Home Historical Novel Jala Deepam Part 3 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

56
0
Jala Deepam part 3 Ch2 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch2 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 2 விருந்துக்கு அழைப்பு

Jala Deepam Part 3 Ch2 | Jala Deepam | TamilNovel.in

ஆங்கரேயின் தூதன் பெயரை ஆர்டர்லி அறிவித்ததும் கிப்போர்ட் மிதமிஞ்சிய கலவரத்துக்கும் குழப்பத் துக்கும் உட்பட்டானென்றால், அறிவிப்பைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த இதயசந்திரன் குழப்பத்துக்கோ கலவரத்துக்கோ ஆளாகவில்லை எனினும் ஓரளவு வியப்பின் வசப்படவே செய்தான் அவன். அந்த வியப்பை அரை வினாடியில் மறைத்துக்கொண்டு ராணுவ முறையில் கவர்னருக்குத் தலைவணங்கி தனது பாதங்களை ஒன்று சேர்த்து விறைத்து நின்றான்.

இதயசந்திரன் பெயர் உச்சரிக்கப்பட்டதும், கிப்போர்ட்டுக்கு ஏற்பட்ட குழப்பத்தையும் கவர்னர் கவனிக்கத் தவறவில்லை. உள்ளே நுழைந்த இதயசந்திர னின் முகத்தில் விரிந்து அரை வினாடியில் மறைந்துவிட்ட வியப்புச் சாயையையும் அளவெடுக்கத் தவறவில்லை. தன் முன்னால் பிரிட்டிஷ் ராணுவப் பாணியில் நின்ற இதய சந்திரனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார் கவர்னர், நாற்காலியில் உட்கார்ந்தவண்ணமே. பிறகு மெல்ல உதடு களில் புன்னகையொன்றைப் படரவிட்டுக் கொண்ட கவர்னர் ஏஸ்லாபி, “உங்களைப்பற்றி ஏற்கனவே கேள்விப். பட்டிருக்கிறேன்” என்று இதயசந்திரனை நோக்கிக் கூறி விட்டு, கிப்போர்ட்டின் மணிக்கட்டிலும் கண்களைத் திருப்பினார் ஒரு வினாடி. மேற்கொண்டும் சொன்னார் தமிழனைப் பார்த்து, “உங்களைக் கண்டதில் ஓரளவு மகிழ்ச்சியும் ஏற்படுகிறது எனக்கு” என்று.

இதயசந்திரன் விறைத்தவண்ணம் ராணுவத் தோரணையில் நின்றான். “தங்கள் சொற்கள் தங்கள் பரந்த நோக்கத்தைக் காட்டுகின்றன” என்று மிகுந்த மரியாதையுடன் சொற்களை உதிர்த்தான்.

கவர்னர் ஆர்டர்லியை நோக்கிக் கண்களைத் திருப்பி, “தூதருக்கு ஓர் ஆசனம் கொடு” என்று உத்தரவிட ஆர்டர்லி ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டான். மீண்டுமொரு முறை தலை தாழ்த்திவிட்டு அடக்கத்துடன் ஆசனத்தில் உட்கார்ந்த இதயசந்திரனை நோக்கிக் கவர்னர் கேட்டார், “எனது பரந்த நோக்கத்தைப்பற்றி ஏதோ கூறினீர்களே?” என்று.

“யுவர் எக்ஸலென்ஸி” என்று ஆங்கிலத்தில் துவங்கிய இதயசந்திரன், மேற்கொண்டு கவர்னரைப் போலவே மராட்டியில் பேச முற்பட்டு, “கவர்னர் அவர்களுக்கு என்னைக் குறித்து மகிழ்ச்சி எதுவுமிருக்கக் காரணமில்லை. கவர்னரவர்களுக்கு எத்தனையோ தீங்குகளை இழைத் தவன் நான். இருப்பினும் அதைக் கவர்னர் பாராட்டாது என்னைக் கௌரவப்படுத்துவதும் என்னிடம் மகிழ்ச்சி காட்டுவதும் பெருந்தன்மையல்லவா?” என்றான்.

கவர்னர் கண்களில் வியப்பு மலர்ந்தது. கைதேர்ந்த ஒரு பேர்வழியுடன் தாம் பேச வேண்டியிருப்பதை உணர்ந்தார் அவர். “எனது யந்திரக் கப்பலையும் கெட்ச் ஆனை யும் நீங்கள் கைப்பற்றியது போரில். உங்கள் நிலையிலிருந் தால் நானும் அதைத்தான் செய்திருப்பேன். போர்களின் வழியே அது. அதற்காக வீரர்களிடம் விரோதம் பாராட்டுவது தவறு. அவர்கள் எதிரி வட்டத்தைச் சேர்ந்தவர்களா யிருந்தாலும் மதிக்க வேண்டியது வீரனாயிருப்பவன் கடமை. அதுவும் பொறுப்புள்ள வேலைகளில் ஈடுபடுப் வர்கள் தங்கள் சொந்த உணர்ச்சிகளுக்கு இடங்கொடா திருப்பது மிகவும் முக்கியம்” என்று கூறிய கவர்னர் ஒரு முறை தூரத்தே நின்றிருந்த கிப்போர்ட்டின் மீதும் கண்களைச் செலுத்தினார்.

அந்த அறைக்குள் நுழைந்தபோதே அங்கிருந்தவர் களை அளவெடுத்துவிட்ட இதயசந்திரன், கிப்போர்ட்

விருந்துக்கு அழைப்பு இருந்ததைக் கவனித்திருந்தாலும் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. கவர்னர் தமது கடமையை விவரிப்பது போல் கிப்போர்ட்டைக் குத்திக் காட்டுவதையும் தமிழன் உணர்ந்தானானாலும், அதைப்பற்றி அறியாதவன் போல வும் கிப்போர்ட்டைப் பார்க்காதவன் போலவும் நடந்து கொண்டான். ஆகவே கவர்னருக்குப் பதில் கூறும் முறையில் பொதுவாகவே பேசத் தொடங்கி, “தங்கள் போதனையை மனத்தில் கொள்வேன். சில சமயங்களில் பொது வேலைகளில் ஈடுபடும்போது சொந்த உணர்ச்சிகள் மேம்படுகின்றன எனக்கும். தங்கள் அறிவுரை இனி என்றும் மனத்தில் இருக்கும்” என்று சொன்னான்.

கவர்னர், “வெரிகுட், வெரிகுட்” என்று ஆங்கிலத்தில் பாராட்டிவிட்டு மராட்டியில் பழையபடி கேட்டார், “உங்கள் மராட்டி நன்றாயிருக்கிறது, தஞ்சையிலிருக்கும் போது இந்த மொழி பழக்கமோ?” என்று.

அதுவரை உணர்ச்சிகளைக் காட்டாத இதயசந்திரனும் சற்றுக் கண்களை வியப்புடன் நிலைக்கவிட்டான் கவர்னர் மீது. கவர்னர் தன்னைப்பற்றிய விவரங்களைப் பூராவாக அறிந்திருப்பது அவனுக்குப் பிரமிப்பைத் தந்தது. “இந்த ஏழையைப்பற்றிக் கவர்னர் அவர்கள் நன்கு தெரிந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினான் வியப்பு குரலிலும் ஒலிக்க.

‘ஆறாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து வந்திருப்பவன் கண்களையும் காதுகளையும் தீட்டி வைத்துக் கொள்வது அவசியமல்லவா?” என்று கவர்னர் கேட்டார்.

”ஆம், அவசியம். மிக அவசியம்” என்றான் தமிழன். “அதனால்தான் நான் அனைவரைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்கிறேன். தெரிந்த விஷயங்களை அலசிப் பார்த்துக் காரணங்களையும் அறியப் பார்க்கிறேன். அதனால்தான் கடல் வழிப்பறி செய்யும் கனோஜி விஜய துர்க்கத்திலிருந்து தலைமைத் தளத்தைக் கொலாபாவுக்கு ஏன் மாற்றினார் என்றும் யோசிக்கிறேன்” என்றார் ஏஸ்லாபி.

தமிழனின் வியப்பு உச்சநிலைக்குச் சென்றது. “என்ன ‘சொன்னீர்கள்!” என்று உணர்ச்சியைப் பெரிதும் காட்டிக் கேட்டான் இதயசந்திரன்.

கவர்னர் இரண்டு வினாடிகள் யோசித்தார். பிறகு கிப்போர்ட்டைச் சுட்டிக்காட்டி, “நீங்களிருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். கனோஜியின் தூதர் கிப்போர்ட்டுக்கு விடை கொடுத்தால் அவர் வெளியே செல்லத் தயாராயிருக்கிறார்” என்று கூறினார் கவர்னர்.

கவர்னரின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட இதய சந்திரன் நாற்காலியிலிருந்து எழுந்திருந்து கிப்போர்ட்டுக் குத் தலை வணங்கினான். கை குலுக்குவதற்குத் தனது கையையும் நீட்டினான். பெரும் கோபத்துக்குள்ளாகி யிருந்த கிப்போர்ட் பதிலுக்குத் தான் தலை வணங்காம லும், இதயசந்திரன் நீட்டிய கையைத் தனது கையால் பற்றாமலும் வெளியேற அடியெடுத்து வைத்தான். “கிப்போர்ட்!” என்ற கவர்னரின் அதிகாரக் குரல் அவனைச் சட்டென்று நிற்க வைத்தது.

“யுவர் எக்ஸ லென்ஸி…’ என்று குழறினான் கிப்போர்ட்.

“தூதுவர்களுக்கு மரியாதை காட்ட நாம் பழகிக் கொள்ளவேண்டும். மணிக்கட்டில் வாள் காயமிருப்பதால் கை குலுக்கக் கஷ்டப்படும். தலை வணங்கலாமே? அதற்கு என்ன வலி வந்துவிட்டது இப்பொழுது?” என்றார் கவர்னர் அதிகாரத்துடன்.

கிப்போர்ட் மிகுந்த கர்வத்துடன் இதயசந்திரனை நோக்கித் தலை வணங்கிவிட்டு, ‘கட் கட்’ என்று பூட்ஸ் சத்தம் ஒலிக்க அறையைவிட்டு வெளியேறினான். அவன் அகன்றதும் கவர்னர் முகத்திலிருந்த வெறுப்பு அகன்றது.

சீரிய எண்ணங்கள் புத்தியில் ஓடுவதற்கான அறிகுறிகள் அவரது முகத்தில் தெரிந்தன. சிறிது நேரம் மௌனமாய் இருந்த கவர்னர் நாற்காலியிலிருந்து எழுந்திருந்து அறைக் கோடியில் ஏதுமறியாததுபோல் உட்கார்ந்திருந்த மிஸ்டர் ப்ரௌனிடம் சென்று, ”எங்கே, அந்த வர்த்தகர் கள் அனுப்பிய கடிதத்தை எடுங்கள்” என்று கூறினார்.

மிஸ்டர் வால்டர் ப்ரௌன் மேஜையின் அறை யிலிருந்து ஒரு நீண்ட கடிதத்தை எடுத்துக் கவர்னரிடம் நீட்டினார். கவர்னர் அதைக் கையில் வாங்கவில்லை. ”படியுங்கள் அதை” என்று உத்தரவிட்டார்.

முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாத ப்ரௌன் படித்தார் உறுதியான குரலில். “மேன்மை தங்கிய கவர்னர் பெருமானுக்கு, கொலாபாவுடன் வர்த்தகம் செய்யும் அடியிற் கையொப்பமிட்டவர்கள் தெரிவிப்பதாவது:

“ஜலதீபத்தின் தளபதியான இதயசந்திரன், என்ன காரணத்தாலோ தரைப்படை உபதளபதியாக நியமிக்கப் பட்டிருக்கிறார். அவரது தலைமையில் ஆலிபாக்கிலும் சுற்று வட்டத்திலும், பெரிய தரைப்படையொன்று உருவாகி வருகிறது. சுமார் ஐயாயிரம் காலாட்களும் இரண்டாயிரம் புரவி வீரர்களும் இப்பொழுதே அப்படை யிலிருக்கிறார்கள். இன்னும் தினசரி கடல் மூலமும், ஜன்ஜீரா ஹிராகோட் பக்கங்களிலுள்ள காடுகளிலிருந்தும் தரை மூலமாகவும் வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். கனோஜியின் கடற்படையில் பாதி இப்பொழுது கொலாபாவில் இருக்கிறது. கொலாபாவுக்கும் பம்பாய்க் கும் இடையிலுள்ள காண்டேரித் தீவிலும் சில போர்க் கப்பல்கள் நிற்கின்றன. அந்தத் தீவிலும் பாதுகாப்பு வலுத்திருக்கிறது… இப்படிக்கு…” என்று படித்த ப்ரௌன்

கடைசிப் பகுதியைப் படிக்காமலே விட்டுவிட்டார், விவரமெழுதியவர்கள் யாரென்று தெரியாதிருக்க.

ப்ரௌன் அதைப் படித்து முடிக்கும் வரையில் அவரது மேஜையருகிலேயே நின்றிருந்த கவர்னர் மீண்டும் தமது மேஜையருகில் வந்து நாற்காலியில் அமர்ந்து, “இப்பொழுது உங்களுக்கு என்ன புரிகிறது” என்று கேட்டார்.

“உங்களுக்கு நிலைமை பட்டவர்த்தனமாகத் தெரிந்திருக்கிறது என்பது புரிகிறது” என்றான் இதயசந்திரன்.

கனோஜியைப் போன்றவர்கள் உலகத்தில் மிகச் சிலர். எப்பொழுதோ ஒருமுறை நாடுகளின் வரலாறுகளில் அத்தகைய பெரும் வீரர்கள் தோன்றுகிறார்கள். கனோஜி இப்பொழுது தரைப்படை திரட்டுவதற்குக் காரணம் மகாராஜா ஷாஹுவிடமிருந்து ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தவிர்க்க. தரையில் போர் சரியாகவும் திறமையுடனும் நடக்கவேண்டுமானால் கடல் பகுதியில் அவருக்கு நிம்மதி வேண்டும். அந்த நிம்மதியை நான் தான் அளிக்க முடியும். ஆகவே, உங்களைத் தூது அனுப்பியிருக்கிறார். நீங்கள் தூது வந்தது எனக்கு மிகுந்த திருப்தி” என்று கூறினார் கவர்னர் ஏஸ்லாபி இதயசந்திரனை நோக்கி.

“நான் வந்தது அவ்வளவு பெரிய விஷயமா?” என்று வினவினான் தமிழன்.

“ஆம். தூது செல்பவன் திறமையானவனாயிருக்க வேண்டும். எதிரி சொல்வதைப் புரிந்துகொள்பவனாயிருக்க வேண்டும். நிலைமையை உள்ளபடி ஆராய்ந்து சிந்தித்து அதற்குத் தக்கபடி நடந்து கொள்பவனாயிருக்க வேண்டும். உங்களுக்கு இந்தத் தகுதிகள் அனைத்துமிருக்கின்றன. நீங்கள் அறிவாளி. அறிவாளிகளுடன் பேசுவதில் எப்பொழுதும் எனக்கு மகிழ்ச்சி உண்டு” என்று கூறிய ஏஸ்லாபி தமது ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டு “மிஸ்டர் ப்ரௌன்” என்று அழைத்தார். அருகில் வந்த மிஸ்டர் ப்ரௌனை நோக்கி, “தூதரிடமுள்ள கடிதத்தை வாங்கிப் படியுங்கள்” என்று உத்தரவிட்டார்.
“பிரிட்டிஷ் கவர்னர் மிஸ்டர் வில்லியம் ஏஸ்லாபிக்கு மகாராஷ்டிரா ஸார்கேல் எழுதுவது:

“தங்கள் கப்பல்கள் எனது தஸ்தக் இன்றி கடற்பகுதி யில் அலைவதால் அவற்றுக்குச் சேதம் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். பிரிட்டிஷ் வர்த்தகத்தைத் தடுக்கவோ நியாயமான வர்த்தக உரிமைகளை மறுக்கவோ நமக்கு எண்ணமில்லை. இருப்பினும் அரபிக்கடல் மகாராஷ்டிரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதால், சில கட்டுத்திட்டங் களை வெளிநாட்டார் அனுஷ்டிக்க வேண்டும். அப்படி அனுஷ்டித்தால் பகாராஷ்டிர கடற்படை தங்கள் கப்பல் களைத் தாக்காதிருக்கும். அத்தகைய நிலைமையை ஏற்படுத்தப் பின்வரும் நிபந்தனைகளை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

“அவசியமான சமயங்களில் பிரிட்டிஷார் நமக்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும். பம்பாயிலுள்ள கடலோடிப் பரம்பரைகளிலிருந்து மாலுமிகளைப் பொறுக்கி நமது கப்பற்படையில் சேர்த்துக் கொள்ள வசதியளிக்க வேண்டும். நமக்குத் தேவையான வெடி மருந்துகளையும் குண்டுகளையும் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும். வெடிமருந்து உற்பத்திச்சாலை ஒன்று அமைக்க பம்பாயில் இடம் தரவேண்டும், இவற்றுக்கு நீங்கள் ஒப்புக் கொண்டால் பிரிட்டிஷ் கப்பல்களுக்கு இடைஞ்சலேதும் ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்கிறோம்.

கடிதத்தைத் தெளிவாகவும் எந்த இடத்திலும் இடறாமலும் படித்த மிஸ்டர் ப்ரௌன், கவர்னர் மேஜை மீது அதை வைத்து, அது பறக்காமலிருக்க அதன்மீது ஓர் அழகிய இரும்புத் துண்டையும் வைத்தார். கவர்னர் அந்தக் கடிதத்தை ஊன்றிப் பார்த்தார். நீண்ட நேரம் சிந்தனையில் இறங்கினார். பிறகு, “இதைப்பற்றிச் சிந்தித்துப் பதில் கூற மூன்று நாட்களாகும்” என்றார்.

“மூன்று நாட்கள்வரை நான் இங்கு தங்கியிருக்க வேண்டுமா?” என்று வினவினான் இதயசந்திரன்.

“இருந்தால் உத்தமம்” என்றார் கவர்னர். “ஆனால் உங்கள் தலைவர் உத்தரவு எப்படியோ?” என்றும் கேட்டார் சிறிது யோசனைக்குப் பிறகு.

“விரைவில் திரும்புமாறு உத்தரவு எனக்கு. இந்தக் கடிதத்தை உங்களிடம் கொடுத்துவிட்டுப் பதிலைப் பொறுப்புள்ள ஓர் ஆங்கிலேயரிடம் கொடுத்தனுப்புமாறு கேட்டுக் கொள்ளவும் உத்தரவு” என்றான் இதயசந்திரன்.

“பொறுப்புள்ள என்றால்?” “ஸார்கேலுக்குத் தங்கள் ஒப்பந்த விதிகளில் ஏதாவது இரண்டொன்றில் ஆட்சேபணையிருந்தால் அதை அங்கேயே சரிசெய்து தங்களுக்குப் பதிலாகப் பேசக்கூடிய அதிகாரம் வாய்ந்த பிரதிநிதி தேவை. இதனால் ஒப்பந்தம் காலதாமதமாவதைத் தவிர்க்கலாமென்பது ஸார்கேலின் கருத்து.”

கவர்னர் ஏஸ்லாபி புன்னகை பூத்தார். “அதுவும் நல்லதுதான்’ என்றும் கூறினார். பிறகு ஸார்கேலின் கடிதத்தை எடுத்து மிஸ்டர் ப்ரௌனிடம் கொடுத்து அதைப் பத்திரப்படுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார். அடுத்து கேட்டார் இதயசந்திரனை நோக்கி, “நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள்?” என்று.

“எங்கும் தங்கவில்லை. நேரிடையாக வருகிறேன். இனிமேல்தான் ஏதாவதோர் இடம் பார்க்கவேண்டும்” என்றான் இதயசந்திரன்.

“இங்கு கூடத் தங்கலாம்” என்றார் கவர்னர்.

“இல்லை. வெளியிலேயே தங்குகிறேன்.” இதய சந்திரன் பதிலில் பணிவிருந்தது, உறுதியுமிருந்தது.

“வேறு அலுவலும் பம்பாயிலிருக்கிறதா?” கவர்னர் அசட்டையாகத்தான் இக்கேள்வியைக் கேட்டார். இருப்பினும் அதில் பொருள் புதைந்திருப்பதை இதயசந்திரன் உணர்ந்து கொண்டான்.

“ஏதுமில்லை, இருப்பினும் பம்பாயைச் சுற்றிப் பார்க்கலாம்” என்றான் இதயசந்திரன்.

கவர்னர் கண்களில் விஷமச் சாயை தெரிந்தது. “மிஸ்டர் ப்ரௌன்!” என்று அழைத்தார். ப்ரௌன் வந்ததும், “நாளை நடன விருந்துக்குத் தூதருக்கும் ஓர் ! அழைப்புக் கொடுங்கள்” என்று உத்தரவிட்டார்.

மிஸ்டர் ப்ரௌன் ஒருமுறை பேந்த விழித்தார். பிறகு விடுவிடு என்று சென்று மேஜை அறையிலிருந்து ஓர் அழைப்பு அட்டையை எடுத்து, இதயசந்திரன் பெயரை அதில் எழுதிக் கொண்டு வந்து இதயசந்திரனிடம் நீட்டினார்.

“இது எதற்கு எனக்கு?” என்று வினவினான் தமிழன்.

“இதயசந்திரா!” என்று அன்பாகவும் சொந்தம் காட்டியும் அழைத்த கவர்னர், “இதனால் உனக்கு அனுகூலமுண்டு. நீ சந்திக்கப் பிரியப்படுபவர்களும் இந்த விருந்துக்கு வருகிறார்கள்” என்றும் கூறினார்.

“யாரை நான் சந்திக்கப் பிரியப்படுகிறேன்?” இதய சந்திரன் கேள்வியில் சந்தேகம் ஒலித்தது.

அந்தப் பேட்டியின்போது முதன் முதலாகக் கவர்னர் லேசாக நகைத்தார். “உதாரணமாக…” என்று கூறி வாசகத்தை முடிக்காமல் விட்டார்.

“உதாரணமாக? சொல்லுங்கள்?” என்று வினவி னான் இதயசந்திரன் உணர்ச்சிகள் மேலோங்க.

கவர்னர் சர்வ சாதாரணமாகப் பதில் கூறினார் “பானுதேவி” என்று.

Previous articleJala Deepam Part 3 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here