Home Historical Novel Jala Mohini Ch1 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch1 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

135
0
Jala Mohini Ch1 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch1 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch1 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 1. மனக்கோட்டை

Jala Mohini Ch1 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

அரபிக் கடலின் கறுப்பு அலைகள் திரும்பத் திரும்ப எழுந்து கன்னங்களிரண்டையும் தடவிச் சென்றதால் லேசாக நெளிந்து நெளிந்து கடலுக்கு ஆட்டங் காட்டிக் கொண்டிருந்த ‘ஜலமோகினி’யின் மேல் தளத்தில் நின்றிருந்த பீம்ஸிங்,
அதிர்ஷ்டத்தை எண்ணி நகைத்தார். அதிர்ஷ்டம் அவரை எண்ணி நகைத்தது.
அதிர்ஷ்டத்தை எண்ணி பீம்ஸிங், நகைத்ததற்குக் காரணம் பூர்ணமாக இருந்தது. சமூகத்தில் எந்தப் பகுதியில் கண்ணைச் செலுத்தினாலும் அதிர்ஷ்டம் முட்டாள்களுக்கே அனுகூலம் செய்திருப்பதைப் பார்த்த பீம்ஸிங், தமக்கு எந்தத்
துறையிலும் அதிர்ஷ்டம் அடிக்காததன் மர்மத்தைப் புரிந்துகொண்டார். தமது புத்திக் கூர்மையின் விளைவாகவே அதிர்ஷ்டம் தம்மைப் புறக்கணிப்பதாக பீம்ஸிங் நினைத்தார். ஆகவே அந்த அதிர்ஷ்டத்தின் மேல் எப்படியாவது வெற்றி
கொண்டு வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வழிகளைத் தேடினார். அந்த வழிகளில் கோரிய பலன் கிட்டித் தாம் தற்சமயம் ‘ஜலமோகினி’யின் மேல்தளத்தில் மிகுந்த சந்துஷ்டியுடன் நின்றிருந்தால் அதற்குக் காரணம், தமது சொந்த
முயற்சியும் மூளையின் திறனுமே தவிர அதிர்ஷ்டமல்ல என்ற பெருமிதத்தால் கட்டிளங்காளை போல் தளத்தில் இங்குமங்கும் உலாவலானார்.
பீம்ஸிங் அப்படியொன்றும் கட்டிளங்காளையல்ல. நாற்பதாவது வயதைத் தாண்டி வருடம் இரண்டாகிறது. ஆனால், அன்றுவரை அவசியத்தால் பிரும்மச்சரிய விரதத்தை அனுஷ்டிக்க நேரிட்டபடியாலும், சமீப காலத்தில் அடிக்கடி தலை,
மீசை முதலியவற்றில் தோன்றத் தொடங்கிய நரைக்கு உடனுக்குடனே சிகிச்சை செய்து வந்தபடியாலும், பீம்ஸிங் இரண்டு வருடம் குறைந்தவராகவே காணப்பட்டார். பீம்ஸிங் பிரும்மச்சரிய விரதத்தை அனுஷ்டிக்க நேரிட்டதற்குக்
காரணங்கள் இரண்டு உண்டு. ஒன்று அவர் தகப்பனாரின் ஊதாரித்தனம். இரண்டாவது என்ன காரணத்தினாலோ பெண்கள் அவரை ஏறெடுத்துப் பார்க்காமலே சென்று கொண்டிருந்தது.
பெரிய ராஜபுத்திரப் பரம்பரையில் பிறந்த பீம்ஸிங்கின் தகப்பனார் ஔரங்கசீப்பின் படையில் சேவகம் செய்து வந்தார். டில்லியில் அவர் இருந்த காலத்தில் மொகலாயர்களுடன் ஏற்பட்ட சகவாசத்தால் குடியிலும் சூதிலும் சம்பாத்தியத்தை
யெல்லாம் கண்டபடி செலவழித்து ஓட்டாண்டியாகி, பிள்ளை பீம்ஸிங்குக்கு ‘தன் கையே தனக்கு உதவி’யென்ற போதனையைச் செய்துவிட்டு இக வாழ்க்கையை நீத்துவிடவே, பெரிய திண்டாட்டத்தில் சிக்கிக் கொண்டார் பீம்ஸிங்.
ஆனால், பீம்ஸிங் எதற்கும் மனம் தளரும் சுபாவ முடையவரல்ல. எதையும் ஆராய்ந்து வெகு கணக்காகத் தமக்கு அனுகூலத்தைச் செய்து கொள்வதில் மகா சாமர்த் தியசாலி. இந்தக் குணங்களோடு நிஜமாகவே புத்திக் கூர்மையும்
இருந்தால், ஒரு மனிதன் வாழ்க்கையில் எவ்வளவோ முன்னுக்கு வரலாம். ஆனால் அந்த வசதியைக் கடவுள் அதிகமாகக் கொடுக்காததால், பீம்ஸிங் ஆதியில் மிகக் கஷ்டப்பட்டார். டில்லியில் போதிய ஊதியமுள்ள வேலை கிடைக்காது
போகவே, தமது சாமர்த் தியத்துக்குத் தகுந்த வேலையைத் தேடித் தென்திசைக்கு வந்தார். சென்ற இருபது வருஷங்களில் பீஜ்பூர் சைன்னியத்தில் சேவை செய்ததன் மகளாக அவிழ்த்தி ஓர் உபசேனாதிபதி பதவியும் இறுதியாக்க கிடைத்தது.
பீஜ்பூரில் சேவை செய்த இருபது வருஷ காலத்தில் அவருக்குக் கிடைத்த பணம் வரவுக்கும் செலவுக்கும் சரியாயிருக்கவே, பீம்ஸிங் கல்யாணத்தைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. ஓரிரண்டு சமயங்களில் சிறிது சபலப்பட்டுக் கலியாணம்
பேசிய இடங்களில், பெண்கள் ஒப்புக் கொள்ளாதபடியால் பீம்ஸிங் திராக்ஷைக்கொடி நரியாகிப் பிரும்மச்சரிய விரதத்தை மேற்கொண்டார்.
ஆனால், திராக்ஷைக்கொடி நரி, கொக்காக மாற அதிக நாள் பிடிக்கவில்லை. ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருந்த பீம்ஸிங்குக்கு, கடைசியாகத் தம் வாழ்க்கையைச் சீர்த்திருத்திக் கொள்ளச் சென்ற இரண்டு வருஷ காலத்தில்
சிறந்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. கொங்கண நாட்டில் விங்குர்லா துறைமுகக் கோட்டை மஹாராஷ்டிரர்களின் கைக்கு மாறியதும், சிசோதய வம்சத்து ராஜபுத்திர வீரன் ஒருவன் அதற்குத் தலைவனாக நியமிக்கப்பட்டான். அந்த
வயோதிக வீரன் ஒரு சரியான தளபதியைத் தேடிக் கொண்டிருந்தபோது, சமய சஞ்சீவியாகக் கிடைத்தார் பீம்ஸிங். பீம்ஸிங்கின் திறமையைப் பார்த்து அந்தச் சிசோதய புருஷன் அவரை வேலைக்கு வைத்துக் கொண்டானோ அல்லது
அந்தத் தக்ஷணதேசத்தில் தன்னுடன் வசித்துவரும் தாயை இழந்த தனது மகளுக்குத் தங்கள் ஊர்க்காரர் ஒரு துணையாக இருக் கட்டும் என்று வைத்துக் கொண்டானோ தெரியாது. ஆனால், பலபேர் போட்டியிட்ட அந்தத் தளபதி உத்தி
யோகம் இறுதியில் பீம்ஸிங்குக்கே கிடைத்தது.
வேலை கிடைத்ததும் பீம்ஸிங் தமது பிற்கால சக வாழ்வுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலானார். சந்தர்ப்பத்தைத் திறமையுடன் பயன்படுத்திக் கொண்டால் பலன் நிச்சயம் என்ற உறுதியுடன் தமது திட்டத்தை நிறைவேற்றுவதில்
முனைந்தார். தளபதி உத்தியோகத்தோடு தன் அலுவலை நிறுத்திக் கொள்ளாமல், தலைவன் வீட்டுக்கும் அடிக்கடி சென்று பழகத் தொடங்கினார். அவர் அப்படிப் பழகியதைக் கோட்டைத் தலைவனும் அவர் மகளான சிசோதய
மங்கையும் பெரிதும் வரவேற்றார்கள். தந்தையும் மகளும் பீம்ஸிங்குடன் தாராளமாகப் பழகுவது யாருக்கும் வியப்பை அளிக்கவில்லை. ஏனென்றால் பீம்ஸிங் ஆகிருதியில் பெருத்தவரேயொழிய அழகில் பெருத்தவரல்ல. இவருடன்
பழகுவதால் எந்த வித அவதூறும் ஏற்படாது என்ற காரணத்தினாலேயே அந்த ராஜபுத்திர மங்கை பீம்ஸிங்குடன் கலகலப்பாகச் சிரித்துச் சம்பாஷிப்பதாகக் கோட்டையிலிருந்தவர் பேசிக் கொண்டார்கள். “இந்தக் குண்டோதரனைப் பார்த்து
யார் ஆசை கொண்டுவிடப் போகிறார்கள்?” என்று பீம்ஸிங் காதுபடவே பலர் பேசினார்கள். ஆனால், அவர் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. தம் மீதுள்ள பொறாமையாலேயே மற்றவர் இப்படிப் பேசுவதாக எண்ணித் தலைவன்
மகளின் இதயத்தில் இடம்பெற நினைத்து அதற்கான முயற்சியில் முனையலானார்.
தன் முயற்சி பலித்தால் இரண்டுவித லாபம் கிட்டும் என்று கணக்குப் போட்டார் பீம்ஸிங். கோட்டைத் தலைவன் சம்பாதிக்கும் பெரும் பணம் அடிக்கடி ராஜபுதனத்திலுள்ள அவனுடைய சகோதரி வீட்டுக்குகு அனுப்பப்படுவதை
அறிந்துகொண்டார். லேசாக விசாரித்ததில் தன் குழந்தை பிற்காலத்தில் கஷ்டப்படாதிருக்கக் கோட்டைத் தலைவன் பெரும் பொருளைத் திரட்டியிருப்ப தாகவும், விங்குர்லா அடிக்கடி கொள்ளைக்காரர்களால் தாக்கப்படுவதால்
சொத்தையெல்லாம் அவ்வப்பொழுது ஊருக்கு அனுப்பி விடுவதாகவும் பீம்ஸிங்குக்குத் தெரிய வந்தது. தமது பெண்ணைக் கூடிய சீக்கிரம் சொந்த ஊருக்கு அனுப்பிச் சரியான இடத்தில் அவளை விவாகம் செய்து கொடுக்கத்
தலைவன் உத்தேசித்திருப்பதாகவும் பீம்ஸிங் உணர்ந்து கொண்டார். அந்தச் சரியான வரன் ஏன் தானாக இருக்கக்கூடாது என்று பீம்ஸிங் தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார். தானும் ராஜபுத்திரன், அவளும் ராஜபுத்திர மங்கை. அவள்
தகப்பன் கோட்டைத் தலைவனானால் தானும் ஒரு தளபதி. வயதிலிருக்கும் சிறிய வித்தியாசத்தைக் காலக்கிரமத்தில் சுகவாழ்வு மறைத்து விடும். இப்படியெல்லாம் யோசித்த பீம்ஸிங் கோட்டைத் தலைவனுக்கு மாப்பிள்ளையாவதற்காக
அவனை எந்தெந்த விதத்திலெல்லாம் திருப்தி செய்ய வேண்டுமோ அந்தந்த விதத்திலெல்லாம் திருப்தி செய்து அவன் நம்பிக்கைக்குப் பெரிதும் பாத்திரமானார். விதியின் விளையாட்டினால் திடீரென அபாயமான நோய் வாய்ப்பட்ட
கோட்டைத் தலைவன் மரணத் தருவாயில் தன் மகளைப் பீம்ஸிங் கினிடம் ஒப்படைத்து, “நீங்கள் என் சகோதரர் மாதிரி. குழந்தையை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய் என் தங்கையிடம் சேர்த்துவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டான்!
தம்மை மாப்பிள்ளையென்று அழைக்காமல் சகோதரர் என்று அழைத்தது பீம்ஸிங்குக்கு அவ்வளவு திருப்தியாயில்லா விட்டாலும் தலைவன் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். ஈமச் சடங்குகள் முடிந்த ஒரு
மாதத்திற்கெல்லாம் தலைவன் பெண்ணுடன் கடல் மார்க்கமாகச் சூரத்துக்குப் பயணமாவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து முடித்தார். கொச்சியிலிருந்து மிளகுச் சரக்கை ஏற்றிச் செல்லும் ‘ஜலமோகினி’க் கப்பல் விங்குர்லா
துறைமுகத்துக்கு வந்து சேர்ந்ததும், தம்முடைய திட்டத்தை ஒரு விதமாக வகுத்துக் கொண்டார்.
அவர் முன்பாக அப்பொழுது எழுந்த பிரச்சனைகள் இரண்டு. விங்குர்லாவிலேயே தங்குவதாக, அல்லது தன் வாக்குறுதிப்படி, தலைவன் மகளுடன் சொந்த ஊர் செல்வதா என்ற இரண்டிலொன்றை அவர் முடிவு செய்ய
வேண்டியதாயிற்று. தளபதி உத்தியோகம் பார்ப்பவர்க்கு அடுத்தபடி கிடைக்கக் கூடியது கோட்டைத் தலைவன் உத்தியோகம். மகாராஷ்டிரர்களின் கீழ் கோட்டைத் தலைவனாயிருப்பதில் பலன் பெரிது. அந்தக் கோட்டைத் தலைவன்
அந்தந்தப் பிராந்தியத்தின் சிற்றரசனாகவே கருதப்பட்டான். பல ஊர் வியாபாரிகள் அங்கு வந்து வியாபாரம் செய்வதால் பணமும் அதிகம் கிடைக்கும். கோட்டை தலைவனானதால் அந்தஸ்தும் அதிகம். ஆனால், தலைவன் மகளைத் தனியே
செல்லவிட்டாலோ வாழ்க்கை முழுவதும் கட்டிய கோட்டை தூளாகும். தலைவன் மகளை மணப்பது துர்லபமாகிவிடும். அவளை இழப்பதால் அவள் தந்தை ஏற்கெனவே சேமித்து ஊரில் வைத்திருக்கும் தனமும் தன் கையை விட்டுப்
போய்விடும். இப்படியாக லாப நஷ்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்த பீம்ஸிங், தலைவன் மகளோடு செல்லவே தீர்மானித்துத் தனக்கு அளிக்கப்பட்ட கோட்டைத் தலைவன் பதவியையும் ராஜிநாமா செய்து விட்டார்.
அப்படி அவர் பதவியை ராஜிநாமா செய்ததைச். சிசோதய மங்கை பெரிய தியாகமாகக் கருதினாள். அகவே, ‘பிரயாண ஏற்பாடுகளைச் செய்து முடித்து ‘ஜலமோகினி’ யில் புறப்பட்ட பீம்ஸிங் தீர்மானித்தபோது, அவள் மிகுந்த
நன்றியறிதலுடன் அவரைப் பின்பற்றினாள். ‘ஜலமோகினி’ யின் மேல் தளத்தில் அவளுக்காக நிறுவப்பட்ட மஞ்சத்தின் பஞ்சணையில் சாய்ந்திருந்த அந்தப் பைங்கிளியைக் கண்ட பீம்ஸிங், எப்பேர்ப்பட்ட ஒரு பரிசைத் தன் சாமர்த்தியத்தால்
சம்பாதிக்கிறோம் என்பதை நினைத்து உள்ளம் பூரித்துப் போனார். கப்பலில் அவளுடன் தனிமையில் செல்லக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால், ஊர் போய்ச் சேர்வதற்குள் தன்மேல் அவளுக்குப்
பிரியமேற்படும்படி செய்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டினார். இப்படித் தன்னுடைய சொந்த முயற்சியால் சிருஷ்டிக்கப்பட்ட அனுகூலங்களை எண்ணிப் பார்த்த பீம்ஸிங் அதிர்ஷ்டத்தை நினைத்து நகைத்ததில்
வியப்பில்லையல்லவா?
ஆனால், அதிர்ஷ்டம் அவரைப் பார்த்து எப்படி நகைத்தது? அதிர்ஷ்டம் தன் துணைக்கு இயற்கையை அழைத்துக் கொண்டது. அதன் விளைவாகப் பஞ்சணையில் சாய்ந்து கிடந்த பத்மினிக்குப் பீம்ஸிங்கின் மேல் எந்தக் காலத்திலும்
காதலுண்டாக முடியாத நிலைமையைச் சிருஷ்டித்தது. பத்மினி பீம்ஸிங்கைப் பார்த்த போதெல்லாம் மிக அன்பாகவே பேசி வந்தாள். அவரிடம் ஆசையாலல்ல; பரிதாபத்தால். அவருடைய பிரும்மாண்டமான சரீரத்தையும், பத்தடி நடந்ததும்
பெருமூச்சு வாங்கி அவர் தத்தளிப் பதையும் பார்த்த போதெல்லாம், “ஐயோ இவர் நமக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்?” என்று நினைப்பாள். ஆகவே தனக்காக அவர் ஏதாவது அலுவல் புரியத் தொடங்கினால் அவரைத் தடுத்துத்
தானே அந்தப் பணிகளைச் செய்து கொள்வாள். இது மட்டுமின்றி அவருக்கு வேண்டிய பணி விடைகள் பலவற்றையும் தானே செய்ய முன் வருவாள். அப்பொழுதெல்லாம் பீம்ஸிங் அவளைத் தடைசெய்து, “பத்மினி! நான் செய்ய வேண்டிய
பணிகளை நீ எதற்காகச் செய்ய வேண்டும்?” என்று கேட்பார்.
“ஏன்! நான் தங்களுக்குப் பணிவிடை செய்யக் கூடாதோ?” என்பாள் பத்மினி.
இத்தகைய பதிலைத் தவறாக அர்த்தம் செய்து கொள்ளும் பீம்ஸிங் “அதற்கெல்லாம் சமயம் இருக்கிறது பத்மினி. ஊர் போய்ச் சேர்ந்தபின் நீ எனக்குப் பணி விடை செய்யாமல் வேறு யார் செய்யப் போகிறார்கள்?” என்பார்.
“நீங்கள் என் தந்தைக்குச் சமானம். உங்களுக்குப் பணி விடை செய்ய ஊர் போகும்வரை காத்திருப்பானேன்” என்று பதில் கூறுவாள் பத்மினி.
இது பீம்ஸிங்குக்குப் பெரிய வேதனையைத் தரும். இருப்பினும் காலக்கிரமத்தில் அவள் மனத்தை மாற்றிவிடலாம் என்ற தைரியத்தில் ஒரு வேதனைச் சிரிப்பு சிரித்துவிட்டு, “நானாவது உன் தந்தையாவது, அசடே” என்று கூறிப் போய்
விடுவார். இப்படிப் பரஸ்பரம் வித்தியாசமான உணர்ச்சிகளைச் சிருஷ்டித்துவிட்டு அதிர்ஷ்டம் பீம்ஸிங்கைப் பார்த்துச் சிரித்ததில் என்ன ஆச்சரியமிருக்கிறது? இவ்வளவு தூரம் அவருக்கு எதிராகத் தன் விஷமத்தைச் செய்ய அதிர்ஷ்டம் தன்
விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மற்றொரு பெரிய அபாயத்தையும் பீம்ஸிங்கின் மனக்கோட்டைக்கு இடைஞ்சலாகக் கொண்டு வந்து நிறுத்தத் தொடங்கியது. அந்த அபாயம் கோட்டையிலிருந்து புள்ளிபோல்
தூரத்தே கப்பலை நோக்கி விரைந்த ஒரு படகில் வந்து கொண்டிருந்தது.
அப்பொழுது அந்தி வேளை. உஷ்ணம் கக்கும் தன் கிரணங்களை உள்ளடக்கிப் பெரிய நெருப்புப் பந்தைப் போல் சிவந்து உருண்டு அரபிக் கடலில் ஸ்நானம் செய்யத் தொடுவானத்தருகிலிருந்து அலைகளுக்குள் மெள்ள மெள்ள
இறங்கிக் கொண்டிருந்தான் அஸ்தமன சூரியன். அதன் விளைவாகச் செக்கச் செவேலென்று சிவந்த வானம் தன் சிவப்பில் ஒரு சிறு பகுதியை ‘ஜலமோகினி’க்கும் பகிர்ந்து கொடுக்கவே, தளம் முழுவதும் பொன்னிறமாகக்
காட்சியளித்தது. வெள்ளை வேளேரென்ற கடற் பறவைகள் சிற கடித்துப் பறந்து திடீரெனத் தண்ணீர் மட்டத்தில் இறங்கித் தங்கள் நீள மூக்குகளால் மீன்களைக் கொத்திக் கொண்டு கரையை நோக்கிப் பறந்தன. கோட்டைக்குச் சற்று
அப்பால் தள்ளி நின்ற தென்னஞ் சோலையிலிருந்து பட்சிக் கூட்டமொன்று ஜிவ்வென்று கிளம்பி வெகு வேகமாக எங்கோ சென்றது. ஜலம் கன்னங்கரேலென்று இருந்ததால் கிருஷ்ண சமுத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்த அரபிக்
கடலின் அந்தி வேளையின் அழகில் லயித்து மஞ்சத்தில் சாய்ந்திருந்த பத்மினிக்கு, அருகிலிருந்தவன் பீம்ஸிங்காயிராமல் நல்ல சைத்ரிகனாக இருந்திருந்தால், கடலின் சூழ் நிலையையும் கடல் மோகினிபோல் ஜலமோகினி தளத்திலிருந்த
அந்த அழகியின் உருவத்தையும் இணைத்து அற்புதமான வண்ணச் சித்திரமொன்றைத் தீட்டியிருப்பான்.
பத்மினி பதினாறு பிராயங்களைத் தாண்டிப் பதினேழாவது பிராயத்தில் அடி எடுத்து வைத்திருந்ததால், அவளுடைய அங்கங்கள் ஒவ்வொன்றிலும் யௌவனம் துளிர்த்து நின்றது. மெருகு ஏறி இருந்த அவள் சிவந்த மேனியைத்
தழுவிச் சென்ற சேலைகூட மேனியின் வழ வழப்பின் காரணமாகவோ என்னவோ ஒவ்வோர் இடத் தில் சற்று சரிந்துகிடந்தது. ராஜபுத்திர ஸ்திரீயாதலால் கண்களிரண்டிலும் அழகுடன் சற்றுக் கம்பீரமும் கலந்து உறுதியைக் காட்டியது.
அவளை அடிக்கடி உற்று நோக்கிய பீம்ஸிங் எப்பேர்ப்பட்ட அழகி தன் வாழ்க்கைத் துணைவியாகக் கிடைக்கப் போகிறாள் என்பதை நினைத்து உள்ளுக் குள்ளேயே மகிழ்ந்து கொண்டிருந்தார். அவர் மனத்தில் இத்தகைய யோசனை ஓடிக்
கொண்டிருந்தபடியால் கீழே கப்பலைச் சுற்றி மிதந்து கொண்டிருந்த படகுகளையோ, அவற்றின் மிளகு, காலிகம் முதலிய சரக்குகளை ஏற்றிக் கொண்டு விலைகூறிக் கூச்சல்போட்டுக் கொண்டிருந்த வியாபாரிகளையோ,
மேற்கொண்டு எந்தச் சரக்கையும் கப்பலில் ஏற்ற விடாமல் கப்பலின் ஏணியில் வழிமறித்து நின்றிருந்த கப்பல் தலைவனையோ அவர் கவனிக்கவேயில்லை. ஆனால் வியாபாரம் முடிந்து இரண்டு மணி நேரமாகியும் கப்பல் புறப்படாத
காரணத்தை பீம்ஸிங் ஆராய்ந்து கொண்டிருந்தார். அதைப் பற்றிப் பத்மினியையும் விசாரிக்க ஆரம்பித்தார்.
“கப்பல் புறப்பட ஏன் இவ்வளவு தாமதம்?” என்றார் பீம்ஸிங் சற்று எரிச்சலுடன்.
“யாருக்காவது காத்திருக்கிறார்களோ என்னவோ?” என்றாள் பத்மினி.
“யாருக்காகக் காத்திருக்கப் போகிறார்கள்?” என்று பத்மினியைக் கேட்பதுபோல் தன்னைத்தானே கேட்டுக் கொண்டார் பீம்ஸிங்..
“யாராவது முக்கியமான மனிதராயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இத்தனை நேரம் கப்பலை நிறுத்தி வைப்பார்களா?” என்று மீண்டும் பதிலிறுத்தாள் பத்மினி.
இந்தப் பதிலை பீம்ஸிங் ரசிக்கவில்லை. தன்னைவிட ஒரு முக்கியமான மனிதன் இருக்க முடியும் என்றே அவர் நினைக்கவில்லை. அப்படியேயிருந்தாலும் அத்தகைய மனிதன் ஜலமோகினிக் கப்பலில் தன்னுடன், அதைவிட முக்கியமாகப்
பத்மினியுடனும் பிரயாணம் செய்வதை அவர் விரும்பவில்லை. ஆகவே பத்மினியின் கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார். பீம்ஸிங்கின் விருப்பு வெறுப்புகள் எப்படியிருந்த போதிலும் பத்மினியின் ஊகம் மிகச்
சரியென்பதை அடுத்த அரை மணி நேரத்தில் பீம்ஸிங் உணர்ந்துகொண்டார். கோட்டையிலிருந்து வந்த படகு கப்பலை அணுகியதும் பூர்ணமாக மாலுமி உடைகளை அணிந்து கப்பல் ஏணியில் துரிதமாக ஏறிவந்த வாலிபனை மிகுந்த
பணிவுடன் கப்பல் தலைவன் வரவேற்றான். இதர மாலுமிகள் கூட அவனுக்கு வணக்கம் செலுத்தினார்கள். வந்த வாலிபன் கப்பல் தனக்குச் சொந்தம்போல் கீழ்த்தளத்தில் சுற்றி மாலுமிகளோடு அளவளாவிவிட்டுக் கப்பல் தலைவன்
பின் தொடர மேல் தளத்துக்கு வந்தான். மேல் தளத்தை இணைத்து நின்ற மரப்படிகளில் அவன் ஏறிவரும்போதே கணீரென்று காதுக்கு மிக இன்பமாக ஒலித்த அவன் பேச்சைக் கேட்ட பத்மினி, படிகளுக்காகக் கண்களைச் செலுத்தினாள்.
சற்று நேரத்தில் மேல்படியிலிருந்து அலட்சியமாகத் தளத்தில் குதித்த வாலிபனை ஏற இறங்கப் பார்த்த அவள் ஆச்சரியத்தால் ஸ்தம்பித்துப் போனாள். அவளுடைய கண்களைச் சலன மற்ற கூரிய இரு கண்கள் பலவந்தமாகக் கவர்ந்து
நின்றன. பத்மினி அங்கிருந்த வாலிபனுக்கும் ஆச்சரியத்தை அளித் திருக்க வேண்டும். ஏனென்றால் மேல் தளத்தில் வேகமாகக் குதித்து வந்தவன் பத்மினியைக் கண்டதும் ஒரு கணம் பிரமித்து நின்று விட்டான்.
வாலிபனுடைய வசீகர வதனத்தையும், ஒற்றை நாடியான சரீரத்தையும் மட்டுமின்றி அவன் அணிந்திருந்த விலை உயர்ந்த காஷ்மீரப் பட்டில் நெய்யப்பட்ட ஆடைகளையும் கவனித்த பத்மினி, அவன் யாரோ பெரிய பிரபு வாயிருக்க
வேண்டும் என்று தீர்மானித்தாள். வாலிபன் கப்பலில் இருந்த இதர மாலுமிகளின் உடைகளையே அணிந்திருந்தது தவிர இடையில் பெரிய தோல் பட்டையில் பழைய காலக் கைத் துப்பாக்கிளிரண்டைச் சொருகியிருந்தான். அதே போல்
கச்சையிலிருந்து நீளமான வாள் ஒன்று அவன் பாதம் வரையில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் முகத்தில் அணிந்திருந்த திலகம் அவன் மகாராஷ்டிரன் என்பதைப் பறைசாற்றியது.
எதிர்பாராத விதமாக பத்மினியைச் சந்தித்ததால் அவனும், அவனைச் சந்தித்ததால் பத்மினியும் ஒருவரையொருவர் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றதை விரும்பாத பீம்ஸிங், பெரிதும் சங்கடப்பட்டார். அவர்கள் சம்பாஷிக்கத்
தொடங்கியதும் அவர் பிராணனே போய் விடும் போலிருந்தது. வந்தவன் கைகாரனாகக் காணப்பட்டான். அழகாகப் புன்முறுவல் செய்த அந்த வாலிபனின் துணிச்சலும் அளவிட முடியாததாயிருந்தது. “இந்தப் பிரயாணத்தில் உங்களைப்
போல ஒரு துணை கிடைக்குமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை” என்று ஆரம்பித்த வாலிபனை நோக்கி பத்மினியும் லேசாகப் புன்முறுவல் செய்ததன்றி, “ஏன் நிற்கிறீர்கள்…?” என்று கேட்டுத் தன் பக்கத்தில் காலியாகக் கிடந்த
ஆசனத்தின்மேல் கண்களை ஓட்டினாள்.
அவள் அழைப்பை வாலிபன் மட்டுமல்ல பீம்ஸிங்கும் கவனித்தார். திடீரென்று சந்தித்த வாலிபனிடம் பத்மினி இப்படி நடந்து கொள்வதை அவர் வெறுத்தார். வெறுப்புடன் அவருக்குத் திகைப்பும் உண்டாக்கக் கூடிய மற்றொரு
நிகழ்ச்சியும் ஏற்பட்டது. வந்த வாலிபனை பீம்ஸிங்குக்கும் பத்மினிக்கும் அறிமுகப்படுத்தி வைக்கும் முறையில், “இவர் யார் தெரியுமா?” என்று கேட்டான் கப்பல் தலைவன்.
“தெரியாது” என்பதற்கு அடையாளமாகப் பீம்ஸிங் தலையை அசைக்கவே, கப்பல் தலைவன் மிகுந்த மரியாதையுடன் வாலிபன் பெயரை உச்சரித்தான். அந்தப் பெயரைக் கேட்டதும் விவரிக்க இயலாத கலவரத்தால் வெல வெலத்துப்
போனார் பீம்ஸிங். சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அப்பொழுதுகூட அவர் கப்பலை விட்டிறங்கி ஏதாவது ஒரு படகில் பத்மினியுடன் மீண்டும் கோட்டைக்கு ஓடிப் போயிருப்பார். ஆனால், அவர் பிரமிப்பு தீருமுன்பாகவே கீழே
மாலுமிகளின் பெருங் கூச்சல் கிளம்பி, நங்கூரம் எடுக்கப்பட்டு ஜலமோகினி தன் பிரயாணத்தைத் தொடங்கிவிட்டது.
திகைப்பு பீம்ஸிங்குக்கு ஏற்பட்டதே தவிர, பத்மினிக்கு ஏற்படவில்லை. பெரிய கடல் வீரன் ஒருவனுடன் தான் பயணம் செய்ய நேர்ந்ததை எண்ணிப் பெருமை கொண்டாள். ஆகையால் கண்களில் ஆனந்தம் பொங்க அவனுடன்
அளவளாவிப் பேசவும் தொடங்கினாள். அவள் கண்கள் அவனைக் கண்டு பிரகாசித்ததையும் கன்னங்கள் சிவந்ததையும் பார்த்த பீம்ஸிங் தான் கட்டிய மனக்கோட்டை பிரயாண ஆரம்பத்திலேயே படு தூளாவதைக் கண்டார்.

Previous articleMohini Vanam Ch 50 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch2 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here