Home Historical Novel Jala Mohini Ch15 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch15 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

74
0
Jala Mohini Ch15 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch15 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch15 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 15. படகு வருகிறது

Jala Mohini Ch15 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினியில் பிரயாணம் செய்யத் தொடங்கிய ஆரம்ப தினத்தில் அதிருஷ்டத்தை எண்ணி நகைத்த பீம்ஸிங், ரகுதேவின் சங்கீதம் உச்ச நிலையை அடைந்த இந்தத் தினத்தில் அதிருஷ்டத்தை எண்ணி மனம் புழுங்கினார். அதிர்ஷ்டம்
முட்டாள்களுக்குத்தான் உதவுகிறது என்று முதல் நாளன்று திட்டமாக நினைத்த அவர், அதிருஷ்டம் ஆயோக்கியர்களையும் ஆதரிக்கிறது என்ற முடிவுக்கும் மெல்ல மெல்ல வரத் தொடங்கினார். இல்லாவிட்டால் கொள்ளைக்காரனான
ரகுதேவிடத்தில் பத்மினிக்கு எல்லையற்ற மதிப்பு ஏற்பட வேண்டிய அவசியமென்னவென்று தன்னைத்தானே பலமுறை கேட்டுக் கொண்டார். கப்பலில் பிரயாணம் செய்த ஒரு வாரத்தில் அவர் பலமுறை தன்னையும் ரகுதேவையும்
ஒப்பிட்டுப் பார்த்து எந்தவிதத்திலும் ரகுதேவ் தன்னை விட உயர்ந்தவனல்ல என்ற முடிவுக்கு வந்தார். வாழ்க்கை சந்தர்ப் பங்களால் சுழற்றப்படுகிறது என்ற உண்மையை ஒப்புக் கொள்ளாத பீம்ஸிங், தன் புத்திசாலித் தனத்தாலும் தான்
வகுக்கும் திட்டங்களாலும் எதையும் சாதித்து விடலாம் என்ற மனப்பான்மையை நன்றாக வளர்த்துக் கொண்டிருந்ததால், தான் எப்படி நடந்து கொண்டால் ரகுதேவிடம் பத்மினிக்குள்ள மதிப்பை உடைத்தெறியலாம் என்று கணக்குப்
போட்டுப் பார்க்கலானார்.
இந்தக் கணக்கின் காரணமாகத் தனக்கும் ரகுதேவுக்கும் உள்ள தராதரங்களையும் சீர்தூக்கிப் பார்த்தார். ‘நாமோ ராஜபுத்ர வம்சத்தில் உதித்தவன். ரகுதேவோ மகாராஷ்டிரன். ஜாதி ஒற்றுமை சம்பந்தப்பட்ட வரையில் பத்மினிக்கும்
நமக்கும் பொருத்தம் அதிகமே ஒழிய, ரகுதேவுக்கும் பத்மினிக்கும் எவ்விதப் பொருத்தமும் இல்லை. ரகுதேவ் கடற்படையில் உபதளபதியாக இருந்தவனென்றால், நாம் தரைப்படையில் தளபதி. இதிலும் இரண்டுபேர் அந்தஸ்தையும்
ஒன்றாக மதிப்பிட முடியாது. ரகுதேவ் உபதளபதியாக இருந்தவனேயொழிய, கனோஜி ஆங்கரேயிடமிருந்து பிரிந்த பிறகு சாதாரண மாலுமிதான். நாமோ இன்னும் மொகலாக மன்னர் படையில் தளபதி பதவியை வகிக்கிறோம். ஆகையால்
பதவியும் நமக்குத்தான் அதிகம். எல்லாவற்றையும்விட ரகுதேவ் கொள்ளைக்காரன். என்றைக்குப் பிடிபட்டாலும் தூக்கில் ஆடவேண்டியவன். சதா கொள்ளையடித்தே ஜீவிக்க வேண்டியிருப்பதால், என்றும் அவன் உயிர்
ஆபத்திலிருக்கிறது. ஆனால், நாம் தளபதியாயிருந்த இத்தனை வருடங்களில் ஒருமுறைகூட யுத்தத்துக்குப் போக வேண்டிய அவசியம் நேரிடவில்லை. இனிமேலும் அவசியமானால் படையில் இருக்கலாம்; இல்லையேல் விலகிக்
கொள்ளலாம். ஆகவே, பத்மினி நீண்டநாள் மஞ்சளும் கழுத்துமாக இருக்க வேண்டுமானால் ரகுதேவை விட நம்மைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று தம்மைப் பத்மினி மணப்பதற்கு வேண்டிய காரணங்களை மட்டுமின்றி, ரகுதேவை
ஏன் மணக்கக் கூடாதென்பதற்கான காரணங்களையும் விளக்கமாக ஆராய்ந்து பார்த்தார்.
தமக்கு அநுகூலமான சம்பவங்கள் இவ்வளவு இருக்கும் போது, ரகுதேவிடம் பத்மினியின் மனம் லயித்துவிடும் போல் இருக்கிறதே என்ற யோசனையால் மிகச் சங்கடப்பட்டு, அந்த அக்கிரமமான நிலைக்கு அதிர்ஷ்டமே காரணம் என்று
அதன் தலையில் பழியைப் போட்டார். இருந்தாலும் முன் யோசனையாலும் சரியான வேலைத் திட்டத்தாலும் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன், ரகுதேவ் எவ்வளவு மட்டமானவன் என்பதைப் பத்மினிக்கு
அவ்வப்போது எடுத்துக் காட்டி, அவள் மனத்தை மாற்றுவதில் முனைந்தார். அப்படி முனைந்ததின் விளைவாகத்தான் அன்று அறையில் பத்மினியுடன் சாப்பிட உட்கார்ந்திருந்த ரகுதேவின் சங்கீதத்தைப் பற்றித் தம் எதிர்ப்பைத்
தெரிவிக்கத் தொடங்கினார்.
அறை நடுவே இருந்த கம்பத்தில் கட்டப்பட்டிருந்த விளக்கைப் பிரகாசமாகத் தூண்டிவிட்டு, எல்லோருக்கும் உட்காரும் ஆசனங்களையும் சாப்பிடத் தட்டு வைக்கும் பலகைகளையும் எடுத்துப் போட்டு உணவைப் பரிமாறுவதற்கான
ஏற்பாடுகளையும் ரஜினிகாந்த் செய்துகொண் டிருந்தான். ஆசனத்தை இழுத்துப் போட்டுக் கொண்டு பீம்ஸிங் சாப்பிட உட்கார்ந்து, பத்மினியையும் உட்காரச் சொன்னார். பத்மினி ஏதும் பேசாமல் எழுந்து வந்து சாப்பிடும் இடத்தில்
உட்கார்ந்து கொண்டாளே யொழிய, ரஜினிகாந்த் ஆகாரத்தைத் தட்டில் பரிமாறிய பிறகும் சாப்பிட முற்படாமல், ஓவியப் பாவையென அசைவற்று எங்கோ யோசித்த வண்ணமிருந்தாள். பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்த
அவளைப் பார்த்த பீம்ஸிங், “என்ன, பத்மினி? நீ இந்த உலகத்தில்தான் இருக்கிறாயா…” என்று ஏதோ மேலே பேசப் போனவர், பத்மினியின் பதிலால் திடீரென வாயடைத்து உட்கார்ந்தார்.
“இல்லை; நான் இந்த உலகத்தில் இல்லை” என்றாள் பத்மினி.
“பின் எந்த உலகத்தில் இருக்கிறாய்?” இப்படி எழுந்தது பீம்ஸிங்கின் கேள்வி கடுமையாக.
பத்மினி, பீம்ஸிங்கை ஏறெடுத்துப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள். பின்பு கூறினாள், “சொப்பன உலகத்தில்” என்று.
பீம்ஸிங்கிற்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. “தூங்கும்போது சொப்பனம் கண்டால் போதாதாக்கும்!” என்றார்.
“சொப்பனம் காண்பது நமது இஷ்டமல்லவே!”
“பின் யார் இஷ்டம்?”
“உணர்ச்சிகளின் இஷ்டம்! உணர்ச்சிகள் இழுக்கிற பக்கம்தான் நாம் செல்கிறோம். பகலில் இழுத்தால் பகல் கனவு; இரவில் இழுத்தால் இரவுக் கனவு
“விழித்திருக்கும்போது கூடக் கனவு உண்டா?”
“அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள்? கண்டிப்பாய் உண்டு! மென்மையான உணர்ச்சிகள் உள்ளவர்களுக்கு விழிப்பிலும் கனவு உண்டு. ஆனால், விழித்திருக்கும்போது கனவு காண இயற்கையின் சக்திகள் உணர்ச்சிகளைத்
தொட்டிழுக்க வேண்டும்.”
பீம்ஸிங் மௌனமாயிருந்தார். அவருக்கு விஷயம் புரியவில்லை என்று நினைத்துப் பத்மினி விளக்கினாள்:
“நல்ல ரசிகத் தன்மை இருந்தால், இயற்கையின் சக்திகள் நம்மைச் சொக்க அடித்துச் சொப்பன உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. இளம் தென்றலிலே முழுமதியின் நிலவிலே நாம் நிற்கும்போது மெய்மறந்தே நிற்கிறோம். அருகில்
இருப்பவர் கூப்பிட்டாலும் காதில் விழுவதில்லை. இன்னொரு சக்தி மனிதனுக்கு இறைவன் அளித்திருக்கும் இனிய பாட்டு. அதில் மனத்தைப் பறிகொடுத்தால்…” இத்துடன் பத்மினி பேச்சை அரைகுறையாக நிறுத்திப் புன்னகை
செய்தாள்.
எந்த ஆண்மகன் உள்ளத்தையும் பறிக்கக்கூடிய அந்தப் புன்னகை பீம்ஸிங்கின் கோபத்தைப் பெரிதும் கிளறவே, “புரிகிறது புரிகிறது! நன்றாகப் புரிகிறது” என்று விடு விடென்று வார்த்தைகளை அளந்துவிட்டார்.
“என்ன புரிகிறது?”
“விழித்திருக்கும்போதே நீ கனவு காணும் காரணம்!”
“சொல்லுங்களேன், கேட்போம்.”
“மேல்தளத்திலிருந்து வருகிற கொள்ளைக்காரனின் கானம்.”
மனத்தைக் கொள்ளை கொள்ளாதிருக்க முடியுமா?” என்றாள் பத்மினி.
“முடியாது! முடியாது!” என்றார் பீம்ஸிங். –
“பார்த்தீர்களா? நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள் அவருக்கு என்ன இனிமையான சாரீரம் பார்த்தீர்களா?”
“உம்…! பார்த்தேன்.”
“ஏன் அவ்வளவு கடுகடுப்பாகப் பதில் சொல்கிறீர்கள்? அவர் பாட்டு உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”
“பாட்டு, போக்கு இரண்டுமே பிடிக்கவில்லை.” –
“ஆளைக் கண்டாலே பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள்.”
“சந்தேகமில்லை. அயோக்கியர்களைக் கண்டால் எனக்குப் பிடிப்பதில்லை.”
“அவர் அயோக்கியர் என்று எதனால் முடிவு கட்டுகிறீர்கள்?” |
“சகவாசத்தால்! இவனும் ஒரு கொள்ளைக்காரனாதலால்தானே அவர்களோடு சமமாகப் பழகுகிறான். நம்மைப் போன்ற கௌரவமானவர்கள் சாப்பாட்டுக்குக் காத்துக்கொண்டிருக்கும்போது, அந்த அயோக்கியர்களுக்கு இவன்
பாடிக் காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன?”
“சாப்பாட்டுக்கு இப்பொழுது என்ன அவசரம்?” இந்தக் கடைசிக் கேள்வி பீம்ஸிங்கின் பொறுமையை அடியோடு சோதித்துவிடவே, ஆசனத்திலிருந்து சட்டென்று எழுந்து, “சாப்பாட்டுக்கு அவசரமில்லை; அந்தப் பாட்டுக்குத்தான்
அவசரமா?” என்று சீறினார்.
பத்மினியின் பதில் அவரைத் திணற அடித்தது. “செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்றாள் பத்மினி.
அந்தத் தமிழ் வாக்கியத்துக்கு அர்த்தம் புரியாமல் திண்டாடிய பீம்ஸிங்கை நோக்கி பத்மினி, “என்ன, அதற்குள்ளாகவா இந்த அழகிய வாக்கியத்தை மறந்து விட்டீர்கள்?” என்று கேட்டாள்.
“இதை நான் கேள்விப்பட்டதேயில்லை.”
“கேள்விப்பட்டிருக்கிறீர்கள். முதல் நாளே ரகுதேவ் சொன்னாரே!”
“ஓஹோ!”
“போயும் போயும் இத்தனை அழகான வாக்கியத்தை மறப்பீர்களா? காதுக்கு இன்பமான உணவு கிடைக்காத போது சிறிது வயிற்றுக்குச் சாப்பிடலாம் என்று அர்த்தம். இதை என்ன நன்றாகச் சொன்னார் அவர்!”
“அந்தப் பழமொழிக்கும் நாம் சாப்பிடுவதற்கும் என்ன சம்பந்தம்?”
“மேலிருந்து வரும் இனிய கானம் காதுக்கு விருந்தளிக்கும்போது, இந்தச் சாப்பாடு சிறிது தாமதப்பட்டால் தான் என்ன?”
பத்மினியின் பேச்சு அவருக்கு முழுக்க முழுக்கப் பிடிக்காததால் அறையில் அங்குமிங்கும் சற்றுநேரம் உலாவினார். பீம்ஸிங் பாதி சாப்பிட்டு நிறுத்தியிருப்பதையும் பத்மினி ஆகாரத்தையே தொடாததையும் கண்ட ரஜினிகாந்த்,
மேற்கொண்டு பரிமாறுவதா, அல்லவா என்று புரியாமல் ஒருபுறமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தான். பீம்ஸிங்குக்கு இருந்த மனவேதனையில் மேல் தளத்தில் பாட்டு நின்றுவிட்டதோ, மாலுமிகள் எழுந்து கலைவதால் ஏற்பட்ட காலடி
ஓசையோ அவர் காதுகளில் விழவே இல்லை. சிறிதுநேரம் அறையில் உலாவிய பீம்ஸிங் திடீரெனத் தனது பேச்சை நிறுத்திக் கொண்டு பத்மினியின் பக்கம் திரும்பி “நீ சொல்கிறபடி ரகுதேவ்யோக்கியனானால் அந்த அயோக்கியர்களிடம்
பேசிச் சிரித்து நெருங்கிப் பழகுவானேன்? அவர்களைப் பாட்டுப் பாடி மகிழ்விப்பானேன்?” என்று ஏதோ புதிதாகக் கேள்வி கேட்பவர்போல் ஏற்கனவே கேட்டதையே திருப்பிக் கேட்டார். புதிதான குற்றச்சாட்டுகளைக் கண்டுபிடிக்க
முடியாததால், பழைய பாணியிலேயே பீம்ஸிங்கின் மந்த புத்தி சஞ்சரித்தது.
கிளிப்பிள்ளைபோல் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்ட அந்தக் கேள்வியால் ஏற்கனவே சலித்திருந்த பத்மினி, பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் வாசற்படிகளிலிருந்து பதில் வந்தது பீம்ஸிங்குக்கு. “அவசியத்தை முன்னிட்டு
வாழ்க்கையில் எவ்வளவோ காரியங்களைச் செய்கிறோம். சந்தர்ப்பத்தை உத்தேசித்து எதை எதையோ சகிக்கிறோம்” என்று சொலலிக் கொண்டே ரகுதேவ் உள்ளே நுழைந்தான்.
“எந்த அவசியத்தை முன்னிட்டுக் கொள்ளைக்காரர்களுக்குப் பாட்டு பாடுகிறீர்கள்?” சற்றுக் கடுமையாகவே பீம்ஸிங் வினவினார்.
ரகுதேவ் உடனே அவருக்குப் பதில் சொல்லவில்லை. உள்ளே வந்து ரஜினிகாந்தைத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லிக் கை கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான். அரைச் சாப்பாட்டில் எழுந்திருந்த பீம்ஸிங்கும் திரும்ப ஆசனத்தில்
அமர்ந்தார். ரகுதேவ் ஒரு வினாடி பத்மினியைப் பார்த்துவிட்டுக் கண்களைப் பீம்ஸிங்கின்மீது திருப்பினான். பிறகு சொன்னான்: “அந்த அவசியம் உங்களுக்குப் புரியாதிருக்கலாம். ஆனால், பத்மினிக்குப் புரிந்திருக்கிறது!”
“இவன் இதயம் பத்மினிக்குப் புரிந்துவிட்டதாமே” என்று நினைத்துப் பொறாமையால் சுவாதீனத்தை இழந்த பீம்ஸிங், பத்மினியை முறைத்துப் பார்த்து, “அந்த மர்மம் எனக்கும்தான் தெரியட்டுமே” என்றார்.
“இதில் மர்மமென்ன இருக்கிறது? மாலுமிகள் நட்பு நமக்கிருந்தால் நல்லது. அதற்காக அவர்களை உற்சாகப்படுத்தி வைக்க வேண்டியிருக்கிறது. ஆகவே அவர்களுடன் கலந்து உறவாட அவசியமேற்படுகிறது” என்றாள் பத்மினி.
“கொள்ளைக்காரர்களிடம் நட்பா? அந்த நட்பைச் சம்பாதிப்பதால் லாபம்?”

.
“தற்சமயம் நாம் அனைவரும் உயிருடனிருக்கின்றோம். இங்கிருக்கும் மாலுமிகள் கொலைக்கு அஞ்சாதவர்கள். அவர்கள் தலைவன் ஸித்தி அஹமத்தும் நம் உயிரை வாங்கத் தயாராயிருக்கிறான். இனி வரப் போகும் பொக் கிஷக்
கப்பல்களை உத்தேசித்தே இவர்கள் நம்மை இம்சிக்காமல் ஒரு கட்டுக் கடங்கியிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கட்டு பலமான கட்டல்ல. எந்த நிமிஷத்திலும் தெறிக்கக் கூடியது. அது அறுபடாமலிருக்க இந்த மாலுமிகளின் அன்பையும்
ஆதரவையும் நாம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்னிடம் துளி சந்தேகம் ஏற்பட்டாலும் நம் இருவரையும் தீர்த்துவிடத் தயங்கமாட்டார்கள். நான் பாட்டுப் பாடியும் கதை சொல்லியும் உற்சாகப்படுத்துவதன் அவசியம்
இப்பொழுதாவது புரிகிறதா?” என்று வினவினான் ரகுதேவ். பிடி வாதத்தால் உண்மையை ஒப்புக்கொள்ளாத பீம்ஸிங், மௌனமாகவே சாப்பிடத் தொடங்கினார். ஆனால் அவர் மௌனத்தைக் கலைத்து அவரைத் திடுக்கிடச் செய்யக்
கூடிய சந்தர்ப்பம் அடுத்த விநாடி நடந்தது. தடதடவெனப் படிகளில் இறங்கி ஓடிவந்த மாலுமி ஒருவன் கதவைத் திடீரெனத் திறந்து, ரகுதேவைப் பார்த்து, “மகராஜ்! ஸித்தி அஹமத்தின் படகு நமது கப்பலை நோக்கி வேகமாக வருகிறது”
என்றான்.
இந்தத் தகவலைக் கேட்ட பத்மினி திடுக்கிட்டுச் சாப்பாட்டைப் பாதியில் நிறுத்தினாள். பீம்ஸிங்கூட கையிலெடுத்த கவளத்தைப் பாதியில் நிறுத்தி, “ராத்திரி இந்த நேரத்திலா? ஏன்?” என்று வினவினார்.
“எனக்குத் தெரியாது” என்றான் மாலுமி.
“எனக்குத் தெரியும்!” என்று கிளம்பியது ரகுதேவின் நிதானமான குரல்.

Previous articleJala Mohini Ch14 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch16 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here