Home Historical Novel Jala Deepam Part 3 Ch48 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch48 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

87
0
Jala Deepam part 3 Ch48 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch48 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch48 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 48 கோழையின் மகனல்ல அவன்

Jala Deepam Part 3 Ch48 | Read Jala Deepam | TamilNovel.in

பிரும்மேந்திர சுவாமியிடமிருந்து கடிதம் வந்த அடுத்த நான்கைந்து நாட்கள் கொலாபா சுரணையற்றுக் கிடந்தது. இதயசந்திரன் வழக்கு சம்பந்தமான முடிவைப் பற்றியே விசாரணை நாள்வரை எல்லோரும் நினைத்தும் பேசியும் கொண்டிருந்ததால், அதில் எந்த முடிவும் ஏற்படாமல் போய்விட்டது. மக்களின் சலனப்பட்ட மனநிலைக்கு இடைக்கால அமைதியை அளித்ததானாலும், அந்த அமைதி பெரும் துன்பத்துக்கு முன் ஏற்படும் பொய்யான அமைதியாகவே இருந்ததால், கொலாபா வீரர்களும் மக்களும் செயலிழந்தும் பேச்சிழந்தும் காணப் பட்டார்கள்.

எல்லோர் மனநிலையையும் விட பாலாஜி விசுவநாத்தின் மனநிலை பெரிய சங்கடத்துக்குள் ஆழ்ந்திருந்தது. கனோஜியை அடக்க ஷாஹுவின் உத்தரவுப்படி ஸதாராவிலிருந்து புறப்பட்டு கொங்கணி வந்த தாம், ஏற்கனவே கொலாபாவில் நாள்படத் தங்கிவிட்டதாகவும் மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தை ஸ்திரப்படுத்த ஸதாராவின் வேலை நிரம்ப இருப்பதாலும், இதயசந்திரனின் வழக்குக்கு ஒரு முடிவு காண முடியாமலிருப்பதை நினைத்துப் பெரும் கவலைக்குள்ளாயிருந்தார் பேஷ்வா. ‘இந்தத் தமிழன் ஒருவனுக்காக நான் நிரந்தரமாகக் கொலாபாவிலேயே இருக்க முடியுமா? சுவாமி என்ன இப்படி இரண்டுங் கெட்டான் நிலைமையில் என்னை வைத்து விட்டார்?’ என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார் பாலாஜி. எது எப்படியிருந்தாலும் தாமோ மகாராஜா ஷாஹுவோ பிரும்மேந்திர சுவாமியின் கட்டளையை மீற முடியாதென்பது பேஷ்வாவுக்குத் திட்டவட்டமாகத் தெரிந்திருந்தது. பிரும்மேந்திர சுவாமி:’ மட்டும் பணம் திரட்டிக் கொடுக்காமலிருந்தால் மகாராஜா ஷா ஹுவுக்கு மகாராஷ்டிரத்தின் சைன்னியம் ஏதும் உருவாயிருக்க முடியாதென்றும், அந்தப் பணம் முழுவதும் சுவாமியால் கடனாகவே கொடுக்கப் பட்டிருக்கிறபடியால் சுவாமி நினைத்தால் நாளைக்கே ஷாஹுவின் கஜானா காலியாகி விடுமென்றும், அப்புறம் ஷாஹு சந்தி சிரிக்க வேண்டியிருக்குமென்றும் பாலாஜி நன்றாக உணர்ந்திருந்தாராகையால் சுவாமியின் கட்டளைக்கு எதிராக ஏதும் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

பாலாஜியின் போக்கைக் கனோஜியும் கவனிக்கத் தவறவில்லை. எந்த உணர்ச்சியையும் காட்டாத பாலாஜியின் முகம் குழம்பிக் கிடந்ததையும், மேலுக்கு அந்தச் சாம்பல் நிறக் கண்களில் உணர்ச்சி இல்லா விட்டாலும் உள்ளூர அவர் வெதும்பிக் கொண்டிருக்கிறாரென்பதையும் புரிந்து கொண்ட கனோஜிக்கு உள்ளூரச் சிறிது திருப்தி ஏற்படவே செய்தது. எதற்கும் அசையாத பாலாஜியையே ஒருவர் அசைத்து விட்டதை எண்ணி ஆனந்தமடைந்தார் ஆங்கரே.

பேஷ்வா அவர்கள் மறுநாள் நீராடிவிட்டுப் பட்டுத் துணி புனைந்து திறந்த மார்புடனும் முப்புரி நூலுடனும் தமது தங்க நிற மேனி சூரிய வெளிச்சத்தில் பளபளக்க, அவர் முன்பு நன்றாகத் துலக்கப்பட்ட செம்பும் குவளையும் ஜொலிக்க, உத்திரிணி கொண்டு காலை சந்தியா வதனம் செய்தபோது உத்திரிணி இரண்டொரு முறை பாத்திரத்தைவிட்டுப் பக்கத்திலிறங்கி தீர்த்தமெடுக்காமல் மேலே வந்ததையும், பிறகு பேஷ்வா முகம் சுளித்துப் பாத்திரத்தை நோக்கி உத்திரிணியில் நீர் எடுத்துக் கையில் வாங்கி, ஆசமனம் செய்ததையும் கண்ட ஸார்கேல் மெல்லப் புன்முறுவல் கொண்டார்.

சந்தியை முடித்த பிறகு அவரைச் சந்தித்த போதும் பாலாஜி ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்து கிடப்பதை உணர்ந்த கனோஜி. அதைப்பற்றிக் கேட்கவும் செய்தார். “பாலாஜி!” என்று பழைய நட்பு முறையில் அவரை அழைத்த கனோஜி, உங்கள் மனத்தில் ஏதோ குழப்பம் இருக்கிறது போல் தோன்றுகிறது” என்று துவங்கினார் பேச்சை.

அப்பொழுது மேஜைப் பெட்டியில் கோழி இறகு கொண்டு காகிதத்தில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த பாலாஜி மெல்ல நிமிர்ந்து கனோஜியை நோக்கினாரானா லும் ஏதும் பேசவில்லை சில வினாடிகள். பிறகு சொன்னார், “ஆம் கனோஜி. பெரும் குழப்பம்” என்று .

”பாலாஜி எதற்கும் குழம்பாதவர் என்பது மகாராஷ்டிரத்தில் பிரசித்தம்’ என்று சுட்டிக்காட்டினார் கனோஜி.

“அந்தப் பிரசித்தியை மாற்றவேண்டிய அவசியமிருக்கிறது” இதைச் சொன்ன பாலாஜியின் இதழ்களில் சோகப் புன்னகை ஒன்று அரும்பியது.

“விசித்திரமாயிருக்கிறது பாலாஜி” என்றார் கனோஜி, தமது பெருவிழிகளை அவர்மீது நாட்டி.

“இதில் விசித்திரமென்ன இருக்கிறது” என்று கேட்டார் பாலாஜி.

கனோஜி உட்கார்ந்திருந்த நிலையிலிருந்து நின்று பாலாஜியை நோக்கினார். ”பாலாஜி! பால்ய முதல் நாமிருவரும் நண்பர்கள். நான் பரம்பரைக் கடல் மாலுமி. நீங்கள் பரம்பரைக் குமாஸ்தா. நான் காளையைப்போல் பலமுள்ளவன், முரடன். நீங்கள் ஒல்லி, புரவிகூட ஏறத் தெரியாதவர், சிப்ளன் உப்பளக் குமாஸ்தா. ஆனால் ஸித்திகளிடம் சிக்கிய என்னை விடுவிக்க உங்களால்தான் முடிந்தது. ஸித்திகளின் கடற்படைப் பலம், தரைப் படைப் பலம் அனைத்தையும் உங்களைவிட அறிந்தவர்

யாருமில்லை. என்னை ஸித்திகளிடமிருந்து மீட்ட அந்தச் காலத்திலும் உங்கள் உள்ளத்திலோடும் உணர்ச்சிகளை யாரும் அறிய முடியாது. ஸித்திகளின். சிறையிலிருந்து பலமுறை நான் தப்பினேன் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம், உங்களை முதல் முதலில் பிரும்மேந்திர ஸ்வாமியின் பூஜா மண்டபத்தில் பரசுராம பட்டணத்தில் நான் சந்தித்தபோது சுவாமி சொன்னது இன்னும் நினைவிருக் கிறது. ‘உன் முகம் குமாஸ்தாவின் முகமல்ல. நாடாளும் சக்தியை உன் முகம் காட்டுகிறது. ஒரு நாள் இந்த நாட்டை நீ நிர்வகிப்பாய்’ என்று சுவாமி தியான நிலை கலைந்ததும் கூறினார். நான் அப்பொழுது நம்பவில்லை. இப்பொழுது புரிகிறது அது எத்தனை உண்மை என்று. உங்கள் ஆழ்ந்த மனம், உணர்ச்சியற்ற முகம், சீரிய அறிவு இந்த மூன்றும் உங்களை மகாராஷ்டிரத்தையே ஆளும் ஸ்திதிக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இன்று நான் பார்க்கும் முகம் வேறு” என்று மடமடவென்று பேசினார் கனோஜி.

பாலாஜி மௌனமே சாதித்தார் பல விநாடிகள். பிறகு அவரது சாம்பல் நிறக் கண்கள் கனோஜியை நோக்கி எழுந்தன. அவற்றில் அப்பொழுது ஒரு புத்தொளி இருந்ததைக் கவனித்தார் கனோஜி. “கனோஜி! நீ சொல்வதெல் லாம் சரி. ஆனால் இந்த பாலாஜி சிறிது மாறியிருக்கிறார். அதை மாற்றியது அரசாங்கச் சுமை” என்று பாலாஜி கூறிய சொற்களில் பொறுப்பு நிரம்பத் தொனித்ததைக் கண்டார் கனோஜி.

“அரசாங்கச் சுமை அடிப்படைக் குணங்களை மாற்றுமா?” என்று கேட்டார் பாலாஜியை நோக்கி கனோஜி.

“மாற்றும் கனோஜி! அரசாங்கத்தை ஏற்பது வேறு. நிர்வகிப்பது வேறு. அரசை ஏற்பதில் பல தந்திரங்கள் கையாளலாம். தர்மாதர்மங்கள் அதிகமாகக் கவனிக்கப் படுவதில்லை. ஆனால் அரசாங்க நிர்வாகம் வரும்போது தர்மம் பெரும் பொறுப்புக்களை ஏற்படுத்துகிறது. தர்மத்தின் அஸ்திவாரத்தில் இயங்காத அரசு இரண்டு தலைமுறைகளும் நிற்பதும் கஷ்டம். ஆகவே நீதியும் நெறியும் நம்மைக் கட்டுப்படுத்துகின்றன. இதில் சுய சாமர்த்தியத்துக்கு இடம் குறைவு. பொறுப்புக்குத் தலை வணங்க இடம் அதிகம். நீதிச்சுமை அத்தனை பாரமானது. அதில் எவன் குணமும் மாறித்தான் ஆகவேண்டும்!” என்ற பாலாஜி மேலும் கூறினார்: “உதாரணமாக, இந்தத் தமிழனை எடுத்துக்கொள். இவன் தளபதி உத்தரவுக்குக் கீழ்ப்படியாத, அரசாங்க விரோதமான காரியங்களைச் செய்திருக்கிறான். சாதாரணமாக நான் இவனுக்கு மரண தண்டனையோ, சிறைவாசமோ அல்லது குறைந்தபட்சம் தேசப் பிரஷ்ட தண்டனையோ விதித்திருக்க முடியும். ஆனால் விசாரித்த அன்று தீர்ப்புக் கூற எனக்கு உறுதியில்லை. இவன் நாட்டுக்குச் சேவையும் செய்திருக் கிறான். பல கடல் போர்களில் வெற்றியடைந்து மகாராஷ்டிரர் கடலிலும் வல்லவர்கள் என்ற பெருமையை வாங்கித் தந்திருக்கிறான். ஆகவே அவன் சேவையும் குற்றத்தையும் எடை போட வேண்டியிருக்கிறது. பார்த்தாயா என் நிலையை?” என்று.

பாலாஜியின் நேர்மையை நினைத்து வியந்தார் கனோஜி. பிறகு ஒரு சந்தேகம் கேட்டார்: “இவன் செய்துள்ள சேவையை முன்னிட்டு இவனைத் தேசப் பிரஷ்டம் செய்தாலென்ன?” என்று.

பாலாஜியின் இதழ்களில் புன்முறுவல் அரும்பிற்று. ‘”அவன் போகமாட்டான் இந்த நாட்டை விட்டு. தமிழன் தனது ஆணையைக் காப்பாற்ற இங்கு உயிரையும் விட்டாலும் விடுவானே தவிர தஞ்சை ராணியின் மகனைப் பார்க்காமல் கிளம்பமாட்டான். எந்த நாட்டின் நிலை . யிலும் ஒரு கர்ம வீரன் இருக்கிறான். அவர்களில் இவன் ஒருவன்” என்று கூறிய பாலாஜியின் சொற்களில் இதய சந்திரனைப் பற்றிப் பெருமிதமிருந்ததைக் கவனித்தார் கனோஜி.

இருவரிடையும் மீண்டும் மௌனம் நிலவியது. கடைசியில் கனோஜி கேட்டார்: “தஞ்சை ராணியின் மகன் எங்கிருக்கிறான்?” என்று.

“என்னால் சொல்ல முடியாது கனோஜி” என்றார் பேஷ்வா.

“உங்களுக்குத் தெரியுமல்லவா அவன் இருப்பிடம்?”

“தெரியும்!”

“பின் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?”

“தடை இருக்கிறது அதற்கு!” “என்ன தடை? யார் விதித்தது அந்தத் தடையை?”

“யார் விதித்தால் நாம் ஒப்புக்கொள்வோம் அந்தத் தடையை?”

”சத்ரபதி ஷாஹுவா?”

இல்லையென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார் பேஷ்வா. “இப்படியொரு வாரிசு இருப்பது ஷாஹுவுக்குத் தெரியாது, தெரிந்தால் அந்த வாரிசு இத்தனை நாள் அரசாங்க சிறையில் இருப்பான். அவன் இருப்பிடத்தைச் சொல்லக் கூடாதென்று தடுத்திருப்பவர் சுவாமிதான்” என்று பேஷ்வா கூறினார்.

கனோஜி அதற்குமேல் அதைப் பற்றிப் பேசவில்லை. நீண்ட நேரம் யோசித்துவிட்டு, “இதயசந்திரனை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று வினவினார். “எனக்குத் தெரியாது” என்றார் பாலாஜி. “நீங்கள் தானே விசாரித்தீர்கள்?” “ஆம்.” “நீங்கள் தானே தீர்ப்புச் சொல்ல வேண்டும்.”

”ஆம்.”

“அப்படியானால்…?”

“சுவாமி சொல்லச் சொல்லுகிற தீர்ப்பைத்தான் நான் சொல்ல வேண்டும்?”

“ஏன்?”
பேஷ்வாவின் சாம்பல் நிறக் கண்களில் ஒளி நன்றாகச் சுடர்விட்டது. “பிரும்மேந்திர ஸ்வாமி மகாராஷ்டிரத் தின் நலனுக்காக, சாம்ராஜ்யத்தின் விஸ்தரிப்புக்காக, சிறப்புக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இன்று ஷாஹு, மன்னராயிருப்பது அவரால். ஸித்திகள் ‘போரிடாதிருப்பது அவரால். தீர்ப்பை அவர் ஒத்திப் போடச் சொன்னால் அதில் ஏதோ முக்கிய காரணம் இருக்கவேண்டும். எதையோ நாடி அவர் அவசரமாகச் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வரும்போது விஷயங்களுக்கு விளக்கம் கிடைக்குமென்று நம்புகிறேன்” என்றார் ‘பேஷ்வா.

அன்று முதல் அதைப்பற்றிப் பேசாவிட்டாலும் இருவர் இதயமும் கனத்துக் கிடந்தது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத இதயசந்திரன் அடுத்து நாலைந்து நாட்களை மஞ்சுவுடன் தோர்லாவாடாவிலும் கனோஜியின் அனுமதியுடன் ஜல தீபத்திலும் கழித்தான். அவனது நேசக்கரங்களில் மஞ்சு கிடந்த நேரங்களில் அவள் மனம் சொர்க்கத்திலிருந்தது. ஆனால் அவள் மனத்தில் மகிழ்ச்சி வெள்ளத்தின் இடையே சிறிது பயமெனும் பிசாசும் தலை தூக்கியது. தீர்ப்பு என்ன ஆகுமோ என்ற பயம் அவளை வாட்டிக் கொண்டிருந்தது. ஒரே ஒருமுறை அவள் கேட்டாள், ஜலதீபத்தின் தளபதி அறையில் அவனுடன் தனித்திருந்தபோது, “நாம் இப்படியே தப்பி விட்டாலென்ன?’ என்று.

“வீரப் புதல்வியான மஞ்சுவின் புத்தியாயிருந்தாலும் அது பெண் புத்திதானே?” என்றான்.

”பெண் புத்திக்கு என்ன?” “சபலபுத்தி. சந்தர்ப்பம் கிடைத்தால் திரும்பும்.” “இப்பொழுது என்ன திரும்பிவிட்டது?” “ஓடப் பார்க்கிறது.”

“தப்புவது தவறா?”

”உனக்கல்ல தவறு.”

“வேறு யாருக்கு?”

”என் மகனுக்கு” என்ற இதயசந்திரனின் முகத்தில் கம்பீரச் சாயை படர்ந்தது. “கோழையின் மகன் என்ற அவப்பெயர் அவனுக்கு உதவாது” என்றான் இதய சந்திரன்.

“அப்படியானால் என்ன செய்ய உத்தேசம்?”

“பிரும்மேந்திர ஸ்வாமி வரும் வரையில் காத்திருக்க உத்தேசம்’ என்றான் அவன்.

“அவர் என்ன கொண்டு வரப் போகிறார் உங்களுக்கு?” என்று எரிந்து விழுந்தாள் அவள்.

ஆனால் பிரும்மேந்திர சுவாமி கொண்டுதான் வந்தார். ஆறு நாட்கள் கழித்து வந்தபோது வெறுங்கையுடன் வரவில்லை அவர். கொலாபாவை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தக்கூடிய விவரங்களுடன் வந்தார்.

Previous articleJala Deepam Part 3 Ch47 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch49 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here