Home Historical Novel Jala Deepam Part 3 Ch37 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch37 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

68
0
Jala Deepam part 3 Ch37 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch37 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch37 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 37 சமுத்திரம் முழங்கால்…

Jala Deepam Part 3 Ch37 | Read Jala Deepam | TamilNovel.in

தன்னிடம் கொள்ளை ஆசை வைத்திருந்த மிஸ் எமிலி மனம் முறிந்து வெள்ளைச் சிலையென ஆடாமல் அசையாமல் மருத்துவமனைக்குள் நின்றுவிட்டதை வெளியே வந்தபின்பு பார்த்த இதயசந்திரன் மனமும் வெடித்துவிடும் நிலையிலிருந்ததென்றாலும், கடமையை முன்னிட்டு அவன் இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு கையிலிருந்த குப்பிகளிரண்டையும் தனது புரவியின் பக்கவாட்டில் தொங்கிய தோல் பையில் அடைத்துவிட்டு, “விடு வண்டியை” என்று உத்தரவிட்டுத் தனது புரவியையும் தட்டிவிட்டான்.

வண்டி பல தெருக்களைக் கடந்து கல்யாண் நகரின் தலைமைத் தளத்துக்கு வந்ததும் அங்கிருந்த சுகாஜியை அழைத்து வரச்சொல்லி, ‘சுகாஜி, நான் இவனை அழைத்துப் போகிறேன். இங்குள்ள படைகளுக்கு நீ தலைமை வகித்திரு. ஸார்கேலின் உத்தரவு எப்படியோ அப்படியே நடந்து கொள்” என்று கூறினான்.

இந்த விபரீத உத்தரவைக் கேட்ட சுகாஜியின் முகத்தில் மிதமிஞ்சிய வியப்பு மண்டியது. “இங்குள்ள படைகளுக்கு நான் தலைமை வகிப்பதா!” என்ற அவன் கேள்வியில் வியப்பு மட்டுமின்றி, சற்றுக் கிலியும் ஒலித்தது.

அந்த இரண்டையும் கவனிக்கத் தவறாத இதய சந்திரன், “சுகாஜி இதில் வியப்புக்குக் காரணமில்லை. படைத்தலைவன் இல்லாத காலத்தில் உப தலைவன் படைகளை நடத்துவது ராணுவ அமைப்பு விதிகளுக்குப் புறம்பானதல்ல” என்று சர்வ சகஜமாகச் சுட்டிக் காட்டினான்.இருப்பினும் சுகாஜியின் கிலி அகலாததால், “உபதளபதியவர்கள் சொல்வது, போரிடும் சமயத்தில் பொருந்தும். படைத்தலைவன் காயப்பட்டோ, இறந்தோ விழுந்துவிட்டால் உடனடியாக அதற்கடுத்தவன் தலைமை யேற்றுப் படைகளை நடத்துவதுண்டு. அதற்கு இப்பொழுது சந்தர்ப்பமேதும் இருப்பதாகத் தெரிய வில்லையே” என்று தெரிவித்தான்.

சுகாஜியைப் பேச்சால் ஏமாற்ற முடியாதென்பதைப் புரிந்துகொண்ட இதயசந்திரன், “சுகாஜி! நான் அவசர வேலையாக இந்தக் கைதியைக் கொலாபாவுக்குக் கொண்டு போகவேண்டியிருக்கிறது. ஆகவே, நீ இங்குள்ள படை களைக் கவனித்துக்கொள். கொலாபாவிலிருந்து செய்தி அனுப்புகிறேன். அதன்படி நடந்துகொள்” என்று கூறிவிட்டு, தன்னுடன் மருத்துவமனைக்கு வந்த வீரர்களை நோக்கி, “நீங்கள் யாரும் அவசியமில்லை, வண்டியைச் செலுத்தும் வீரன் மட்டும் வந்தால் போதும்” என்று உத்தரவிட்டான்.

சுகாஜி பிரமித்தான். உபதளபதி எதற்காகத் துணைக்குக்கூட வீரர்களை அழைத்துச் செல்ல மறுக்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. இருப்பினும் அதைக் கேட்பதால் பயனில்லை என்று உணர்ந்து கொண்டதால் தலைவணங்கி, “உத்தரவு” என்றான்.

அதற்குமேல் அங்கு தாமதிக்காத இதயசந்திரன் வண்டியை விடச்சொல்லி அதன் பின்னால் தனது புரவியை நடத்தினான். வண்டி கல்யாண் நகரைத் தாண்டி கால் காத தூரம் வந்ததும் வண்டியோட்டிய வீரனை விளித்த இதயசந்திரன், “உனக்கு வண்டியைச் செலுத்தக் களைப்பாயிருக்கிறதா?” என்று வினவினான். “இல்லை, உபதளபதி” என்றான் வீரன்.

“இருக்கிறது” என்று வலியுறுத்தினான் இதய சந்திரன்.

“இல்லை. சிறிதளவும் களைப்பில்லை.”

“உபதளபதியின் கருத்தை எதிர்த்துப் பேசுவது ராணுவ விதிகளுக்குப் புறம்பானது” என்றான் இதய சந்திரன் சற்றுக் கடுமையாக.

வண்டியோட்டிய வீரன் விழித்தான். “உபதளபதி…” என்று துவங்கவும் செய்தான்.

“பேசாதே. வண்டியைவிட்டு இறங்கு” என்று கட்டளையிட்டான் இதயசந்திரன்.

பிரமிப்பு உச்சநிலையை அடையவே வண்டியை’ நிறுத்திக் கீழே குதித்த வீரன், “இனி என்ன செய்ய வேண்டும் பிரபு?” என்று வினவினான்:

“திரும்பக் கல்யாண் நகருக்குப் போ” என்று கூறிய தமிழன், புரவியிலிருந்து கீழே குதித்து அதன் சேணத்தை. வண்டியின் பின்புறத்தில் கட்டிவிட்டுத் தான் ஏறி, சாரதி ஸ்தானத்தில் உட்கார்ந்துகொண்டு, வண்டிப் புரவியைச் சாட்டையால் தட்ட, வண்டி வேகமாகச் செல்லத் தொடங்கியது.

வண்டியிலிருந்து இறக்கப்பட்ட சாரதி வண்டி போவதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான். உபதளபதி எதற்காகத் தன்னை இறக்கிவிட்டுப் போகிறார் என்பது புரியவில்லையாதலால், அவன் சர்வ உணர்ச்சிகளும் அடங்கப் பல நிமிடங்கள் நின்றிருந்துவிட்டுக் கல்யாண் நகரை நோக்கித் திரும்பினான்.

ஆனால் இப்படி எல்லா வீரர்களையும் நீக்கிவிட்டுத் தன்னைத் தன்னந்தனியாக இதயசந்திரன் ஏன் அழைத்துப் போகிறான் என்பதை வண்டியில் படுத்திருந்த முகவெட்டு வீரனான நிம்கர் சந்தேகமற உணர்ந்து கொண்டதால் அவன் கடை இதழ்களில் சோகப் புன்முறுவலொன்று படர்ந்தது. தன்னிடமிருந்து தஞ்சை இளவலின் ரகசியத்தைப் பறிக்க இதயசந்திரன் செய்யும் கடைசி முயற்சி அது என்பதையும் புரிந்துகொண்ட நிம்கர் சற்று லேசாக நகைக்கவும் செய்தான்.

அந்த நகைப்பு இதயசந்திரன் காதில் விழவில்லை. அவன் மனம் மிஸ் எமிலியையும் அவள் இணையில்லாத தியாகத்தையும் பற்றி நினைத்துத் துன்பத்தில் தோய்ந் திருந்தது. அப்பொழுது அவன் மனக் கண்ணில் மருத்துவமனையில் கடைசியாகக் கண்ட வெள்ளைச்சிலை எழுந்து நின்றது. கருணை துலங்கிய அதன் விழிகள் அப்பொழுதும் அவனை உற்றுப் பார்த்தன. ‘இதே மாதிரி ஒரு புரவி வண்டியில் தான் இதேமாதிரிக் காட்டு வழியில் தான் அவளும் படையுடன் வந்தாள். வண்டியை அவிழ்த்துவிட்ட அந்த இரவில் வண்டிக்குள் தலையை நுழைத்ததும் எத்தனை ஆசையுடன் என் கழுத்தைத் தழுவினாள் அவள்! எத்தனை இன்பத்தை அளித்தாள்!’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அத்தகைய எமிலிக்குத் தன்னைவிட்டு மருத்துவமனையைப் பற்றிக் கொள்ளும் ஆற்றல் எப்படி வந்தது?’ என்றும் கேள்வியை எழுப்பினான். தன்னைக் காப்பாற்ற கவர்னர் ஏஸ்லாபியால் அனுப்பப்பட்டவளும், அபவாதத்துக்கு ஆளானவளும், தூய்மையானவளுமான, எமிலிக்கு இணை எமிலிதானென்பதை மீண்டும். மீண்டும் மனப்பாடம் செய்வதுபோல் மனத்துக்குள் சொல்லிக்கொண்டான் தமிழன். மஞ்சு மட்டும் முன்னதாகத் தன் மனத்தை ஆக்ரமிக்காமலிருந்திருந்தால் நிச்சயமாக எமிலிதான் அந்த இடத்தைப் பிடித்திருப்பாளென்பதும் சந்தேகமறப் புரிந்தது அவனுக்கு. ‘மிஸ் எமிலியைப் போன்றவர் வெகு சிலர். அவர்களுக்கு எந்த மானிடனும் தகுந்தவனல்ல. ஆகையால்தான் அவர்கள் ஏழைகளுக்கு உதவும் தெய்வீகப் பணியில் ஈடுபடுகிறார்கள்’ என்றும் உள்ளூர எண்ணினான் இதயசந்திரன். அத்துடன் மகாராஷ்டிரம் வந்தது முதல் தன்மீது மோதிய சம்பவங்களெல்லாம் அவன் மனத்தில் எழுந்தன. ஆனால் முகவெட்டு வீரனுடன் தான் துவங்கியுள்ள இந்தப் பயணம் மகாராஷ்டிரத்தில் தனது கடைசிப் பயணம் என்பதும் சந்தேகமறப் புரிந்தது அவனுக்கு. அதை வாய்விட்டும் சொன்னான், “இதுதான் கடைசிப் பயணம்” என்று.

வண்டியின் மெத்தென்ற சயனத்தில் படுத்திருந்த நிம்கருக்கு இதயசந்திரனின் வார்த்தைகள் நன்றாகக் காதில் விழுந்தன. “எப்படிச் சொல்ல முடியும்?’ என்று கேட்டு நகைக்கவும் செய்தான்.

புரவியின் லகானைப் பிடித்து வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்த இதயசந்திரன் திரும்பி நிம்கரைப் பார்த்தான். “நிச்சயமாகச் சொல்ல முடியும்” என்றும் கூறினான்.

“நிச்சயம் முடியும் என்பது நம்மிருவர் வாழ்க்கையி லும் இல்லை ” என்றார் நிம்கர்.
“இப்பொழுது உண்டு.”

“இப்பொழுதா?”

“ஆம். உன்னைத் தேடித்தான் நான் மகாராஷ்டிரம் வந்தேன். உன்னைத் தேடித்தான் கனோஜியிடம் சேர்ந்தேன். பிரும்மேந்திர ஸ்வாமியின் உத்தரவால் நான் மாலுமியானதும் ஜல தீபத்தின் தளபதியானதும் பல ‘போர்களில் ஈடுபட்டதும் பெரும் புகழ் பெற்றதும் எல்லாமே உன்னை நாடி வந்த காரணத்தினால் தான். ஆனால், நாடி வந்தவன் கிடைக்கவில்லை எளிதில். இப்பொழுதுதான் கிடைத்திருக்கிறாய். இப்பொழுது இந்தப் பயணத்தில் நீயும் நானும்தான் இருக்கிறோம். தஞ்சை அரண்மனைக் கதையில் சம்பந்தப்பட்ட நாம் இருவர் தான் இந்த பயணத்தைச் செய்கிறோம்.”

“ஆம்” என்ற முகவெட்டு வீரன் நகைத்தான் லேசாக.

“எதற்கு நகைக்கிறாய்?” என்று வினவினான் இதய சந்திரன்.

”இந்தப் பயணத்தின் முடிவில் நம்மிருவரில் ஒருவர் தானிருப்போம் என்பது உனது நினைப்பு.”

“சந்தேகம் வேண்டாம். தஞ்சை ராணியிடம், ஒன்று அவள் செல்வனைக் கொண்டு வருவதாகவும், இல்லையேல் வாரிசை அபகரித்துச் சென்றவனைக் கொன்று வருவதாக வும் ஆணையிட்டு வந்திருக்கிறேன்.”

“கொல்ல உனக்கு இது நல்ல சந்தர்ப்பம்.”

“நோயாளியாய் இருப்பவனைக் கொல்வது தமிழர் பழக்கமில்லை.”

”வேறு வாய்ப்பு?”

“உன் உடல் பூரண குணமடைந்தவுடன் கிடைக்கும். எமிலியிடம் நான் உறுதி கூறியபடி காலா காலத்தில் மருந்து கொடுத்து, உணவளித்து உன்னைத் தேற்றி, நீ பூரண வலுவடைந்த பிறகு, உன் வாளுடன் என் வாள் மோதும்.”

“அந்த மோதலில் நீ இறந்துவிட்டால்?” “கடமையில் இறந்தவனாவேன்.”

இதற்குமேல் நிம்கர் ஏதும் பேசவில்லை. இதய சத்திரனும் மௌனமாகவே வண்டியைச் செலுத்தினான். சுமார் முதல் ஜாமப் பயணத்துக்குப் பிறகு வண்டி காட்டுப்பகுதியை அடையவே, அங்கு வண்டியை நிறுத்திப் புரவியை அவிழ்த்துவிட்ட இதயசந்திரன் தனது புரவியின் பக்கவாட்டுப் பையிலிருந்த குப்பிகளிரண்டையும் எடுத்து தரையில் வைத்து விட்டு வண்டியில் படுத்திருந்த நிம்கரை மெள்ளத் தாங்கிப் பிடித்துத் துக்க முயன்றான். “வேண்டாம். நான் அத்தனை பலவீனத்திலில்லை” என்று தானாகவே எழுந்து உட்கார்ந்து கொண்ட நிம்கர். குப்பிகளைக் கொண்டுவரச் சொல்லி சிறிது மருந்தையும் சிறிது பிராந்தியையும் உட்கொண்டான்.

மீண்டும் அவற்றை மூடிய இதயசந்திரன், குப்பிகளைப் பையில் வைத்துவிட்டு இன்னொரு பையிலிருந்து ஒரு குப்பி நீரையும் உணவையும் எடுத்துக்கொண்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு மெல்ல உணவருந்தினான். புரவிகளுக்கும் தீனி வைத்துச் சற்று எட்ட இருந்த ஓர் அருவியில் நீர் குடிக்கச் செய்தான். சிறிது நேரம் சென்றதும் முகவெட்டு வீரனுக்கும் உணவளித் தான்.

இம்மாதிரியே சகல அலுவல்களையும் தானே செய்து முகவெட்டு வீரனுக்குப் பணி செய்து இரண்டு நாட்கள் பயணம் செய்த இதயசந்திரன், மூன்றாவது நாளிரவு கொலாபாவுக்குப் பாதை பிரியும் இடத்துக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்த மலைக்காட்டில் தங்கினான்.. அன்றிரவு நிம்கருடன் உணவருந்திய பிறகு, ”வீரனே, உன் உடல் வலு இப்பொழுது எப்படியிருக்கிறது?” என்று வினவினான்.

”வலுவைப்பற்றிக் கவலைப்படாதே. இப்பொழுது ‘கூட வாளெடுத்துப் போரிடத் தயாராயிருக்கிறேன்” என்றான் நிம்கர்.

“அது முடியாது. உன் வலு பூர்ணமாக வந்தால்தான் நான் போரிடுவேன்” என்றான் தமிழன்.

“இரவில் நீ உறங்கும்போது உன்னைக் குத்திப்போட்டால் என்ன செய்வாய்?” என்று வினவினான் நிம்கர்.

”நீ செய்யமாட்டாய் அப்படி?”

“ஏன்?”

“அதற்கு இத்தனை நாள் வாய்ப்பு இருந்திருக்கிறது உனக்கு. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் உயிருடன் தான் இருக்கிறேன்.”

“அளவுக்கு மீறி நம்புகிறாய் என்னை.”

“வீரனை வீரன் நம்புவதில் வியப்பில்லை.”

இதைக் கேட்ட நிகர் உண்மையாகவே வியப்பின் வசப்பட்டான். “தமிழா, நீ ஒரு தனிப்பிறவி. உலகத்தில் உன்னைப் போன்றவர் வெகு சிலர். பலபேரை நான் வெட்டிப் போட்டிருக்கிறேன் போரில். ஆனால் எதற்கும் நான் வருந்தியதில்லை. என் கையால் நீ இறந்தால் வருந்துவேன்” என்று கூறினான்.

எந்தக் கொலைகாரனிடத்திலும் அடிப்படையாக ஏதோ ஒரு நல்ல குணமிருக்கிறது என்று நினைத்த இதயசந்திரன் அவனை நோக்கிக் கேட்டான், “இத்தனை நல்ல குணமிருப்பவன் எதற்காகத் தாயிடமிருந்து மகனைப் பிரித்தாய்?” என்று.

“ராணி தாராபாயின் கட்டளை” என்றான் நிம்கர்.

“அது சரி, அந்தச் சிறுவன் எங்கிருக்கிறான் இப்பொழுது?” என்று வினவினான் இதயசந்திரன்.

“சொல்வதற்கில்லை என்று முன்னமே கூறியிருக்கிறேன் உனக்கு” என்று திட்டவட்டமாக அறிவித்தான் நிம்கர்.

இதயசந்திரன் கடைசியாக ஒரு கேள்வி கேட்டான், “நான் உன்னை எங்கு அழைத்துப் போகிறேன் தெரியுமா?” என்று.

“கொலாபாவுக்கு.”

“இல்லை.”

“வேறெங்கு?”

இதயசந்திரன் கூறிய பதில் அவனைத் திகைக்க வைத்தது. சட்டென்று துள்ளி எழுந்த நிம்கர், “தமிழா. உனக்குப் பைத்தியமேதும் இல்லையே?” என்று வினவினான் அதிர்ச்சி குரலில் மிதமிஞ்சி ஒலிக்க.

பதிலுக்குச் சிரித்தான் தமிழன். “சாகத் துணிந்தவ னுக்குச் சமுத்திரம் முழங்கால்…” என்றும் கூறினான் சிரிப்பின் ஊடே.

Previous articleJala Deepam Part 3 Ch36 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch38 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here