Home Historical Novel Jala Deepam Part 3 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

56
0
Jala Deepam part 3 Ch8 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch8 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 8 மிஸ் எமிலி

Jala Deepam Part 3 Ch8 | Jala Deepam | TamilNovel.in

கட்டழகியொருத்தி, தன்னைக் கட்டியணைத் திருப்பதையும், அது மஞ்சு அல்லவென்பதையும் உணர்ந்து கொண்ட பிறகு, தான் காண்பது கனவா அல்லது தனக்குச் சுயநினைவு இருக்கிறதா என்று பெரிய சந்தேகத்தில் திளைத்த இதயசந்திரன், கண்களை மறுபடியும் மூடிமூடி இரண்டு முறைகள் திறந்து பார்த்தான். கட்டியணைத் திருந்தவள் அதுவரையில் தான் கண்டிராதவள். புத்தம் புதியவள் என்பதை உணர்ந்ததும் அவள் பிடியிலிருந்து விலகப் பார்த்தான். ஆனால், அவள் கைகள் பலமாக அவனை அணைத்ததன்றி அவன் தலையை மார்பின்மீது அழுத்திச் சார்த்திக் கொள்ளவும் செய்தன. பருவத்தால் திண்மையுற்றிருந்த அந்த மார்பின்மீது சார்ந்த நிலையில் உணர்ச்சிகள் வாலிபன் உடலில் கொந்தளித்ததால் எப்படியாவது அவள் பிடியிலிருந்து மீள எண்ணிக் கைகளிலொன்றை அவள் மடியில் வைத்து ஊன்றி எழுந்திருக்க முயன்ற பிறகுதான், தான் மிகுந்த அசதியி லிருப்பதையும் தனது உடல் வலு எங்கோ ஓடிவிட்டதையும் அவன் உணர்ந்துகொண்டான். தவிர தலையில் ஏதோ விண் விண்ணென்று தெறிப்பதையும் அறிந்ததால் தனக்குப் பலமான காயம் ஏற்பட்டிருப்பதையும் புரிந்து கொண்டான். அந்தக் காயத்தின்மீது அந்தக் கட்டழகியின் கையொன்று பதிந்திருப்பதையும் அறிந்துகொண்ட இதயசந்திரனுக்குத் தனது நிர்க்கதியான நிலை புரிந்தது, எங்கோ யாராலோ தனக்குத் தீங்கு நேரிட்டிருக்கிற தென்பதையும், வேறு யாரோ தன்னைக் காத்திருக்கிறார் களென்பதையும் ஊகித்துக் கொண்ட தமிழன் கண்களை மறுபடியும் மூடிக் கொண்டான்.

அவன் படுத்திருந்த நிலை அவன் உடல் வலிக்கும் தலை நோவுக்கும் மிக இதமாயிருந்தது. அவன் தலையைத் தாங்கிய தலையணையும் உடலின் ஒரு பகுதியிலிருந்த மடியும், உடலின் குறுக்கே வளைந்து சிறைப்படுத்தியிருந்த இன்பக் கைகளும் அவனுக்கு மிகுந்த நிம்மதியை அளித்தன. அத்தனை நிம்மதியிருந்தும் கூட அதை அனுபவிக்கும் சக்தியை அறவே அவன் இழந்து கிடந்தானாகையால் அவன் புத்தியில் இரவின் சிந்தனைகள் வலம் வந்து கொண் டிருந்தன. பானுதேவியும் பிரும்மேந்திர ஸ்வாமியும் தன்னைச் சிறை செய்து அடைத்தது அவனுக்கு நினைவிருந்தது. அறையில் உணவு உண்டது, மஞ்சுவை நினைத்துப் பஞ்சணையில் படுத்தது, ஆகிய யாவுமே நினைப்பில் இருக்கத்தான் செய்தன. படுத்தபின் கண்ட இன்ப நினைவுகள் கூட மறையவில்லை தமிழக வீரன் சிந்தையிலிருந்து. அதற்குப் பிறகு எல்லாம் சூன்யமா யிருந்தது. ஆகவே என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க. முடியாமல் மீண்டும் கண்களைத் திறந்த கனோஜியின் உபதளபதி அந்த அறையைச் சுற்றுமுற்றும் நோக்கினான். அந்த அறை தான் ஏற்கனவே அடைக்கப்பட்ட அறையல்ல. வென்பதையும், ஏதோ வேறு பெரிய அறையென்பதையும் புரிந்து கொண்டதும் தன்னை அணைத்திருந்த பெண்ணை நோக்கி ஏதோ சொல்ல இதழ்களைக் கூட்டினாலும் சொற்களை உதிர்க்க முடியவில்லை அவனால்.

அவன் பேச முயன்றதையும், கண்ணைத் திறந்து மிரள மிரள விழிப்பதையும் கண்ட அந்தக் கட்டழகி மெள்ள அவனை நோக்கிப் புன்முறுவல் பூத்தாள். “சற்று நிதான மாகப்படுங்கள்” என்று கூறிவிட்டுத். தன் கைகளை அதிகமாக அகற்றாமல் அவனைப் பஞ்சணையில் படுக்க விட்டாள். இருபெரும் தலையணைகளை இழுத்துத் தலை. சற்று உயரமாயிருக்கும்படியும் செய்துவிட்டு எழுந்திருந்து அறைக்கோடிக்குச் சென்று கண்ணாடிக் குப்பியொன்றைக் கொண்டு வந்து அதை அவன் வாயில் வைத்துச் சிறிது திராவகத்தைப் புகட்டவும் செய்தாள். ஏதோ சிறந்த மது தனக்குப் புகட்டப்பட்டிருக்கிறதென்பதை உணர்ந்த இதயசந்திரன் அதை நன்றாக சுவைத்தே உட்கொண்டான். குப்பியை எடுத்துக்கொண்டு மீண்டும் பழைய இடத்தில் வைக்கச் சென்ற அந்தப் பெண் குப்பியை வைத்ததும், அறைக் கதவைத் திறந்து வெளியே தலை நீட்டி “நீங்கள் வரலாம்” என்று யாரிடமோ கூறினாள். சற்று நேரத்திற்கெல்லாம் பூட்ஸ் ஒலிகள் கேட்டன. இரண்டு வெள்ளைக்காரர்கள் அறைக்குள் வந்து அவன் கட்டிலை அணுகி அவனை உற்று நோக்கினர். அவர்களில் ஒருவர் கவர்னர் ஏஸ்லாபி.

“இதயசந்திரா! தலையில் வலி எப்படி இருக்கிறது? என்று வினவினார் ஏஸ்லாபி அன்புடன்.

இதயசந்திரன் தலையணையும் தொட்டு, சற்று எட்ட நின்றிருந்த அந்தப் பெண்ணையும் நோக்கினான். அவள் பருவப் பெண்ணாயிருந்ததையும் நல்ல வெளுப்பாக ஆடை அணிந்திருந்ததையும், அவள் கண்களில் மிதமிஞ்சிய அனுதாபமும் கருணையும் சுடர்விட்டதையும் கண்டான். பிறகு கண்களை கவர்னர் மீது திருப்பி, “எந்த வலிக்கும் சாந்தி அளிக்கும் மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறதே” என்று கூறினான்.

கவர்னர் ஏஸ்லாபியின் இதழ்களில் இளநகை அரும்பியது. “இதயசந்திரா! பெண்களை நீ விரும்பும் தாகவும் பெண்களும் உன் வலையில் விழுவதாகவும் கேள்விப்பட்டேன். அது உண்மையென்று இப்பொழுது புரிகிறது. இந்த நர்ஸ் உனக்குச் சரியாகத்தான் சிகிச்சை செய்திருக்கிறாள்” என்று கூறிவிட்டு நர்ஸை நோக்கி, “எமிலி! இந்தத் தமிழனை நம்பாதே! இவன் ஒவ்வொரு பெண்ணாகத் தொட்டுத் தொட்டு நட்டாற்றில் விடுகிறான்’ என்று சொல்லி லேசாகக் கண்களையும் சிமிட்டினார். அவர் பக்கத்திலிருந்த வெள்ளைக்கார ஆர்டலியும் மெள்ளப் புன்முறுவல் செய்தான்.

இதயசந்திரன், சங்கடத்தால் ஒரு வினாடி கட்டிலில் அசைந்தானானாலும் பிறகு தன்னைத் திடப்படுத்திக் கொண்டு கேட்டான், ”நான் இந்த இடத்துக்கு எப்படி வந்தேன்?” என்று.

கவர்னர் சிறிதும் சிந்திக்காமல், “நீயாக வரவில்லை இங்கு. என்னால் கொண்டு வரப்பட்டாய்” என்று கூறி விட்டுக் கேட்டார், “பானுதேவியின் இருப்பிடத்திற்குச் சென்ற பிறகு என்ன நடந்ததென்று நினைவிருக்கிறதா?” என்று.

இதயசந்திரன் பதில் சொல்லுமுன்பு சற்று சிந்தித்து விட்டுத் தன் கச்சையைத் தடவினான். கஹினா கொடுத்த ஓலையைக் காணாததால் தான் நினைவிழந்திருந்த சமயத்தில் அதை யாரோ எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அநேகமாக பிரும்மேந்திர ஸ்வாமி அல்லது பானுதேவியின் கையில் அது சேர்ந்திருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தான். ஆகையால் நினை விழந்தது பானுதேவியின் மாளிகையில் தானென்பதையும் சந்தேகமறத் தெரிந்து கொண்டான். ‘அப்படி அங்கு நினைவிழந்திருந்தால் எப்படி நினைவிழந்திருக்க முடியும்? எனக்கு மயக்கம் வர மருந்தேதும் கொடுக்கப்பட வில்லையே’ என்று நினைத்துப் பார்த்து ஏதும் தெரியாததால் சுருக்கமாக நடந்ததைச் சொன்னான் கவர்னரிடம்.
அவன் கதையைக் கேட்ட கவர்னர் ஏஸ்லாபி சில வினாடிகள் பேசவில்லை. பிறகு கூறினார்: “இதயசந்திரா! நீ எப்பொழுது என்னிடம் தூது வந்தாயோ அந்த வினாடியிலிருந்து என் பாதுகாப்பிற்குள்ளாகி விட்டாய். உன்னைக் கவனிக்க வேண்டியது என் கடமையாகி விட்டது. ஆகையால் நீ என்னிடம் பேசிவிட்டுக் கிளம்பியதி லிருந்து உன்னை என் ஒற்றர்கள் கண்காணித்தார்கள். நீ சத்திரத்தில் தங்கியது, மாலையில் கடற்கரையில் நீராடியது, பானுதேவி உன்னை அங்கு சந்தித்தது.

மிஸ் எமிலி வீட்டனில் அழைத்துச் சென்றது அனைத்தும் எனக்கு அறிவிக்கப்பட்டது. பிறகு அந்த மாளிகையை இரவில் கண்காணிக்கவும் ஒருவனை நியமித்தேன்; அவனுக்கு உதவவும் இருவர் நியமிக்கப்பட்டார்கள்.”

“பிறகு என்ன நடந்தது பிரபு?” என்று வினவினான் இதயசந்திரன்.

“நள்ளிரவு தாண்டியதும், நீ வெளியில் இருவரால் தூக்கி வரப்பட்டாய். நீ ஏறிச் சென்ற பீட்டன் வண்டி வெளியில் நின்றிருந்தது. அதில் உன்னை ஏற்றிக்கொண்டு இரு மகாராஷ்டிர வீரர்கள் காவலுடன் வண்டி புறப்பட்டது. எனது ஒற்றர்கள் புரவிகளில் வண்டியைக் கண்காணித்துத் தொடர்ந்தார்கள். பானுதேவியின் காவலாட்கள் உன்னைப் பழையபடி சத்திரத்தில் கொண்டு வந்து இரு வெள்ளைக்காரர்களிடம் ஒப்படைத் தார்கள்……’

“உம்…”
“அவர்களில் ஒருவன் டீ காஸ்ட்ரோ” என்று அறிவித்தார் கவர்னர் சாவதானமாக.

“என்ன!” என்று வியப்புடன் வினவினான் தமிழன்.

”ஆம். டீ காஸ்ட்ரோவிடம் தான் நீ ஒப்படைக்கப் பட்டாய். விடியற்காலையில் உன்னைக் கப்பலுக்குக் கொண்டு போவதாகச் சொல்லிய டீ காஸ்ட்ரோ நீ எழுந்திருக்காதிருப்பதற்காக உன் தலையில் தன் கைத் துப்பாக்கியின் பிடியால் ஓங்கி அடித்தான். பிறகு சத்திரத்துக்குள் தூக்கிச் செல்லப்பட்டாய்.”

பிறகு நடந்ததை கவர்னர் சொல்லாவிட்டாலும் புரிந்துகொண்டான் இதயசந்திரன். இருப்பினும் கவர்னர் சொல்லவே செய்தார். “இதயசந்திரா! சத்திரத்தின் நிர்வாகி மகாராஷ்டிரர்களின் ஊதியம் பெற்றவன். நீ இங்கு வருவதை அவன் மூலமாக பானுதேவியும் காஸ்ட்ரோவும் முன்கூட்டியே அறிந்திருக்கிறார்கள். நீ வந்ததும் உனக்கு அறை கொடுக்கப்பட்டதும் அவர்கள் உத்தரவின் மேல்தான். ஆகவே அவனை எனது சோல்ஜர்கள் இருவரை விட்டு மிரட்டி உன்னை இங்கு, கொணர்ந்தேன். உன்னைப் பரிசோதித்த டாக்டர் உனக்கு அதிக ரத்தசேதம் ஏற்பட்டிருப்பதாகவும், நீ பலஹீனமா யிருப்பதாகவும் உன்னை இரவு பூராவும் பார்த்துக் கொள்ள ஒரு நர்ஸ் தேவையென்றும் கூறி இவளை இங்கு. விட்டுப் போனார். மிஸ் எமிலியின் கை மிகுந்த ராசி யுடையது. அந்த ராசிக் கரம் படாத பிரிட்டிஷ் சோல்ஜர்கள் மிகக் குறைவு. அவளை நாங்கள் தேவதையாகப் பாவிக்கிறோம். உன்னைக் காக்க அவள் கிடைத்தது உன் பாக்கியம்” என்று கூறினார் ஏஸ்லாபி.
இதயசந்திரன் நன்றி ததும்பும் கண்களை அவர்மீது திருப்பினான். கடுமை நிரம்பிய குரலில் கூறினான், “நான் காஸ்ட்ரோவைச் சந்திக்க வேண்டும்” என்று.

“இன்றிரவு சந்திக்கலாம்” என்று கூறிய கவர்னர் மெல்ல நகைத்தார். “இன்றிரவா?” என்று வினவினான் இதயசந்திரன். “இன்றிரவு நடன விருந்தல்லவா?”

“ஆமாம்”

“அதற்குத்தான் உனக்கு அழைப்பிருக்கிறதே. அதற்கு வரும்போது காஸ்ட்ரோவைச் சந்திக்கலாம். அவனுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன்.”

இதயசந்திரன் நகைத்தான். “கவர்னர் பிரபு! இந்தப் பம்பாயில் உள்ள அத்தனை விரோதிகளையும் விருந்து மண்டபத்தில் கூட்டுகிறீர்கள்?” என்று கேட்கவும் செய்தான் நகைப்பின் ஊடே.

கவர்னர் ஏஸ்லாபி பெரிதாக நகைத்துவிட்டு, “இதய சந்திரா! ஏஸ்லாபியின் நடன விருந்தில் விரோதிகள் நண்பர்களாகத்தான் இருக்க முடியும். புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிக்கும் அறநிலைதான் அங்கு நிலவும். சண்டையை நினைத்தாலுங்கூட அங்கு சரிப்பட்டு வராது. அங்குள்ள விதிகளை மீறுபவன் யாராயிருந் தாலும் அவன் உடனே சிறைக்கு அனுப்பப்படுவான். எனது சோல்ஜர்கள் கண்ணும் கருத்துமாயிருப்பார்கள்” என்று கூறினார். ‘நான் எத்தனையோ விருந்துகளை நடத்தியிருக்கிறேன் இதயசந்திரா! ஆனால் இத்தகைய விருந்தை இதுவரை நடத்தியதில்லை. இந்த நடன விருந்து ஒரு புரட்சி விருந்து.. வெள்ளையரைத் தவிர வேறு யாரும் வரமுடியாத விருந்தில் இன்று சுதேசிகள் கலந்துகொள்கிறார்கள். ஒரு கடற் கொள்ளைக்காரன், ஓர் அரசகுல மகள், சதி செய்பவர்கள், சதியைக் குலைக்கத் தீர்மானமுள்ளவர்கள், பிரிட்டிஷாரை நாட்டைவிட்டுத் துரத்த இஷ்டமுள்ளவர்கள், நாட்டில் நிரந்தரமாகக் காலூன்றத் தீர்மானித்திருக்கும் பிரிட்டிஷ் பிரஜைகள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள். இந்த நடன விருந்து பிற்காலத்தில் இங்கு பிரிட்டிஷாரும் சுதேசிகளும் கலந்து வாழ்வதற்கு ஒரு முன்னோடி” என்று விளக்கி விட்டுக் கவர்னர் ஏஸ்லாபி வெளியே சென்றார் ஆர்டர்லி பின்தொடர.

அவர் சென்றபின் பெரும் சிந்தனையிலிறங்கினான் இதயசந்திரன். இவ்வளவு சீரிய சிந்தனை உள்ள ஏஸ்லாபியை, பெரும் ராஜதந்திரியை, இணையிலா அறிவாளியை, பிரும்மேந்திர ஸ்வாமியோ, ஷாஹுவோ யாருமே அடக்க முடியாதென்பதையும், அடக்குவதானால் கனோஜிதான் அடக்க முடியுமென்பதையும் புரிந்து கொண்டான் தமிழக வீரன். பிரிட்டிஷாரின் நட்பைக் கனோஜி நாடுவதற்குள்ள பல காரணங்களில் கவர்னர் ஏஸ்லாபியும் ஒருவர் என்பது திட்டவட்டமாகத் தெரிந்தது இதய சந்திரனுக்கு. கவர்னர் ஏஸ்லாபி தொடர்ந்து பம்பாயில் இருந்தால் பம்பாயைத் தவிர இன்னும் பல இடங்களும் பிரிட்டிஷ் வசப்படும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளவும் செய்தான். இந்த நிலையில் போர்ச்சுகீஸியர் பலம் அதிகமாயிருந்தாலும் அவர்கள் கொலையாலும், கொள்ளையாலும் மக்களின் வெறுப்பைப் பெற்றுவிட்டதால் பாரதத்தில் காலூன்றுவது கஷ்டமென்பதையும், ஆனால் ஏஸ்லாபி பாதி கருணையாலும் பாதி ராணுவ பலத்தாலும் நாட்டை அடிமைப்படுத்தும் சக்தி வாய்ந்தவ ரென்பதையும் உணர்ந்து கொண்டான். ஏஸ்லாபிக்குச் சமதையான அறிவுடைய கனோஜியால்தான் நாடு மீள முடியுமென்பதையும், ஆகையால் கனோஜி சொல்லும் எதையும் நிறைவேற்றுவது தனது கடமையென்றும் தீர்மானித்துக் கொள்ளவும் செய்தான்.

அவன் சிந்தனையிலாழ்ந்து விட்டதைக் கண்ட எமிலா அவன் கட்டிலை அணுகி அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் தலையைத் தொட்டுப் பார்த்தாள். “பலஹீனமர் யிருக்கிறீர்கள். படுத்துக்கொள்ளுங்கள்” என்று அவனை இரு கைகளாலும் கட்டிப்பிடித்து மெல்லப் படுக்க வைத்தாள். சுயநினைவு பூர்ணமாக வந்துவிட்டதால் அவள் தன்னைத் தொடுவதும் கட்டிப் படுக்கவைப்பதும் பெரும் சங்கடமாயிருந்தது தமிழனுக்கு. ஆகவே சொன்னான், “எமிலி, இனி நானே படுப்பேன், எழுந்திருப்பேன்’ என்று.

“ஏன், நான் படுக்க வைத்தாலென்ன? கசக்கிறதா?” என்று கேட்டு நகைத்தாள் எமிலி.

இதயசந்திரன் அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. வேறு கேள்வி கேட்டான், “உனக்குக் கல்யாணமாக வில்லையா?’ என்று.

“மிஸ் எமிலி என்று கவர்னர் கூப்பிட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று வினவினாள் எமிலி.

இதயசந்திரன் அவளை நோக்கிப் புன்முறுவல் செய்தான். “மன்னிக்க வேண்டும். எனக்கு ஆங்கிலம் அதிகமாகத் தெரியாது” என்று கூறவும் செய்தான்.
“ஆனால்…” வாசகத்தை முடிக்காமல் நகைத்தாள் எமிலி.

“ஆனால் என்ன?”

“எதுவும் குறைவில்லை.”

”எது குறைவில்லை?”

“மொழி தெரியாவிட்டாலும்…”

“உம்…?”

“வெள்ளைக்காரிகளை வசப்படுத்தத் தவறுவதில்லை.”

“என்ன! என்ன சொல்கிறாய் எமிலி?” என்று பதட்டத்துடன் கேட்டான் இதயசந்திரன்.

எமிலி அவன் நெற்றியில் முத்தமிட்டாள். “நான் காதரைனல்ல” என்று கூறி நகைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

அன்று பகல் முழுவதும் அடிக்கடி வந்து இதய சந்திரனைக் கவனித்துக் கொண்டாள் எமிலி. அவன் துணிகளை மாற்றிக் கொள்ளவும் உதவி புரிந்தாள். உடலை அவளே பஞ்சு கொண்டு வெந்நீரில் நனைத்துத் துடைத்து விட்டாள். டாக்டர் கொடுத்த மருந்தையும் இரண்டு மூன்று முறை புகட்டினாள்.

இரவு வந்ததும் புத்தாடைகளைக் கொண்டு வந்தாள் எமிலி. அவனுக்கு அவளே அவற்றை அணிவித்து, தலைக் கட்டை மறைக்க ஒரு சிவப்புத் துணியையும் கட்டி முடிக்குக் குறுக்கே முகத்தைக் கால்வாசி மறைத்தாள். “இப்பொழுது அசல் கடற்கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறீர்கள்” என்று அவனைப் பார்த்துப் பரிகசித்து விட்டு அவனுடன் கையைக் கோத்துக் கொண்டாள். “வாருங்கள்” என்றும் அழைத்துக் கையை இழுத்தாள்.

“எங்கு?”

“நடன விருந்துக்கு.”

“அதற்கு நீ என் கையைக் கோத்துக் கொள்வானேன்?”

“இதுதான் வழக்கம்.”

“நல்ல வழக்கம்!”

“வேறொரு காரணமும் இருக்கிறது.”

“என்ன காரணம்?”

“முதல் டான்ஸ் என்னுடன்.”

இதயசந்திரன் விழித்தான், “என்ன டான்ஸா?” என்று .

“நாம் இருவரும் இணைந்து ஆடுவோம்” என்ற எமிலி அவனை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு சென்றாள்.

Previous articleJala Deepam Part 3 Ch7 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here