்கக் கூடாது. தவிர, சென்னை, வங்காளம் முதலிய இடங்களி லுள்ள பிரிட்டிஷ் தொழிற்சாலைகளின் சார்பாக பிரிட்டிஷார் அதிகாரத்துக்கு உட்பட்டு இயங்கும் எந்தக் கப்பலையும் தொடக்கூடாது.”

“அதாவது பிரிட்டிஷ் கொடி போட்ட அல்லது பிரிட்டிஷ் ஆதரவு பெற்றதென்று சொல்லிக்கொள்ளும் எந்தக் கப்பலையும் நாம் தொட முடியாது.”
“ஆம்.”

“ஸித்திகளோ, போர்ச்சுகீஸியரோ பிரிட்டிஷ் கொடி யுடன் கப்பல்களை நடத்தினாலும் நாம் அணுகக் கூடாது.”

“ஆம்.”

கனோஜி மெல்ல நகைத்தார். “சரி, மூன்றாவது நிபந்தனையைப் பார். மாஹிமுக்கும் காண்டேரிக்கு மிடையிலுள்ள கடற்பகுதியில் எந்த நாட்டுக் கப்பல் வந்தாலும் அதையும் நாம் தொடக் கூடாதாம்” என்றார் நகைப்பின் ஊடே.

“அப்படித்தான் கூறுகிறது தூது வாசகம்” என்று ஒப்புக் கொண்டான் தமிழன்.

“நான்காவது நிபந்தனையில் கவர்னர் கூறுவது மிகவும் விசித்திரம். அவர்களுடைய கப்பல்களுக்குப் பாதுகாப்பளிக்க நமது கடற்படை இயங்கவேண்டுமாம். நமது அதிகாரத்துக்குட்பட்ட துறைமுக நகரங்களில் அவர்கள் தாராளமாக வர்த்தகம் செய்ய அனுமதி தேவையாம்.”

“ஆனால் அதற்குத் தக்க சுங்கத்தைக் கொடுப்பதாகக் கூறுகிறார்கள்.”

“அந்தச் சுங்கப்பணம் எதற்கு? நாம் பிடிக்கக்கூடிய கப்பல்களில் கிடைக்கும் செல்வத்தில் ஆயிரத்திலொரு பங்கு சுங்க வரியில் கிடைக்காது” என்று சுட்டிக்காட்டிய ஆங்கரே, “ஐந்தாவது ஆறாவது நிபந்தனைகளின்படி நமக்கு ஆயுத வசதி கொடுக்கவும், மாலுமிகளைத் திரட்டவும், பம்பாய் துறைமுகத்தைக் கட்டணம் ஏதுமின்றி நமது கப்பல்கள் உபயோகப்படுத்திக் கொள்ளவும் கவர்னர் அனுமதிக்கிறாராம்” என்று கூறி, இடி இடியென நகைத்து, மேஜைமீது குத்தி நின்ற கத்தியைப் பிடுங்கி கவர்னர் காகிதத்தை நாலைந்தாகக் கிழித்தெறிந்தார். பிறகு ஆசனத்திலிருந்து எழுந்துவிட்ட ஆங்கரே, இதய சந்திரனை நோக்கி, “இதயசந்திரா! நமக்கு அனுப்பப்பட்டுள்ளது தூதுக் கடிதமல்ல. நமக்காகச் சிருஷ்டிக்கப் பட்ட அடிமைச் சாஸனம்” என்று கூறினார்.

இதயசந்திரனும் ஆசனத்தைவிட்டு எழுந்திருந்து கூறினான், “ஸார்கேல், இந்த நிபந்தனைகளைக் கவர்னர் விதிக்கவில்லை” என்று.

“பின் யார் விதித்தது?” என்று வினவினார் ஸார்கேல்.

”பம்பாய் கௌன்ஸில்” என்றான் இதயசந்திரன். “அப்படிச் சொல்வதைவிட மிஸ்டர் ப்ரௌன் என்று கூறுவது பொருந்தும்” என்றும் கூட்டினான் சொற்களை.

“யார் அந்தப் ப்ரௌன்? கவர்னரின் காரியதரிசி என்று சொன்னாயே அவனா?”

“ஆம்.”

“காரியதரிசிக்குக் கவர்னரைவிட அத்தனை அதிகாரமா?”

“மிஸ்டர் ப்ரௌன் காரியதரிசி மட்டுமல்ல. பெரிய சூழ்ச்சிக்காரன். கவர்னருக்கு எதிராக அடிக்கடி இங்கிலாந்துக்குக் கடிதங்களும் அனுப்பி வருவதாகச் சொல்கிறார்கள்.”

“அப்படியானால் மிஸ்டர் ப்ரௌன் வைத்தது தான் சட்டம், கவர்னர் ஏஸ்லாபி வெறும் பதுமைதான்…”

“இல்லை, இல்லை. கவர்னர் மிக உறுதி உள்ளவர் கண்ணியமானவர். ஆனால் கௌன்ஸிலின் தீர்மானத்தை அவர் நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. மிஸ்டர் ப்ரௌன் தன் சாமர்த்தியத்தால் கௌன்ஸிலைத் தன்னிஷ்டப்படி திருப்பியிருப்பான். ஆனால் கவர்னர் வாய் வார்த்தையாகச் சொல்லியிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்’ என்று கூறினான் இதயசந்திரன்.

“நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளும்படி வாய் வார்த்தையாகக் கவர்னர் சொல்லியனுப்பியதையா?” என்று கேட்டார் கனோஜி.

“ஆம். கவர்னர் அனாவசியமாக வார்த்தைகளை உதிர்ப்பவரல்ல” என்று சுட்டிக் காட்டினான் இதய சந்திரன்.

“அப்படித்தான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு விட்டேன்” என்ற ஆங்கரே சிறிது சிந்தித்துவிட்டு, “தமிழா! நான் ஒப்புக்கொண்டு விட்டதற்குக் கவர்னரின் கண்ணியம் மட்டும் காரணமல்ல” என்றார், பொருள் மிகுந்த பார்வையொன்றை அவன்மீது வீசி.

“புரிகிறது” என்றான் இதயசந்திரன். “என்ன புரிகிறது தமிழா?” என்று வினவினார் ஆங்கரே அவன்மீது நிலைக்கவிட்ட கண்களை அகற்றாமலே.

“உங்களுக்குத் தற்சமயம் கடல்பகுதியில் அமைதி வேண்டும். இதை முன்பே கூறியிருக்கிறீர்கள்’ என்ற இதயசந்திரனை திடீரென அணுகிய ஆங்கரே, அவன் முதுகில் தட்டிக்கொடுக்கும் பாவனையில் ஒரு பேயறை யாக அறைந்து, “பலே!” என்றும் கூவினார். “ஆம் தமிழா! தரையில் பெரும் போர் துவங்க இருக்கும் தருவாயில் கடலிலும் நாம் போரை வைத்துக்கொள்ள முடியாது. கடற்பகுதியில் பாதுகாப்பு முறைகளை மாத்திரம் கையாளுவோம். காண்டேரி, கொலாபா, விஜயதுர்க்கம் முதலிய கேந்திர ஸ்தானங்களில் நமது கடற்படை அளவுடன் பிரிந்து நிற்கும். கோட்டைகளில் பலமான பீரங்கிகளும் அவசியமான அளவுக்கு வீரர் பிரிவுகளும் இருக்கும். நிலத்தில் நாம் முன்னேறுவோம்

இல்லாவிட்டால்…’ என்று சொல்லிக்கொண்டு போன கனோஜியை இடைமறித்த இதயசந்திரன், “மத்தள மாவோம்” என்றான்.

“மத்தளமாவோமா?” என்றார் ஆங்கரே, அவன்மீது வியப்புத் ததும்பும் விழிகளைத் திருப்பி.

“ஆம், மத்தளத்துக்கு இரு பக்கங்களிலும் இடி யென்று தமிழ்ப் பழமொழி உண்டு” என்றான் இதயசந்திரன்.

இதைக் கேட்ட கனோஜி பலமாக நகைத்தார். “பேஷ் பேஷ்! மத்தளத்துக்கு இரு புறமும் இடி. நாம் மத்தளமா னால் நீரிலும் இடி. நிலத்திலும் இடி. அப்பா! தமிழர்கள் எத்தகைய பழமொழிகளைச் சிருஷ்டித்திருக்கிறார்கள்!” என்று சிலாகித்தார் நகைப்புக்கிடையே. அத்துடன் சொன்னார், “ தமிழா! கடலில் இடிபடாதிருக்க ஏஸ்லாபியின் நிபந்தனைகளை ஏற்போம். நிலத்தில் நாம் இடிபட மாட்டோம். ஏனென்றால் இடிக்கப்போவது நாம். இன்னும் பதினைந்தே நாட்கள், நமது படைகள் நகரும்” என்று .

“பதினைந்து நாட்கள் எதற்கு?” என்று வினவினான் இதயசந்திரன்.

“சற்றுப் படைகளை மாற்றியமைக்க. அடுத்தபடி எதிரிக்கு இடங்கொடுக்க” என்றார் ஸார்கேல்.

இதயசந்திரன் வியப்பு எல்லையை எட்டியது. “எதிரிக்கு இடங்கொடுப்பதா!” என்று வினவினான் வியப்புக் குரலில் ஒலிக்க.

“ஆம் எனக்கு பாஹிராவ் பிங்களே நெருங்கிய நண்பர்…”

“அதற்காக!”

“அவர் நன்றாகக் கொங்கணியின் எல்லைக்குள் வரட்டும்?”

“வந்ததும்…”

வந்ததும் செய்வதென்ன என்பதைப்பற்றி மிகத் துணிகரமான திட்டத்தை விவரித்தார் ஆங்கரே.

Previous articleJala Deepam Part 3 Ch15 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch17 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here