Home Historical Novel Jala Mohini Ch13 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch13 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

101
0
Jala Mohini Ch13 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch13 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch13 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 13. ரகுதேவின் புது யோசனை

Jala Mohini Ch13 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

கோட்டையைக் கண்ட பத்மினியின் உள்ளத்தில் ஏற்பட்ட நடுக்கம் உடலிலும் பிரதிபலித்ததால் படுக்கையை விட்டு எழுந்த பிறகும் அவள் திடமாக நிற்கச் சக்தியற்றவளானாள். விஜயதுர்க்கத்தின் கோட்டைக்குள் ஒரு முறை அழைத்துச்
செல்லப்பட்டால் மீள முடியாதென்று இரவில் ரகுதேவ் சொன்ன தகவலை நினைக்க நினைக்க அவள் அதைரியம் அதிகப்பட்டதேயொழிய துணிச்சல் சிறிதும் தலைகாட்டவில்லை. ‘எதற்கும் சளைக்காமல் கப்பலில் ஏற்பட்ட எத்தனையோ
ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றிய அவரே அச்சப்படும்படியான ஒரு நிலை ஏற் படுகிறதென்றால் அதைப் பற்றி நான் எப்படிப் பயப்படாமலிருக்க முடியும்’ என்று பத்மினி தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். எவ்வளவு முறை
சிந்தித்தாலும் மனத்துக்குள் எத்தகைய சாந்தியும் ஏற்படாமல் போகவே, அறை மூலையில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து ஜலத்தை எடுத்துப் பல்துலக்கி முகங் கழுவி, தலை மயிரைக் கோதிவிட்டு ஆடைகளையும் சரிப்படுத்திக்
கொண்டாள். பிறகு ரகுதேவைப் பார்க்க எண்ணி அறைக் கதவை அவள் திறந்ததும் சுடச்சுட ஆகார வகையறாக்களை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு ரஜினிகாந்த் உள்ளே நுழைந்தான்.
அவன் தட்டைக் கீழே வைக்கும் முன்பாகவே பத்மினி அவனை நோக்கி, “உன் எஜமானர் எங்கே, ரஜினிகாந்த்?” என்று கேட்டாள்.
“எஜமானர் கப்பலை விட்டுப் படகில் இறங்கிச் சென்றார்” என்றான் ரஜினிகாந்த்.
இந்தப் பதில் அவளுக்கு ஆச்சரியத்தை விளைவித்த தென்றால் அவளுடைய இன்னொரு கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்ன பதில் அதிர்ச்சியை விளைவித்தது. “கப்பலை விட்டுச் சென்று விட்டாரா! எங்கே சென்று விட்டார்?” என்று
பத்மினி கேட்டாள்.
“ஸித்தி அஹமத்தின் கப்பலுக்கு” என்றான் ரஜினிகாந்த்.
பத்மினி சற்று நேரம் அசந்து உட்கார்ந்து விட்டாள். “அம்மா, ஆகாரம் ஆறிப் போய்விடுகிறது.” என்று ஞாபகப்படுத்தினான் ரஜினிகாந்த். அவள் புத்தி ஆகாரத்தில் செல்லவில்லை. ரகுதேவ் எதற்காக ஸித்தி அஹமத்தின் கப்பலுக்குப்
போயிருக்கிறான் என்ற ஆராய்ச்சியில் அவள் மனம் ஆழ்ந்தது. ஆகவே அதைப் பற்றி விசாரித்தறியும் அவசரத்தில் ஆகாரத்தைத் தொடாமலே அவ்வறையை விட்டு அடுத்த அறைக்குச் சென்றாள். அங்கு பீம்ஸிங் தன்னுடைய உத்தியோக
உடுப்புகளையெல்லாம் ஒன்று விடாமல் அணிந்துகொண்டு இடுப்பில் பெரிய பட்டாக் கத்தியையும் கட்டிக் கொண்டு கம்பீரமாக அறையில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார்.
நாடக அரசனைப் போலிருந்த அவருடைய வேஷத்தையும், அவரிடம் இருந்த ஆயத்தத்தையும் கண்ட பத்மினி சாதாரண நாட்களாயிருந்தால் உரக்க நகைத்திருப்பாள். ஆனால், அந்தச் சமயத்தில் அவள் உள்ளத் திலிருந்த ஆயாசம் அந்த
மாதிரி நகைச்சுவைக்கு இடம் கொடுக்காது போகவே மிக நிதானமாகவே அவரைப் ‘ பார்த்துக் கேட்டாள்: “எங்கே புறப்பட இத்தனை ஏற்பாடு!”
ஏதோ அவளறியாத செய்தியைச் சொல்வது போல், “விஜயதுர்க்கம் வந்துவிட்டது” என்று பீம்ஸிங் அறிவித்தார்.
“அதனாலென்ன?” – அலட்சியமாகக் கேட்டாள் பத்மினி.
“அதனாலென்னவா! இறங்கவேண்டிய இடம் வந்து விட்டதால் அதற்குத் தயார் செய்து கொள்ள வேண்டியது தானே?”
“இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதேயொழிய இறங்க வேண்டுமென்ற உத்தரவு வரவில்லையே!”
“இறங்குவதற்கு யாரிடம் நாம் உத்தரவு வாங்க வேண்டும்?” – மிகக் கேலிக் குரலில் இந்தக் கேள்வியைக் கேட்டார், பீம்ஸிங்.
“ஏன் அவரிடம்தான்” என்று பதிலிறுத்தாள் பத்மினி.
“யார் அந்த அவர்?” பீம்ஸிங்கின் குரலில் வெறுப்பு பலமாகக் கலந்திருந்தது.
“யார் நம்மை இதுவரை காப்பாற்றியிருக்கிறாரோ அவர்தான்” என்றாள் பத்மினி வேண்டுமென்றே.
பீம்ஸிங்கும் தம் கோபத்தைக் காட்ட இஷ்டப்பட்டு, “அவர் தயவு இனிமேல் இவருக்குத் தேவையில்லை “ என்றார்.
பத்மினியின் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. “தேவையில்லையா!” என்றாள்.
“ஆம், தேவையில்லை. கடற்போர் பீம்ஸிங்கிற்குப் பழக்கமில்லாதிருக்கலாம். ஆனால், தரையில் பீம்ஸிங் ஒரு தளபதி என்பது நினைவிருக்கட்டும்.” என்று பீம்ஸிங் சற்று வீம்பாகவே பதில் சொன்னார். கப்பலில் வந்த நாட்களில் அவர் ஒரு
வீரர் என்பதையே மறந்துவிட்டிருந்த பத்மினிக்கு அவர், தாம் ஒரு வீரர் மட்டுமல்ல, தளபதியென்பதையும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்கத்தான் செய்தது. ஆகவே, அத்தனை அசந்தர்ப்ப நிலையிலும் அவர் தற் பெருமையைக்
கேட்ட பத்மினியின் இதழ்களில் சற்றுப் புன்சிரிப்பு தவழ்ந்தது.
“தளபதியவர்கள் தரையில் இறங்கியதும் என்ன செய்வதாக உத்தேசம்?” என்று பத்மினி வினவினாள். “இறங்கியதும்…” என்று ஆரம்பித்த பீம்ஸிங், தாம் இறங்கிய பிறகு என்ன செய்வது என்பது புரியாததால் மேலே வார்த்தைகளைத்
தொடுக்க முடியாமல் மென்று விழுங்கினார். ரகுதேவுக்கும் பத்மினிக்கும் சில நாட்களாகக் கப்பலில் ஏற்பட்ட உறவை உடைப்பதிலேயே முனைந்து நின்ற பீம்ஸிங்கின் மனம் வேறு எண்ணங்களில் புக மறுத்தது. ‘நாம் என்னென்ன
யோசனைகளைச் செய்து பத்மினியைக் கப்பலில் கூட்டிக்கொண்டு வந்தோம். நிலைமை எப்படியெல்லாம் திரும்பிவிட்டது’ என்று கப்பலில் வந்த ஒவ்வொரு நாளும் பீம்ஸிங் யோசித்துக் கொண்டு வந்தார். கப்பலில் பிரயாணம்
செய்யும் சில நாட்களுக்குள் பத்மினியின் அன்பைக் கவர்ந்து தரையில் இறங்கியவுடன் திருமணத்திற்கு அடிபோட்டிருந்த பீம்ஸிங்குக்குத் தமது கனவுகள் கப்பலில் ஒவ்வொரு நாளும் சிதறுவதைக் காணப் பெருத்த
வேதனையாயிருந்தது. இத்தனைக்கும் காரணம் கப்பலில் ஏற்பட்ட சம்பவங்கள்தா னென்பதையும், மேற்கொண்டு ரகுதேவையும் பத் மினியையும் நெருங்கிப் பழகவிட்டால் தான் சந்நியாசம் வாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை
யென்பதையும் பீங்ஸிங் உணர்ந்திருந்தார். அதிக இடமில்லாத கப்பலில் இருக்கும் வரையில் அவ்விருவரையும் அதிகமாகப் பிரித்து வைப்பது சாத்தியமில்லையென்பது பீம்ஸிங்குக்குத் தெரிந்திருந்ததால் தரை வரும் தருணத்தை
ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தார். ஆகவே விஜயதுர்க்கத்தைக் கண்டதும் பத்மினிக்கு நடுக்கம் ஏற்பட்டாலும், தரையைக் கண்ட உற்சாகத்தில் பீம்ஸிங் என்னவோ மிதமற்ற மகிழ்ச்சியை அடைந்து, ஓரளவு நிலைகுலைந்தும் போனார்.
அப்படித் தடுமாறி நின்ற நிலையில் தரையில் இறங்கியதும் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் அவர் எண்ணிப்பார்க்கவேயில்லை. ஆகையால் பத்னிக்குப் பதில் ஏதும் சொல்ல வழியில்லாமல் தடுமாறினார்.
“இறங்கியதும் என்ன செய்வதாக உத்தேசம்?” என்ற கேள்வியை மீண்டும் தொடுத்தாள் பத்மினி.
“இறங்கிய பிறகு யோசித்துக் கொள்வோம். இறங்குவதென்னவோ நிச்சயம்” என்று திட்டமாகப் பதில் கூறினார் பீம்ஸிங். அதே சமயத்தில் ஸித்தி அஹமத்தின் கப்பலிலிருந்த ரகுதேவ் யாரும் விஜயதுர்க்கத்திலிறங்க முடியாத
நிலைமையைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தான் என்பதை அவர் எப்படி அறிவார்?
விஜயதுர்க்கத்தில் இறங்கிக் கோட்டையில் சிக்கிக் கொண்டால் ஏற்படக்கூடிய ஆபத்தை நன்றாக உணர்ந்திருந்த ரகுதேவ், இரவு முழுவதும் தூங்கவேயில்லை. கண்ணை மூடிப் படுத்தானே யொழிய, அடுத்து வரும் ஆபத்தை எப்படிச்
சமாளிக்கலாம் என்பதிலேயே புத்தி சுழன்று கொண்டிருந்தது. விடியற்காலையில் எழுந்திருந்த போது அவன் முகத்தில் கவலை பூராவாகக் குறையா விட்டாலும் ஓரளவு சாந்தி துலங்கத்தான் செய்தது. ஏதோ ஒரு முடிவுக்கு
வந்தவன்போல் காலைக் கடன்களை வெகு துரிதமாகச் செய்து முடித்துக் கொண்டு உடைகளை அணிந்து, ஆகாரத்தைத் திரும்பி வந்து முடித்துக் கொள்வதாக ரஜினிகாந்திடம் கூறிவிட்டுத் தளத்தை நோக்கி விடுவிடென்று
சென்றுவிட்டான். ரஜினிகாந்தைத் தவிர வேறொரு சேவகனாயிருந்தால் அசந்தர்ப்பமாக ஏதாவது கேள்வி கேட்டு எஜமான் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டிருப்பான். ரகுதேவைச் சம்பூர்ணமாகத் தெரிந்து கொண்டிருந்த ரஜினிகாந்த்
எஜமானைத் தொடர்ந்து தளத்துக்குச் சென்றான். அங்கு ரகுதேவ் மாலுமிகளை அழைத்து, படகிலொன்றை அவிழ்த்துத் தண்ணீரில் இறக்கும்படி ஆக்ஞாபித்ததையும், சற்று நேரத்திற் கெல்லாம் அப்படகில் அமர்ந்து அவன் கூப்பிடு
தூரத்தில் நங்கூரம் பாய்ச்சிக் கொண்டிருந்த ஸித்தி அஹமத்தின் கப்பலை நோக்கித் துரிதமாகச் சென்றதையும் கவனித்து விஷயத்தை ஓரளவு ஊகித்துக் கொண்டு தளத்தை விட்டு அறைக்கு வந்து தன் அலுவல்களைக்
கவனிக்கலானான்.
ரகுதேவ், ஸித்தி அஹமத்தின் கப்பலை அடைந்த போது ஸித்தி அஹமத்தும் அவன் மாலுமிகளும் கப்பலை விட்டுத் துறைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஸித்தி அஹமத்தை உடனே தான் பார்க்க விரும்புவதாக ரகுதேவ்
சொல்லிக்கொண்டு யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் அஹமத்தின் அறையை நோக்கி விடுவிடென்று நடந்தான். திடீரென ரகுதேவ் கப்பலுக்கு வந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஸித்தி, கப்பலின் உபதலைவரான கலிபுல்லாவும்
ஓரிரு மாலுமிகளும் அவனைத் தொடர்ந்து சென்றார்கள். அறைக்கதவைத் திடீரெனத் திறந்து கொண்டு ரகுதேவ் வாயிற்படியில் நின்ற சமயத்தில் உடைகளை அணிந்து கச்சையுடனிருந்த தனது வாளை இடுப்பில் கட்ட யத்தனித்துக்
கொண்டிருந்தான் ஸித்தி அஹமத். ரகுதேவின் திடீர்ப் பிரவேசம் அவனை ஸ்தம்பிக்கச் செய்தது. அது மட்டுமல்ல; ரகுதேவின் அவசரத்தைப் பார்த்த அவன் கண்களில் சந்தேகச் சாயையும் பலமாகப் படரத் தொடங்கியது.
“என்ன ரகுதேவ்! எங்கே இவ்வளவு அவசரமாக வந்தாய்?” என்று உறுமினான் ஸித்தி அஹமத்.
“பேச வேண்டிய முக்கிய விஷயமிருக்கிறது” என்று பதில் சொல்லிக் கொண்டே வாயிற்படியைத் தாண்டி உள்ளே நுழைந்தான் ரகுதேவ். கிழ மாலுமியான கலி புல்லாவும் அவனைப் பின்பற்றி அறைக்குள் வந்தான். மற்ற மாலுமிகள்
வாயிற்படியை அடைத்துக் கொண்டு நின்றார்கள்.
ஸித்தி அஹமத் சம்பாஷணையில் இறங்கக் கூடிய மனோபாவத்தில் இல்லையென்பதை அவன் முகத்திலிருந்த கடுகடுப்பே காட்டியது. “பேச அவகாசம் நிரம்ப இருக்கிறது. கரைக்குச் சென்றபிறகு நிதானமாக ஒரு வாரம் வரை பேசலாம்.
கப்பலைப் பிரித்து அடிப்பாகத்தைச் சுத்தம் செய்ய எத்தனை நாள் பிடிக்கும்?” என்றான் ஸித்தி அஹமத்.
இப்படி அவன் சம்பாஷணையை வெட்டிவிட முயன்றாலும் ரகுதேவ் அதற்கு இடம் கொடுக்க விரும்பாமலே சொன்னான், “கப்பலைப் பிரிக்க வேண்டிய அவசியமில்லை; கரையில் இறங்க வேண்டிய தேவையு மில்லை” என்று. இந்தப்
பதில் ஸித்தி அஹமத்தை மட்டுமல்ல, வயோதிகனான கலிபுல்லாவையும் திடுக்கிடச் செய்தது. சதா தூங்குவதுபோல் மந்தமாயிருந்த அவன் கண்களில் கூட சிறிது உணர்ச்சி ஏற்பட்டது.
“என்ன, இறங்க வேண்டாமா! பின் எதற்கு விஜயதுர்க்கத்துக்கு வந்தோம்?” என்று கேட்டான் கலிபுல்லா.
ஸித்தி அஹமத்தின் கோபம் உச்ச நிலையை அடைந்துகொண்டிருந்தது. “ரகுதேவ்! என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டாம் என்பதை நிர்ணயிப்பது நான். விஜயதுர்க்கத்தைவிட்டு நகர எனக்கிஷ்டமில்லை. இதைப் பற்றி
மேற்கொண்டு பேசுவதால் பிரயோசனமுமில்லை.” என்று தீர்மானமாகச் சொல்லி ரகுதேவை நோக்கினான்.
ரகுதேவ் எந்தவிதமான பதட்டத்தையும் காட்டவில்லை. “உன் நன்மையை உத்தேசித்துத்தான் விஜய துர்க்கத்தில் இறங்குவதைத் தடைசெய்ய வந்தேன்” என்று ஆரம்பித்த ரகுதேவின் வார்த்தைகளைச் சுள்ளென்று குறுக்கே எரிந்து
விழுந்து வெட்டிய ஸித்தி அஹமத், “என் நன்மையைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்” என்றான்.
“உன்னிஷ்டம். ஆனால், விஜயதுர்க்கம் தற்சமயம் இருக்கும் நிலைமையில் நான் என் கப்பலை விட்டு இறங்க இஷ்டப்படவில்லை. இப்பொழுதுள்ள அபாயத்தில் என்னையும் சிக்க வைக்காதே” என்று கூறினான் ரகுதேவ்.
அதுவரையில் பேசாதிருந்த கலிபுல்லாவும் சம்பாஷணையில் புகுந்து, “விஜயதுர்க்கத்துக்கு என்ன அபாயம்?” என்று வினவினான்.
“விஜயதுர்க்கம் இருக்கும் நிர்க்கதியான நிலைமை இங்கு வந்த பிறகுதான் எனக்குப் புரிகிறது. கோட்டை , கரைக்கு வெகு அருகேயிருக்கிறது. ஆனால், அதைப் பாதுகாக்க ஒரு கப்பலைக்கூடக் கணோம்.” –
“குராப்புகள் இருக்கின்றனவே” என்றான் கலிபுல்லா.
ரகுதேவ் ஏளனம் கொட்டும் கண்களை அவன்மேல் திருப்பி, “அந்தச் சின்னஞ் சிறிய பீரங்கிப் படகுகள்தானே? அவற்றைக் கொண்டு இந்தக் கோட்டையைக் காப்பாற்ற முடியுமா?” என்று கேட்டான்.
“நமது இரு கப்பல்கள் இல்லையா?”
“அவற்றிலொன்றைத்தான் பிரித்துவிடப் போகிறோம். இன்னொன்றைப் பழுது பார்த்து, அதிக பீரங்கிகள் அமைத்து யுத்தக் கப்பலாக மாற்றப்போகிறோம். இரண்டு கப்பல்களும் உபயோகமற்ற தன்மையிலிருக்கும். கனோஜி
ஆங்கரேயின் கப்பல்களோ அல்லது வெள்ளைக்காரக் கப்பல்களோ இந்தப் பக்கம் வந்து செயலற்றுக் கிடக்கும் இரு கப்பல்களையும் எதிரேயிருக்கும் கோட்டையையும் பார்த்தால் என்ன செய்வார்களென்று நினைக்கிறீர்கள்? அப்படியே
சுளைபோல் விழுங்கத் தயங்கமாட்டார்கள்.”
ரகுதேவின் இந்தப் பேச்சு ஸித்தி அஹமத்தின் கோபத்தை அதிகமாகவே தூண்டியது. கலிபுல்லாவின் சொற்கள் அவன் கோபாக்கினியை விசிறத் தொடங்கின. “உண்மைதான் ரகுதேவ்! கோட்டையின் நிலை அப்படித் தானிருக்கிறது”
என்றான் கலிபுல்லா.
இ ஸித்தி அஹமத்தின் கண்கள் நெருப்பைக் கக்கின. உதடுகள் துடித்ததால் அவன் மீசையும் பயங்கரமாக அசைந்தது.

.
“எந்தக் கப்பலும் இங்கில்லாதபோது கோட்டையின் நிலைமை என்ன?” என்று கேட்டான்.
“கப்பல்களே இல்லாவிட்டால் கப்பல்கள் வெளியே சஞ்சாரத்துக்குப் போயிருக்கலாம். எந்த நேரத்திலும் வந்து துறைமுகத்தில் தங்களை மடக்கிவிடலாம் என்ற பயம் எதிரிக்கு இருக்கும். எந்த மாலுமியும் பார்வைக்குக் கேட்பார் அற்றுத்
திறந்து கிடக்கும் துறைமுகத்துக்குள் சென்று மாட்டிக்கொள்ள இஷ்டப்பட மாட்டான். கேட்பாரற்றுக் கிடப்பதே சில சமயங்களில் துறைமுகத்துக்குப் பந்தோப்ஸ்தாகக்கூட ஆவதைக் கடற்போர் சரித்திரத்தில் நாம் கண்டிருக்கிறோம்.
யாருமில்லாத வீட்டுக்குள் நுழைபவன், யாராவது திடீரெனத் தலை காட்டுவார்களோ என்று பயந்து பயந்து நுழைவான். ஆனால் நொண்டியைக் காவல் வைத்த மாளிகையில் நுழைய எவனும் தயங்கமாட்டான். நமது கப்பல்களைப்
பிரித்துப் போட்டு நமது மாலுமிகள் கரையில் உட்கார்ந்திருந்தால் கடலில் உலாவும் கப்பல்களுக்கு நாம் இரையாவதைத் தவிர வேறு வழியில்லை” என்று ரகுதேவ் விளக்கினான்.
ரகுதேவின் விளக்கம் ஸித்தி அஹமத்தின் தீர்மானத்தில் எந்த மாறுதலையும் விளைவிக்கவில்லை. ஆனால், மாலுமித் தொழிலிலேயே காலத்தைச் செலவிட்டவனான கலிபுல்லாவின் இதயத்தில் பெரிய சந்தேகப் புயலைக் கிளப்பிவிட்டது.
ரகுதேவின் சொற்களில் நிரம்ப உண்மை இருப்பதை அவன் உணர்ந்தான். ஆகவே, ஸித்தி அஹமத்திடம் நீண்ட காலம் சேவை செய்துவரும் அந்தக் கிழ மாலுமி சற்று வற்புறுத்தியே சொன்னான், “ரகுதேவ் சொல்வதில் தவறேதுமில்லை
எஜமான்” என்று.
“நான் எல்லோருடைய நன்மையையும் உத்தேசித்துத் தான் சொல்லுகிறேன், அஹமத்! என் வார்த்தைகளில் உனக்கு நம்பிக்கையில்லையானால் உன் சகாக்களைக் கலந்து ஆலோசனை செய். அபாயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டிய
கடமையை நான் செய்தாகிவிட்டது” என்று ரகுதேவ் தனக்கு ஏதும் அதில் சிரத்தயில்லாததுபோல் பதிலிறுத்தான்.
“விஜயதுர்க்கத்தில் இறங்காமல் வேறு எங்கே இறங்குவது?” என்று சீறினான் ஸித்தி அஹமத்.
“தமானாவில்” என்று நிதானமாகக் கூறினான் ரகுதேவ்.
ஸித்தி அஹமத்தின் கோபம் பன்மடங்காயிற்று. ஆனால் கலிபுல்லா மிதமிஞ்சிய குதூகலத்துடன், “பிரமாதமான யோசனை எஜமான். கப்பலைப் பழுது பார்க்க அதைவிடச் சிறந்த இடம் அரபிக் கடல் பிராந்தியத்திலேயே கிடையாது. பலே
ரகுதேவ்!”
கலிபுல்லாவைச் சுட்டெரித்து விடுவதுபோல் பார்த்தான் ஸித்தி அஹமத். பிறகு அவனுக்குப் பின்னால் நின்ற மாலுமிகளை நோக்கினான். அவர்களும் ரகுதேவின் யோசையை ஆதரிக்கிறார்களென்பதை அவர்கள் முகங்கள்
சந்தேகமற எடுத்துக் காட்டின.

Previous articleJala Mohini Ch12 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch14 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here