Home Historical Novel Jala Deepam Part 3 Ch22 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch22 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

69
0
Jala Deepam part 3 Ch22 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch22 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch22 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 22 பத்துநாள் திட்டம்

Jala Deepam Part 3 Ch22 | Jala Deepam | TamilNovel.in

இதயசந்திரன் கூடாரத்துக்குள் மஞ்சு எத்தனை ஆனந்தத்திலிருப்பாள், எத்தனை விதமான இன்பங்களை அனுபவிப்பாள் என்பதை எண்ணிப் பார்த்ததால் இதயம் விம்மத் துன்பப் பெருமூச்செறிந்த மிஸ் எமிலி, தனது கூடாரச் சீலையைச் சரேலெனத் தொங்கவிட்டு உள்ளே சென்று தரையிலிருந்த சீலையில் மீண்டும் படுத்துக் கொண்டாளாயினும் அவளுக்கு உறக்கம் அடியோடு வரவில்லை. இதயசந்திரன், கவர்னர் ஏஸ்லாபியைப் பார்க்க வந்த நாளாக அவனுக்கும் தனக்கும் ஏற்பட்ட இணைப்பைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்ததன்றி இணைப்பெல்லாம் மேலொடு நின்றுவிட்டதேயொழியப் பூர்த்தி பெறவோ பூரணத்துவம் அடையவோ இயலாது போய்விட்டதை நினைத்து ஏங்கினாள் இங்கிலாந்தின் ஏந்திழை. அவனும் தானும் சேர்ந்து கவர்னர் நடன விருந்தில் இணைந்தாடியதும், காயமடைந்த நிலையில் தனது பணைத்த மார்பில் அவன் தலை புரளக் கிடந்ததும் அவள் மனத்திலே வலம் வந்ததால் ஒரு துயரப் புன்முறுவல் அவள் இதழ்களிலே இடம் பெற்றது. இத்தகைய நினைப்புகளில் ஆழ்ந்து கடைசியில் நித்திரை வசப்பட்ட மிஸ் எமிலி, மறுநாள் காலையிலும் மஞ்சு இதயசந்திரன் கூடாரத்தின் வாயிலில் நின்றிருந்ததைப் பார்த்து ‘ஒருவேளை இவளும் படையுடன் வருவாளோ’ என்று நினைத்தாள் ஒரு கணம். அதைப் பற்றி அறிய வேண்டுமென்ற அவா இருந்ததால் தனது கூடார வாயிலில் நின்ற வண்ணம் மஞ்சுவைப் பார்த்து முறுவல் கோட்டினாள்.மஞ்சு அன்று காலையில் மிகவும் களைப்பும், அதனா லேயே அழகும் பொருந்திய வதனத்துடனும், சற்றே கலைந்த குழலுடனும் நின்றிருந்தாள். அன்றும் மாலுமி உடையே அணிந்திருந்ததால் அவள் மேல்சட்டையும் கீழ்ச்சராயுங்கூட மிகவும் கசங்கிக் கிடந்தன. அடுத்த கூடாரத்தி லிருந்து மிஸ் எமிலி தன்னை நோக்கியதையும் புன்முறுவல் செய்ததையும் கண்ட மஞ்சு அதன் காரணத்தை உணர்ந்ததால் சிறிது வெட்கச் சாயை அவள் முகத்தில் படர்ந்தது. அதைத் தொடர்ந்து புன்முறுவல் ஒன்றும் இதழ்களில் தவழ்ந்தது.

இருவரும் பரஸ்பர புன்முறுவலுக்குப் பிறகு ஏதும் பேசாமல் சில வினாடிகள் நின்றிருந்தாலும் மிஸ் எமிலியே கேட்டாள் கடைசியாக. “இப்பொழுதுதான் வந்தீர்களா?” என்று ஏதுமறியாதவள் போல .

மஞ்சுவின் முகத்தில் குபீரென்று வெட்கத்தின் சாயை படர்ந்தது. “இல்லை” என்ற ஒரு சொல் மட்டும் உ.திர்ந்தது அவள் உதடுகளிலிருந்து.

“நேற்று இரவு நான் உங்களைப் பார்க்கவில்லையே” என்றாள் மீண்டும் எமிலி.

“நேரங்கழித்து வந்தேன்” என்று இழுத்தாள் மஞ்சு.

“ரொம்ப நேரமோ?”

“ஆம்.”

“என்னை எழுப்பக்கூடாதோ?”

“எதற்கு?”

” என்னுடன் படுத்துக் கொண்டிருக்கலாமே.”

இதைச் சொன்ன எமிலியும் சிரித்தாள், கேட்ட மஞ்சுவும் நகைத்தாள். இந்தச் சிரிப்பைக் கேட்டதாலோ என்னவோ கூடாரத்துக்குள்ளிருந்த இதயசந்திரனும், “என்ன சிரிப்பு அங்கே?” என்று வினவிக்கொண்டே வெளியில் வந்தான். அடுத்த கூடாரத்தில் மிஸ் எமிலி நிற்பதைக் கண்டதும் சிறிது நேரம் அசைவற்று நின்றான்.. பிறகு உள்ளே சென்று விட்டான்.

மிஸ் எமிலி கேட்டாள், “மஞ்சு! ஏன் உபதளபதி’ உள்ளே சென்று விட்டார்?” என்று.

“என்னைக் கேட்டால்?” என்று கூறிய மஞ்சு புன்முறுவலும் செய்தாள்.

“பின் யாரைக் கேட்பது?”

“சுகாஜியைக் கேட்கலாமே?”

“சுகாஜி நேற்றிரவு அவருடன் தங்கவில்லையே!’ இப்பொழுதும் இரு மங்கையரும் நகைத்தார்கள். பிறகு, மஞ்சு தளர் நடை நடந்து மிஸ் எமிலியின் கூடாரத்துக்கு, வந்தாள். அவளுடனே பல் துலக்கி முகங்கழுவி நீராடவும் செய்தாள். பிறகு மிஸ் எமிலியைக் கேட்டாள், ”உன்னிடம் ஏதாவது அதிகப்படி சேலையிருக்கிறதா?” என்று.

“இல்லையே மஞ்சு.”

“வேறு ஏதாவது நான் அணியும்படியாக…”

“ஏன், நீ ஏதும் கொண்டு வரவில்லையா?”

”இல்லை. திடீரெனப் புறப்பட்டு வந்தேன்.”

“என்ன அத்தனை நேரம்? என்ன கொள்ளை போகிறது இங்கே?”

“போ எமிலி.”

“சரி சரி. இரு” என்று கூறிய மிஸ் எமிலி தான் அணியும் ஒரு பிரிட்டிஷ் சராயையும் ஜாக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தாள். அவற்றை அணிந்து அலங்காரம் செய்து கொண்ட மஞ்சு, “மிஸ் எமிலி! என்று இந்தப் படை புறப்படும் தெரியுமா?” என்று வினவினாள், கவலையுடன்.

“இன்னும் பத்து நாள் ஆகும் போல் தெரிகிறது” என்றாள் மிஸ் எமிலி.

“எப்படித் தெரியும் உனக்கு?”

”படை பிரிந்து இரண்டு நாட்களே ஆகின்றன. அவற்றை அணி அணியாக உட்பிரிவுகளைச் செய்து வருவதாகக் கேள்வி.”

“யார் சொன்னார்கள் உனக்கு?”

“கொலாபாவில் பேசிக் கொண்டார்கள்.”

“இங்கு என்ன பேசிக் கொள்கிறார்கள்?”

”இங்கு இன்னும் யாருடனும் நான் பேசவில்லை.”

“இன்று விசாரித்து வை. இன்றிரவும் வருகிறேன்.”

மிஸ் எமிலி நகைத்தாள். “இன்றிரவும் என்ன, நாங்கள் இங்கிருக்கும் வரை ஒவ்வொரு இரவும் வருவாயென்று எனக்குத் தெரியாதா மஞ்சு?’ என்றும் கூறினாள் நகைப்பினூடே.

மஞ்சு அவள் கன்னத்தைப் பிடித்து இழைத்தாள். “தெரியும் தெரியும் உனக்கு” என்று இன்பத்துடன் கூறவும் செய்தாள். பிறகு அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.

”மஞ்சு!” எமிலியின் குரல் எச்சரிக்கையுடன் எழுந்தது.

“ஏன் எமிலி?” என்றாள் மஞ்சு , எமிலியைத் தழுவிய நிலையில்.

‘என்னை எதற்காகக் கட்டிக் கொள்கிறாய்?”

“போ எமிலி!”

“அவர் பார்த்தால் என்ன நினைப்பார்?”

“என்ன நினைப்பாராம்?”

“சீறுவார்.”

“ஏன்?”

“அவர் இருக்கும்போது என்னை…” மிஸ் எமிலி வார்த்தையை முடிக்கவில்லை. முடிக்க முடியவில்லை. அவள் வாயை மஞ்சு பலமாகப் பொத்தினாள்.

சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது. கடைசியில் மிஸ் எமிலியை விட்டு விலகி நின்று கேட்டாள் மஞ்சு, மிஸ் எமிலி! நீ எனக்கு ஒரு வாக்குத் தரவேண்டும்!”

மிஸ் எமிலியின் முகத்தில் சிந்தனை நிலவியது. “என்ன வாக்கு மஞ்சு?” என்ற கேள்வியும் எழுந்தது சந்தேகத்துடன்.

“மிஸ் எமிலி…”’ மஞ்சுவின் குரலில் சற்று வேதனை படர்ந்திருந்தது.

“சொல் மஞ்சு.” மிஸ் எமிலியின் குரலில் அன்பும் பரிதாபமும் கலந்து கிடந்தன.

மஞ்சு சிறிது யோசித்தாள். ஒருமுறை எமிலியை ஏறெடுத்து நோக்கினாள், பிறகு கண்களை மீண்டும் நிலத்தில் நாட்டினாள். தழுதழுத்த துன்பக் குரலில், “எமிலி! எனக்கு உடன்பிறந்தார் யாருமில்லை. தாய் தந்தையரைக் கூட எனக்குத் தெரியாது. நீதான் எனக்கு உடன் பிறந்தவள். நீ. அவருடன் போர் முனைக்குச் செல்கிறாய்…” என்று கூறித் தாமதித்தாள்.

“ஆம் மஞ்சு” என்ற இரண்டே சொற்கள் ஆதரவுடன் உதிர்ந்தன மிஸ் எமிலியின் அழகிய உதடுகளிலிருந்து.

“அதிகமாகப் போனால் நீ கூறியபடி இன்னும் பத்து. நாட்கள் நான் அவரைக் காண வந்துபோவேன். படை நகர்ந்து விட்டால் நீதான் அவருடன் இருப்பாய். போர் முனையில் அவருக்கு ஆபத்து நேராமல் நீ பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் ஸார்கேலின் மகள்.

ஜலதீபத்தின் தலைவியெனப் பிரசித்தி பெற்ற மஞ்சு, பல கப்பல் போர்களைக் கண்ட அந்தப் பெண் மாலுமி, எத்தனையோ பேர் அழிவதையும் கப்பல்களும் கோட்டை களும் சூறையாடப்படுவதையும் அலட்சியமாகப் பார்த்த அந்த ஏந்திழை, அன்று கோழைபோல் மனம் தளர்ந்து பேசுவதைக் கண்ட மிஸ் எமிலி வியப்படையவில்லை எதுவும் தனக்கென்று வரும்போது யாரும் கோழைதான்’ என்று மட்டும் எண்ணினாள். இருப்பினும் கேட்டாள், “மஞ்சு! உபதளபதி போருக்குச் செல்வது இது முதல் தடவையல்லவே” என்று.

“அல்ல.” மஞ்சவின் குரல் அப்பொழுதும் தழுதழுத்துக் கிடந்தது.

“பல கடற்போர்களைக் கண்டவராமே?”

”ஆம்.”

விஜயதுர்க்கத்தை விட்டு வரும் வழியில் காதரைன் வந்த கப்பல்களைப் பிடித்தவரும் அவர்தானாமே?”

“ஆம்.”

”அப்படிப்பட்டவரைப் பற்றி உனக்கு என்ன பயம்?”

மஞ்சு உடனடியாகப் பதில் சொல்லவில்லை, “அப்பொழுது நிலை வேறு எமிலி” என்றாள் முடிவில் மெதுவாக.

“எப்படி?”

“அப்பொழுது அவர் என் காதலர்.”

“உம்…”

“இப்பொழுது கணவர்.”

“இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?”

“எங்கள் நாட்டில் நிரம்ப உண்டு மிஸ் எமிலி. இதோ பார்” என்று தனது கழுத்திலிருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து எமிலியிடம் காட்டினாள் மஞ்சு. “கயிறு!” என்றாள் எமிலி.

“வெறும் கயிறல்ல. எங்கள் இணைப்பின் சின்னம்” என்று கூறிய மஞ்சு, “இதன் புண்ணியம், இதன் தன்மை, இது அளிக்கும் அந்தஸ்து இது இல்லாவிட்டால் ஏற்படும் இழிவு சொல்லத் தரமல்லாதது எமிலி. இதைக் காக்க. அவரைக் காக்க வேண்டும்!” என்றும் சொன்னாள். இதைச் சொன்னபோது மஞ்சுவின் கண்களில் நீர்த் துளிகள் தெரித்தன.
மிஸ் எமிலி, தன் கைத்துணியால் அவள் கண்களைத் துடைத்தாள். “கவலைப்படாதே மஞ்சு. என் உயிரைப் போல் அவரைக் காப்பாற்றி வந்து உன்னிடம் சேர்க்கிறேன். இன்னும் பத்து நாட்களிருக்கின்றன. இதற்குள் ஏன் மனத்தை அலைக்கழித்துக் கொள்கிறாய்? இன்றிரவு வா, மறுபடியும் பேசுவோம்” என்றாள் எமிலி.

மஞ்சுவும் அதை நம்பினாள். இன்னும் பத்து நாட் களுக்குப் பிறகு யோசித்தால் போகிறது என்றுதான் நினைத்தாள். ஆனால் அந்த இரு மங்கையரின் திட்டமும் எதிர்பார்ப்பும் அன்றிரவே குலைந்து போயின. அன்று மாலையே கனோஜி ஆங்கரே திடீரெனத் தனது மகனான சேகோஜியுடனும் மற்ற படைத் தலைவர்களுடனும் திடீரென இதயசந்திரன் படைத் தளத்துக்கு வந்தார். அங்கிருந்த மஞ்சுவைப் பார்த்து, “நீ இங்குதானிருக்கிறாயா?” என்று அலட்சியமாகக் கேட்டுவிட்டு “சரி; நல்ல தாகப் போய்விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் இங்கு மந்திராலோசனை தொடங்கும். தயார் செய்துகொள்” என்றும் கூறினார்.

அடுத்த சில விநாடிகளுக்குள் இதயசந்திரன் கூடாரத் தில் மஞ்சங்களும், நடுவில் ஒரு மேஜையும் கொண்டு வந்து போடப்பட்டன. கனோஜி, நடு ஆசனத்தில் அமர்ந்து மற்றப் படைத் தலைவர்களையும் உட்கார ஆக்ஞாபித் தார். பிறகு சேகோஜியை நோக்கி, ”சேகோஜி! நமக்கு வந்திருக்கும் தகவலைச் சொல்’ என்று உத்தரவிட்டார்.

கனோஜி ஆங்கரேயின் புதல்வனும், கடற்போர் நிபுண னென்று பெயர் வாங்கியவனுமான சேகோஜி படைத் தலைவர்களை நோக்கி, “உபதளபதிகளே! பாஹிராவ் பிங்களேயின் படை பூனாவை விட்டுக் கிளம்பி விட்டது,” என்று அறிவித்தான் திடமான குரலில்.

உபதளபதிகளின் முகத்தில் ஈயாடவில்லை. இதய சந்திரனும்கூட பேரதிர்ச்சியடைந்தான். இத்தனை சீக்கிரம் பூனாவுக்கு பிங்களேயால் வர முடியுமென்றே அவன் நினைக்கவில்லை. பூனாவைவிட்டு நகர்ந்து விட்டா ரென்பது அவனுக்கு ஏதோ நடக்கக் கூடாத ஒரு காரியம் போல் தோன்றவே, “ஆச்சரியம்” என்ற ஒரே சொல்லைக். கூறினான்.

சேகோஜி இதயசந்திரனை உற்று நோக்கினான். “இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஸதாராவிலிருந்து பூனா வர ஒரு வார காலந்தான் ஆகும். அங்கிருந்து போர்காட் வழியாக இங்கு வர இன்னொரு வாரம் பிடிக்கும். அல்லது இரண்டொரு நாள் அதிகமாகும். நாங்கள் ஆங்காங்கு ஒற்றர்களை வைத்திருப்பதால் உடனடியாகச் செய்தி கிடைத்திருக்கிறது. ஸதாராவிலிருந்து பேஷ்வா பிங்களே புறப்பட்ட நாள் முதல் நடப்பதெல்லாம் ஸார்கேலுக்குத் தெரியும்” என்று கூறவும் செய்தான்.

“இதைப்பற்றி என்னிடங்கூட ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே’ என்று கேட்டாள் மஞ்சு.

“நீ அகப்படவில்லை. நேற்றிரவு கூட நீ கொலாபாவில் காணோம்” என்று கூறி இடிஇடியென நகைத்த கனோஜி, படைத் தலைவர்களை நோக்கி, “இன்று முதல் நமது கப்பல்கள் எதுவும் கடலில் உலாவ வேண்டா மென்று சேகோஜிக்கு உத்தரவிட்டிருக்கிறேன். எல்லாக் கப்பல்களும் தரையில் இழுத்து விடப்படவேண்டும். நாம் நிலப்போரில் இறங்குவதால் கடற்புறத்தில். போர் உதவாது. கப்பல்கள் தரையில் இழுத்து விடப்பட்டால் அவற்றை மாற்றார் மரக்கலங்கள் அணுகுவது கஷ்டம். துணிந்து அவர்கள் படகுகளில் இறங்கி வந்தாலோ அல்லது அவர்கள் மரக்கலங்களை கரையருகே கொண்டு வர முயன்றாலோ ஆங்காங்கு கோட்டைகளிலுள்ள பீரங்கிகளும் பாதுகாப்பை முன்னிட்டுக் கடற்கரையில் வைக்கப்படும். பீரங்கிகளும் எதிரி மரக்கலங்களையும் படகுகளையும் தவிடுபொடியாக்கி விடும். ஆகையால் கடலில் தற்காப்பு முறையும் தரையில் முன் சென்று தாக்கும் முறையும் கையாளப்படும்” என்றார்.

இங்கு ஒரு சந்தேகம் கிளப்பினான் இதயசந்திரன். “நாம்தான் பிரிட்டிஷாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விட்டோமே, கடலில் நமக்கு ஏது பயம்?” என்று வினவினான்.

“பிரிட்டிஷார் எதிரிகளாயில்லாதது பெரும் .பாதுகாப்பு நமக்கு. இருப்பினும் போர்ச்சுகீஸியர் இருக்கிறார்கள், ஜன்ம வைரிகளான ஸித்திகளிருக்கிறார்கள், இவர்களையும் நாம் புறக்கணிப்பதற்கில்லை” என்ற கனோஜி ஆங்கரே தமது பையிலிருந்து ஒரு தேசப்படத்தை எடுத்து விரித்து, “இங்கு கவனியுங்கள்’ என்று கூறி எழுந்து நின்றார். படைத்தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று தலை குனிந்து களனித்தார்கள். படைகள் நகர வேண்டிய வழிகள், தாக்க வேண்டிய இடங்கள் முதலியவற்றைச் சுட்டிக் காட்டினார் ஸார்கேல். முடிவில் இதயசந்திரனை’ நோக்கி, “உன் படை நாளைக்கே நகரட்டும். பிங்களே வரும் வழியில் குறுக்கே செல்லாதே, பின்னால் சென்று கல்யாண் கோட்டையில் உட்கார்ந்து.

அவர் திரும்பிச் செல்லும் மார்க்கத்தைத் துண்டித்துவிடு. அவர் திரும்பியதும் தாக்கு” என்று கட்டளையிட்டார் இரைந்த குரலில். பிறகு நிமிர்ந்து நின்று கூறினார், “படைத் தலைவர்களே! இன்னும் பத்தே நாட்கள், நாம் ராஜ்மச்சியிலிருப்போம். ஏன் லேர்ஹ்கட்டிலும் இருப்போம்” என்ற அவர் குரலில் வெற்றி ஒலித்தது.

அந்த வெற்றிக் குரல் படைத்தலைவர்கள் அனைவரை யும் உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. ஆனால் மஞ்சு வின் மனோநிலை வேறாயிருந்தது. அன்று காலையில் தான் அவள் கணவனுடன் பத்து நாளிருக்கத் திட்டம். போட்டாள். பத்து நாள் திட்டம் பஞ்சாய்ப் பறந்தது.

Previous articleJala Deepam Part 3 Ch21 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch23 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here