Home Historical Novel Jala Deepam Part 3 Ch49 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch49 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

80
0
Jala Deepam part 3 Ch49 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch49 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch49 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 49 திரை வேண்டும்

Jala Deepam Part 3 Ch49 | Read Jala Deepam | TamilNovel.in

ஆறு நாட்கள் கழித்து, அதாவது ஏழாவது நாள் இரவின் இரண்டாம் ஜாமத்தில் தான் பிரும்மேந்திர சுவாமி கொலாபாவுக்கு வந்து சேர்ந்தார். வந்தபோது அவர் தமது வரவைப்பற்றி யாரும் அறியாத வண்ணம் மிக ரகசியமாகவே கொலாபாவை அடைந்தார். கொலாபாவுக்கு எதிரிலிருந்த ஆலிபாக்குக்கு மூடு வண்டி யொன்றில் இரவின் முதல் ஜாமத்திலேயே வந்தாரானாலும் ஊரடங்கி இரண்டாம் ஜாமம் நன்றாகத் துவங்கும் வரை காத்திருந்த பிறகே அவர் தம்முடன் வந்திருந்த இருவருடன் ஒரு படகில் ஏறிக்கொண்டார். அவர் படகுத் துறையிலிருந்த படகோட்டி ஒருவனைப் படகைத் தளையி லிருந்து அவிழ்க்கச் சொன்னதும் அவன் வியப்புடன் கேட்டான், “இந்த நேரத்திலா அக்கரை போகப் போகிறீர்கள்?” என்று.

“ஆம். படகுத் தளையை அவிழ்த்துக்கொள். படகைத் தள்ளி நீரில் இறக்கு” என்று உத்தரவிட்டார் சுவாமி.

படகுக்காரன் சிறிது யோசித்துவிட்டு, “சுவாமி! கடல் அலை பெரிதாகிக் கொண்டிருக்கிறதைக் கவனித்தீர்களா? இதில் சென்றால் படகு கவிழ்ந்தாலும் கவிழும்” என்றான். “கவிழாது. சொல்கிறபடி செய்” என்றார் சுவாமிகள்.

படகுக்காரன் அதற்குமேல் ஏதும் சொல்ல முடியாமல் படகுத் தளையை அவிழ்த்துப் படகை நீருக்குள் தள்ளினான். அதில் தாமும் ஏறி, தம்முடன் வந்த இருவரையும் அவர்கள் கொண்டு வந்திருந்த இரு பெட்டிகளையும் ஏற்றிக்கொண்ட சுவாமி, துடுப்புகளைத் தாமே இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு படகில் ஏறிவந்த படகோட்டியை நோக்கி, ”நீ தேவையில்லை, இந்தப் படகு உனக்குக் காலையில் வந்து சேரும்” என்று கூறிவிட்டுத் துடுப்புகளைத் துழாவிப் படகைச் செலுத்தி விட்டார். அலைகள் பெரிதாகிக்கொண்டிருந்ததைக் கண்டு, சுவாமியும் அவருடன் வந்தவர்களும் அக்கரைக்குப் போய்ச் சேரவேண்டுமே என்ற பீதியும் ஆரம்பத்தில் கொண்டான் அந்தப் படகோட்டி: ஆனால், அந்தப் பீதி வெகு விரைவில் அகன்றது அவன் மனத்திலிருந்து. நீண்ட நாள் படகோட்டப் பயின்ற மாலுமியைப் போல் அலை மோதலின் வகை பார்த்துப் படகை மிக லாகவமாக செலுத்துவதைக் கண்ட படகோட்டி பிரமிப்பின் உச்ச நிலையை அடைந்தான்.

இடையேயிருந்த முக்கால் மைல் கடல் நீரைத் தாண்டிக் கொலாபாவின் கரையை அடைந்த சுவாமிகள், முதலில் தம்முடன் வந்தவர்களைக் கரையில் இறங்கச் சொல்லி, பிறகு தாம் இறங்கிப் படகைக் கரையில் இழுத்துப் படகி லிருந்த இரு பெட்டிகளையும் இறக்கினார். பிறகு கரை யோரத்திலிருந்து சற்று எட்டியிருந்த குடிசைகளிலிருந்த இரண்டு பணியாட்களை அழைத்து வந்து பெட்டிகளை எடுத்துக்கொண்டு வரும்படி பணித்து, தம்முடன் வந்தவர் களுடன் முன்னே நடந்தார். கரையில் இறங்கியவர் நேரே தோர்லாவாடாவுக்குச் செல்லாமல் குலாபியின் கோயிலை நோக்கிச் சென்று, அந்தக் கோயிலுக்குப் பக்கத்திலிருந்த அர்ச்சகர் வீட்டை அடைந்து, அர்ச்சகரை வெளியி லிருந்தே அழைத்தார். வெளியே வந்த அர்ச்சகர் சுவாமியைக் கண்டதும், ”வரவேண்டும். வரவேண்டும். சுவாமி யைத்தான் எல்லோருமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியவர், சுவாமியின் ஒரு பார்வைக்குக் கட்டுப்பட்டு, “நான் வரட்டுமா தங்களுடன்?” என்று வினவினார்.

“எங்கு?” சுவாமியின் குரல் கண்டிப்புடன் வந்தது. “தோர்லாவாடாவுக்கு” என்றார் அர்ச்சகர்.

“அங்கு போக நான் இங்கு வருவானேன்?” என்று கேட்டார் சுவாமி கடுமையுடன்.

“சுவாமி தங்கவேண்டியது தோர்லாவாடாவில் தானே” என்று மென்று விழுங்கினார் அர்ச்சகர்.

“அப்படி ஏதாவது கண்டிப்பு இருக்கிறதா கொலாபாவில்?” “இல்லை. இருந்தாலும் அது அரண்மனை…”

“சன்னியாசிகள் அரண்மனையில்தான் தங்க வேண்டுமா?”

இந்தச் சமயத்தில் அர்ச்சகரும் சிறிது விஷமத்தைக் காட்டி, “தாங்கள் மற்ற சன்னியாசிகளைப்போல் அல்லவே?” என்றார் மெதுவாக.

“வேறு எப்படியோ?”

“சுவாமிக்கு அரசியல் சம்பந்தம் பொருளாதார சம்பந்தம் பலவும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.”

இதைக் கேட்ட பிரும்மேந்திர சுவாமி முதன் முதலாகப் புன்முறுவல் கொண்டார். “கோவில் அர்ச்சகருக்கும் அரசியலில் சம்பந்தமிருப்பதாகத் தெரிகிறது” என்று கூறவும் செய்த பிரும்மேந்திர சுவாமி, “இன்று நாம் அரண்மனையில் உறைவதாக உத்தேசமில்லை. நீங்கள் தயவு செய்தால், கோவிலுக்கு வரும் யாத்திரிகர்கள் விடுதியில் தங்க உத்தேசம்” என்று தெரிவித்தார்.

“அபசாரம்! அபசாரம்! சுவாமிக்கு அடிமை தயவு செய்வதாவது! இந்தக் கொலாபாவே சுவாமிக்குச் சொந்தம். இதோ சாவிகளை எடுத்து வந்துவிட்டேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்று பெரும் சாவிக்கொத்து ஒன்றுடன் வந்தார் அர்ச்சகர்.

பிறகு அவர்களை அழைத்துக்கொண்டு தமது விடுதிக்குப் பக்கத்தில் கோவிலில் பிரதான வாசலுக்கு எதிரேயிருந்த ஒரு பெரிய வீட்டைத் திறந்து உள்ளே சென்று தீபத்தைக் கொளுத்தினார். தீபம் கொளுத்தப்பட்டதும் தம்முடன் வந்த இருவருடன் உள்ளே நுழைந்த பிரும்மேந்திர சுவாமிகள் அர்ச்சகரைப் போகச் சொல்லி விட்டுத் தம்முடன் வந்தவர்களுக்கு உட்புறமிருந்த ஒரு பெரும் அறையைக் காட்டி, “இதில் நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள். இதோ நான் பெட்டிகளை அனுப்புகிறேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்று பணியாளை விளித்து, பெட்டிகளைக் கொண்டுபோய் வைக்குமாறு பணித்தார்.

பணியாள் உள்ளே சென்றதும் சுவாமிகள் அந்தப் பெரு விடுதியின் வாயிலிலேயே நீண்ட நேரம் உட்கார்ந் திருந்தார். உள்ளேயிருந்தவர்கள் வாயிற்கதவைச் சாத்தித் தாளிட்டதும் எழுந்த சுவாமி, தீர்க்காலோசனையுடன் குலாபியின் கோயிலை ஒருமுறை பிரதட்சணம் வந்து. விடுதியை அடைந்து, வாயில் தாழ்வரையில் படுத்துக் கொண்டார். சுவாமி படுத்தவுடன் நன்றாக நித்திரையில் ஆழ்ந்துவிட்டாரானாலும் ஒரே ஒரு ஜாமம் மட்டுமே தூங்கிவிட்டு நான்காம் ஜாம ஆரம்பத்திலேயே விழித்துக் கொண்டார். தாம் விழித்துக்கொண்டது மட்டுமின்றிப் பக்கத்து வீட்டிலிருந்த அர்ச்சகரையும் எழுப்பி, “என்னுடன் வந்திருக்கும் இருவரும் நீராட ஏற்பாடு செய்யவேண்டும்” என்றார்.

“இதற்குள்ளாகவா?” என்று கேட்டார் அர்ச்சகர். ”ஆம். பொழுது விடிவதற்குள் அவர்கள் நீராட வேண்டும்” என்று கூறிய சுவாமி ” அதற்குள் நானும் கடற்கரை வரை போய் வருகிறேன். நான் வரும்வரை வீட்டுக்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம்” என்று கண்டிப்பாக உத்தரவிட்டுக் கடற்கரையை நோக்கிச் சென்றார்.

கடலில் சுவாமி நன்றாக நீராடினார். அத்தனைக் காலையில் அத்தனைக் குளிரில் அவர் அலட்சியமாகக் கடலில் நீந்தியும் மூழ்கியும் நீராடுவதை இரண்டொரு முறை படகுகளில் மீன் பிடிக்கக் கிளம்பியவர்கள் கண்டு பிரமித்தனர். யார் பிரமிப்பையும் லட்சியம் செய்யாத பிரும்மேந்திர சுவாமி நன்றாக நீராடி வஸ்திரத்தைப் பிழிந்து உடுத்தி, துண்டொன்றினால் தலை, உடல் துவட்டி வெகு வேகமாக நடந்து கோவில் விடுதிக்கு வந்து சேர்ந்தார்.

தாம் வருவதற்குள் தம்முடன் வந்தவர்கள் நீராடிப் புத்தாடை புனைந்து விட்டதையும் கூடத்தில் தமது ஹோமத்துக்கான சாமக்கிரியைகளை வைத்திருப்பதையும் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தார். பிறகு தமது மடி சஞ்சியிலிருந்து காவி உடை எடுத்துப் புனைந்து, நெற்றி யில் சந்தனம் தீட்டி, கூடத்திலிருந்த விளக்கைத் தூண்டி விட்டார். பிறகு சந்தனத் தூள்களுக்குத் தீயிட்டு, மூட்டையிட்டு ஹோமம் வளர்த்தி பூஜையைத் துவங்கி னார். அவர் உதடுகள் மந்திரங்களை முணுமுணுத்தன. பிறகு வேத ரிக்குகள் ஸ்வரங்களுடன் உதிர்ந்தன, பெரிய குரலில். அக்னி, ஹவிஸை வாங்கிக்கொண்டு, பிரதட்சினமாக எரிந்தது.

அந்த நல்ல சகுனத்தைக் கண்டு சுவாமி மகிழ்ச்சி யடைந்தார். மெல்ல மெல்லப் பொழுதும் விடியலா யிற்று. குலாபி கோயிலின் உதய கால மணி டணார் டணார் என்று அடித்தது. குலாபிக்கும் அர்ச்சகர் பூஜை துவங்கிவிட்டதை நினைத்த பிரும்மேந்திர சுவாமி துர்க்கா மந்திரங்களைச் சொல்லி அக்னியில் ஹோமம் செய்தார். பிறகு தம்முடன் வந்த இருவரையும் அக்னிக்குத் தண்டனிடச் சொல்லி, இருவருக்கும் தமது பையிலிருந்து குங்குமப் பிரசாதமும், ஹோமத்திலிருந்து ஒரு சிறு மூட்டையை எடுத்து அதன் நுனியிலிருந்த அக்னியை அலட்சியமாகக் கையால் நெருடி, ஹோம சாம்பல் பிரசாதமும் அளித்தார். அதை அவர்கள் தரித்துக் கொண்டதும், “இனி நீங்கள் மறைவிலிருங்கள். என்னைத் தேடிப் பலர் வருவார்கள். அவர்கள் கண்களில் பட வேண்டாம்” என்றார்.

இருவரும் தலைவணங்கி அறைக்குள் சென்ற பின்னர், சுவாமி, ஹோமத்தை முடித்துக் கொண்டு குலாபி கோயிலுக்குச் சென்றார். அங்கு குலாபியின் முகோல்லாச அர்ச்சனை செய்யச் சொல்லி நீண்ட நேரம் தியானத்திலிருந்தார்.

இதற்குள் கொலாபாவில் பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டதால் எங்கும் மக்கள் அரவம் கேட்கத் தொடங்கியது. அதுவரை உதய காலப் பறவைகள் காடுகளில் கிளப்பிக் கொண்டிருந்த கிலகிலா சப்தங்களை, அலுவலுக்குச் செல்லும் சாதாரண மக்கள் அரவமும், கொலாபாவின் காவல் வீரர்களின் எச்சரிக்கை கோஷங்களும் மறைக்கத் துவங்கின. கடற்கரையில் படகுகள் செல்லும் சப்தமும், சிறிது அடங்கிவிட்ட அலைகள் தரையில் சர்ரென்று மோதும் இன்ப நாதமும் கேட்டன. பிரும்மேந்திர சுவாமி தியானத்திலிருந்து மீண்டு குலாபியின் பிரசாதத்துடன் கோயிலிலிருந்து வெளிப்போந்த போது அவரை இரு கோவில் காவலர் பார்த்து விட்டதால், அவர் வந்துவிட்ட விஷயம் வெகு துரிதமாகத் தோர்லாவாடாவுக்கு எட்டிவிட்டது.

சாதாரணமாக, விடியற்காலையில் எழுந்து நீராடி சந்தியை முடித்துப் பூஜையில் உட்காரும் பழக்கமுள்ள சித்பவன் பிராம்மணனான பாலாஜிக்கே அவர் வரவு முதலில் உணர்த்தப்பட்டதால், அதைப் பற்றிக் கனோஜிக்கும் அறிவிக்குமாறு பாலாஜி கட்டளையிட்டார். கட்டளையிட்டுத் தூதனை அனுப்பிய பிறகு பாலாஜி தீவிர சிந்தனையில் இறங்கினார். இத்தனை மர்மமாக இரவில் வந்து கோயில் விடுதியில் சுவாமி தங்கவேண்டிய அவசியமென்னவென்று பாலாஜி சிந்தித்துப் பார்த்தார்.

திடீரென பாலாஜியின் மனத்தில் ஒரு விஷயம் பளிச்சிட்டதால் அவர் சாம்பல் நிறக் கண்களில் புத்தொளி படர்ந்தது. ‘ஒருவேளை அப்படியிருக்குமா?’ என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்ட பாலாஜி, ‘ஒருக்காலும் இருக்காது. அது சாத்தியமில்லை’ என்று தாமே முடிவு கட்டிக் கொண்டார். ‘எப்படியும் சுவாமியைச் சந்தித்தால் விஷயம் தெரிந்துவிடுகிறது’ என்று தம்மைத் தாமே சாந்தப்படுத்திக் கொண்டாலும், அந்தச் சந்தேகம் திரும்பத் திரும்ப அவர் மனத்தில் எழுந்து சுழன்று கொண்டே இருந்தது. ‘சரி, கனோஜி வரட்டும். சுவாமியிடம் போவோம்” என்று தீர்மானித்துக் கொண்டார் பேஷ்வா.

ஆனால் கனோஜி கொஞ்சத்தில் வரவில்லை. முதல் நாளிரவு சற்று மதுபானத்தை அதிகமாகச் செலுத்தி யிருந்த கனோஜியைக் காவலரால் எழுப்ப முடியவில்லை. பாலாஜி விசுவநாத்தின் தூதைக் கொண்டு சென்றவனை முதலில் சந்தித்த கஹினா, ஸார்கேல் நன்றாக உறங்குகிறாரென்றும், எழுந்ததும் விஷயத்தைக் கூறுவதாகவும் சொல்லியனுப்பிவிட்டாள். கதிரவன் நன்றாக எழுந்த பின்பு எழுந்த கனோஜி, பாலாஜியின் செய்தியைக் கேட்டதும் சிறிது உணர்ச்சியைக் காட்டினார். பிரும்மேந்திர சுவாமி வந்து கோவில் விடுதியிலிருப்பதைக் கேட்டதும் ஒருமுறை மனத்துள் குலாபியை நினைத்தார். பிறகு எழுந்திருந்து நீராட்டத்துக்குச் சென்றார். நீராடி, புத்தாடை புனைந்து, சந்தனத் திலகமிட்டு, ஒரு பிச்சுவாவை மட்டும் இடைக் கச்சையில் செருகிக் கொண்டு பாலாஜியின் இருப்பிடம் சென்றார்.

அவருக்காகவே காத்திருந்த பாலாஜி உடனடியாகக் கிளம்பவே இருவரும் குலாபியின் கோவிலை நோக்கி நடந்து . கோவில் விடுதிக்கு வந்து, கூடத்தில் ஹோம குண்டத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுவாமியை வணங்கி எழுந்திருந்தனர். அவர்களை உட்காரச் சொல்லிக் கையால் சைகை செய்த சுவாமி அவர்களுக்கு ஹோமப் பிரசாதமும் குங்குமமும் அளித்தார். கடைசியாக பாலாஜியைப் பார்த்து, “இன்று நீங்கள் விசாரணையை வைத்துக் கொள்ளலாம்” என்றார்.

பாலாஜியின் சாம்பல் நிறக் கண்கள் சுவாமியை நோக்கின. ”விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்புத் தான் பாக்கி” என்றார் அவர்.

“எதையும் புனர் விசாரணை செய்ய நீதி சாஸ்திரம் இடங்கொடுக்கிறது.”

“அதற்கு முக்கிய புதுக் காரணங்கள் வேண்டும்” என்றார் பாலாஜி.

“இருக்கின்றன.”

“புது சாட்சியங்கள்?”

“இருக்கின்றன.”

பாலாஜியின் சாம்பல் நிறக் கண்களில் திடீரெனப் புத்தொளியொன்று தோன்றி மறைந்தது. ஆனால் கேள்வியொன்று சாதாரணக் குரலில் எழுந்தது. “திரை வேண்டுமா?” என்று கேட்டார் பேஷ்வா.

“வேண்டும்” என்று சர்வ சகஜமாகச் சொன்னார் சுவாமி.

Previous articleJala Deepam Part 3 Ch48 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch50 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here