Home Historical Novel Jala Deepam Part 3 Ch36 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch36 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

62
0
Jala Deepam part 3 Ch36 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch36 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch36 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 36 உருண்ட சகடங்கள்

Jala Deepam Part 3 Ch36 | Read Jala Deepam | TamilNovel.in

மதிவதனத்தில் மகிழ்ச்சி குலைந்து துன்பம் தோய்ந்து கிடக்க, சதா சிரிப்புத் தவழும் சிவந்த அதரங்கள் உட்புறம் மடிந்து துடித்திருக்க, மங்கல ஆரத்தி எடுத்த மஞ்சுவை ஒரே விநாடி நோக்கிய கனோஜியின் பெரு விழிகளிலும் துன்பச்சாயல் படர்ந்ததென்றாலும், உள்ளூரத் துன்பச் சுமை பெரிதும் ஏறியதென்றாலும், அவையெதையும் அவர் அதிகமாக வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் பேஷ்வாவுடன் தோர்லாவாடாவுக்குச் சென்றார். அங்கு பேஷ்வாவின் தனியறையில் அவருடன் தனித்திருக்கும்போது அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவும் நினைத்தார் ஷாஹு கார்ய துரந்தரமான கனோஜி ஆங்கரே. ஆனால் எதிலும் யாரையும் முந்திக்கொள்ளும் பாலாஜி விசுவநாத் இந்த விஷயத்திலும் முந்திக்கொண்டு, “கனோஜி, சற்று முன்பு ஆரத்தி எடுத்த இரு பெண்களில் சற்று உயரமாயிருந்தாளே அவள் தானே உன் வளர்ப்புப் பெண்?” என்று வினவினார்.

கனோஜி வியப்பைக் காட்டினார் ஒரு கணம். பிறகு சர்வ சாதாரணமாக, “ஆம்” என்று கொட்டினார்.

“ஜல தீபம் என்ற உன் கப்பலின் தலைவி அவள் தானே’ என்று இன்னொரு கேள்வியும் வீசினார் பாலாஜி.

“ஜல தீபத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினார் கனோஜி.

“ஜலதீபம், மஞ்சு, தமிழன் இந்த மூன்று பெயர்களை அறியாதவன் இன்று மகாராஷ்டிரத்தில் கிடையாது” என்ற பாலாஜி, “ஆமாம், உன் மருமகப் பிள்ளையைக் கொலாபாவுக்கு வரச்சொல்லி உத்தரவிடச் சொன்னேனே, வந்தானா அவன்?” என்றும் கேட்டார்.

கனோஜி அசைவற்று நின்றார் பல வினாடிகள். பிறகு கேட்டார், ‘என் மருமகப் பிள்ளையா?” என்று.

“ஆமாம்.”

“யாரவன்?”

“அந்தத் தமிழன்.”

“அவன்…”

“மஞ்சுவின் கணவன். அவர்களிருவர் உறவும் பிரசித்தம். இன்று மங்கல ஆரத்தி எடுத்தவள் கழுத்தில் மங்கல சூத்ரம் இருக்கிறது.”

“இந்தக் கடைசி வார்த்தைகளைச் சர்வ சாதாரண மாகவும் மிக அனாயாசமாகவும் சொன்னார் பாலாஜி. கனோஜி அதை ஆமோதிக்கும் பாவனையில் தலையை அசைத்து விட்டுச் சொன்னார். “அவள் விஷயம் எனக்குக் கவலையாயிருக்கிறது” என்று.

“எதற்குக் கவலை?”

“தமிழன் இவள் கணவன்.”

“ஆம்.”

“அவன் பிடிவாதக்காரன்.”

”அதனால்!”

“மகாராஷ்டிரத்துக்கு எந்தக் காரணத்தை முன்னிட்டு வந்தானோ அதை நிறைவேற்றாமல் இருக்கமாட்டான். அதற்கு அவனுக்குத் தக்க வாய்ப்பு இருக்கிறது. அவனிடம் நிம்கர் அகப்பட்டுக் கொண்டிருக்கிறான்’ என்று கூறிய கனோஜி முதன்முதலாக அந்த முகவெட்டு வீரனின் பெயரையும் உச்சரித்தார்.

பாலாஜி சிந்தனையில் ஆழ்ந்தார். சிறிது நேரத் திற்குப் பிறகு, ”அவன் தான் மரண காயத்திலிருப்பதாகச் சொன்னார்களே” என்று கேட்டார்.

“ஆம், ஆனால் எந்தக் காயத்தையும் ஆற்ற எமிலி இருக்கிறாள்” என்றார் கனோஜி.

புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக பாலாஜி விசுவநாத் தலையசைத்தார். பிறகு, “நிம்கர் பிழைக்க மார்க்கமிருக்கிறதா?” என்றும் கேட்டார்.

“இருக்கிறது என்று நினைக்கிறேன்.” “இருந்தால் தமிழன் விடமாட்டான் அவனை?” ”விடமாட்டான்.”
“இதற்கு மாற்று என்ன?” என்று ஒரு கேள்வியைத் தொடுத்தார் பாலாஜி.

“இதயசந்திரனைச் சிறை செய்யலாம், முடிந்தால்?” என்றார் கனோஜி.

“அவனுக்கு ஓர் உபதலைவன் இருக்கிறானல்லவா கல்யாண் நகரில்?” என்று கேட்டார் பாலாஜி.

“இருக்கிறான். சுகாஜி என்று பெயர்.” “தமிழனைச் சிறை செய்து அழைத்து வருமாறு அவனுக்குச் செய்தி அனுப்புங்கள்.”

“சரி அனுப்புகிறேன்” என்று ஒப்புக் கொண்டார் கனோஜி.
ஆனால் அதே மாலையில் கல்யாண் நகரின் மருத்துவ மனையில் இவர்கள் எண்ணத்துக்கு நேர்மாறான நிகழ்ச்சி விளைந்து கொண்டிருந்தது. கனோஜியின் ஒற்றனான அந்த முகவெட்டு வீரன், படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு மிஸ் எமிலி கொடுத்த மருந்தை உறிஞ்சிக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே இதயசந்திரன் பூர்ண பயண உடை அணிந்து நின்றுகொண்டிருந்தான். மருந்தை முகவெட்டு வீரன் உறிஞ்சி முடித்ததும், “இன்றிரவு முதல் ஜாமம் முடிந்ததும் நாம் பயணப்படு கிறோம்” என்று கூறினான் தமிழன் வரண்டு கிடந்த குரலில்.
இதற்கு அந்த வீரன் பதில் சொல்லவில்லை. எமிலி பதில் கூறினாள், “இன்னும் பயணத்திற்கு இவர் தகுதியான நிலையில் இல்லையென்று உங்களிடம் ஏற்கனவே கூறியிருக்கிறேன்” என்று. அவள் குரலில் அதிகாரம் இருந்தது.

இதயசந்திரன் எமிலியை ஏறெடுத்து நோக்கினான். “எமிலி! இன்னும் என்னைச் சோதிக்காதே. உன் வார்த்தையைப் பதினைந்து நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றும் கூறினான் கெஞ்சும் குரலில்.

“நாட்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நோயாளியின் நிலை பற்றித்தான் கவலை” என்றாள் எமிலி அவனை ஏறெடுத்து நோக்கி.

“இவனுக்கு நோயொன்றுமில்லை” என்று வந்தது இதயசந்திரனின் பதில்.

“அதை நிர்ணயிக்க வேண்டியது நான்’ என்ற எமிலி, “இவர் தேகத்தில் ரத்தம் பெரிதும் குறைந்திருக்கிறது. அரைக் காதம் பயணம் செய்தால் மீண்டும் மயக்கமாகி விடுவார்’ என்றும் சுட்டிக்காட்டினாள்.

இதயசந்திரன் அவளைச் சுட்டு விடுவதுபோல் பார்த்தான். “தஞ்சையில் ஒரு தாய் தன் மகனுக்காக ஏங்கிக் கிடக்கிறாள் தெரியுமா உனக்கு?” என்றும் கேட்டான்.

“காதில் விழுந்திருக்கிறது அந்தக் கதை. நீங்கள் மகாராஷ்டிரம் வந்த காரணமும் தெரிந்திருக்கிறது எனக்கு. ஆனால் ஒன்று, ஆயிரம் தாய்மார்கள் மகன் களுக்காக ஏங்கிக் கிடந்தாலும் எந்த நோயாளியையும் அவர்களுக்காகச் சாக விடமாட்டேன்” என்றாள் எமிலி.

“இதுதான் உன் முடிவா?” என்று வினவினான் இதயசந்திரன். “ஆம்” என்றாள் எமிலி.

இதயசந்திரன் பதிலேதும் சொல்லாமல் வெளியே சென்றான். சற்று நேரத்திற்கெல்லாம் தடதடவென நான்கு வீரர்கள் பின் தொடர உள்ளே நுழைந்த இதய சந்திரன், “இவனைத் தூக்கிக்கொண்டு போய் வண்டியில் படுக்க வையுங்கள்” என்று உத்தரவிட்டான். நான்கு வீரரும் அவனைத் தூக்கிக்கொண்டு சென்ற பின் எமிலியை அணுக இரண்டடி எடுத்து வைத்த தமிழனை, “அப்படியே நில்லுங்கள்” என்று எட்டவே நிற்க வைத்த எமிலி, ”புனிதமான இந்த ஆஸ்பத்திரியின் விதிகளை மீறுகிறீர்கள். உங்களை ஆண்டவன் காப்பாற்றட்டும்” என்றாள். அவள் முகம் கல்லாயிருந்தது. அதில் சுரணை திடீரென்று அற்றுப்போய் விட்டதாகத் தோன்றியது இதயசந்திரனுக்கு. ஏதோ வெள்ளை உடையணிந்த தேவதை நிற்பது போல் அவள் நின்றிருந்தாள் அந்த அறையின் விளக்கொளியில்.

“எமிலி! உன் பிடிவாதம் இப்படிச் செய்யத் தூண்டு கிறது என்னை. அவன் நிலையைவிட என் நிலை மோசமானது. மிஞ்சினால் அவன் மரணமடைவான். நானோ எந்தக் கணத்திலும் சிறை செய்யப்படலாம் கனோஜியால். ராணுவ கட்டளைகளை மீறிவிட்டேன்” என்ற இதய சந்திரன் சற்று பேச்சை நிறுத்தி மீண்டும் சொன்னான்: “நான் இறப்பதைப் பற்றி என்றுமே கவலைப் பட்டதில்லை எமிலி! ஆனால் நான் தமிழகத்தில் ஒரு. பெண்ணிடம் வைத்து வந்த ஆணையிருக்கிறது. அதை நிறைவேற்றாமல் சாக இஷ்டமில்லை. ஒன்று மட்டும் உனக்கு உறுதி கூறுகிறேன். இவனைக் கூடிய மட்டும் புரவியேற விடாமல் வண்டியில் சௌகரியமாக அழைத்துச் செல்கிறேன். முடிந்த வரை காலா காலத்தில் உணவு, பிராந்தி முதலியவற்றையும் நீ கொடுக்கும் மருந்தையும் கொடுக்கிறேன். ஒரு குழந்தையைக் காப்பது போல் இவனையும் காப்பாற்றுகிறேன். அப்படி ஒருவேளை என் உபசாரங்களையும் மீறி இவன் இறந்தால் என் பணி முடிந்தபின்பு நான் மீண்டும் இங்கு வருகிறேன். என்னைச் சிறை செய்து நீயே ஒப்படைத்து விடு கனோஜியிடம்” என்று.

இந்த வார்த்தைகளைக் கேட்டு எமிலி பதில் சொல்ல வில்லை. அசையாமல் அடுத்த அறை சென்று இரண்டு குப்பிகளைக் கொண்டு வந்தாள். “இது மருந்து, இது பிராந்தி. சாப்பிடும் முறை அவருக்குத் தெரியும்” என்று கூறிக் குப்பிகளை எதிரேயிருந்த மேஜை மீது வைத்தாள்.

அவற்றை இதயசந்திரன், கையில் எடுத்துக் கொள்ள வில்லை. மேஜையைச் சுற்றி வந்து எமிலியைப் பிடிக்கப் போனான், இம்முறை எமிலி நகரவில்லை. அவனைத் தடுக்கவுமில்லை, சிலை போல் நின்றாள். அவளை இதய சந்திரன் இறுகத் தழுவினான். ஆனால், அவள் உடல் மரக்கட்டையாக இருந்தது. அந்த உடம்பில் உணர்ச்சிகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை அவளுக்கு. அவள் நிலை பெரு வியப்பாக இருக்கவே பிரமை பிடித்து நின்ற அவள் பூவுடலைத் தழுவிய தன் கைகளை அகற்றினான். சென்ற பதினைந்து நாட்களிலும் அவள் ஆஸ்பத்திரி அலுவல் போக மீதி சமயங்களில் தனக்களித்த இன்பத்தை யெல்லாம் எண்ணிப் பார்த்த இதயசந்திரன், ‘ஒரே நாளில் இலள் எப்படி இத்தனை தூரம் மாறினாள்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

மிஸ் எமிலியின் கண்களை அவன் நன்றாக ஏறெடுத்து நோக்கினான். அவள் அழகிய உதடுகள் மெல்ல அசைந்தன. ” என் உடல் இனி நோயாளிகளின் பணிக்காக ஏற்பட்டது வீரரே. நம்மிருவர் வாழ்க்கைக் கப்பல்கள் ஏதோ விதியை முன்னிட்டுச் சிறிது காலம் கூடின. இனிப் பிரிய வேண்டிய காலம் வந்துவிட்டது. செல்லுங்கள்’ என்றாள் மிக மெதுவாக, உறுதியாக.

“எமிலி! எமிலி!” என்று நாத் தழுதழுக்க அழைத்தான் இதயசந்திரன்.

எமிலி அவனை நோக்கிக் கூறினாள், “உங்கள் ஆணையை நிறைவேற்ற நீங்கள் சொல்லுங்கள். என் ஆணையும் நிறைவேறும்” என்று. “உன் ஆணையா?”

“ஆம். முன்பே கூறினேனே, நீங்கள் மஞ்சுவிடம் திரும்பும்போது நான் அங்கிருக்கமாட்டேன் என்று.”

“ஆம், சொன்னாய் எமிலி.’ “அது உண்மையாகட்டும். செல்லுங்கள் அவளிடம்” என்றாள் எமிலி. ”உயிரிருந்தால் செல்வேன்” என்றான் இதயசந்திரன்.

மிஸ் எமிலி புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள். இதயசந்திரன் அவளை நீண்ட நேரம் நோக்கிக்கொண்டே நின்றான். பிறகு மேஜை மீதிருந்த இரு குப்பிகளையும் கையில் எடுத்துக்கொண்டு வாயிற்படியைத் தாண்டிச் சென்றான். வாயிலிலிருந்த வண்ணம் மீண்டும் அவளை ஒரு முறை நோக்கினான். அதே அறையில் விளக்கொளியில் அவள் . வெள்ளை வெளேரென நின்றிருந்தாள் ஆடாமல் அசையாமல், சிலைபோல. சில விநாடிகளே அவளை நோக்கிய இதய சந்திரன், “விடு வண்டியை” என்று ஆணையிட்டுத் தனது புரவிமீது தாவினான்.

அறையிலிருந்த வெள்ளைச் சிலையாள் அவன் போவதைப் பார்த்துக்கொண்டே நின்றாள். அதுவரை சலனமற்ற கண்களில் மெல்ல மெல்ல நீர் திரண்டு இரு கன்னங்களிலும், ஒற்றைக் கோடாக வழிந்தோடியது. அப்பொழுதும் எமிலி அசையவில்லை. குலுங்கி அழவுமில்லை. உதடுகள் மட்டும் லேசாக இருமுறை உள்நோக்கி மடிந்து மீண்டும் முன் வந்து லேசாகத் துடித்தன. வெளியே வண்டியின் சகடங்கள் உருண்டோடும் ஒலி கேட்டது. அலை தனது வாழ்க்கையின் சகடங்கள் என்பதை உணர்ந்தாள் எமிலி.

Previous articleJala Deepam Part 3 Ch35 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch37 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here