Home Historical Novel Jala Deepam Part 3 Ch24 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch24 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

74
0
Jala Deepam part 3 Ch24 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book
Jala Deepam Part 3 Ch24 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch24 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 24 இயற்கையின் நீதி

Jala Deepam Part 3 Ch24 | Jala Deepam | TamilNovel.in

இரவில் நிகழ்ந்த இன்பத்திளைப்பின் காரணமாக உடல் எத்தனையோ களைத்திருந்தும், அதை லட்சியம் செய்யாமல் வெள்ளி முளைப்பற்குப் பல நாழிகைகளுக்கு முன்பாகவே கூடாரத்துக்கு வந்துவிட்ட இதயசந்திரன், வாயிலிலிருந்த காவலனை விளித்து சுகாஜியை அழைத்து வர உத்தரவிட்டான்.

சுகாஜி வந்ததும், ”சுகாஜி! டமாரம் சப்திக்கட்டும், படை நகரச் சித்தமாகட்டும். இரு புரவி வீரர்களை அனுப்பி விடிந்த ஒரு நாழிகைக்குள் படை கல்யாண் நகரத்தை நோக்கி நகரவேண்டும் என அறிவித்துவிடு” என்று இதயசந்திரன் உத்தரவிட்டான்.

சுகாஜி தனது புரவி மீதேறிக் காற்றிலும் கடுகி, படைத்தளத்துக்குள் நுழைந்து சென்றான். அடுத்த சில நிமிடங்களில் இரு டமாரங்கள் டமடமவென ஒலி எழுப்பவே படைத் தளம் மிகத் துரிதமாக உயிர் பெற்றெழுந்து, படுத்திருந்த புரவிகள் எழுப்பப்பட்டதால் எங்கும் கனைப்பு ஒலிகளும் வீரர்கள் ஒருவரையொருவர் மராட்டி பாஷையில் விளித்ததால் ஏற்பட்ட குரலோசைகளும், ஆயுத வண்டிகளும், உணவுப் பொருள் வண்டிகளும் பூட்டப்பட்டதால் உண்டான நானாவித சப்தங் களும் கடை இரவின் அமைதியைக் கிழித்தன. சுகாஜியின் ஆணையின் காரணமாகப் படைகளைத் துரிதமாக அணி வகுப்பதற்கு தளத்துக்குள் பாய்ந்து சென்ற இரண்டு புரவி வீரர்களின் குதிரைகளின் குளம்பொலிகளும், துப்பாக்கி களில் குண்டுகள் போடப்பட்டுக் ‘குதிரை’களை இழுத்துச் சரி பார்க்கப்பட்டதால் ஏற்பட்ட டக்டக் என்ற ஒலிகளும், அணிவகுத்த வீரரின் பாதரட்சை சப்தங்களும் இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டிருந்தன. ஆங்காங்கிருந்த கூடாரங்களின் முளைகள் எடுக்கப்பட்டுக் கூடாரங்கள் சுருட்டப்பட்டு வண்டிகளில் ஏற்றப்பட்டன. எங்கும் ஏற்பாடுகள் பரம துரிதமாக நடந்தன.

மற்றவர் துரிதத்துக்கு வழி காட்டும் முறையில் உபதளபதி இதயசந்திரன் போருடை அணிந்து, இடைக் கச்சையில் இரு கைத் துப்பாக்கிகளைச் செருகிக் கொண்டு, வாள் பக்கவாட்டில் தொங்க, செருப்பு சரக் சரக்கென்று ஒலி செய்ய, கூடாரத்துக்கு வெளியில் வந்து கூடாரத்தையும் பிரித்துச் சுருட்டுமாறு உத்தரவிட்டான். அவர்கள் சுருட்ட முற்பட்டதும் மஞ்சுவைக் கூடாரத்துக்குப் பின்புறம் சற்றுத் தூரத்திலிருந்த மரத்தின் மறைவுக்கு அழைத்துச் சென்று ஒரு முறை அவளை இறுகக் தழுவி னான். “வருகிறேன் மஞ்சு! சீக்கிரம் சந்திப்போம்” என்றும் கூறினான்.

மஞ்சு பதில் சொல்லவில்லை. ஒருமுறை அப்புறமும் இப்புறமும் பார்த்தாள் மருண்ட மானைப்போல். பிறகு அவன் இதழ்களைத் தன் இதழ்களால் மூடினாள் மூர்க்கத் தனமாக. சட்டென்று விலகி ஓடி, சற்று எட்ட இருந்த தனது புரவிமீது ஏறி, கண் தலை தெரியாமல் அதை விரட்டிக் கொண்டு கொலாபாவை நோக்கிப் பறந்தாள்.

இதயசந்திரன் நின்ற இடத்திலேயே நின்றான். அவள் அளித்த இதழ் அமுதம், அவன் உயிருக்குள்ளும் பாய்ந்து விட்டதாகத் தோன்றியது அவனுக்கு. பிறகு உணர்ச்சி களை உதறிக்கொண்டு தனது புரவியிருக்குமிடம் வந்தான். அப்புரவியின் முதுகைச் சற்றுத் தட்டிக் கொடுத்துவிட்டு, நாற்புறமும் நோக்கினான். எங்கும் படை நகரத் தயாரா யிருந்தது. சற்று முன்பு அந்த வெளியிலிருந்த நூற்றுக் கணக்கான கூடாரங்கள் மறைந்துவிட்டன, பக்கத்திலிருந்த மிஸ் எமிலியின் கூடாரங்கூட மறைந்து விட்டது.

சற்று தூரத்திலிருந்த ஓர் ஒற்றைப் புரவிக்கூண்டு வண்டி யில் ஏறிக் கொண்டிருந்தாள் எமிலி. உடைப் பெட்டி களுடனும் மருந்துப் பெட்டிகளுடனும் உட்கார்ந்து கொண்ட அவள், தன்னை கூர்ந்து நோக்கிய உப தளபதியைப் பார்த்துப் புன்முறுவலும் கோட்டினாள்.

படை நகரத் தயாரானதும் சுகாஜி, உபதளபதியிடம் வந்து, “எல்லாம் சித்தமாகிவிட்டது தளபதி” என்று அறிவித்தான்.

“கூடாரங்களை என்ன செய்தாய்?” என்று கேட்டான் இதயசந்திரன் சுகாஜியை நோக்கி.

“பிரித்துச் சுருட்டி வண்டிகளில் ஏற்றி விட்டேன். இரண்டு கூடாரங்களைத் தவிர மற்றவை கொலாபாவை நோக்கிச் செல்லும்” என்றான் சுகாஜி.

“நல்லது. துரிதமாகச் செல்லவேண்டிய படைக்குக் கூடாரங்களின் மிகுதி பெறும் இடையூறு” என்ற இதய சந்திரன், சட்டென்று தனது புரவியின்மீது ஏறிக்கொண்டான். ஒரு புரவி மீதிருந்த இரு டமாரங்கள் மீண்டும் சப்திக்க, படை ஒரே சீராக நகர்ந்தது.

அணிவகுத்த படை செல்வதை சுகாஜியுடன் பார்த்துக் கொண்டே நின்ற இதயசந்திரன் முதலில் புரவிப்படையும் பிறகு பீரங்கி வண்டிகளும், கடைசியாக மிஸ் எமிலியின் வண்டியும் சென்றதைக் கண்டுவிட்டுத் திருப்தியடைந்து சுகாஜியை நோக்கித் திரும்பினான். “நன்று சுகாஜி! நன்று! படை அணிவகுப்பு கனகச்சிதமாக இருக்கிறது” என்று அவனைப் பாராட்டிவிட்டுப் புரவியைத் தட்டி விட்டான். சுகாஜியும் புரவியில் தளபதியைப் பின் தொடர்ந்தான்.

இதயசந்திரன் தனது படையைச் சிறிது தூரம் வரை ஸஹ்யாத்ரி மலைப்பகுதிக்குச் செலுத்தி, பிறகு மீண்டும் சமவெளிக்கு வந்தான். மறுபடியும் சிறிது தூரம் மலை வழிகளில் அழைத்துச் சென்றான். கனோஜி அவனுக்குக் கூறியபடியே மலைப்பகுதியில் சென்றாலும், சமவெளியில் வந்தாலும் கல்யாண் நகரத்தைக் குறி வைத்தே சென்றான் இதயசந்திரன். அப்படிச் சென்றாலும் நடுப்பகல் உணவுக்குத் தவிர வேறு இடைவேளை எதுவும் படைக்கு அளிக்காததாலும் முதல் நாளே பாதி தூரத்தைக் கடந்து விட்ட இதயசந்திரன் ஓர் உச்சியை அடைந்ததும் அங்கிருந்த காட்டில் படைகளை இரவுக்குத் தங்க உத்தர விட்டான். “சுகாஜி! படைகள் தங்கட்டும்; இளைப்பாறட்டும். ஆனால் நள்ளிரவு தாண்டியதும் இரண்டு நாழிகைக்குள் மீண்டும் புறப்பட வேண்டுமாதலால் கூடாரங்களை அடிக்க வேண்டாம். மரத்தடிகளில் தங்கட்டும். வண்டிகளை மட்டும் அவிழ்த்து விட்டுக் குதிரைகளைத் தேய்த்து விடுங்கள்” என்று உத்தர விட்டான். அவற்றைப் படை வீரர்களுக்கு அறிவிக்க சுகாஜி சென்றதும், குதிரையிலிருந்து இறங்கிய இதய சந்திரன், ஒரு மரத்தடியில் சென்று உட்கார்ந்து கொண் டான். அவன் உட்கார்ந்த சில விநாடிகளுக்குள் அவன் மரத்தை அணுகிய மிஸ் எமிலி சற்று எட்ட இருந்த இரண்டு மூன்று குண்டு கற்களை இணைத்து அடுப்பு மூட்டி உணவு தயாரிக்கத் துவங்கினான்.
காட்டில் ஏற்பட்டிருந்த பல பந்தங்கள் ஆங்காங்கு ஒளி வீசின. இதயசந்திரன் இருந்த இடத்திலிருந்து சற்று எட்ட அவனுக்காக நடப்பட்டிருந்த ஒரு பந்தம் அவன் கைத்துப்பாக்கிகள் மீதும் வாளின் மீதும் கழுத்திலிருந்த ஆபரணத்தின்மீதும் ஒளி வீசி அவற்றுக்குத் தனிமெருகைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கு வீரர்கள் நடமாட்டமும் குதிரைகளின் கனைப்பும் அந்தக் காட்டிற் குக் கூடத் தனிப்பட்ட உயிரைக் கொடுத்துக் கொண் டிருந்தன. ஆனால் அவற்றில் எந்த ஒலியையும் காதில் வாங்காமல் இதயசந்திரன் மஞ்சுவின் நினைப்பில் ஆழ்ந்திருந்தான். முந்திய இரவு அதே நேரத்தில் கிடைத்த இன்ப நாடகம் அவன் சித்தத்தில் வலம் வந்து கொண்டிருந்தது. அதன் விளைவாகச் சற்று எட்ட குந்திய நிலையில் உணவு தயாரித்த மிஸ் எமிலியைக்கூட அவன் கண்கள் காண மறுத்தன.

ஆனால் உணவு தயாரித்த நிலையிலும் மிஸ் எமிலி அவன்மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டுதானி’ ருந்தாள். அவன் நினைப்பு மஞ்சுவைச் சுற்றி ஓடுகிறது என்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டாள் அவள். அதே சமயத்தில் பம்பாய் நிலைமையும் அவளுக்கு நினைப்பு வரத்தான் செய்தது. மயங்கிய நிலையில் பம்பாயில் உபதளபதி தனது மார்புமீது படுத்துக் கிடந்ததை அவள் இப்பொழுது நினைத்துப் பார்த்தாள். தன்னுடன் அவன் நடன மண்டபத்தில் இணைந்தாடிய நிலையையும் மணமேடையில் கண்டாள். அப்பொழு தெல்லாம் அவன் தன்னிடம் மயங்கியதை எண்ணியதால் ‘எப்படியும் இரண்டு மூன்று நாளைக்குள் இவர் கொஞ்சம் மாறாமலா போகிறார்?’ என்று தனக்குள் ஒரு கேள்வியும் எழுப்பிக் கொண்டாள்.

அந்தக் கேள்வியுடன் ஏதேதோ எண்ணங்கள் கலந்து மோத, தயாரித்த உணவை ஒரு தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு உபதளபதியை அணுகிய மிஸ் எமிலி, “உணவு வந்திருக்கிறது” என்று கூறித் தட்டை நீட்டினாள் அவனை நோக்கி.

பதிலேதும் கூறாமல் தட்டை அவன் வாங்கிக் கொண்டதும் மீண்டும் அடுப்பண்டை சென்று அதன் பக்கத்திலிருந்த இன்னொரு தட்டில் தனக்கும் உணவு வைத்துக் கொண்டு ஒரு குப்பியில் குடி நீரும் எடுத்துக் கொண்டு உபதளபதிக்கு எதிரில் வந்து உட்கார்ந்து சாப்பிடத் துவங்கினாள். இருவரும் உணவை மௌன மாகவே முடித்துக் கொண்டு கை கழுவி நீர் அருந்தியதும், தட்டுகளைச் சுத்தம் செய்து பழையபடி பையில் அடைத்து விட்டுத் திரும்பி வந்து இதயசந்திரன் பக்கத்தில் மரத்தின் இன்னொரு பகுதியில் எமிலியும் சாய்ந்து, கால்களை மடித்து அரைவாசி உட்கார்ந்தபடியும் அரைவாசி படுத்த படியும் இருந்தாள்.

இப்படியே பேச்சு ஏதுமின்றி அவ்வப்பொழுது இருவரிடமிருந்தும் ஓரிருமுறை வெளி வந்த பெருமூச்சைத் தவிர வேறு ஒலி ஏதுமின்றி உட்கார்ந்திருந்த அந்த இருவரில் முதன் முதலாக இதயசந்திரனே அவளை நோக்கித் திரும்பி, “படுத்துக் கொள்வது தானே மிஸ் எமிலி?” என்று கூறினான். கூறியது மட்டுமல்ல அவளைப் பார்க்கவும் செய்தான்.

மிஸ் எமிலி அரைவாசி உட்கார்ந்திருந்த அந்த நிலை மிக ஒய்யாரமாயிருந்தது பார்ப்பதற்கு. சற்று எட்ட இருந்த தீபம் அவள் தேகத்தில் லேசாக விழுந்திருந்ததால் அவள் வெண்ணிற மேனியின் திறந்த பாகங்கள் பொன்னைப்போல் காட்சியளித்தன. குத்திட்ட கால்களின் விளைவாக தொடைப் பகுதியில் பெரிதும் இறங்கிவிட்ட கௌன் அவள் வழவழப்பின் வனப்பைப் பளபளக்கச் செய்தது. குழல்கள் மிக மிருதுவாகத் தெரிந்தன. கௌனுக்குள் விம்மிக் கிடந்த மார்பக எழுச்சிகளும் இதய சந்திரனிடம் ஏதோ செய்தி சொல்ல ஆசைப்பட்டன போல் எட்டிப் பார்த்தன. முழங்காலும் அதற்குக் கீழே இருந்த ஒரே சீரான வழவழத்த ஆடு சதையும் இதய சந்திரன் உள்ளத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன.

அவன் கண்கள் சென்ற இடங்களை மிஸ் எமிலி கடைக் கண்ணால் கண்டு உள்ளூர நகைத்துக் கொண்டாள். வெளிக்குத் தெரியும்படி ஒரு புன்முறுவல் மட்டும் வெளியிட்டாள். அதைக் கண்ட இதயசந்திரனுக்குக் காரணமில்லாமல் கோபம் வந்தது.

“நான் ஒரு கேள்வி கேட்டேன்” என்று உஷ்ணம் சொட்டும் சொற்களை உதிரவிட்டான் உபதளபதி.

“என்ன கேள்வியோ?” என்றாள் மிஸ் எமிலி.

“படுத்துக் கொள்வது தானே என்று கேட்டேன்” என்றான் இதயசந்திரன்.

“ராணுவ விதிகளில் உபதளபதி படுத்துக் கொள்ளச் சொன்னால் படுத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒன்றா?” என்று வினவினாள் எமிலி. சற்று நகர்ந்து அவன் தோள் மீது தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

இதயசந்திரன் பெரும் சங்கடத்துக்குள்ளானான். “எமிலி எமிலி” என்று பரிதாபத்துடன் குரல் எழுப்பினான்.

இருமுறை அவன் உச்சரித்த பெயரில் ‘மிஸ்’ விட்டுப் போயிருந்ததை அவள் கவனித்தாள். அன்பு சொட்டும் குரலில் அதைச் சொல்லவும் சொன்னாள், “இதுதான் சரி” என்று.

“எதுதான் சரி எமிலி?” என்று இதயசந்திரன் கேட்டான்.

“இப்பொழுது கூப்பிடும் முறை.”

“என்ன முறை?”

“மிஸ் இல்லாத முறை.’’

“எமிலி!”

“இப்படிக் கூப்பிட்டால் என்ன அழகாயிருக்கிறது!”

“அழகாயிருக்கலாம் எமிலி, ஆனால் முறையாகாது.”

“ஏன்?”

“நான் மணமானவன்.”

”அதனாலென்ன?”

“இன்னொரு பெண்ணுக்கு இடம் கொடுப்பதோ உரிமையுடன் அழைப்பதோ…”

அவன் வாசகத்தை முடிக்கும் முன்பே மிஸ் எமிலி கலகலவென நகைத்தாள். இதயசந்திரன் அவளைத் திரும்ப நோக்கினான். முரட்டுத்தனமாக அவள் கைகளைப் பிடித்து அழுத்தி, “ஏன் நகைக்கிறாய்?” என்றான்.

எமிலி அவன் கைகளை அழுத்தியதை லட்சியம் செய்ய வில்லை. இன்னும் அழுத்திப் பிடித்தால்கூட நல்லது என்று நினைத்தாள். மெள்ள அழைத்தாள் அவனை, “உபதளபதி” என்று.

“ஏன் எமிலி?” என்று கேட்டான் இதயசந்திரன்.

“நீங்கள் சொல்வது மனித நீதிக்கு ஒத்தது தான். ஆனால், இயற்கையின் நீதி வேறு” என்றாள்.

”அதென்ன நீதியோ?” என்று கேட்டான் இதய சந்திரன்.

“விதிவசத்தால் ஆணும் பெண்ணும் தனித்துவிடப் படும்போது ஏற்படும் நீதி. அது மனித சட்டங்களுக்குப் புறம்பானது. எதிலும் கட்டுப்படாதது” என்று கூறினாள் எமிலி.

அத்துடன் அவன் தோளிலிருந்து தலையை எழுப்பிக் கன்னத்துடன் கன்னத்தை இழைத்தாள். ஒரு விநாடி வாளாவிருந்தான் இதயசந்திரன். பிறகு மெள்ளச் சொன்னான்: “எமிலி, எதுவாயிருந்தாலும் என்னை நம்பிய மஞ்சுவை நான் கைவிடலாமா? அவளுக்குத் துரோகம் செய்யலாமா?”

“நீங்கள் அவளுக்கும் துரோகம் செய்ய வேண்டாம், எனக்கும் துரோகம் செய்ய வேண்டாம்” என்றாள் எமிலி இன்பமும் துன்பமும் கலந்த குரலில்.

“என்ன சொல்கிறாய் எமிலி?” என்று வினவினான் உபதளபதி.

“மஞ்சுவை நீங்கள் மீண்டும் சந்திக்கும்போது நானிருக்க மாட்டேன்” என்றாள் எமிலி.

“ஏனப்படிச் சொல்கிறாய் எமிலி?”

“நான் சொல்லவில்லை.”

“வேறு யார் சொல்வது?”

“என் மனம்.”

“மனமா?”

ஆம். இதுவரை அது என்னிடம் பொய் சொன்ன தில்லை” என்று கூறினாள் எமிலி. பிறகு என்ன நினைத்துக் கொண்டாளோ, திடீரென எழுந்து அவனைப் பிரிந்து சற்று தூரத்திலிருந்த தனது வண்டிக்குள் சென்று படுத்துக் கொண்டாள். இதயசந்திரன் மனம் ஒரே நிலையில் இல்லாததால் காட்டில் அங்குமிங்கும் நடந்தான்.

கடைசியில் அவள் வண்டியிருந்த இடத்துக்குச் சென்று வண்டிக்குள் தலையை நுழைத்து, “எமிலி!” என்றழைத்தான். பதில் ஏதும் கிடைக்கவில்லை. இரு மலர்க் கரங்கள் எழுந்து அவன் கழுத்தை வளைத்துக் கொண்டன.

Previous articleJala Deepam Part 3 Ch23 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here