Home Historical Novel Jala Deepam Part 3 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

56
0
Jala Deepam part 3 Ch32 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch32 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 32 கடிதமும் கதையும்

Jala Deepam Part 3 Ch32 | Read Jala Deepam | TamilNovel.in

சத்ரபதி சிவாஜியால் சிருஷ்டிக்கப்பட்டு முளை விட்டு இலைவிட்டுச் செடியான மகாராஷ்டிர சாம்ராஜ்யம், சிவாஜியின் மகன் சம்பாஜியின் காலத்தில் துவண்டு, ஷாஹுவின் காலத்தில் அடியோடு வாடிவிடும் நிலையை அடைந்துவிட்ட சமயத்தில், பாலாஜி விசுவநாத், தீயும் பயிருக்குப் பெய்யும் மழையைப் போலத் தோன்றி அந்தச் சாம்ராஜ்யத்துக்கு மீண்டும் புத்துயிரூட்டி அது கப்பும் கிளையுமுள்ள பிரும்மாண்ட விருட்சமாக விரிவடைய வித்தை ஊன்றினார். அந்த வித்துத்தான் அவர் பூனாவில் பேஷ்வாவெனும் அந்தஸ்தில் முதன் முதலாகத் தீட்டிய கடிதம். அந்தக் கடிதத்தில் அவர் கனோஜியை நோக்கிப் போர் முரசு கொட்டவில்லை. அதற்காகக் கனோஜியிடம் பணிந்த முறையிலும் வாசகத்தை அமைக்கவில்லை. உறுதியும் ஆணையும், சமரசமும் அன்பும், கெடுபிடியும் ஆகிய பலவித ரகங்கள் இணைந்த வாசகத்தைக் கடிதத்தில் தீட்டினார். மற்றவர்கள் ஓர் அடி முன்னோக்கிப் பார்த்தால், பாலாஜி பல அடிகள் முன்னோக்கிப் பார்ப்பார் என்று அவர் காலத்தில் சகஜமாக மக்கள் பேசி வந்தார்கள். பூனாவில் அவர் கடிதத்தைத் தீட்டியபோது, முன்னும் பின்னும் பக்கங்களிலும் எல்லாத் திசைகளிலுமே தமது அறிவைச் சுழல விட்டார் பாலாஜி என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

பாலாஜி விசுவநாத் கனோஜியை அடக்கிவிடுவதாக மகாராஜா ஷாஹுவிடம் உறுதிமொழி கூறி, சின்னஞ்சிறு படையுடன் பூனாவுக்குக் கிளம்பியபோது அந்தப் படையை வைத்துக்கொண்டு கனோஜியை அசைக்க முடியாதென்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்து தானிருந்தது. கனோஜியைப் படைபலத்தால் மட்டும் வெல்ல முடியாதென்பதை உணர்ந்ததாலும், அவருக்குப் போர்ப் பயிற்சி எதுவுமே கிடையாதாகையாலும், கனோஜியை வேறு வழிகளில் அசைக்கத் தீர்மானித்தார் பேஷ்வா பாலாஜி விசுவநாத். ஆகவே, கடிதத்தில் மயிலிறகை எந்த இடத்திலும் தடங்கலின்றிச் சீலையில் செலுத்தி, லிகிதத்தை முடித்த பாலாஜி அந்தச் சீலையை எடுத்து உபதளபதியின் கையில் கொடுத்து, “படி இதை” என்றும் கூறினார்.

கடிதத்தைப் படிக்கப் படிக்க உபதளபதியின் விழி களில் வியப்பும் மலர்ந்தது, சில இடங்களில் குழப்பமும் விரிந்தது.

“ஸார்கேல் கனோஜி ஆங்கரே!

மகாராஷ்டிர சாம்ராஜ்யாதிபதியின் பிரதான படைத் தலைவர்களில் நீரும் ஒருவர். உமது தந்தையான துகோஜி பெரிய சிவாஜி மகாராஜாவிடம் ராஜ பக்தியுடன் சேவை செய்தார். அப்பேர்ப்பட்ட தந்தைக்குப் பிறந்த நீர், சிவாஜியின் தலைப் பிள்ளையின் நேர்வாரிசு ஷாஹு மகாராஜாதான் என்பதை உணர்ந்துங் கூட, அந்த உண்மையான மகாராஜா மகாராஷ்டிரம் திரும்பியதும் அவருடன் விரோதம் பாராட்டியதன்றி, அவருடைய எதிரியோடு ஒத்துழைத்து வருகிறீர். சிவாஜி மகாராஜாவின் குடும்பத்தின் கீழ்க் கிளைகளோடு உறவாடுகிறீர். தவிர மன்னர் ஷாஹுவின் ஜில்லாக்கள் சிலவற்றையும் பிடித்துக் கொண்டீர். போதாக்குறைக்கு மகாராஜாவின் மாஜி பேஷ்வாவையும் சிறை செய்துவிட்டீர். இப்படித்தானா நீர் உமது
கடமையையும் ராஜபக்தியையும் காட்டுவது? இந்தக் கடிதத்தைக் கண்டதும் என்னைத் தாமதமின்றிச் சந்திக்கவும்.

இப்படிக்கு,
பேஷ்வா பாலாஜி விசுவநாத்.”

இந்தக் கடிதத்தை இரண்டு மூன்று முறை படித்தான் உபதளபதி. பிறகு தலையை நிமிர்ந்து, “பேஷ்வா! இக் கடிதத்தில் பணிவும் இருக்கிறது; மிரட்டலும் இருக்கிறது” என்று கூறினான்.

பாலாஜி விசுவநாத்தின் சாம்பல் நிற விழிகள் எழுந்து உபதளபதியை நோக்கின. ”இரண்டும் கலப்பதற்குத் தான் ராஜதந்திரம் என்று பெயர்’ என்றும் அவரது உதடுகள் லேசாகச் சொற்களை உதிர்த்தன.

“பேஷ்வா…” என்று உபதளபதி துவங்கினான் மீண்டும்.

“என்ன உபதளபதி?” என்று வினவினார் பாலாஜி.

”பிங்களேயை மாஜி பேஷ்வா என்று குறிப்பிட்டிருக் கிறீர்கள்” என்று சுட்டிக் காட்டினான் உபதளபதி.

“ஆம்.”

”இப்படி எழுத வேண்டியது அவசியமா?”

“அவசியமில்லாததை எழுதுவதில்லை நான். தவிர, உபதளபதி! கனோஜிக்கு யாரிடம் பேச வேண்டும் என்பதும் தெரிய வேண்டுமல்லவா?”

”ஆம், ஆம்.”
இதற்குமேல் உபதளபதியோ பாலாஜியோ நீண்ட நேரம் பேசவில்லை. கடைசியில் பாலாஜி கூறினார். ”உபதளபதி இதைச் சுருட்டி முத்திரை வையுங்கள். பிறகு இதை எடுத்துக்கொண்டு இப்பொழுதே லோஹ்காட்டுக்கும் கிளம்புங்கள்” என்று.

உபதளபதியின் முகத்தில் ஈயாடவில்லை, பாலாஜியின் உத்தரவு அவனைக் கல்லாகச் சமைத்துவிட்டது. “பேஷ்வா! லோஹ்காட்டுக்கா! ஆங்கரேயிடமா?” என்று அச்சம் நிரம்பிய குரலில் வினவவும் செய்தான் சில வினாடிகளின் அதிர்ச்சிக்குப் பிறகு.

“ஆம்” என்றார் பாலாஜி விசுவநாத் சர்வ சகஜமாக.

“அங்கு கனோஜி என்னையும் சிறையிலடைத்து விட்டால்…?’ என்று தடுமாறிக் கேட்டான் உபதளபதி.

பாலாஜியின் உதடுகளில் புன்முறுவல் படர்ந்தது. “பழைய பேஷ்வாவுடன் தங்கும் பேறு கிடைக்கும்” என்று கூறினார் விஷமமாக.

உபதளபதி மீண்டும் ஓர் ஆட்சேபணை கிளப்பினான், “நான் போய்விட்டால் தங்கள் படைகளுக்கு உபதளபதி. யாரும் இல்லையே” என்று சுட்டிக் காட்டினான்.

“போரிடுவதாயிருந்தால்தான் படையும் உபதளபதியும் தேவை” என்றார் பேஷ்வா பாலாஜி விசுவநாத்.

“போரிடப் போவதில்லையா?’
“இல்லை.”

“ஏன்?”

“மகாராஷ்டிரர்கள் பரஸ்பரம் போரிட்டு மடிய வேண்டிய அவசியமில்லை” என்ற பாலாஜி அதைப்பற்றி மேற்கொண்டு விவாதிக்காமல், ”உபதளபதி! கடிதத்தில் எழுதியிருப்பது மட்டுமல்ல செய்தி” என்றார் மெதுவாக.

அதைச் சொன்ன போது அவர் முகத்தில் விவரிக்க இயலாத சாயை ஒன்று படர்ந்தது. அந்தச் சாயை அவர் எதிரேயிருந்த சாய்வு மேஜைப் பெட்டிக்குப் பக்கத்திலிருந்த விளக்கில் நன்றாகத் தெரியவும் செய்தது. உப தளபதியை நன்றாக நிமிர்ந்து நோக்கிய விழிகளில் அந்த ரகசியச் சாயை சுடர்விட்டது. பாலாஜி மெல்லக் கூறினார். “உபதளபதி! என்னைச் சுற்றியுள்ளவர்களில் நீ வாலிபனென்பதாலும் அதிக அறிவாளியென்பதாலுமே இந்தப் பெரும்பணிக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நன்றாகக் கேள் நான் சொல்வதை. இந்தச் செய்திச் சீலையைக் கனோஜியிடம் கொடுத்ததும் வேறு செய்தி இருக்கிறதென்பதையும் சொல், அவர் என்னவென்று கேட்டால் கதை ஒன்று சொல்…”

இந்த இடத்தில் உபதளபதி குறுக்கிட்டு, ”கதையா!” என்றான் வியப்புடன்.

”ஆம்” என்றார் பாலாஜி லேசாகப் புன்முறுவல் காட்டி.

”கதை சொன்னால் அவர் கேட்பாரா?” “கேட்பார். ஏனென்றால் அது பழங்கதை!”
உபதளபதியின் முகத்தில் வியப்பு பெரிதும் மண்டியது. “பழங்கதையா! அது எதற்கு இப்பொழுது?’ என்ற அவன் கேள்வியிலும் வியப்பு நன்றாக ஒலித்தது.

பாலாஜியின் சாம்பல் நிறக் கண்கள் நகைத்தன உப தளபதியை நோக்கி. “இந்தக் கேள்வி அடிக்கடி சமுதாயத் தில் எழுப்பப்படுகிறது அறிவிலிகளால். பழைய கதைகளில் சாசுவதமான உயிர் இருப்பதை அவர்கள் அறிவ தில்லை. நான் அறிவேன். ஆகையால் பழங்கதை ஒன்று சொல்கிறேன். அதை அப்படியே போய்ச் சொல் கனோஜியிடம்” என்ற பாலாஜி விசுவநாத்தின் முகத்தில் பழைய கனவு படர்ந்தது. கனவில் பேசுவதுபோல் அவர் சொற்களும் உதிர்ந்தன உதடுகளிலிருந்து. ‘சுவர்ண துர்க்கத்தில் ஒரு வாலிபன் இருக்கிறான் ஸித்திகளின் சிறையில். பெரிய வீரன். நாளை அவனைச் சிரச்சேதம் செய்துவிட உத்திர வாகியிருக்கிறது. அதை அறிகிறான் அங்கிருந்த ஒரு குமாஸ்தா. குமாஸ்தா ஏதுமறியாதவனென்று அங்கிருந்த அனைவரும் நினைத்தார்கள். மறுநாள் சிரச்சேதம் செய்ய வீரனைத் தேடினார்கள். வீரனைக் காணோம். குமாஸ்தா வைத் தேடினார்கள், அவனையும் காணோம். ஆண்டுகள் ஓடின, சுவர்ண துர்க்கம் வீரன் வசமாயிற்று. வாலிபனுக் குப் பணம் இல்லை படையெடுக்க. அந்தப் பழைய குமாஸ்தா ஒரு மகானிடம் அவனை அழைத்துச் சென்றான். கடன் வாங்கிக் கொடுத்தான். அந்தப் பணத்தைக் கொண்டு வாலிபன் படை பெருக்கினான். அப்படையைக் கண்டு பலர் அஞ்சினார்கள். குமாஸ்தா அஞ்சவில்லை…’ என்றார் பாலாஜி. “இந்தக் கதையை அப்படியே சொல் கனோஜியிடம்” என்று உத்தரவும் இட்டார். அதற்குமேல் பேச இஷ்டப்படாமல் உபதளபதிக்குப் போக அனுமதியும் கொடுத்தார்.

உபதளபதி அவர் முன்பாகவே செய்திச் சீலையைச் சுருட்டி பேஷ்வாவின் முத்திரையை வைத்தான். பிறகு பேஷ்வாவின் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு வெளியே சென்றான். அதற்குப் பிறகு எந்தவிதத் தாமதமும் செய்யாமல் இரண்டு வீரர்களை உடனழைத்துக் கொண்டு புறப்பட்ட உபதளபதி மறுநாள் விடியற்காலை யிலேயே லோஹ்காட்டை அணுகினாலும் கனோஜி, அவனுக்கு மறுநாள் உச்சிவேளையில் தான் பேட்டி கொடுத்தார். லோஹ்காட்டின் நடுப்பாசறையில் அமர்ந்திருந்த கனோஜி, அந்தச் செய்திச் சுருளைப் படித்துவிட்டுப் பக்கத்திலிருந்த தமது உதவிப் படைத்தலைவனிடம் அதைக் கொடுத்தார். பிறகு பேஷ்வாவின் தூதனை நோக்கி, “புதிய பேஷ்வாவின் படையில் உனக்கென்ன வேலை?” என்று வினவினார்.

”உபதளபதி” என்றான் தூது வந்த உபதளபதி.

“உனக்கடுத்தது எத்தனை பேர்?” என்று வினவினார் கனோஜி.

“யாருமில்லை” என்றான் பேஷ்வாவின் உபதளபதி.

கனோஜியின் பெரு விழிகள் அதிகமாக அகன்றன. ”ஒரே உபதளபதி! உன்னையும் அனுப்பி விட்டார் பாலாஜி?” என்று வினவினார். ”ஆம்” என்றான் உபதளபதி.

கனோஜியின் முகத்தில் சிந்தனை படர்ந்தது சில வினாடிகள். அந்தச் சிந்தனையைத் தொடர்ந்து உதிர்ந்தன சொற்கள், “சரி! அவர் வாயால் சொல்லச் சொன்னதைச் சொல்” என்று.
உபதளபதி திக்பிரமையடைந்தான். பேஷ்வா வாயால் செய்தி சொல்லச் சொன்னது கனோஜிக்கு எப்படித் தெரிந்தது என்பது பரம விசித்திரமாயிருந்ததால் அவன் பிரமை தட்டிச் சில வினாடிகள் பேசவில்லை. மகாராஷ் டிரத்தின் மிகக் கூரிய அறிவுகள் மோதுவதை அவன் சந்தேகமறப் புரிந்துகொண்டதால் நிதானமாக சொன்னான்: “ஸார்கேல்! அவர் ஒரு கதை சொல்லச் சொன்னார் உங்களுக்கு. செய்தி திட்டமாக எதுவும் இல்லை.”

கனோஜி தமது நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து கொண்டு, ‘சொல் கதையை” என்று உத்தரவிட்டார்.

உபதளபதி கனோஜியின் பக்கத்திலிருந்த அவரது .உதவிப்படைத் தலைவர்களை நோக்கினான். உபதளபதியின் தயக்கத்தைப் புரிந்துகொண்ட கனோஜி, “எதுவாயிருந்தாலும் சொல். எனது உதவிப் படைத் தலைவர்கள் எனது நம்பிக்கைக்குப் பெரிதும் பாத்திரமானவர்கள்” என்று கூறினார்.

உபதளபதி அதற்குமேல் தயங்காமல் பாலாஜி சொன்ன கதையை மெதுவாகவும் உறுதி நிறைந்த சொற்களாலும் கூறினான். கனோஜி அந்தக் கதையை மிக நிதானமாகவும் பதட்டம் ஏதுமில்லாமலும் கேட்டார். கடைசியில் மெல்ல நகைத்துக் கொண்டார். உபதளபதியை நோக்கிப் பின் வருமாறு கூறவும் செய்தார்: “ப்ாலாஜி’ விசுவநாத்திடம் சொல் உபதளபதி! பழைய கதையை வாலிபன் மறக்கவில்லை. ஆனால் புதுக் கதையில் அது: எவ்வளவு தூரம் பொருந்தும் என்பது விளங்கவில்லை அவனுக்கு. பேஷ்வா அதை நேரிடையாகத்தான் விளங்க. வைக்க வேண்டும். ஆகவே, பேஷ்வா மட்டும் தனித்து லோஹ்காட்டுக்கு வரட்டும்.”
இதைக் கேட்டதும் உபதளபதி திகைத்தான். பழைய பேஷ்வர்வோடு புதிய பேஷ்வாவையும் கனோஜி சிறை செய்துவிட்டால் என்ன செய்வதென்று திகைத்தான். எனினும் அந்தச் செய்தியை அப்படியே பேஷ்வாவிடம் ஒப்புவித்தான் மறுநாள். அந்தச் செய்தி பாலாஜிக்கு எந்தவித அதிர்ச்சியும் அளிக்கவில்லை. லோஹ்காட்டிலிருந்தவர்களுக்குத்தான் விளைவு அதிர்ச்சியாயிருந்தது. சாதாரணப் புரவிமீது துணைக்கு இரண்டு வீரர்களை மட்டும் அழைத்துக்கொண்டு முன் அறிவிப்பு ஏதுமில்லாமல் திடீரென பாலாஜி விசுவநாத் ஒருநாள் காலையில் லோஹ்காட்டை நோக்கிப் புறப்பட்டு விட்டார் என்ற செய்தி அக்கோட்டைக்கு எட்டியது. அதைப்பற்றி ஒற்றர்கள் மூலம் அறிந்த கனோஜியும் லோஹ்காட்டிலிருந்து கிளம்பி, லோனாவாலாவுக்கு அருகிலிருந்த வால்வா என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு. பாலாஜி வந்ததும் ஏதோ பெரும் படையெடுப்பு: ஏற்பட்டதுபோல் கனோஜி பாசறை அமளி துமளிப்பட்டது. காவலர்கள் திகைத்தனர். அவர் வந்த செய்தியை கனோஜிக்கு அறிவிக்கப் புரவி வீரர்கள் பறந்தனர் பாசறைக்கு. எதிரியின் கோட்டைக்குள் சிறிதும் பயமின்றி நுழைந்த பாலாஜியின் துணிவை உலகம் வியந்தது: சரித்திரத்தில் அந்தச் சம்பவம் பொன்னெழுத்துக்களால் ‘பொறிக்கப்பட்டது. அவரைக் காண விரைந்து வாயிலுக்கு வந்த கனோஜிகூட அவரைக் கண்டதும் ‘பேச்சு எதுவும் எழாமல் வாயடைத்து அதிர்ச்சியடைந்து அசைவற்றுப் புரவியில் உட்கார்ந்துவிட்டார் பல வினாடிகள். பாலாஜி விசுவநாத் மட்டும் எந்த உணர்ச்சிக் கும் இலக்காகவில்லை. தமது புரவியை வால்வானுக்குள் செலுத்தி, கனோஜியைத் தம்முடன் வருமாறு சைகை காட்டி முன் சென்றார். யாருக்கும் அடங்காத அந்த முரட்டுக் கப்பற் கொள்ளைக்காரர், மகாராஷ்டிரத்தை நடுங்க வைத்த அந்த மாவீரர், தனது புரவியைத் திருப்பி, சாதாரணப் பணியாளைப்போல் பேஷ்வாவைத் தொடர்ந்தார்.

Previous articleJala Deepam Part 3 Ch31 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here