Home Historical Novel Jala Deepam Part 3 Ch38 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch38 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

70
0
Jala Deepam part 3 Ch38 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch38 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch38 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 38 கில்லா குர்லா

Jala Deepam Part 3 Ch38 | Read Jala Deepam | TamilNovel.in

இதயசந்திரன் தன்னைக் கொண்டு செல்ல நினைக்கும் இடத்தைப்பற்றிக் கேள்விப்பட்டவுடனேயே முகவெட்டு வீரனின் முகத்தில் பெரும் கிலி பரவி முகம் ஏற்கனவேயிருந்த விகாரத்தைவிட அதிக விகாரத்தை அடைந்துவிட்டதென்றால் அதற்குக் காரணம் இருக்கத் தான் செய்தது. அத்தனைப் பயங்கரப் பெயர் அது. தன்னையும் தமிழனையும் நாசப்படுத்திவிடும் பெயர் என்பதையும் சந்தேகமற உணர்ந்தான் நிம்கர். ‘ஜன்ஜீரா’ என்ற பெயரைக் கேட்டால் குலை நடுக்கமெடுக்காதவர்கள் மேலைக் கடலோரத்தில் யாரிருந்தார்கள் கனோஜியையும் அவர் மாலுமிகளையும் தவிர? அந்தப் பெயரைக் கேட்டதால் அசந்துபோய், தான் வீசிய பார்வையைத் தொடர்ந்து இதயசந்திரன், சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்’ என்று கூறியதும் தமிழன் உள்ளம் ஜன்ஜீரா பயணத்தில் உறுதிப்பட்டு விட்டதென்பதைப் புரிந்து கொண்டான் நிம்கர்.

இதற்குப் பிறகு இருவரும் நீண்ட நேரம் பேசவே யில்லை. இரவு முற்றிக்கொண்டிருந்தாலும் ஸஹ்யாத்ரியில் இரவுச் சாரல் காற்றுக் கிளம்பிவிட்டபடியாலும் இதய சந்திரன் வண்டியின் பக்கத்திலிருந்து எழுந்து சென்று சில சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து, தீ மூட்டி அதில் குளிர்காய உட்கார்ந்ததன்றி, “நீயும் வா” என்று நிம்கரையும் அழைத்தான். நிம்கர் வண்டியிலிருந்த பிராந்திக் குப்பியிலிருந்து சிறிது திராவகத்தை அருந்தி விட்டுத் தமிழனிடமிருந்து சற்றுத் தள்ளி நெருப்படியில் உட்கார்ந்து கொண்டான். அப்பொழுது இருவரும் எந்தச் சம்பாஷணையிலும் ஈடுபடவில்லை. ஒருவரையொருவர் அழித்துவிடும் நோக்கம் கொண்ட அந்த எதிரிகளிருவரும் சேர்ந்து சுள்ளி நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் இருவர் எண்ணங்களும் ஸஹ்யாத் திரியைவிட்டு எங்கெங்கோ ஓடிக்கொண்டிருந்தன. அந்த இரவில் ஸஹ்யாத்திரியின் சரிவிலிருந்த அந்தக் காடு மிகுந்த பயங்கரச் சூழ்நிலையைச் சிருஷ்டித்திருந்தாலும், எங்கிருந்தோ துஷ்ட மிருகங்களின் உறுமல்களும் நரிகளின் ஊளைகளும் காதில் விழுந்து கொண்டிருந்தாலும், விர்ரென்ற வாடைக் காற்று எங்கும் ஓங்காரத்தை எழுப்பி பராசக்தியின் சக்தியை எடுத்து விளக்கிக் கொண்டிருந்தாலும், ஸஹ்யாத்திரியைச் சற்று எட்டத் தாக்கிக் கொண்டிருந்த கடலலைகள் கூடப் பெருங்கோஷத்தை எழுப்பிக் கொண்டிருந்தாலும், அவ்விருவர் மனங்களும் அத்தனை ஒலிகளையும் பயங்கரத்தையும் அலட்சியம் செய்து அதனனதன் வழியில் போய்க் கொண்டிருந்தன.

இதயசந்திரன் மனத்தில் தஞ்சையிலிருந்து கிளம்பியது முதல் ஏற்பட்ட பெரும் காப்பியம் வளைய வந்து கொண்டிருந்தது. கண்ணீருடன் தனக்கு ஆணையிட்ட தாய், கடற்கரையோரத்தில் தன்னைக் கண்டெடுத்த பிரும் மேந்திர ஸ்வாமி, தன்னை அரசியல் கருவியாக உபயோகப் படுத்த முனைந்த பானுதேவி, தன்னை அடிமையாக்கிக் கொண்ட கனோஜி, தன்னிடம் இன்பத்தை மட்டும் விரும்பிய காதரைன், தனக்காகத் தன் இனத்தையே தியாகம் செய்த எமிலி எல்லோரையும் நினைத்துப் பார்த்த இதயசந்திரன், தனக்காகச் சகலத்தையும் அர்ப்பணம் செய்துவிட்ட மஞ்சுவையும் எண்ணிப் பார்த்தான். மஞ்சு நெஞ்சில் தோன்றியதும் அவன் முகத்தில் ஒரு கனிவு ஏற்பட்டது. கருணை சுடர் விட்டது, ஆவலும் உலாவியது. யாரைத் தியாகம் செய்தாலும் மஞ்சுவைத் தான் தியாகம் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டான் அவன். ”கடமை முடிந்து என் உயிரும் இருந்தால் உன்னிடம் கண்டிப்பாய் வருவேன் மஞ்சு” என்றும் சொல்லிக்கொண்டான் உள்ளூர. ஆனால் தற்சமயம் திரும்பிச் செல்வது அனேகமாக முடியாது என்பதையும் உணர்ந்துகொண்டான். அவன் ஜன்ஜீராவுக்குச் சென்று அங்கிருந்து தமிழகம் செல்வது அத்தனை சுலபமல்ல வென்றாலும், வேறு வழியில்லையென்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. மேலைக் கடற்கரையில் ஸித்தி களின் ஜன்ஜீராவைத் தவிர வேறு எந்தத் துறைமுகத்தில் காலை வைத்தாலும் அங்கு கனோஜியின் மாலுமிகளும் கப்பல்களும் இருக்குமாகையால், தான் திரும்பவும் கொலாபாவுக்குச் செல்லும்படியிருக்குமென்று அவனுக்குத் தெரிந்திருந்ததால், அவன் ஜன்ஜீரா பயணமே சரியென்ற முடிவுக்கு வந்தான். ஜன்ஜீராவிலோ, அல்லது ஜன்ஜீரா போவதற்குள்ளோ முகவெட்டு வீரனை எப்படியும் பேச வைக்கலாமென்று நினைத்தான் இதயசந்திரன். அப்படியில்லாவிட்டால் தமிழகம் சென்றதும் நிச்சயமாக விஷயத்தைக் கக்க வைத்து விடலாமென்ற முடிவுக்கும் தமிழன் வந்தான்.

இதயசந்திரனின் நினைப்புகள் இப்படியிருந்த தென்றால் நிம்கரின் நினைப்புகள் வேறு துறைகளில் ஓடிக் கொண்டிருந்தன. ஸாத்ஸித்தியிடம் வேலைக்கு இருந்து கனோஜிக்காக வேவு பார்த்த தான், ஜன்ஜீராவில் ஸித்திரஸுல் யாகூத்கானிடம் சிக்கிக்கொண்டால் கதி என்னவென்பதைப் பற்றி அவன் சிறிதும் சந்தேகப்பட வில்லை. தான் திரும்பவும் ஸாத்ஸித்தியிடம் அனுப்பப்பட்டு, தளைகளில் உணவு நீரின்றி வதைக்கப்பட்டுக் கடைசியில் கழுகுப் பாறையில் தள்ளப்படுவது உறுதி யென்பதை எண்ணிப் பார்த்ததால், எதற்கும் கலங்காத நிம்கரும் சிறிது கலங்கினான். தமிழன் கதியும் அத்தனை திருப்தியானதல்லவென்பதை அவன் உணர்ந்தேயிருந் தான். ஸாத்ஸித்தியிடமிருந்து தமிழன் தப்பியதும், ரஸுல் யாகூத்கானின் கப்பல்களை முகத்துவாரத்திலேயே மூழ்கடித்ததும் பிரசித்தமாயிருந்தபடியால் தமிழனுக்குக் கிடைக்கக்கூடிய சித்திரவதை எண்ணிப் பார்க்கவும் தகாதென்பதை நினைத்து நடுங்கினான் நிம்கர். ஜன்ஜீரா வுக்குச் சென்று எதைச் சாதிக்கப் பார்க்கிறான் தமிழன் என்பது புரியாததால் மெல்ல அவன் சம்பாஷணையைத் துவக்கி, “ஜன்ஜீரா சென்று என்ன செய்வதாக உத்தேசம்?” என்று வினவினான்.

இதயசந்திரன் கண்கள் சுள்ளிகளின் தீயொளில் வேல் களைப்போல் பிரகாசித்தன. ஆனால், அவன் சர்வ சா.தாரணமாகப் பதில் சொன்னான்: “அங்கிருந்து தமிழகம் போவதாக உத்தேசம்” என்று.

“என்னை அழைத்துக்கொண்டா?” என்று கேட்ட நிம்கரின் குரலில் வியப்பிருந்தது.

“ஆம்” என்ற இதயசந்திரன் இரண்டு மூன்று சுள்ளிகளை எடுத்து நெருப்பில் போட்டான்.

“தமிழகம் அழைத்துப்போய் என்ன செய்யப் போகிறாய் என்னை?”

“தஞ்சையிலிருக்கும் அந்தத் தாயிடம் ஒப்படைப்பேன். தஞ்சை அரண்மனையில் நீ விசாரிக்கப்படுவாய்.”

“என்ன குற்றத்திற்கு?”

“ஒரு வீரனைக் குத்திக் கொன்ற குற்றத்திற்கு, குழந்தையைக் களவாடிய குற்றத்திற்கு.”

“அதற்கு மரண தண்டனை கிடைக்குமா?”

“ஆம்.”

இந்தப் பதிலைக் கேட்ட நிம்கர் முகத்தில் எந்தவிதப் பயக்குறியும் தெரியவில்லை. “ஜன்ஜீராவிலிருந்து தமிழகம் போவது சுலபமென்று நினைக்கிறாயா நீ?” என்று கேட்டான்.

“இல்லை” என்று பதில் சொன்ன இதயசந்திரன் விளக்கினான்: “நாம் உடனடியாக ஜன்ஜீரா செல்லப் போவதில்லை. மெள்ளத்தான் பயணம் செய்யப் போகிறோம். உன் உடல் வலு பூராவும் வரும்வரையில் ஜன்ஜீரா மார்க்கத்திலுள்ள சிறுசிறு குடிசைக் கூட்டங்களில் எங்காவது தங்குவோம். நீ பூர்ண சுகம் அடைந்ததும் நாமிருவரும் மாறுவேடமணிந்து ஜன்ஜீரா செல்வோம். அங்கிருந்து ஏதாவது ஒரு வர்த்தகக் கப்பலில் கார்வார் செல்வோம். அங்கிருந்து தமிழகம் செல்வது சுலபம்.”

இதைக் கேட்ட நிம்கர் சிறிது நேரம் மௌனம் சாதித். தான். “முதல் திட்டத்தை ஏன் மாற்றிக்கொண்டு விட்டாய்?” என்று கேட்டான், சிறிது சிந்தனைக்குப் பிறகு.

“எந்த முதல் திட்டம்?” என்று வினவினான் இதய சந்திரன், சட்டென்று கண்களை உயரத் தூக்கி நிம்கரை நோக்கி.

“எனக்கு வலுவந்த பிறகு என்னிடம் வாட்போர் செய்வதாகக் கூறினாயே, அந்தத் திட்டம்” என்று சுட்டிக் காட்டினான் நிம்கர்.

“அந்தத் திட்டத்தில் சில ஆபத்துக்கள் இருக்கின்றன…”

“இருவரில் ஒருவர் உயிர் போய்விடும்.’

“அதல்ல பெரிய விஷயம். தஞ்சை ரகசிய ராணியின் புதல்வனின் விஷயம் நம்மிருவரில் ஒருவர் மரணத்தோடு மறைந்து விடும். நீ மரணமடைந்தால் நிச்சயமாக மறைந்துவிடும். ஆகையால் உன்னைக் கொல்வதைவிடக் காத்து அழைத்துச் செல்ல அவசியமிருக்கிறது.” இதை மிக உறுதியுடன் கூறினான் இதயசந்திரன்.

“ஜன்ஜீராவில் நாம் அகப்பட்டுக் கொண்டால்?” என்று சிறிது நேரம் கழித்து வினவினான் நிம்கர்.

இதயசந்திரன் கண்களில் விஷமச் சாயை படர்ந்தது. “இருவரும் அழிவோம்” என்றான் சிறிது புன்முறுவலுடன்.

சாவைத் தமிழன் அத்தனை அலட்சியமாக நினைத்தது பெரும் ஆச்சரியமாயிருந்ததால் நிம்கர் மரியாதை நிரம்பிய கண்களை அவனை நோக்கி உயர்த்தினான். பிறகு கேட்டான், “நாமிருவரும் அழிந்தால் யாருக்கு லாபம்?” என்று.

“வீரத்துக்கு” என்று கூறினான் இதயசந்திரன். “வீரத்துக்கா?” என்று கேட்டான் நிம்கர் வியப்புடன்.

“ஆம்.”

“எப்படி?”

“இருவரும் கடமைக்காக அழிகிறோம். தஞ்சையிலுள்ள தாயின் துயரைத் துடைக்கும் முயற்சியில் நானும், தாராபாயின் ஆணையைக் காக்க நீயும் அழிவோம்.” இதைச் சொன்ன இதயசந்திரன் லேசாக நகைத்தான்.

“ஏன் நகைக்கிறாய் தமிழா?” என்று வினவினான் நிம்கர் ஏதும் புரியாமல்.

“இருவரும் சாவது மகாராஷ்டிரத்தின் கடைசி வாரிசுக்காக அதாவது மகாராஷ்டிர நலனுக்காக. மகாராஷ்டிரனான நீ மகாராஷ்டிரத்துக்காகச் சாவது சரி. தமிழனான நான் எதற்குச் சாகவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை” என்ற இதயசந்திரன் வண்டிக்குச் சென்று ஒரு கம்பளியை எடுத்து வந்து தரையில் போட்டு நெருப்பின் பக்கத்தில் படுத்துக்கொண்டான். படுத்த பின் அவனது கேள்விக்கு அவன் உள்ளமே பதில் கூறியது. மகாராஷ்டிரத்துக்கும் பாரதத்துக்குங்கூட மேலானது ஒன்றிருக்கிறது. அது மனித தர்மம். அந்தத் தர்மத்தை முன்னிட்டுத்தான். ஒரு தாயின் துயர் தீர்க்கும் புனிதப் பணியை முன்னிட்டுத்தான், தான் மகாராஷ்டிரம் வந்தோமென்பதை அவன் சந்தேகமறப் புரிந்து கொண்டான். அந்த மனித தர்மத்துக்கு, அதாவது பச்சாதாபத்துக்கு, அதனால் விளையும் கருணைக்கு, கருணையால் விளையும் கடமைக்கு, எந்த அரசியலும் ஏதும் இணையில்லை யென்பதை இதயசந்திரன் படுத்திருந்த அந்த இரவில் உணர்ந்துகொண்டான். தவிர, அவன் தமிழகத்தை விட்டுக் கிளம்பி ஆண்டுகள் மூன்றாகி விட்டன. ஊர் நினைப்பும் நெஞ்சில் ஊறத் துவங்கியது. அதனால் ஏற்பட்ட இன்பச் சுனை அத்தனை துன்பத்திலும் அவன் உள்ளத்தையெல்லாம் இன்ப வெள்ளமாக அடித்தது. அந்த இன்ப வெள்ளத்தில் அப்படியே உறங்கி விட்டான் அவன்.

பொழுது புலர்ந்தது. மீண்டும் நிம்கருடன் பயணத்தைத் துவங்கி சுமார் மூன்று நாட்களில் நான்கு மலை களைத் தாண்டி, குர்லா கோட்டைக்கருகிலுள்ள மலைக் காட்டுக்கு வந்து சேர்ந்தான். கில்லா குர்லா என்று மகாராஷ்டிரர்களால் அழைக்கப்படும் குர்லா கோட்டை அப்படிப் பெரிய கோட்டையல்லவென்றாலும், மலைப் பகுதியில் சற்று உள்ளடங்கியிருந்ததாலும், சமுத்திரம் அதைச் சுற்றி வளைத்துத் தீவாக அடித்திருந்ததாலும், கப்பல்களை அந்த இடத்தில் மறைத்து வைப்பதற்குச் சௌகரியமிருந்ததால் மேலைக் கடலோரத்தின் கேந்திரமான துறைமுகங்களில் அதுவும் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. கனோஜியின் ரகசிய முகத்துவாரக் கோட்டை களில் ஒன்றான குர்லாவை மலைச் சரிவில் சென்று கொண்டிருந்த வண்டியிலிருந்தே பார்த்த இதயசந்திரன் நிம்கரை நோக்கி, “வீரனே! குர்லா அதோ தெரிகிறது பார்” என்றான்.

வண்டியில் படுத்திருந்த நிம்கர் எழுந்திருந்து எட்டிப் பார்த்து, “ஆம்” என்று ஏதோ சொல்லப் போனவன் பிரமிப்படைந்து, ”வியப்பாயிருக்கிறது தமிழா!” என்றான்.

“ஆம்” என்றான் இதயசந்திரன்.

“துறைமுகத்தில் கப்பலோ படகோ ஏதுமில்லையே!” என்றான் நிம்கர்.

“இல்லை” என்ற இதயசந்திரன் குரலிலும் வியப்பு இருந்தது.

“காரணம்?” என்று கேட்டான் நிம்கர்.

“புரியவில்லை எனக்கு. இந்தத் துறைமுகம் எப்பொழுதும் இத்தனை நிர்க்கதியாக இருந்ததில்லை” என்றான் இதயசந்திரன்.

‘ஆம்” என்று ஒப்புக்கொண்டான் நிம்கர். “ஆளரவங் கூட ஏதுமில்லை. காவலரையும் காணோம்.”

“கொலாபாவுக்கும் இதற்கும் கடல் வழியில் பத்து மைல் தூரந்தானிருக்கிறது. கொலாபாவின் எல்லைக் கோட்டை இது. அப்படியிருக்க இதை ஏன் கனோஜி நிர்க்கதியாக விட்டுவிட்டார்?”

அந்தக் கேள்வி நிம்கர் நினைப்பிலும் எழுந்ததால் அவனும் பெரும் குழப்பத்துக்குள்ளானான். “எதற்கும் இங்கு சற்றுத் தூரத்திலுள்ள குடிசைகளில் விசாரிப்போம்” என்று கூறிய இதயசந்திரன், கூப்பிடு தூரத்தில் மலைச் சரிவுகளில் கட்டப்பட்டிருந்த குடிசைகளை நோக்கி வண்டியைச் செலுத்தினான். அங்குள்ள மலைவாசிகளுக்கும் ஏதும் தெரியாததால் மாலை வரையில் அங்கேயே தங்கிய இதயசந்திரன் இரவு மூண்டதும், “வீரனே! கம்பளியை எடுத்துக் கொள். நாம் சென்று குர்லாவின் நிலைமையைப் பார்ப்போம்” என்று கூறி, அவனையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான். மலைச்சரிவில் பல இடங்களில் மிகுந்த கஷ்டப்பட்டு இறங்கி, மலைக்கும் கோட்டைக்குமிடையில் கடல் விளைவித்திருந்த சிறு கால்வாயைக் கடந்து குர்லாவின் கரையில் காலடி எடுத்து வைத்தான்.

கோட்டை நிர்க்கதியாயிருந்தது. வாயிற்பெருங் கதவு தள்ளிய மாத்திரத்தில் திறந்தது. உள்ளே இருட்டு. நிரம்பிக் கிடந்தது. “நிம்கர்! விளக்கேற்ற இங்கு ஏதாவது வசதியிருக்க வேண்டும். பிறைகளைத் தடவிப் பார்” என்றான் தமிழன். பிறையிலேயே தீப்பெட்டியிருந்ததால் மெள்ள அங்கிருந்த ஒரு விளக்கை ஏற்றினான் நிம்கர்.

விளக்கொளியில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். விளக்கையெடுத்துக் கொண்டு கோட்டையின் உள்ளறைகளைப் பார்த்தும் ஏதும் புரியவில்லை அவர்களுக்கு. எல்லாப் பொருள்களும் கோட்டையில் வைத்தது வைத்தபடி இருந்தன. ஆனால், மனித சஞ்சாரம் மட்டும் இல்லை. நீண்ட நேர ஆராய்ச்சிக்குப் பிறகு, ”விளக்கை இழுத்து மறைத்து வைத்துவிடு. இங்குள்ள மஞ்சங்களில் படுப்போம். கதவைத் தாளிட்டுவிடு” என்று உத்தரவிட்டான் இதய சந்திரன். நிம்கர் அவன் உத்தரவை நிறைவேற்றவே இருவரும் படுத்தனர் மஞ்சங்களில். பயண அலுப்பால் நன்றாக உறங்கியும் விட்டனர். நிர்க்கதியான அந்தக் கோட்டை பரம நிம்மதியை அளித்தது அவ்விருவருக்கும். ஆனால், அந்த நிம்மதி உடைந்தபோது பயங்கரமாகவும் விசித்திரமாகவும் உடைந்தது.

Previous articleJala Deepam Part 3 Ch37 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch39 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here