Home Historical Novel Jala Deepam Part 3 Ch20 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch20 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

59
0
Jala Deepam part 3 Ch20 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch20 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch20 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 20 படை பிரித்தல்

Jala Deepam Part 3 Ch20 | Jala Deepam | TamilNovel.in

மணவரைப் பாறையில் இரண்டாவது இரவும் தொடர்ந்த மங்கள நிகழ்ச்சிக்குப் பிறகு மனோதிடத்தை முன்னைவிட ஆயிரம் மடங்கு அதிகமாகப் பெற்றுவிட்ட இதயசந்திரன், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் படை களைப் பிரிப்பதிலும் ஒழுங்கு செய்வதிலும் அதிக துரிதத்தையும் இடைவிடா உழைப்பையும் காட்டினான். மணவரைப் பாறையிலிருந்து இரண்டாவது நாள் எழுந்திருந்ததுமே கடலில் சென்று நீண்ட நேரம் நீராடி விட்டு ஈர ஆடையுடனேயே குலாபி கோவிலுக்குச் சென்று அங்கு அர்ச்சகர்களிடமிருந்து குங்குமப் பிரசாதம் வாங்கி நெற்றியிலணிந்து ஜகதீச்வரியை வணங்கிவிட்டு, விடுவிடு என்று தோர்லாவாடாவுக்கு வந்த தமிழக வீரன் தனது அறைக்குச் சென்று புத்தாடை புனைந்தான். கச்சை கட்டிவாள் தரித்துத் தன் இரு கைத்துப்பாக்கிகளையும் இடையில் செருகிக் கொண்டான். பிறகு வெற்றி நடை நடந்து கனோஜியின் அறைக்குச் சென்று அங்கிருந்த காவலரிடம் ஸார்கேலை உடனடியாகப் பார்க்க வேண்டு மென்று கூறினான். அவன் வேண்டுகோளை அறிவிக்க உள்ளே சென்று திரும்பிய காவலன் அவன் செல்லலாமென்பதற்கு அறிகுறியாகத் தலைவணங்கிச் சைகைக் காட்டியதும், உள்ளே சென்ற இதயசந்திரன் அப்பொழுதும் ஸார்கேல் படுக்கையை விட்டு எழுந் திருக்காததையும், அரைத் தூக்கத்துடனேயே அவனை ஏறிட்டு நோக்கியதையும் கண்டு “மன்னிக்க வேண்டும்…” என்று மெல்லத் துவங்கினான் பேச.

ஸார்கேல் தலையணையிலிருந்து தலையை சிறிது தூக்கி வலது கையில் முட்டுக் கொடுத்துக் கொண்டு அரைக் கண்ணாலேயே அவனை நோக்கி, “என்ன குற்றம் செய்துவிட்டாய்?” என்று வினவினார் தமது .சுயமான கரகரத்த குரலில்.

ஏதோ ரம்பம் அறுப்பதுபோல் எழுந்த அந்த இன்பக் குரலைக் கேட்ட இதயசந்திரன், “குற்றம் செய்ததாக யார் சொன்னது” என்று வினவினான் உள்ளே எழுந்த சினத்தைச் சாதாரணக் குரலில் மறைத்து.

ஸார்கேல், “ஹாவ்!” என்று பெரிதாகக் கொட்டாவி விட்டார். பிறகு, “ நீதான்” என்றும் கூறினார்.

“குற்றமேதும் செய்ததாக நான் கூறவில்லை” என்று சுட்டிக்காட்டினான் இதயசந்திரன்.

“அப்படியானால் மன்னிப்பு ஏன் கேட்டாய்?” என்ற ஸார்கேல் அந்த அறையே அதிரும்படி இடியிடியென நகைத்துப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கால்க ளிரண்டையும் தொங்கவிட்டுக் கொண்டார்.

“ஸார்கேல்! நான் கேட்டது மன்னிப்பு அல்ல” என்று சங்கடத்துடன் கூறினான் இதயசந்திரன்.

“வேறு என்னவோ?” என்ற கனோஜியின் குரலில் விஷமம் இருந்தது. கண்கள் அவன் வலது கையிலிருந்த கங்கணத்தை ஒரு வினாடி கவனித்து அகன்றன.

“ஸார்கேல்! மன்னிப்பு என்ற வார்த்தை சில சமயங்களில் சம்பிரதாயத்துக்காக உபயோகப்படுத்தப்படுகிறது…” என்று துவங்கினான் தமிழன்.

”ஆமாம். முக்கால்வாசிச் சொற்களில் உண்மை கிடையாது. சம்பிரதாயத்துக்கே பேசப்படுகிறது” என்று இடக்காகப் பேசினார் ஸார்கேல்.

“அப்படியல்ல ஸார்கேல்! நான் தங்களை இந்த அறை யில் வந்து எழுப்புவது தவறு. இஷ்டப்பட்டால் தாங்கள் இதற்கு என்னைத் தண்டிக்கவும் செய்யலாம்” என்று மேலும் ஏதோ சொல்லப்போன இதயசந்திரனை, “அது முடியாது” என்று குறுக்கிட்டு மறுத்தார் ஸார்கேல். அத்துடன் லேசாகச் சிரிக்கவும் செய்தார்.

இதயசந்திரன் சித்தம் சிறிது குழம்பவே செய்தது. “ஏன் முடியாது ஸார்கேல்? நீங்கள் இங்கு எங்களனை வருக்கும் தலைவரல்லவா?” என்று வினவினான் அந்தக் குழப்பத்துடன்.

“எனக்கும் பெரிய தலைவியிருக்கிறாள்” என்றார், ஸார்கேல்.

“யாரோ?”

“குலாபி?”

”குலாபியா?”

“ஆம். அவள் கங்கணம் உன் கையிலிருக்கும் வரையில் உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. தெரியாமலா என் பெண் உனக்கு மங்கலக் கங்கணம் கட்டியிருக்கிறாள்” என்ற கனோஜி கட்டிலைவிட்டு தரையில் குதித்து அவனருகே வந்து அவன் முதுகில் அறைந்து சிரித்தார் கடகடவென்று. பிறகு அவன் காதுக்கருகில் குனிந்து, “இன்றும் அதே இடந்தானா?” என்றும் கேட்டார்.

இதயசந்திரன் மிதமிஞ்சிய வெட்கத்தால் தலைகுனிந்து கொண்டான். அந்த முரட்டு மனிதருக்கு என்ன பதில் சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை. ‘சொந்தத் தந்தையல்லவென்றாலும் இவர் வளர்ப்புத் தந்தைதானே? கொஞ்சங்கூட வெட்கமின்றிப் பேசுகிறாரே. எதைப். பேசலாம், எதைப் பேசக்கூடாது என்ற விவரணையே தெரியவில்லையே இவருக்கு’ என்று உள்ளூரச் சொல்லியும் கொண்டான்.

அவன் பதில் பேசாமல் தலை கவிழ்ந்து நிற்பதைக் கண்ட கனோஜி, “இதயசந்திரா! இப்பொழுதுதான் நீ அசல் மாலுமியாகிவிட்டாய். கொள்ளைக் கப்பல்களில் செல்லும் மாலுமிகள், அனுபவத்துக்கு இடம் ஏவல் பொருள்களைப் பற்றிக் கவனிப்பதில்லை. அவனுக்குக் கட்டாந்தரையும் கட்டில் தான்!” என்று சொல்லிச் சிரித்தார். பிறகு கேட்டார், “இத்தனை காலையில் எங்கு, வந்தாய்?’ என்று.

“ஆலிபாக் செல்ல அனுமதி கேட்க வந்தேன்” என்றான் இதயசந்திரன் கடினம் நிரம்பிய குரலில்.

“அவசர அலுவல் இருக்கிறதா ஆலிபாக்கில்?” என்று வினவினார் கனோஜி.

“ஆம். படைகளைப் பிரிக்கவேண்டும். ஒழுங்கு, செய்ய வேண்டும். தங்கள் உத்தரவு அப்படித்தானே?” என்று இதயசந்திரனும் பதிலுக்குக் கேள்வியை எழுப்பினான்.

கனோஜி அவனருகாமையிலிருந்து சிறிது விலகி அறை யின் சாளரத்தை நோக்கிச் சென்று அங்கிருந்த வண்ணம் ஆலிபாக்கைப் பார்த்தார். “ஆம் இதயசந்திரா! படை களைப் பிரித்து உனக்கும் எனக்கும் பாதிப்பாதியாக்கிக் கொள்ள வேண்டியது தான்” என்று கூறிவிட்டு, “அப்பா! மனைவியென்று ஒருத்தி ஏற்பட்ட பின் மனிதனுக்கு. எத்தனை சுறுசுறுப்பு! எத்தனை கடமை உணர்ச்சி!” என்றும் சொன்னார் விஷமமாக. திடீரென அவர் குரல் உறுதியுடனும், அதிகாரத்துடனும் ஒலித்தது. “ஆம், இன்று துவங்கினால்தான் இன்னும் பத்து நாட்களிலாவது நாம் புறப்பட முடியும். சென்று உன் பணியைக் கவனி. நடுப்பகலில் நான் வந்து கலந்து கொள்கிறேன்” என்று உத்தரவிட்டார் அதிகாரக் குரலில் இதயசந்திரனுக்கு.

அவருக்குத் தலை வணங்கி வெளியேறிய இதயசந்திரன் கொலாபாவின் நீர்க்கரைக்கு வந்து படகொன்றை எடுத்துத் தானே துழாவிச் செலுத்திக் கொண்டு அக்கரை அடைந்தான். அக்கரையில் சதா காவல் புரிந்துகொண்டிருந்த வீரர் இருவர் அவன் படகைக் கரையில் இழுத்து விட, படகிலிருந்து குதித்த தமிழன், வீரனொருவனின் புரவியை இரவல் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கால்காத தூரத்தில் இருந்த பிரதான படைத்தளக் கூடாரத்துக்குச் சென்றான். கூடாரத்திலிருந்த உபதலைவர் நால்வரும் அவன் உள்ளே வந்ததும் எழுந்து நின்று வணங்க அவர் களை உட்காரச் சொல்லித் தானும் உட்கார்ந்த இதய சந்திரன் அவர்களை நோக்கி, “இன்று முதல் ஆலிபாக்கி லுள்ள படைகளை இரு கூறாகப் பிரிக்கப் போகிறோம்” என்று அறிவித்தான்.

எப்பேர்ப்பட்ட செய்தியையும் எந்த அதிர்ச்சியோ உணர்ச்சியோ இன்றி வரவேற்கப் பக்குவப்பட்ட கனோஜியின் உபதலைவர் நால்வரும் சரியென்பதற்கு அறிகுறியாகக் தலையை மட்டும் அசைத்தார்கள்.

இதயசந்திரனே மேலும் தொடர்ந்தான்: “இப்பொழுது நமது படையில் சுமார் பத்தாயிரம் பேருக்குக் குறைவாகவே இருக்கிறார்கள். இதை இரண்டாகப் பிரித்தால் படைப் பிரிவு ஒன்றுக்கு ஐயாயிரம் பேருக்குக் குறைவாகவே தேறலாம்” என்று கூறி அவர்களை உற்று நோக்கினான்.

உபதலைவர்கள் மீண்டும் தலையையே அசைத்தார்கள் அவன் கூறியதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாக. அவர்கள் மௌனத்தைக் கவனிக்கவே செய்தான் தமிழன். ஆகவே அதைக் கலைக்கும் எண்ணத்துடன், “இந்த ஐயாயிரத்தில் புரவிப்படை எவ்வளவு பேர் கொண்டதா யிருக்கும்?” என்று ஒரு கேள்வியைத் தொடுத்தான்.

முதன் முதலாக அந்த உபதலைவர்களில் வாலிபனாய் இருந்தவன் வாயைத் திறந்து, “இரண்டாயிரம் பேர் இருப்பார்கள்” என்று பதில் கூறினான்.

அந்தப் பதிலைக் கேட்ட இதயசந்திரன் பிரமித்தான், “இரண்டாயிரம் பேர் கொண்ட புரவிப் படையைக்கொண்டு பேஷ்வாவின் பெரும் புரவிப் படையை எப்படி எதிர்க்க முடியும்?” என்று உள்ளூர எண்ணவும் செய்தான். இருப்பினும் அந்த எண்ணத்தை உதறி, “உங்கள் நால்வரில் இருவர் என்னுடன் வரவேண்டும். இன்னுமிருவர் ஸார்கேலுடன் செல்ல வேண்டும். என்னுடன் யார் வருகிறீர்கள்?” என்று வினவினான் அவர்களை நோக்கி.

நால்வரும் வாயைத் திறக்கவில்லை. அவர்களை ஒரு முறை உற்று நோக்கினான். அவர்களில் மூவர் கனோஜி’ யைப் போல் நடுத்தர வயதுடையவர்கள். கனோஜியுடன் நிலத்திலும் நீரிலும் போர்களைக் கண்டவர்களென்பதை அவர்கள் முக உறுதியும் கண்களும் நிரூபித்தன. கூடாரத்தின் மூலைகளில் தொங்கிக் கொண்டிருந்த அவர்களது வாட்களும் பெரிய முண்டாசுகளுங்கூட அவர்கள் அனுபவத்துக்குச் சான்று கூறின. வாலிபன் மட்டும் சற்றுத் துடுக்குடனிருந்தான். அவன் உடையும் கிட்டத்தட்ட மாலுமிகள் உடை மாதிரியிருந்தது. மகாராஷ்டிரச் சராயும் சட்டையும் மட்டுமே அணிந் திருந்தான் அவன். அவன் வாயைத் திறக்காவிட்டாலும் அவன் கண்களில் இதயசந்திரனுடன் செல்ல வேண்டு மென்ற ஆவலிருந்தது. ஆனால் அந்த ஆவலையும் மற்ற உப தலைவர்களின் பார்வை அடக்கிவிட்டது. அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வராது என்பதை இதயசந்திரன் புரிந்துகொண்டதால் அவன் முகத்தில் கோபம் துளிர்த்தது. “நான் கேட்பதற்குப் பதில் ஏதுமில்லையா?’ என்று வினவினான் சீற்றத்துடன்.

உ.பதலைவர்களில் சற்றுப் பெரியவனாயிருந்தவன் எழுந்திருந்து இதயசந்திரனை நோக்கிக் கூறினான், “படைகளைப் பிரிப்பது முக்கியமான முடிவுகளில் ஒன்று. அப்படிப் பிரிக்கப்பட்டாலும் தங்களுடன் யார் செல்வது என்பது அதைவிடப் பெரிய முடிவு. இந்த முடிவுகளைச் செய்யக் கூடியவர் தளபதி ஒருவர் தான். நாங்கள் இதில் ஏதும் சொல்வதற்கில்லை” என்று.

இதயசந்திரன் கோபம் அதிகப்பட்டதை அவன் முகம் உணர்த்தியது. “கனோஜியின் அனுமதி பெற்று நான் வந்திருக்கிறேன்” என்றான் தமிழன்.

”’அத்தாட்சி ஓலை இருக்கிறதா?” என்று வினவினான், அந்த உபதலைவன்.

“என் வார்த்தை போதாதா?” என்று சீறினான் தமிழன்.

“போதாது” என்று திட்டமாக அறிவித்தான் உபதலைவன்.

இதயசந்திரன் புரிந்துகொண்டான் திட்டமாக, கனோஜி தனக்குத் தலைமைப் பதவி அளித்த பிறகுதான் தன்னிடம் யாரும் பணிவார்களென்பதை. கனோஜி உபதலைவர்களை எப்படித் திட்டப்படுத்தி வைத்திருக் கிறாரென்பதை எண்ணி வியப்படைந்தான். இத்தகைய படைக்குள் யாரும் நுழைவதோ கனோஜி சொன்னதாகச் சொல்லிக் காரியத்தைச் சாதிப்பதோ முடியாத காரிய மென்பதை உணர்ந்து கொண்ட இதயசந்திரன் கூடாரத்தைவிட்டு வெளியே சென்று புரவி ஏறிப் படைத்தளத்தின் ஊடே சென்றான்.

பத்தடி பத்தடி தூரத்திற்கொருமுறை சிறுசிறு கூடாரங்கள் இருந்தன. சாலையில் இருபுறமும் கூடாரங் களும், மரங்களின் அடிகளில் அமைக்கப்பட்டிருந்ததால் சிலர் கூடாரங்களுக்கு உள்ளும் சிலர் வெளியிலுமிருந்தார்கள். புரவிகள் கூடாரங்களுக்கு வெளியே சவாரிக்குத் தயாராக நின்றுகொண்டிருந்தன. அப்பொழுது காலை வேளையாதலால் புரவிகளின் முதுகு கைகால்களைக் காசாரிகள் உருவி விட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு சில வீரர்கள் புரவிச் சேணங்களையும் கடிவாளங்களையும் துடைத்துக் கொண்டிருந்தார்கள். இவைகளைத் தவிர காலையில் காவலைத் துவங்கிய புரவி வீரர்களும் காலாட் படையினரும் வாள்களையும் வேல்களையும் தாங்கி, வழி நெடுகச் சற்று விட்டுவிட்டு நின்றுகொண்டிருந்தார்கள்.

படைவீரர் எங்கும் ஜரூராக இருப்பதைக் கண்ட இதய சந்திரன், படையை கனோஜி எந்தத் துடிப்பில் வைத்திருக்கிறாரென்பதை எண்ணி வியப்பின் வசப்பட்டுக் கொண்டு படைத்தளம் முழுவதையும் சுற்றிப் பார்த்து விட்டு உச்சி நேரத்துக்கு முதலில் தான் பிரவேசித்த கூடாரத்துக்கு வந்து சேர்ந்தான். கூடாரத்தைக் கண்டதும் ஸ்தம்பித்துப் புரவியில் உட்கார்ந்து கொண்டுவிட்டான். நீண்ட நாளாகத் தான் பார்க்காததும், கனோஜி முதன் முதலாகப் பரசுராமபுரத்தருகில் ஏறி வந்ததுமான அந்த வெண்ணிறப் புரவி, வாயிலில் நின்றிருந்தது. அவன் வந்த ஒலி கேட்டதும் சற்றுத் திரும்பிக் கம்பீரமாக அவனைப் பார்த்தது.

கூடாரத்துக்குள் கனோஜி இருப்பதை அந்தப் புரவியே அறிவித்து விட்டதால் இதயசந்திரன் தனது புரவியிலிருந்து கீழே குதித்து அந்தக் கூடாரத்துக்குள் சென்றான். அங்கு கனோஜி நடு ஆசனத்தில் பூரண போருடை அணிந்து உட்கார்ந்திருந்தார் ”வா, உபதளபதி. வா!” என்று இதயசந்திரனை முகமன் கூறி வரவேற்கவும் செய்தார். கூடார வாயிலிலிருந்து இதயசந்திரன் மெல்ல அவர் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கிச் சென்றான். அவரைச் சுற்றிலும் நின்றிருந்த அந்த நான்கு உபதளபதிகளும் அவனுக்குச் சிரம் தாழ்த்தி வணங்கினார்கள். இதயசந்திரன் பதிலுக்குத் தலைதாழ்த்தினான். பிறகு கனோஜியை நோக்கி, “தளபதி அவர்கள் உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்” என்றான்.

கனோஜி, அவன் உட்கார ஓர் ஆசனத்தைக் காட்டினார். அவன் உட்கார்ந்த பிறகும் நீண்ட நேரம் மௌனமாகவே உட்கார்ந்திருந்தார். பிறகு அவனை நோக்கி, “இதயசந்திரா! இந்தப் படையைப் பிரிக்க இரு உபதலைவர்கள் உனக்கு உதவுவார்கள்” என்று கூறிய தன்றி, அவர்கள் யாரென்பதை வலியுறுத்த, அந்த நால்வரில் வாலிபனாயிருந்தவனையும் மற்றோர் உபதலைவனையும் கையால் சுட்டியும் காட்டினார் கனோஜி.

“ஒரு வேண்டுகோள்” என்றான் இதயசந்திரன்.

“சொல் இதயசந்திரா!” என்ற கனோஜியின் கண்கள் நிலைத்தன அவன் முகத்தில்.

“எனக்கு இரு உபதளபதிகள் தேவையில்லை ” என்றான் தமிழன்.

“நல்லது.”

“ஒருவர் போதும்.”

“யாரைக் கேட்கிறாய்?”

“இந்த வாலிபன் போதும்.”

“சரி, அழைத்துச் செல்.”

“இன்னொரு வேண்டுகோள்.”

“என்ன வேண்டுகோள்.”

“படையைத் தாங்களே பிரித்துத் தருவது நல்லது.”

“சரி. அப்படியே செய்வோம்” என்ற கனோஜி, அங்கேயே உட்கார்ந்து கொண்டு காகிதமும் எழுது கோலும் கொண்டு வரச்சொன்னார். காகிதத்தில் விடுவிடு என்று பல குறிகளைப் போட்டார். சில இடங்களைச் சுழித்தார். பிறகு நான்கு உபதலைவர்களையும், இதய சந்திரனையும் அழைத்து, “நன்றாகக் கவனியுங்கள். இதோ சுழிக்கப்பட்டிருக்கும் இடங்களிலுள்ள படைப் பிரிவுகளை விட்டு மற்றப் பிரிவுகளை ஒன்று சேர்த்தால் படை பாதியாகப் பிரிந்துவிடும். சுழித்த இடங்கள் எனக்கு. சுழியா இடங்கள் உபதளபதிக்கு” என்று மிகச் சுலபமாகக் கூறி அந்தக் காகிதத்தை உபதலைவர்களிடம் கொடுத்தார்.

அவர் கூறியபடி படை அடுத்த இரண்டு நாட்களுக்குள் பிரிக்கப்பட்டது. இரண்டு நாளும் இதயசந்திரன் அவன் உத்தரவை உடனடியாக நிறைவேற்றினான் சுகாஜி. மூன்றாவது நாளிரவு தனது படைக் கூடாரத்தி: லிருந்து கண்ணுக்கெட்டியவரை விரிந்து கிடந்த தனது படைப் பிரிவையும் ஆங்காங்கு எரிந்த தீப்பந்தங்களையும் பார்த்து இதயசந்திரன் பெரும் பூரிப்படைந்தான்.. அப்படிப் பூரிப்படைந்து கொண்டிருந்த சமயத்தில் தூரத்தே இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியொன்று வந்தது. அந்த வண்டி தூரத்திலேயே நிறுத்தப்பட்டதும் அதிலிருந்து இறங்கிய உருவம் அவன் கூடாரத்தை நோக்கி நடந்து வந்தது. அதைக் கண்ட இதயசந்திரன் பேரதிர்ச்சி அடைந்தான். கனோஜியை மனமார சபிக்கவும் செய்தான். தன் போர். முயற்சிக்கு அதைவிடப் பெரிய இடையூறு ஒன்றுமிருக்க முடியாதென்றும் சொல்லிக் கொண்டான் தன்னுள்.

Previous articleJala Deepam Part 3 Ch19 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch21 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here