Home Historical Novel Jala Deepam Part 3 Ch43 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch43 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

67
0
Jala Deepam part 3 Ch43 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch43 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch43 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 43 குலாபியின் பிரசாதம்

Jala Deepam Part 3 Ch43 | Read Jala Deepam | TamilNovel.in

கனோஜி ஆங்கரே வழிகாட்டி முன் செல்ல, அவருக்கு அடுத்தபடி இதயசந்திரன் நடக்க, இதய சந்திரனுக்குப் பின்னால் மஞ்சு, பிரும்மேந்திர சுவாமி, நிம்கர் மூவரும் தொடர்ந்துவர சென்ற இந்த ஊர்வலத்தை அன்று கொலாபா கோட்டை மக்கள், வழி நெடுகிலும் ஆங்காங்கு கும்பல் கும்பலாக நின்று கண்டனர். வழியின் கேந்திர ஸ்தானங்களில் காவல் புரிந்த கோட்டை வீரர் சிலர்கூடத் தங்கள் காவலைச் சிறிது தளர்த்தி, வாட்களைக் கீழே தாழ்த்தி, இதயசந்திரனுக்கு மரியாதை செய்யும் தோரணையில் அவனை உற்றுப் பார்க்கவும் செய்தனர். ஆலிபாக்கிலிருந்து கொலாபாவுக்குச் சாமான்களை விற்பனைக்குக் கொண்டு வந்து தோர்லாவாடாவையும் அடுத்திருந்த வீரர் விடுதிகளையும் நோக்கிச் சென்று கொண்டிருந்த வணிகப் பெண்மணிகளும் தலைகளிலிருந்த தயிர், பால் குடங்களுடனும், மூங்கில் கூடைகளுடனும் சற்று நின்று, அந்த ஊர்வலத்தைக் கவனித்தார்கள். கனோஜி ஆங்கரேயும் மற்றவர்களும் ஒரே சீராக நடந்த தோரணையும், யார் முகத்திலும் சிரிப்பில்லாத தோற்றமும் இதயசந்திரன் வரவில் ஏதோ விபரீதமிருப்பது போன்ற எண்ணம் பார்த்தவர்கள் சிந்தையில் உதயமான தால், அவர்கள் அதிக நேரம் பார்த்துக்கொண்டு நிற்காமல், சற்றுப் பார்த்துவிட்டுத் துரிதமாகத் தங்கள் வேலையைப் பார்க்கச் செல்வது போல் அபிநயித்தார்கள்.

சாதாரண மக்களின் வீரரின் வணிகப் பெண்களின் இந்தப் பார்வையெல்லாம் இதயசந்திரன் கவனிக்கவே செய்தானானாலும் அவற்றைப்பற்றி ஏதும் பொருட்படுத் தாமலே நடந்தான். தோர்லாவாடாவை அணுகிய பின்பும் நிலை அதே மாதிரிதான் இருந்தது இதயசந்திரன் சம்பந்தப் பட்டவரை. தோர்லாவாடாவின் வாயிலில் வாள் தாழ்த்தி, சிரம் தாழ்த்தி வணக்கம் செய்த வீரர்களின் முகத்திலும் புன்சிரிப்பையோ, வேறு சந்தோஷத்தையோ காணவில்லை அவன். கனோஜியின் முகத்திலிருந்த கவலையே அவர் களுக்கும் இருந்ததால் ஏதோ விரும்பத்தகாத விவகாரம் தன்னைப்பற்றி நிகழ்ந்திருப்பதைப் புரிந்து கொண்டாலும், அது எதுவாயிருக்கும் என்ற சிந்தனை சிறிதளவுமில்லாமல், தன் இதழ்களில் புன்முறுவலைத் தவழவிட்டுக் கொண்டு தோர்லாவாடாவுக்குள் கனோஜியைத் தொடர்ந்து நுழைந்தான் தமிழன்.

உள்ளே நுழைந்ததும் கனோஜி தமது மௌனத்தைக் கலைத்து, “இதயசந்திரா! நீ உனது பழைய அறைக்குச் செல் உன் மனைவியுடன்” என்று கூறிவிட்டு இரு காவலரை அழைத்து, ”நிம்கரை மாளிகையின் கடைபகுதி யிலுள்ள சிறு அறையில் தங்க வையுங்கள். பேஷ்வா கூறும் ‘போது அவரிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று உத்தர விட்டு, பிரும்மேந்திர சுவாமியை மட்டும் தம்முடன் அழைத்துக்கொண்டு தனது மந்திராலோசனை அறைக்குச் சென்றார். பிறகு அவரையோ சுவாமியையோ இதய சந்திரன் அன்று மாலை வரை சந்திக்கவே இல்லை. நேராகத் தனது பழைய அறைக்குச் சென்ற இதயசந்திரன் அந்த அறையின் மஞ்சங்களும் இதர ஆசனங்களும் பழைய படியே இருந்ததைக் கவனித்தான். அதே அறையில் காதரைன் தன்னிடமிருந்து பிரிந்த நிலையும் அவன் கண்முன் எழுந்தது. மனைவியாக இஷ்டப்படாமல் மனைவி பெறக்கூடிய சுகத்தை மட்டும் தன்னிடமிருந்து விரும்பிய காதரைனை நினைத்த அவன் அன்றும் பரிதாபப் பட்டான். அந்த அறையும் அறையைத் தாங்கிய ஐந்தடுக்கு உப்பரிகையுமுடைய தோர்லாவாடாவும் தோர்லாவாடாவைத் தாங்கிய கொலாபாவும் தன் வாழ்க்கையின் எத்தகைய கட்டங்களைத் தொட்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்தான் அவன். தான் மாலுமித் தொழில் பயில இறங்கியது சுவர்ண துர்க்கத்தி’ லென்றாலும் கொலாபாவே தனது பெயருக்கும் சிறப்புக்கும் அத்தாட்சியாக விளங்கியிருக்கிறதென்பதை எண்ணிப் பார்த்ததால் அதனிடம் அவனுக்கு ஒரு தனிப்பாசமும் ஏற்பட்டது அந்தச் சமயத்தில். இத்தனைக்கும் காரணம் நானா? மஞ்சுவா? கனோஜியா?” என்று வினவிக்கொண்டான் ஒருமுறை. ‘கனோஜிதான்’ என்ற நினைப்பு உள்ளூரத் திடமாக எழவே, ‘என்னை மாலுமியாக்கினார்; உபதளபதியாக்கினார். தரைப்படை தலைவராக்கினார். பெண்ணையும் கொடுத்தார்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான். இந்த நினைப்புகளுடன் அந்த அறை பூராவையும் இரண்டு மூன்று முறைகள் பார்த்து விட்டுப் பிறகு மஞ்சுவை நோக்கிச் சிரித்தான் கலகலவென்று.

அதுவரை அவன் அந்த அறையைப் பார்த்துப் பார்த்துச் சிந்தனையில் ஆழ்ந்து நின்றதை எண்ணிய மஞ்சு, அவன் திடீரெனச் சிரிப்பதைப் பார்த்து, “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று வினவினாள் கவலை தோய்ந்த குரலில்.

“கதவைத் தாழிடு. சொல்கிறேன்” என்று கூறிய இதயசந்திரனை ஒருமுறை தன் அகல விழிகளால் நோக்கிய மஞ்சு, சரசரவென நடந்து சென்று கதவைத் தாழிட்டு வந்தாள். “சொல்லுங்கள்” என்றும் கேட்டாள்.

“என்ன சொல்ல மஞ்சு,” என்று வினவினான் இதய சந்திரன்.

“நீங்கள் நகைத்த காரணம்?” என்றாள் மஞ்சு.
இதயசந்திரன் ஒரு விநாடி யோசித்தான். பிறகு. பஞ்சணையில் உட்கார்ந்துகொண்டு எதிரே நின்று மஞ்சுவை நோக்கி, “மஞ்சு! இந்தக் கொலாபாவுக்கு நான் வருவது இதல்ல முதல் தடவை” என்றான் மெல்ல. அவன் அதை எதற்காகப் புதிதுபோல் கூறுகிறான் என்பது புரியாவிட்டாலும் மஞ்சு, ‘ஆம்’ கொட்டினாள் பதிலுக்கு.

“நான் வந்தபோதெல்லாம் இங்கு வீரர்கள் குதூகல மாக இருப்பார்கள். நகைப்பார்கள். மாலுமிகள் கூச்சல் தாங்க முடியாது. வணிகப் பெண்கூட வெட்க நகை நகைப்பார்கள்.”

“ஆம்.”

“உன் தந்தை நகைத்தால் இடி இடிப்பது போலிருக்கும்.”

“ஆம்.”

இதயசந்திரன் மீண்டும் மௌனம் சாதித்தான். “அந்த இடிபோன்ற நகைப்பு, விஷமப் பேச்சு எதுவுமே உன் தந்தையிடம் காணோம் இன்று. வழியில் பார்த்தவர்களிட மெல்லாம் கலகலப்பு இல்லை. இந்தத் தீவுக்கு இப்பொழுது என்ன வந்துவிட்டது, துன்பம் இதில் தோய்ந்து கிடக்க? உல்லாசம் இதைவிட்டு விலக என்ன நடந்துவிட்டது? தீவு போய் விட்டதா அல்லது நான் தான் போய்விட்டேனா?” என்று கேள்விகளை அடுக்கினான் தமிழன்.

மஞ்சு மெல்ல நடந்து அவனருகில் வந்து நின்று கொண்டாள். ஒருமுறை பெருமூச்செறிந்ததால் அவன் முகத்துக்கு நேரிலிருந்த அவள் மார்பு ஒருமுறை ஏறி இறங்கியது. தனது இரு கைகளாலும், அவன் தலையைப் பிடித்து மார்பில் அணைத்துக்கொண்ட அவள் குனிந்து அவன் காதுக்கருகில் சொன்னாள்: “உங்களைப் பிடிக்க நான் கிளம்பும்போது கொலாபாவும் இப்படி இல்லை, தந்தையும் இப்படியில்லை ” என்று.

அவள் மார்பில் புதைந்து கிடந்த தலையை நீக்கிக் கொண்டு தனது இரு கைகளாலும் அவளைப் பிடித்துச் சற்று எட்ட நிறுத்திய இதயசந்திரன், “இன்று ஏன் இப்படி மாறிவிட்டது கொலாபா? உன் தந்தை ஏன்: இப்படி மாறிவிட்டார்?” என்று வினவினான்.

மஞ்சுவின் முகத்திலும் சிந்தனை படர்ந்தது. “இன்று மாலைக்குள் எப்படியும் கண்டுபிடித்துவிடுகிறேன்” என் றாள் சிறிது சிந்தனைக்குப் பிறகு.

அதுவரை எங்கெங்கோ அலைந்துவிட்ட அவள் மனம் இதயசந்திரன் உணவேதும் அருந்தவில்லையென்ற உணர்வை அடைந்ததால், “இருங்கள் வருகிறேன்” என்று கூறி வெளியே சென்று சிறிது நேரத்திற்கெல்லாம் உணவுத் தட்டுக்கள் இரண்டு மூன்றுடனும் ஒரு செம்பில் தண்ணீருடனும் வந்து சேர்ந்தாள். கதவை மீண்டும் சாத்தி விட்டுப் பரிமாறவும் தொடங்கினாள்.

“நீயும் சாப்பிடு, மஞ்சு” என்று இதயசந்திரன் அவளையும் எதிரே உட்காரச் சொன்னான் ஓர் ஆசனத்தில்.

சரியென்று உட்கார்ந்து அவள் உணவுத் தட்டைத் தனது மடியில் வைத்துக்கொண்டு உணவைக் கலந்து வைத்து, “சாப்பிடுங்கள்” என்றாள்.

இதயசந்திரன் சாப்பிடவில்லை . அவள் மடியில் கையை வைத்தான், “நீ முதலில் சாப்பிடு” என்றான். “அது கூடாது” என்றாள் மஞ்சு. “ஏன்?” என்று வினவிய இதயசந்திரனின் கை ஆகாரத்தைத் தொடவில்லையே தவிர, அவள் மடியை நன்றாகத் தொட்டுக்கொண்டிருந்தது.

“கணவன் உண்ட பின்புதான் மனைவி உண்ணலாம்” என்று கூறிய மஞ்சு, ‘உம்” என்று அதட்டி அவன் கையை மடி ஆராய்ச்சியிலிருந்து விலக்கினாள்.

“சரி மஞ்சு! இரண்டு பேரும் ஒன்றாகச் சாப்பிடலாம்” என்றான் தமிழன்.

“கூடாது. நீங்கள் சாப்பிட்ட பின்பு பாக்கியை நான் சாப்பிடுவேன்.”

“எச்சில் மஞ்சு.”

“இங்குதான் எச்சில் போலிருக்கிறது?”

“வேறெங்கு?”

”நல்ல கேள்வி.” இதைச் சொல்லி அவள் நகைத்தாள் சூழ்நிலையில் மண்டிக் கிடந்த துன்பத்தை மறந்து.

நகைத்ததால் விலகிய அவள் மெல்லிய செவ்விய பெரிய இதழ்களை அவன் கவனித்தான். அதில் ஊறிய அமுதத்தையும் கவனித்தான். அவள் கூறியதன் உண்மை, நகைத்ததன் .உண்மை அவனுக்கு நன்றாகப் புரிந்தது. மேற்கொண்டு ஏதும் பேசாமல் தட்டிலிருந்து ஒரு கவளத்தை எடுத்துப் பலவந்தமாக. அவள் வாயில் ஊட்டினான். முகத்தில் வெட்கம் பிடுங்கித் தின்ன அவள் கவளத்தைச் சுவைத்து விழுங்கினாள். பிறகு இதயசந்திரன், தானே ஒரு கவளம் எடுத்து விழுங்கினான். இப்படி அவளுக்கொரு கவளம் தனக்கொரு கவளமாக உண்டு முடித்த பின்பு நீர் கொண்டு அவள் வாயைத் துடைத்து, தானும் கை கழுவி வாயைத் துடைத்துக் கொண்டான். பிறகு தட்டு முதலியவற்றை அவனே அந்த அறை மூலையில் கொண்டுபோய் வைத்தான். மீண்டும் பஞ்சணையில் உட்கார்ந்ததும் ”பான்” என்று கைநீட்டினான்.

அவள் வெற்றிலை மடித்துக் கொடுக்க அவன் அதை நன்றாகக் குதப்பி விழுங்கிவிட்டுப்பஞ்சணையில் நன்றாகக் கால் நீட்டிப் படுத்தான்.

மஞ்சு சில வினாடிகள் அவன் பக்கத்தில் உட்கார்ந் திருந்தாள். பிறகு ஏதோ நினைத்துக்கொண்டு, “நான் வெளியே சென்று வருகிறேன்” என்று அனுமதி கேட்டாள்…

“எங்கு போகிறாய் மஞ்சு?”

“இந்த அரண்மனைக்கு வெளியே?”

”எதற்கு?”

“வீரர்களை விசாரிக்க.”
“கொலாபாவின் துன்பநிலை பற்றியா?”

“ஆம்” என்று கூறிவிட்டு வெளியே சென்றாள் மஞ்சு.

அவள் சென்றபின் இதயசந்திரன் நன்றாகப் படுத்துறங்கினான். சுமார் நான்கு நாழிகைகளுக்குமேல், அவன் விழித்தபோது விளக்கு வைப்பதற்கு இரண்டு மூன்று நாழிகைகளே இருந்தபடியால் அறையைவிட்டு வெளியே வந்து தோர்லாவாடாவுக்குள்ளேயே இங்குமங்கு மாக உலாவினான். அந்த அரண்மனையின் பல கட்டுக் களில் காவல் புரிந்து நின்ற வீரர்களுடன் சிரித்துப் பேசினான். அவர்களும் பதிலுக்குச் சிரித்தாலும், அந்தச் சிரிப்பு இயற்கையாயில்லாததையும் துன்பத்தின் அஸ்திவாரத்தில் எழுவதையும் பார்த்தான். எது எப்படி யிருந்தாலும் இரவுக்குள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகி விடும் என்ற நினைப்பால் எதைப் பற்றியும் கவலைப் படாமல் தோர்லாவாடாவை விட்டு வெளிக் கிளம்பினான். கொலாபாவின் பல பாகங்களில் திரிந்துவிட்டு விளக்கு வைக்கும் நேரத்தில் குலாபியின் கோயிலுக்கு வந்தான்.

அவன் கோயிலை அணுகிய சமயத்தில் கோவில் சேவகர், தீபங்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். கோவில் மணியும் டணார் டணார் என்று அடித்தது. அதைக் காதில் வாங்கியதால் உள்ளே நுழைந்த இதயசந்திரன் ஜகன்மாதாவான அம்பிகையின் சன்னிதானத்தில் சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்திருந்தான். குலாபியின் அருட்கண்கள் அவனை நோக்கின. பெரும் சாந்தி அவன் மனத்தில் நிலவியது. அர்ச்சகர் அவனை அன்புடன் வரவேற்றுக் குலாபிக்குக் கற்பூரம் ஏற்றிக் காட்டினார். இந்தச் சமயத்தில் குலாபியின் சிரத்திலிருந்து ஒரு செம்பருத்தி மலர் அவன் பாதத்தில் விழுந்தது. கற்பூரம் காட்டிய அர்ச்சகர் தட்டை ஒரே நிலையில் நிறுத்தினார். “தமிழா! எடுத்துக்கொள் அந்த மலரை” என்று உணர்ச்சியுடன் பெரிதாகக் கூறினார்.

அவர் உணர்ச்சிக் கூச்சலுக்கு அவனுக்குக் காரணம் தெரியவில்லையாயினும், நடுங்கும் கைகளுடன் குலாபியின் திருவடியிலிருந்த அந்த மலரை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அர்ச்சகர் நீண்ட நேரம் தட்டை ஏந்தி, குலாபியின் முகத்தைக் கவனித்துக்கொண்டே இருந்தார். கற்பூரத் தட்டுத் திடீரென நடுங்கத் துவங்கியது. அதை மெல்ல அம்பிகையின் காலடிப் பக்கத்தில் வைத்தார் அர்ச்சகர் குனிந்து. பிறகு எழுந்து நின்ற நிலையில் அவர் உடல் நடுங்கியது. மெல்ல அவர் வாயிலிருந்து சொற்கள் உதிர்ந்தன, ”இந்த மலரை அவளிடம் கொடு’ என்று.

தலையை அசைத்தான், வணங்கினான் இதயசந்திரன். “தாயே, அப்படியே செய்கிறேன்” என்றான் சற்று இரைந்து.

“இப்படிக் கொடுங்கள்” என்று கேட்டது மஞ்சுவின் கொஞ்சும் குரல், அவனுக்குப் பின்னாலிருந்து. பதுமை போல் திரும்பி அவளிடம் மலரைக் கொடுத்தான் தமிழன். மஞ்சு மலரைக் கண்களில் ஒற்றிக்கொண்டு தலையில் சூடிக்கொண்டாள். அவள் மலரைச் சூடிய மறுவினாடி அர்ச்சகர் உடல் நடுக்கம் நின்றது. அவர் கண்களைத் திறந்து இதயசந்திரனைப் பார்த்து, “தமிழா! இந்த மலருக்கு எத்தனையோ பிரபுக்கள், மன்னர்கள் ஏங்கி நிற்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிடைக்காதது உனக்குக் கிடைத்திருக்கிறது” என்று கூறிவிட்டு, “இதை அம்பிகை கொடுத்ததன் ரகசியம் தெரியுமா?” என்றும் வினவினார்.

அவனுக்கு உண்மையில் பொருள் தெரியவில்லை. ஆனால் மஞ்சுவுக்குத் தெரிந்ததால் அவள் முகத்தில் வெட்கம் தாண்டவமாடியது. முகத்தை அவள் தொங்கப் போட்டுக் கொண்டாள். இரகசியத்தை மெல்ல விளக்கினார் அர்ச்சகர். அந்த விளக்கத்தில் பல விஷயங்கள் விளங்கின தமிழனுக்கு. கனோஜியின் கவலைக்குக்கூடக் காரணம் விளங்கிவிட்டது அவனுக்கு. குலாபியின் அருள் பிரசாதம், அவனைச் சூழ்ந்து கிடந்த இரகசிய இருளை ஒரு வினாடியில் கிழித்தெறிந்துவிட்டது.

Previous articleJala Deepam Part 3 Ch42 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch44 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here