Home Historical Novel Jala Deepam Part 3 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

59
0
Jala Deepam part 3 Ch9 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 3 Ch9 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 3 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 9 நடன மண்டபம்

Jala Deepam Part 3 Ch9 | Jala Deepam | TamilNovel.in

பிரிட்டிஷ் சராயும், மகாராஷ்டிர சட்டையும், தலையின் கட்டை மறைக்கச் சிவப்புத் துணியைக் குறுக்கிலும் அணிந்து, அந்த தலைச் சிவப்புத் துணி பாதி ஒருபுறம் தொங்க சாட்சாத் கடற்கொள்ளைக்காரன் போல் விளங்கிய இதயசந்திரன், எமிலியின் அழகிய கை தன்னுடைய கையுடன் கோத்துக்கொள்ளவே பெரும் சங்கடத்துடன் அறையிலிருந்து நடந்தான். நாலைந்து அடிகள் நடப்பதற்குள்ளாகவே எமிலியின் வளைந்த கையில் நுழைந்து பிணைந்து கிடந்த தனது கையின் பகுதி அவளது விலாவிலும், விலாவை அணுகியிருந்த அழகுப் புடைப்பிலும் பட்டுவிட்டதையும் அதைப்பற்றி எமிலி சிறிதும் லட்சியம் செய்யாமல் தன்னை நெருங்கியே நடந்ததையும் பார்த்த அந்தத் தமிழக வீரன் மனநிலை பெரிதும் சிதறத் தொடங்கியது. அறைவாயிலைத் தாண்டியதும் எமிலி அவனை அழைத்துக்கொண்டு மாடித் தாழ்வாரத்தின் முகப்புக்குச் சென்று, “வீரரே! சற்று எட்டிப் பாருங்கள். விருந்துக்கு யார் யார் வருகிறார்கள், எப்படி எப்படி வருகிறார்கள் என்பது புரியும்” என்று கூறி அவனுடன் இணைந்து நின்றாள் கோத்த கை கோத்தபடி.

இதயசந்திரன் மாடித் தாழ்வாரத்தின் கைப்பிடியில் சார்ந்த வண்ணம் சற்றுக் குனிந்து பார்த்தான், பார்த்தவன் பிரமித்து நின்றான் பல விநாடிகள். கீழே கவர்னர் மாளிகைக்கும் மாளிகைக் கோட்டைச் சுவருக்கும் இடையே இருந்த திறந்த வெளியில் வண்டிகள் சாரிசாரி யாக ஊர்ந்து வந்தன. முறைப்படி ஒரே சீராக ஒரே நிதானத்துடன் செலுத்தப்பட்ட பீட்டன் கோச் வண்டிகள்
ஒவ்வொன்றாக நடன மண்டப வாயிலுக்கெதிரில் வந்ததும் பூர்ண ராணுவ உடையணிந்த வெள்ளைக்காரர் இருவர் வண்டிக் கதவுகளைத் திறந்தார்கள். அவற்றி லிருந்து முதலில் இறங்கிய வெள்ளைக்காரர்கள் கைலாகு. கொடுத்து வெள்ளைக்காரிகளை வண்டியிலிருந்து மிக மரியாதையாகக் கீழே இறக்கினார்கள். அப்படி இறக்கிய பின் அடுத்த வண்டி அந்த இடத்துக்கு வந்தது. இப்படி ஒவ்வொரு வண்டியாக குறித்த இடத்துக்கு வந்து வந்து வெள்ளைக்காரர்கள் ஆண்கள் பெண்களாக ஜோடி ஜோடியாக வந்து இறங்கியதையும் ஒவ்வொன்றிலும் ஓர் ஏற்பாடும் திட்டமும் இருந்ததையும் கவனித்த இதய சந்திரன், “எப்படி இந்த மனிதர்கள். ஒரே மாதிரியாக யந்திரங்கள் போல் இயங்க முடிகிறது!” என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான், வியப்பும் அடைந்தான்.

பத்து வெள்ளைக்காரர்கள் வண்டிகள் போனதும் நாலைந்து மகாராஷ்டிரப் பிரபுக்களின் வண்டிகள் வந்தன. அதிலிருந்தும் ஜோடியாகவும் உதிரியாகவும் மகாராஷ்டிரர் இறங்கினார்கள். அவர்களில் சிலர் வர்த்தகர். சிலர் பிரிட்டிஷ் ஏஜெண்டுகள். இன்னும் சிலர் துவிபாஷிகர் என்ற மொழிபெயர்ப்பாளர்கள் என்பதை அவர்களுடைய விதவிதமான உடைகளிலிருந்தே புரிந்து கொண்டான் இதயசந்திரன். தவிர, கோட்டைச் சுவருக்கும் கவர்னர் மாளிகை வாயிற்படிக்கும் இடையிலிருந்த திறந்த பகுதியில் பிரிட்டிஷ் சோல்ஜர்களின் காவல் மிகப் பலமாயிருந்தது. நீண்ட துப்பாக்கிகளைத் தாங்கிய பிரிட்டிஷ் சோல்ஜர்களும் அவர்களால் பயிற்சியளிக்கப்பட்ட இந்திய சிப்பாய்களும் மதிலோரங்களிலும் மாளிகை முன்னிலையிலும் அணிவகுத்து நின்றிருந்தார்கள். கோட்டைப் பெருமதிலின் வாயிலுக்கருகில் பெரும் புரவிகளில் ஏறிய இரண்டு பிரிட்டிஷ் சோல்ஜர்கள் காவல் புரிந்தனர். கோச்சோ பீட்டனோ, வேறு புரவிகளில் பிரபுக்களோ வரும்போது புரவிகளிலிருந்தவர்கள் தங்கள் தலையில் இருந்த ஹாட்டுகளின் முகப்பைக் கையால் தொட்டு மரியாதை காட்டினார்கள். மாளிகை வாயிலை அதே வண்டிகளோ புரவிகளோ வந்தடைந்தபோது அங்கிருந்த பிரிட்டிஷ் சோல்ஜர்கள் ஹாட்டுகளைக் கழற்றி மார்பில் வைத்துத் தலை வணங்கி மரியாதை செய்தார்கள். எல்லாம் ஒரு திட்டமான ஏற்பாடுடனும், மரியாதையுடனும் நடப்பதைக் கண்ட இதயசந்திரன் இத்தகைய கட்டுத்திட்டங்களுடன் நடந்து கொள்ளும் நாட்டினரிடமிருந்து இந் நாட்டைக் கனோஜி ஒருவர் தான் காக்க முடியும் என்று உள்ளூரச் சொல்லிக் கொண்டதன்றி அந்த எண்ணத்தின் விளைவாகப் பெருமூச்செறியவும் செய்தான்.

அவன் பெருமூச்செறிந்ததைக் கண்ட எமிலி நகைத்தாள். சற்று நெருங்கி அவன் உடலுடன் அவள் உடலை இழைக்கவும் செய்தாள். இதயசந்திரன் அந்த இழைப்பை ஏற்கவுமில்லை, துறக்கவுமில்லை. சிலையென நின்றபடி கேட்டான், ”எமிலி , எதற்கு நகைக்கிறாய்?” என்று.

எமிலி மறுபடியும் நகைத்தாள். இம்முறை சற்றுப் பெரிதாக, “எதற்கு எமிலி சிரிக்கிறாய்?” என்று மீண்டும் வினவினான் தமிழன் சினம் மிகுந்த குரலில்.

”உங்கள் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டீர்களே என்று நகைத்தேன்” என்று கூறிய எமிலி, அவன் கைக்குள் அகப்பட்டிருந்த தனது கையைச் சிறிது அழுத்திக் கொடுத்தாள்.

“என் சுபாவமா?” என்று வினவினான் இதயசந்திரன் ஏதும் புரியாமல் அவளை நோக்கித் திரும்பி.

அவள் சற்றுத் திரும்பித் தன் கண்களை அவன் கண் களுடன் உறவாட விட்டாள். அந்தக் கண்களில் பெரும் காந்த சக்தியிருந்தது அவனுக்குப் புரிந்தது. அவள் அழகிய உருண்டைமுகம் அசாத்ய வெள்ளையாயிருந்ததன்றி வெட்கப்பட்ட ஓரிரு சமயங்களில் திடீரெனக் குங்குமச் சிவப்பாகச் சிவக்கவும் செய்தது. கன்னங்கள் சிவந்து ரோஜாக் கன்னங்களாயின. அவள் இதழ்கள் அப்பப்பா எத்தனை சிவப்பு? விளக்கொளியில் அப்படித் தெரிகிறதோ? இல்லை, இல்லையே! உள் ரத்தமே அப்படி வெளியில் வந்து ஒளியுடன் கலந்து விளையாடுவது போன்ற பிரமை! அவற்றின் சிவப்பில்தான் எத்தனை நீரோட்டம்! இப்படி நினைத்துப் பிரமித்த இதயசந்திரனை நோக்கிய எமிலி கேட்டாள்: “என்ன சிலை போலாகி விட்டீர்கள்!” என்று.

“சிலையொன்று கண்டேன்…”

“என்ன சிலை?”

“அழகுச் சிலை.”

“அதனிடம் மோகம் கொண்டீர்கள்.”

“இல்லை இல்லை. அழகை வியந்தேன்.”

“வியந்தீர்கள். ரசித்தீர்கள். பிறகு உறவும் கொண்டாட முற்பட்டீர்கள்.”

“அதெல்லாம் ஒன்றுமில்லை எமிலி.”

மீண்டும் நகைத்தாள் அவள். “என்ன பெயர் சொல்லி அழைத்தீர்கள்?” என்றும் கேட்டாள்.

“எமிலி என்று அழைத்தேன்” என்றான் இதய சந்திரன்.

எமிலி அவனை நோக்கிப் புன்முறுவல் செய்தாள்.

“வீரரே!” என்று இழுத்தாள் மெதுவாக. ”என்ன எமிலி?”

“என்னை எமிலி என்றழைக்கும் உரிமை என்னை. மணம் செய்துகொள்ளப் போகிறவருக்குத்தான் உண்டு.

இதயசந்திரன் திகைத்தான். மெள்ள மெள்ள அவனுக்கு நினைவு வந்தது. அப்பொழுது, ‘காதரைனும் இதையேதான் சொன்னாள். இவளை நான் மிஸ் எமிலி என்று கவர்னர் அழைப்பதுபோல் அழைக்கவேண்டும். அடாடா, ஏதாவது இவள் தவறாக நினைத்துக்கொள்ளப் போகிறாளே?’ என்று உள்ளூர எண்ணமிட்ட இதயசந்திரன், “மிஸ் எமிலி. மன்னிக்கவேண்டும்” என்றான்.

எமிலி தன் அழகிய கையை அவன் கையுடன் நன்றாக இணைத்துக்கொண்டாள். “இதில் மன்னிப்பதற்கு ஏது மில்லை” என்று கூறினாள்.

இதயசந்திரன் சிந்தனை நிரம்பிய கண்களை அவள் முகத்தில் நிலைக்கவிட்டான். “நீ சொல்வது புரியவில்லை எமிலி” என்றும் கூறினான்.
“வீரரே! நீங்கள் எமிலி என்றழைப்பதில் எனக்கு ஆட்சேபணை இருந்தாலல்லவா நீங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும்” என்று மெள்ளக் கூறினாள், வேறு பக்கம் பார்த்தவண்ணம்.

இதயசந்திரன் மென்று விழுங்கினான். “மிஸ் எமிலி” என்று மெள்ள அழைக்கவும் செய்தான்.

“என்ன. வீரரே?” என்றாள் அவள் தாழ்வாரக் கைப் பிடியில் சாய்ந்து வெளியே கண்களை ஓட்டியவண்ணம்.

“நம் உறவு பரஸ்பர நட்புக்குமேல் போகக்கூடாது” என்றான் இதயசந்திரன், தன் கையை அவள் கையிலிருந்து விலக்கி அவள் இடையில் செலுத்திய வண்ணம். எமிலியின் இடை மிகவும் வழவழப்பாக இருந்தது. அதன் அடி மிக உறுதியாகவும் கடினமாகவும் இருந்தது.

எமிலி உள்ளூர நகைத்துக்கொண்டாள். அவன் கை தனது இடையில் ஊர்ந்து வளைத்துக் கொள்வதையும் உணர்ந்து கொண்டதால் உள்ளே உதிர்ந்த சிரிப்பை மறைத்து, “ஏன் அதற்குமேல் உறவு கூடாதா?” என்று கேட்டாள் சரளமான குரலில்.

துணிவான அந்தக் கேள்வி இதயசந்திரனைத் தூக்கி வாரிப்போட்டது. அவள் இடையை நன்றாக அணைத்து இழுத்துக்கொண்ட அவன் அவள் காதுக்கருகில் குனிந்து,.

”எமிலி! நீ எனக்குச் சிகிச்சை செய்தவள். உன்னிடம் எனக்கு அபரிமித நன்றியிருக்கிறது” என்று கூறினான்.
“அந்த நன்றியை எப்படிக் காட்டப் போகிறீர்கள்?” என்று வினவினாள் எமிலி.

“என் இதயத்தில் உனக்கு நிரந்தரமாக இடமிருக்கும் எமிலி.”

“வீரரே.”

“என்ன எமிலி?”

“உங்கள் இதயத்தில்…”

“சொல்.”

எமிலி ஏதோ யோசித்தாள். பிறகு திடீரெனப் பேச்சை மாற்றி, “பெண்கள் கூட்டம் மிக அதிகமாயிருக் கிறது. அதில் நெருக்கியடித்துக் கொண்டுதான் புக வேண்டும்” என்று கூறிவிட்டு, “வாருங்கள் போவோம். நடனம் துவங்கும் சமயமாகிவிட்டது” என்று அவன் கையுடன் தனது கையை மீண்டும் இணைத்துக் கொண்டாள்.

இதயசந்திரன் இதயத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்துலாவ அவளுடன் நடந்து சென்றான். எமிலியின் அற்புத அழகு அவனைப் பிரமிக்க வைத்திருந்தது. தான் சம்பந்தப்பட்ட பானுதேவி, மஞ்சு, காதரைன் இவர் களுடன் எமிலியையும் சேர்த்து நிற்க வைத்தான் மனப் பீடத்தில். அந்த மூவருக்கும் எமிலி எந்தவிதத்திலும் குறைந்தவளல்லவென்பதையும் நான்கு பெண்களும் நான்குவித அழகுப் பிறவிகளென்பதையும் உணர்ந்து கொண்டதால் அவன் மனம் பலபடி சலித்தது. புத்தி ஓரளவு குழம்பியும் கிடந்தது. இத்தகைய நிலையில் எமிலி யுடன் கையுடன் கைகோத்து வெள்ளைக்காரப் பாணியில் மாடிப்படிகளில் இறங்கி நடன கூடத்திற்கருகாமையில் வந்த இதயசந்திரன் கீழே கண்ட காட்சியைக் கண்டு மாடிப்படியிலேயே ஸ்தம்பித்து நின்றான்.

கீழே திரண்டு நின்றது கந்தர்வ உலகமா, அப்சர உலகமா, தேவலோகமா, பூலோகமா என்பது புரியவில்லை தமிழனுக்கு. `நாலாவிதமான வர்ணங்களில் பலப்பல ஆடைகள் அணிந்து வந்திருந்தார்கள் பிரிட்டிஷ் அதிபதி கள் பலர். ஆண்களில் சிலர் மாலுமிகளாகக் காட்சியளித்தார்கள். இன்னும் சிலர் கறுப்பு சூட்டும் கழுத்தில் ‘போ’ என்றழைக்கப்படும் சிறு டையும் அணிந்திருந்தார்கள். வெள்ளைக்காரப் பெண்மணிகள் உடல் பூராவும் மறைக்க நீண்ட உடைகளை மேலே அணிந்திருந்தாலும், அந்த ஆடைகளை ஆடவர்கள் மிகுந்த பணிவுடன் கழற்றிக் கதவருகில் நின்ற காவலரிடம் கொடுக்கவே அவர்கள் அவற்றைப் பயபக்தியுடன் வாங்கிப் பக்கத்தில் பத்திரப் படுத்தினார்கள். மேலாடை நீங்கியதும் உள்ளேயிருந்த அலங்கார கௌன்களில் அப்சரஸ்கள் போல் காட்சியளித்த வெள்ளைக்கார மாதர் அதிக ஆபரணங்களை அணிய வில்லையென்றாலும் அவர்கள் அணிந்திருந்த ஒற்றைக் கழுத்து ஆபரணங்கள் பளீரென அங்கிருந்த பவர் விளக்குகளில் மின்னின.

விருந்துக்கு வந்திருந்த மகாராஷ்டிரப் பிரபுக்கள் தங்கள் சம்பிரதாய உடைகளை அணிந்து. வந்திருந்ததால் அந்தக் கூட்டத்திலிருந்து தனியாகப் பிரிந்து தெரிந்தாலும் அவர்களிடையும் கண்ணியம் இருக்கவே செய்தது. அவர்கள் தலையில் பிரிமணைபோல் சுற்றப்பட்டிருந்த தலையணிகளை அவர்கள் மெல்ல எடுத்ததும் அவற்றையும் வெள்ளைக்காரக் காவலர் மிகுந்த மதிப்புடன் வாங்கித் தனியாக வைத்தனர். இப்படிப் பலபடி உள்ளே வந்தவர் களுக்குச் சிற்றுண்டிகளும் மது வர்க்கங்களும் வழங்க நடனமண்ட்பத்தின் கோடியில் பட்லர்கள் பலர் நீண்ட மேஜையின் பின்புறத்தில் நின்றிருந்தனர். அங்கு தாங்களாகவே சென்ற வெள்ளைக்காரப் பிரபுக்களும் பெண் மணிகளும் சிற்றுண்டிகளைச் சிறிது அருந்தி மது வர்க்கங் களைச் சிறு கண்ணாடிக் கோப்பைகளில் உறிஞ்சினார்கள். சுதேசிகளில் சிலர் மட்டும் அவர்களைப் பார்த்து ஏதோ குடித்தாலும் பெரும்பான்மையானவர்கள் விலகி ஒரு. பக்கமாக இருந்த சோபாக்களில் அமர்ந்திருந்தார்கள்.

கவர்னர் ஏஸ்லாபி அனைவரையும் வரவேற்கத் தமது மனைவியுடன் அந்த நடன மண்டபத்தின் முகப்பிலேயே நின்றிருந்தார். ஒவ்வொரு ஜோடி வந்தபோதும் தனி நபர் வந்தபோதும் அந்தரங்கக் காரியதரிசி அவர்களை அறிமுகப் படுத்தியதும் கவர்னர் தம்பதிகள் அவர்களுடன் கை குலுக்கி நல்லவரவு கூறினார்கள். மாடிப்படியிலிருந்து இவைகளைக் கவனித்துக்கொண்டிருந்த இதயசந்திரன் தனக்குத் தெரிந்தவர்கள் யாரும் அதுவரை வராததைக் கவனித்தான். கவர்னர் எல்லோருக்கும் ஒரேவிதமான வரவேற்பை அளித்ததைக் கண்டு பிரமித்தான். சற்று நேரத்திற்கெல்லாம் மானுவல் டீ காஸ்ட்ரோ வந்த போதும் சரி, அவனைத் தொடர்ந்து இரண்டு தோழிகளுடன் பானுதேவி வந்தபோதும் சரி, கடைசி யாகக் காதரைனும் கிப்போர்ட்டும் வந்தபோதும் சரி, கவர்னர் எந்தவிதமான முக மாறுதலையும் காட்டாததைக் கண்ட இதயசந்திரன் ஏஸ்லாபியின் மன உறுதியை எண்ணிப் பெரு வியப்படைந்தான்.

டீ காஸ்ட்ரோ வழி காட்ட, தனியான ஓர் ஆசனத்தில் சென்று பானுதேவியும் அவள் தோழிகளும் அமர்ந்து கொண்டார்கள். அதற்கு அடுத்த ஆசனத்தில் காதரைனும், கிப்போர்ட்டும் அமர்ந்தார்கள். இவர்கள் வந்ததும் அதுவரையில் அந்தக் கூட்டத்தின் பக்கமே வராமல் தூர நின்ற மிஸ்டர் ப்ரௌன், கவர்னரை அணுகிக் காதில் ஏதோ சொன்னார். கவர்னர் பதிலுக்குத் தலையை மட்டும் லேசாக அசைத்தார். அடுத்த விநாடி மிஸ்டர் ப்ரௌன், தூர இருந்த வாத்திய கோஷ்டிக்குச் சைகை காட்டவே வாத்தியங்கள் திடீரென உயர்ந்து கோஷித்தன. ஒரே சுருதியில் பெரிதாக எழுந்து ஒலித்த சுமார் ஏழெட்டு வாத்தியங்கள் அந்த நடன அறையை இசை மயமாக அடித்தன.

நடன மண்டபத்தின் சலவைக்கல் சுவர்களில், கூட்டத்தில் இணைந்து நகர்ந்த வெள்ளைக்கார ஜோடிகளின் பிரதி பிம்பங்கள் ஊர்ந்தன. பல லஸ்தர் விளக்குகளாலும், கூரையிலிருந்து தொங்கிய பட்டை தீட்டிய கண்ணாடி குஞ்சல விளக்குகள் பரப்பிய நீலம், ஊதா, பச்சை, மஞ்சள் ஆகிய பல வர்ணங்களாலும், யாரையும் மயக்கும் வண்ண மிருந்தது அந்த நடன மண்டபம். ஆண் பெண் ஜோடி பரஸ்பரம் தழுவிக்கொண்டு இசைக்குத் தகுந்தபடி ஊர்ந்தார்கள். மிஸ் எமிலி, “வாருங்கள். நடனம் துவங்கி விட்டது” என்று இதயசந்திரனை இழுத்துக் கொண்டு மண்டபத் தரைக்கு வந்தாள். அவள், ‘உங்கள் இடது கையால் என் இடையை அணையுங்கள். வலது கையை என் தோளில் வைத்துக் கொள்ளுங்கள். ஆம் அப்படித் தான். இப்பொழுது வாருங்கள்” என்று கூறி, அவனுடன் அசைந்து சென்றாள் நடன மண்டபத்தில். வயலின் ஒன்று தனிப்பட எழுந்து பேரொலி கிளப்பியது. எமிலி அவன் உடலுடன் ஒன்றினாள். தலையை அவன் தோள்மீது சாய்த்துக்கொண்டாள். கால்கள் கால்களுடன் சேர்ந்தும் இழைந்தும் நடன உலாவலில் சென்றன.

இசையும் நடனமும் இன்பமும் நிறைந்த அந்தச் சூழ்நிலையில் இருவர் உள்ளங்கள் மட்டும் கொதித்துக் கொண்டிருந்தன. கண்களும் பார்த்தன சுட்டுவிடுவன போல். காதரைன், பானுதேவி ஆகிய இருவர் கண்களே அவை. அந்தப் புது ஜோடியின் பார்வையில் வெறுப்பும் பொறாமையும் கலந்து கிடந்தன. இருவரிடமிருந்தும் பெருமூச்சொன்றும் வெளிவந்தது. அவர்கள் இருவர் மட்டுமல்ல அந்த ஜோடியை ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தது. இன்னும் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நடன மண்டபத்தின் கோடியில் நின்று கொண்டிருந்த மிஸ்டர் ப்ரௌன், டீ காஸ்ட்ரோவிடம் தமிழனையும் எமிலியையும் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னார். தலையசைத்த காஸ்ட்ரோ தமிழனிருந்த இடத்தை அடைய மெல்ல நடன கூடத்துக்குள் புகுந்தான்.

Previous articleJala Deepam Part 3 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 3 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here