Home Historical Novel Jala Deepam Part 3 Ch31 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch31 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

60
0
Jala Deepam part 3 Ch31 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch31 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch31 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 31 வாளினும் வலிது

Jala Deepam Part 3 Ch31 | Read Jala Deepam | TamilNovel.in

கனோஜியே அஞ்சிய அந்த பாலாஜி விசுவநாத் அப்படியொன்றும் பயங்கரத் தோற்றமுடையவரல்ல. ஒல்லியான தங்க நிற மேனியும், நீண்ட நாசியில், சாம்பல் நிற விழிகளும், கோபி சந்தனம் துலங்கிய விசாலமான நெற்றியும் உடைய பாலாஜி விசுவநாத்தைப் பார்ப்பவர் கள் யாரும் அவரைப் பெரிய வீரரென்றும் சொல்லமாட்டார்கள். இருப்பினும் கல்யாண் நகரும் அதைத் தொடர்ந்து ராஜ்மச்சி, லோஹ்காட் கோட்டைகளும் கனோஜியின் கைகளுக்கு மாறிய செய்தி கிடைத்ததும் மகாராஜா ஷாஹு தன் படைத்தலைவர்கள் யாரையும் யோசனைக்கு அழைக்கவில்லை. புரவியேறக்கூட அறியாத பாலாஜி விசுவநாத்தைத்தான் அழைத்தார். பெரும் மதிள்களாலும், ஸ்தூபிகளாலும், வாயில்களாலும் பதினேழு விதமான பலத்தையும் அழகையும் பெற்றிருந்த தால் ‘ஸாத்ஆரா’ என்ற பெயருடையதாய், காலத்தில் ஸதாரா என்று பெயர் மருவிவிட்டாலும், மாறாத திடத்தையும் அழகையும் பெற்று மங்களதேவியென்ற மலைக் கோட்டையுடன் விளங்கியதால் மிக அழகாகவும் கம்பீர மாகவும் காட்சியளித்த ஸதாராவின் அடாலத் வாடாவில்: (நீதி மண்டபம்) சிங்காதனத்தில் அமர்ந்திருந்த சிவாஜியின் நேர்வாரிசான ஷாஹு மகாராஜா எதிரே நின்ற பாலாஜி விசுவநாத்திடம் கடிதமொன்றை நீட்டி, “இதைப் படித்துப் பாருங்கள்” என்று கூறினார். மகாராஜா அதைக் கூறியபொழுது அவருடைய நாக்கு தழுதழுத்தது. குரல் லேசாக நடுங்கியது.

கடிதத்தைக் கையால் வாங்கிய பாலாஜி விசுவநாத்தின் சாம்பல் நிறக் கண்கள் கழுகின் கண்களைப்போல் ஒரு விநாடி பளபளத்தன, மகாராஜாவை நோக்கி. பிறகு கடிதத்தைப் பார்க்காமலே, “மகாராஜா! அச்சப்படும்படி ‘யாக இந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது?” என்று வினவினார்.

ஷாஹுவின் அச்சம் நிறைந்த விழிகள் பாலாஜியை ஏறெடுத்துப் பார்த்தன. “என்ன எழுதியிருக்குமென்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்ற சொற்கள் உதிர்ந்தன மகாராஷ்டிர மன்னன் உதடுகளிலிருந்து. லேசான நடுக்கம் மன்னன் குரலிலிருப்பது பாலாஜிக்கு நன்றாகத் தெரிந்தது.

“கடிதத்தின் மேலிருப்பது கனோஜியின் முத்திரை. ஸதாராவின் மீது படையெடுக்கப் போவதாக எழுதியிருப்பார்” என்றார் பாலாஜி விசுவநாத் சர்வ சகஜமாக.

அந்த அடாலத் வாடாவில் அப்பொழுது மகாராஜா ஷாஹு, பாலாஜி விசுவநாத் இருவர் மட்டும். இருந்தார்கள். ஆகையால் மகாராஜா ஷாஹு சம்பிரதாயத்தை அடியோடு விட்டு ஆசனத்திலிருந்து துள்ளியெழுந்தார். பாலாஜியின் தோளில் கையை வைத்துக் கொண்டு, ”பாலாஜி உங்களுக்கெப்படி கடிதத்திலிருப்பது தெரிந்தது? இன்னும் அதைப் பிரித்துக்கூடப் பார்க்கவில்லையே!” என்றும் கூறினார் வியப்பும் அச்சமும் கலந்த குரலில்.

பாலாஜி விசுவநாத்தின் உதடுகளில் புன்முறுவலொன்று தவழ்ந்தது. ”மகாராஜா! கல்யாண் போரில் கனோஜி நமது படைகளை முறியடித்துவிட்டார். பேஷ்வா பிங்களேயையும் சிறைப்படுத்தி விட்டார். கையோடு கையாக ராஜ் மச்சியையும், லோஹ்காட்டையும் தாக்கிப் பிடித்துவிட்டார். அடுத்து அவர் பிடிப்பதற்கு ஸதாரா வைத் தவிர வேறு என்ன இருக்கிறது? மகாராஜாவின் தலைநகரத்தின் மேல் அவர் படை எடுக்காமல் என்ன செய்ய முடியும்?” என்று வினவவும் செய்தார் புன்முறுவலின் ஊடே.

அவர் புன்முறுவல் மகாராஜா ஷாஹுவுக்குப் பெரு வியப்பை அளித்ததால் அவர் முகத்திலிருந்த அச்சங்கூட ஒரு வினாடி மறைந்து விட்டது. ”பாலாஜி! கனோஜியின் இந்தப் படையெடுப்பை எப்படித் தடுக்கலாம்?” என்று வினவினார் மகாராஜா ஷாஹு.

பாலாஜியின் சாம்பல் நிறக் கண்களில் மீண்டும் ஒளி தெரிந்தது. “லோஹ்காட்டிலிருந்து கனோஜி கிளம்புமுன்பு அவரைத் தடுக்க வேண்டும்…” என்று சொல்லத் துவங்கி, மேலும் ஏதோ சொல்லப்போன பாலாஜியை ஷாஹு இடைமறித்து, “என்ன! என்ன! கனோஜி இப்பொழுது லோஹ்காட்டிலிருக்கிறாரா?” என்று வினவினார் மித, மிஞ்சிய வியப்புடன்.

”ஆம், மகாராஜா’ என்றார் பாலாஜி சாந்தமாக.

“ராஜ்மச்சியில் இல்லையா அவர் இப்பொழுது.”

“இல்லை.”

“லோஹ்காட்டை நாம் தாக்கிப் பிடிப்பது சுலபம் மல்லவோ?”

“மிகக் கஷ்டம்தான்.”

”அப்படியென்றால்?”

“கஷ்டமென்பதற்காகக் காரியத்தைக் கைவிடக் கூடாது. கிடைத்துள்ள தோல்வியை எப்படி வெற்றியாக. மாற்றலாம் என்பதிலிருக்கிறது நமது சாமர்த்தியம்.”

பாலாஜியின் இந்தப் பதிலிலிருந்த உறுதி ஷாஹுவுக்குச் சிறிது தைரியத்தை அளிக்கவே, “பாலாஜி, நீங்கள் தான் இந்தப் பணியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

பாலாஜி, பதில் ஏதும் சொல்லவில்லை. ‘இந்தப் பணியை ஏற்க எனக்குத் தகுதியில்லை” என்றார் சில: விநாடிகள் சிந்தித்த பிறகு. ஷாஹு மகாராஜாவின் முகத்தில் மீண்டும் அச்சம் நிலவியது. “முடியும் பாலாஜி, முடியும். கனோஜியைத் தடுத்து நிறுத்துங்கள். உங்களை நான் எனது பேஷ்வாவாக நியமிக்கிறேன்” என்று கெஞ்சினார், தான் மகாராஜா என்பதையும் மறந்து.

பாலாஜி விசுவநாத்தின் சாம்பல் நிறக் கண்கள் கூர்ந்து நோக்கின மகாராஜாவைப் பல விநாடிகள்: “மகாராஜா! கனோஜி ஆங்கரேயை முறியடித்து ஒருவேளை அவர் சமரசம் பேச முன் வந்தால் உடன்படிக்கை செய்து கொள்ளும் அதிகாரம் மகாராஷ்டிர நாட்டில் பேஷ்வாவுக்கே உண்டு” என்று சுட்டிக் காட்டினார்.

ஷாஹு மகாராஜாவின் முகத்தில் பிரமை பூர்ண மாகப் படர்ந்தது. சிப்ளன் உப்பளத்தில் சாதாரணக் குமாஸ்தாவாக இருந்து, தனது தலைமைக் கணக்கராக வேலைபார்க்கும் இந்தக் கொங்கணி பிராம்மணனைப் பேஷ்வாவாக்கினால் ஊர் சிரிக்குமே என்று நினைத்ததால் மகாராஜா பின்னடைந்து தமது சிங்காதனத்தில் மீண்டும் அமர்ந்தார்.

பிரமை பிடித்து அமர்ந்திருந்த ஷாஹு மகாராஜா பாலாஜியை நோக்கி, “பாலாஜி! மகாராஷ்டிர அரசின் பேஷ்வா நிர்வாகத் தலைவராக மட்டுமல்ல, படைத் தலைவராகவும் இருக்க வேண்டும். போர்களை நிர்வகிக்கும் சக்தி வேண்டும்” என்று சொன்னார்.

பாலாஜி மிகுந்த பணிவுடன் தலை தாழ்த்தினார். ”ஆம், மகாராஜா” என்று ஒப்புக்கொள்ளவும் செய்தார்.

“அப்படியானால் யாரை அனுப்பலாம்?”

”யாராவது படைத்தலைவரை அனுப்புவோம்.”

“இங்கு வேறு தகுந்த படைத்தலைவர் ஏது?”

“இல்லை.”

”ஒருவர் இருந்தார். பேஷ்வா பிங்களே.”

“ஆம், இப்பொழுது கனோஜியிடம் இருக்கிறார்.”

பாலாஜி இதைச் சர்வ சகஜமாகத்தான் சொன்னார். இருப்பினும் ஷாஹு மகாராஜா சந்தேகமற உணர்ந்து கொண்டார், பாலாஜி தன்னைப் பார்த்து நகைக்கிறார் என்பதை. மகாராஜா ஷாஹு, பாலாஜியை ஏறெடுத்து நோக்கினார். பாலாஜியின் முகத்தில் எந்தவித உணர்ச்சி யும் தெரியவில்லை. அந்தச் சாம்பல் நிறக் கண்கள் மட்டும் உயிர் பெற்று ஷாஹுவை நோக்கி நகைத்தன.

அந்த நகைப்பைத் தாளாத மகாராஜாவின் கண்கள் மீண்டும் நிலத்தில் தாழ்ந்தன, “பாலாஜி விசுவநாத்! உங்கள் திறமை எனக்குப் புரியவில்லையென்று நினைக்க வேண்டாம். உங்களுக்குப் போர்ப் பயிற்சி ஒன்று மட்டுமில்லையே என்று நான் தயங்கினேன். உங்களை இன்றே பேஷ்வாவாக நியமிக்கிறேன். உங்கள் கையில் மகாராஷ்டிரத்தின் நலனை ஒப்படைக்கிறேன். இங்கிருந்து பெரும் படையுடன் கனோஜியை நோக்கிச் செல்லுங்கள்” என்று கூறினார் மகாராஜா உணர்ச்சியுடன்.

பாலாஜி அந்த உத்தியோக உயர்வை சர்வ சாதாரணமாகக் கேட்டுக் கொண்டார். “மகாராஜாவுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை” என்று மெல்ல விண்ணப்பித்துக் கொண்டார்.

“என்ன பேஷ்வா?” என்றார் ஷாஹு அப்பொழுதே அவரை பேஷ்வாவாக அங்கீகரித்து விட்டதற்கு அறிகுறியாக.

“இங்கு பெரும் படையேதும் கிடையாது. உள்ள சிறு படையும் பிரும்மேந்திர ஸ்வாமியிடமிருந்து வட்டிக்குக் கடன் வாங்கி, தங்கள் காவலுக்காகவும் கோட்டைக் காவலுக்காகவும் நான் சிருஷ்டித்தது” என்று விண்ணப்பித்துக் கொண்டார். கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலமாக பாலாஜி விசுவநாத் அடிக்கடி பிரும்மேந்திர ஸ்வாமியைத் தரிசிக்க பரசுராமபுரம் சென்றதும், வரும்போது பெரும் பணத்துடன் வந்து படை திரட்டியதும் மகாராஜாவுக்குத் தெரிந்ததுதான் என்றாலும் அது அத்தனை கணிசமான படையென்பதை அவர் அறியவில்லை. இருப்பினும், “இப்பொழுது தாங்கள் திரட்டிய படையில் எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?” என்று வினவினார்.

“சுமார் ஐயாயிரம் வீரர்கள் இருப்பார்கள்” என்றார் பாலாஜி.

“பேஷ்வா பிங்களேயின் பதினையாயிரம் வீரர் களையே கனோஜி முறியடித்து விட்டாரே?” என்று கேட்டார் மகாராஜா .

பாலாஜி மீண்டும் மன்னனை ஊடுருவிப் பார்த்தார். “பிங்களே வீரர்களை மட்டும் உபயோகப்படுத்தினார்…’ என்று சுட்டியும் காட்டினார்.

ஷாஹுவின் கண்களில் வியப்புச் சுடர் விட்டது. வேறு யாரை உபயோகப்படுத்த வேண்டும்?” என்று வினவினார் ஏதும் புரியாமல்.

”யாரை என்பதைவிட எதை என்பதைக் கேளுங்கள் மகாராஜா” என்றார் பாலாஜி,

“எதை?”

“மூளையை!” என்று பாலாஜி விசுவநாத் சிறிது அலுப்புடன் கூறினார். மேலும் சொன்னார்: ”மகாராஜா! பிங்களேயின் பதினையாயிரம் வீரர்களைக் கேவலம் ஐயாயிரம் வீரர்களைக் கொண்டு கனோஜி முறியடித்தா ரென்றால், அங்கு வேலை செய்தது ஆள் பலமல்ல, அறிவின் பலம். தமது படையை எல்லோர் கண்களுக்கும் தெரியும்படியாக ஆர்ப்பாட்டமாகப் பிங்களே கொண்டு போனதும் பைத்தியக்காரத்தனம், எதிரி அதன் ஒவ்வொரு திருப்பத்தையும் அறியும்படியாக நடந்து கொண்டதும் அசட்டுத்தனம். போர்களில் வெற்றியளிப்பது படை பலம் மட்டுமல்ல மகாராஜா. பிரும்மாண்டமான படை பலமுள்ள அவுரங்கசீப்பைத் தங்கள் பாட்டனார் ஆட்டிப் படைத்தது பெரும் படையாலல்ல, மலைவாசிகளைக் கொண்ட சின்னஞ்சிறு படைப்பிரிவுகளால்…”

இந்த இடத்தில் சற்று நிறுத்தினார் பேச்சை பாலாஜி விசுவநாத், தாம் சொன்னது ஷாஹுவின் புத்தியில் உறைக்கட்டுமென்று. ஷாஹுவின் கண்களில் பிரமிப்பு: அதிகமாகியது. பாலாஜி விசுவநாத்தின் சொற்களில் நிரம்ப உண்மையிருப்பதைப் புரிந்து கொண்டார். “என்று புறப்படப் போகிறீர்கள் பேஷ்வா?” என்று வினவினார் மகாராஜா.

பாலாஜி விசுவநாத் சர்வ சகஜமாகக் கூறினார் ”இன்று மாலை” என்று.

அதுவும் அதிர்ச்சியாயிருந்தது மன்னனுக்கு. “அதற்குள் புறப்பட முடியுமா?” என்று வினவினார் ஷாஹு.

“முடியும்” என்ற பாலாஜி நீதி மண்டபத்தைக் காத்து நின்ற இரு வீரர்களை அழைத்து, “உச்சி காலத்துக்குப் பிறகு முக்கிய மந்திரிகள், படைத்தலைவர்கள், பிரதானிகள் இவர்களை இந்த மண்டபத்துக்கு மன்னர் அழைப்பதாகப் பிரதானியிடம் கூறு” என்று உத்தரவிட்டார், பிறகு மகாராஜாவை நோக்கி, ‘’மகாராஜா! நானும் உச்சி காலத் துக்குப் பிறகு வந்து இந்த மண்டபத்தில் மந்திரிகள், படைத்தலைவர்கள் முன்னிலையில் தங்கள் நியமனம் பெறுகிறேன்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்.

அன்று உச்சிக் காலத்தில், அதே மண்டபத்தில் மந்திரி களும், படைத் தலைவர்களும், வெளிநாட்டுத் தூதர்களும் அடங்கிய சபையில், மகாராஜா ஷாஹு பாலாஜி விசுவநாத்தை பேஷ்வாவாக நியமித்தார். கனோஜியை வெற்றி கண்டு வரும்படி கட்டளையும் இட்டு, பேஷ்வாவுக்கான அதிகாரச் சின்னங்களையும் பாலாஜி விசுவநாத் துக்கு அளித்தார். மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவருக்கும் இந்த பேஷ்வா நியமனம் பெரும் அதிசயமாயிருந்தது. சரியாகப் புரவியேறத் தெரியாத புது பேஷ்வா, கனோஜியை எப்படி முறியடிக்க முடியுமென்று எண்ணி வியந்தனர். பலர் புன்முறுவலும் கோட்டினர். பிரதானி நியமனப் பத்திரத்தைப் படித்த பின்பு, அந்தப் பத்திரத்தை மகாராஜா தமது கரங்களால் பாலாஜியிடம் கொடுத்தபோது மண்டபத்தின் கோடியில் சிலர் முணு முணுக்கவும் செய்தனர்.

மண்டபத்திலிருந்தவர் மனத்திலிருந்த அனைத்தையும் பாலாஜி உணர்ந்திருந்தார். உணர்ச்சியைச் சிறிதும் வெளிக்குக் காட்டாத அவரது சாம்பல் நிறக் கண்கள் அந்தப் பெரும் அவையைத் தைரியத்துடன் அளவெடுத்தன ஒருமுறை: பிறகு மன்னனை நோக்கின. அவர் உதடுகள் கூறின, “மகாராஜா! நான் திரும்பி வரும்போது கனோஜி தங்கள் அடிமையாயிருப்பார்’ என்று.

இதைக் கேட்ட அந்தச் சபையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பலர் பாலாஜியின் துணிவை வியந்தனர். சிலர் அது வெறும் வீராப்பு என்று நினைத்தனர். பாலாஜி அவையின் சலசலப்பையோ முணுமுணுப்பையோ லட்சியம் செய்யாமல் தர்பாரிலிருந்து அகன்றார். மன்னரிடம் கூறியது போல் ஒரு சிறு படை பின்தொடர ஸதாராவிலிருந்து கிளம்பினார். இரவோடு இரவாகப் பயணம் செய்து மறுநாள் பகலில் பூனாவை அடைந்து பேஷ்வாக் களுக்கென்று தனியாக இருந்த அரண்மனையில் முகாம் செய்தார். அன்று மாலை விளக்கு வைக்கும் தருணத்தில் தன்னுடன் வந்த உபதலைவனை தனது அந்தரங்க அறைக்கு அழைத்தார். ”உபதளபதி! இப்பொழுது சக்தி.

வாய்ந்த ஓர் ஆயுதத்தைக் கையாளப் போகிறேன்” என்று கூறினார்.

“கனோஜிக்கு எதிராகவா பேஷ்வா?”

”ஆம்.”

“வாளையா?”

“அதை விட வலிமையுள்ளது.”

“எது பேஷ்வா?”

கையிலிருந்த மயிலிறகு எழுதுகோலைக் காட்டினார் பேஷ்வா. அதைக் கண்ட சேனாதிபதி பிரமித்தான். “இதுவா!” என்றும் கேட்டான் அதிர்ச்சியுடன்.

“ஆம். வாளைவிட வலிமையுள்ளது” என்று கூறிய பேஷ்வா எதிரிலிருந்த துணியில் விடுவிடுவென்று எழுதத் தொடங்கினார். மகாராஷ்டிர சரித்திரத்தை மாற்றிய கடிதம் அது. ராஜதந்திரத்தின் சிகரம் அது. அது மகாராஷ்டிரத்துக்குத் தந்த பயனும் பலமும் வார்த்தைகளால் விவரிக்க இயலாதன. மயிலிறகு எழுதுகோலால் அன்று பாலாஜி தீட்டினார் இணையிலாத கடிதம். நிலை நாட்டினார் பின்னால் பல ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாத மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தை.

Previous articleJala Deepam Part 3 Ch30 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here