Home Historical Novel Jala Deepam Part 3 Ch51 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch51 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

66
0
Jala Deepam part 3 Ch51 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch51 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch51 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 51 மறு விசாரணை: மாதரசிகள் இருவர்!

Jala Deepam Part 3 Ch51 | Read Jala Deepam | TamilNovel.in

கனோஜி ஆங்கரே விசாரணை மண்டபத்துக்குள் நுழையும்போது பிற்பகல் பெரிதும் ஏறிவிட்டதால் விசாரணைக்குச் சகல ஏற்பாடுகளும் முடிந்து பேஷ்வாவும் விசாரணையைத் தொடங்கத் தயாராகவே இருந்தார். பேஷ்வா மேடை மீதிருந்த நீதி ஸ்தானத்தில் அமர்ந்திருந் ததையும், அவருக்கெதிரே போடப்பட்டிருந்த வியாக்கிரா சனத்தில் ஜபமணி மாலைகளுடனும், காஷாயத்துடனும் மிகக் கம்பீரமாக பிரும்மேந்திர சுவாமியும் உட்கார்ந்திருந்ததையும், அந்த நீதி மண்டபத்தின் கால் பாகத்துக்குத் திரை போடப்பட்டிருந்ததையும் கண்ட மகாராஷ்டிர ஸார்கேல், தாம் மட்டுமே கால தாமதம் கழித்து வந்திருப்பதை உணர்ந்து கொண்டார். ஒரு முறை பேஷ்வாவையும், மற்றொரு முறை பேஷ்வாவின் இடது பக்கத்தில் துவங்கி நீதி மண்டபம் நெடுகிலும் சென்ற திரையையும் உற்றுப் பார்த்த கனோஜி ஆங்கரே, பேஷ்வா வுக்கும் சுவாமிக்கும் தலை வணங்கிச் சற்று எட்ட இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். அப்படி அமர்ந்து கொண்டவர் அந்த நீதி மண்டபத்தின் வாயிற்படிக்கருகி லிருந்த இரு காவலரைத் தவிர வேறு காவலரே இல்லாத தையும், விசாரணை நடவடிக்கைகளைப் பற்றிக் குறிப் பெடுக்க வேண்டிய சிட்னிஸும் மேடையில் இல்லாத தையும், பேஷ்வாவே கையில் எழுதுகோலுடனும் எதிரே மேஜைப் பெட்டியுடனும் உட்கார்ந்திருந்ததையும் கவனித்து, விசாரணை மிக ரகசியமாகவே நடக்கு மென்பதை உணர்ந்தார். அவர் இத்தகைய சிந்தனைகளில் மூழ்கியிருந்தபோது இதயசந்திரனும் நுழைந்தான் அந்த மண்டபத்திற்குள், மஞ்சு பின்தொடர. கனோஜி யின் புருவங்கள் மஞ்சுவைக் கண்டதும் சற்று மேலேறி இறங்கின. மஞ்சுவுக்கும் இந்த விசாரணைக்கும் என்ன சம்பந்தமிருக்க முடியும் என்பதை ஊகிக்க முடியாததால் பேஷ்வாவை நோக்கிச் கேட்டார்: “இவள் இந்த விசாரணைக்கு அவசியமா?” என்று.

“ஆம்” என்றார் பேஷ்வா எந்த உணர்ச்சியையும் குரலிலோ முகத்திலோ காட்டாமல்.

“இதயசந்திரனின் வழக்குக்கும் என் மகளுக்கும் சம்பந்தமிருப்பதாக எனக்கு அறிவிக்கப்படவில்லையே இதுவரையில்” என்றார் கனோஜி. . “எனக்கும் இது முன்னதாகத் தெரியாது” என்று குறிப்பிட்ட பேஷ்வா, ”சற்றுப் பொறுத்தால் ஸார்கேலுக்கும் இந்த வழக்குக்கும்கூடச் சம்பந்தமிருப்பது தெரியும்” என்று ஒரு வெடிகுண்டை வீசினார். மேற் கொண்டு ஏதும் பேசாமல் சம்பிரதாய முறையில் விசாரணையைத் தொடங்கி, “இதயசந்திரா! படைத் தலைவரும் ஷாஹு கார்யதுர்ந்தரருமான கனோஜி ஆங்கரே லோஹ்காட் வரும்படி அனுப்பிய உத்தரவுக்குக் கீழ்ப்படியாதது, கல்யாண் நகர் உன் பாதுகாப்பில் இருக்கையில் சுய காரியத்தை முன்னிட்டு அங்கிருந்து ஓடி விட்டது. கடமையைச் செய்ய வந்த கனோஜியின் தூதன் நிம்கரைக் கைது செய்து கடத்திச் சென்றது, ஆகிய மூன்று குற்றங்கள் உன்மீது சாற்றப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு என்ன சமாதானம் கூறுகிறாய்?” என்று வினவினார்.

இதயசந்திரன் நின்ற நிலையில் கண்களைக் கம்பீர மாக உயர்த்தி பேஷ்வாவை நோக்கினான். “பேஷ்வாஜி! ஒரு முறை சமாதானம் சொல்லிவிட்டேன். இது புனர் விசாரணையைப்போல் தெரிவதால் மீண்டும் சொல்கிறேன். என்னை லோஹ்காட்டுக்கு அழைத்தபோது கனோஜி ஆங்கரே ராணி தாராபாயின் ஸார்கேல். ஆகவே ஷாஹு கார்யதுரந்தரரோ, சத்ரபதி ஷாஹுவின் பேஷ்வாவோ அதுபற்றி என்னை விசாரிக்க முடியாது. இந்தக் கொலாபாவில் குலாபியின் சந்நிதியில் ஸார்கேலும் பேஷ்வாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு நிகழ்ந் துள்ள விஷயங்கள் தான் என்னைக் கட்டுப்படுத்தும். ஆகவே, கல்யாண் நகரப் பாதுகாப்பைக் கைவிட்டுப் போனது என்னைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், நான் மீண்டும் எண்ணிப் பார்த்ததில் அதுவும் என்னைக் கட்டுப் படுத்தாது என்று தோன்றுகிறது” என்ற சொற்கள் தெளிவாகவும் கணீரென்றும் உதிர்ந்தன அவன் உதடுகளிலிருந்து. பேஷ்வாவின் சாம்பல் நிறக் கண்கள் மெல்ல மேஜைப் பெட்டியிலிருந்து எழுந்து இதயசந்திரனை நோக்கின. “அது புது வாதமா?” என்று அவர் உதடுகள் மெல்ல வினவின.

இதயசந்திரன் பேஷ்வாவை நோக்கிச் சொன்னான்: ”பேஷ்வாஜி! இந்த நீதி மண்டபத்துக்கு நான் வாதம் செய்ய வரவில்லை. சிந்தனையில் எழும் உண்மைகளைக் கூறவந்தேன். கனோஜி அவர்கள் போர் முடிந்த பின்பு கல்யாண் நகரைக் காக்கும்படி எனக்கு உத்தரவிட்டார், அவருக்கு அடுத்த தலைவன் நான் என்பதால். அது சரியானால் என்னுடைய உபதலைவனும், மகாவீரனும், போர்களைக் கண்டவனுமான சுகாஜியிடம் நான் பொறுப்பை ஒப்படைத்தது எப்படித் தவறாகும்?” என்று .

பேஷ்வாவின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. அவன் சொன்னதை அப்படியே எழுதிக் கொண்டார் மயிலிறகுப் பேனாவால். பிறகு சொன்னார்: “இதயசந்திரா! பொறுப்பில் தராதரம் உண்டு. எந்தப் பொறுப்பை யாரிடம் யார் ஒப்படைக்கலாம் என்ற நியதியும் உண்டு. கனோஜி உன்னிடம் கல்யாண் நகர் பாதுகாப்பை ஒப்படைத்து அதை நீ உன் உபதலைவனிடம் ஒப்படைத்து, அவனுக்கும் ஏதோ முக்கிய அலுவலிருந்து அவன் தனக்குக் கீழிருப்பவனிடம் அந்த அலுவலை ஒப்படைத்து, இப்படி எல்லோருக்கும் அலுவல்களிருந்து, கடமையை அடுத்தவனிடம் ஒப்படைப்பதானால் அரசாங்கம் நடக்காது, ராணுவ நிர்வாகம் நடக்காது. ஆகையால் உன் வாதம் நிராகரிக்கப்பட்டது” என்று. “அடுத்து, நிம்கரைக் கடத்திச் சென்றதைப்பற்றி உன் கருத்து என்னவோ?” என்றும் வினவினார் பேஷ்வா.

“கடமையைச் செய்தேன், என் நாட்டில் இருக்கும் ஒரு ராணிக்கு. கடமையைச் செய்தேன், தனயனை இழந்து தவிக்கும் ஒரு தாய்க்கு. கடமையைச் செய்தேன், நான் வாளின்மேல் இட்ட ஆணைக்கு’ என்ற இதயசந்திரன் நன்றாக நிமிர்ந்து மிகக் கம்பீரத்துடன் நின்றான். அவன் சொற்கள் அவன் கடமை உணர்ச்சியை ஆதரிப்பனபோல நீதி மண்டபத்தின் பெரும் சுவர்களில் தாக்கி எதிரொலி செய்தன.

பேஷ்வாவின் கண்கள் பிரும்மேந்திர சுவாமியை நோக்கின. பிரும்மேந்திர சுவாமி தலையை அசைத்தார். பேஷ்வா மீண்டும் இதயசந்திரனை நோக்கி, “இதய சந்திரா! நீ மகாராஷ்டிரத்துக்குப் பெரும் சேவை செய்திருக்கிறாய். அந்தச் சேவையை உத்தேசித்து உன்னை மன்னித்து விடுதலை செய்தால் நீ மீண்டும் தமிழகம் சென்றுவிடுகிறாயா?” என்று வினவினார் மெதுவான குரலில்.

இதயசந்திரனின் பதில் திட்டமாக இருந்தது. “மாட்டேன் பேஷ்வா!’ என்றான் அவன்.

“ஏன்? இங்கென்ன வேலை உனக்கு? மனைவி கிடைத் திருக்கிறாள், பெரும் புகழ் கிடைத்திருக்கிறது. இணையற்ற கடல் வீரனாக. இரண்டையும் ஏற்றுத் திரும்ப உனக்குக் கசக்கிறதா?” என்று கேட்டார் பேஷ்வா.

இதயசந்திரன் சிறிது சிந்தித்தான். பிறகு திரும்பித் தன் பின்னாலிருந்த மஞ்சுவைக் கையைப் பிடித்துத் தன்னருகில் அழைத்து நிறுத்திக்கொண்டான். பிறகு மிக உறுதியும் நிதானமும் நிறைந்த குரலில் பேசத் தொடங்கி னான். “பேஷ்வாஜி! இதோ என் மனைவி மஞ்சு. தாயற்றவள், தகப்பனை அறியாதவள், என்னையே கதியெனக் கொண்டவள். இவளுக்காக என் உயிரைக் கொடுப்பேன். நான் மகாராஷ்டிரத்துக்குச் செய்த சேவைக்கு இதைவிடச் சிறந்த பரிசு கிடைக்காது. இவள் என் இதயம். அடுத்து அதோ கனோஜி ஆங்கரே இருக்கிறார், அவர் இல்லையேல் நான் மாலுமியல்ல; உபதளபதியுமல்ல. புகழ் எனக்குக் கிட்டியிருக்காது. இதோ பிரும்மேந்திர சுவாமி. இவர் என்னைக் கடற் கரையிலிருந்து அன்று கண்டெடுத்திருக்காவிட்டால் நான் அன்றே விண்ணுலகம் போயிருப்பேன். இன்று இந்த விசாரணைக்கு அவசியமிருக்காது. பிரும்மேந்திர சுவாமியைப் போன்ற மகான்களின் உறவு, கனோஜியைப் போன்ற இணையில்லா வீரர்களின் அன்பு இதோ என் பக்கத்திலிருக்கும் மலரின் காதல், இவற்றைவிட மனிதன் வேறு எதையும் விரும்ப முடியாது. ஆனால் மனைவி, புகழ் இரண்டையும் விடப் பெரிது ஒன்றிருக்கிறது வீரன் வாழ்வில். அதுதான் அவன் இடும் ஆணை. அந்த ஆணை, ஆணை தரும் கடமை, இவற்றிலிருந்து அவன் மீள முடியாது. மகாராஷ்டிரத்தின் ரகசிய வாரிசைக் கண்டு பிடித்துத் தருவதாக ஆணையிட்டேன் ராஜாராம் மகா ராஜாவின் ரகசிய ராணியிடம். இல்லையேல் வாரிசைக் கொண்டு சென்றவனைக் கொன்றுவிடுவதாக ஆணை யிட்டேன். அதுவும் முடியாவிட்டால் நான் மாண்டு விடுவேன் அந்த முயற்சியில் என்று கூறினேன். இந்த நிலை யிலிருந்து நான் மாறமுடியாது. வாளின்மேல் இட்ட ஆணையைக் கைவிட்டவன் என்று தமிழ்நாடு தூற்ற நான் வாழமுடியாது. ஆகவே, நீங்கள் என்னை வலுக்கட்டாய மாகத் தமிழ்நாட்டில் கொண்டுபோய் விட்டாலும் திரும்பி வருவேன், வாரிசைக் கண்டுபிடிக்க, அல்லது நிம்கரைக் கண்டுபிடிக்க, இதில் சந்தேகமே வேண்டாம்…”

இந்த இடத்தில் இதயசந்திரன் சற்றுப் பேச்சை நிறுத்தினான். மஞ்சுவின் கை அவன் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டது. பேஷ்வா அவர்களிருவரையும் பார்த்தார் ஒரு விநாடி. பிறகு கேட்டார்: “இதயசந்திரா! நீ தேடி வந்த மகாராஷ்டிர வாரிசுக்கு ஆபத்து ஏதுமில்லை. தகுந்த இடத்தில் நலமுடன் இருப்பதை அறிந்தால் சென்று விடுவாயா சொந்த ஊருக்கு?” என்று.

“அதற்குத் தகுந்த ருசு வேண்டும் பேஷ்வா. ஒருமுறை நான் நேரில் வாரிசைப் பார்க்கவும் வேண்டும்” என்றான் இதயசந்திரன்.

“இதற்கு முன்னால் அந்த வாரிசைப் பார்த்திருக் கிறாயா?” என்று வினவினார் பேஷ்வா .

“இல்லை. வாரிசும் ராணியும் மிக ரகசியமாக உறைந்தார்கள் தஞ்சையில். இந்த வாரிசைத் தேடும் பணி கிடைக்காவிட்டால் ராணியையும் நான் பார்த்திருக்க மாட்டேன்” என்றான் இதயசந்திரன்.

“ஆகையால் நீ வாரிசைப் பார்த்துப் பயனில்லை. ஆகவே, ருசுக்களைக் கொண்டு திருப்தியடைந்தால் என்ன?” என்று மீண்டும் வினவினார் பேஷ்வா .

இதயசந்திரன் ஒரு விநாடி யோசித்துவிட்டுக் கூறினான்: ”ருசுவைப் பொறுத்தது.”

பேஷ்வா பிரும்மேந்திர சுவாமியை நோக்கி, “சுவாமி தான் தமிழனுக்குச் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

பிரும்மேந்திர சுவாமி தமிழனை நோக்கி ஏதும் சொல்லவில்லை. நீதி மண்டபத்தின் கூரையை நோக்கினார். அங்கிருந்த இந்து தெய்வங்களின் வண்ணச் சித்திரங்களைப் பார்த்தார். பிறகு, “பரசுராமன் சித்தம். சொல்கிறேன் நானறிந்த கதையை” என்று துவங்கிக் கூறலானார்.

”மகாராஷ்டிர அரியணையில் ஷாஹு திடமாக உட்கார முடியுமா என்று இருந்த காலம். ராஜாராமின் ராணி தாராபாய் சிறைப்பட்டாலும் அவருடைய சகாவான கனோஜி, கடல் பகுதியை அவள் பெயரால் ஆண்டு வந்த காலம். அந்தக் காலத்தில் கொங்கணியின் தரையில் விழுந்தான் இந்த வாலிபன், பலத்த காயங்களுடன் நிர்க்கதியாக. வலம்புரிச் சங்குகள் பொறுக்கக் கடலுக்குச் சென்ற என் காலடியில் கொங்கணி மாதா இவனைக் கிடத்தினாள். இவனை நானும் பானுதேவியும் கூடாரத்துக்குக் கொண்டு சென்று சிகிச்சை செய்தோம். இவன் கொண்டு வந்திருந்த வாளும், சத்ரபதி சிவாஜியின் புலிநக ஆபரணத்திலொன்றும் கடற்கரையிலிருந்து கிடைத்தன. ஆகவே, இவன் சாதாரணமாகக் கொங்கணிக்கு வந்தவனல்ல என்பதை முடிவு செய்தேன். பிறகு, இவன் பானுதேவியிடம் தனது கதையைக் கூறினான். அதை ஒட்டுக் கேட்ட கனோஜி என்னிடம் கூறினார். பிறகு விசாரித்ததில் இவன் மகாராஷ்டிரம் வந்த காரணம் தெரிந்தது. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. மகாராஷ்டிரம் பிளவுபட்டிருந்த காலத்தில் மீண்டும் ஒரு வாரிசு தோன்றினால் அது மீண்டும் மொகலாயர் வசமோ, ஸித்திகள் வசமோ அல்லது போர்ச்சுக்கீஸியர் வசமோ சிக்கிவிடலாமென்று அஞ்சி னேன். ஆகவே, கனோஜியிடம் இவனை ஒப்படைத்து விட்டு, இந்த வாரிசை எப்படியாவது கண்டுபிடித்துவிடுவ தென்று முடிவு செய்தேன். ஸாத்ஸித்தியிடம் இவன் குறிப்பிட்டதுபோல் ஒருவன் இருக்கிறானென்பதை எனது ஒற்றர்களால் அறிந்து அவனை வரவழைத்தேன் பரசுராமபுரத்துக்கு.

”அந்த வாரிசைதான் அஞ்சன்வேல் அழைத்து வந்த தாகவும் அங்கு ஸாத்ஸித்தி தன்னைத் தங்கும்படி கட்டளையிட்டதால் வாரிசைத் தன் மகனென்று சொல்லிச் சில நாட்கள் வைத்திருந்து பிறகு இரண்டு வீரர்களுடன் ராணி தாராபாயிடம் அனுப்பிவிட்டதாகவும் சொன்னான் நிம்கர். பிறகு அவன் ஸாத்ஸித்தியின் மதிப்புக்குப் பாத்திரமாக அங்கேயே தங்கிவிட்டதாகவும் பிறகு கனோஜியின் ஒற்றனாகிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். பிறகு வாரிசைத் தேட எனது சீடர்களை அனுப்பினேன். அந்தச் சிறுவன், பன்ஹாலாவில் ராணி தாராபாயிடம் சிறையிருப்பதாக அறிந்தேன். ஆகவே ராணி தாராபாய்க் குக் கடிதம் அனுப்பி அந்தச் சிறுவனுக்கு ஏதும் ஆபத்து வரக்கூடாதென்று எச்சரித்தேன். இந்த நிலையில் தமிழன் பிரதாபம் மகாராஷ்டிரத்தில் ஓங்கிக்கொண்டிருந்தது. ராணி தாராபாயும் ஷாஹுவிடம் தோற்று ஸதாரா கொண்டுவரப்பட்டாள். பிறகுதான் நான் ஸதாரா வந்து அப்பொழுது பேஷ்வா பதவிக்கு வராமல் வெறும் கணக்காயராயிருந்த பாலாஜியிடம் விஷயத்தைக் கூறினேன். பாலாஜி ஷாஹுவிடம் ரகசியத்தைக் கூறித் தஞ்சைக்குச் செய்தி அனுப்பி அந்த ரகசிய ராணியை வரவழைத்தார். தனயனுடன் சேர்ந்த அந்த ராணியிடம் மகாராஷ்டிர அரியணைக்குப் போட்டியிடுவதில்லை யென்ற பிரமாணத்தை வாங்கிக்கொண்டார் ஷாஹு. அதுமட்டுமின்றி, அவள் ராணியென்பதை யாருக்கும் சொல்லக்கூடாதென்றும் சாதாரண மகாராஷ்டிர பிரபு வம்ச விதவையாக தனயனுடன் பன்ஹாலாவில் உறைய வேண்டுமென்றும் பவானியின் பெயரால் சத்தியம் வாங்கிக் கொண்டு, தாயையும் மகனையும் பன்ஹாலாவில் இருக்க ஏற்பாடு செய்தார். தாயும் மகனும் இப்பொழுது நலம். தாய் மகனுடன் சேர்ந்துவிட்டதால் இனி இங்கு இதய சந்திரனுக்கு வேலையில்லை.”பிரும்மேந்திர சுவாமி இந்த நீண்ட கதையைச் சொல்லி ஆசனத்தில் சாய்ந்து, “பரசுராம்! பகவான்!” என்று ஆசுவாசப் பெருமூச்சும் விட்டார்.

இதயசந்திரனின் நிலைமை மிக சங்கடத்தில் இருந்தது. பிரும்மேந்திர சுவாமியின் . சாட்சியத்தை, கதையை, எதிர்த்து எதுவும் சொல்லத் திராணியில்லாததால் மெல்லக் கேட்டான்: ”அந்தத் தாயை நான் பார்க்கலாமா?” என்று.

பேஷ்வா பதிலேதும் சொல்லாமல் கையைத் தட்டினார். இரு காவலர் உள்ளே நுழைந்ததும் திரையை அகற்றக் கட்டளையிட்டார். திரை அகல அங்கு பெரும் ஆசனமொன்றில் உட்கார்ந்திருந்த தஞ்சை ராணியைக் கண்ட இதயசந்திரன் பெரும் பிரமிப்புக்குள்ளானான். ஆனால், அவன் பிரமிப்பைவிட அதிகப் பிரமிப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது கனோஜி ஆங்கரேக்கு. ராணியின் ஆசனத்திலிருந்து இரண்டடி தள்ளியிருந்த ஆசனத்தில் உட்கார்ந்திருந்த மற்றொரு ஸ்திரீயைப் பார்த்த கனோஜி யின் பெருவிழிகள் பேரதிர்ச்சியுற்று அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன. எதற்கும் அஞ்சாத கனோஜியின் இதயத்திலும் ஏதோ அச்சம் புகுந்துவிட்டதை நீதி மண்டபத்தில் இருந்த அனைவருமே உணர்ந்தனர். அந்த அச்சத்துடன் அவர் முகத்தில் சினம் துளிர்த்துப் பரவுவதும் அனைவருக்கும் தெரிந்தது.

Previous articleJala Deepam Part 3 Ch50 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch52 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here