Home Historical Novel Jala Deepam Part 3 Ch53 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch53 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

85
0
Jala Deepam part 3 Ch53 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch53 | Read Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch53 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 53 கடலில் பிறந்த காவியம்

Jala Deepam Part 3 Ch53 | Read Jala Deepam | TamilNovel.in

கடலின் பேராபத்துக்களையோ கடலைப் போல் பாரத மண்ணில் விரிந்து கிடந்த மொகலாய சாம்ராஜ்யத்தையோ கரை கடந்து எங்கிருந்தோ வந்த பிரிட்டிஷ் போர்ச்சுகீஸிய நாடுகளின் வர்த்தக ராணுவ தளங்கையோ, எதையுமே கண்டு அஞ்சாதவரும். கடலலைகளைப்போல் அலட்சியமாக நகைக்கக் கூடியவருமான கனோஜி ஆங்கரே, தமது சுபாவத்துக்கு முழு விரோத மாய்க் கல்லெனச் சமைந்து நீண்ட நேரம் உட்கார்ந்து விட்டார். அப்படி உட்கார்ந்து விட்டது அவர் மட்டு மல்ல, எந்தப் பேரிடி விழுந்தாலும் இமையைக்கூட அசைக்கும் பழக்கமற்ற பாலாஜி விசுவநாத்தும், கனோஜியின் கதையில் சிறிதும் சம்பந்தப்படாத தஞ்சை ராணியும், தமிழக மகாவீரன் இதயசந்திரனும், பெண்ணாகப் பிறந்தும் துணிவுள்ள மாலுமியாக வாழ்ந்த மஞ்சுவுங்கூட கனோஜின் நிலையையே எய்தினர். யாரும் எதிர்த்துப் பேச அஞ்சும் கனோஜியை நோக்கி ஒரு சாதாரணப் பெண் சுடுசொற்களை உதிர்த்தது அனைவரையுமே மிதமிஞ்சிய பிரமிப்புக்குள்ளாக்கியதால் அந்த மண்டபத்தில் பூர்ண நிசப்தமே நிலவியது பல விநாடிகள். அந்த நிலையில், அந்த நீதி மண்டபத்திலிருந்த பாத்திரங்களில், எந்தக் குழப்பத்துக்கும் உள்ளாகாமல் உட்கார்ந்திருந்தவர் பிரும்மேந்திர சுவாமி ஒருவர் தான். அவர் மட்டும் அந்தப்ணையும் நோக்கி, கனோஜியையும் நோக்கினார். யார் நோக்கையும் கவனிக்கும் நிலையிலில்லை, மகா ஷ்டிரக் கடல் வீரனான கனோஜி ஆங்கரே. அந்த நீதி டபத்தில் அவரைப் பார்த்த விழிகள் பல. நினைத்த நெஞ்சங்கள் பல. குழம்பிய சித்தங்கள் பல. ஆனால் மூவர் குழம்பவில்லை. ஒருவர் கனோஜி ஆங்கரே, இன்னொருவர் அந்த மாதரசி, மூன்றாமவர் பிரும்மேந்திர சுவாமி. மற்றவர்களுக்கும் ஓரளவு புரிந்தது கனோஜியின் ரகசியக் கதையொன்று அவிழ்க்கப்படுகிறதென்று. ஆனால் எது என்ன கதை, ஏது கதை, என்பது மட்டும் அவர்களுக்குப் புரியாத புதிராயிருந்தது. கனோஜியின் மனத்திலே பல புதிர்கள் எழுந்துகொண்டிருந்தன. கடந்த கால நிகழ்ச்சி கனை ஒட்டி மனம் நடந்துகொண்டிருந்தது. மற்றவர் களையும் மௌனத்திலாழ்த்தித் தானும் மௌனமாகி விட்ட கனோஜி ஆங்கரேயை நோக்கி அந்த மாதரசி மீண்டும் சொன்னாள் சில வினாடிகள் கழித்து, அவளைக் கொன்றது நீதான். உன் செய்கையால் இதயம் வெடித்து இறந்தாள் அந்த உத்தமி’ என்று. இம்முறை அவள் சொற்கள் கடினத்துடன் உ.திர்ந்தன.

அதற்கும் வாய் திறக்கவில்லை மகாராஷ்டிர ஸார்கேல். அவர் சித்தத்திலே எழுந்தது ஜன்ஜீராத் தீவும், அதன் கரைப்புற நகரான தண்டா ராஜபூரும். வடமேற்கிலிருந்த மலைவாயில் வழியாகக் கடலலைகள் ஜன்ஜீராத் தீவுக்குள் பெருவேகத்தில் நுழைவது அவர் கண்ணில் எழுந்தது. அந்த அலைகள் எத்தனை உயரம்! அதோ ஜன்ஜீராவைச் சுற்றியுள்ள கடலகழியில் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் அந்தப் பெரிய கப்பல்களின் தளத்தின் மீதே பாய்கின்றனவே அந்தப் பெரிய பேரலைகள்! அப்பப்பா! ‘ஹோ’ என்ற இரைச்சல் காற்று, ஊழிக் காற்றைப் போலல்லவா வேகத்துடன் அடிக்கிறது! ஜன்ஜீராவின் பிறைச் சந்திரக் கொடி என்ன வேகமாகத் துடிக்கிறது அந்தக் காற்றில்! ஜன்ஜீராவின் கடலகழியும் வடமேற்கு வாயிலுக்கு அப்பாலுள்ள கடல்வெளியும் ஒரேயடியாகப் பிரளயம் போல் கலந்து விட்டனவே!

எங்கும் சப்தம், எங்கும் அலைகளின் எழுச்சி, எங்கும் பிரளய நிலை. அந்தக் கடலில் நீந்தி வருகிறான் ஒரு வாலிபன். வேறு யாராயிருந்தாலும் கொந்தளித்த அந்தக் கடலில் சூறாவளி எழுப்பிய அலைகளின் பயங்கரத்தில் மூழ்கியிருப்பார்கள், அல்லது மலைப் பாறைகளில் தூக்கி யெறிந்து தாக்கப்பட்டு, மண்டை பிளக்கப்பட்டு இறந்திருப்பார்கள். ஆனால் அந்த வாலிபனின் திண்மைக் கரங்கள் அந்தக் கடற்புரட்சியில் அனாயாசமாக நீந்தி வருகின்றன. ஜன்ஜீரா முகப்பு மலைக்கு வந்ததும் மெல்ல அதன் பாறைகளில் தொற்றி ஏறுகிறான் அந்த வாலிபன். தொற்றி ஏறியதும் ஈரம் சொட்டும் உடையுடனும் விறைக்கும் உடலுடனும் பாறையில் குப்புறப் படுத்து எதிரே தெரிந்த ஜன்ஜீராவைப் பார்க்கிறான். ஜன்ஜீராவின் காவல் விளக்குகள் பாதி மறைக்கப்பட்டுத் தங்கள் ஒளியை ஜன்ஜீரா கோட்டையைச் சுற்றி மட்டுமே வீசிக் கொண்டிருக்கின்றன. பூர்ண கவசமணிந்த கடல்புறக்காவலர் ஜன்ஜீராவின் கடல்வாயில் வரையிலும் காத்துப் பாராக்கொடுக்கின்றனர். வாலிபன் படுத்துக்கிடந்த பாறையிலிருந்து இருபதடி தள்ளியிருந்த உச்சியிலும் இரு காவலர் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஸித்தி களின் இருப்பிடமும் மொகலாயரின் பிரதான கடல் கோட்டையுமான ஜன்ஜீராவின் பலேகில்லா என்ற பிரசித்தி பெற்ற பீரங்கி, கடல் வாயிலை நோக்கிக் கொண்டிருக்கிறது. எங்கும் அந்த நள்ளிரவிலும் காவலர் திரிந்து கொண்டிருக்கிறார்கள். சில படகுகளும் அந்தக் கடலகழியில் ஊர்ந்து தண்டா ராஜபூருக்கும் ஜன்ஜீராத் தீவுக் கோட்டைக்குமா.கப் போய் வந்துகொண்டிருக்கின்றன. கரையில் கூடக் காவலர் பலர் பாராக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வாலிபன் அத்தனை யும் பார்க்கிறான். பார்த்தும் கலங்காது பாறையிலிருந்து மெல்ல எழுந்து மலையின் இருளடர்ந்த பாகத்தில் நடக்கிறான் பிசாசுபோல. ஒருமுறை நின்று தனது ஆடையைப் பிழிந்துவிட்டு இடைக்கச்சையிலிருக்கும் இரு கைத்துப்பாக்கிகளையும் பார்க்கிறான். “இல்லை, வெடி மருந்து நனையவில்லை” என்று சொல்லி, திருப்தியடைந்து கொள்கிறான். மெல்ல மெல்ல நடந்து மலைவழியில் வந்து தண்டா ராஜபூர் கரையை அடைந்துவிடுகிறான். கரையில் ஒருபுறத்தில் ஒரே ஒரு காவலனிருக்கிறான். அவனை மெல்லப் பூனைபோல அணுகிய வாலிபன் அவன் தலையில் ஓங்கி, கைத்துப்பாக்கியால் அடிக்கிறான் அடி சரியாக விழாததால் “ஐயோ” என்று அலறியபடி அந்தக் காவலன் தனது கைத்துப்பாக்கியால் சுட முயல்கிறான். அவன் துப்பாக்கியைவிட வேகமாகச் சுழலுகிறது வாலிபனின் கைத்துப்பாக்கி. காவலன் மடிந்து விழுகிறான். துப்பாக்கிகளின் சூடு மற்றக் காவலரை எச்சரிக்க, வாலிபன் துரத்தப்படுகிறான். கரடு முரடான மலைப் பாதைகளில் தாவித் தாவி ஓடி மலைக் காட்டுக்குள் பிரவேசிக்கிறான் அந்த வாலிபன். இருள் எங்கும் கவிந்திருக்கிறது. ஆனால் வீரர்களை ஏமாற்றிக் கொண்டு வெகு வேகமாக ஓடுகிறான். ஓடிய நிலையில் மலைக் காட்டுக்குள்ளிருந்த வீடுகளிலொன்றில் மறைகிறான். கதவடைக்கிறான். அங்கு இரு பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களை வாயைத் திறக்க வேண்டா மென்று சைகை காட்டுகிறான். அவனைத் துரத்திய காவலர்களை நீண்ட நேரம் காணாததால் சுயநிலை யடைந்த வாலிபன் மெல்லத் திரும்பி அந்த இரு பெண்களைப் பார்க்கிறான். அதிலொருத்தியின் அழகு இணையற்றதாயிருக்கிறது. அவளுடைய பெருவிழிகள் அவனுடைய மனத்தைக் கவர்கின்றன. “நீ யார்?” என்று மந்திரச் சொற்களை உதிர்கின்றன அவள் செவ்விய உதடுகள்.

“கனோஜி ஆங்கரே!” என்று வாலிடன் கூறுகிறாள்…..
ஆங்கரேயின் நினைப்பு, கதையின் இந்த இடத்திற்கு வந்ததும் அவர் மனம் உணர்ச்சிவசமாகவே இரைந்தே தமது பெயரைச் சொன்னார் ஸார்கேல். அதுவரை வாளாவிருந்த பிரும்மேந்திர சுவாமி அவரது கனவை உடைக்கக் கேட்டார், “மீதிக் கதையை நான் சொல்லட்டுமா?” என்று.

கனோஜியின் பெருவிழிகள் அவரை உற்று நோக்கின. “நான் ஜன்ஜீராவை வேவு பார்க்கச் சென்ற கதை உங்களுக்குத் தெரியுமா?” என்ற கேள்வியில் அவரது உணர்ச்சி ஓங்கி நின்றதை பிரும்மேந்திர சுவாமி கவனித்தார். ஆகவே சொன்னார், “தெரியும்” என்று.

“அப்படியானால்…?” என்று துவங்கிய கனோஜி வாசகத்தை முடிக்கு முன்பே பிரும்மேந்திர சுவாமி கூறினார், “அந்தப் பெண் ராஜாராமின் மந்திரி பிரஹ்லாத் நீராஜியின் தூரத்து உறவினள். உன்னைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தாள். உன் கடல் வீரச் செயல்கள் அப்போதுதான் மகாராஷ்டிரத்தில் பரவ முற்பட்ட காலம். ஆகவே நீ கனோஜியென்றதும் உன்னை ஸித்திகளின் கண்களில் படாமல் மறைத்தாள். நீ அங்கு மறைந்திருந்த நாட்களில் தான் அந்தச் சம்பவம் நடந்து விட்டது” என்று. மேலும் சொன்னார் சற்று உஷ்ண மான குரலில்: ”கனோஜி! நீ எப்பொழுதும் பெண் பித்துப் பிடித்தவன். உன் வீரத்தில் உன் பயங்கரச் சிரிப்பில் மயங்கிய அந்தப் பெண் உன்னிடம் தன்னை அர்ப்பணித் தாள். எந்தக் கரைக்கருகே தங்கினாலும் அந்தக் கரையில் அகப்படும் பெண்களை ஆண்டு அனுபவிக்கும் உன் குணம் தண்டா ராஜபூர் காட்டிலும் விடவில்லை. அங்கு பத்து நாட்கள் இருந்துவிட்டுத் திரும்பி விட்டாய். மீண்டும் வருவதாக சத்தியம் செய்தாய். திரும்பவில்லை நீ.”

இந்தச் சமயத்தில் அந்த மாதரசி தொடர்ந்தாள். சுவாமியைவிட அதிக உஷ்ணமான குரலில், “ஒரு மகாராஷ்டிர மாலுமியின் இச்சைக்கு அவன் இச்சகப் பேச்சை நம்பி, தன்னையே கொடுத்தாள் மங்கலதேவி. நாட்கள் சென்றன. அவளை அனுபவித்துச் சென்றவன் வரவில்லை. அவள் கருவுற்றாள். கருவுற்றது தெரிந்து கலங்கினாள். உயிரை விட்டுவிட முயன்றாள். நான் மன்றாடவே கருவிலுள்ள உயிரை முன்னிட்டுத் தனது உயிரைத் தரித்துக் கொண்டாலும் மனம் உடைந்து பிணம் போல் நடமாடினாள். அந்த மலைக்காட்டில் வீடுகள் தூர தூர இருந்தாலும் இதை எத்தனை நாள் மறைக்க முடியும்? எட்ட இருந்த வீடுகளுக்கும் விஷயம் தெரியவே மங்கலதேவியும் நானும் அங்கிருந்து புறப்பட்டு, பரசுராம புரம் வந்து சுவாமியின் ஆசிரமத்தில் தங்கினோம். தக்க காலத்தில் ஒரு பெண் மகவை ஈன்று மடிந்தாள். மங்கல தேவி மடியுமுன்பு சுவாமியிடம் தனது ரகசியத்தைச் சொன்னாள். அவளைக் கெடுத்தவன் பெயரையும் சொன்னாள். ஆனால் அந்தக் குழந்தை யாருடையது என்று தெரிய புடாதென்றும் பிரமாணம் வாங்கிக் கொண்டாள். சுவாமியிடம்…”

பிரும்மேந்திர சுவாமி இங்கு இடைமறித்து, “அந்தப் பெண் குழந்தை மிக அழகாயிருந்தது. ஆசிரமவாசிகள் எல்லாருமே அதை நேசித்தார்கள். அதை அனாதைக் குழந்தையாகவே வளர்த்தோம், அவள் தாயின் விருப்பப் படி. அதன் ஆறாவது வயதில் அதன் தந்தை என் ஆசிரமத்திற்கு வந்தார். குழந்தை அவர் மீசையைப் பிடித்து இழுத்தது. ‘நீ எத்தனை பெரியவன்? ராட்சதனா?” என்று கேட்டது குழந்தை. தந்தை நகைத் தார். தன்னிடம் குழந்தையைக் கொடுக்கும்படி கேட்டார்…” என்றார் சுவாமி.

அவர் வாசகத்தை முடிக்கவில்லை. கனோஜி ஆசனத்திலிருந்து துள்ளி எழுந்தார். மஞ்சுவை அவர் விழிகள் உற்று உற்றுப் பார்த்தன சில வினாடிகள். பிறகு இரண்டு எட்டில் சென்று மஞ்சுவை அணைத்துக்கொண் டார் இறுக . ” மஞ்சு! மகளே! நீ என் மகளா! என் சொந்த மகளா?” என்று தழுதழுத்த குரலில் அந்த மண்டபமே அதிரும்படியாகக் கேட்டார். துயரத்தைக் கண்டிராத அவர் கண்களில் நீர் சுரந்து கன்னங்களில் வழிந்து ஓடியது.

அவளை அணைத்த வண்ணம் அப்படியே தரையில் உட்கார வைத்துக்கொண்டு தானும் உட்கார்ந்தார். “குழந்தாய்! உன் தாயின் மரணத்துக்கு நான் காரணமில்லை. அவளைப் பிரிந்ததும் ஸித்திகளுடன் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்தன. மூன்று மாதங்கள் கடலிலேயே திரிந்தேன். திரும்ப நான் தண்டா ராஜபூர் போகும் நிலையில் இல்லை. இருப்பினும் எனது ஒற்றர் களை அனுப்பி விசாரித்தேன். அந்த வீடு காலி செய்யப் பட்டதாக அக்கம்பக்கத்தார் தெரிவித்தார்கள். அவள் எங்கு போனாள் என்பது தெரியவில்லை மஞ்சு. ஆனால் அவள் இன்னும் என் மனத்திலிருக்கிறாள். இந்த மனத்தி லிருந்து எத்தனையோ பெண்கள் மறைந்து விட்டார்கள். ஆனால் அவள் மறையவில்லை. என் உயிரின் பக்கத்தில் அவள் இன்னும் அமர்ந்திருக்கிறாள். எங்கள் காதலின் மலர் நீ. தவிர மஞ்சு இதைக் கேள்!’ கடலில் சதா செல்லும் மாலுமி எங்காவது பெண்ணை அழைத்துக் கொண்டுபோய் வளர்ப்பானா? உன்னைத் தவிர வேறு யாரையாவது நான் வளர்த்திருக்கிறேனா? என்னையும் அறியாத ரத்தபாசம் உன்னை இழுத்தது மஞ்சு! புரிகிறதா உனக்கு?” என்று குழந்தைபோல் பேசினார்.

மஞ்சுவின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. என்ன சொல்வதென்று அவளுக்கு விளங்கவில்லை. கடைசி யில் சொன்னாள், “நான் போர்க் காலத்தில் விளைந்தவள். போர்க் காலத்தில் வளர்ந்தவள். என் அதிர்ஷ்டம் தாயை அறிய முடியவில்லை. உங்கள் மேல் என்ன குற்றம்?” என்று. உட்கார்ந்த நிலையில் அவள் தலையை மார்பில் அணைத்துக் கொண்டார் கனோஜி சில வினாடிகள்.

தந்தையும் மகளும் யாருமற்றவர்போல் தரையில் உட்கார்ந்திருந்த காட்சி அங்கிருந்த அனைவர் மனத்தை யும் கரைத்தது. பாலாஜியே அந்தக் காட்சிக்கு ஒரு முடிவு கட்டினார். “தீர்ப்பு முடிந்துவிட்டது’ என்று கூற எழுந்தார் தமது ஆசனத்திலிருந்து. அத்துடன் சொன்னார் அதிகார தோரணையில், ”ஸார்கேல்! நான் வந்த வேலை முடிந்துவிட்டது. நாளைக் காலையில் ஸதாரா கிளம்பு கிறேன். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!” என்று. அத்துடன் கம்பீரமாக மேடையை விட்டு இறங்கி வெளியே நடந்தார். பிரும்மானந்தர் சைகை செய்ய, தஞ்சை ராணியும் மங்கலதேவியின் தோழியும் இதய சந்திரனுங்கூட மண்டபத்தை விட்டு வெளியேறினர். கடைசியாக பிரும்மேந்திர சுவாமி மட்டும் அவர்களுக்கு ஆசிகளை முணுமுணுத்துவிட்டுக் கிளம்பினார்.

அடுத்த பத்தாவது நாள் பௌர்ணமி வந்தது. அன்று கொலாபா பெரும் கொண்டாட்டத்திலிருந்தது. அன்று மாலையில் குலாபிக்கும் கும்பாபிஷேகமும் பூஜையும் நடந்தது. சன்னிதானத்தில் வணங்கி நின்ற மஞ்சுவுக்கும் இதயசந்திரனுக்கும் ஆசீர்வாத மந்திரங்களைச் சொல்லி விபூதி குங்குமப் பிரசாதங்களும் புஷ்பங்களும் கொடுத்தார் அர்ச்சகர். அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த கனோஜி மட்டும் சுரணையற்று நின்றிருந்தார். குலாபி கோயில் பூஜை முடிந்தபிறகு, கனோஜி அவர்களிருவரையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அந்தத் தம்பதிகளை வழியனுப்ப ஆண்களும் பெண்களுமாகப் பெருங்கூட்டம் நின்றிருந்தது. பிரும்மேந்திர சுவாமி, தஞ்சை ராணி, மஞ்சுவின் தாயின் தோழி , கனோஜியின் மகிஷிகள் மூவர் ஆகியோரும் வந்திருந்தனர். இதயசந்திரனும் மஞ்சுவும், கனோஜியையும் அவர் மனைவிமார்களையும் தஞ்சை ராணியையும் மங்கலதேவியின் தோழியையும் வணங்கி விடைபெற்றுக் கொண்டனர். அவர்களைத் தாங்கிச் செல்ல ஜல தீபம் தூரத்தில் தயாராக நின்றிருந் தது. அதிலிருந்த புஷ்பாலங்காரங்களும் தீபாலங்காரம் களும் கடலுக்கே தனி அழகை கொடுத்துக் கொன்டிருந்தன. அவர்களை அழைத்துச் செல்ல ஹர்கோவிந்த தயாராக நின்றிருந்தான் ஒரு பெரும் படகில். அவனை நோக்கித் தழுதழுத்த குரலில் பேசினார் ஆங்கரே. “ஹர்கோவிந்த்! இவர்களைக் கார்வார் துறைமுகத்தில் இறக்கிவிடு. அங்கிருந்து இவர்கள் தஞ்சை செல்வார்கள். இவர்கள் கார்வாரில் இறங்கியதும் நீ தான் ஜலதீபத்தின் தளபதி. கப்பலுடன் திரும்பி விஜயதுர்க்கம் வந்துவிடு. அங்கு சந்திப்போம்” என்று உத்தரவிட்டார்.

ஹர்கோவிந்த் தலைவணங்கினான். படகில் இதய சந்திரனும் மஞ்சுவும் ஏற, படகு நகர்ந்தது. கனோஜி நின்ற இடத்தை விட்டு நகரவில்லை. படகு ஜல தீபத்தை அடைந்தது! ஜல தீபம் நங்கூரமெடுத்து நகர்ந்த பின்பும் கடற்கரையிலேயே நின்றிருந்தார். இங்கிருந்து அதோ போவது ஜல தீபமல்ல; மஞ்சுதான். மஞ்சு வேறு ஜல தீபம் வேறு அல்ல… எத்தனையோ காவியங்கள் இந்தக் கடலில் பிறந்திருக்கின்றன. ஆனால் ஜலதீபத்தைப் போன்ற ஒரு காவியம் இதுவரை பிறந்ததில்லை” என்று கடலை உற்றுப் பார்த்த வண்ணம் வார்த்தைகளை உதிர்த்தார் ஸார்கேல்.

ஜலதீபத்தின் தளபதி அறையில் இதயசந்திரனும் சொன்னான். “மஞ்சு! நம் கதை எப்படியிருக்கிறது பார்த்தாயா?” என்று.

மஞ்சு நகைத்தாள். “பார்த்தேன். கதையின் முடிவு தான் நீங்கள் எதிர்பாராதது” என்றாள்.

“எப்படி?” என்று கேட்டான் அவன். “ஒருத்தி மகனை அழைத்துப்போக வந்தீர்கள்…”

“உம்.”

“இப்பொழுது உங்கள் மகனை அழைத்துப் போகிறீர்கள்!”

“என் மகனா?” என்று துவங்கிய இதயசந்திரன், ”ஓ! அதைச் சொல்கிறாயா?” என்று அவனும் நகைத்து அவளை இறுகப் பிடித்தான்.

மஞ்சு வெட்கத்துடன் சிரித்தாள். ”நல்ல கதை” என்றாள் அந்தச் சிரிப்புக்கிடையே.

சிரிப்பை உணர்ச்சிகள் ஆக்ரமித்து இன்ப அலைகள் உருண்டெழுந்தபோது, “வாழ்வே ஒரு கதை” என்று அவள் இதழ்கள் முணுமுணுத்தன.

மூன்றாம் பாகம் முற்றும்

Previous articleJala Deepam Part 3 Ch52 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch1 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here