Home Historical Novel Jala Deepam Part 3 Ch50 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch50 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

72
0
Jala Deepam part 3 Ch50 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch50 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch50 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 50 படிந்த கறை அழிவதில்லை

Jala Deepam Part 3 Ch50 | Read Jala Deepam | TamilNovel.in

பேஷ்வா பாலாஜி விசுவநாத்தின் விசித்திரக் கேள்வியும் பிரும்மேந்திர சுவாமியின் சகஜமான பதிலும் கனோஜி ஆங்கரேயைச் சிறிதும் அசர வைக்கவில்லை. அவர் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் விளைவிக்கவு மில்லை. “திரையிட்ட விசாரணையை எப்பொழுது துவங்கலாம்” என்று மட்டும் கேட்டார் கனோஜி ஆங்கரே தமது கரகரத்த குரலில்.

‘எப்பொழுது வேண்டுமானாலும் துவங்கலாம். நேரம் காலம் உங்களிருவர் சௌகரியத்தையும் பொறுத்தது” என்று சொன்னார் சுவாமி.

கனோஜியின் பெருவிழிகள் சுவாமியை ஒருமுறை உருண்டு பார்த்தன. “சாட்சிக்குப் போடவேண்டிய இரு ஆசனங்களும் பெருந்தோரணையில் இருக்கவேண்டியது தானே?’ என்று மீண்டும் வினவினார் கனோஜி, தமக்கும் விஷயம் புரிந்துவிட்டதென்பதை உணர்த்த.

பிரும்மேந்திர சுவாமியின் கண்களில் சற்று வியப்பின் சாயை படர்ந்தாலும் அவரளித்த பதிலில் அந்த வியப்பு ஒலிக்கவில்லை. ”இரண்டு ஆசனங்களுக்கும் சற்று வித்தியாசமிருந்தால் போதும்’ என்று மட்டும் தெரிவித்தார் சுவாமி.

அந்தச் சம்பாஷணையில் பாலாஜி விசுவநாத் கலந்து கொள்ளாவிட்டாலும், சுவாமி கொலாபாவில் வந்து இறங்கியது முதல் நடந்திருக்கக்கூடிய அனைத்தையும் கனோஜி அறிந்திருக்கிறாரென்பதை ஊகித்துக் கொண்டார். ஆனால் இதைப்பற்றி ஏதும் கேட்காமல் சுவாமியிடம் விடைபெற்றுக் கொண்டு கனோஜியை அழைத்துக்கொண்டு கிளம்பிய பாலாஜி வெளியே வந்ததும், “சுவாமி ஒரு பெண்ணை அழைத்து வந்திருப்பா ரென்பதை நான் ஊகித்தேன். நீ இரு ஆசனங்களைப் பற்றிக் குறிப்பிட்டது எனக்கு விந்தையாயிருக்கிறது” என்று கூறினார் தமது நண்பரைப் பார்த்து .

கனோஜி லேசாக நகைத்தார். “சுவாமி ரகசியமாகத் தான் இவர்களை அழைத்து வந்திருக்கிறார். ஆனால் இரு பெட்டிகளையும் அவரது சஞ்சியையும் கூடத்தின் மூலையில் வைத்தது தவறு. தவிர அவர் அழைத்து வந்திருப்பவர்களும் பெட்டியை அரைகுறையாகத் திறந்து வைத்திருக்கக் கூடாது” என்ற கனோஜியின் சொற்களிலும் ஏளன நகைப்பு ஒலித்தது.

பாலாஜி ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். அத்துடன், ”பெண்கள் யாரென்பது தெரியுமா உனக்கு?” என்று வினவவும் செய்தார்.

”ஒருவர் இன்னாரென்று தெரியும். அரசியல் சிக்கலை யும் இதயசந்திரன் விசாரணைக் குழப்பத்தையும் அவிழ்க்க அந்தப் பெண் தேவை. இன்னொருவர் இன்னாரென்று தெரியவில்லை” என்றார் கனோஜி.

“பணிப் பெண்ணாயிருக்கலாம்” என்று சுட்டிக் காட்டினார் பாலாஜி:

“இருக்காது. இரண்டு பெட்டிகளிலிருந்து எட்டிப் பார்த்த சேலைப் பகுதிகளில் சரிகை பட்டையாக இருந்தது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே ரகம், பணக்காரர் அணிவது” என்று திட்டவட்டமாகக் கூறினார் கனோஜி.

அதற்கு மேல் இருவரும் ஏதும் பேசாமல் மௌன மாகவே நடந்தனர். தோர்லாவாடாவை அடைந்ததும், “இன்று பிற்பகல் விசாரணை துவங்குவோம்” என்று அறிவித்துவிட்டு பாலாஜி தமது அறையை நோக்கி நடந்தார். கனோஜியும் தமது மனைவிமார் இருந்த பின்கட்டை நோக்கிச் சென்றார். அங்கிருந்த தமது பெரும் அறையொன்றை அடைந்ததும் காவலனொருவனை விளித்து ஜலதீபத்திலிருந்து மஞ்சுவையும் இதயசந்திரனையும் அழைத்துவர உத்தரவிட்டார். பிறகு இரண்டு காவலர் பின்தொடர கொலாபாவின் காவலைப் பார்வையிடச் சென்றார். காவலைப் பார்வையிடுவது, கடலில் நின்றிருக்கும் கப்பல்களைக் கவனிப்பது, குலாபியை தரிசனம் செய்வது முதலிய தினசரிக் கடமை களை முடித்த பின்பு தோர்லாவாடா வந்து, அங்கு ஏற்கனவே வந்துவிட்ட இதயசந்திரனுடனும் மஞ்சுவுடனும் உணவருந்தினார். அப்பொழுது தான் அறிவித்தார் அவர்களுக்கு அன்று பிற்பகல் விசாரணை தொடங்கப்படும் என்பதை.

இதயசந்திரன் விசாரணையைப் பற்றி எந்தக் கவலை யும் கொண்டதாகத் தெரியவில்லை. “அப்படியா?” என்று ஒரு சொல் மிக அலட்சியமாக அவன் வாயிலிருந்து வெளிவந்தது.

ஆனால் மஞ்சு மட்டும், தான் என்ன தான் மாலுமியா யிருந்தாலும், கப்பல் தலைவியாயிருந்தாலும், போரில் வல்லமையுடையவளாயிருந்தாலும், பெண்தான் என்பதை அந்தச் சமயத்தில் நிரூபித்தாள். அவள் முகத்தில் கவலைக் குறி தோன்றியது. “மீண்டும் விசாரணையா?” என்ற அவள் கேள்வியிலும் அந்தக் கவலை நன்றாக ஒலித்தது.

“ஆம், மஞ்சு” என்றார் கனோஜி.

“விசாரணைதான் முடிந்து விட்டதே” என்று கூறினாள் மஞ்சு. “மறுபடியும் விசாரணை நடக்கப் போகிறது.” “காரணம்?” ”புது சாட்சிகள் வந்திருக்கிறார்கள்.”

“புது சாட்சிகளா?”

”ஆம்.”

”யாரவர்கள்?”

“இரு பெண்கள்.”

“பெண்களா!”

“ஆம். உனது கணவனை ஏற்கனவே அறிந்தவர்களாயிருக்க வேண்டும்” என்று கூறிக் கடகடவென நகைத்தார் கனோஜி.

அந்தச் சிரிப்பு நரக வேதனையாயிருந்தது மஞ்சுவுக்கு. கணவனின் நிலை ஆபத்திலிருக்க, தந்தை, பெண்களைப் பற்றிப் பேசுவதும் நகைப்பதும் எரிச்சலைத் தந்தது அவளுக்கு. ”வயது ஏற ஏற உங்களுக்குப் பெண் பித்து அதிகமாகிறது” என்று சீறினாள் மஞ்சு.

“இந்த முறை எனக்காக வரவில்லை இந்தப் பெண்கள், உன் கணவனுக்காக வந்திருக்கிறார்கள்” என்று சுட்டிக் காட்டினார் கனோஜி.

“எங்கிருந்து வந்திருக்கிறார்கள்?” என்று மீண்டும் கேட்டாள் மஞ்சு கடுங்கோபத்துடன்.

“தெரியாது. ஆனால் அழைத்து வந்திருப்பார் சுவாமிகள்” என்று கூறிய கனோஜி, அதற்கும் மேல் ஏதும் கூறாமல் உணவை முடித்துக் கொண்டு, ”நாம் பிற்பகல் சந்திப்போம் விசாரணை மண்டபத்தில்” என்று கூறி சயன அறையை நோக்கிச் சென்றுவிட்டார்.

மஞ்சு உணவருந்தித் தனது தட்டில் கைகழுவிய பிறகும் அந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தாள். புதிதாக வந்த பெண்களைப் பற்றியோ, அவர்கள் வருகைக்கும் இதயசந்திரனுக்கும் தந்தை தொடர்பு ஏற்படுத்திப் பேசியதைப் பற்றியோ அவள் கவலைப்பட வில்லை. விசாரணையில் முடிவு ஏது ஆகுமோ என்ன ஆகுமோ என்று மட்டும் திகில் பட்டாள் அவள். பாலாஜி விசுவநாத் நெறி தவறாதவர் நியாயம் செலுத்துவதில் தயாதாட்சண்யம் பார்க்காதவர் என்பதை மஞ்சு உணர்ந் திருந்ததால் இதயசந்திரனின் குற்றங்களுக்கு ஏதாவது மாற்று கண்டுபிடிக்கப்பட்டாலொழிய அவனுக்குத் தண்டனை நிச்சயமென்பது அவளுக்குத் தெரிந்தது. தவிர, இதயசந்திரனும் கள்ளனைப்போல் தப்பி ஓட ஒருக்காலும் முயலமாட்டானென்பதையும் அவள் உணர்ந்திருந்ததால் பெரும் வேதனை அவள் இதயத்தைச் சூழ்ந்து கிடந்தது. எப்படியும் விசாரணையில் முடிவு தெரிந்துவிடும் என்ற எண்ணத்தில் அவள் பகலின் முதல் பகுதியைக் கழித்தாள். ஆனால் ஓர் ஆறுதலிருந்தது அவளுக்கு. தனது தந்தை அடியோடு கவலையொழிந்திருந்ததற்கும், பழையபடி வேடிக்கையாகக்கூடப் பேசத் தொடங்கி விட்டதற்கும் தகுந்த காரணமிருக்க வேண்டும் என்று நினைத்தாள்.

ஆனால், அவள் நினைத்தது சரியல்ல என்பதை கனோஜியின் முகம், அவர் தமது அந்தரங்க அறையை அடைந்ததும் நிரூபித்தது. அதுவரை முகத்தின் மீதிருந்த அசட்டையெனும் சாயை அவர் அறைக்குள் நுழைந்ததும் அகன்றது. கவலை முகத்தைப் பரிபூரணமாக மூடிக் கொண்டது. அறை நடுவிலிருந்த மஞ்சத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் ஏதோ யோசித்தார் அவர். பிறகு திடீரென எழுந்து தோர்லாவாடாவிலிருந்து கிளம்பி மேற்கு நோக்கி நடந்து, சற்று எட்ட பந்தய ஆடுகளும் கோழிகளு மிருந்த கொட்டகைக்குப் பக்கத்திலிருந்த ஒரு விடுதிக்குள் நுழைந்தார். அங்கு உணவருந்திக் கொண்டிருந்த நிம்கர் அவரைக் கண்டதும் சரேலென்று எழுந்து நின்றான்.

“சீக்கிரம் உணவருந்து” என்று கூறிய கனோஜி அவன் உணவருந்தி முடிக்கும் வரையில் அந்த அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தார். அவன் உணவருந்தி முடித்தபின், ”உடைகளை அணிந்துகொள்” என்று உத்தரவிட்டார்.

பதிலேதும் சொல்லாமல் நிம்கர் உடைகளை அணிந்து கொண்ட பின்பு தமது பின்னால் அவனை வரும்படி கூறி கனோஜி முன்னே நடந்தார். கொலாபாவின் மலைப் பாறைகளில் சற்றுச் சுற்று வழியாகவே நடந்த கனோஜி, அவனை அழைத்துக்கொண்டு கொலாபாவின் கிழக்குப் பகுதியான நீர்க்கரையை அடைந்தபின், “நிம்கர்! படகிலேறி அலிபாக் சென்று அங்கிருந்து ஒரு புரவியை எடுத்துக்கொண்டு பன்ஹாலா சென்றுவிடு” என்று கூறினார்.

நிம்கர் அவர் உத்தரவுக்கும் அவசரத்துக்கும் காரணம் தெரியாமல் விழித்தான். பிறகு சினத்துடன் கேட்டான், “திருடன் போல் நான் ஏன் ஓடவேண்டும்?” என்று.

கனோஜி, அவன் சொற்களின் உஷ்ணத்தைச் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. “நான் கொள்ளைக்காரன். நீ எனக்கு வேவு பார்ப்பவன். என் தூதன். கொள்ளைக்காரன் தூதன் கொள்ளைக்காரனாகவோ திருடனாகவோ இருப்பதில் வியப்பில்லை” என்ற கனோஜி, “கொலாபாவி லிருந்து நீ செல்வது உனக்கு நன்மையளிக்கும்” என்று சொன்னார்.

நிம்கரின் முகம் இன்னும் பயங்கரமாக மாறியது. “நான் மறுத்தால்?” என்று வினவினான்.

”கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுவாய்,” என்று கூறிய கனோஜியின் குரலில் கடுமை சற்று தெரிந்தது.

“யாரைக் கொலை செய்தேன் நான்?’ என்று கேட்டான் நிம்கர்.

“தஞ்சை அரண்மனையில் வீரனொருவனைக் கட்டாரியால் குத்திக் கொன்றிருக்கிறாய்.”

”அது என் தவறல்ல.”

“வேறு யார் தவறு?”

”மகாராஷ்டிரத்தின் தவறு. குழந்தையைத் தெரி யாமல் கொண்டு வரும்படி உத்தரவு வந்தது. குழந்தையை எடுத்துக்கொண்டு கிளம்பிய போது அந்த வீரன் தடுத்தான். குரல் கொடுத்துக் காவலரை அழைக்க முயன்றான். அதனால் கட்டாரியால் குத்தினேன். இல்லையேல் விஷயம் அம்பலமாகி இருக்கும். மகாராஷ்டிரத்தின் ரகசிய வாரிசு வந்து சேர்ந்திருக்காது” என்று மிகுந்த உஷ்ணத்துடன் கூறினான் நிம்கர்.

”நீ குத்தியவனுக்குத் தற்காப்புக்கு சமயமிருந்ததா?” என்று கேட்டார் ஸார்கேல்.

“இல்லை. சூழ்நிலை – அதற்கு இடங்கொடுக்க வில்லை .’
“இடங்கொடுக்கவில்லை என்பதற்கு யார் சாட்சி?”

இந்தக் கேள்வியைக் கேட்டுத் திகைத்தான் நிம்கர். கடைசியில், “ஆண்டவன் சாட்சி’ என்று கூறினான்.

“ஆண்டவன் சாட்சி சொல்ல இப்பொழுது வரமாட் டான். மனிதப்பிறவியில் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டார்.

நிம்கரின் முகத்தில் முதன் முதலாகக் கவலை தெரிந்தது. அந்தப் பழைய கதையை இப்பொழுது யார் கிளறப் போகிறார்கள்?” என்று கேட்டான்.

கனோஜி அவனை உற்றுப்பார்த்தார் சில வினாடிகள். பிறகு சொன்னார். ”நிம்கர்! மகாராஷ்டிரத்தில் சிறந்த வீரர்களில் நீ ஒருவன். மகாராஷ்டிர அரச குலத்துக்குப் பெரும் சேவை செய்திருக்கிறாய். ஆனால் குத்திக் கொலை செய்வது யார் செய்தாலும் குற்றம். தேசபக்தன் செய் தாலும் குற்றம். வாழ்க்கையில் எப்பொழுதோ ஏற்படும் மாசு எப்பொழுதோ படிந்த கறை நம்மை விடுவதில்லை. எப்படியும் தொடர்ந்து வந்து ஒரு நாள் பிடித்துக் கொள்கிறது. அந்த நாள் இன்று உனக்கு. மகாராஷ்டிரத்துக்கும், ராணி தாராபாய்க்கும் நீ செய்த சேவையை முன்னிட்டு உன்னைக் காப்பாற்றுகிறேன் நான். இப்பொழுது போய்விடு. பிறகு சந்திப்போம்’ என்று மேலும் தொடர்ந்து சொன்னார் கனோஜி. “பேஷ்வாவை உனக்குத் தெரியும். நீதி தவறாதவர். உன் குற்றம் அவருக்குத் தெரியாது. தெரிந்திருந்தாலும் நம்பவில்லை யென்பதும் அவர் உன்னிடம் காட்டும் பரிவிலிருந்து தெரிகிறது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீயென்ன, அவர் மகனாயிருந்தாலும் மரண தண்டனை விதிப்பார்.”

நீண்ட யோசனைக்குப் பிறகு கனத்த மனத்துடனும் துயரம் தோய்ந்த முகத்துடனும் படகில் ஏறிச் சென்றான் நிம்கர். கனோஜி திரும்ப தோர்லாவாடாவை நோக்கி நடந்தார். அவர் மனத்திலிருந்த பெரும் சுமை இறங்கி யிருந்ததை அவர் முகம் காட்டியது. அவர் நடையும் அலட்சியமாக இருந்தது. பிற்பகலில் பாலாஜி மீண்டும் விசாரணை துவங்கிய போது அந்த அவட்சியத்துடனேயே நீதிமண்டபத்தில் நுழைந்தார் கனோஜி.

Previous articleJala Deepam Part 3 Ch49 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch51 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here