Home Historical Novel Jala Deepam Part 3 Ch34 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch34 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

64
0
Jala Deepam part 3 Ch34 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch34 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch34 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 34 அந்தத் தமிழனா!

Jala Deepam Part 3 Ch34 | Read Jala Deepam | TamilNovel.in

பாலாஜி விசுவநாத் அதற்குப் பின்பு எதிரே நின்று கொண்டிருந்த கனோஜி ஆங்கரேயைச் சிறிதும் கவனிக்காமல் கையிலிருந்த மயிலிறகு எழுது கோலால் கடுக்காய் மை கொண்டு விடுவிடு என்று காகிதத்தில் எழுதிக் கொண்டு போனார். எந்த இடத்திலும் தாமதிக்காமல் புத்தி ஓடுகிற ஓட்டத்தில் பேனாவையும் ஓடவிட்ட பேஷ்வா, பல பக்கங்களை எழுதி முடித்த பின்னர் ஆசுவாசப் பெருமூச்சு விட்டுத் தமக்குப் பின்னாலிருந்த திண்டில் லேசாகச் சாய்ந்து, “கனோஜி! இது முழுவதையும் நீ படிக்கிறாயா? அல்லது சுருக்கமாக நான் என் வாயால் சொல்லட்டுமா?” என்று வினவினார்.

கனோஜி அந்தக் காகிதங்களைக் கையில் வாங்கிப் பார்த்தார். தாள்களைப் புரட்டினார். பிறகு அவற்றை பேஷ்வாவின் மேஜைப் பெட்டியின்மீது போட்டு, கலகல வென நகைத்தார். அந்த நகைப்பின் காரணம் பாலாஜிக்குப் புரிந்திருந்தாலும் அதை அவர் சற்றும் வெளிக்குக் காட்டாமல், புன்முறுவல் கொண்டு, “ஏன் போட்டு விட்டாய் ஒப்பந்த நகலை?” என்று வினவினார்.

“நான் வீரன். படைகளை நடத்துபவன்” என்றார் கனோஜி. ”படைத் தலைவனாயிருந்தால் படிக்கக்கூடாதா?” “படைத் தலைவர்களுக்கு வெட்டத் தெரியும், சுடத் தெரியும். வாசகங்களில் மறைக்கப்படும் அரசியல் சூது வாதுகள் தெரியாது. உங்கள் ஆரம்ப வாசகத்திலேயே வரிகள் பத்துப் பதினைந்து இருக்கின்றன. அதைப் படித்து ஆராய்ந்து அதன் சூட்சுமங்களையும் திரிசமன்களையும் புரிந்து கொள்வதற்குள் ஷாஹுலின் கோட்டைகள் நான்கைப் பிடித்து விடுவேன்” என்று நகைத்தார் மீண்டும் கனோஜி.

பாலாஜி விசுவநாத் நமட்டு விஷமமாகச் சிரித்தார். “அப்படியானால் உனக்கு வேண்டிய யாரிடமாவது நகலைக் காட்ட உத்தேசமா?” என்று வினவினார் விஷமமாக.

“ஆம்” என்றார் கனோஜி. “யாரிடம்?” என்று கேட்டார் பாலாஜி.

பதிலுக்கு பாலாஜியை விரலால் சுட்டிக் காட்டிய கனோஜி, “நான் வாழ்க்கையில் நம்பக்கூடிய ஒரே ஒரு மனிதர் நீங்கள் தான். ஆகவே உண்மையைச் சொல்லுங்கள். இந்த ஒப்பந்தம் உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா?” என்று வினவினார்.

பாலாஜியின் சாம்பல்நிறக் கண்கள் பளிச்சிட்டன. “இருக்கிறது கனோஜி” என்ற குரலில் அன்பு சொட்டியது.

“இதனால் என் மதிப்பு உயருமா? குறையுமா?” என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார் கனோஜி.

“உயரும்.”

“எனது நலன்?”

“பன்மடங்கு உயரலாம்!”

“என் எதிரிகள்!”
“ஒன்று, உனது நண்பர்களாவார்கள், அல்லது அழிவார்கள்.”

“சரி பாலாஜி’’. சுருக்கமாக ஷரத்துகளைச் சொல்லுங்கள்.

பாலாஜி விசுவநாத் மேஜைப் பெட்டிமீது கிடந்த காகிதங்களைத் தொடாமலேயே கூறினார் கனோஜியை நோக்கி. “கனோஜி! இந்தச் சாஸனத்தால் நீ ஷாஹுவின் ஸார்கேலாகிறாய். ஷாஹு மகாராஜா உன்னைக் கொங்கணியின் தலைவனாக அங்கீகரிக்கிறார். கொங்கணியைச் சேர்ந்த மூன்று பகுதிகளும் உன்னிடம் ஒப்படைக்கப்படு கின்றன. மகாராஷ்டிரத்தின் மேலைக் கடலோரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு பூர்ணமாக உன்னிடமே விடப் படுகிறது. பிராஞ்சிகளையும் சீப்ஷிகளையும் (வெள்ளைக்காரர்களையும் அபிசீனியரையும்) மண்ணாகச் செய்வது உன் பொறுப்பாகும். இப்பொழுது நிகழ்ந்த போருக்குப் பிறகு பிடிக்கப்பட்ட கோட்டைகளில் லோஹ்காட் உட்பட ஒன்பது கோட்டைகளை மன்னர் வசம் நீ ஒப்படைக்க வேண்டும். பதிலுக்கு மன்னர் உனக்கு ராஜ்மச்சி உட்பட நான்கு கோட்டைகளை மட்டுமின்றி, அவற்றைச் சூழ்ந்துள்ள நிலப் பிரதேசங்களையும் கொடுக்கிறார். நீ கேட்கும் போதெல்லாம் மன்னர் உனக்கு ராணுவ உதவியளிப்பார். இந்த ஒப்பந்தத்தில் மன்னர் உனக்குப் பத்துக் கடற்கரைக் கோட்டைகள், பதினாறு உள்நாட்டுக் கோட்டைகள் கொடுக்கிறார். இதனால் பிரதி ஆண்டு முப்பத்தாறு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்படியான நிலப்பகுதி உன் அதிகாரத்திற்கு மாற்றப்படுகிறது. இனிமேல் உன் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஸார்கேல் பட்டத்தை வகிக்கும். இந்த ஒப்பந்தத்தில் நீ கையெழுத்துப் போடும் போது, ‘ஷாஹுகார்ய துரந்தர் துகோஜி தனுஜன் மனா கனோஜி ஸார்கேலாஸ்ய முத்ரிகேயம் விராஜதே’ ‘என்று கையெழுத்திடுவாய், முத்திரையும் பொறிப்பாய்.

இதைக் கேட்ட கனோஜி ஆங்கரே பிரமித்துப் போனார். இந்த ஒப்பந்தத்தின்படி பம்பாயிலிருந்து கோவா வரையிலுள்ள கடற்கரைப்பகுதி தன்னிடமிருக்கும் என்பதை உணர்ந்ததால் பெரும் உணர்ச்சிவசமும் பட்டார். அப்பொழுது அவர் நினைத்ததெல்லாம் ஷாஹுவைப் பற்றியல்ல. ஒப்பந்த நகலில், ‘ஷாஹு’ ‘மன்னர்’ என்ற சொற்களெல்லாம், சம்பிரதாயச் சொற்களென்பதையும் எல்லா முடிவும் தனது பால்ய நண்பர் பாலாஜியின் முடிவு தானென்பதையும் உணர்ந் தார். அந்த நகலில் குறிப்பிட்டுள்ள சில நிலப்பகுதிகள் ஜன்ஜீரா ஸித்திகளுக்குச் சொந்தமானவைதானென்பதை உணர்ந்ததால், ‘பிறரிடமிருக்கும் நிலங்களை இவர் எப்படி எனக்குத் தானம் செய்ய முடியும்?’ என்று யோசித்தார். அதைப் பற்றிக் கேட்கவும் கேட்டார். “ஜன்ஜீரா பகுதி யிலுள்ள நிலங்கள் ஸித்திகளின் ஆதிக்கத்திலிருக் கின்றனவே?” என்று.

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்த பாலாஜி, “உண்மை கனோஜி! ஆனால் இந்த ஒப்பந்தத் துக்குப் பிறகு ஸித்திகளின் பலம் மிக ஒடுங்கிவிடும். அப்படி ஒடுங்காவிட்டால் ஒடுக்க நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினார்.

கனோஜி தீவிர யோசனையில் இறங்கினார். பிறகு ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்வதற்கு அறிகுறியாகத் தலையசைத்தார். “இந்த விதிகளை மன்னருக்கு அனுப்புங்கள்” என்றும் கூறினார்.

பாலாஜி புன்முறுவல் பூத்தார். “எதற்கு மன்னருக்கு அனுப்ப வேண்டும்?” என்று கேட்டார் புன்முறுவலின் ஊடே.

”அவர் அங்கீகாரத்துக்கு….”

“மகாராஷ்டிர சம்பிரதாயப்படி பேஷ்வா, மன்னரின் பிரதிநிதி. பேஷ்வா கையெழுத்திட்டால் மன்னர் இட்டது போலத்தான்.”

“சரி, ஒப்பந்தத்தை லிகிதர்களை விட்டு எழுதச் சொல்லுங்கள். நீங்கள் கையெழுத்திட்டதும் நானும் கையெழுத்திடுகிறேன்.”

இந்தச் சமயத்தில் பாலாஜி ஒரு குண்டை எடுத்துப் போட்டார். “இப்பொழுது கையெழுத்துக்கு அவசியமில்லை” என்று கூறினார்.

கனோஜியின் விழிகளில் கேள்விக் குறியொன்று படர்ந்தது. ”பின் எப்பொழுது போடவேண்டும்?” என்ற கேள்வியும் உதிர்ந்தது சந்தேகத்துடன் கனோஜியின் உதடுகளிலிருந்து.

“இன்னும் பதினைந்து நாள் கழித்து பௌர்ணமி அன்று” என்றார் பாலாஜி.

“அன்று என்ன விசேஷம்?” என்று கேட்டார் கனோஜி.

”அபிஷேகம்.”

”அபிஷேகமா? யாருக்கு?”
“குலாபிக்கு. மஹிஷேச்வரிக்கு” என்ற பாலாஜி அம்பாளை நினைத்துத் தலைவணங்கினார்.

கனோஜி அதிர்ச்சியடைந்து நின்றார். . தான் அஞ்சும் ஒரே தேவதையை அம்பாளை பாலாஜி குறிப்பிட்டதை எண்ணி வியக்கவும் செய்தார். ‘அப்படியானால்…?” என்று பேசத் துவங்கி, பேச முடியாமல் நின்றார்.

”ஆம். ஒப்பந்தம் கொலாபாவில் அம்பிகையின் சந்நிதானத்தில் கையெழுத்தாகும். அதை மீற உனக்கோ ஷாஹுவுக்கோ சக்தியிருக்காது. அவள் அனுக்கிரகத்தால் மகாராஷ்டிரத்தின் சக்தி பெருகும். உன்னையோ. ஷாஹுவையோ பிறகு வெள்ளையரோ ஸித்தியோ எதிர்க்க முடியாது” என்று கூறிய பாலாஜி, அன்று முதன் முறையாக உணர்ச்சிப் பெருக்கத்தைக் காட்டினார்.

கனோஜி பாலாஜி முன்பு மண்டியிட்டு உட்கார்ந்து அவர் பாதத்தைத் தொட்டார். “மகாராஷ்டிரத்துக்கு முதன் முதலாக அறிவு மிகுந்த பேஷ்வா ஏற்பட்டிருக்கிறார். இனி வாழட்டும் மகாராஷ்டிரம். ஒழியட்டும் அதன் பூசல்கள். செழிக்கட்டும் ஹிந்து மதம்! ஜெய் குலாபி! ஜெய் பவானி!” என்று உணர்ச்சி ததும்பும் குரலில் கூறி, பாலாஜியின் பாதங்களைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

தம்மெதிரே மண்டியிட்டு வணங்கிய மகாராஷ்டிரத் தின் அந்த மகாவீரனை, கடற்போர் வித்தகனை, இணையிலாச் சிங்கத்தை, ஒல்லியும் பலமற்றவருமான அந்தச் சித்பவன் பிராமணன், பழைய சிப்ளன் உப்பளக் குமாஸ்தா ஏறிட்டு நோக்கினார். அவர் வதனத்தில் பெருமை சுடர்விட்டது. திடகாத்திரமாக, துணிவின் எல்லையாக, காதில் குண்டலமாட இடையில் ஒரு பிச்சுவா செருகிக் கிடக்கக் காட்சியளித்த அந்த மதோன்மத்தனைப் பார்த்து மகிழ்ச்சியுடன் தலையசைத்த பேஷ்வா பாலாஜி விசுவநாத் பெரும் சுமை தனது தலையிலிருந்து இறங்கி விட்டதற்கறிகுறியாகப் பெருமூச்சு விட்டார்.

அவரை வணங்கி எழுந்திருந்த கனோஜி ஆங்கரே கூறினார். “இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற எனது படைத் தலைவர்களுக்கு இன்று முதல் செய்தியனுப்புகிறேன். அவர்களில் முக்கியமானவர்களை இங்கு வரவழைக்கிறேன்.”

அன்று முதல் பல திக்குகளிலும் தூதர்கள் கனோஜியின் செய்திகளைத் தாங்கிப் பறந்தனர். அடுத்த நான்கைந்து. நாட்களில் பல படைத்தலைவர்கள் வால்வானுக்கு வந்தார்கள். இருப்பினும் கனோஜியின் முகத்தில் கவலை தெரிந் தது. கவலைக்குக் காரணத்தை விசாரித்தார் பாலாஜி. “ஒரு படைத்தலைவன் வரவில்லை” என்றார் கனோஜி.

“யாரவன்?” என்று வினவினார் பாலாஜி.

“கல்யாண் போரில் வெற்றி கொண்டவன்” என்றார் கனோஜி.

பேஷ்வாவின் சாம்பல் நிறக் கண்கள் திடீரெனப் பளிச்சிட்டன. அவற்றில் ஏதோ ஓர் ஆவலும் தெரிந்தது.

“அந்தத் தமிழனா?” என்ற கேள்வியில் அந்த ஆவல் அபரிமிதமாக ஒலித்தது.

Previous articleJala Deepam Part 3 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch35 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here