Home Historical Novel Jala Deepam Part 3 Ch52 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch52 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

63
0
Jala Deepam part 3 Ch52 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch52 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch52 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 52 பாலாஜியின் தீர்ப்பு! கனோஜியின் தவிப்பு!

Jala Deepam Part 3 Ch52 | Read Jala Deepam | TamilNovel.in

திரைக்குப் பின்னால் தங்கச் சிங்கப் பிடிகள் கொண்ட பெரிய ஆசனமொன்றில் அமர்ந்திருந்த தஞ்சை ரகசிய ராணியைக் கண்டதும் இதயசந்திரன் சித்தம், பிரமிப்பு, மதிப்பு, அனுதாபம் ஆகிய பலவகை உணர்ச்சி: களுக்கு இலக்காகி விட்டதால் அவன், கனோஜிக்கு. ஏற்பட்ட அதிர்ச்சி, அச்சம், சினம் முதலிய எதையும் கவனிக்கச் சக்தியற்றவனானான். ஆகவே, அந்த மண்டபத்திலிருந்த பேஷ்வா, பிரும்மேந்திர சுவாமி ஆகிய இருவரைக் கவனியாமலும் மஞ்சு பிடித்திருந்த தன் கையை விடுவித்துக் கொண்டும் தஞ்சைத் தாயினருகே சென்று அவள் திருவடிகளில் பணிந்தான். பிறகு எழுந்து நின்று அவளை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மௌனமாக நோக்கினான்.

தஞ்சை ராணியின் முகத்தில் துன்பமும் இன்பமும் கலந்த உணர்ச்சி பிரதிபலித்தது. வெள்ளை வெளேரென்ற அவள் சரீரத்தை அதிக விலையற்ற ஒரு வெண்பட்டுப் புடவையே மூடி நின்றது. ஒரு விலையுயர்ந்த கோமேதகக் காதணியும் கழுத்தில் ஒரு நவரத்ன மாலையும் தவிர வேறெந்த அணிகலனும் இல்லை அவள் அழகிய அங்கத்தில். விசாலமாயும் வெண்மையாயுமிருந்த அவள் நெற்றியும், வளைந்த கறுத்த புருவங்களும், துன்பத் திலும் பெரிதாகக் கவர்ச்சி சிந்திய கண்களும், ராஜாராம் அவளிடம் காதல் கொண்டதிலோ அவளைக் கைப் படித்ததிலோ விசித்திரமேதுமில்லையென்பதை நிரூபித்தன. அழகின் உருவாய், அடக்கத்தின் சின்னமாய் துன்பத்தின் எடுத்துக்காட்டாய் அமர்ந்திருந்த தஞ்சை ரகசிய ராணியைக் கண்ட அந்தச் சமயத்தில் இதய சந்திரனின் மனம் பெரிதும் நெகிழ்ந்தது. கண்களில் நீர் திரண்டு விட்டது போலும் தோன்றியது. பேசக்கூட அவனுக்குச் சக்தியில்லை. ஆகவே அவளே பேசினாள். “வீரனே! உன் கடமையை நீ முடித்துவிட்டாய். இனி உன் ஆணை உன்னைக் கட்டுப்படுத்தாது” என்று கிள்ளைக் குரலில் கூறினாள்.

“தாயே! கடமையை முடித்தவன் நானல்ல. தங்கள் தனயனைத் தங்களுடன் சேர்த்தவன் நானல்ல. அதைச் செய்தவர் பிரும்மேந்திர சுவாமி” என்றான் தடுமாறிய குரலில் இதயசந்திரன்.

ராஜாராமின் ரகசிய மனைவி அவனை அன்புடன் நோக்கினாள். “இதயசந்திரா, அனாதையாகத் தஞ்சையில் இருந்தேன். நானிருப்பதோ, என்னை வதுவை கொண்டதோ யாருக்கும் தெரியக்கூடாதென்பது என் கணவரின் கட்டளை. அந்தக் கட்டளைப்படி நடந்தேன்! ஆகவே, என் தனயனை அவன் உண்மைப் பெயர் கொண்டு அழைக்க முடியாதவளானேன். அவனை வளர்த்தேன் இதயசந்திரா! ஆனால் அவன் காணாமற் போனதும் அவனைத் தேடிச் செல்ல நீதான் முன் வந்தாய். தனித்திருக்கும் உன் தாயை விட்டு இன்னொரு தாயின் மகனுக்காக இல்லாத ஆபத்துக்களுக்கெல்லாம் இலக் கானாய். மகாராஷ்டிரத்துக்கும் எனக்கும் நீ செய்துள்ள சேவை மகத்தானது” என்றும் கூறினாள் அன்புடன்.

இதயசந்திரன் வதனத்தில் உணர்ச்சி சற்று அதிக மாகப் பிரதிபலித்தது. ‘தாயே மகாராஷ்டிரத்துக்குச் சேவை செய்தது உண்மை. ஸார்கேலின் உதவியால் பெரும் போர்களில் ஈடுபட்டேன். அவரும் அவர் மகளும் கற்பித்த பாடங்களால், – அளித்திருந்த பயிற்சியால், கிடைத்த சந்தர்ப்பங்களால் பெரும் புகழ் எய்தினேன். அந்தப்போர்களால், என் செயல்களால், எனக்கும் லாபம்; மகாராஷ்டிரத்துக்கும் லாபம். தங்களுக்கு என்ன லாபம்? தனயன் தரணியாளப் போகிறானா? தாங்கள் தான் ராணியாக வாழப் போகிறீர்களா?” என்று கேட்டான் உணர்ச்சிமிக்க குரலில்.

தஞ்சை ரகசிய ராணி மிக அமைதியான குரலில் சொன்னாள்: “மறந்து பேசுகிறாய் தம்பி! தம்பியென்று அழைக்கிறேனே என்று பதட்டப்படாதே. எனக்கொரு உடன் பிறந்தவனிருந்தால் அவன் எனக்காக எதையெல்லாம் செய்யக் கடமைப்பட்டவனோ அத்தனையும் செய்திருக்கிறாய் நீ. அதைவிட அதிகமாகச் செய்திருக் கிறாய். ஆனால் நீ எனக்கு உடன்பிறந்த தம்பியில்லா விட்டாலும் மனத்துக்கு உற்ற தம்பிதான். கேள் தம்பி! உணர்ச்சியில், நானிருக்கும் நிலை கண்ட வேகத்தில் பலபடி பேசுகிறாய். பழைய விஷயங்களை மறந்து விட்டாய். உனக்கு நான் என்ன சொல்லியனுப்பினேன்? ‘என் தனயனைக் கண்டுபிடித்து வா, இல்லையேல் அவனை அழித்துவிடு. இவனும் ஒரு வாரிசு என்ற முறையில் மகாராஷ்டிரம் பிளவுபடக்கூடாது’ என்று சொல்லியனுப்பவில்லை உனக்கு? அது தான் தம்பி, என் லட்சியம். இந்து சாம்ராஜ்யங்கள் ஏற்படுவதை விட அழிவதுதான் வரலாற்றில் அதிகமாயிருக்கிறது. ஆகவே, எனது மாமனார் ஸ்தாபித்த மகாராஷ்டிரம் உடைவதை நான் விரும்பவில்லை. ஆகவே, என் மகனுக்கும் அரசுப் பதவியை விரும்பவில்லை. ஆகவே, சத்ரபதி ஷாஹு எனக்கு விதித்த நிபந்தனைகளை ஏற்பது சிறிதும் கஷ்ட மில்லை எனக்கு. மனதார ஏற்றேன், மீண்டும் சாதாரணப் பிரஜையாக மறைந்து வாழும் ஆக்ஞையை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றேன், என் மகனுக்கு மணிமுடி கூடாதென்ற உத்தரவை…”

இங்கு தஞ்சை ரகசிய ராணி சற்று நிதானித்தாள். “இதயசந்திரா! மணிமுடியில் என்ன இருக்கிறது? அரசுப் பதவியில்தான் என்ன இருக்கிறது? பெரும் பொறுப்பு இருக்கிறது. ஆபத்திருக்கிறது. அலைபோல் அடங்காக் கவலையிருக்கிறது. அதை ஏற்கத் திறமை வேண்டும், நிதானம் வேண்டும். சகிப்புத்தன்மை வேண்டும், கூரிய அறிவுவேண்டும். இத்தனையும் இருக்கிறது சத்ரபதி ஷாஹுவிடம். சத்ரபதி மொகலாயர் அரண்மனையில் வளர்ந்தவர். ஆகவே, இப்பொழுது மொகலாய வல்லரசைச் சமாளிக்கக் கூடியவர் அவர் தான். அவர் மகாராஷ்டிரத்தை ஆள்வது தான் சரி. எனவே, நான் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த நிலைக்கு நீயும் உன் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள். திரும்பித் தஞ்சைக்குச் செல். இங்கு உன் கடமை முடிந்துவிட்டது” என்றாள் உறுதியான குரலில்.

தஞ்சை ரகசிய ராணியின் கண்கள் சற்று மென்மை யடைந்தன திடீரென்று. எட்ட நின்றிருந்த மஞ்சுவைக் காட்டி, “அவளைக் கூப்பிடு” என்றாள் இதயசந்திர னிடம்! இதயசந்திரன் சைகை காட்ட அருகே வந்த மஞ்சுவை நீண்டநேரம் நோக்கிய ராணி. அவள் தலையை அன்புடன் தடவிக் கொடுத்தாள். பிறகு தன் கழுத்தி லிருந்த நவரத்ன மாலையை எடுத்து அவள் கழுத்தில் போட்டாள். “பெண்ணே! இது பெரும் பரிசல்ல. தஞ்சை யின் இணையற்ற வீரனையே உனக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறேன். இதை என் ஞாபகார்த்தமாக வைத்துக்கொள். ஒரு தாயின் துயர் துடைக்க உன் கணவன் எத்தனை ஆபத்துக்களை நாடினான் என்பதை இது அடிக்கடி உனக்கு நினைவுறுத்தும்” என்று கூறி ஆசீர்வதித்தாள்.

இதயசந்திரனுக்கும் ராணிக்கும் நிகழ்ந்த உரையாடலைக் கேட்ட பிரும்மேந்திர சுவாமி உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தார். பாலாஜியின் சாம்பல் நிறக் கண்கள் கூட உணர்ச்சியைக் காட்டின. அவர் முகத்தில் பெரும் பாரம் தலையிலிருந்து இறங்கிவிட்டதற்கான அறிகுறியிருந்தது. அந்த மண்டபத்திலேயே அப்பொழுது சாந்தி நிலவியிருந்தது.

அந்த சாந்தியை பாலாஜியின் குரல் மெல்ல உடைத்தது. ”தமிழா! இப்படி வா!” என்று அவனை அருகில் அழைத்த பாலாஜி, “தமிழா! தஞ்சையின் விமலாதேவி உன் கடமை முடிந்துவிட்டதென்று கூறுவதால் இனி நீ தமிழ்நாடு செல்லலாமல்லவா?” என்று வினவினார். தஞ்சைத் திருமகளை பாலாஜி ராணியென்று குறிப்பிடவில்லையென்பதையும், முதன் முதலாகப் பெயர் சொல்லியழைக்கிறார் என்பதையும் இதயசந்திரன் புரிந்து கொண்டான். தஞ்சைத் தேவியை பேஷ்வா ராணியென்று ஒப்புக்கொள்வது ராஜீய தர்ம விரோதம் என்பதும் தெரிந்தது அவனுக்கு. ஆகவே பேஷ்வாவுக்குத் தலை தாழ்த்தி, ”ஒரு தாயின் கடமையை முடித்துவிட்டேன் பேஷ்வாஜி. இனி தஞ்சையில் காத்திருக்கும் என் தாயைக் கவனிக்கச் செல்வதுதான் முறை” என்று கூறினான்.

பேஷ்வாவின் சாம்பல் நிறக் கண்கள் அவனை அன்புடன் நோக்கின. அவர் விடுவிடுவென்று எதையோ மயிலிறகு பேனாவினால் எழுதினார். பிறகு அதைப் படித்தார், அதிகாரமும் கண்ணியமும் நிறைந்த குரலில். “இதயசந்திரா, உன்மீது இரண்டு குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கின்றன. தளபதி ஆணைக்குப் படிந்து லோஹ்காட் வராத குற்றம் ஒன்று, கல்யாண் நகரப் பாதுகாப்பைக் கைவிட்டுச் சென்ற குற்றம் இரண்டு. இந்த இரண்டு குற்றங்களுக்கும் தீவிர தண்டனை உண்டு. ஆனால் மகாராஷ்டிரத்துக்கு நீ செய்துள்ள சேவையை முன்னிட்டு, லோஹ்காட்டுக்கு உன்னை வர உத்தரவு அனுப்பிய சமயத்தில் ஸார்கேல் சத்ரபதி ஷாஹுவின் பணியில் இல்லாத காரணத்தாலும் அந்தக் குற்றத்திலிருந்து உனக்கு விடுதலை அளிக்கிறோம். ஆனால் கல்யாண் நகரப் பாதுகாப்பை விட்டு ஓடியது பெரும் குற்றம். அந்தக் குற்றம் செய்யப்பட்ட போது கனோஜி ஆங்ரே சத்ரபதி ஷாஹுவின் கார்யதுரந்தரர். ஆகவே, அந்தக் குற்றம் அவரது உபதளபதியான உன்னைப் பாதிக்காமல் விடாது. அதற்காக உன்னை மகாராஷ்டிரத் திலிருந்து ஓராண்டு காலம் தேசப் பிரஷ்டம் செய்கிறேன். அதற்குப் பின் நீ இங்கு வருவதை சத்ரபதி ஷாஹுவின் அரசாங்கம் அனுமதிக்கும்.” இந்தத் தீர்ப்பைப் படித்து முடித்து விட்டுப் பின்னாலிருந்த திண்டில் சாய்ந்தார் பேஷ்வா. தீர்ப்பை ஏற்கும் முறையில் தலை வணங்கினான் தமிழக வீரன்.

அதுவரை வாளாவிருந்த பிரும்மேந்திர சுவாமி மட்டும் ஒரு சந்தேகம் கேட்டார்: “தேசப் பிரஷ்டத்திற்கு ஒரு வருஷம் என்ன கணக்கு?” என்று.

“அடுத்த ஆண்டில் பெரும் கடற் போர்களும் நிலப் போர்களும் மகாராஷ்டிரத்தில் நடக்கும். நம்முடன் அமைதியை விரும்பிய பம்பாய் கவர்னர் ஏஸ்லாபி மாற்றப்பட்டு இங்கிலாந்து செல்கிறார். யாரோ ஒருவர் பூன் என்பவர் கவர்னராக வருகிறாராம், இங்கு பிரிட்டிஷ் கடற்படை பலத்தை நிலை நிறுத்த. போர்ச்சுக்கீசியரும் ஏதேதோ போர் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகப்படி கப்பல்களை அனுப்பப் போர்ச்சுகலுக்குத் தகவல் போயிருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். பிரிட்டிஷ்காரர்களின் கணக்குப்படி 1715-1716 ஆம் ஆண்டுகள் மகாராஷ்டிரத்தின் கதியை, ஏன், பாரதத்தின் கதியை நிர்ணயிக்கும். ஆகவே, அப்பொழுது கனோஜிக்குத் தகுந்த உபதளபதி தேவையா யிருக்கும்” என்று கூறிய பாலாஜி, சற்றுப் புன்முறுவல் கொண்டு, “சுவாமி! அது ஒருபுறமிருக்க, யார் தண்டனையையும் குறைக்கவோ தண்டனையை ரத்து செய்யவோ பேஷ்வாவுக்கு அதிகாரமுண்டு. தேச நலனுக்கு அவசியமானால் எதையும் செய்யத் தயங்குவது அரசியலில் விவேகமாகாது” என்றும் குறிப்பிட்டார்.

பிரும்மேந்திர சுவாமி புரிந்துகொண்டார், பாலாஜி விசுவநாத் சுய அன்புக்கும், அரசியல் தர்மத்துக்கும் சட்டத் துக்கும் ஒரு முக்கோணப் பாலம் அமைத்துக் கொள்வதை. குற்றம் செய்பவனைத் தண்டிப்பது தர்மம், நீதி. அந்த நீதியைக் கருணையுடன் கலந்து அவர் வழங்கியிருக்கிறார் என்பதால், தாம் எதிர்பார்த்த அளவுக்குப் பாலாஜி உயர்ந்துவிட்டதை எண்ணி, ”பாலாஜி, நீ தீர்க்காயுசா யிருந்து மகாராஷ்டிரத்தை உயர் நிலைக்குக் கொண்டுவரப் பரசுராமன் உனக்கு அருள் புரியட்டும்” என்று வாழ்த்தினார்.

சிந்தனையில் ஆழ்ந்து கிடந்தார் கனோஜி ஆங்கரே. நீண்ட நேரம் தஞ்சை ராணியுடன் வந்த அந்த மாதரசி யைப் பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியாக அந்த மண்டபத்தை ஊடுருவியது அவர் கேள்வியொன்று. “நீ அவள்தானே?” என்ற கேள்வியில் சினமும் உணர்ச்சியும் மேலோங்கி நின்றன.

ஆனால் அந்த மாதரசி, அவர் சினத்தைச் சிறிதும் லட்சியம் செய்தாளில்லை. “ஆம்” என்று அலட்சியமாகப் பதில் சொன்னாள் அவள். அவள் விழிகள் கொல்லும் வேல்களென ஆங்கரேயை நோக்கின. “அவளைக் கொன்றது நீ” என்று சுடுசொற்களையும் உதிர்த்தன அவள் உதடுகள்.

Previous articleJala Deepam Part 3 Ch51 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch53 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here