Home Historical Novel Jala Mohini Ch12 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch12 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

75
0
Jala Mohini Ch12 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch12 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch12 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 12. பெண் மனம்

Jala Mohini Ch12 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

பத்மினியின் இதயத்தை மட்டும் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் பீம்ஸிங் இத்தகைய இக்கட்டான நிலைக்கு வந்திருக்க மாட்டார். ஒருவருடைய நடத்தையைப் பற்றி மற்றொருவர் கேள்வி கேட்கத் தொடங்கு முன்பு, பரஸ்பர உறவு,
அந்தஸ்து, எதிராளியின் குணம் இவற்றைச் சந்தேகமறப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொள்ளாமல் கேள்வியை வீசுபவரின் கதி பீம்ஸிங்கின் நிலைக்குத்தான் வந்து சேரும். கற்பைக் காப்பதற்காக அக்னியில் வீழ்ந்து
தீய்ந்து மாயும் ‘ஜோஹர்’ முறையை அநாயாசமாகக் கடைப்பிடிக்கும் ராஜபுத்திர ஸ்திரிகளின் பரம்பரையில் பத்மினி வந்தவளென்பதையும், கற்பில் தன்னைவிட அவளுக்கு அதிக அக்கறை உண்டென்பதையும் பீம்ஸிங் முதலில்
உணர்ந்திருக்க வேண்டும். இரண்டாவது, அவள் தன்னைத் தகப்பன் ஸ்தானத்தில் வைத்திருந்தாலும் தான் எவ்வகையிலும் அவளுக்கு நெருங்கிய உறவினன் அல்லன் என்பதையும், அவள் மீது அதிகாரம் செலுத்தத் தனக்கு எந்தவிதப்
பாத்யதையும் கிடையாதென்பதையும் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். மூன்றாவதாகத் தான் கேட்கும் கேள்வி ஏதிரே நிற்கும் ரகுதேவைத் தவிர உள்ளே அலுவலாயிருக்கும் ரஜினிகாந்தின் காதிலும் படும்படியாகக் கேட்கப்
படுகிறதென்பதையும், இது பத்மினி போன்ற ஒரு பெண்ணுக்கு எத்தனை கோபத்தை விளைவிக்கக் கூடுமென்பதையும் அறிந்திருக்க வேண்டும். ஆனால், பீம்ஸிங் இருந்த மனோநிலை இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் இடங் கொடாததால்
பத்மினியின் நடத்தையில் சந்தேகம் தொனிக்கும் முறையில் கேள்வியை வீசி வைத்தார். அந்தக் கேள்வி, பத்மினியின் அறையிலேயே ரகுதேவ் தங்குமளவிற்கு விபரீதத்தை உண்டுபண்ணும் என்று பீம்ஸிங் சொப்பனத்தில் கூட
நினைக்கவில்லை.
சந்தர்ப்பங்களால் ஏற்படக்கூடிய இழிச் சொல்லுக்குப் பெண்கள் பயந்தவர்கள் தான் ஆனால், இழிச் சொல் பகிரங்கமாக வீசப்படும்போது பெண்களின் பயம் காற்றில் பறந்து விடுகிறது. அதிகமாக விரட்டப்படும் மாடு திடீரெனத்
திரும்பிப் பாய்வதுபோல் அவர்களும் எதிர்த்து நின்று சீறுகிறார்கள். பெண்களின் இந்தக் குணத்தை அறிந்து கொள்ளாத பீம்ஸிங் அசந்தர்ப்பமாகக் கேட்ட கேள்வியின் பயனாக, அவர் மனத்தைப் புண்படுத்த வேண்டும் என்ற ஒரே
நோக்கத்துடனேயே பத்மினி ரகுதேவைத் தன்னோடு தங்கும்படி கூறினாள். இதனால் பீம்ஸிங் அசந்துபோய் ஸ்தம்பித்து நின்றுவிட்டாரென்றால் ரகுதேவும் பெருத்த சங்கடத்திற்குள்ளானான். பத்மினியை வேறு அறையில் படுத்துக்
கொள்ளச் சொல்லலாமென்று திட்டம் போட்டுக் கொண்டு வந்த ரகுதேவ், நிலைமை அடியோடு மாறிவிட்டதைக் கண்டு ஏதும் சொல்லத் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே திணறலானான். அந்தத் திணறலின் காரணமாக அவன் தன்
சட்டைப் பைக்குள் கையைவிட்டு அப்படியும் இப்படியும் திரும்பியதையும் அறையின் மேலே கண்களைத் தூக்கி எதையோ ஆராய்வதுபோல் பாசாங்கு செய்ததையும் கண்ட பத்மினியின் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. “என்ன
யோசனை செய்கிறீர்கள், இரவு முழுவதும் நாம் இப்படியே நின்று கொண்டிருக்க வேண்டியதுதானா?” என்று ரகுதேவை நோக்கிக் கேட்டாள்…
சிந்தனை அலைகளை அந்தக் கேள்வி சற்றுச் சிதற அடிக்கவே சுயநிலைக்கு வந்த ரகுதேவ், “நிற்க வேண்டிய அவசியமில்லை. படுத்துக் கொள்ளவும் நேரமாகிவிட்டது. ஆனால், இராக் காலங்களில் நீங்கள் நினைக்குமளவுக்கு
எச்சரிக்கை தேவையில்லை” என்றான் பத்மினியை நோக்கி.
அவன் சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் தன் விழிகளை அகல விரித்தாள் பத்மினி. கற்சிலையாயிருந்த பீம்ஸிங்குக்குக் கூடச் சற்று உயிர் வந்திருக்க வேண்டும். “நீ சொல்வது புரியவில்லை” என்று ரகுதேவை நோக்கிப் பீம்ஸிங்
அறிவித்தார்.
ரகுதேவ் அவரை ஒரு விநாடி உற்று நோக்கிவிட்டு, “பத்மினியின் அபிப்பிராயத்தையே உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையே, நான் சொல்வது எப்படிப் புரியும்?” என்றான்.
பீம்ஸிங்கின் குழப்பம் அதிகமாயிற்று. இருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமலே, “வருஷக்கணக்கில் பத்மினியுடன் பழகிய எனக்கு அவள் அபிப்பிராயம் புரியாது, நேற்று வந்த உனக்குத்தான் புரியும்” என்று மிடுக்காகவே
பேசினார்.
“ஒருவரைப் புரிந்துகொள்ள அறிவுதான் அவசியமேயொழிய காலம் தேவையில்லை. உதாரணமாக, இந்த அறையில் என்னைப் பத்மினி படுத்துக் கொள்ளச் சொன்னதன் காரணத்தை அரை விநாடியில் புரிந்து கொண்டேன் பல
நாட்கள் பாழகியதாகக் கூறும் உமக்குப் பத்துத் தடவை விளக்கிச் சொன்னாலும் புரியப் போவதில்லை” என்றான் ரகுதேவ்.
இந்தப் பதில் பீம்ஸிங்கின் எரிச்சலைச் சற்று அதிகப்படுத்தவே, “அந்தக் காரணத்தை நானும்தான் தெரிந்து கொள்கிறேன், விளக்கிச் சொல்லுங்களேன்” என்றார்.
“இதில் விளக்கும்படியான மர்மம் ஏதுமில்லை. ஸித்தி அஹமத் இந்தக் கப்பலில் தற்சமயம் இல்லாவிட்டாலும் நம்மை வேவு பார்க்க ஆட்களை அனுப்பியிருக்கிறான். அன்று இதே அறையில் நான் நாடகமாடியபோது அதை ரஹீம் எத்தனை
உன்னிப்பாகக் கவனித்தான் என்பதை நீங்களே பார்த்தீர்கள். ஆகையால் நாம் மிக எச்சரிக்கையாயிருக்க வேண்டியிருக்கிறது. நானும் பத்மினியும் கணவன் மனைவி அல்லவென்பதை ரஹீமோ அவன் நண்பனோ புரிந்து கொண்டால்,
பிறகு நமது உயிர்களோ அல்லது பத்மினியின் கற்போ எத்தனை விநாடி தங்கும் என்று சொல்ல முடியாது. அத்தகைய சந்தேகம் எதுவும் நேரிடாதிருக்கவே பத்மினி தன்னுடன் இதே அறையில் படுத்துக் கொள்ளச் சொல்கிறாள்” என்று
விளக்கினான் ரகுதேவ்.
“இது வாஸ்தவந்தானா பத்மினி?” என்று கேட்டார் பீம்ஸிங்.
பத்மினி உடனே பதிலேதும் சொல்லவில்லை. தான் சிருஷ்டித்த அசந்தர்ப்பமான நிலைக்குப் பரிகாரம் தேடவே ரகுதேவ் அத்தகைய விளக்கத்தைச் சாதுர்யமாகக் கூறினான் என்பது அவளுக்குச் சந்தேகமறத் தெரியவே அவனிடம்
அவளுக்கிருந்த மதிப்பும் அன்பும் பன்மடங்கு உயர லாயிற்று. அத்தனைக்கத்தனை பீம்ஸிங்கிடம் அவளுக்கு அருவருப்பும் அதிகமாகத் தொடங்கியது. இருந்தாலும் அந்தச் சமயத்தில் அவர் மனத்தை மேலும் புண்படுத்த
இஷ்டப்படாமல், “வாஸ்தவமில்லாமல் வேறு எப்படியிருக்க முடியும்? ராஜபுத்திர வம்சத்தில் பிறந்த உங்களுக்கு உங்கள் வம்ச ஸ்த்ரீகளின் குணம் ஏன் சிறிது கூடப் புரியவில்லை?” என்று கேட்டாள்.
ரகுதேவின் விளக்கத்தினாலும் பத்மினியின் பதிலினாலும் ஓரளவு மனச்சாந்தியைப் பெற்றாலும் முழுத்திருப்தியையும் அடையாத பீம்ஸிங், “சரி! அப்படியானால் நான் என் அறைக்குப் போகிறேன்” என்று அரை மனதுடன்
கிளம்பினார்.
ரகுதேவ் அவரைத் தடுத்து, “இராக் காலங்களில் இத்தனை எச்சரிக்கைக்கு அவசியமில்லையென்று சொன்னேனே, அதை நீங்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லையா?” என்று கேட்டான்.
அடுத்த அறைக்காக எடுத்து வைத்த காலைப் பின்னுக்கு வாங்கிக் கொண்ட பீம்ஸிங், “இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினார்.
ரகுதேவ் அவருக்குப் பதிலேதும் சொல்லாமல் ரஜினிகாந்தை அழைத்துத் தனக்கும் பீம்ஸிங்குக்கும் அந்த அறையிலேயே படுக்கையைப் போடச் சொல்லிவிட்டு? “பீம்ஸிங்! நீங்கள் இங்கேயே இருங்கள். நான் சென்று பத்மினியைச்
சௌகரியமாகப் படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று அவளை அழைத்துக் கொண்டு பக்கத்தறைக்குச் சென்றான்.
ரஜினிகாந்த் தயார் செய்த படுக்கையில் பீம்ஸிங் படுத்துக் கொண்டபோதிலும் பக்கத்தறையில் என்ன நடக்கிறதென்ற யோசனையிலேயே அவர் மனம் தத் தளித்துக் கொண்டிருந்தது. ரகுதேவ் வருவதற்கு நேரமாக ஆக அவருக்குப்
படுக்கையில் இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து போய் கதவு வழியாகப் பார்க்கலாமென்றாலோ அதற்கு இடைஞ்சலாக அறைக் கோடியில் ரஜினிகாந்த் வைத்த கண் வாங்காமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். நேரம்
ஓடிக்கொண்டிருந்தது. இத்தனை நேரம் இவன் என்ன செய்கிறான் என்று தானே முணு முணுத்துக் கொண்டார் பீம்ஸிங்…
பக்கத்தறை மிகச் சிறிய அறை. பீம்ஸிங் படுத்திருந்த அறை கப்பல் தலைவனின் பிரத்தியேக அறையாதலால் சற்றுப் பெரிதாக இருந்தது. அதையடுத்திருந்த அறை கப்பல் தலைவன் அணிமணி ஆயுதங்களை வைக்கும் அறையாதலால்
மிகச் சிறியதாகவே இருந்தது. அதிலிருந்த சாமான்களை எல்லாம் ஒரு புறமாக ஒதுக்கினான் ரகுதேவ். பிறகு அங்கிருந்த மஞ்சங்களில் இரண்டை ஒரு பக்கமாக வைத்துச் சரி செய்துவிட்டு, “சரி; படுத்துக் கொள்ளுங்கள்” என்றான்
பத்மினியை நோக்கி.
அவன் ஏற்பாடுகளைப் புன்முறுவலுடன் கவனித்துக் கொண்டு நின்றிருந்த பத்மினி, மஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டு, “ஏன் என் பேச்சுக்கு நீங்கள் சிறிதும் கௌரவம் கொடுப்பதில்லை” என்று வினவினாள்.
“ஏன்? கௌரவம் கொடுக்காமலென்ன?” என்று ரகுதேவ் கேட்டான்.
“என்னிடம் மரியாதை வேண்டாமென்று சொன்னேனல்லவா?”
“ஆமாம்.”
“அப்படியானால் இப்பொழுது எதற்காகப் ‘படுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னீர்கள்?”
“ஏதோ தெரியாமல் சொல்லி விட்டேன்”
“இனிமேல் சொல்லமாட்டீர்களே?”
“மாட்டேன். மரியாதை யென்பதைக் கனவில் கூட நினைக்க மாட்டேன்.”
“நஜந்தானே.”
“நிஜந்தான்.”
“சத்தியம் செய்யுங்கள்” என்று கையை நீட்டினாள் பத்மினி. அவள் கையில் அடிக்கும் பாவனையில் தன் கையை வைத்தான் ரகுதேவ். புஷ்பங்களைவிட மிருதுவான அவள் விரல்கள் அவன் விரல்களைத் தழுவி நின்றன. ரகுதேவ் சிறிது
நேரம் மௌனமாக அந்த மோகனாங் கியைப் பார்த்துக் கொண்டே மஞ்சத்தின் பக்கத்தில் நின்றான்.
“ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்களேன்” என்று மஞ்சத்தில் சற்று இடங்கொடுத்தாள் பத்மினி.
ரகுதேவ் உட்காரவில்லை. தன் கையைக்கூட அவள் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு அந்த அறையில் அங்குமிங்கும் சற்று உலாவினான். அவன் மனம் எதையோ ஆழ்ந்து சிந்திப்பதைப் பத்மினி உணர்ந்து கொண்டாள். சிறிது
நேரம் உலாவிவிட்டு நின்ற ரகுதேவ், “பத்மினி! நாம் மிகவும் அபாயமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்” என்றான்.
அவன் சொல்வதை அவள் தவறாக அர்த்தம் செய்து கொண்டாள். தானும் அவனும் நெருங்கிப் பழகுவதால் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றி அவன் குறிப்பிடுவதாக நினைத்தாள். ஆகவே வெட்கமோடிய புன்முறுவலுடன்
சொன்னாள் : “பெண்கள் எல்லோருடனும் சகஜமாகப் பழகமாட்டார்கள். அபாயம் எங்கிருக்கிறது, எங்கில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். தவிர நெறி நிற்பதற்கும் தவறுவதற்கும் நினைப்புதான் மூலகாரணமாகிறது. நெஞ்சில்
பிழையில்லையேல் நெருங்கிய பழக்கத்தால் பிழை விளைவதில்லை.”
பத்மினியின் பேச்சைக் கேட்ட ரகுதேவின் இதழ்களில் சற்றுப் புன்னகை அரும்பத் தொடங்கியது. “நமது பழக்கத்தைப் பற்றிச் சொல்லவில்லை பத்மினி.” என்றான்
“பின் எதைப் பற்றிச் சொல்கிறீர்கள்?”
“நாளைக் காலையில் நம்மை எதிர் நோக்கியிருக்கும் அபாயத்தைப் பற்றி?”
“என்ன அபாயம்?”
“நாளை காலை சூர்யோதயத்தில் இக்கப்பல் விஜயதுர்க்கத்தை அடைந்துவிடும்.”
“பிறகு…?”
“பிறகுதான் உண்மை ஆபத்து ஆரம்பமாகிறது. விஜயதுர்க்கத்தை அடைந்ததும் நாம் ஸித்தி அஹமத்தின் பூர்ண அதிகாரத்தில் சிக்கிக் கொள்ளுவோம். ஸித்தி அஹமத் இந்தக் கப்பலிலேயே நம்மைத் தங்கவிட்டால் அபாயம்
அதிகமில்லை. துறைமுகத்தில் நம்மை இறக்கிக் கோட்டைக்குள் அழைத்துச் செல்வேனென்று பிடிவாதம் பிடித்தானானால் நம் கதி அதோகதிதான். கோட்டைக்குள் சிக்கிக் கொண்டால் வெளியே வர மார்க்கமில்லை” என்றான்.
பத்மினி பயத்தால் மிரண்டு விழித்தாள். “எதற்கும் நானிருக்கிறேன். பயப்படாதே. நான் போய்ப் படுத்து யோசனை செய்து இதற்கும் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும்” என்று சொல்லிவிட்டு அறைக் கதவைச் சாத்திக்கொண்டு
வெளியேறினான், ரகுதேவ்.
தனியே விடப்பட்ட பத்மினி வெகு நேரம் ஏதேதோ யோசனை செய்துகொண்டு தூக்கமின்றிப் படுத்திருந்தாள். மெள்ள மெள்ள அவளை மீறி அவள் கண்கள் மூடின. பத்மினி நித்திரையில் ஆழ்ந்தாள். காலையில் அவள் கண்
விழித்தபோது சூரியன் கிளம்பி அரை ஜாமமாவது இருக்கும். கப்பலைச் சுற்றிலும் ஏகக் கூச்சல் கேட்டதும் சாளரத்தின் வழியாக வெளியில் எட்டிப் பார்த்தாள் பத்மினி. விஜயதுர்க்கத்தின் கோட்டை, அவள் கண்களுக்கெதிரே பயங்கரமாக

.
எழுந்து நின்றது.

Previous articleJala Mohini Ch11 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch13 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here