Home Historical Novel Jala Deepam Part 3 Ch27 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch27 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

61
0
Jala Deepam part 3 Ch27 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch27 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch27 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 27 கல்யாண் சமவெளிப் போர்

Jala Deepam Part 3 Ch27 | Jala Deepam | TamilNovel.in

நடுநிசி வந்துவிட்டதை நட்சத்திரங்கள் கண் சிமிட்டி அறிவித்த காலத்தில் கல்யாண் நகரிலிருந்து மிகுந்த எச்சரிக்கையுடனே கிளம்பினான் தமிழனான இதய சந்திரன். சுமார் ஆயிரத்து சொச்சம் காலாட்படை வீரரை மட்டும் கல்யாண் நகரப் பாதுகாப்புக்காக நிறுத்தி விட்டு முரசறைவிப்போ வேறு சத்தங்களோ எழாத வண்ணம் அம் மாநகரை விட்டு வெளியே சென்ற இதய சந்திரன், அடுத்த ஒரு நாழிகை வரை ஏதும் பேசாமல் மௌனமாகவே புரவியில் அமர்ந்து சென்றான். தன் பக்கத்தில் ஒல்லியாய் ஆஜானுபாகுவாய்ப் புரவியிலமர்ந்து வந்து கொண்டிருந்த அந்த முகவெட்டுத் தழும்புள்ள வீரனை ஒருமுறை கூடத் திரும்பிப் பார்க்காமலும், அவன் தன்னுடன் வந்ததை அறவே வெறுத்துக் கொண்டும், படை களின் முகப்பில் சென்ற இதயசந்திரன் மனம் பெரும் எரிமலையாயிருந்தது. எந்த ஒரு மனிதனைச் சந்திக்கவும் அவசியமானால் கொன்றுவிடவும் அவன் மகாராஷ்டிரம் வந்தானோ எந்த ஒரு மனிதன் ஓர் அபலையின் கண்ணீருக் குக் காரண பூதனோ, அதே மனிதன் கனோஜியிடமிருந்து கடிதத்துடனும் புலி நக ஆபரணத்துடனும் தன்னை நாடி வந்ததே பெரும் எரிச்சலாயிருக்க, அவன் தன்னுடன் போர் முனைக்கும் பிடிவாதத்துடன் வந்தது அந்த எரிச்சலை உச்சநிலைக்கே கொண்டு சென்றது. போதாக்குறைக்கு அந்த மனிதன் தன் பக்கத்திலேயே வந்து கொண்டிருந்தது, இதயசந்திரன் உள்ளத்தை எரிமலையாக்கியிருந்தது.

இவனைத் தனக்குத் தெரியுமென்று கனோஜி ஆங்கரே சென்ற இரண்டு ஆண்டுகளாகக் தன்னிடம் ஏதுமே சொல்லாதது பெரும் விந்தையாயிருந்தது தமிழனுக்கு. இவன் கனோஜியின் கையாள் என்றால் தஞ்சை அரண்மனையிலுள்ள அபலையின் அன்பு மைந்தனைத் தூக்கி வந்ததில் கனோஜிக்கும் பங்கிருக்குமென்று அவன் உள்ளம் எடுத்துக் காட்டியது. போருக்குச் செல்லும் நிலையில் இத்தனை மனக் கசப்பையும் மனக் குழப்பத்தையும் கனோஜி விளை வித்து விட்டது போருக்கே நல்லதுதானா என்று தனக்குத் தானே கேட்டுக்கொள்ளவும் செய்தான் தமிழன். தனது படையைப்போல் மூன்று பங்கு படைக்குமேல் அழைத்து வந்திருக்கும் பேஷ்வாவுடன் மோதுவதும் போர் புரிவதும் தெள்ளிய சிந்தனையிருந்தாலே அசாதாரணமான காரியம். குழப்பமடைந்த மன நிலையில், மன உளைச்சலில், நான் எப்படி நிதானமாகச் சிந்திக்க முடியும்? படைகளை நடத்த முடியும்?” என்று எண்ணி எண்ணிப் பெரும் துயரத்துக்கும், கனோஜி மீது ஆத்திரத்துக்கும் உள்ளா னான் தமிழன். அந்தச் சமயத்தில் அசம்பாவிதமாக ஒரு கேள்வியைத் தொடுத்தான் முகவெட்டு வீரன். “பேஷ்வாவை எங்காவது மலைச்சரிவில் சந்திக்கப் போகிறீர்களா அல்லது சமவெளியில் சந்திக்கப் போகிறீரகளா?” என்று வினவினான்.

உபதளபதியின் கண்கள் சீற்றத்துடன் திரும்பின அவன் மீது ஒரு முறை. ஏதோ சொல்ல வாயெடுத்த உதடு கள் சொற்களை உதிர்க்கவில்லை. உபதளபதி வேறு புறம் திடீரெனத் திரும்பி, சற்று எட்ட வந்து கொண்டிருந்த சுகாஜியைத் தன்னருகில் சைகை செய்து வரவழைத்து அவன் காதில் கிசுகிசுவென ஏதோ கூறினான். சரியென்ப தற்கு அறிகுறியாகத் தலையசைத்த சுகாஜி, மீண்டும் படையின் பின் வரிசைக்குள் சென்று அங்கிருந்த இரண்டு மூன்று வீரர்களிடம் ஏதோ கூற, அந்த வீரர்கள் புரவியில் வெகு வேகத்தில் முன் வரிசைக்கு வந்து கண்ணிமைக்கும் நோக்கில் முகவெட்டு வீரனைச் சூழ்ந்து கொண்டனர்.

அதைக் கண்டு வெகுண்ட முகவெட்டு வீரன் தனது அகன்ற வாளிடம் கையைக் கொண்டு போக முயற்சித்த சமயத்தில் இதயசந்திரன் சொற்கள் கடுமையுடன் ஒலித் தன. “கையை வாளின்மேல் வைக்காதே, வைத்த மறு வினாடி நீ பிணமாகிவிடுவாய்” என்று. அதனால் மேலும் வெகுண்டு திருப்பிய முகவெட்டு வீரன் கண்களை, உப தளபதியின் கைத் துப்பாக்கியின் பயங்கரக் குழல் உற்று நோக்கிக் கொண்டிருந்தது. முகவெட்டு வீரன் முகத்தில் ஏற்கனவேயிருந்த கொலைக்களை அதிகமாகச் சுடர் விட்டது. “கனோஜியின் தூதன் நான்” என்று கூறினான் சினத்துடன் அவன்.

“உன்னிடம் கடிதம் கொடுத்தபோதே தூது முடிந்து விட்டது” என்று சுட்டிக் காட்டினான் இதயசந்திரன் வெறுப்புடன்.

“என்னுடன் சிவாஜி மகாராஜாவின் ஆபரணம் இருக்கிறது. அதிருக்கும் வரை என்னை யாரும் தொட முடியாது” என்று அறிவித்தான் முகவெட்டு வீரன்.

“அந்தக் கஷ்டத்தை நீக்கிவிடுவோம்’ என்ற இதய சந்திரன் கைத்துப்பாக்கியை அந்த வீரன் முகத்துக்குக் குறிவைத்த வண்ணமே தனது புரவியை அவன் புரவியுடன் இணைத்து அவன் கச்சையிலிருந்த புலிநக ஆபரணத்தை எடுத்துத் தன் கச்சையில் செருகிக்கொண்டான். அடுத்த விநாடி முகவெட்டு வீரனைச் சூழ்ந்திருந்த வீரர்களையும் நோக்கி, ”தூதுவரைப் படையின் கடைசியிலிருக்கும் வண்டியொன்றில் அடைத்து வையுங்கள்” என்று கூறி விட்டு, “சுகாஜி! நீ வா என்னுடன்” என்று அவனை அழைத்துக்கொண்டு முன்னேறினான்.

அந்த முகவெட்டு மனிதன் தனது பக்கத்திலிருந்து நீங்கியதே பெரும் சுமை மனத்திலிருந்து இறங்கியது போலிருந்தது இதயசந்திரனுக்கு. சிவாஜி மகாராஜாவின் புலி நக ஆபரணம் கச்சையில் ஏறியது மிதமிஞ்சிய தைரியத்தை அளித்ததன்றி, அப்சல்கானை அழித்த கையிலிருந்த கங்கணமல்லவா இது? இந்தச் சமயத்தில் எனக்கு இது கிடைத்தது அதிர்ஷ்டந்தான்’ என்ற எண்ணத்தையும் மகிழ்ச்சியையும் உபதளபதியின் உள்ளத்தில் தோற்று வித்தது. அடுத்த இரண்டு நாழிகைகளுக்கெல்லாம் போர்காட்டை அடுத்த கல்யாண் சமவெளியில் ஊர்ந்து வந்த பேஷ்வாவின் பெரும் படையைப் பார்த்தபோது பெரும் மகிழ்ச்சியுடனேயே அதைப் பரிசீலித்தான் உபதளபதி.

சுமார் பதினையாயிரம் வீரர்களிருந்த அந்தப் பெரும் படை ஏதோ பெரும் பிசாசு ஒன்று படுத்துக்கொண்டிருப் பது போன்ற பிரமையை அளித்தது இதயசந்திரனுக்கு. அந்தப் படை அதிக அரவமேதுமின்றி மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்ததால் பொழுது புலருமுன்னே கல்யாண் நகரை விழுங்கிட பேஷ்வா பிங்களே திட்டமிட்டிருக்கிறாரென்பதைப் புரிந்து கொண்டான் தமிழக வீரன். அந்தப் பெரும் படை தனது படையைவிட மிக அதிகமா யிருந்தாலும் அதில் பலவீனம் அதிகமிருப்பதை அதன் அமைப்பிலிருந்தே புரிந்து கொண்டான் உபதளபதி. பேஷ்வா பிங்களே சம்பிரதாய மார்க்கத்தில் பீரங்கிப் படையை முன் பகுதியில் வைத்துப் படை அமைப்பு செய்திருந்ததையும், அதையடுத்துப் புரவிப் படையும், புரவிப் படையை அடுத்துக் காலாட் படையுமிருந்ததையும் கவனித் தான். போர் நேருக்கு நேர் நடந்தால் பேஷ்வா படை யின் முகப்பிலுள்ள பீரங்கிகள் தனது படையில் பாதியை அழித்துவிட முடியுமென்பதையும், பிறகு பீரங்கிப் பிரயோகத்தை நிறுத்திப் புரவிப் படையினர் வாட்களையும், கைத்துப்பாக்கிகளையும் கொண்டு பாய்ந்தால், எண்ணிக்கையின் அதிகத்தாலேயே பேஷ்வா தன்னை நசுக்கி விட முடியுமென்பதையும் புரிந்து கொண்டான் உபதளபதி. இப்படித்தான் பேஷ்வாவைச் சந்திக்கும் சமயத்தில் பின்புறத்தில் தாக்குவதாக முன்பு கனோஜி கூறியிருந்ததும் அவனுக்கு நினைவு வந்தது. அவர் அனுப்பிய செய்தியில் அதைப்பற்றி ஏதும் தகவலில்லாததை எண்ணிப் பார்த்து, ‘கனோஜி எப்படி வருவார்? எப்போது வருவார்?’ என்ற கேள்வியையும் உள்ளூர எழுப்பிக் கொண்டான்.

பிறகு ஒரு முடிவுக்கும் வந்து கையை பேஷ்வாவின் படைகளை நோக்கிக் காட்டி, “பார்த்தாயா சுகாஜி அந்தப் படையை?” என்று வினவினான்.

சுகாஜி கூறினான் சாதாரணமாக, “பார்த்தேன்” என்று .

“என்ன புரிந்து கொண்டாய்?” என்று எழுந்தது அடுத்த கேள்வி உபதளபதியிடமிருந்து.

“நமது படையைவிட அது மூன்று மடங்குக்கு மேல் பெரியது” என்றான் சுகாஜி.

“உம்.”

“பீரங்கிகள் முதல் வரிசையில் இருக்கின்றன. நாம் அப்படையை அணுகினால் பீரங்கிகளின் குண்டுகளால் அழிக்கப்படுவோம்” என்றான்.

“உம்.”

“மீதியுள்ளவர்களை அடுத்துவரும் புரவிப் படை அழிக்கும்.”

“உம்.”

“ஸார்கேலுக்குச் செய்தி கொண்டு விரையவும் ஆளிருக்காது.”

நிலைமையை மிக நன்றாக சுகாஜி புரிந்து கொண்டு விட்டது பற்றி மகிழ்ச்சியடைந்த உபதளபதி தன் கையில் வைத்திருந்த தூரதிஷ்டிக் கண்ணாடியைக் கண்ணில் பொருத்தி எதிரிப்படையை நீண்ட நேரம் ஆராய்ந்தான். படையின் நடுவில் புரவி வீரர்களுக்கிடையில் பெரும் புரவியொன்றின் மீது தலையில் முண்டாசுடனும் கழுத்தில் பெரும் நவரத்ன மாலையுடனும் அமர்ந்திருந்த பேஷ்வா பிங்களேயையும் பார்த்தான். பேஷ்வா பரம உற்சாகத்தி லிருப்பதை அவர் முகம் காட்டியது. ‘நல்லது பேஷ்வா, நல்லது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட இதய சந்திரன், தூரதிருஷ்டிக் கண்ணாடியை சுகாஜியிடமும் கொடுத்து, “சுகாஜி! இதன்மூலம் எதிர்ப்படையைப் பார்” என்றான். சுகாஜி பார்த்து முடிந்ததும் கூறினான், ”சுகாஜி! நமது படையிருக்குமிடம் சிறிது மேடு, அவரது படை நகர்ந்து வருவது பூர்ணமான சமவெளி. நமது புரவிப் படையை இரண்டாகப் பிரித்துவிடு. நீ ஒரு. பகுதியைப் பக்கவாட்டில், இடது புறமாக அழைத்துக் கொண்டு பேஷ்வாவின் பீரங்கிப் படைக்கும் சற்றுப் பின்னால் சென்று விடு. நான் ஒரு பகுதியைப் பக்கவாட்டில் வலது புறமாக அழைத்து வருகிறேன். எதிரியைத் தாக்கும் சமயம் வந்ததும் நான் ஆகாசத்தில் கைத்துப்பாக்கியால் சுடுகிறேன். ‘உடனே நான் வலது புறத்திலும் நீ இடது புறத்திலும் வெகு வேகத்துடன் பேஷ்வாவின் புரவிப் படையை ஊடுருவுவோம். பீரங்கிகள் நேர் எதிர்ப்புறம் வாயை வைத்துக் கொண்டிருப்பதால் நம்மீது எதிரி குண்டு வீச முடியாது. பீரங்கிகளைத் திருப்பிக் குண்டு வீசினால் நம்மோடு பேஷ்வா படையும் நாசமடையும்” என்று.

சுகாஜி புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலை யசைத்தான். “பீரங்கிகளை அடுத்துள்ள புரவிப் படை யின் கடை வரிசையைத் தாக்கு. பீரங்கிகளைத் திருப்பினால் முதலில் பேஷ்வா புரவிப்படைதான் பாதிக்கப்படும்” என்றும் வினவினான் இதயசந்திரன்.

சுகாஜி அதற்கும் தலையசைத்தான். “நமது பீரங்கிப் படையையும் இரண்டாகப் பிரித்துவை. காலாட்படைகள் பின்னாலிருக்கட்டும். நம்மையும் மீறி எதிரிகள் முன்னேறினால் பீரங்கிகள் அவர்கள்மீது சீறட்டும். காலாட்படை துப்பாக்கிகளைக் கொண்டு புரவிகளைச் சுடட்டும், புரவி யிழந்த வீரர்கள் ஓடி வரும்போது காலாட்கள் வாட்களேந்தி பாயட்டும்” என்றான். உள்ள படையைக் கொண்டு எதிரியை எத்தனைத் திறமையாக எதிர்க்க முடியுமோ அத்தனைத் திறமையான திட்டத்தை இதய சந்திரன் வகுத்து விட்டதைக் கேட்டதால் சுகாஜி பெருமை யும் புளகாங்கிதமும் அடைந்தான். “உயிரிருந்தால் மீண்டும் சந்தித்துத் தங்களை அடிபணிகிறேன் உபதளபதி!” என்று கூறிவிட்டுச் சென்றான் சுகாஜி.

இரவு நான்காம் ஜாமத்தை எட்டிக் கொண்டிருந்தது. அடுத்து நிகழப் போகும் பயங்கரத்தை நினைத்தோ என்னவோ விண்மீன்கள் லேசாக நடுக்கம் காட்டின. தூரத்தேயிருந்த இரண்டொரு மலைக்காடுகளிலிருந்து துஷ்ட மிருகங்களின் அலறல்கூடக் கேட்டது. ஆனால் எந்தச் சத்தத்தையும் காட்டாமல் மெல்ல இரு பிரிவுகளாக ஊர்ந்த இதயசந்திரன் புரவிப்படையின் இரு பகுதிகளும் பேஷ்வா படையின் விலா பக்கங்களை அணுகிக் கொண்டிருந்தன. வருகிற ஆபத்தை அறியாத பேஷ்வா மிகக் கம்பீரமாகத் தமது படையை நடத்திக் கொண்டு முன்னேறினார். திடீரென துப்பாக்கி வெடியொன்று கேட்டதும், அதைத் தொடர்ந்து தடதடவென பக்கவாட்டு மேட்டு நிலங்களிலிருந்து காற்றிலும் வேகமாக வந்த இரு புரவிப்படைகள் தனது விலாப் பகுதிகளில் பாய்ந்து விட்டதையும் கண்ட பேஷ்வா திகிலடைந்தார்.

அத்தகைய பெரும் படைக்குத் தலைமை தாங்கி வந்தது பேஷ்வா பிங்களேயைத் தவிர வேறு யாரா யிருந்தாலும் அப்படித் திகிலடையக் காரணமிருக்காது. பேஷ்வா மட்டும் தனது புரவிப்படையைப் பக்கவாட்டில் படர விட்டு எதிரியின் புரவிப்படைகளைத் தாக்கியிருந்தால் அவரது படை ஊடுருவப்பட்டிருக்காது. எதிரி யின் கதியும் அதோகதியாக முடிந்திருக்கும். ஆனால் பேஷ்வா பிங்களேக்கு சாமர்த்தியம் லவலேசமுமில்லையென்பதை இதயசந்திரன் கண்ணிமைக்கும் நேரத்தில் புரிந்துகொண்டான். பிங்களேயைப் பற்றிக் கனோஜி போட்ட மதிப்பு எத்தனை சரியானது என்பதையும் நினைத்துப் பார்த்தான்.. அந்த நினைப்புகளால் மிகுந்த தைரியமும் ஆவேசமும் கொண்டு வெகுவேகமாக பேஷ்வாவின் புரவிப்படையின் கடைப் பகுதியைத் தாக்கி ஊடுருவினான். நேர் எதிர்ப் பக்கத்தில் சுகாஜியும் நுழைந்தான்.

திடீரென்று மூண்டுவிட்ட அந்தப் போர் ஒரு நாழிகைக்குப் பயங்கரமாக நடந்தது. இதயசந்திரனும் சுகாஜியும் புரவிப்படையின் கடைசிப் பகுதியை ஊடுருவி யதும் பேஷ்வா பிங்களே முதலில் தனது பீரங்கிகளைத் திருப்பப் பார்த்தார். அதனால் தனது படைக்கு ஹானி ஏற்படுமென்று அறிந்ததால் புரவிப்படைப் போரையே சிறிது நேரம் அனுமதித்தார். இதயசந்திரன், சுகாஜி இவர்கள் வேகம், எதிர்பாராத தாக்குதல், அந்தத் தாக்குதலால் புரவிப் படையிலிருந்து காலாட்படை பிரிக்கப்பட்டது. இந்த ஆரம்ப அனுகூலங்களால் பேஷ்வா பாதிக்கப்பட்டாலும், வெகு சீக்கிரம் பேஷ்வாவின் படையின் எண்ணிக்கை பலம் தன்னை ஆக்ரமிப்பதை இதயசந்திரன் புரிந்துகொண்டான். அடுத்த ஒரு நாழிகை நேரந்தான் போரைத் தான் சமாளிக்க முடியும் என்றும், இறுதியில் பேஷ்வாவின் கையே ஓங்குமென்பதும் அவனுக்கு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளங்கவே அவன் வெகு மும்முரமாகவே போரிட்டான். அவன் கை வாள் வெகு வேகமாகச் சுழன்றது. பலரை வெட்டியது. பலர் மார்பில் பாய்ந்தது, பலர் வாட்கரங்களைச் செயலறச் செய்தது. இப்படிப் போரிட்டுக் கொண்டே எதிர்ப் படையை ஊடுருவி அவன் பாதி தூரம் வருவதற்கும், சுகாஜியும் பாதி தூரம் ஊடுருவி வந்து அவனைச் சந்திப்பதற்கும் சரியாயிருக்கவே, இருவருமாகச் சேர்ந்து ஊடுருவிய இடைவெளியை அதிகப்படுத்த மும்முரமாகப் போரில் இறங்கினார்கள். அவ்விருவர் தலைமையில் அவர்கள் படை வீரர்கள் வெறி கொண்டவர்களைப் போல் கூச்சலிட்டுக் கொண்டும் சிரித்துக் கொண்டும் பயங்கரமாகப் போரிட்டனர்.

ஆனால் நேரம் ஏற ஏற இதயசந்திரன் படை வேகம் குறையலாயிற்று, அவன் திட்டப்படி பக்கவாட்டில் எட்ட வந்த அவன் பீரங்கிகள் எதிரிகள் மீது குண்டு வீசியுங்கூட எண்ணிக்கையின் உக்கிரம் வீரத்தை மெல்ல சளைக்கவே செய்தது. அதை உணர்ந்த இதயசந்திரன் ”ஹர் ஹர் மகாதேவ்’ என்ற வீரக் கூச்சல் எழுப்பினான். அதைத் தொடர்ந்து அவன் படையில் மட்டுமல்ல, பக்கவாட்டி லிருந்த மேட்டு நிலத்திலிருந்தும் அதே கூச்சல் எழும்பி வானையே பயங்கரமாகப் பிளந்தது. அந்த ஒலியைக் கேட்ட பேஷ்வா திரும்பிப் பார்த்தார். கனோஜியின் வெண்ணிறப் புரவி காற்றிலும் கடுகி வந்து கொண்டிருந்தது. தூரத்தில் அதைத் தொடர்ந்து வந்தன ஆயிரம் புரவிகளுக்கு மேல். இன்னொரு ஆயிரம் புரவிகள் சற்றுத் தள்ளி வந்தன மற்றொரு வரிசையில். அந்த இரண்டு வரிசைப் புரவிகளும் பேஷ்வாவின் காலாட்படைக்குள் இரண்டிடங்களில் புகுந்து ஊடுருவிச் சென்றன.

அந்த இரண்டு வரிசைப் புரவிகள் புகுந்த அதே நேரத்தில் மேட்டுப் பகுதியிலிருந்து பெரும் பீரங்கிகளின் குண்டுகள் பேஷ்வா பீரங்கிப்படைமீது விழுந்தன. பீரங்கிகளை இழுத்து வந்துவிட்ட நிலத்தில் நின்ற சில மாலுமிகள் பெரிதாகக் கூவினர், நகைத்தனர். பீரங்கி களைத் திருப்பித் திருப்பிக் குண்டு மாரி பொழிந்தனர். பெரும் படையிருந்தும் கனோஜி. இதயசந்திரன் இருவரின் பெரும் போர்த் தந்திரத்தாலும் பேஷ்வாவின் படை அவ்விருவராலும் நான்காகப் பிரிக்கப்பட்டதாலும், கனோஜியின் படை வேகத்தைக் கண்டு அவர் படை திகிலும் குழப்பமும் அடைந்துவிட்டதாலும், கல்யாண் போரைப் பேஷ்வா பிங்களே அன்று இழந்தார். ஆகவே, கனோஜி அவரைச் சிறை செய்து தன் பின்னால் வரும்படி அழைத்ததும் பேசாமல் அவருக்குப் பின்னால் புரவியைச் செலுத்தினார் பேஷ்வா. அப்படிச் சென்றபோது பின்னால் ஒருமுறை திரும்பிப் பார்த்தார் பேஷ்வா. எங்கும் பீரங்கிக் குண்டுகளின் புகைச்சலும், நாசமடைந்த படையின் விபரீத நிலைகளும் அவர் கண் முன்பு எழுந்தன. மாண்டுகொண்டிருந்த வீரர்களின் மரண ஒலிகள் அவர் காதில் ஈயமெனப் பாய்ந்தன. பேஷ்வாவின் நாசியிலிருந்து சோகப் பெருமூச்சொன்று வெளிவந்தது. மகாராஜா ஷாஹுவின் கொங்கணி வெற்றிக் கனவு அந்தப் போரில் சீரழிந்துவிட்டதை உணர்ந்து கொண்டார் பிங்களே. மகாராஷ்டிரத்தின் எதிர் காலம் கனோஜியின் கையில் சிக்கிவிட்டதையும் சந்தேகமறப் புரிந்து கொண்டார்.

Previous articleJala Deepam Part 3 Ch26 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch28 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here