Home Historical Novel Jala Deepam Part 3 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

63
0
Jala Deepam part 3 Ch33 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch33 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 33 பாலாஜியின் ராஜ தந்திரம்

Jala Deepam Part 3 Ch33 | Read Jala Deepam | TamilNovel.in

மகாராஷ்டிர மன்னன் ஷாஹுவின் பேஷ்வா எனும் நினைப்பினால் ஏற்பட்ட கம்பீரத்தால், பயம் சிறிதுமின்றிச் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்த பாலாஜி விசுவநாத் கோட்டையின் உட்புறத்தை நாலாபக்கங்களிலும் கவனித்த் வண்ணம் புரவியில் மிக அலட்சியமாக உட்கார்ந்து சென்றார். அவரது சைகைக்கு உட்பட்டு அவருக்குப் பின்னால் புரவியில் மிகுந்த பணிவுடன் சென்ற கனோஜி ஆங்கரே, பாலாஜி விசுவநாத்தின் அச்சமற்ற நெஞ்சத்தை உள்ளூரச் சிலாகித்துக் கொண்டும் வியந்து கொண்டும் சென்றார். இந்த விசித்திர ஊர்வலத்தைக் கண்ட வால்வான் வாசிகளும் கனோஜியின் வீரர்களும் பெரும் பிரமிப்பையும் வியப்பையும் அடைந்ததால் வாயடைத்துச் செயலற்று நின்றனர். அவர்கள் மன நிலையை அரை விநாடியில் எடை போட்டுவிட்ட பாலாஜி விசுவநாத் உள்ளூர நகைத்துக் கொண்டாலும் எந்த உணர்ச்சியையும் முகத்திலோ, ஒளி எப்பொழுதாவது துள்ளி விளையாடும் சாம்பல் நிறக் கண்களிலோ காட்டாமல் புரவியை அந்த நகருக்கு நடுவிலிருந்த பெரு மாளிகையை நோக்கி நடத்தினார். அந்த மாளிகையின் வாயிலை அடைந்ததும் அவருடன் வந்த இருவீரர் புரவியின் கடிவாளங்களைப் பிடித்துக்கொள்ள மெல்ல இறங்கிய பாலாஜி, மாளிகைக்குள் நுழைந்தார். கனோஜி தமது புரவியிலிருந்து அனாயாசமாகக் குதித்து அவருக்கு முன்பாக மாளிகைக்குள் சென்று அவருக்கு வழிகாட்டிச் சென்றார்.

மாளிகையில் மகாராஷ்டிர சாம்ராஜ்ய பேஷ்வாவுக் குரிய சகல போகங்களும் தயாராயிருந்தன.

பேஷ்வாவுக்கென ஒழித்து விடப்பட்ட தனியறையில் திண்டு திவாசுகளும் சாய்வு மேஜைகளும் இரண்டு மூன்று சிறந்த ஆசனங்களும் போடப்பட்டிருந்ததன்றி, ஒருபுறம் திரைச் சீலையொன்றும் தொங்கவிடப்பட்டு அதற்குப் பின்னால் பேஷ்வாவின் பூஜைக்காகப் பொன் பாத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தன. காவலரிருவர் வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்தனர். அந்த அறைக்குள் நுழைந்த பேஷ்வா அங்கிருந்த ஏற்பாடுகளைக் கண்டு திருப்தியை முகத்தில் காட்டினார். அறையின் மூலையிலிருந்த திரைச் சீலையை நீக்கிப் பார்த்தபின்பு, மெல்லத் திரும்பி அறை நடுவில் நின்றிருந்த கனோஜியை நோக்கிப் புன்முறுவல் கோட்டி, “இந்த ஏழைப் பிராமணனுக்கு ஸார்கேலின் வரவேற்பு பலமாயிருக்கிறது” என்று கூறினார் பாலாஜி.

சுனோஜியின் இதழ்களில் புன்முறுவல் அரும்பிற்று. “வரவேற்பு மகாராஷ்டிர சாம்ராஜியத்தின் பேஷ்வாவுக்கு” என்று சுட்டிக் காட்டினார் தமது கரகரத்த குரலில்.

பாலாஜி விசுவநாத்தின் முகத்தில் புன்முறுவலின் சாயை அதிகமாகப் படர்ந்தது “பொன்னால் செய்யப் பட்ட பாத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன பூஜைக்கு” என்றார் பாலாஜி.

”ஆம். அவற்றைவிடச் சிறந்த பாத்திரங்கள் இங்கு இல்லை” என்றார் கனோஜி ஆங்கரே.

“இவற்றை அப்புறப்படுத்திவிட்டு, ஒரு பித்தளை செம்பு, வெண்கல பஞ்ச பாத்திரம், உத்தரிணி, ஒரு பித்தளைத் தட்டு இவற்றைக் கொடுங்கள்” என்றார் பாலாஜி.

கனோஜியின் முகத்தில் வியப்பு மண்டியது. “பித்தளையா! வெண்கலமா?” என்று கேட்டார் குரலிலும் வியப்பு தாண்டவமாட.

“ஆம். எனது பழைய நிலையை நான் மறக்கவில்லை. அந்த வாழ்வையே வாழப் பிரியப்படுகிறேன். பேஷ்வா பதவி நாட்டு உதவிக்குத்தான்” என்று சொன்ன பாலாஜி. தமது சாம்பல் நிறக் கண்களால் கனோஜியை ஏறெடுத்து, நோக்கினார். அந்த நோக்கில் பரிகாசமில்லை, பரிவு இருந்தது, கண்ணியம் இருந்தது.

கனோஜி புரிந்துகொண்டார் பேஷ்வா தம்மை இடித்துக் காட்டுகிறாரென்பதை. தமது பதவியையும் மகாராஷ்டிர சாம்ராஜ்யத்துக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்ற குறிப்பும் அதிலிருந்ததை உணர்ந்து கொண்டார். எனினும் எதிர்த்து ஏதும் சொல்லாமல், “அப்படியே பாத்திரங்களை மாற்றிவிடுகிறேன். நீங்கள் ஸ்நானம் செய்து வைதிகக்கடன்களை முடித்த பின்பு தங்களைச் சந்திக்கிறேன்” என்று கூறி, அந்த அறையை விட்டு அகன்றார்.

பாலாஜி விசுவநாத் கால தாமதம் சிறிதும் செய்யாமல் தமது நீராட்டத்தை முடித்துக் கொண்டு, நெற்றியில் முவ்வரி சந்தனம் தீட்டி, காலைச்சந்தி முதலிய கடன்களை யும் முடித்துக் கொண்டார். பிறகு இராமாயணத்தை எடுத்துக்கொண்டு பாராயணம் செய்யத் துவங்கினார். பாராயணம் முடிந்ததும் கனோஜியைத் தமது அறைக்கு வருமாறு காவலனிடம் செய்தி அனுப்பினார். சுமார் அரை ஜாமத்திற்கெல்லாம் அந்த அறைக்குள் நுழைந்த கனோஜி என்றுமில்லாத கதையாக அன்று சற்று ஆசாரத்துடன் காணப்பட்டார். அவர் பூர்ண ஸ்நானம் செய்ததற்கு அறிகுறியாக அவரது முரட்டுத் தலைக் குழல்களில் ஓரிரு நீர்த்துளிகள் அப்பொழுதும் காணப்பட்டன. நெற்றியிலிருந்த சந்தன நேர்க்கோடுகள் இரண்டு, சற்று பளிச்சென்று காட்சியளித்தன. அவரது பயங்கர மீசையும் அகன்று நன்றாக முறுக்கி விடப்பட்டுச் சற்று ஒழுங்குட னிருந்தது. கனோஜியின் இடுப்பிலிருந்த வயிரப் பிடியுள்ள பிச்சுவா மட்டும் சாய்ந்து செருகப்பட்டிருந்தாலும் அதிலும் ஓர் ஒழுங்கு தெரிந்தது. கனோஜியின் மேல் சட்டையும் அரை வேட்டியும் மிகத் துல்லியமாக இருந்தன. இத்தனை ஏற்பாட்டுடன் கனோஜி வந்திருந்துங்கூட, எதிரே ஒல்லியாய் வெள்ளை வெளேரென்று மெல்லிய உடையணிந்து, தங்கச்சுடர் விட்ட அழகிய மேனியுடன் உட்கார்ந்திருந்த பேஷ்வாவின் முன்பு அவர் சாதாரண வீரனாகவே விளங்கினார்.

பாலாஜி விசுவநாத் கனோஜியை மிக அன்புடன் வரவேற்று, தமக்கருகில் உட்கார வைத்துக்கொண்டார். “கனோஜி! நீ சிறிதும் மாறவில்லை. அதே முரட்டுப் பையனாகத்தானிருக்கிறாய்” என்று அன்புடன் சொற் களையும் உச்சரித்தார்.

”பாலாஜி! நீங்கள் மட்டும் என்ன மாறிவிட்டீர்கள்? உடம்பில் சிறிது கூடச் சதைப்பிடிப்பு இல்லை. எலும்புகளை எண்ணி விடலாம்” என்றார் கனோஜி.

இதைக் கேட்ட பாலாஜி நகைத்தார். “இந்தப் பலவீனத்தில் தான் உன்னுடன் போராட முடியவில்லை. உன்னை என் வழிக்குத் திருப்ப வந்திருக்கிறேன்” என்றும் கூறினார் நகைப்புக்கிடையே.

இதைக் கேட்டதும் கனோஜியின் முகத்தில் உணர்ச்சி மாறியது. லேசாகக் கோபம் சுடர்விட்டது. “பாலாஜி விசுவதாத்! எனக்கு இளவயதில் நீங்கள் செய்த உதவியை, நான் மறுக்கவில்லை, என்னை ஸித்திகளிடமிருந்து மீட்டு எனக்கு உயிரளித்ததற்காக என் உயிரைக்கூட அளிப்பேன். அதெல்லாம் நண்பர் பாலாஜி விஷயத்தில், பேஷ்வா பாலாஜியின் விஷயத்தில் அந்த உணர்ச்சிகளுக்கு இடமில்லை என் இதயத்தில்” என்ற சொற்கள் சுடச்சுட வெளிவந்தன கனோஜியிடமிருந்து.

இந்த உஷ்ணத்தை பாலாஜி விசுவநாந் சிறிதும் லட்சியம் செய்தாரில்லை. அவரது சாம்பல் நிறக் கண்கள் சர்வ சாதாரணமாக எழுந்து கனோஜியை நோக்கின “நான் இங்கு நண்பன் பாலாஜியாக வரவில்லை. பேஷ்வா பாலாஜியாகத்தான் வந்திருக்கிறேன்” என்ற சொற்கள் உறுதியுடன் உதிர்ந்தன அவரிடமிருந்து.

“இங்கு ஒரு பேஷ்வா சிறையிலிருக்கிறார்…” என்று சுட்டிக்காட்டினார் கனோஜி.

“இன்னொரு பேஷ்வாவையும் அங்கு அனுப்ப யார் தடை செய்தது உன்னை?” என்று கேட்டார் பாலாஜி.

கனோஜி மிகுந்த சங்கடத்துடன் அசைந்தார் இருந்த இடத்தில். “பாலாஜி! என் பொறுமையை அதிகமாகச் சோதிக்காதீர்கள்” என்றும் சொன்னார்.

“உன் பொறுமையைச் சோதிப்பதற்காக நான் வரவில்லை கனோஜி” என்றார் பாலாஜி.

“பின்?”

“உன்னைக் காப்பாற்ற வந்திருக்கிறேன்.”

“என்னைக் காப்பாற்றவா?”

“ஆம்.”

”எதிலிருந்து?”

“ராஜத் துரோகத்திலிருந்து. அது மட்டுமல்ல, உன்னை எதிர்நோக்கி வரும் பேராபத்திலிருந்து.”

கனோஜி பாலாஜியை எரித்து விடுவதுபோல் பார்த்தார். ”எனக்கா? ஆபத்தா!” என்று எரிச்சலுடன் கேட்டு கேலியாக நகைக்கவும் செய்தார்.

பாலாஜி விசுவநாத், கனோஜியின் எரிச்சலையோ நகைப்பையோ சிறிதும் லட்சியம் செய்யாமல் தமது கருத்தை விளக்கினார். ”கனோஜி, இப்பொழுது நீ புகழின் உச்சியிலிருக்கிறாய். ஷாஹுவின் பெரும் படையைக் கல்யாணில் முறியடித்து விட்டாய். ராஜ்மச்சியும் லோஹ்காட்டும் உன் கையிலிருப்பதால் வடகொங்கணத் தின்மீது உன் தயவில்லாமல் யாரும் நுழைய முடியாது.

பிரிட்டிஷாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விட்டதால் கடலில் இப்பொழுது உனக்கு அதிக ஆபத்துமில்லை. நிலைமை இப்படியே நீடிக்குமானால் நீ வடகொங்கணத்தின் முடிசூடா மன்னனாயிருப்பாய். ஆனால் நிலைமை இப்படியே நீடிக்காது” என்றார் பாலாஜி.

கனோஜி, கேள்வி தொக்கி நின்ற பார்வையொன்றை வீசினார் பாலாஜிமீது. “நிலைமை ஏன் நீடிக்காது இப்படியே? எனது தரைப்படை, கடற்படை இவற்றின் பலம் என்ன ஆயிற்று? எங்கே போயிற்று?” என்று வினவினார்.

பாலாஜி தரையை நோக்கிய வண்ணம் சாந்தமாகக் கூறினார்: “படை பலம் மட்டும் அரசுகளை நிலைக்க வைப்பதில்லை. பெரும் படை பலமுள்ள மொகலாய சாம்ராஜ்யம் சாதாரண மலைச் சாதியினரைக் கொண்டு சிவாஜி மகாராஜாவால் ஆட்டப்பட்டது. அரசுகளுக்கு வேர் மக்களிடமிருக்கிறது, சூழ்நிலையிலிருக்கிறது. இரண்டும் உனக்குச் சரியில்லை. காலம் உன்னை மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தின் எதிரியெனத் தூற்றும் சூழ்நிலை உனக்கு எதிராக உருவாகிறது. ஏற்கனவே போர்க்சுக்கீஸியர் தங்கள் கடற்படையைக் கொலாபா முன்பு கொண்டு வந்து முற்றுகையிட்டதாக என் ஒற்றர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது அங்கு ஸித்திரஸுல் யாகூத்கானின் போர்க் கப்பல்களும் நிற்கின்றன. உன் மரக்கலங்களை நீ தரையிலிழுத்து விட்டதால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் உன் மரக்கலங்கள் தரையிலேயே இருக்க முடியாது. அவற்றை நீ கடலில் செலுத்த முயன்றால் ரஸுல் யாகூத்கானின் பீரங்கிகள் அவற்றை அழித்துவிடும். தவிர, நிரம்ப நிலத்தைப் பிடித்திருக்கிறாய். அதை எப்படி நிர்வகிக்கப் போகிறாய்? மாலுமிகள் அதிகமாக அடங்கிய உன் படை, நில நிர்வாகத்துக்கு எப்படி உதவும்? கொள்ளையடிக்கும்
மாலுமிகளுக்கு இந்த நில வாழ்க்கையும் இதன் கட்டுப்பாடு களும் . அதிக நாள் ஒத்துவராது. நீயாக அவர்களை மீண்டும் கடலுக்கு அனுப்பாவிட்டால் அவர்களாகப் போய் விடுவார்கள். இவையெல்லாம் உன் பலவீனங்கள். இன்னொரு பேராபத்தும் உன்னை எதிர் நோக்கியிருக்கிறது” என்று வாசகத்தை முடிக்கவில்லை பாலாஜி. அவர் சாம்பல் நிறக் கண்கள் கனோஜியை நோக்கின அனுதாபத்துடன்.

கனோஜி பாலாஜியின் பேச்சால் வசீகரிக்கப்பட்டுச் சில விநாடிகள் பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தார். பிறகு மெல்லக் கேட்டார். “இன்னொரு பேராபத்து என்ன?” என்று.

பாலாஜியும் மெல்லத்தான் பதில் சொன்னார். ஆனால் அது பெரும் அதிர்ச்சியாயிருந்தது கனோஜிக்கு. ”உன் நண்பர் கவர்னர் ஏஸ்லாபி இருக்கிறாரல்லவா?” என்று துவங்கினார் பாலாஜி.

“ஆம்.”

“அவர் இங்கிலாந்துக்குப் போகிறார்.”

“என்ன!”

“ஆம் மாற்றிவிட்டார்கள்.”

“யாருடைய வேலை இது?”

“மிஸ்டர் ப்ரௌன்.”

“அடுத்த கவர்னர்?”

“பூன் என்று ஒருவர் வருகிறார்.”

கனோஜி அசைவற்று உட்கார்ந்தார். ”அப்படி யானால் எங்கள் ஒப்பந்தம்?” என்று கேட்டார்.

“ஏஸ்லாபியுடன் சென்றுவிடும்” என்று கூறிய பாலாஜி, “கனோஜி! பிரிட்டிஷ்காரர்களை மட்டும் நான் நம்புவதில்லை, மகாதந்திரசாலிகள். என்றாவது ஒரு நாள் மகாராஷ்டிரத்தை யாராவது உடைக்க முடியுமென்றால் அது அவர்களால் தான் முடியும்?” என்று தெரிவித்துப் பெருமூச்சும் விட்டார் பேஷ்வா.

கனோஜிக்கு பாலாஜியின் விளக்கம் தெளிவாகப் புரிந்தது. “மீண்டும் பிரிட்டிஷார் விரோதமென்றால், மறுபடியும் கடலில் போர். கடலில் போர் என்றால் தரை யில் பலவீனம்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

அவர் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட பாலாஜி, “அதனால் தான் உன்னைத் தரையி லும் வலுவாக்கப் பார்க்கிறேன். நீ நியாயமாகச் சேவை செய்ய வேண்டிய தரப்புக்குத் திரும்பு. ஷாஹுவின் ஸார்கேலாக இரு; இருந்தால்…” என்று கூறி நிறுத்தினார்.

” இருந்தால்?” கனோஜியின் கரகரத்த குரல் கடுமை யுடன் ஒலித்தது.

“கொங்கணம் முழுவதையும் உன் கையில் ஒப்படைக்கிறேன்” என்றார் பாலாஜி சாவதானமாக.

கனோஜி உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்தார். சிறிது, அறையில் உலாவினார். சரேலென்று நின்று கேட்டார்: “அப்படியானால் தாராபாயைக் கைவிடச் சொல்கிறீர்களா?” என்று.

“வேண்டியதில்லை. தாராபாய் ஷாஹுவிடமிருக்கிறாள் கௌரவக் கைதியாக” என்று மற்றொரு வெடி குண்டை வீசினார் பாலாஜி.

எதற்கும் அஞ்சாத, குழம்பாத, கனோஜியின் மனம் பெரிதும் குழம்பிக் கிடந்தது. பாலாஜி அவர் குழப்பத்தை. நோக்கினார், இருந்த இடத்தைவிட்டு அகலாமல் பேசினார்.

“கனோஜி! மன்னர்கள், ராணிகள், வருவார்கள் போவார்கள், மகாராஷ்டிரம் போகாது. அதன் சிறப்பு:

தான் நம் சிறப்பு. அதற்குத்தான் சத்ரபதி சிவாஜி போராடினார். நாமும் அதற்குத்தான் போராட வேண்டும். கைதியாயுள்ள தாராபாயின் பெயரை வைத்துக் கொண்டு நீ கொள்ளையடிப்பதைவிட மன்னரின் ஸார்கேலாக கொங்கணித் தரையையும் கடலையும் ஆள்வது உனக்கும் பெருமை. மகாராஷ்டிரத்துக்கும் பாதுகாப்பு. நன்றாக யோசித்துப்பார். நாளை மக்கள் உன்னை மகாராஷ்டிரத்தை பாதுகாத்த மாவீரனாகக் கொண்டாட வேண்டுமா? அல்லது அரசின் சிறு கிளையைப் பிடித்துக்கொண்டு சுய நலத்துக்குப் போராடிய கொள்ளைக்காரனாக நினைக்க வேண்டுமா? நன்றாகச் சிந்தித்துப்பார், உன் படையுடன் என் படையை இணைத்தால், ஸித்திகள் தரையிலும் கடற்பகுதியிலும் விரட்டப்படுவார்கள் என்பதை எண்ணிப்பார். உன் பொன்னான, சிறப்புத் தரும் எதிர்காலத்தையும், உன் பிற்காலத்தையும் எண்ணிப்பார்.”
இத்துடன் பேச்சை நிறுத்திய பேஷ்வா எதிரேயிருந்த மேஜைப் பெட்டியை அருகில் இழுத்து வைத்துக்கொண்டு அதன் மீதிருந்த காகிதங்களில் எழுத முற்பட்டார்.

“என்ன எழுதுகிறீர்கள்?” என்று வினவினார் கனோஜி.

“நமது ஒப்பந்த நகல்” என்று சர்வ சாதாரணமாக அறிவித்த பாலாஜி தொடர்ந்து எழுதலானார்.

Previous articleJala Deepam Part 3 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch34 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here