Home Historical Novel Jala Mohini Ch11 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch11 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

82
0
Jala Mohini Ch11 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch11 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch11 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 11. ரகசியம்

Jala Mohini Ch11 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

தளப்படிக் கதவு திடீரெனச் சாத்தப்பட்டவுடனேயே, சட்டென்று நின்றுவிட்டான் ரகுதேவ். அத்துடன் தோளையும் யாரோ பிடித்து அழுத்தத் தொடங்கவே அவன் உடல் எவ்விதச் சலனமுமின்றி மரக்கட்டை போலாயிற்று. ஆனால்,
அவன் மூளையும், மூளையால் ஏவப்பட்ட உணர்ச்சிகளும் கனவேகத்தில் வேலை செய்யவே, உடல் மேலுக்கு மரக்கட்டையாக நின்றுவிட்ட போதிலும் உள்ளூற இருந்த நரம்புகள் துடிப்புடன் நிமிர்ந்து எந்த ஆபத்தான நிலைமையையும்
சமாளிக்க அவயவங்களைத் தூண்டக்கூடிய உஷாரில் இருந்தன. தோளைப் பிடித்த கை யாருடையதாயிருக்கும் என்பதை ஸ்பரிசத்திலிருந்தே ஆராயத் தொடங்கினான் ரகுதேவ். ஒரே வினாடியில் அவன் சந்தேகம் தீர்ந்தது. தோளை
அழுத்திப் பிடித்தாலும் கையின் விரல்கள் மெல்லியதாகயிருந்ததையும் கையில் லேசாக நடுக்கமும் தென்பட்டதையும் கவனித்த ரகுதேவ் மெள்ளக் கேட்டான் : “ஏன் பத்மினி! நீ இன்னும் படுக்கச் செல்லவில்லையா?” என்று.
இந்தக் கேள்விக்குப் பிறகு லேசாகச் சலசலத்த காச் மீர பட்டுப் புடவையும், அந்தப் புடவை வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்த ரோஜா அத்தரின் வாசனையும் தன்னை நெருங்குவதை உணர்ந்த ரகுதேவ் மேற்கொண்டு எதுவும் பேச
சக்தியற்றவனாய் மோகனாஸ்திரத்தில் கட்டுண்டவன்போல் மௌனமாக நின்றான். படிகளில் கும்மிருட்டு. அத்துடன் பரிமளகந்தம் கமழ அப்ஸரஸைப் போல் தன்னை நெருங்கி வரும் பருவப்பெண். இந்த நிலையில் எந்தப்
புருஷன்தான் சுயநிலையில் இருக்க முடியும்? எந்த உணர்ச்சியும் தன்னை மீற இடங் கொடுக்காத ரகுதேவ்கூட அந்தச் சந்தர்ப்பத்தில் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு நின்றான்.
அவன் மௌனத்தைப் பத்மினி மெள்ளக் கலைத்தாள். “உஷ், மெல்லப் பேசுங்கள், இரைய வேண்டாம்” என்று அவன் காதுக்கருகில் தன் உதடுகளைக் கொண்டு வெகு ரகசியமாகச் சொன்னாள். அதைச் சொல்லும்போது அவள்
குரலில் சற்று நடுக்கமும் இருந்தது.
பத்மினி ஏதோ அபாயத்தை எதிர்பார்க்கிறாள் என்பது மட்டும் சந்தேகமறப் புரிந்தது ரகுதேவுக்கு. ஆனால், அது எத்தகைய ஆபத்தாக இருக்கக்கூடும் என்பதை யோசிக்க அவன் மனம் இடங்கொடுக்கவில்லை. மற்ற எவ்வளவோ
ஆபத்துக்களைச் சமாளிக்கக்கூடிய அவன் திடமான மனம், பத்மினி அத்தனை சமீபத்தில் தன்னந்தனியே இருப்பதால் ஏற்படக்கூடிய இயற்கை ஆபத்தைச் சமாளிக்கப் பயப்பட்டு நடுங்கியது. இந்த நடுக்கத்தை ஒருவாறு சமாளித்துக்
கொண்ட ரகுதேவ், “பத்மினி! உன் கை ஏன் இப்படி நடுங்குகிறது? நானிருக்கும்போது உனக்கு என்ன பயம்?” என்று ரகசியமாகக் கேட்டான்.
“நீங்கள் இருக்கிற வரைக்கும் பயமில்லை. நீங்கள் இல்லாவிட்டால்?” என்றாள் பத்மினி, மீண்டும் அவன் காதுக்கருகில். அந்தச் சமயத்தில் அவள் மேல்படியிலும் அவன் கீழ்ப்படியிலும் நின்றிருந்தபடியால் அவள் முக வாய்க் கட்டை அவன்
தோளில் நன்றாகப் பதிந்திருந்தது. அவள் உதடுகள் காதுக்கருகில் பேசியபடியால் கன்னத்தின் ஒரு பாகம் அவன் கன்னத்தில் உராய்ந்தது.
இத்தனைக்கும் ரகுதேவ் எந்தப் பக்கத்திலும், அசையவில்லை. தலையைக்கூடப் பின்னுக்குத் திருப்பாமலே கேட்டான், “நான் இல்லாவிட்டாலா! இல்லாமல் போக வேண்டிய அவசியம்?”
“உங்களைக் கொல்லச் சூழ்ச்சி நடக்கிறது.”
“சூழ்ச்சியா, செய்வது யார்
“ஸித்தி அஹமத்!”
“அது தெரிந்த விஷயந்தானே. அவனைச் சமாளிக்கத் தானே பிரயத்தனம் செய்து வருகிறோம்.”
“நீங்கள் நினைப்பதுபோல் விஷயம் அவ்வளவு சுலபமானதல்ல.”
“ஏன்?”
“படியிலேயே உட்காருங்கள், சொல்கிறேன்.”
பத்மினியின் சொல்படி தளப்படிக்கட்டிலேயே ரகுதேவ் உட்கார்ந்து கொண்டான். அவன் பக்கத்தில் பத்மினியும் நெருங்கி உட்கார்ந்துகொண்டாள். அவள் கையிலொன்றைத் தன் கையிலெடுத்துச் சிறைப்படுத்திக் கொண்ட ரகுதேவ்,
அவள் கையில் நடுக்கம் அப்பொழுது மிருந்ததைக் கவனித்தான். ராஜபுத்ர ஸ்திரீயான பத்மினியே நடுங்கும்படியான விஷயமாயிருந்ததால் செய்தி சற்று கடுமையானதாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தான். அவன்
ஊகத்திற்கு ஏற்றபடி தானிருந்தது, பத்மினி சொன்ன தகவலும்.
“இந்தப் படி விளக்குகளை நான்தான் அணைத்தேன்…” என்று ஆரம்பித்தாள் பத்மினி.
“எதற்காக?” என்று ரகுதேவ் வினவினான்.
“இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள், அவர்கள் கண்களில் படாதிருப்பதற்காக”
“ரஹீமும் அந்தச் சுக்கான் பிடிக்கும் மாலுமியும் பேசிக் கொண்டிருந்தார்களா?”
“அதை எப்படி ஊகித்தீர்கள்?”
“இதென்ன பெரிய ஊகம்? என்னைக் கொல்ல ஸித்தி அஹமத் சதி செய்வதாகக் கூறினாய். அதைப் பற்றி யாராவது பேசியிருந்தது உன் காதில் விழுந்திருக்க வேண்டும். இந்தக் கப்பலில் ஸித்தி அஹமத்தின் பூரண நம்பிக்கைக்குப்
பாத்திரமானவர்கள் இரண்டு பேர். ஒருவன் அந்த ஒற்றைக் கண் ரஹீம். இன்னொருவன் அந்த சுக்கான்” என்று விளக்கினான் ரகுதேவ்.
“உண்மைதான், வேறு யார் ஸித்தி அஹமத்தைப் பற்றிப் பேசியிருக்க முடியும்?” என்று தனக்குத்தானே சொல்லிக்கொணட பத்மினி, மேலும் ரகுதேவைப் பார்த்துச் சொல்லலானாள்: “நான் உங்களைவிட்டுக் கீழே இறங்கி வந்ததும்
பேச்சை நிறுத்திவிட்டார்கள். நான் கவனியாதது போல் தளப் படிக்கட்டு விளக்கை அணைத்து விட்டு தடதடவென்று இறங்கிக் கீழே போய் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றுவிட்டேன். ஆனால் அவர்கள் என்ன
பேசுகிறார்களென்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலால் மீண்டும் மெதுவாகப் படிகளில் ஏறிக் கதவுக்கருகில் மறைந்து நின்று உற்றுக் கேட்டேன். வந்திருந்த சுக்கான் மாலுமி, நீங்கள் எல்லோரையும் அதிகாரம் செய்வதைப் பற்றியும்,
பெரிய பிரபு போல் நடந்து கொள்வதைப் பற்றியும் ரஹீமிடம் புகார் செய்து கொண்டிருந்தான். ‘இவனும் நம்மைப் போல் கொள்ளைக் காரன் தானே. இவன் எப்படி நம்மைக் கேவலம் அடிமைகள் போல் விரட்டலாம்?” என்று கேட்டான்
சுக்கான் பிடிக்கும் மாலுமி…”
பத்மினியின் பேச்சை ரகுதேவின் பெருமூச்சொன்று சற்றுத் தடை செய்தது. “உண்மைதானே பத்மினி! எனக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்றான் ரகுதேவ்.
பத்மினி பதிலுக்கு அவன்மேல் நன்றாகச் சாய்ந்து “அழகாயிருக்கிறது உங்கள் பேச்சு. உங்களுக்கும் அவர்களுக்கும் ஆயிரமாயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன” என்றாள்.
அந்தப் பைங்கிளியின் பரிவான பேச்சினாலும், பஞ்சு போன்ற உடலின் சாய்வாலும் சற்று நிதானத்தைக் கைவிட்ட ரகுதேவ், தன் வலக்கரத்தை அவள் இடைக்காகத் தவழவிட்டு அவளை இன்னும் அருகில் இழுத்தான். அந்த அழைப்பை
அவள் புறக்கணிக்கவில்லை. இஷ்டத்துடன் நகர்ந்தே உட்கார்ந்தாள். அந்த நிலையில் ரகுதேவ் “என்ன வித்தியாசங்களைக் கண்டுவிட்டாய் பத்மினி?” என்று விசாரித்தான்.
“அவற்றை விவரிக்கப் போனால் அசல் செய்தியைப் பேச அவகாசமிருக்காது. ஆகையால் அதை முதலில் கேளுங்கள்” என்று லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்ன பத்மினி பழைய விஷயத்தைத் தொடர்ந்து கூறினாள்.
“இப்படிச் சுக்கானால் கேட்கப்பட்ட ரஹீம் அவனிடம் ஒரு முக்கிய தகவலைச் சொன்னான்” என்று கூற, அவர்கள் இருவருக்கும் நடந்த சம்பாஷணையை அப்படியே விவரித்தாள் பத்மினி; ‘இவன் ஆட்டமெல்லாம் அதிக நாளில்லை’
என்றான் ரஹீம். அதன் அர்த்தத்தைச் சுக்கான் முதலில் புரிந்து கொள்ளவில்லை. ‘பொக்கிஷக் கப்பல்களைப் பிடித்த பின்பு அதில் தனக்குச் சேர வேண்டிய பங்கை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணையும் தட்டிக்கொண்டு
போகலாமென்று ரகுதேவ் நினைக் கிறான். ஆனால், ஸித்தி அஹமத்தின் உத்தேசம் வேறாக இருக்கிறது. கப்பல்களைப் பிடித்துக் கொடுத்த பின்பு ரகுதேவைத் தீர்த்து விட்டுப் பெண்ணைத் தான் எடுத்துக் கொள்ளத்
திட்டமிட்டிருக்கிறான் ஸித்தி அஹமத்’ என்று ரஹீம் விவரித்தான். ஆனால், இந்த விவகாரம் சுக்கானுக்கு நம்பிக்கையூட்டவில்லை. ‘ஏன் இந்த மர்மத்தை ஊகிக்க ரகுதேவுக்குப் புத்தியில்லையோ?’ என்று கேட்டான். அதற்கு ரஹீம்
சொன்னான். ‘ஊகித்து என்ன பயன்? இரு கப்பல்களிலும் இருக்கும் மாலுமிகளும் ஸித்தி அஹமத்தின் ஆணைக்குட்பட்டவர்கள். எந்த நிமிஷத்தில் வேண்டுமானாலும் நாம் ரகுதேவைத் தீர்த்து கட்டலாம். அவன் சந்தேகப்பட்டுப்
பொக்கிஷக் கப்பல்கள் வருமிடத்திற்கு நம்மை அழைத்துச் செல்லாவிட்டால் ஸித்தி அஹமத் அவனை இப்பொழுதே ஒழித்து விடுவான். அழைத்துச் சென்றால் பின்னால் ஒழிப்பான். எப்படியும் அவன் ஆயுள் முடிய அதிக நாட்களில்லை’
என்றான்.
இந்த விவரத்தைச் சொன்ன பத்மினி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் மௌனமாயிருந்தாள். அவளுக்குத் தைரியம் அளிக்கும் பாவனையில் அவள் இடையை ரகுதேவின் இரும்புக்கரம் ஒருமுறை அழுத்திக் கொடுத்தது. அத்துடன்
இடுப்பை விடுதலை செய்த அவன் கை அவள் கன்னத்தை இறுகப் பிடித்துத் திருப்பியது. அவன் உதடுகள் அவள் காதுக்கருகில் முணுமுணுத்தன. “பத்மினி! ரஹீம் சொன்ன விஷயத்தில் புதிதான அம்சம் எதுவுமில்லை. ஸித்தி
அஹமத்தை நான் பல நாட்களாக அறிவேன். ஸித்தி அஹமத் மட்டுமென்ன, அவன் மூதாதைகள் எப்பொழு தாவது யாரிடமாவது பேச்சுப்படி நடந்துகொண்டிருக்கிறார்களா? ஜன்ஜீரா ஸித்திகளின் சரித்திரமே கொடுத்த வாக்கை
உடைத்தெறிந்த சம்பவங்களின் சங்கிலித் தொடராயிற்றே பத்மினி. சரணாகதி அடைந்த எத்தனை கோட்டைவாசிகளை ஜன்ஜீரா ஸித்திகள் கொன்றிருக்கிறார்கள் தெரியுமா? கொங்கணியின் தரைக்கு வாயிருந்தால் அதுவே இவர்கள்
கொடுமைகளைக் குறித்துக் கதறியிருக்குமே. ஆகையால் ரஹீமின் தகவலைப் பற்றிக் கவலைப்படாதே. நம்மை முன்னோக்கி ஆபத்திருப்பது நிச்சயம். அதைக் கண்டு திகிலடைவதால் எந்த லாபமுமில்லை. ஒன்று மட்டும் உறுதி. இந்த
ஸித்தி அஹமத் அல்ல, அவன் கூட்டமே புரண்டு வந்தாலும் என்னைக் கொன்ற பிறகுதான் உன் மேல் கை வைக்க முடியும். ஆகையால் நான் உயிருடன் இருக்கும்வரை நீ பயப்படாதே” என்றான் ரகுதேவ்.
ரகுதேவின் வார்த்தைகள் அவள் உணர்ச்சிகளை மேலும் பொங்கச் செய்தனவே யொழிய சிறிதும் அடக்க வில்லை. அவள் கண்களிலிருந்து சொட்டிய நீர்த்துளிகள் இரண்டு அவன் கையில் உஷ்ணமாக விழுந்தன. ஒரு கையால் அவள்
முகவாய்க் கட்டையைத் தாங்கி இன்னொரு கையால் அவள் கண்ணீரைத் துடைத்தான் ரகுதேவ். அத்துடன் “படுக்க நேரமாயிற்று. போகலாம் வா. எழுந்திரு” என்று சொல்லிக்கொண்டே அவளை இரு கைகளாலும் அணைத்துத்
தூங்கினான். அந்த நிலையில் கீழேயிருந்த அறைக்கதவு திறக்கப்பட்டு அறையிலிருந்த விளக்கின் வெளிச்சம் சுள்ளென்று அவ்விருவர் மேலும் விழுந்தது. திறக்கப்பட்ட ஒரு கதவின் பக்கத்தில் நின்றிருந்த பீம்ஸிங் அவ்விருவரும் இருந்த
நிலையைக் கண்டு எதுவும் சொல்லத் தோன்றாமல் சற்றுநேரம் பிரமை தட்டிப் போனார்.
திடீரென்று வெளிச்சம் முகத்தில் பட்டதால் கண் கூசிக் கண்ணை மூடிக்கொண்ட ரகுதேவும் பத்மினியும் விநாடி நேரத்தில் தங்களைச் சமாளித்துக்கொண்டு பிரிந்து எழுந்து நின்றார்கள். ரகுதேவ் முதலில் படிகளில் மெள்ள இறங்கிச்
சென்றான். பத்மினியும் அவனைப் பின்தொடர்ந்து இறங்கினாள். அறைக்குள் சென்றதும் அறைக் கதவை மெள்ளச் சாத்தினாள் பத்மினி. சாத்தும்போதே பீம்ஸிங்கை ஓரக் கண்ணால் பார்த்த அவள் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும்
வெடிப்பதைக் கண்டாள்.
பீம்ஸிங் காலதாமதம் செய்யாமல் அவர்கள் இருவர் நடத்தைக்கும் சமாதானம் கேட்கும் முறையில் முதல் முதலாக ரகுதேவின் மேல் பாய்ந்து, “அவ்வளவு இருட்டில் படியில் நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டிய காரணமென்ன?” என்று
வினவினார்.
அவர் அதட்டலான குரலும் தோரணையும் ரகுதேவின் இதழ்களில் புன்முறுவலை வரவழைக்கவே அவன் ஏளனமாகச் சிரித்துக் கொண்டே சொன்னான் ; “சிறிது ரகசியம் பேச வேண்டியிருந்தது” என்று.
“என்ன ரகசியம்” என்று மீண்டும் வினவினார் பீம்ஸிங்.
“உங்களிடம் சொல்லக்கூடிய ரகசியமாயிருந்தால் இந்த அறைக்கே வந்து பேசியிருக்க மாட்டோமா?” என்று பதில் சொன்னான் ரகுதேவ்.
a தனக்குச் சொல்லக்கூடாத அப்பேர்ப்பட்ட ரகசியம் பத்மினிக்கு நேற்று வந்த இந்தக் கொள்ளைக்காரனிடம் என்ன இருக்கக்கூடும் என்ற நினைப்பினால் மிகவும் பட படத்த பீம்ஸிங், ரகுதேவை மேற்கொண்டு என்ன கேட்பதென்று
தெரியாமல் தத்தளித்தார். புத்தியில் அழிக்க முடியாமல் குடிகொண்டுவிட்ட சந்தேகத்தால் திணறினாலும் மெள்ளச் சமாளித்துக் கொண்டு பத்மினியை நோக்கி, “என்ன பத்மினி, நான் அறியக் கூடாத ரகசியம் கூட இவரிடம்
உனக்கிருக்கிறதா?” என்று சற்று அதிகார தோரணையில் கேட்டார்.
“உங்களுக்குச் சம்பந்தமில்லாத ரகசியங்களை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமென்ன?” என்றாள் பத்மினி பதிலுக்கு.
“எனக்குச் சம்பந்தமில்லாத ரகசியமா!”
“ஆம்!”
“அப்படிக்கூட ஒரு ரகசியம் உண்டா?”

.
“இருந்ததால்தானே அவரிடம் தனித்துப் பேசும்படி ஆயிற்று.”
இதற்குமேல் பொறுக்க முடியாத பீம்ஸிங், “அந்த ரகசியத்தை இருட்டில்தான் பேச வேண்டுமா?” என்று சீறினார்.
பத்மினியின் கண்களில் அவர் என்றும் காணாத இகழ்ச்சி படர்ந்தது. சற்று ஏதோ யோசித்தாள். பிறகு அவரைப் பார்த்துச் சொன்னாள்: “சரி நேரமாகிவிட்டது. நீங்கள் அந்த அறைக்குச் செல்லுங்கள்” என்றாள்.
“ஏன்! என்றார் பீம்ஸிங்
“படுத்துக் கொள்ள நேரமாகிறது.”
“உன்னிடம் காலையில் பேசிக்கொள்கிறேன்” என்று பீம்ஸிங் அடுத்த அறைக்குச் செல்லத் தொடங்கி, “சரி வா” என்று ரகுதேவையும் அழைத்தார்.
பத்மினியின் அடுத்த வார்த்தைகள் அவருக்குச் சொல்ல வொண்ணா அதிர்ச்சியை விளைவித்தன.
“அவரை எங்கே கூப்பிடுகிறீர்கள்?” என்றாள் பத்மினி.
“என் அறைக்கு” என்றார் பீம்ஸிங்.
“அவசியமில்லை. நீங்கள் மட்டும் போங்கள்” என்று பத்மினி கூறி, ரகுதேவை நோக்கிப் புன்முறுவல் செய்தாள். பீம்ஸிங் சிலையென நின்றார்.

Previous articleJala Mohini Ch10 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch12 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here