Home Historical Novel Jala Deepam Part 3 Ch44 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch44 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

60
0
Jala Deepam part 3 Ch44 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch44 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch44 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 44 மஞ்சுவின் ரகசியம்

Jala Deepam Part 3 Ch44 | Read Jala Deepam | TamilNovel.in

உலக மாதாவின் தலை உச்சியிலிருந்து அவள் திருவடிகளில் செம்பருத்தி மலர் விழுந்த ரகசியத்தைப் பற்றி விளக்க முற்பட்ட அர்ச்சகர், “தமிழா! மகாராஷ்டிர மன்னர்களுக்குக்கூடக் கிடைக்காத மாபெரும் பாக்கியம் உன்னைத் தேடி வந்திருக்கிறது. யாருக்காக அர்ச்சகன் கற்பூரத் தட்டை ஏந்துகிறானோ அந்தச் சமயத்தில் தேவி தனது தலையிலிருந்து செம்பருத்தி மலர் உ.திர்ப்பாளானால் அந்த மனிதனுக்குப் பெரும் புகழும் வீரமும் சத்துவகுணமும் உள்ள மகன் பிறப்பான் என்பது மகாராஷ்டிரர்களின் நம்பிக்கை. இப்படி ஒரு மலரை நாடி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து நாள் கணக்கில் காத்திருந்தவர்கள் உண்டு. காத்திருந்து இந்தப் பிரசாதம் கிடைக்காது திரும்பியவர்களும் உண்டு. ஆனால் இந்த அருள் உனக்குக் கிடைத்திருக்கிறது. இந்தப் புஷ்பம் யாருக்குக் கிடைக்கிறதோ அந்த மனிதன் எங்கிருந்தாலும், அவன் குழந்தை எங்கு பிறந்தாலும் அந்தக் குழந்தையை ஓராண்டுக்குள் குலாபியின் திருவடியில் சமர்ப்பித்து அவள் அருளைப் பெற வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் அந்தக் குழந்தைக்குச் செயற்கை மரணம் கிடையாது. வாழ்க்கையில் சகல சௌகரியங்களும் உண்டு. இது இக்கோயிலின் ஐதீகம். ஆகவே, உனக்குப் பிறக்கும் குழந்தையை ஓராண்டுக்குள் இங்குக் கொண்டு வா” என்று கூறினார்.

இதயசந்திரன் இதயத்தில் வியப்பு மிதமிஞ்சித் துவங் கியது. “குரு மகராஜ்! எங்களிருவருக்கும் திருமணமே இரண்டு மாதங்களுக்கு முன்புதானே நடந்திருக்கிறது! அதற்குள்…” என்று கூறிய இதயசந்திரனைத் தனது கையால் உயர்த்தி மேலே பேசவொட்டாமல் தடை செய்த அர்ச்சகர், ”நான் ஆவேசத்திலிருந்தபோது என்மூலம் தேவி என்ன சொன்னாள்?” என்று வினவினார்.

“இந்த மலரை அவளிடம் கொடு என்று கூறினாள் தேவி” என்றான் இதயசந்திரன்.

”சூல் இல்லாத பெண்ணுக்குச் சிவந்த மலரைக் கொடுக்கமாட்டாள் தேவி” என்று குறிப்பிட்டார் அர்ச்சகர்.

இதயசந்திரன் சட்டென்று திரும்பி மஞ்சுவை நோக் கினான். மஞ்சு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நிலத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். இதயசந்திரனுக்கு மெள்ள மெள்ள உண்மை புலனாயிற்று. ஒரு விநாடி அவன் உள்ளமெல்லாம் உடலெல்லாம் புல்லரித்தது. மகிழ்ச்சி வெள்ளம் அவனை நின்ற இடத்தில் நிலைக்க வைத்தது. பல விஷயங்கள் பளிச்சிட்டன அவன் மனத்தில் அப்பொழுது. மஞ்சு சூல் எய்தியிருக்கும் உண்மை கனோஜிக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று ஊகித்தான் அவன். தவிர, தன்னை ராணுவக் கட்டளையை மீறிய குற்றத்திற்காக பேஷ்வா விசாரிக்க ஏற்படலாமென்றும், அப்படி விசாரித்துத் தனக்குத் தீவிரமான தண்டனையும் விதிக்கப்பட்டால் மஞ்சுவின் கதி என்ன ஆகுமோ என்ற திகில் கனோஜிக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமென்றும் முடிவு செய்தான் தமிழன். தவிர, பேஷ்வா தன்னை விசாரிக்கப் போகும் விஷயம் ஏற்கனவே கொலாபா தீவில் பரவி யிருப்பதால்தான் தன்னை உயிர் போல் நேசிக்கும் கொலாபா வீரர்களும் மற்றோரும் அத்தனை கவலையோடு இருக்கிறார்கள் என்பது அவனுக்கு வெட்ட வெளிச்சமாயிற்று. அந்தக் கவலையோடு மக்களுக்கு மஞ்சுவின் நிலை பற்றிய கவலையும் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்பது புலனாயிற்று தமிழனுக்கு. அப்படி அந்த ரகசியம் உடைபட்டதும், அவன் மனத்திலிருந்து சந்தேகத் திரை விலகியதும், பழைய இதயசந்திரனாக முயன்றான் அவன். இருந்தும் அது சாத்தியமில்லை யென்பதையும் தந்தையாகப் போகும் பொறுப்பும், ஒரு விதப் பயமும் தன் மனத்தை அழுத்துவதையும் புரிந்து கொண்டான். அத்தகைய கனத்த மனத்துடன் தேவியைத் தண்டனிட்டு அர்ச்சகரிடம் விடைபெற்றுக் கோயிலி லிருந்து வெளிப் போந்தான். மஞ்சு அவனை நிழல்போல் தொடர்ந்தாள்.

இதயசந்திரன் ஏதோ சிந்தனையுடன் போகிற வழி தெரியாமல் நடந்தான். மஞ்சுவும் ஏதும் பேசாமல் மௌனம் சாதித்துக்கொண்டு அவனுடன். நடந்தாள். மெல்ல இருவரும் கால் போன வழி நடந்து ஒரு பாறை யருகில் வந்ததும் திடீரென நின்றுவிட்டனர். இதய சந்திரன் சரேலெனத் திரும்பி, “மஞ்சு! இந்த இடம்…” என்று தடுமாறிப் பேசினான்.

மஞ்சு பதில் சொல்லவில்லை, தலைகுனிந்து நின்றாள். நீண்டு கிடந்த பாறையும் அதை மறைத்துத் தங்களுக்கு மணவறை சிருஷ்டித்த பாறையும் தன்னைப் பார்த்து நகைப்பனபோல் தோன்றியது மஞ்சுவுக்கு. எதற்கும் அஞ்சாத, சிறிதும் வெட்கப்படாமல் கேலி செய்யக்கூடிய மஞ்சுவின் அந்த நிலை பார்ப்பதற்குப் பரிதாபமாயிருந்த தால், இதயசந்திரன் சற்று திரும்பி அவளைச் சுற்றித் தன் கைகளைச் சுழலவிட்டுத் தன்னை நோக்கி இழுத்து அவளை அணைத்துக் கொண்டான்.

பழைய அந்த மணவறைப் பாறையில் இறங்கி உட்கார்ந்துகொண்ட அந்த இருவரில் இதயசந்திரனே முதலில் சொற்களை உதிர்க்கத் தொடங்கினான்.

“இதை என்னிடம் மறைத்தேவிட்டாயே மஞ்சு?” என்றான் இதயசந்திரன் அவளுடைய கழுத்தில் இதழ் களைப் புதைத்து.

கன்னத்திலும் கழுத்திலும் புதைந்த இதழ்களால் மஞ்சுவின் உணர்ச்சிகள் பெரிதும் கொந்தளித்துக் கொண்டிருந்தன. அவற்றை அவன் கேள்வி சிறிது சமனப் படுத்தவே லேசாக நகைத்தாள் அவள்.

“ஏன் நகைக்கிறாய் மஞ்சு?” என்ற கேள்வியை உதடு கேட்டது. . கைகள் அவளை இழுத்து மடியில் படுக்க வைத்துக் கொண்டன.

“எந்தப் பெண்ணாவது கணவரிடம் போய்…?” என்ற மஞ்சு அப்படியே நிறுத்தினாள் பேச்சை “போய்…” “இதைச் சொல்லுவாளா?” “சொல்லாவிட்டால் அவனுக்கு எப்படித் தெரியும்?”

“அவன் தாய் சொல்லுவாள் அல்லது அவள் தாய் ‘சொல்லுவாள் மறைமுகமாக.”

“இப்பொழுது இருவரும் சொல்லவில்லையே?”

“தாய்தான் சொல்லியிருக்கிறாள். தாயில்லாதவர் களுக்கு யார் தாயோ அவள் தான் சொல்லியிருக்கிறாள்” என்று மஞ்சு மிக மெதுவாகப் பதில் சொன்னாள். அதைச் சொன்னபோது அவள் குரல் தழுதழுத்தது. கண்களில் நீர் திரண்டு ஒருமுறை கன்னத்தில் வழிந்தோடவும் ‘செய்தது.

இதயசந்திரன் அவள் கண்களைத் தன் கையால் துடைத்தான். சகல உயிர்களுக்கும் தாயான ஜகன் மாதாவையே மஞ்சு குறிப்பிட்டதையும் அவளுடைய தாயற்ற தன்மையை எண்ணி அவள் மனம் சஞ்சல மடைந்து கிடப்பதையும் எண்ணியதால் அவன் மனத் திலும் பெரும் சோகம் ஏற்பட்டது. அந்தச் சோகத்தின் விளைவாக மடியில் கிடந்த அவளது உடலுக்கு அடியில் தனது இரு கைகளையும் கொடுத்துச் சற்று தூக்கித் தன் மார்புக்கருகில் அவள் முகமிருக்கும்படியாக வைத்துக் கொண்டு, “மஞ்சு! உனக்கும் எனக்கும் எல்லோருக்கும் தாய் அவள் தானே? நீ தாயற்றவள், தகப்பன் இருக்குமிடம் ரகசியமாயிருக்கிறது. துன்ப நிலைதான் மஞ்சு. அனாதை. களுக்கு நாதியான அம்பிகையிருக்கிறாள் உனக்கு” என்று தைரியம் சொன்னதோடு நில்லாமல், ”மஞ்சு!’ என்று மெள்ள மறுபடியும் அழைத்தான்.

அவன் கைகள் சிருஷ்டித்த தொட்டிலில் கிடந்த அவள் கண்களை அவன் கண்களுடன் உறவாடவிட்டாள் ஒரு. வினாடி. “என்ன?” என்றும் செம்பவள உதடுகளைத். திறந்து கூட்டினாள் ஒருமுறை.

“இப்பொழுது…” திணறினான் தமிழன்.

“இப்பொழுது?” புன்முறுவல் கோட்டினாள் மஞ்சு.

”அதாவது… இப்பொழுது.”

“இப்பொழுது என்ன?” “எத்தனை நாளாக…? இப்படி?”
மஞ்சு கண்களை வேறுபுறம் திருப்பிக்கொண்டு சொன்னாள்: ‘நீங்கள் போருக்குச் சென்றீர்கள் அல்லவா” என்று. “ஆம்” என்றான் தமிழன். ”அதற்கு முன்பு?” “அதற்கு முன்பு…?” ”புரியவில்லையா உங்களுக்கு?” “என்ன புரிய வேண்டுமென்கிறாய்?”

“அடக் கஷ்டமே! என்ன சொல்லுவது உங்களுக்கு?” என்று கூறிய அவள், “அதற்கு முன்பு குளித்ததுதான்” என்று எரிச்சலும் மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த ஒலியில் கூறினாள். பிறகு அவனிடமிருந்து திமிற முயன்றாள்.

மஞ்சுவின் ரகசியம் அவன் கைகள் இரும்பாக அவளைச் சுற்றி இறுகின. “ஏன் திணறுகிறாய்?” என்ற கேள்வியும் எழுந்தது அவனிடமிருந்து ஆசையுடன்.

“நான் குழந்தையா என்ன, நீங்கள் தூக்கி வைத்துக் கொள்வதற்கு?” என்றாள் அவள்.

அவன் கண்கள் மிருதுவடைந்தன. “மஞ்சு, உன்னைக் குழந்தையென்று இனிமேல் சொல்லமுடியுமா?” என்று வினவினான் விஷமத்துடன். “அதிருக்கட்டும் மஞ்சு, நான்…… நமது…” ஏதோ இழுத்தான்.

“சொல்லுங்கள்” என்றாள் மஞ்சு.

”நமது குழந்தையை எடுத்துக்கொள்ள எத்தனை நாளாகும்?” என்று கேட்டான் அவன்.

“ஓராண்டுக்கு மேலாகும்” என்றாள் அவள் சிரித்து. “ஆம், ஆம், ஆகும்?” என்றான் தமிழன். “என்ன ஆம், ஆகும்?” என்று கேட்டாள் அவள்.

“குழந்தை பெரிய வீரனென்று குலாபி சொல்லியிருக்கிறாள். ராமன் பன்னிரண்டு மாதங்கள் கழித்துப் பிறந்தது போல் இவனும் பிறப்பான் போலிருக்கிறது?”

“அப்படியானால் நீங்கள் தசரதனா?”

“ஆம்.”

“இருக்க முடியாது.”

“ஏன்?”

“அவர் குழந்தையில்லாமல் தவித்து ஆயிரக்கணக்கான வருஷங்கள் யாகம் செய்து பாயசம் வாங்கி மனைவிமார் களுக்குக் கொடுத்தார். நீங்கள் என்ன கஷ்டப்பட்டீர்கள்.”

துன்பமெல்லாம் காற்றில் பறக்க நகைத்த இதய சந்திரன் அந்த மணவறைப் பாறையில் அவளை படுக்க வைத்தான். அவளருகில் தானும் உட்கார்ந்து அவள் உடலுக்குக் குறுக்கே தனது ஒரு கையைப் போட்டுக் கொண்டான். இன்னொரு கை பாறையில் ஊன்றி யிருந்தது. நீண்டநேரம் அந்த நிலையில் சிந்தனையி லிருந்தான் அவன். “எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசிக்கிறீர்கள்?” என்று வினவினாள் மஞ்சு.

“பிடிக்க வேண்டிய கோட்டையெல்லாம் பிடித்தாகி விட்டது மஞ்சு” என்றான் இதயசந்திரன், அவள் மலர் உடலை ஆராய்ந்த வண்ணம்.

அவள் மலர்க்கையொன்று எழுந்து அவன் கழுத்தை வளைத்தது. “அதற்குள் கவலை வந்துவிட்டதா?” என்று! வினவினாள் அவள், புன்முறுவல் உதடுகளில் தவழ..

”கவலை எதற்கு?”

“குடும்பம் அதிகரித்தால் கவலைதானே?”

“எனக்கென்ன கவலை? குலாபியிருக்கிறாள், பார்த்துக் கொள்கிறாள்.”

“இப்படித்தான் மனிதர்கள் சொல்லுகிறார்கள். குலாபியிடம் முழுநம்பிக்கை அவர்களுக்குக் கிடையாது. கவலையிலிருந்து மீள்வதில்லை அவர்கள்” என்று சொன்ன மஞ்சு, அவன் கழுத்தை இழுத்துத் தன் மார்புமீது முகத்தைப் பதிய வைத்துக்கொண்டாள்.

இதயசந்திரன் உடலில் உணர்ச்சிகள் பெரிதாகப் பிரவாகித்தன. வேகமாகப் பிரவாகித்தன. இருப்பினும். அவன் மெள்ளத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவன் கைகள் அவளை அணைத்தாலும் முகம் அவள் மார்பிலிருந்து எழுந்தது. ஆசை உந்தினாலும் ஏதோ கிலேசமும் பயமும் அவனை ஆட்கொண்டிருந்தன. அந்த நிலையில் அவன் கண்களுடன் அவள் கண்கள் உறவாடின. “என்ன இன்று இப்படியிருக்கிறீர்கள்?” என்ற கேள்வி! ரகசியமாக உதிர்ந்தது உதடுகளிலிருந்து. வானத் தாரகைகளின் வெளிச்சத்தில் அவள் உதடுகள் பளபளத்தன ஈரத்துடன். அந்த ஈரத்தைத் துடைக்கத் துடித்தன அவன் உதடுகளும். இருப்பினும் அவன் மனத்தில் அச்சம் நிலவியது. தன்னை ஆரத் தழுவிய அவள் கரங்களை மெல்ல விலக்க முயன்றான் இதயசந்திரன்.

“ஏன்? இதற்குள் கசந்துவிட்டதா?” என்று அவள் கேட்டாள், வேட்கை குரலில் உந்த.

“கரும்பு என்று கசக்கும் மஞ்சு? ஆனால்…”

“ஆனால்…”

“நீ இருக்கும் நிலையில்…”

“சே! சே! ஒன்றும் ஆகாது. இப்பொழுது தானே ஆரம்பம்…”

“நிச்சயமாக ஒன்றும் ஆகாதா மஞ்சு?”

“ஆகாது. எங்களுக்குத் தெரியாதா?”

”உங்களுக்கு என்றால்?”

“பெண்களுக்கு…”

”இந்த வயதிற்குள்…”

“இதில் வயது ஏது? இயற்கை சொல்லிக் கொடுக்கும் பாடம்.”

அதற்கு மேல் அவள் ஏதும் பேசவில்லை. அவள் உடலின் மோகனாஸ்திரங்கள் அவனை ஆட்கொண்டன. ஆரம்ப நாள் மணவறைப் படலத்துக்கும் இன்றைக்கும் மிகுந்த வித்தியாசமிருந்தது. இருவர் உ.டல் கூற்றில், அனுபவத்தில், ஆசையின் வேகத்தில், இருவரிடமும் எச்சரிக்கையிருந்ததால் மிதமிருந்தது, மிதமிருந்ததால் ஆனந்தம் அபரிமிதமாயிருந்தது.

இருவரும் அனுபவத்துக்குப் பிறகும் நீண்ட நேரம் அந்தப் பாறையிலேயே படுத்துக் கிடந்தனர். அப்படிப்படுத்துக் கிடந்த நேரத்தில் மறுநாள் நிகழக்கூடிய விசாரணையைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்தான் இதய சந்திரன். அந்த முடிவு கொடுத்த திடத்துடன் தோர்லாவாடாவுக்கு மஞ்சுவுடன் வந்தான். முதல் ஜாமம் முடியும் நேரத்தில் வந்தவன் மஞ்சுவை அறைக்குப் போகச் சொல்லிவிட்டு நேராக கனோஜி ஆங்கரேயின் அறைக்குச் சென்றான். அங்கு மிகுந்த ஆலோசனையி லிருந்த கனோஜி ஆங்கரேயை நோக்கி, “உங்கள் கவலைக்குக் காரணம் தெரிந்துவிட்டது எனக்கு. பேஷ்வாவின் விசாரணை எப்பொழுது?” என்று வினவினான், முன்கூட்டி முகவுரை ஏதுமில்லாமலே.

கனோஜி ஆங்கரேயின் பெருவிழிகள் அவனை ஏறெடுத்து நோக்கின. அவர் பயங்கர மீசையும் சிந்தனையுடன் ஒரு முறை எழுந்து தாழ்ந்தது. மேஜை மீதிருந்த இரு கால்களின் பாதங்களும் ஒன்றையொன்று தட்டிக் கொண்டன. “விசாரணையை அவசரமாக நடத்த வேண்டுமா?” என்று இகழ்ச்சியுடன் வினவினார் அவனை நோக்கி. ”ஆம்” என்றான் உறுதியான குரலில் தமிழன்.

அந்தக் குரலில் உறுதியையும் அவன் நின்ற தோரணை யையும் கவனிக்கத் தவறவில்லை ஷாஹுகார்ய துரந்த ரான கனோஜி, ”விசாரணையின் முடிவு ஏதாகும் என்று தெரியுமா உனக்கு?” என்று வினவினார். ”தெரியும்” என்றான் தமிழன்.

“என்னுடைய, அதாவது தளபதியினுடைய உத்தரவை மீறியிருக்கிறாய் நீ” என்று சுட்டிக் காட்டினார் கனோஜி.

“ஆம்.”

”உன் உபதளபதிப் பொறுப்பைவிட்டுப் படை யிலிருந்து ஓடப் பார்த்திருக்கிறாய்.”

“ஆம்.”

“இதற்கெல்லாம் என்ன தண்டனை தெரியுமா?”

“மரண தண்டனை” என்றான் இதயசந்திரன் அலட்சியமாக.

அதுவரை கோபத்தைக் காட்டாத கனோஜியின் முகத்தில் கோபம் மெள்ள துளிர்த்தது. அதைப் பற்றிக் கவலைப்படவில்லையா நீ?” என்று கேட்டார் கரகரத்த குரலில்.

”இல்லை.”

“முட்டாள்! நானும் கவலைப்பட்டிருக்க மாட்டேன் முன்பு. ஆனால் நீ இப்பொழுது என் மகளின் கணவன்!’ என்று இரைந்தார் ஆங்கரே.

“அவளைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்றான் இதயசந்திரனும் சற்று இரைந்து.

“ஏன்?” “அவளைக் காப்பாற்ற ஒருவன் ஏற்பட்டுவிட்டான்.’’

“யாரவன்?” என்று இடியென எழுந்தது கனோஜியின் ஆத்திரக் குரல். அவர் கால்கள் மேஜையிலிருந்து இழுபட்டன. எழுந்து நின்றார் ராட்சதன் போல.

இதயசந்திரன் கண்கள் அவரை நன்றாக ஏறெடுத்து நோக்கின. “அவள் மகன்” என்ற சொற்கள் வெளி வந்தன அவன் வாயிலிருந்து வேகத்துடன்.

கனோஜியின் அசுர விழிகளில் சீற்றம் சிறிது மறைந்து கவலை துளிர்த்தது. ”அப்படியானால் அவள் நிலை தெரியுமா உனக்கு?” என்ற கேள்வியில் அந்தக் கவலை தெரியவும் செய்தது.

”தெரியும்.” இதயசந்திரன் பதில் உறுதியுடன் வந்தது.

“இப்பொழுது தெரிகிறதா என் கவலைக்குக் காரணம்?” என்று வினவினார் கனோஜி.

”தெரிகிறது ஸார்கேல். நீங்கள் உயிர்போல் நேசிக்கும் வளர்ப்பு மகள் சூலுற்றிருக்கும் தருவாயில் அவள் நிலை துன்பத்திலாழ்ந்து விடுமானால் அவள் வாழ்வே .நாசமாகு மென்று அஞ்சுகிறீர்கள். ஆனால் ஒன்று பிரபு! வீரன் மனைவியின் மங்கலத்தைப் பிடித்திருப்பது மனிதர் கையல்ல. தேவியின் கை” என்று தைரியமூட்டினான்.

அது பெரிய வேதாந்தம்தான். கனோஜியும் குலாபி யிடம் அத்தகைய தீவிர நம்பிக்கை உடையவர் தான். இருப்பினும் அவர் மனத்தில் சாந்தியில்லை. அவர் புத்தி வெகு துரிதமாக வேலை செய்து கொண்டிருந்தது. கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்து, “சரி நீ உன் அறைக்குப் போ! நான் பிறகு வருகிறேன்’ என்றார். அவர் இதயத்தில் ஏதோ ஒரு திட்டம் உருவாகிவிட்டதை. இதயசந்திரன் புரிந்து கொண்டான்.

Previous articleJala Deepam Part 3 Ch43 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch45 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here