Home Historical Novel Jala Deepam Part 3 Ch28 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch28 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

68
0
Jala Deepam part 3 Ch28 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch28 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch28 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 28 மருத்துவ மனை

Jala Deepam Part 3 Ch28 | Jala Deepam | TamilNovel.in

சரக்கில்லாத மனிதன் சரக்கில்லாத எழுத்தைப் போன்றவன். சந்தர்ப்பத்தால் உயர் நிலையடைகிறான், உண்மையான சோதனை வந்ததும் விழுந்து விடுகிறான். பேஷ்வா பாஹிராவ் பிங்களே அப்பேர்ப்பட்ட மனிதர் களில் ஒருவர். பதவியின் பெயரும் அலங்காரங்களும் அவருக்கு உதவியிருக்கக் கூடுமானால் அவர் அழைத்து வந்த சைன்னியத்தின் பலத்திற்கு அவரை யாரும் முறியடித் திருக்க முடியாது. கனோஜியின் பின்னால் யுத்தரங்கத்திலிருந்து கைதியாக, பரம பரிதாப நிலையில் அவர் சென்றிருக்க அவசியம் நேர்ந்திருக்காது.. மகாராஜா ஷாஹுவின் தயவால் தகுதிக்கு மேற்பட்ட பதவியை ஏற்றுக் கொண்ட காரணத்தால், வெறும் படாடோபத்தின் காரணமாகப் பிங்களே அன்று கனோஜியின் பின்னால் புரவியில் தலைகுனிந்த வண்ணம் சென்றார். அப்படிச் சென்றபோது அவர் முகத்தில் வெறுப்பும் வியப்பும் கலந்து கிடந்தது. ‘இத்தனை பெரிய சைன்னியத்தை இந்தக் கடற்கொள்ளைக்காரன் எப்படி மொத்தம் நாலாயிரத்துச் சொச்சம் வீரர்களைக் கொண்டு முறியடித்து விட்டான்?’ என்று எண்ணிப் பார்த்ததால் வியப்பிருந்தது. அவர் இதயத்தில். ‘கேவலம் ஒரு கொள்ளைக்காரனிடம் சிக்கிக் கொள்ளும் தலையெழுத்து எனக்கு ஏற்பட்டதே!’ என்று உள்ளூரச் சொல்லிக் கொண்டதால் வெறுப்பு விரிந்தது வியப்புக் குறியுடன் கலந்து. இத்தனையிலும் பேஷ்வா தமது கம்பீரத்தை மாத்திரம் சிறிதளவும் விடர்மலும், உள்ளூர இருந்த பிடிவாதத்தின் காரணமாக உதட்டை நன்றாக மடித்துக் கொண்டு தமது மீசையை அவ்வப்பொழுது தடவி விட்டுக் கொண்டும் புரவியில் சென்றார்.
முன் சென்ற கனோஜி அவரைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. போர்க்களத்தை விட்டுப் புறப்பட்டுப் போவதற்கு முன்பு ஆணையை இதயசந்திரனுக்கு இடவும் இல்லை. காலப் பிரமாணம் தவறாத இசைவல்லவனைப் போல் சரியான சமயத்தில் போர் அரங்கத்தில் தோன்றிப் போரை முடித்தார். பிங்களேயைப் பிடித்தார். புறப்பட்டார் கல்யாண் நகரை நோக்கி. இதயசந்திரனும் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்பட்டானில்லை. சுகாஜி புரவியில் அவசரத்துடன் வந்து “ஸார்கேல் கிளம்பி விட்டார்” என்று அறிவித்ததும், “சரி. அவர் போகட்டும், நீ வா, நமக்கு வேலையிருக்கிறது” என்று கூறினான். பிறகு பிரிட்டிஷார் செய்தி அறிவிக்கும் ஒரு ஒலிப்பெருக்கிக் குழாயை வாயில் வைத்துக்கொண்டு, பேஷ்வாவின் வீரர்களே! உடனடியாக ஆயுதங்களைக் கீழே போட்டு விடுங்கள். பீரங்கி வீரர்கள் பீரங்கிகளை விட்டு முன்னால் வந்து விடுங்கள்” என்று அறிவித்தான் பெரிதாக. மற்றும் இரு வீரர்களிடம் அதேமாதிரி குழாய்களைக் கொண்டு செய்தியை முழக்கினான். பிறகு சுகாஜியை அழைத்து, ”சுகாஜி! உயிரிழந்தோரை அந்த இடங்களிலேயே அடக்கம் செய்துவிட ஏற்பாடு செய். குற்றுயிரும் குலை உயிருமா யிருப்பவர்களைப் புரவிகள்மீது குறுக்கே படுக்க வைத்தோ, நமது ஆயுத வண்டிகளில் ஏற்றியோ நேராக கல்யாண் நகருக்கு அனுப்பிவிடு. எதிரிகளின் பீரங்கி வண்டிகளை நமது வீரர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். மீதி ஆயுதங்களைக் கட்டுக் கட்டாகக் கட்டி வண்டிகளில் போட்டுக் கொண்டு வரச் சொல்” என்று உத்தரவிட்டுத் தனது புரவியை மேட்டு நிலத்துக்குச் செலுத்தி அங்கு நின்ற வண்ணம் ஏற்பாடுகளைக் கவனிக்கலானான்.

சுகாஜி உபதளபதியின் உத்தரவை மிகத் திறமையுடன் நிறைவேற்றினான். படுகாயமுள்ளவர்களை முதலில் வண்டிகளிலும் புரவிகளிலும் நகருக்கு அனுப்பி வைத்தான். பிறகு சரணடைந்த எதிரிப் படை வீரரை தனது வீரர்களின் பெரும் வளையத்துக்குள் கொண்டு வந்தான் பீரங்கிகளைத் தனது படை பீரங்கிகளுடன் சேர்த்துக் கொண்டான். பீரங்கிகளை இழுத்துச் செல்லவும் உத்தரவிட்டான். அத்தனையும் ஒரு பெரும் ஊர்வலம் போல் கல்யாண் நகரை நோக்கி நகர்ந்தது. பேஷ்வா படைகளுக்குப் பெரும் சோக ஊர்வலம் அது. கனோஜியின் படைகளுக்கு அது வெற்றி விருந்து. கனோஜியின் வீரர்களில் பலர். மாலுமிகளானபடியாலும் பல கப்பல்களையும் ஊர்களையும் கொள்ளையடித்துப் பழகியவர் களானபடியாலும், பெரும் கூச்சல் போட்டுக் கொண்டும் களிவெறிகொண்டு ஆடிக்கொண்டும் சென்றார்கள். பேஷ்வாவின் உக்கிராண வண்டிகளிலிருந்து மதுக் குப்பிகளைப் பல வீரர்கள் எடுத்துக் குடித்துவிட்டு வெறி பிடித்துச் சிரித்தார்கள். தோல்வியடைந்த வீரர்களில் சிலரை கனோஜியின் மாலுமிகள் கட்டிக் கொண்டு முத்தமும் இட்டார்கள். ”பேஷ்வாஜி! பேஷ்வாஜி” என்று கேலிக் கூச்சலும் போட்டார்கள்.

மேட்டு நிலத்தில் புரவியில் நின்று இத்தனையும் கவனித்த இதயசந்திரனுக்கு அந்த நிகழ்ச்சிகள் பெரும் வெறுப்பைத் தந்தன. ஆனால் அவை அவன் காணாத காட்சியல்ல. கப்பல்கள் அகப்பட்டாலும் கனோஜியின் வீரர்கள் செய்யும் அட்டகாசத்தின் மற்றொரு காட்சிதான் அந்த நிலப்போரின் முடிவிலும் அவன் கண்டது. இருப்பி னும் பகைவனுக்கு அருளும் இந்துக்களின் பண்பாடு உள்ள அவன் இதயம் அந்தக் காட்சிகளை வெறுக்கவே செய்தது.. ஆயினும் அவன் செய்வதற்கு ஏதுமில்லை. அங்கு கனோஜியின் படை வீரரை ஏதும் சொல்லவோ கட்டுப்படுத்தவோ தனக்கு அதிகாரமில்லையென்பதை அவன் உணர்ந்து கொண்டான். ஆயினும் அவன் இதயத்துள் இன்னொரு பயமும் கவிந்து கொண்டது. கனோஜியின் வீரர்கள் கல்யாண் நகரத்தைச் சூறையாடிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம்தான் அது.

அந்த அச்சத்தைத் தானும் ஏற்றுக் கொண்டது போலவும் அதனால் கோபம் கொண்டவன் போலவும் சிவந்த முகத்துடன் கதிரவன் தோன்றினான்.

பீரங்கிப் புகைச்சலாலும், பலவிடங்களில் கிடந்த தனித் தனிப் பிணங்களாலும் மிகுந்த பயங்கர சொரூபத்துடனிருந்தது கல்யாண் சமவெளி. தவிர, தரையில் தோய்ந்து காயாமலிருந்த மனித ரத்தமும் புரவிகள் ரத்தமும் சூரியனின் ரத்த நேத்திரங்களுடன் கலந்துவிட்டன போல் கதிரவன் செவ்வொளியில் பளபளத்தன. புரவியில் அமர்ந்த வண்ணம் அந்தக் காட்சியைப் பார்த்த இதய சந்திரன், “ஹிந்து சமுதாயத்தை வேறு யாரும் அழிக்க வேண்டியதில்லை. ஹிந்துக்களே பரஸ்பரம் தங்களை அழித்துக் கொள்வார்கள்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அதைச் சொல்லிக் கொண்டதன் விளைவாகப் பெருமூச்சொன்றும் அவனிடமிருந்து எழுந்தது.

போர்வெளியைச் சுத்தப்படுத்தித் தனது கடன்களை முடித்துக் கொண்டு இதயசந்திரன் கல்யாண் நகருக்குத் திரும்பும்போது உச்சிவேளை வந்துவிட்டது. போர் நடந்த போது ஏகாக்ர சித்தனாய் அதில் லயித்துவிட்ட இதயசந்திரனுக்குத் தனது கடமை முடிந்ததும், தான் வண்டியிலடைத்த முகவெட்டு வீரனின் நினைப்பு வந்தது. அதுவும் தான் தங்கியிருந்த இருப்பிடத்துக்கு வந்த பிறகு தான் அவன் நினைப்பு வந்தது. உடனே சுகாஜியைக் கேட்டான், ”சுகாஜி, கனோஜியின் தூதன் என்ன ஆனான்?”

அப்பொழுதுதான் விழித்துக் கொண்ட சுகாஜியும், “அடடே! போர் மும்முரத்தில் அவனைக் கவனிக்காமல் விட்டு விட்டேனே!” என்று கூறினான் பதைபதைத்து.

“வா, அவனை முதலில் கண்டுபிடிப்போம்” என்று கூறிய உபதளபதி தனது இருப்பிடம் சென்று மிஸ் எமிலியைத் தேடினான். எமிலி அங்கில்லையென்றும், மருத்துவமனையில் இருப்பதாகவும் அங்கிருந்த வீரர்கள் கூற, “மருத்துவமனையா! எங்கேயிருக்கிறது அது?” என்று வியப்புடன் வினவினான் இதயசந்திரன்.

“உபதளபதி போருக்குச் சென்றதும் இங்குள்ள நகரத் தலைவர்களை மிஸ் எமிலி அழைத்து, காயமடைந்தவர்கள் வந்தால் சிகிச்சை செய்ய இடம் கேட்டார்கள். நகரத் தலைவர்கள் கல்யாண் நகரின் ஒரு கோடியிலிருந்த இரண்டு சத்திரங்களைக் காட்டினார்கள். அந்தச் சத்திரங் களைச் சுத்தி செய்து பாய்களை விரித்துக் காயமடைந்த வர்களுக்கு சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தாள் வெள்ளைக்காரி. அதன் முகப்பில் ‘ஹாஸ்பிடல்’ என்றும் எழுதிவிட்டாள். அங்கு மிஸ் எமிலியின் அனுமதியின்றி யாரும் நுழையவும் கூடாதென்று உத்தரவும் இட்டிருக்கிறார்கள்” என்று விளக்கினார்கள் இரு வீரர்கள்.

“சுகாஜி! நான் சென்று எமிலியைப் பார்க்கிறேன். நீ சென்று ஸார்கேலிடம் பிடிபட்ட வீரர்கள், ஆயுதங்கள் இவற்றின் எண்ணிக்கையையும் மற்ற விவரங்களையும் கூறு” என்று உத்தரவிட்டு அங்கிருந்து புறப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றான். நகரக் கோடிக்கு அவன் ‘சென்றதும் தூரத்திலேயே ஒரு பெருந் துணியில் ‘ஹாஸ்பிடல்’ என்று எழுதியிருந்தது. அதை அவன் புரவி அணுகியதும் அங்கிருந்த நகரவாசிகள் இருவர் குதிரை லகானைப் பிடித்து அவனை இறங்கும்படி கேட்டுக் – ‘கொண்டார்கள்.

“என்னை இறங்கச் சொல்ல யாருக்கு அதிகாரம் இருக்கிறது?” என்று வியப்புடன் கேட்டான் இதயசந்திரன்.

“இது ஹாஸ்பிடல், இங்கு டாக்டர் உத்தரவுதான் செல்லும்” என்றான் ஒருவன்.

“யாரது டாக்டர்?”

“மிஸ் எமிலி.”

“நர்ஸ் எப்பொழுது டாக்டர் ஆனாள்?”

நகரவாசிகள் இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தார்கள். அந்தச் சமயத்தில் உள்ளிருந்து எழுந்தது எமிலியின் கணீரென்ற குரல், “யாரங்கே சத்தம் போடுவது?” என்று. குரலைத் தொடர்ந்து எமிலியும் வந்தாள் வெளியே. இரைந்து கொண்டிருந்தது இதய சந்திரன் என்று அறிந்துங்கூட சற்று உஷ்ணத்துடனேயே கேட்டாள். ‘எதற்குச் சத்தம் போடுகிறீர்கள்?” என்று.

“என்னை உள்ளே வரத் தடைசெய்ததற்கு?” என்றான் தமிழன்.

“உள்ளே என்ன வேலை உங்களுக்கு?” என்று கேட்டாள் எமிலி.

“ஒருவனைப் பார்க்க வந்திருக்கிறேன்” என்றான் இதயசந்திரன்.

அவன் பார்க்க வந்திருப்பது யாரை என்பதைப் புரிந்து கொண்டாள் எமிலி. அவள் முகத்தில் சிந்தனை படர்ந்தது. பிறகு மெள்ளச் சொன்னாள், “யாரை என்பது புரிகிறது எனக்கு” என்று. ‘அவன் இங்குதானிருக்கிறானா?”

“ஆம்.”

“நான் உடனே பார்க்கவேண்டும் அவனை.’’

“முடியாது”

“ஏன்?”

மீண்டும் சிந்தித்தாள் எமிலி பிறகு, ஒரு முடிவுக்கு வந்து, ”சரி வாருங்கள்; புரவி இங்கே இருக்கட்டும்,” என்று கூறவே இதயசந்திரன் புரவியை விட்டு இறங்கி அவளைத் தொடர்ந்து சத்திரத்துக்குள் சென்றான். முதல் சத்திரத்தில், எங்கும் காயமடைந்த வீரர்கள் முனகிக் கொண்டிருந்தார்கள். சிலர் மயக்க மருந்தின் விளைவு தெளியாமல் பிணம் போல் கிடந்தார்கள். மற்றும் சிலர் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள். அந்தக் கூட்டத்தில் அவன் படை வீரரும் இருந்தார்கள், எதிரி வீரர்களும் இருந்தார்கள். அவன் வீரர் சிலர் அவனை வணங்க கையை எடுத்து, முடியாமல் திணறினார்கள். இன்னும் சிலர் பார்வையாலேயே வணங்கினார்கள்.

சாதாரண சமயமாயிருந்தால் இதயசந்திரன் அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்திருப்பான். ஆனால் அந்த முகவெட்டு வீரனைப் பார்க்கும் ஆவலாலும் அக்கறையாலும் அவர்களைப் பார்த்து தலையை மட்டும் அசைத்துக் கொண்டு சென்றான். எமிலி இதயசந்திரனைச் சத்திரத்தின் ஒரு கோடியிலிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றாள். அங்கிருந்த ஒரு கட்டிலில் கிடந்தான் அந்த முகவெட்டு வீரன் பல காயங்களுடன். முகத்திலும் தலையிலும் பல இடங்களில் பெரும் கட்டுகளிருந்தன அவனுக்கு. கண்கள் மூடிக்கிடந்தன. மூச்சிருப்பது மட்டும் தெரிந்தது, எழுந்து தாழ்ந்த மார்பிலிருந்து.

மிஸ் எமிலியை நோக்கித் திரும்பிய இதயசந்திரன், “இவன் பிழைப்பானா?” என்று வினவினான்.

”சொல்ல முடியாது” என்றாள் மிஸ் எமிலி.

“பிழைக்க வேண்டும்” என்று சீறினான் இதய சந்திரன்.

“இவன் என்ன அத்தனை முக்கியம்?” என்று வினவினாள் மிஸ் எமிலி.

“ஒரு சாம்ராஜ்யத்தின் பெரும் ரகசியம் இவன் இதயத்தில் புதைந்து கிடக்கிறது. என் ஆணையொன்றும் அதில் சிக்கியிருக்கிறது,” என்று ஆவேசத்துடன் கூறினான் தமிழன்.

Previous articleJala Deepam Part 3 Ch27 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch29 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here