Home Historical Novel Jala Deepam Part 3 Ch42 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch42 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

65
0
Jala Deepam part 3 Ch42 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch42 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch42 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 42 சரண்

Jala Deepam Part 3 Ch42 | Read Jala Deepam | TamilNovel.in

ஜல தீபம் கொலாபாவை அணுகியதும், பெரிதாக அலறிய இரு பீரங்கிகளின் ஒலியைக் காதில் வாங்கியதும், பிரும்மேந்திர ஸ்வாமியின் முகத்தில் விரவிய கவலையைக் கவனித்த இதயசந்திரன் அந்தக் கவலைக்குக் காரணத்தை உணர்ந்திருந்தானானாலும் அதைப்பற்றி ஏதுமறியாத வன் போலவே, “சுவாமி, இந்தப் பீரங்கிகள் ஒலிப்பதற்குக் காரணம் என்ன?” என்று வினவினான்.

சுவாமி மெல்லத் தமது கண்களை அவனை நோக்கி உயர்த்தி, “இதயசந்திரா! இந்தப் பீரங்கிகள் கொலாபா வின் வடமேற்கிலிருந்து சுடப்பட்டிருக்கின்றன’ என்று சுட்டிக் காட்டினார்.

“ஆம் சுவாமி.” இதயசந்திரனும் ஒப்புக்கொண்டான்.

சுவாமி மேலும் கேட்டார்: ”அங்கு பீரங்கிகள் எதற்காக வைக்கப்பட்டிருக்கின்றன?” என்று.

“சுவாமி! கொலாபாவைச் சுற்றியிருக்கும் பிரதான கோட்டைச் சுவரின் வடமேற்கு மூலையில், மதிளுக்குமேல் சதா கடலைக் கண்காணிக்கும் காவலர் அறை இருக்கிறது. அறையின் இரு கண்களிலும் இரு பீரங்கிகளின் வாய்கள் சமுத்திரத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. கார் காலத்திலும் மாரிக் காலத்திலும் கொந்தளிக்கும் கடலைப் பற்றிக் கொலாபா வரும் மரக்கலங்களுக்கு அபாயத்தை அறிவிக்கவும் எச்சரிக்கவும் இந்தப் பீரங்கிகளைச் சுடுவது வழக்கம்” என்றான் இதயசந்திரன்.

சுவாமி பதிலேதும் சொல்லாமல் தானிருந்த இடத்தை விட்டு அகன்று வெளியே செல்லத் திரும்பி, “வா, இதயசந்திரா!” என்று அனையும் அழைத்தார்.

சுவாமியுடன் அறையிலிருந்து வெளிப் போந்த இதய சந்திரன், ஜலதீபத்தின் தளத்தில் நின்று எதிரே பிரும் மாண்டமாக எழுந்து நின்ற கொலாபா கோட்டையையும் சுற்றிலும் இரைந்துகொண்டிருந்த மேலைக் கடலையும் பார்த்தான். அப்பொழுது கதிரவன் கிளம்பி கிட்டத்தட்ட பத்து நாழிகைக்குள் ஓடிவிட்டனவாகையால் சூரிய ரச்மிகள் கடலலைகளில் நன்றாகப் பளபளத்தன. அப்படி சூரியன் நன்றாகக் கிளம்பினாலும்கூட சரத்ருதுவின் காரணமாக உஷ்ணம் அதிகமாகத் தகிக்காததால் கடல் நாரைகள் அப்பொழுதும் அலைகளில் தவழ்ந்தும் பறந்தும் மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்தன. பீரங்கிச் சத்தத்தின் விளைவாகக் கொலாபா கோட்டையின் உள் தோப்புகளிலிருந்து ஜிவ்வென்று மேலே பறந்த நானாவித பட்சி ஜாலங்களில் சில கடலை நோக்கிப் பறந்து வந்தன. சில கோட்டைச் சுவர்களில் உட்கார்ந்தன. இன்னும் சில குலாபியின் கோபுரத்தின்மீது அமர்ந்தன. எதற்கும் அசையாத கடல் கருடன்கள் இரண்டு கொலாபாவின் வடகிழக்கிலிருந்த பிரதான வாயிலான மஹாதர் வாஜாவின் கமான்மீது உட்கார்ந்து வெள்ளைக் கழுத்துக்களை அப்படியும் இப்படியும் ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

ஜல தீபத்தின் தளத்தில் நின்று இத்தனையும் பார்த்த உபதளபதியின் நாசியிலிருந்து சாந்திப் பெருமூச்சொன்று வெளிவந்தது. சுற்றிலுமிருந்த கடலிலிருந்து வீசிய உப்புக் காற்றை நன்றாக முகர்ந்ததால் விம்மிய அவன் மார்பும் விகசித்த கண்களும், அவனுக்கு ஏற்பட்ட சந்துஷ்டியை நன்றாக வெளிப்படுத்தின. அலைகளில் எழுந்து தாழ்ந்து துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜல தீபத்தின் எதிரில் ஆங்காங்கு நங்கூரம் பாய்ச்சி ஆடி நின்ற கப்பல்கள் ஜல தீபத்தை வரவேற்பனபோல் தலைகளை அசைத்தன. அந்தக் கப்பல்களிலிருந்து தரைக்குச் சென்று கொண்டிருந்த மாலுமிகள் கூடப் படகுகளிலிருந்து:

திரும்பித் துறைமுகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்த ஜல தீபத்தைப் பார்த்தார்கள்.

ஏழெட்டு வர்த்தகக் கப்பல்களும் பத்துப் பன்னிரண்டு காலிவாத்துக்களும் இரண்டு குராப்புகளும் நின்று கொண்டிருந்தனவாகையால், ஜல தீபம் அக்கப்பல்கள் அளித்த இடைவெளியில் சற்றுச் சிரமப்பட்டே சென்று, நங்கூரம் பாய்ச்சியது. அப்படி ஜல தீபம் நின்றுவிட்ட பிறகுங்கூட தளத்தில் நின்ற இடத்திலிருந்து இதயசந்திரன் அசையாமல் கொலாபாவின் அழகைப் பருகிக்கொண்டிருந் தான் நீண்ட நேரம். கொலாபாவின் பிரதான வாயிலான மஹாதர்வாஜாவும், அதையணைத்து நின்ற இரு பெரும் ஸ்தூபிகளும் அவற்றுக்குப் பின்னால் சற்றுத் தூரத்தி லெழுந்த கனோஜியின் ஐந்தடுக்கு மாளிகையான தோர்லா வாடாவும் அவன் கண்களுக்கு இன்பத்தை அள்ளிச் சொரிந்துகொண்டிருந்தன. அந்த இடங்களைக் காணக் காண அவை தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய திருப்பங்களையும், எண்ணிப் பார்த்தான் இதயசந்திரன். அதனால் சொல்லிழந்து செயலிழந்து நின்றான் அவன். அந்த நிலையைப் பக்கத்தில் நின்ற பிரும்மேந்திர ஸ்வாமியே சற்று அறுத்தார் ஒரு கேள்வியால். “இப்பொழுது எதற்கு என்ன அபாயம் நேரிட்டுவிட்டது?” என்று வினவினார் பிரும்மேந்திர ஸ்வாமி.

இந்தக் கேள்வி இதயசந்திரனைக் கொலாபாவிலிருந்து ஜல தீபத்துக்கு இழுக்கவே, அவன் சற்றுத் திரும்பிப் பக்கத் திலிருந்த ஸ்வாமியைப் பார்த்து, “எந்த அபாயமும் நேரிடவில்லை ” என்றான்.

சுவாமி தமது கையைக் கொலாபாக் கோட்டையின் வடமேற்குப் புறத்தில் நீட்டி, “அப்படியானால் அந்தப் பீரங்கிகள் ஏன் சுடப்பட்டன ஜல தீபத்தைப் பார்த்த வுடன்?” என்று வினவினார்.

“எனக்குப் புரியவில்லை சுவாமி” என்றான் இதய சந்திரன் ஏதும் புரியாமல்.

“கடலில் கொந்தளிப்பு ஏதுமில்லை” என்றார் சுவாமி.

“இல்லை”

“ஆகாயமும் நிர்மலமாயிருக்கிறது.”

“ஆம்.”

“புரியவில்லை.”

“இல்லை.”

“எதிரிகள் யாரும் வரவில்லை.”
இந்த இடத்தில் இதயசந்திரன் பதில் சொல்லத் துவங்கிச் சற்று நிதானித்தான். பிறகு மெல்ல நகைத்தான். “எதிரிகள் யாரும் வரவில்லை என்று சொல்ல முடியாது” என்றும் கூறினான்.

“யார் எதிரி?” என்று கேட்டார் பிரும்மேந்திர சுவாமி, அவன் கருத்துக்குக் காரணம் தெரிந்தும் தெரியாதவர்போல்.

“நான்தான்.”

“நீ எப்படி எதிரியாவாய்?” “பேஷ்வாவின் உத்தரவுக்கு எதிராக நடப்பவனுக்கு. என்ன பெயர்?”

சுவாமி அவனை நோக்கினார் ஒரு வினாடி. “நீ இப்பொழுது எதிரியல்ல. கைதி’ என்று தெரிவித்தார். பிறகு, “சரி, புறப்படத் தயார் செய்துகொள். பீரங்கி வெடித்ததற்கு விடை கொலாபா கோட்டைக்குள் தான் கிடைக்கும்” என்ற சுவாமி கப்பல் தளபதியின் அறையை நோக்கி நடந்தார். அதுவரை எட்ட நின்று தளத்திலிருந்த பீரங்கிகளைத் துடைப்பதிலும் வேறு அலுவல்களிலும் ஈடுபட்டிருந்த ஹர்கோவிந்த், இப்ரஹீம், பர்னாண்டோ ,

மூவரும் இதயசந்திரனை நோக்கி வந்து குசலப் பிரச்னம் செய்தனர். அவர்கள் காட்டிய அன்பு அவன் உள்ளத்தைக் கரைத்தது. ‘கடலின் நட்பே ஒரு தனி நட்பு. அதிலிருக்கும் அந்தரங்கம் தரையில் எங்கு இருக்கிறது?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் இதயசந்திரன். அதை நிரூபிக்கும் வகையில் ஹர்கோவிந்த் மெல்லத் துவங்கினான், ”உபதளபதி, தங்களைக் குர்லாவில் பிடிக்கப்போகும் செய்தி எங்கள் யாவருக்கும் தெரியாது” என்று.

இதயசந்திரன் அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல் புன்முறுவல் செய்தான். அதைக் கண்டு சற்று நிம்மதி யடைந்த இப்ரஹிம், ஜல தீபத்தைத் திடீரெனப் பயணத்திற்குத் தயார் செய்ய உத்தரவிட்டார்கள். ஜல தீபம் கிளம்பியதும் குர்லாவுக்குச் செல்லப் பணித்தார்கள். குர்லாவை அடைந்ததும் நங்கூரம் பாய்ச்சவில்லை. அங்குள்ள காலிவாத்துக்களை மலையின் வடக்குப் புறத்தில் மறைக்கும்படி மாலுமிகளுக்கு உத்தரவிட என்னையும் பர்னாண்டோவையும் அனுப்பினார்கள். கோட்டையி லிருந்த பணியாட்களையும் அப்புறப்படுத்தினார்கள். ஜலதீபத்தையும் வடக்குப் புறத்தில் மறைத்து நிறுத்தினோம். எல்லா உத்தரவுகளையும் சுவாமியும் தளபதியும் தான் இட்டார்கள். உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்ததும் அவ்விருவர் தான். ஆனால் உங்களைத் தூக்கி வந்தது மட்டும் நாங்கள்” என்று தட்டுத் தடுமாறிக் கூறினான்.

இதயசந்திரன் ஒரு கையை இப்ரஹீமின் தோளிலும் இன்னொரு கையை பர்னாண்டோவின் தோளிலும் போட்டு ஹர்கோவிந்தைப் பார்த்து, “ஹர்கோவிந்த், நீராட்டத்துக்கு ஏற்பாடு செய். நான் சீக்கிரம் கோட்டைக்குப் போக வேண்டும்” என்றான்.

அவன் கொண்டாடிய சொந்தத்தாலும்; அன்புச் சொற்களாலும் சாந்தியடைந்த இப்ரஹீம், பர்னாண்டோ,

ஹர்கோவிந்த் மூவரும் தங்கள் அலுவல்களைக் கவனிக்கச் சென்றார்கள். இதயசந்திரன் வெகு சீக்கிரம் நீராட்டத்தை முடித்துக்கொண்டான். பிறகு உபதளபதி அறையிலிருந்த பெரிய மரப்பெட்டியிலிருந்த பல உடைகளை அலசிப் பார்த்து நல்ல மாலுமி உடையொன்றை எடுத்து அணிந்து கொண்டான். பிறகு இடுப்பில் கச்சையணிந்து மகாராஷ்டிர வளைவு வாளைப் பொருத்தி, இரு கை துப்பாக்கிகளையும் செருகிக் கொண்டான். பிறகு தலை சீவி நெற்றியில் சந்தனமணிந்து வெளியே ராஜகோலத்தில் வந்த இதயசந்திரனைப் பார்த்த பிரும்மேந்திர ஸ்வாமியே ஆச்சரியத்தில் திளைத்தாரென்றால் தளபதி உடையி லிருந்த மஞ்சுவைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? அவள் பெருவிழிகள் வியப்பால் மிகப் பெரிதாயின. அவற்றில் ஆவல் மலர்ந்து கிடந்தது. சுவாமிக்குப் பக்கத்தில் நீராடி மிகக் கம்பீரமாக முகவெட்டுடன் நின்றிருந்த நிம்கர்கூட இதயசந்திரனின் கோலத்தைப் பார்த்துப் பிரமித்தான்.

இதயசந்திரன் அந்த மூவரையும் ஒருமுறை நோக்கி னான். அவன் விழிகள் கடைசியில் மஞ்சுவின்மீது நிலைத்தன. “தளபதி! இப்படி வாருங்கள்” என்ற அழைப்பிலும் மரியாதையும் உத்தியோக தோரணையுமிருந்தது.

மஞ்சு அவனை ஒரு விநாடி வியப்புடன் நோக்கினாள். பிறகு மெல்ல நடந்து அவனருகில் வந்தாள். “எதற்கு. அழைத்தீர்கள்?” என்று கேட்கவும் செய்தாள்.

‘நான் இப்பொழுது கைதிதானே?’ என்று வினவினான் இதயசந்திரன்.

பதிலுக்கு மஞ்சு சுவாமியைப் பார்த்தாள். சுவாமி யின் கண்கள் இதயசந்திரனை நோக்கின. சிறிது சிந்தனையில் திளைத்தன. ”ஆம், பேஷ்வாவின் உத்தரவுப்படி நீ கைதிதான்” என்றார். அதைக் கேட்டதும் தனது இடைக் கச்சையிலிருந்து இரு கைத்துப்பாக்கிகளையும் எடுத்து, கச்சையை அவிழ்த்து, கச்சை, வாள், கைத்துப்பாக்கிகள் அனைத்தையும் மஞ்சுவிடம் நீட்டி, ‘தளபதி! இவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினான்.

கைதியென்ற முறையில் அவன் ஆயுதங்களை வைத் திருக்கக் கூடாதென்பது விதியென்பதையும் தளபதியென்ற முறையில் தன்னிடம் ஆயுதங்களைக் கொடுத்துச் சரணடைகிறானென்பதையும் புரிந்து கொண்டாளானாலும், அவற்றை அவள் கைநீட்டி வாங்கிக் கொள்ளவில்லை “சுவாமி! இவர் இப்படிச் சரணடைய வேண்டியது அவசியமா?” என்று வினவினாள். அவள் சொற்கள் தடுமாற்றத்துடன் வெளிவந்தன.

பிரும்மேந்திர ஸ்வாமியின் நிலை சங்கடத்திலிருந்தது. பம்பாயில் பானுதேவிக்காக அவனை நிராயுதபாணி யாக்கிச் சிறையில் வைத்தபோது கூட ஏற்படாத உணர்ச்சிப் பெருக்கு அவருக்கு அப்பொழுது ஏற்பட்டது. மேலைக் கடலின் மகாராஷ்டிர ஆதிக்கத்தை நிலை நிறுத்த பெரும் செயல்களைப் புரிந்த அந்த மகாவீரன் அன்று கையில் ஆயுதங்களை ஏந்தி நீட்டிக் கைதியாக முனைந்து நின்றது எதற்கும் அசையாத அவரையும் அசைய வைத்தது. ஆகவே, சற்று சங்கடத்துடனேயே சொன்னார் சுவாமி. “உபதளபதி சொல்வது ராணுவ சட்ட திட்டப்படி நியாயமானது” என்று.

மஞ்சுவின் விழிகள் இதயசந்திரன் விழிகளுடன் உறவாடின ஒரு விநாடி. பிறகு நடுங்கும் கைகள் அவன் கையிலிருந்த கைத் துப்பாக்கிகளையும் வாளையும், கச்சையுடன் வாங்கிக் கொண்டன. அவற்றை எடுத்துக் கொண்டு அவனைப் பார்க்காமல் தனது அறைக்கு ஓடிய மஞ்சு அறைக்குள் நுழைந்ததும் அந்த ஆயுதங்களையும் கச்சையையும் மார்பில் இறுக அணைத்துக் கொண்டாள்.

அவள் உடல் லேசாக ஆடியது. அவள் கண்களில் நீர்ஊற்றெடுத்துப் பெருகி அழகிய கன்னங்களில் வழிந் தோடின. அந்த ஆயுதங்களை மார்பிலிருந்து எடுத்துப் பஞ்சணையில் வைத்துத் தரையில் மண்டியிட்ட மஞ்சு ‘இதென்ன விபரீதம்? கணவன் சிறைப்பட மனைவியா காரணமாக வேண்டும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அவள் மனம் சுக்குநூறாக உடைந்து விடும் போலிருந்தது. இதயசந்திரன் ஆயுதங்களைத் தனது பெட்டியில் பத்திரப் படுத்திவிட்டுக் கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

இதயசந்திரனையும் அந்த முகவெட்டு வீரனையும் ஏற்றிச் செல்ல இரு படகுகள் தயாராயிருந்தன. அந்தப் படகுகளொன்றில் பதுமைபோல் இதயசந்திரனுடன் இறங்கி அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள் மஞ்சு. படகு. நகர்ந்த பின்பும் அந்த நிலையிலேயே இருந்தாள் அவள். அவள் மட்டுமல்ல அந்தக் குழப்பமான மனநிலையில் இருந்தது; பின் படகில் வந்து கொண்டிருந்த முகவெட்டு வீரன் நிலையும் அப்படித்தானிருந்தது. படகிலிருந்த வரையிலும் சரி, படகுகள் கரையை அடைந்து மணலில் இழுக்கப்பட்ட பிறகும் சரி, அவன் தீவிர மௌனத்தி லிருந்தான். பக்கத்திலிருந்த பர்னாண்டோ கேட்ட கேள்விக்குக்கூட அவன் பதிலேதும் சொல்லவில்லை. குழப்பத்துடன் தலையை அசைத்துவிட்டுக் கடற்கரை மணலில் எல்லோருக்கும் முன்பு நடந்தான். அவனைத் தொடர்ந்த இதயசந்திரன், மஞ்சு பிரும்மேந்திர ஸ்வாமி மூவரும் மணலைக் கடந்து கோட்டைக்குள் நுழைந்ததும்,. மஹாதர்வாஜா வாயிலில் அவர்களை கனோஜி வரவேற் றார். அவர் முன்பு இதயசந்திரன் மண்டியிட்டு வணங்கினான். அவன் நிராயுதபாணியாயிருப்பதைக் கண்ட கனோஜியின் முகத்தில் சினத்தின் அறிகுறிகள் தெரிந்தன. “இவனை யார் நிராயுதபாணியாக்கியது?” என்றும் கேட்டார் அவர்.

“யாரும் ஆக்கவில்லை, அவரே ஆயுதங்களைக் கழற்றிக் கொடுத்துச் சிறைப்பட்டார்” என்றாள் மஞ்சு.

“யாரிடம்?” என்றார் கனோஜி. ”என்னிடம்.” மஞ்சு சொன்னாள் வெட்கத்துடன். சாதாரண காலமாயிருந்தால் இதைக் கேட்டதும் கனோஜி இடியிடியென நகைத்திருப்பார் பெரிதாக. “உன்னிடம் தான் இந்தத் தமிழன் ஏற்கெனவே சிறைப் பட்டுவிட்டானே” என்றும் விஷமமாகப் பேசியிருப்பார். அன்று அவரிடம் அத்தகைய விஷமம் ஏதுமில்லை. முகத்தில் சிறிது கவலையும் இருந்தது. அவருடைய கண்களும் பிரும்மேந்திர ஸ்வாமியின் கண்களும் கலந்தன ஒரு விநாடி. பிறகு கனோஜி ஏதும் பேசாமல் கோட்டை யின் உட்புறம் சென்றார். மற்றவர்கள் அவரைத் தொடர்ந்தனர். இதயசந்திரன் கனோஜியின் மாற்றத்தைக் கவனித்தான். பிரும்மேந்திர ஸ்வாமியையும் கனோஜி யையும் பெரும் கவலையில் ஆழ்த்தக்கூடிய ஏதோ ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்று மட்டும் அவனுக்குப் புரிந்ததேயொழிய அது என்னவாக இருக்கக்கூடும் என்பது மட்டும் அவனுக்கு விளங்கவில்லை. அன்று மாலை அது விளங்கியபோது அவனுக்கு அது பேரதிர்ச்சியாயிருந்தது.

Previous articleJala Deepam Part 3 Ch41 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch43 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here