Home Historical Novel Jala Mohini Ch10 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch10 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

74
0
Jala Mohini Ch10 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch10 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch10 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 10. இருளடர்ந்த படிகளில்

Jala Mohini Ch10 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

அவன் கதையைத் தொடங்குமுன்பு பத்மினி மெல்லக் கேட்டாள். “என்னை எதற்காக ‘நீங்கள்’ ‘போங்கள்’ என்று அழைக்க வேண்டும். சாதாரணமாகக் கூப்பிட்டால் போதாதா? அத்தனை மரியாதை அவசியமா?”
ரகுதேவ் கொஞ்சம் நிதானித்துப் பிறகு பதில் சொன்னான்: “பிற ஸ்திரீகளிடம் மரியாதையாக நடந்துகொள்வது தான் புருஷ தர்மம் பத்மினி. தங்களிடம் சில தடவைகள் முறை தவறி நடந்து கொள்கிறேன். ஆனால் அது
அவசியமாயிருக்கிறது. நாமிருவரும் தனித்திருக்கும் சமயங்களில் மரியாதையை மறக்க மாட்டேன். மற்ற மாலுமிகளின் முன்னிலையில் தாங்கள் என் மனைவியாகவும், நான் தங்கள் புருஷனாகவும் நாடகமாட வேண்டியதை முன்னிட்டு
மரியாதையைக் கைவிட்டு ‘வா, போ’ என்று பேசுவேன். அதனால் என்னைத் தவறாக நினைக்காதீர்கள். உதட்டிலேதான் அந்த அவமரியாதையே தவிர உள்ளத்தில் இல்லை” என்றான்.
அவன் சொன்ன சமாதானம் அவளுக்கு அவசியமேயில்லை. அவன் அதிகப்படி மரியாதை வைத்துக் கூப்பிடுவதுதான் அவளுக்குப் பிடிக்கவில்லையேயொழிய அவன் மரியாதை தவறிவிட்டானே என்று வருத்தம் அவளுக்கு
ஏற்படவில்லை. அறையில் அவன் தன்னைக் கட்டிப்பிடித்த நேரத்தில் கூட அவன் செயலுக்கு நியாயம் கற்பிக்கவே தன் மனம் முற்பட்டதை எண்ணினாள். அதனால் ஏற்பட்ட புன்முறுவல் இதழில் அரும்பச் சொன்னாள்: “நீங்கள் மரியாதை
வைப்பதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. இத்தனை பழகிய பிறகும் என்னை, ‘நீங்கள்’ ‘போங்கள்’ என்றால் மனத்துக்கும் பொருத்தமாயில்லை. காதுக்கும் இன்பமாயில்லை.”
இதைக் கேட்டதும் ரகுதேவின் முகத்தில் சொல்ல வொண்ணாத் துயரம் சூழ்ந்தது. “பத்மினி!” என்றான் மெள்ள. பதிலுக்கு அவள் “ஹூம்” கொட்டினாள்.
“இத்தனை அன்புக்கு நான் தகுந்தவனல்ல பத்மினி. உன் கால் தூசியைத் தொடக்கூட அந்தஸ்தில்லாதவன்” என்றான் ரகுதேவ்.
“பழைய பாடம்” என்றாள் பதிலுக்குப் பத்மினி.
“என் கதையைக் கேள். பிறகு நீயே தீர்ப்புச் சொல்” – என்று தன் கதையைச் சொல்லத் தொடங்கினான் ரகுதேவ்.
“நான் கொங்கண நாட்டின் வடக்குப் பாகத்தில் பிறந்தேன். என் தாய் தந்தையர்களை எனக்குத் தெரியாது. என்னுடைய மூன்றாவது வயதிலேயே ஆண்டவன் திருவடி நிழலையடைந்தார்கள். அதுவும் சாதாரணமாக அல்ல. இதே
ஸித்திகளின் மூதாதைகள் படையெடுத்தபோது வீட்டில் புகுந்து என் பெற்றோர்களை வெட்டிப்போட்டு, இருந்த சொத்தைக் களவாடிக் கொண்டு சென்றார்கள். என்ன காரணத்தால் அவர்கள் என் கழுத்தையும் அறுத்துப்
போடவில்லையென்பது இன்னும் எனக்கு விளங்கவில்லை. பெற்றோர்களின் துண்டிக்கப்பட்ட சடலங்கள் மூலைக் கொன்றாகக் கிடக்க, நான் வீட்டுக் கூடத்தின் இடையே படுத்துக் கதறிக் கொண்டிருந்தேன். நான் சிறு
குழந்தையாகையால் இதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னை இந்த நிலையில் கண்டதாக என் அண்ணன் பிற்காலத்தில் சொன்னான். என் தந்தை பெரிய மராட்டிய க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவர். வாள் போரை நன்றாக அறிந்தவர்.
மகாராஷ்டிர யுத்தங்கள் பலவற்றில் சேவகம் செய்து முதிய வயதின் காரணமாக ஓய்வு பெற்று வீட்டிலேயே இருந்து விட்டார். எனக்கு அண்ணன்மார் இருவர் உண்டு. இரண்டாவது அண்ணன் பிறந்து இருபது வருஷகாலம் கழித்து நான்
பிறந்தேன். என் அண்ணன்மார்கள் வெளியே போயிருந்த சமயத்தில் திடீரென ஸித்திகளின் கப்பல்கள் வந்து, மாலுமிகள் ஊருக்குள் புகுந்து சூறையாட ஆரம்பித்தார்கள். ஸித்திகள் இப்படி எத்தனையோ முறை சூறை
யாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை சூறையாடுகையிலும் கணக்கற்ற பேர்களைக்கொன்று போட்டார்கள். பல பெண்களைக் கற்பழித்தார்கள். அந்த மாதிரி ஒரு சூறை யாடலில்தான் என் பெற்றோர்களும் ஸித்திகள் கையில்
அகப்பட்டு உயிரிழந்தார்கள். ஸித்திகளுக்குப் பயந்து பகல் முழுவதும் எங்கோ மறைந்திருந்த என் பெரிய அண்ணன் இரவில் வீட்டுக்கு வந்து, இருந்த நிலையைப் பார்த்துவிட்டு, என்னையும் தூக்கிக்கொண்டு மலைக்காடுகளுக்குள்
ஓடி விட்டான். இரண்டாவது அண்ணன் என்ன கதியானா னென்று எனக்கு இன்னும் தெரியாது. அநேகமாக ஸித்திகளால் வெட்டப்பட்டிருப்பான்.
காட்டுக்குள் என்னுடன் ஓடிய என் மூத்த அண்ணன், ஸித்திகள் எங்கள் ஊரைப் பிணக்காடாக அடித்துவிட்டுப் போய்விட்ட பிறகு, மீண்டும் வீட்டுக்கு வந்து என் தகப்பனார் மறைவிடத்தில் புதைத்து வைத்திருந்த நகை நட்டுகளை
எடுத்துக் கொண்டான். ஸித்திகளின் படை யெடுப்பு அடிக்கடி நடந்து கொண்டிருந்ததால் ஜனங்கள் உயிர் போவது திண்ணமாயிருந்தது. உயிர் போனாலும் நகை போகக் கூடாதென்று எங்கள் ஊரார் அனைவரும் சொத்துக்களைப்
புதைத்து வைப்பது வழக்கம். இந்த வழக்கப்படி என் தகப்பனாரும் செய்திருந்தார். அந்தச் சொத்தைத் தூக்கிக் கொண்டு கொங்கணியை விட்டு மலை நாட்டுக்கே போய் அங்கொரு கிராமத்தில் என் தமையன் குடியேறினான்.
அவ்வூரிலிருந்த ஒரு மகாராஷ்டிரப் பெண்ணையே மணந்து கொண்டான். அவ்விருவர் பராமரிப்பில் நான் வளர்ந்தேன். வெகு நாள் வரை என் அண்ணன் என்னைப் பள்ளிக் கூடத்துக்கே அனுப்பவில்லை. நான் பிறந்த
துரதிருஷ்டத்தினால்தான் என் பெற்றோர் மாண்டதாக அவன் நினைத்தான். என் ஜாதகத்தைப் பார்த்த ஜோஸ்யர்கள் கூட நான் பிறக்கும் போதே கர்ம தசையுடன் பிறந்திருப்பதாகக் கூறினார்கள். இதனால் என்னை என் தமையன் பெரிதும்
வெறுத்தான். பத்து வயது வரை நான் பள்ளிக்கூடத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஊரிலுள்ள காலிப் பையன்களோடு சேர்ந்துகொண்டு மலைகளில் சுற்றுவேன். இரவில் சாப்பிடும் வேளைக்கு வீட்டுக்கு வருவேன். அண்ணி
விழித்திருந்தால் சோறு கிடைக்கும். அண்ணன் மட்டும் விழித்திருந்தால் நாழி கழித்து வந்ததற்காக உதை கிடைக்கும். இரண்டிலொன்று கிடைப்பது நிச்சயம்.
பத்து வருடங்கள் இப்படிக் கடந்தன. பதினொன்றாவது வயதில் நடந்த சம்பவம் என் வாழ்க்கையை வேறுதிசையில் திருப்பி விட்டது. காலிப் பையன்களோடு காட்டில் சுற்றுகையில் தேச யாத்திரை செய்யும் சாது ஒருவரைச் சந்தித்தேன்.
மலைப் பாறையில் உட்கார்ந்து அவர் சோற்றுக் கட்டைப் பிரித்துக் கொண்டிருந்தார். மற்றப் பையன்களிடமிருந்து பிரிந்து வந்துவிட்ட நான் அவரிடம் சிறிது சோறு கேட்டேன். அவர் மனமுவந்து ஒரு கவளம் கையில் எடுத்துக் கொடுக்க
வந்தார். நான் கையை நீட்டினேன். எடுத்த சோற்றைக் கையில் வைக்காமல் அப்படியே நின்றுவிட்டார். அவர் செய்கையின் காரணம் எனக்குப் புரியவில்லை. ‘சோறு கொடுக்கிறாயா, இல்லையா?’ என்று மிரட்டிக் கேட்டேன். அவர் முகத்தை
உற்றுப் பார்த்தார். பிறகு சோற்றைக் கொடுத்தார். சோறு பூராவையும் எனக்கே கொடுத்து விட்டார். ‘உங்களுக்கு?’ என்று கேட்டேன். ‘எனக்குப் பசியில்லை. நீ சாப்பிடு’ என்றார். சாப்பிட்டு முடிந்ததும் அந்தப் பாறையிலேயே உட்கார்ந்து
என் கதையைச் சொல்லும் படி கேட்டார்.
கதையைச் சொல்லி முடித்தேன். சாது மௌனமாகவே கேட்டார். பிறகு ‘தம்பி! நீ அண்ணன் வீட்டிலேயே இருக்க இஷ்டப்படுகிறயா?’ என்றார்.
‘ன்?’ என்று வினவினன்.
‘என்னோடு வந்துவிடு. உனக்குப் படிப்புச் சொல்லித் தருகிறேன்’ என்றார்.
படிப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை. அண்ணன் வீட்டைப் பற்றியும் கவலைப்படவில்லை. அவனைவிட்டுப் போவதில் எனக்குப் பூரண திருப்திதான். இருந்தாலும் ஒரு கவலை இருந்தது. அதைத் திட்டமாக விசாரித்துக்
கொண்டேன். ‘வந்து விடுகிறேன். இரண்டு வேளையும் தவறாமல் சோறு போடுவீர்களா?’ என்று கேட்டேன். சாது சிரித்தார். ‘கண்டிப்பாய்ப் போடுகிறேன்’ என்றார்.
‘எப்படிப் போடுவீர்கள்? உங்களுக்குச் சொத்து ஏதேனும் இருக்கிறதா?” என்றேன்.
‘நான் சொந்தக் கையை எதிர்பார்ப்பவனல்ல. பிறர் கையை எதிர்பார்க்கிறேன். நம் நாட்டில் உழைப்பவனுக்குச் சோறு கஷ்டமேயொழிய பிச்சைக்காரனுக்குச் சோறு ஒரு பிரச்சினையே அல்ல’ என்று சொல்லிச் சிரித்தார் சாது. ‘சோறு
நிச்சயம் கிடைக்கும்’ என்பது தெரிந்ததும் அவரோடு ஓடிவிட்டேன். அன்று முதலே நல்ல சாப்பாட்டு ராமனாக மாறினேன்” என்று சொல்லிச் சற்றுக் கதையை நிறுத்தி நகைத்தான் ரகுதேவ்.
பத்மினியிடமிருந்து நீண்ட பெருமூச்சு ஒன்றுதான் வெளிவந்தது. கண்களில் பிரவாகித்த நீர்த் துளிகளைப் புடவையால் மீண்டும் துடைத்துக் கொண்டாள். ரகுதேவ் தன் கதையைத் தொடர்ந்தான்.
“சாதுவை முதலில் யாரோ ஒரு சாதாரணப் பேர் வழியென்று நினைத்தேன். ஆனால், அவர் பிரபல கடற் படைத் தலைவனான கனோஜி ஆங்கரேயின் குருஜி என்பதைப் பின்னால் தெரிந்து கொண்டேன். அவர் என்னை நேராகக்
காண்டேரித் தீவுக்கு அழைத்துச் சென்று ஆங்கரேயிடம் ஒப்படைத்து, ‘ஆங்கரே! இந்தப் பையன் மகாராஷ்டிரத்தின் அதிர்ஷ்டம். இவனை ஜாக்கிரதையாகக் காப்பாற்று’ என்றார்.
காதில் தங்க வளையங்களையும் கழுத்தில் சங்கு மாலையையும் போட்டுக் கொண்டு பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாயிருந்த அந்தக் கடல் வீரன் என்னை நன்றாக உற்று நோக்கினார். பிறகு ‘யார் இவன்?” என்று
வினவினார்.
‘அவன் வலது உள்ளங்கையைப் பார்’ என்றார் குருஜி.
முரட்டுத்தனமாக என் கையைப் பிடித்து உள்ளங் கையை உற்று நோக்கிய ஆங்கரேஜியின் முகம் ஆச்சரியத்தால் விகசித்தது. ‘குருஜி! இவன் கையில் பாக்கிய சக்கரம் இருக்கிறதே’ என்று கேட்டார்.
‘சாதாரண பாக்ய சக்கரமல்ல, ஜல சஞ்சாரத்துக்கும் ரேகையிருக்கிறது பார்’ என்றார் குருஜி.
கூர்ந்து கவனித்த ஆங்கரே, தன் குண்டலங்கள் அசைய ‘ஆம், ஆம்’ என்றார். முடிவில் ‘சரி, பையனை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார். சாது சென்று விட்டார். பிறகு இன்றுவரை நான் அந்தச் சாதுவைப் பார்க்கவில்லை. என்
கையில் நாட்டுக்கு அதிர்ஷ்டம் கொண்டு வரக்கூடிய பாக்ய சக்கரம் இருப்பதாகவும், அத்துடன் ஜலரேகை இருப்பதால் அந்தப் பாக்கியம் கடற் பிராந்தியத்தின் மூலமாகத்தான் வருமென்று கனோஜியும் குருஜியும் முடிவு கட்டினார்கள்.
ஆகவே குருஜியின் ஆக்ஞைப்படி கனோஜி ஆங்கரே எனக்குப் படிப்பும் கடற் போர் முறைகளையும் சொல்லி வைத்தார்.
கனோஜியின் கீழ் பயில்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. நான் எப்படிப் போர் சாஸ்திரங்களைப் படித்தேன், பயின்றேன் என இன்று எண்ணிப் பார்த்தாலும் வியப்பாயிருக்கிறது. காலை சூரியோதயத்தில் ஆரம்பமாகும் தேகப்
பயிற்சியிலிருந்து இரவு இரண்டு நாழிவரை நடக்கும் வாள் பயிற்சி, படகோட்டும் பயிற்சி, கப்பலில் சுக்கான் பிடிக்கும் பயிற்சி, பாய்மரத்தை விரித்து அவிழ்க்கும் பயிற்சி, துப்பக்கிப் பயிற்சி முதலிய பல வித்தியாப்பியாசங்களைச்
சோம்பேறியான நான் எப்படி சகித்தேன் என இன்றுகூட சொல்ல முடியாது.
இருபதாவது வயதில் என் வித்தியாப்பியாசம் பூர்த்தியாகி விட்டதை உணர்ந்த ஆங்கரே, எனக்கு முதன் முதலாக மாலுமி உத்தியோகத்தைக் கொடுத்தார். சாதாரண மாலுமிகளை அவர் நேரிடையாக அமர்த்துவதில்லை. சிறிய கப்பல்
தலைவர்கள் தான் அமர்த்துவார்கள் ஆனால், என்னை ஆங்கரேயே நேரில் கூப்பிட்டு அனுப்பிச் சில பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
‘ரகுதேவ்! நாளை முதல் என் கடல் படையில் மாலுமியாக வேலை பார்க்கப் போகிறாய்; மனிதர்களைப் பற்றிய என் மதிப்பீடு சரியாயிருக்குமானால் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் நீ என் கடற்படையில் ஒரு கப்பலுக்குத்
தலைவனாகலாம். ஆனால், தலைமைப் பதவியை என்னிடம் யாரும் சிபாரிசினால் அடைய முடியாது; உழைப்பினாலும் காரிய சாதனையாலுந்தான் அடையலாம்!’ என்றார்.
‘நான் என்ன செய்ய வேண்டும்?” என்றேன்.
‘ஸித்திகளை எங்குக் கண்டாலும் கொல்ல வேண்டும். ஸித்திக் கப்பல்களைப் பார்க்குமிடங்களிளெல்லாம் கொளுத்த முயலவேண்டும். அவர்கள் செல்வத்தைக் கூடிய மட்டும் கொள்ளையிட வேண்டும். இந்தக் கொள்ளையிலும்
கொலையிலும் எத்தனைக் கெத்தனை அதிகமாகச் செய்கிறாயோ அத்தனைக் கத்தனை பதவி உயரும்’ என்றார் கனோஜி.
என் வாழ்க்கை சீர்பட என்ன அழகான மூன்று வகை வேலைகள்! கொலை, கொள்ளை, தீயிட்டு அழித்தல்! மூன்றையும் எண்ணியெண்ணிப் பார்த்துப் பெருமூச்சு விட்டேன்.
ஆங்கரே என் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை ஒரு வினாடியில் ஊகித்துக் கொண்டார். அதனால் என்னைக் கேட்டார்: ‘மாலுமிக்கு வைத்திய சாஸ்திரம் தெரிய வேண்டுமே! சரியாகப் படித்திருக்கிறாயா?” என்று.
‘படித்திருக்கிறேன்’ என்றேன்.
‘உஷ்ணத்தை எதனால் சமாளிக்கலாம்?’ என்று வினவினார்.
பதிலுக்கு சம்ஸ்கிருத வாக்கியத்தையே சொன்னேன்: ‘உஷ்ணம் உஷ்ணேன சாம்யதே’ அதாவது ‘உஷ்ணத்தை உஷ்ணத்தினால்தான் சரிப்படுத்த முடியும்’ என்று.
“நாட்டு வியாதிக்கும் அதுதான் வைத்தியம். கொலையைக் கொலையால் தவிர்க்கவேண்டும். கொள்ளையைக் கொள்ளையால் தவிர்க்க வேண்டும்’ என்றார் ஆங்கரே. அத்துடன் ‘உன் பெற்றோர் ரத்தம் இந்த மாநிலத்தில் அதீதமாகச்
சொட்டப்பட்டிருக்கிறது. ஆகவே பழி வாங்கவே நீ வாழவேண்டும். ஸித்திகளை அழிப்பதே உன் லட்சியமாக இருக்க வேண்டும்’ என்றார்.
இளம் உள்ளத்தில் அந்த வார்த்தைகள் வேரூன்றின. அன்று முதல் பழிக்காக உயிர் வாழ்ந்தேன். நான் செய்திருக்கும் கொலைகள் கணக்கிலடங்கா. கொள்ளையோ சொல்லி முடியாது. இடையே ஆங்கரேயை விட்டு மகாராஷ்டிரத்
தரைப்படையில் சேர்ந்து தஞ்சை சென்று சேவை செய்தேன். ஆங்கரே என்னை உபதளபதியாக்கினார். அதற்குப் பிறகு அரபிக் கடல் பிராந்தியத்தில் என் பெயர் பிரசித்தமாயிற்று. என் பெயரைக் கேட்டவர்கள் நடுங்கினார்கள். சற்று நேரத்திற்கு
முன்பு நீங்கள் பார்த்த கொள்ளைக்காரர்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமுமில்லை” என்று கதையைச் சொல்லி முடித்தான் ரகுதேவ்.
பத்மினி பதிலேதும் சொல்லவில்லை. தன் கதையால் அவள் தன்மீது வெறுப்புக் கொண்டிருப்பாள் என்று அவன் நினைத்திருந்தால், அவன் ஏமாந்துதான் போவான். அவன் வலது கையை எடுத்துத் தன் கரங்களில்
வைத்துக்கொண்ட பத்மினி, அவன் உள்ளங் கையைத் திருப்பிப் பார்த்தாள்.
“ரத்தம் தோய்ந்த கை பத்மினி” என்றான் ரகுதேவ்.

.
“க்ஷத்திரியக் கைகளுக்கு அது சகஜம். நாட்டுக்காகத் தோய்ந்த ரத்தந்தானே” என்றாள் பத்மினி.
ரகுதேவ் மஞ்சத்தை விட்டுச் சரேலென எழுந்தான். அவளும் எழுந்து அருகில் வந்தாள். “பத்மினி! நேரமாகிறது. கீழே போ” என்றான்.
“நிலவைவிடக் குளுமையான குரலில் பத்மினி கூறினாள்: “நீங்களும் வந்தால்தான் போவேன்.”
“படுக்க இடம்!”
“இருக்கிறது, வாருங்கள்.”
ரகுதேவ் சிறிது யோசித்துவிட்டு “அவ்வளவு பிடிவாதமிருந்தால் என்ன செய்வது? சரி வருகிறேன், போங்கள்” என்றான.
பத்மினி மெள்ளப் படிகளில் இறங்கிச் சென்றாள். அவள் தலை மறைந்ததும் மீண்டும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான் ரகுதேவ். தலையைத் தன் இரு கைகளிலும் தாங்கிக் கொண்டு வெகுநேரம் யோசித்தான். ‘சீச்சீ! நான்
கொள்ளைக்காரனாயிருக்கலாம். ஆனால், இந்தப் பெண்ணின் வாழ்க்கையைச் சிதைக்கும் அளவுக்கு நான் கெட்டுப் போகவில்லையே. கீழே போகாமல் இங்கேயே தங்கி விட்டால்?… அவள் திரும்பி இங்கே வந்துவிட்டால் என்ன செய்வது?’
இங்கே யோசனை அறுபட்டது. மீண்டும் ஒரு யுக்தி தோன்றியது. “பீம்ஸிங்கும் நானும் ஓர் அறையில் படுத்து, பத்மினிக்குத் தனி அறையை விட்டு விட்டால்…?’ இதை யோசித்ததும் ஒரு முடிவுக்கு வந்தவனாய்க் கீழே இறங்கிச் சென்றான்.
கீழே அறைக்குச் செல்லும் தளப்படிகளின் கதவைத் திறந்து ரகுதேவ் அங்கு விளக்கு ஏதுமில்லாமல் கும்மிருட்டாயிருப்பதைக் கண்டு சற்று நிதானித்தான். கீழறைக்குச் செல்லும் படிகளுக்கு எப்பக்கத்திலும் சாளரம் கிடையாது. எதிரே
அறைக் கதவையும் சாத்திவிட்டால் வெளிச்சம் எந்தப் பக்கத்திலிருந்தும் வராது. ஆனால், படிகளில் தளக்கதவுதிறந்திருந்ததால் படிகளின் நடுவே சிறிது வெளிச்சம் பாய்ந்தது. கடைசிப் படி வரையில் கண்ணைச் செலுத்திய ரகுதேவ்
படிகளில் இறங்கினான். அடுத்த வினாடி தளக்கதவு அடைத்துத் தாழிடப்பட்டுப் படிகளில் கும்மிருட்டு சூழ்ந்தது. அதே சமயத்தில் ரகுதேவின் தோளை ஒரு கை கெட்டியாகப் பிடித்து அழுத்தவும் முற்பட்டது.

Previous articleJala Mohini Ch9 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch11 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here