Home Historical Novel Jala Mohini Ch16 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch16 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

86
0
Jala Mohini Ch16 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch16 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch16 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 16. கதவுக்கு வெளியே

Jala Mohini Ch16 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

அத்தனை இரவில், சாப்பிடும் நேரத்தில் ஸித்தி அஹமத் அவசர அவசரமாகக் கப்பலை நோக்கி வருகிறானென்றால் அதற்குப் போதிய காரணம் இருக்க வேண்டுமென்பதையும், அந்தக் காரணமும் தங்களுக்கு அனுகூலமானதாக
இருக்காதென்பதையும் பீம்ஸிங் புரிந்து கொண்டாரே யொழிய, காரணம் என்ன என்பதைத் திட்டமாக ஊகிக்க மட்டும் அவரால் முடியவில்லை. தம்மால் முடியாதது ரகுதேவால் முடியும் என்பதை ஒப்புக் கொள்ள அவர்
தயாராயில்லாததால், “எனக்குத் தெரியும்” என்று ரகுதேவ் சொன்னதும், “தெரிந்தால் சொல்வது தானே” என்று பட்டென்று கேள்வியைப் போட்டார். அவர் கேள்விக்குப் பதில் சொல்லக்கூடிய மனோநிலையில் ரகுதேவ் இல்லையென்பதை
அவன் முகத்தைப் பார்த்தே தெரிந்துகொண்ட பத்மினி சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் மௌனமாகவே இருந்துவிட்டாள். பத்மினி நினைத்தது சரிதானென்பதை ரகுதேவின் அடுத்த செய்கைகள் நிரூபித்தன.
ரகுதேவ் பீம்ஸிங்கின் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமலே செய்தி சொல்ல வந்த மாலுமியை நோக்கி, “ஸித்தி அஹமத் வந்ததும் நேராக இங்கு அழைத்து வா” என்று உத்தரவிட்டு அவனை அனுப்பிவிட்டான். பிறகு
பத்மினியையும் பீம்ஸிங்கையும் நோக்கி, “ஸித்தி அஹமத் இங்கு வரும் சமயத்தில் நாம் ஏதும் அறியாதவர்களைப் போல் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவன் எந்தத் தகவலைச் சொன்னாலும் எந்த உத்தரவை இட்டாலும் நீங்கள்
யாரும் பதில் சொல்ல வேண்டாம். பேசும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள்” என்று கூறினான்.
பேசும் பொறுப்பைத் தனக்கு விட்டு விடும்படியாகக் கடைசியாகச் சொன்னபோது வாக்கியத்தைச் சிறிது அழுத்தியும் பீம்ஸிங்கை நன்றாக முறைத்துப் பார்த்தும் சொன்னதைப் பத்மினி கவனிக்கத் தவறவில்லை. மந்த புத்தியுள்ள
பீம்ஸிங்குக்குக்கூட அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரியவே உள்ளூறக் கோபம் பொங்கி எழுந்தாலும் தானிருக்கும் நிலைமையை உத்தேசித்துப் பேசாமலிருந்து விட்டார். ஆனால், அடுத்தபடியாக ரகுதேவ் இட்ட உத்தரவை
மாத்திரம் அவரால் பொறுக்க முடியவில்லை. “ரஜினிகாந்த்! இங்கு இன்னொரு தட்டு வைத்து உணவைப் பரிமாறு!” என்றான் ரகுதேவ். மகன்
“யாருக்கு இன்னொரு தட்டு?” என்று பீம்ஸிங் கேட்டார்.
“வருகிற விருந்தாளிக்குத்தான்!” என்றான் ரகுதேவ்.
“யாருக்கு? ஸித்தி அஹமத்துக்கா?”
“ஆம்.”
“என்ன! அந்தக் கொள்ளைக்காரனுடன் ராஜபுத்திரனான பீம்ஸிங் சமபந்தி போஜனம் செய்வானென்று நினைக்கிறீர்களா?”
“இஷ்டமில்லாவிட்டால் சாப்பிட வேண்டாம். ஸித்தி அஹமத் வந்து போகிற வரைக்கும் அந்தப் பக்கத்து அறையில் இருங்கள்” என்று, எதிரே பத்மினி முதல்நாள் படுத்திருந்த சிறிய அறையைச் சுட்டிக்காட்டினான் ரகுதேவ்.
“கேவலம் அந்தக் கொள்ளைக்காரனுக்காக நான் சாப்பிடாமலிருக்க முடியுமா?” என்று விசாரித்தார் பீம்ஸிங்.
“முடியாவிட்டால் இங்கு எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடலாம். அதை யாரும் தடை செய்யவில்லை” என்று ரகுதேவ் சொன்னதும் பத்மினி சிரித்துவிட்டாள்.
அவள் சிரிப்போ ரகுதேவின் பேச்சோ பீம்ஸிங்குக்குப் பிடிக்காததால் அவர் ரகுதேவை விடுத்து, அவள் மீது சீறிவிழுந்து, “ராஜபுத்ர மங்கையான நீ அந்தக் கொள்ளைக்காரனுடன் உட்கார்ந்து சாப்பிட உத்தேசிக்கிறாயா?” என்று
கேட்டார்.
“இந்தக் கப்பலில் நாம் உத்தேசிக்கிறபடி எந்தக் காரியமும் நடப்பதாகத் தெரியவில்லை” என்று பத்மினி பதில் கூறினாள்.
“எப்படிச் சாப்பிடலாம் என்பதில் கூட நமக்குச் சுதந்திரமில்லையா? அதற்குக்கூட இவர் உத்தரவுதான் தேவையா?” என்று கேட்டு ரகுதேவுக்காக உஷ்ணமான பார்வையொன்றை பீம்ஸிங் வீசினார்.
பீம்ஸிங்கின் பதில் பத்மினியின் பொறுமையைக்கூடச் சோதிக்கவே, “நம் உயிரைக் காப்பாற்றியிருக்கிறவரின் உத்தரவுப்படிதான் நான் நடக்க உத்தேசித்திருக்கிறேன். நெஞ்சில் சிறிதாவது நன்றியிருப்பவர்கள் நடக்கக்கூடிய வழியும்
அதுதான்” என்று பீம்ஸிங்குக்குப் படும்படியாக அழுத்திச் சொன்னாள்.
இதற்குமேல் எதுவும் பேச வழியில்லாமல் பீம்ஸிங் பெருமூச்சு விட்டுக்கொண்டு ஆசனத்தில் அப்படியே சாய்ந்து விட்டார். உள்ளே குமுறிக் கொண்டிருந்த கோபத்தை வெளியே உதற முடியாமல் ஆசனத்தில் சற்று அப்படியும்
இப்படியும் அசைந்து ஏதேதோ விதமாகச் சங்கடப்பட்டார். ரகுதேவ் அவர் பக்கம் திரும்பாமலே பத்மினியைப் பார்த்துச் சொன்னான்:
“பத்மினி! ஸித்தி அஹமத் அவ்வளவு கூரிய புத்தியுடையவனல்ல. ஆனால் ரஹீம் தீட்சண்யமான புத்தியுடையவன். ஸித்தி அஹமத்தின் கண்ணுக்குப் புலப்படாதது அவன் கண்ணுக்கு நன்றாகப் புலப்படும். ரஹீமைவிட நாம்
அடையவேண்டிய மனிதன் இன்னொருவனிருக்கிறான். அவன் தான் கலிபுல்லா. சதா உறங்குவது போன்ற முகமுள்ளவன். அத்தனைக்கத்தனை துரிதமாக அவன் மூளை வேலை செய்யக்கூடியது. ரஹீமும் அந்தக் கலிபுல்லாவும் ஸித்தி
அஹமத்தின் சந்தேகத்தைக் கிளறி விட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஸித்தி அஹமத் இவ்வளவு அவசரமாக வருகிறான். ஸித்தியிடம் நாம் அகப்பட்டிருக்கும் வரையில் மிக நிதான புத்தியுடன் நடந்துகொள்ள வேண்டும். நமது உத்தேசம்
ஏதாவது அவனுக்குத் தெரிந்தால்…” என்று பேச்சை முடிக்காமலே விட்டான்.
தெரிந்தால் என்ன ஆகுமென்பது பத்மினிக்குப் புரிந்தது. ஆனால், பீம்ஸிங் தமது வெறுப்பைக் காட்டி, “தெரிந்தாலென்ன?” என்று கேட்டார்.
“நதிக்கரையிலிருக்கும் காட்டில் கழுகுகள் ஏராளமாக இருக்கின்றன” என்றான் ரகுதேவ்.
“இருந்தாலென்ன?”
“உங்கள் உடல் மட்டும் சுமார் நூறு கழுகுகளின் போஜனத்துக்கு உதவும். அவற்றைத் திருப்தி செய்விக்க அஹமத் தயங்கமாட்டாள்” என்று சொல்லிய ரகுதேவ் மீண்டும் பத்மினிக்காகத் திரும்பி, “பத்மினி! ஆபத்தான நிலைமையில்
மனிதன் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது நல்லதல்லவா?” என்றான். ‘ஆம்’ என்பதற்கறி குறியாகப் பத்மினி தலையை அசைத்தாள். இந்தப் பேச்சுக்குப் பிறகு பீம்ஸிங்கின் வாய் ஒருவழியாக அடைபட்டது.
‘ஸித்தி அஹமத்துக்கு அப்படியென்ன திடீரெனச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது? அவன் என்ன உத்தேசத்துடன் வருகிறான்’ என்று யோசித்துப் பார்த்தார் பீம்ஸிங். அவருக்கு ஏதும் புரியவில்லை. அந்த விவரம் சரியாகப்
புரியவேண்டுமானால், கரையில் ஸித்தி அஹமத் சாப் பிடுகையில் ரஹீம் கிளப்பிவிட்ட சந்தேகம் என்ன என்பதையும், அவன் கேள்வியின் பின் ஏற்பட்ட விவாதத்தின் போக்கையும் புரிந்து கொள்ள வேண்டும்.
திடீரென ரஹீம் தனக்கெதிரில் வந்து போட்ட புதிரின் தன்மையை ஸித்தி அஹமத் உடனே அறிந்து கொள்ளாததால்தான் சிரித்தான். ரகுதேவ் பாடுவதை எதற்காக ஆட்சேபிக்க வேண்டும் என்பது அஹமத்துக்கே விளங்க வில்லை. அந்தப்
பாட்டில் அபாயமிருக்கிறது என்று ரஹீம் வற்புறுத்தியதும் ஸித்தி அஹமத்துக்கு வேடிக்கையாகவே இருந்தது. ஆனால் விவேகியான கலிபுல்லாவும் ரஹீமுடன் சேர்ந்துகொண்டு, “ரகுதேவ் எதற்காகப் பிரதி தினம் பாட வேண்டும்” என்று
முணுமுணுத்தவுடன் ஸித்தி அஹமத்தும் சிறிது சாப்பாட்டை நிறுத்தி, அந்த இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். கடைசியாகச் சொன்னான் : “ரகுதேவ் ‘நமக்கு இப்பொழுது என்ன அபாயத்தை விளைவிக்க முடியும்? அவன்
இருப்பதோ நாம் கைப்பற்றிய கப்பல். அவனைச் சுற்றியிருப்பவர்களோ நமது மாலுமிகள். அவன் நம்மிடம் கைதிபோலச் சிக்கிக் கொண்டிருக்கிறானே.”
இதைக் கேட்ட ரஹீமின் ஒற்றைக் கண், ஸித்தி அஹமத்தைக் கூர்ந்து நோக்கியது. “இந்த விவரங்கள் ரகுதேவுக்குத் தெரியாதென்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்வியொன்றும் அந்தப் பார்வையைத் தொடர்ந்து கிளம்பியது.
“தெரிந்து அவன் என்ன செய்ய முடியும்?” என்று பதிலுக்கு ஒரு கேள்வியைப் போட்ட ஸித்தி அஹமத், “கொஞ்சம் பொறுங்கள். இன்னும் சில நாட்களில் நமது கப்பல் தயாராகிவிடும். பிறகு பொக்கிஷக் கப்பல்கள் வருமிடத்திற்கு
அவன் அழைத்துச் செல்வான். அந்தக் கப்பல் களைப் பிடித்ததும் பொக்கிஷம் நமது கைக்குக் கிட்டட்டும். அதற்கப்புறம் அவனைத் தீர்த்துக் கட்டி, அந்த அழகுக் கிளியிருக்கிறாளே அவளையும் இந்த ஸித்தி அஹமத் பிடித்துக்
கொஞ்சாமலிருப்பானா… ஹா… ஹா… ஹா…!” என்று ஏதோ பெரிய தகவலைச் சொல்லி விட்டவன்போல் பெரிதாகச் சிரித்தான்.
ஆனால் அந்தச் சிரிப்பைக் கலிபுல்லாவின் கேள்வி பாதியிலேயே உறைய வைத்துவிட்டது. “எசமான்! இதை ஊகிக்க ரகுதேவுக்குச் சக்தியில்லையென்று நினைக்கிறீர்களா?”
“ஊகித்துப் பயனென்ன? அவனிடம் கப்பலிருக்கிறதா? ஆட்களிருக்கிறார்களா?” என்று கலிபுல்லாவுக்காகத் திரும்பிக் கேட்டான் ஸித்தி அஹமத்.
கலிபுல்லாவின் முகத்திலிருந்த உறக்கம் அகன்று, கண்கள் கூடச் சிறிது பளிச்சிட்டன.
“ஆட்களில்லைதான். ஆனால்…” என்றான், மெதுவாக.
“ஆனாலென்ன?”
“ஆட்களில்லாத குறையை நிவர்த்தித்துக் கொள்ளலாம். ஆட்களைச் சேர்க்க முயற்சி செய்யலாம்.”
கையிலிருந்த இறைச்சியைத் தட்டிலேயே எறிந்து, ஏதோ தேள் கொட்டிவிட்டதுபோல் ஆசனத்திலிருந்து துள்ளி எழுந்திருந்தான் ஸித்தி அஹமத். “அதற்காகத்தான் மாலுமிகளைப் பாட்டுப் பாடித் தாஜா செய்கிறானா?” என்று சீறி,
பக்கத்திலிருந்த மாலுமியை ஜலம் கொண்டு வரச் சொல்லிக் கையைத் துரிதமாகக் கழுவினான்.
அவன் கை அலம்பிக் கொண்டிருக்கையிலேயே, “நாமோ சிறகொடிந்த பட்சிபோல் கப்பலைப் பிரித்துப் போட்டுக் கரையில் உட்கார்ந்திருக்கிறோம். அவனோ இருபத்தி ஐந்து மாலுமிகளுடன் எந்த நிமிஷத்திலும் பாய்
விரித்தோடக்கூடிய கப்பலுடன் இருக்கிறான். புரிகிறதா எசமான், அவன் பாட்டுக்கும் கதைக்கும் காரணம்?” என்று தூபம் போட்டான் ரஹீம். தக்
ஸித்தி அஹமத்துக்கு இருந்த கோபத்தில் அவன் பதிலேதும் சொல்லாமல் கையைக் கழுவிக் கொண்டு தூரத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த மாலுமிகள் இருவரைக் கூப்பிட்டுப் படகு ஒன்றைத் தயார் செய்யச் சொல்லி, வாளை
எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பினான்.
“எங்கே போகிறீர்கள்?” என்று கலிபுல்லா வினவினான்.
“ஜலமோகினிக்கு.”
“எதற்கு?”
“ரகுதேவின் இறக்கைகளை ஒடிக்க.”
“பொக்கிஷக் கப்பல்களுக்கு அவன் தான் நம்மை அழைத்துச் செல்ல வேண்டும்.”
“அதை மறக்க மாட்டேன்.”
இந்த உறுதிக்குப் பிறகு ஸித்தி அஹமத் போவதற்கு எந்தத் தடையும் செய்யவில்லை கலிபுல்லா. காரியத்தைக் கெடுக்காமல் பந்தோபஸ்துக்கான எதையும் தலைவன் செய்து கொள்ளட்டும் என்று தீர்மானித்துத் தட்டிலிருந்த
இறைச்சியை எடுத்துச் சுவைக்கலானான். சில விநாடிகளில் படகு தயாராகி, ஸித்தி அஹமத் ஜலமோகினியை நோக்கி விரைந்தான். உள்ளூற இருந்த கவலையாலும் ஆத்திரத்தாலும் படகில் உட்காராமல் ஸித்தி அஹமத் நின்று கொண்டே
வந்ததால், ஜலமோகினியின் தளத்திலிருந்த மாலுமிகள் தூரத்திலிருந்தே அவனை அடையாளம் கண்டு கொள்வது சாத்தியமாயிற்று. அப்படிக் கண்டு கொண்டதன் விளைவாகத்தான் மாலுமிகளில் ஒருவன் கீழே ஓடி ரகுதேவிடம்
தகவலைச் சொன்னான். ஜலமோகினியை அடைந்த ஸித்தி அஹமத் ‘திடுதிடு’வென மேல்தளத்துக்கு ஏறி வந்து, “எல்லோரும் எழுந்திருந்து பாய்களைச் சுருட்டுங்கள்” என்று கூறினான். அவன் உத்தரவின் காரணத்தைப்
புரிந்துகொள்ள முடியாத மாலுமிகள் அவனை நெருங்கி வந்தார்கள். வயப்பர்
“ஏன் நிற்கிறீர்கள்? இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் எல்லோரும் கரையில் வந்து சேர வேண்டும்! உம், சீக்கிரம்!” என்று உத்தரவிட்டுச் சரேலென இறங்கிக் கீழே ரகுதேவின் அறையை நோக்கிச் சென்றான். தடதடவெனப் படிகளில் இறங்கி
ரகுதேவின் அறைக் கதவைத் திறந்ததும், ரகுதேவ் ஆசனத்திலிருந்து எழுந்து ஸித்தி அஹமத்தை வரவேற்று, “என்ன அஹமத்! திடீரென்று எங்கே வந்தாய்? வா, உட்கார். பத்மினி! நமக்கு இன்று அதிருஷ்டந்தான், அரபிக் கடல் பிராந்தியத்தின்
பிரபலமான கப்பல் தலைவனுடன் சேர்ந்து சாப்பிடும்படியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது!” என்றான்.
“நான் சாப்பிட வரவில்லை” என்றான் ஸித்தி அஹமத்.
“வந்த பிறகு சாப்பிடாமல் அனுப்ப முடியுமா? உட்கார். அதோ ஒரு தட்டு தயாராயிருக்கிறது” என்று தட்டைக் காட்டி ஆசனத்தையும் இழுத்துப் போட்டான் ரகுதேவ்.
ஸித்தி அஹமத்தின் கண்கள் ஆகாரத்தை நாடவில்லை. ஆகாரத்தைவிடச் சுவையாக எதிரே உட்கார்ந்திருந்த பத்மினியின் அங்க லாவண்யங்களைச் சுற்றி வந்தன. இதனால் மிகச் சங்கடமடைந்த பத்மினி குனிந்தும் நெளிந்தும்.
உட்கார்ந்தாள். அவள் ஹிம்சைப் படுவதை அறிந்த ரகுதேவ், ஸித்தி அஹமத்தின் பார்வையைத் தன்மேல் திருப்ப முயன்று, “அஹமத்! நீ வந்த காரணத்தை இன்னும் சொல்லவில்லையே” என்றான்.
ஸித்தி அஹமத் ரகுதேவைப் பார்த்து லேசாக நகைத்துக் கொண்டே, “ரகுதேவ்! இங்குள்ள மாலுமிகளைக் கரைக்கு அனுப்புவதற்காக வந்தேன்” என்றான்.
அந்தப் பதிலால் ரகுதேவ் ஆச்சரியப்படுவானென்றோ ஆத்திரப்படுவானென்றோ அஹமத் நம்பியிருந்ததால் ஏமாந்தே போனான். ரகுதேவின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் தோன்றவில்லை. “அவர்களைக் கரைக்கு
அனுப்புவானேன். தளம் படுப்பதற்குச் சௌகரியமாகத் தானே இருக்கிறது” – எனறு ஏதுமறியாததுபோல் வின வினான்.
“சௌகரியமாகத் தானிருக்கிறது. ஆனால், அவர்கள் படுக்கையைவிட என் நிலைமையை நான் கவனிக்க வேண்டியிருக்கிறது. என் ஆட்கள் இரவில்கூட என் பார்வையிலிருப்பது நல்லது” என்று சொல்லிய ஸித்தி, ரகுதேவைக் கூர்ந்து
நோக்கினான்.
“சரி, உன்னிஷ்டம்” என்று சொல்லி விட்டான் ரகுதேவ். ஆனால் ஸித்தி அஹமத்தின் அடுத்த உத்தரவு அவனுக்கு ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது.
“நீங்கள் நான்கு பேருங்கூட நாளைக் காலையில் கரைக்கு வந்துவிட வேண்டும்” என்ற ஸித்தி அஹமத்தை வெறுப்புடன் பார்த்த ரகுதேவ், “அஹமத்! உன் பயத்துக்கும் ஓர் எல்லை இருக்க வேண்டும். நாங்கள் நான்கு பேரும் கப்பலை
ஒட்டிக் கொண்டு ஓடிப் போய் விடுவோமா?” என்றான்.
“ரகுதேவ்! உன் மைத்துனன், நீ, உன் வேலைக்காரன் ஆக மூன்று ஆண்பிள்ளைகள் கப்பலில் இருக்கிறீர்கள். ஒருவர் சுக்கான் பிடித்து, ஒருவர் யந்திர அறையைக் கையாண்டு, ஒருவர் பாய்மரங்களைக் கவனித்துக் கொண்டால் இந்தக்
கப்பலை ஓட்டிவிடலாம். இதைவிடப் பெரிய கப்பல்களை மூன்று பேர்களே கடத்திக் கொண்டு போயிருப்பதைப் பல சமயங்களில் பார்த்திருக்கிறேன். இது உனக்கும் புதிய விஷயமல்ல” என்று விளக்கிச் சொன்னான் ஸித்தி அஹமத்.
“வீணாகச் சந்தேகப்படுகிறாய், அஹமத்! என் மனைவிக்கு மட்டும் உடல்நிலை சரியாக இருந்தால் நான் முன்னமே கரைக்கு வந்திருப்பேன்” என்று மேலே ஏதோ சொல்லப்போன ரகுதேவை ஸித்தி அஹமத் இடையிலேயே வெட்டி, “தரையில்
இவர்களுக்கு வேண்டிய சகல சௌகரியங்களையும் நான் செய்து தருகிறேன். என் மஞ்சமிருக்கிறது. வெள்ளைக்காரர்களிடமிருந்து நான் கைப் பற்றிய முதல் தரமான கட்டிலிருக்கிறது” என்று சொல்லி விட்டுப் பத்மினியை விழுங்கி
விடுபவன்போல் பார்த்தான்.
அதற்கு மேலும் ஸித்தி அஹமத்தை அங்கு நிற்க வைக்க இஷ்டப்படாத ரகுதேவ், “சரி! நாளைக் காலையில் நாங்கள் கரைக்கு வருகிறோம்” என்று கூறிவிட்டு மீண்டும் சாப்பிட உட்கார்ந்தான்.
ஸித்தி அஹமத் கடைசியாகப் போகும்போது பத்மினியை நோக்கி, “கவலைப்படாதீர்கள்? கரைக்கு வந்ததும் உங்களை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டுப் பயங்கரமாக ஒரு சிரிப்பும் சிரித்து விட்டு, அறைக்கதவைத்
தடாலென்று சாத்திக்கொண்டு படிகளில் ஏறிச் சென்றான்.
அவன் சென்றதும் ரகுதேவ் சஞ்சலம் நிரம்பிய முகத்துடன் எழுந்து அறையில் உலாவ ஆரம்பித்தான். “அவன் எதற்காக மாலுமிகளைக் கரைக்கு அனுப்புகிறான்?” என்று பீம்ஸிங் வினவினார்.
என்றும் பீம்ஸிங் கண்டிராத அவ்வளவு ஆத்திரத்துடன் ரகுதேவ் அவரை நோக்கித் திரும்பி, “உம்முடைய களிமண் மூளையில் ஏறாத உண்மை ஸித்தி அஹமத்தின் மூளையில் உதயமாகிவிட்டது!” என்று சீறினான்.
“என்ன உண்மை?”
“பாட்டுப் பாடி கதைகள் சொல்லி மாலுமிகளை நமது பக்கம் இழுக்க நான் செய்த முயற்சி” என்றான் ரகுதேவ்.
பீம்ஸிங் வாயைப் பிளந்தார். “அதற்காகத்தானா அவர்களுடன் சேர்ந்து பழகிப் பாடி…” என்று அவர் சொல்லிக் கொண்டு போனதை இடையே தடுத்த பத்மினி, மிகுந்த வெறுப்புடன் அவரைப் பார்த்து, “போதும்! போதும், சும்மா
இருங்கள்; அவர் ஏதோ யோசிக்கிறார்!” என்றாள்.
உண்மையில் ரகுதேவ் தீவிர யோசனையில் ஆழ்ந்து விட்டான். வெகுநேரம் யாரும் பேசவில்லை. கடைசியாகப் பத்மினிக்காகத் திரும்பிய ரகுதேவ், “நீங்களெல்லோரும் படுத்துக் கொள்ளுங்கள். நானும் கரைக்குச் சென்று வருகிறேன்”
என்று கிளம்பினான்.
பத்மினியும் ஆசனத்திலிருந்து எழுந்து, “ஏன்?” என்று கேட்டாள்.
“வந்து சொல்கிறேன்?” என்று சொல்லிக்கொண்டே அறையைவிட்டு வெளியே சென்றான் ரகுதேவ். அவனைத் தொடர்ந்து வாயிற்படியைத் தாண்டி பத்மினி அறைக் கதவைச் சாத்தி அவன் தோள்மேல் கையை வைத்து அவனைச்
சிறிது நிறுத்தினாள்.
“ஏன் பத்மினி?” என்றான் ரகுதேவ்.
“கரையில் ஆபத்து ஏதுமில்லையே?” என்று அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக வார்த்தைகளை உச்சரித்தாள் பத்மினி.
பதிலுக்கு ரகுதேவின் இடது கை அவள் இடையைச் சுற்றிச் சென்ற அதே சமயத்தில் பத்மினியின் வலது கை அறை வாசற்படியின் வெளித் தாழ்ப்பாளைப் பிடித்திழுத்து, கதவின் மூலம் கொஞ்சம் நஞ்சம் தெரியக்கூடிய இடை
வெளியையும் அடைத்துவிட்டது. –
உள்ளே உட்கார்ந்திருந்த பீம்ஸிங், கதவு அழுத்திச் சாத்தப்படுவதைக் கண்டு ஏதும் செய்ய வகையறியாமல், கதவுக்கு வெளியே என்னென்ன நடந்து விடுகிறதோ என்று தத்தளித்துக் கொண்டிருந்தார். நடந்து கொண்டிருந்ததை
மட்டும் அவர் பார்த்திருந்தால் பிராணன் அன்றே போயிருக்கும்.

Previous articleJala Mohini Ch15 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch17 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here