Home Historical Novel Jala Deepam Part 3 Ch39 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch39 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

72
0
Jala Deepam part 3 Ch39 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch39 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch39 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 39 அவனை அறிந்தவர்

Jala Deepam Part 3 Ch39 | Read Jala Deepam | TamilNovel.in

பொழுது விடிந்து நீண்ட நேரத்திற்குப் பின் கண் விழித்தபோதும் முழுச் சுரணை வரவில்லை தமிழக வீரனான இதயசந்திரனுக்கு. அரைத் தூக்கம் அப்பொழுதும் இருந்து கொண்டிருந்தபடியால் கண்களைப் பாதித் திறந்து மூடினான் ஒருமுறை. மறுமுறை கண்களைச் சரியாக விழிக்கச் செய்யக் கைகளைத் தூக்கி விரல்களால் இரப்பைகளைப் பிரிக்க முற்பட்டபோது தான், தான் பெரும் பலவீனமடைந்திருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். தவிர, இல்லாத பிரமை யெல்லாம் மனத்தில் எழுந்து உலாவத் தொடங்கி விட்டதையும் அறிந்ததால், அத்தனை பலவீனத்திற்கும் மயக்கத்திற்கும் காரணம் என்ன என்பதை ஆராய முயன்று முடியாததால் சிறிது குழப்பத்துக்கும் உள்ளானான்.

அவன் படுத்திருந்த கில்லா குர்லாவின் அறை மெதுவாக ஆடிக் கொண்டிருந்தது. தரையும் மஞ்சமும் கூட மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்தன. கண்ணை அரைவாசி விரித்துப் பார்த்தபோது சற்றுத் தள்ளிப் படுத்திருந்த முகவெட்டு வீரனையும் காணோம், மஞ்சத்தையும் காணோம். போதாக்குறைக்குக் கீழே வைத்திருந்த விளக்கு அந்தரத்தில் தொங்கிக் கொண் டிருந்தது. எல்லாம் ஏதோ மாயாஜாலமாக அவனுக்குத் தோன்றவே அவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். கண்களைத் திறப்பதை விட மூடுவது மிகச் சுலபமாயிருப்பதையும் புரிந்து கொண்ட தமிழன் அதற்குக் காரணம் யாதாயிருக்கக் கூடும் என்ற ஆராய்ச்சியில் இறங்க முற்பட்டான். மூளை சரியாக இயங்காததால் ஆராய்ச்சியும் பயனற்றதாயிருந்தது.
புலன்கள் பாதி அடங்கிக் கிடந்தன. இருப்பினும் யாரோ அந்த அறையில் வந்து போவதும், ஏதோ பேசுவதும் மட்டும் அவன் காதில் விழுந்தது. “இப்பொழுது அவனை எழுப்ப வேண்டாம். மிகவும் களைத்திருக்கிறான்” என்று ஏதோ ஒரு குரல் சொன்னது அவன் காதில் விழுந்ததானாலும், அது யார் குரல் என்பது புரியவில்லை அவனுக்கு. குரல் புத்தம் புதியதாய் இருப்பதாயும் தோன்றியது. உண்மையாகவே அது புத்தம் புதிய குரலா அல்லது தான் அரைத் தூக்கத்திலிருப்பதால் குரல்தான் புரியவில்லையா என்று எண்ணிப் பார்த்தான் இதயசந்திரன். எண்ணத்துக்கு விளக்கமில்லை. கண்ணுக்கு ஒளியுமில்லை. இந்த நிலையில் அவன் எத்தனை நேரமிருந்தானோ அவனுக்கே தெரியாது. நீண்ட நேரத்திற்குப் பிறகு யாரோ அவன் முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்த பிறகுதான் கண் விழித்தான். அந்த நீரில் ஓரிரு. துளிகள் உதட்டிலும் விழுந்து உப்புக் கரித்ததால் அது கடல் நீர் என்பதையும் புரிந்து கொண்டான்.

அந்தக் கடல் நீர் அவன் இதழ்களுக்கு அளவிலா இன்பத்தைக் கொடுத்தது. மூன்றாண்டு காலம் மாலுமியாகக் கடல் நீரைப் பலவிதங்களில் அனுபவித்திருந்த அவனுக்குச் சென்ற சில மாதங்களில் அதன் சுவை யில்லாதிருந்து மீண்டும் கிடைத்ததால் உதட்டிலிருந்த துளிகளை மீண்டும் அமுதத் துளிகளைச் சுவைப்பது போல் நாக்கினால் உதடுகளைத் தடவிச் சுவைத்தான். கண்கள் மீது விழுந்த நீர்த்துளிகள் சில, கண்ணை விழித்ததும் உள்ளேயும் பட்டதால் கண்ணில் லேசாக எரிச்சல் கொடுத்தது. அந்த எரிச்சலே உடலின் மற்ற பகுதிகளின் சுரணையையும் தூண்டியதால், கண்களை அகல விரித்தான் இதயசந்திரன் கடைசியில். விரித்த பின் தான் உண்மையும் விரிந்தது அவன் புத்தியில். தான் இருப்பது குர்லா கோட்டையின் அறையல்ல வென்பதையும், ஓடும் கப்பலின் அறையொன்றில் தான் படுத்திருப்பதையும் புரிந்து கொண்ட தமிழன் அறையைச் சுற்றி மிரள மிரள விழித்தான். கப்பல் யாருடையது? கப்பலுக்கு யாரால், எப்பொழுது, எப்படி, தான் கொண்டு வரப்பட்டோமென்பது பற்றி ஊகிக்க முயன்றும் முடியவில்லை அவனுக்கு. தன்னைக் கப்பலுக்கு எப்படியோ கொணர்ந்தவர்கள் முகவெட்டு வீரனையும் கொணர்ந்திருக்க வேண்டுமாகையால் அவன் எங்கேயிருக்கிறான் என்று எண்ணியும் பார்த்தான். ஒருவேளை தான் அயர்ந்து தூங்கிய சமயத்தில் அந்த முகவெட்டு வீரனே வெளியே சென்று ஏதாவது படகைப் பிடித்துக் கடலில் சென்ற மரக்கலமொன்றுக்குத் தன்னைக் கொண்டு வந்திருப்பானா என்ற சந்தேகமும் அவனுக்கு ஏற்பட்டது. எப்படியும் யாராவது அறைக்குள் வருவார்கள், அப்பொழுது விஷயத்தைப் புரிந்து கொள்ளலாம் என்று அவன் வாளாவிருந்துவிட்டான் முடிவாக.

நாழி ஏற ஏறச் சுரணை பூர்ணமாக வந்துவிட்டது அவனுக்கு. ஆனால் யாரும் அந்த அறைக்குள் வரவில்லை. எழுந்திருந்து, தானே போகலாமென்று எழுந்திருக்க முயன்று, முடியாததால் மீண்டும் தொப்பென்று படுக்கையில் விழுந்தான். இம்முறை அறைக் கதவு லேசாகத் திறக்கப்பட்டது. யாரோ ஒருவன் உள்ளே மெள்ள எட்டிப் பார்த்து, “தண்ணீர் அடித்ததில் விழித்துக்கொண்டு விட்டார்” என்று கூவினான் வெளியிலிருந்த யாரையோ பார்த்து. அதைக் கேட்டதும் வெளியில் யாரோ இரண்டு மூன்று பேர் நகைத்தார்கள். அதில் ஒருவர் சிரிப்பு, அவனுக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த சிரிப்பு. அதைக் கேட்டதும் ஒரு வினாடி பிரமித்தான் அவன். அடுத்த விநாடி, படுத்தவண்ணமே இரைந்து கூவினான், “பர்னாண்டோ!” என்று.

கூச்சல் கப்பல் அதிரும்படியாயிருந்ததால் தடதட வென்று இரண்டு மூன்றுபேர் அறைக்குள் ஓடி வந்தார்கள். முதலில் வெகு வேகமாக நுழைந்த பர்னாண்டோ மிகுந்த மரியாதையுடன் இதயசந்திரனுக்குத் தலை வணங்கினான். “என்ன உத்தரவு உபதளபதி” என்றும் வினவினான்.

அந்தக் கேள்வியைக் கேட்ட அவன் இதழ்களில் புன்சிரிப்பு இருப்பதாகத் தோன்றியதால் உள்ளூரச் சினங் கொண்ட இதயசந்திரன் அதை வெளிக்குக் காட்டாமல் கேட்டான், “இந்தக் கப்பல்?” என்று.

“ஜலதீபம்தான்” என்றான் பர்னாண்டோ மிகுந்த பணிவுடன்.

அதை ஓரளவு ஏற்கனவே ஊகித்துவிட்ட இதய சந்திரன், “என்னை யார் இங்கு கொண்டு வந்தது?” என்று வினவினான்.

“நாங்கள் தான்” என்றான் பர்னாண்டோ.

“யார் உத்தரவின்மேல்?” என்று மீண்டுமொரு கேள்வியை வீசினான் தமிழன்.

“தளபதியின் உத்தரவின்மேல்’ என்று கூறினான் பர்னாண்டோ.

“என்னுடன் இன்னொருவன் இருந்தான்……”

“ஆம்.”

“அவன்?”

”பக்கத்தறையில் இருக்கிறான்.”

இதைக் கேட்ட இதயசந்திரன் அமைதிப் பெருமூச்சு விட்டான். “சரி, தளபதியை அனுப்பு” என்றும் உத்தர விட்டான். அந்த அமைதிப் பெருமூச்சைத் தொடர்ந்து தலை வணங்கி வெளியே சென்றான் பர்னாண்டோ. மிகுந்த அமைதி சூழ்ந்துகொண்டது இதயசந்திரன் சித்தத்தை. சுமார், இரண்டரை ஆண்டுகள் இடைவிடாமல் தான் வசித்த, தன் வாழ்வைப் பல கோணங்களில் திருப்பிவிட்ட ஜல தீபத்தில் தான் படுத் திருந்தது பெரும் இன்பமாயிருந்தது தமிழனுக்கு. அதுவும் சுரணை பூர்ணமாக வந்துவிட்டதால் தான் படுத்திருந்தது, தனது பழைய உபதளபதியின் அறையே என்பதையும் உணர்ந்துகொண்டான். எதிரே அந்தரத்தில் தெரிந்த விளக்கு உண்மையில் கப்பலின் மரத்தூணில் சம்பிரதாயப் படி கட்டப்பட்டிருக்கிறதென்பதையும் உணர்ந்து கொண்டான். கப்பல் தளபதி யாராயிருக்குமென்பதிலும் அவனுக்கு எந்தவிதச் சந்தேகமுமில்லை. ஆகவே, சிறிது நேரம் கழித்து மாலுமி உடையில் மஞ்சு உள்ளே நுழைந்த போது அவன் அவளை ஏறெடுத்து நோக்கினானே தவிர பேசவில்லை. நோக்கிய அவன் கண்களிலும் கோபம் துளிர்த்திருந்தது.

கீழே சராயும் மேலே வெள்ளைக்காரர் பாணியில் சட்டையணிந்து, அலைந்த தலைக்குழலை ஒரு பெரும் துணியைக் குறுக்கே கட்டி அடக்கி, அழகெல்லாம் உருவாய் உள்ளே நுழைந்த மஞ்சு அவனைச் சிரிப்பை உதிர்த்த கண்களால் நோக்கினாள். அவன் முகத்தில் கோபமும் வெறுப்பும் கலந்து தாண்டவமாடியதைக் கண்டதும் அவள் இதழ்களிலும் புன்முறுவல் லேசாகப் படர்ந்தது. அத்தனை’ மாலுமி உடையிலும் வெகு ஒய்யாரமாக உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்ட அவள் அவன் படுக்கையின் முகப்பில் உட்கார்ந்துகொண்டு, “உங்கள் போக்கு தலைகீழாக இருக்கிறது” என்று கூறினாள்.

“என்ன தலைகீழாக இருக்கிறது?” என்றான் இதய சந்திரன் சினம் துளிர்த்த குரலில்.

“தளபதி, உபதளபதியை வரச்சொல்வதுண்டு. உபதளபதி, தளபதியை வரச் சொல்லி உத்தரவு அனுப்புவது எப்படி?” என்று கேட்டாள் மஞ்சு.

இதயசந்திரன் அதற்குப் பதிலேதும் சொல்லவில்லை. நீண்டநேரம் மெளனம் சாதித்தான். படுக்கையில் உட்கார்ந்திருந்த அவள் உடல் தன்மீது படாதவண்ணம் சற்று நகர்ந்துகொள்ளவும் செய்தான். அதைக் கண்ட. அவள் நகைத்தாள். அதனால் வெகுண்ட அவன் கேட்டான், ”எதற்கு நகைக்கிறாய்?” என்று.

பதிலுக்கு அவள், “உங்களுக்குப் பேசவும் வருமா?” என்று கேட்டாள் சிரித்துக்கொண்டே.

அந்தக் கேள்வி அவனைத் தூக்கி வாரிப் போட்டது. இதே கேள்வியைத் தாமினிக் காட்டில் ஷாஹுவின் மருமகளும் கேட்டது நினைப்பிருந்தது அவனுக்கு. ‘பெண்கள் புத்தி, பேச்சு எல்லாம் ஒரே வழியில் தான் இயங்கும் போலிருக்கிறது’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். ஆகவே வாய்விட்டும் சொன்னான், “பேசவும் வரும்” என்று. அத்துடன், அதுமட்டுமல்ல. இன்னும்…” என்று கூறி, வாசகத்தை முடிக்காமல் விட்டான்.

“இன்னும்…?” என்று கேள்வி எழுப்பினாள் அவள்.

இதயசந்திரன் பதில் சொல்லவில்லை. அவளே கேட்டாள், “இன்னும் என்ன செய்துவிடுவீர்கள்?” என்று. இதைக் கேட்டுவிட்டுப் பலமாக நகைக்கவும் செய்தாள்.

இதயசந்திரன் கோபம் எல்லை மீறிக்கொண் டிருந்தது. “இந்தச் சிரிப்பு எனக்குப் பிடிக்கவில்லை” என்றான் சுடும் குரலில்.

“எத்தனை நாட்களாக?” என்று கேட்டாள் மஞ்சு.

“பல நாட்களாக?”

”அதாவது போருக்குப் போனதிலிருந்து?”

“திட்டமாக நாளைக் குறிப்பிட முடியாது: என்னால்…”

“என்னால் முடியும்.”

“சொல்லேன்.”

“கொலாபாவிலிருந்து படை புறப்பட்ட நாளாக.”

     "படை புறப்பட்டதற்கும் உன் சிரிப்பை நான் ரசிக்காததற்கும் என்ன சம்பந்தம்?''

”ரசிக்க வேறு சிரிப்பு இருந்தது, நர்ஸ் எமிலியின் சிரிப்பு” என்றாள் மஞ்சு.

இதயசந்திரன் இதயம் எமிலியை நினைத்துப் பார்த்தது. அதே தோரணையில், அதே வெள்ளை உடையில் கல்யாண் மருத்துவமனையில் தியாகத்தின் உருவமாக, தெய்வச் சிலையாக, கருணையின் வடிவமாக, அப்பொழுதும் அவன் மனத்துள் எழுந்தாள் அவள். அவன் முகம் அவளை நினைத்ததால் பெரிதும் கனிந்தது
.
அவன் முகக் கனிவை மஞ்சு கண்டாள். கண்டதால் பெருமூச்செறிந்தாள். “நினைத்தேன் அப்பொழுதே” என்று அவள் அழகிய உதடுகள் உதிர்த்த சொற்களில் சோகம் இருந்தது.

அவள் மனப்போக்கை இதயசந்திரன் உணர்ந்து கொண்டான். ”மஞ்சு” என்று மெல்ல அழைக்கவும் செய்தான்.

“என்ன?” மஞ்சுவின் குரல் வறண்டு கிடந்தது.

”அந்தத் தெய்வத்தைப் பற்றித் தவறாக நினைக்காதே” என்றான் இதயசந்திரன்.

“எமிலியைப் பற்றியா?’ என்று எரிச்சலுடன் வந்தது மஞ்சுவின் கேள்வி.

”ஆம்.”
“அவள் பரம உத்தமியோ?”

“தியாகி.”

”எதைத் தியாகம் செய்தாள்?”

”என்னை உனக்காக.’ இந்தச் சொற்களை உறுதி யுடன் உதிர்த்தான் இதயசந்திரன். ”மஞ்சு! எமிலியைப் போன்ற ஜன்மங்களை உலகத்தில் நாம் காண்பது.

அபூர்வம். அவள் சேவைக்காகப் பிறந்தவள். மலரும் மஞ்சமும் இன்பமும் நிலவும் மாளிகைக்காக ஏற்பட்ட வளல்ல எமிலி. முனகலும், அழுகையும் ரத்தமும் சுரவேக மும் கலந்த மருத்துவமனைக்காக ஏற்பட்டவள் அந்த உத்தமி. அவள் தன் உடலை நோயாளிகளின் பணிக்காக அளித்துவிட்டதாகச் சொன்னாள்…” என்றும் உள்ளம் குழைய, சொற்கள் கனியக் கூறினான் இதயசந்திரன்.

மஞ்சு அவன் முகத்தைத் தன் விழிகளால் ஆராய்ந் “தாள். உண்மையை ஊகிக்க அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. தன் கணவன் மனத்தில் நர்ஸைப் பற்றிய நினைப்பு ஆழப் புதைந்திருப்பதை உணர்ந்துகொண்டாள். “ஓகோ! இப்பொழுதுதான் புரிகிறது” என்று மெள்ளச் சொல்லவும் செய்தாள்.

“என்ன புரிகிறது மஞ்சு?” என்று கூறிய இதயசந்திரன் மஞ்சத்தில் கிடந்த அவள் கையைப் பற்றினான்.

கையை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டாள் அவள். “நீங்கள் என்னை விட்டு ஓடிவிட நினைத்த காரணம் புரிகிறது” என்று கூறவும் செய்தாள்.

இதயசந்திரன் மெல்லச் சமாளித்துக்கொண்டு மஞ்சத் தில் எழுந்து உட்கார்ந்துகொண்டான். “என்ன! உன்னை விட்டு ஓட நினைத்தேனா? எங்கு ஓட நினைத்தேன்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

“உங்கள் ஊருக்கு.”

“என் ஊருக்கா?”

“ஆம்.”

“யார் சொன்னது?”

“யார் சொன்னாலென்ன? உண்மை அதுதான்.”

“எப்படித் தெரியும் உனக்கு அதுதான் உண்மை யென்று?”

மஞ்சு மஞ்சத்திலிருந்து எழுந்து நின்று கொண்டாள். அவள் விழிகள் அவனை வெறுப்புடன் நோக்கின. “கல்யாண் நகரிலிருந்து கொலாபாவுக்கு வர குர்லா கோட்டை வழியாகத்தான் வரவேண்டுமா?” என்று வினவினாள். அத்துடன் இரைந்தும் தொடர்ந்தாள்.

“கொலாபாவுக்குச் செல்வதாகக் கல்யாண் நகரில் கூறி விட்டு மலைக்காட்டு வழியாக ஜன்ஜீரா சென்று தப்பி தமிழகம் ஓடிவிடலாமென நீங்கள் யுக்தி செய்தால், அதற்குமேல் யுக்தி செய்ய மகாராஷ்டிரத்தில் யாருமில்லையா? நீங்கள் கல்யாணிலிருந்து கிளம்பியது முதல் கண்காணிக்கப்படுகிறீர்கள் தமிழக வீரரே! உங்கள் யோசனை, நீங்கள் போகுமிடம், அவிழ்க்க முயலும் சிக்கல் அனைத்தையும் அறிந்த ஒருவர் உம்மை கூடியவரை போகவிட்டு வேடிக்கை பார்த்தார். சமயம் வந்தபோது பிடித்துவிட்டார்.” இதை மிகுந்த உணர்ச்சியுடன் விடுவிடுவென்று கூறினாள் மஞ்சு.

இதயசந்திரன் இதயத்தில் ஆத்திரமும் வியப்பும் கலந்திருந்தது. தன்னை அணு அணுவாக எடை போடக் கூடியவர் கனோஜி ஆங்கரே தான் என்பதை உணர்ந் திருந்ததால் கோபம் தலைக்கேறக் கேட்டான், ” அந்த மேதாவி உன் தந்தை போலிருக்கிறது?” என்று.

“இல்லை. அவருக்கும் மேற்பட்ட மேதாவி ஒருவர் இருக்கிறார்.”

“யாரது?”

“பேஷ்வா பாலாஜி. விசுவநாத்.”

Previous articleJala Deepam Part 3 Ch38 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch40 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here