Home Historical Novel Jala Mohini Ch17 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch17 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

58
0
Jala Mohini Ch17 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch17 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch17 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 17. ஆற்றங் கரையினிலே…

Jala Mohini Ch17 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

இடையை வளைத்தோடிய ரகுதேவின் இடக்கையைப் பத்மினி எடுக்க முடியவில்லை. அக்கை இறுகி இழுத்த போதும் இஷ்டத்துடனே அவன் மேல் சாய்ந்தாள். கொடிபோல் அவன் மேல் சாய்ந்து உராய்ந்த சுந்தரமான அவள் உடலைச்
சுற்றி அவன் வலக்கையும் சுழன்றது. அந்த இரண்டு கரங்களுக்கிடையே அகப்பட்டுக் கிடந்த பத்மினியின் மனத்தில் ஏதோ பந்தோபஸ்தான இடத்துக்குத் தான் வந்துவிட்டது போன்ற உணர்ச்சி எழுந்தது. அது வரை பயத்தால் சற்றே
நடுங்கிக் கொண்டிருந்த தேகம் அவன் கைச் சிறை அளித்த சாந்தியினால் சிறிது திடப்பட்டது. ஆனால் ரகுதேவின் மனோதிடம் சுக்கல் சுக்கலாக வெடித்துப் போகும் நிலைக்கு வந்துவிடவே, வலியத்தன்னருகில் வந்த அந்த வடிவழகியை
இறுகவே அணைத்துக் கொண்டான். தூய்மையே உருவாகி, சந்தர்ப்ப வசத்தால் தன் ஆதரவுக்குட்பட்ட பத்மினிக்கு எந்த விதமான மாசும் நேரிடாமல் காப்பாற்றி ஊருக்கனுப்ப வேண்டும் என்று அவன் எண்ணிய எண்ணமெல்லாம்
அந்தப்புறம் பீம்ஸிங் பொறாமையால் மனம் வெடித்து உட்கார்ந்திருக்கிறாரென்பதும், தாங்களிருக்கும் நிலையை அவர் பார்த்தால் ரகளை செய்துவிடுவாரென்பதுங் கூட மனோகரமான அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் நினைப்புக்கு
வரவில்லை. கட்டுண்டு நின்ற கட்டழகியின் காதல் வலையில் சகல உணர்ச்சிகளையும் சிக்கவிட்டிருந்த ரகுதேவ், தன்னையும் பத்மினியையும் தவிர உலகத்தில் வேறு மனிதர்கள் இருக்கிறார்களென்ற எண்ணத்தை அறவே துறந்து,
மிருதுவான அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்துக் கொண்டான்.
இத்தனை செய்கைகளில் பத்மினி ஒன்றைக்கூட வெறுக்கவில்லை. கேவலம் ஒரு வாரமாகப் பழகிய இந்தப் புருஷனிடம் இச்சை ஏற்பட என்ன காரணமென்பதையோ ஸித்தி அஹமத்தின் பயம் நீங்கினாற் போன்ற இந்தக் காதல் விலகி,
தான் ஊருக்குப் போய்விட்டால் தன் பிற்கால நிலை எப்படியிருக்குமென்பதையோ அவள் சிந்திக்கக்கூட இல்லை. காமம் அடியோடு கருத்தைக் குலைத்து விடுவதால் சிந்தனைக்கு இடம் அளிப்பதில்லை. அப்படிச் சிந்தனை
சிதறிவிடுவதால் காதல் வசப்பட்டவர்கள் துணிந்து எக்காரியத்திலும் இறங்கி விடுகிறார்கள். பலா பலன்கள் பின்னால்தான் தெரியுமேயொழிய அந்தச் சமயத்தில் உணர்ச்சிகளின் இன்ப இரைச்சலே ஓங்கி நிற்கிறது. எத்தகைய
விளைவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் மந்திரத்தால் கட்டுண்டவளைப் போல் அவன் கைகளில் சுழன்றாள். அப்படிச் சுழன்றதால் அவள் கன்னம் தன் கன்னத்தில் உராயவே ரகுதேவ் மேலும் மேலும் அவள் மோகனாஸ்திரத்தில்
சிக்கினான். அவள் காதுக்கருகில் செய்தி ஏதோ சொல்லப் போவதுபோல் முகத்தைத் திருப்பி, காதுகளுக்கடியில் இருந்த வழவழப்பான அவள் கழுத்துப் பிரதேசத்தில் இதழ்களைப் பொருத்தினான்.
இந்தச் சமயத்தில் கதவுத் தாழ்ப்பாளை இழுத்துப் பிடித்தருந்த கை அறைப்பக்கமாக இழுபடவே பத்மினி சரேலென்ற ரகுதேவிடமிருந்து விலகி நின்றாள். அதுவரை உள்ளே சகித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த பீம்ஸிங், பத்மினி அறைக்கு
வெளியே சென்று வெகு நேரமாகியும் வராததாலும், வெளியிலிருந்து மூச்சுப் பேச்சு எதுவும் காதில் விழாததாலும் பொறுமையை இழந்தவராய்க் கதவைத் திறக்கப் பிடித்து இழுத்தார். வெளியே யாரோ தாழ்ப்பாளை இழுத்துப்
பிடித்திருப்பதை அறிந்ததும் அவர் ஆத்திரம் பன்மடங்காகிவிட்டது. பத்மினி மட்டும் தாழ்ப்பாளிலிருந்து கையை எடுக்காமல் இருந்தால் மிக முரட்டுத் தனமாகக் கதவை உடைக்கக்கூட துணிந்திருப்பார் பீம்ஸிங்.
அவ்வளவு தூரம் குமுறிக் கொண்டிருந்த கோபத்துடன் கதவைத் திறந்துகொண்டு வந்து பீம்ஸிங் பத்மினியையும் ரகுதேவையும் சந்தேகத்துடன் மாறி மாறிப் பார்த்தார். ரகுதேவ் பத்மினியைவிட்டுச் சற்றுத் தள்ளி நின்று
மாடிப்படிகளின் மேல்புறத்திலிருந்த படிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். பத்மினி விவரிக்க இயலாத உணர்ச்சிகளால் தாக்கப்பட்டவளாய் பீம்ஸிங்கை ஏறிட்டு நோக்கினாள். அவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தினாலும் ரகுதேவ்
தம்மைப் பார்க்கவும் கூ.சி மாடிப் படிகளைக் கவனித்துக் கொண்டிருந்ததாலும், திருடர்களைப் பிடித்து விட்ட வேவுக்காரனுக்குள்ள பெருமை பீம்ஸிங்கின் மனத்திலும் உதயமாகவே கொஞ்சம் அதிகாரத் தோரணையிலேயே அவர்
அவ்விருவரையும் நோக்கி, “இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
திருடன்கூட அகப்படுகிற வரையில்தான் பயப்படுவான் என்ற உண்மையைப் பீம்ஸிங் உணரவில்லை. நெஞ்சு துணிந்த திருடர்களைப் பிடிப்பதில் ஆபத்தும் இருக்கிறதென்ற விஷயமும் அவர் புத்தியில் ஏறவில்லை. ஆகவே
கேள்வியைக் கேட்டதோடு நில்லாமல் அதற்குப் பதில் ஏதுவும் கிடைக்காமல் போகவே, மீண்டும் கோபத்துடன் வினவினார். “நான் கேட்பது உங்கள் காதுகளில் விழவில்லையா?” என்று.
“காதில் விழுந்தது” என்றாள் பத்மினி.
“பின் ஏன் பதில் சொல்லவில்லை.”
பீம்ஸிங் மிக மிடுக்காகக் கேட்டார். அவள் மேல் இருக்கும் பாத்யதையும் அதிகாரமும் குரலில் தொனிக்கும் படியாகவும் செய்துகொண்டார். பத்மினி சொல்லிய பதில் அந்த அதிகாரத்தையும் பாத்யதையையும் தவிடு
பொடியாக்கிவிட்டது.
“பதில் சொல்ல இஷ்டமில்லை” என்றாள் பத்மினி. இதைக் கேட்ட பீம்ஸிங்குக்கு அடுத்தபடி என்ன கேட்பதென்று விளங்காமல் போகவே ஒரு விநாடி தத்தளித்தார். அதிகாரம் செல்லாதென்பதைத் தெரிந்து கொண்டவுடன்
கொஞ்சலானார். “என்ன பத்மினி, இப்படிப் பேசுகிறாய்? உன் உறவினர்களிடம் உன்னை ஜாக்கிரதையாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்பதற்காக உத்தியோகத்தைக் கூட உதறிவிட்டு வந்த என்னிடமா இப்படிப் பேசுவது?”
என்று பரிதாபமாகக் கேட்டார்.
அவர் நிலையைப் பார்த்த பத்மினிகூடச் சிறிது பரிதாபப்பட்டாள். “நான் இந்த மாதிரி பதில் சொல்ல வேண்டிய நிலைமையை நீங்கள் சிருஷ்டிக்கிறீர்கள். நான் என்ன செய்யட்டும்?” என்றாள்.
“உன் கௌரவத்தில் அக்கறையிருப்பதால்தானே நான் உன்னைக் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.”
“ஏன், என் கௌரவத்தில் எனக்கு அக்கறை கிடையாதோ? கௌரவக் குறைவாக என்ன செய்துவிட்டேன்.”
என்ன செய்துவிட்டாள் என்பதை விளக்க பீம்ஸிங் கால் முடியவில்லை. ‘நீ அவனுடன் தனித்து இத்தனை நேரம் என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று கேட்கவும் துணிச்சலில்லை. நேர்முகமாகக் கேட்கமுடியாத கேள்வியை
மறைமுகமாக வீசி, “அவருடன் தனியாக இத்தனை நேரம் இருந்தாயே?” என்று ஆரம்பித்து வாசகத்தை முடிக்கத் தெரியாமல் ‘ஹூம்’ என்று சப்தங்களைக் கிளப்பி உளறினார்.
அடுத்து வந்த பத்மினியின் கேள்வி மிகக் கோபத்துடன் கிளம்பியது. “அவருடன் தனித்துப் பேசினால் என்ன தவறு? அதில் என்ன கௌரவக் குறைச்சலைக் கண்டு விட்டீர்கள்?”
“பேசிக்கொண்டா இருந்தீர்கள்?”
“பின் என்ன செய்து கொண்டிருந்ததாக நினைக்கிறீர்கள்?”
“இல்லை. பேச்சு காதில் விழவில்லை.”
“அதற்கு நாங்கள் என்ன செய்யட்டும்?”
பத்மினியிடம் அதற்குமேல் வாதாட இஷ்டமில்லாத பீம்ஸிங் கோபத்தையெல்லாம் ரகுதேவின்மேல் திருப்பினார். “நீங்கள் ஏன் பேசாமல் நிற்கிறீர்கள்?” என்று வினவினார்.
“உங்களிடம் பேசுவதற்கு ஏதுவுமில்லாததால்” என்று பதில் கொடுத்தான் ரகுதேவ்.
“பத்மினியிடம் பேசுவதற்கு மட்டும் நிரம்ப இருந்ததாக்கும்?”
“ஆம்.”
அந்தப் பதிலைக் கேட்ட பீம்ஸிங்கின் கோபம் பன் மடங்காகவே, அவர் ரகுதேவை நோக்கி உஷ்ணமான வார்த்தைகளை உதிர்த்தார். “பத்மினியை அவள் தகப்பனார் என்னிடம் ஒப்படைத்திருக்கிறாரென்பது உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியாது.”
“தெரியாவிட்டால் இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள். அவளை அவள் பந்துக்களிடம் சேர்ப்பிக்கிற வரையில் அவளைக் காப்பாற்றும் கடமை எனக்கிருக்கிறது?”
“அந்தக் கடமையை முடியுமானால் நிறைவேற்றுங்கள். யார் தடை செய்தது?”
“நீ பேசுவதன் அர்த்தம் புரியவில்லை.”
“இதில் மர்மம் ஏதுமில்லை. பத்மினியைக் காப்பாற்றுவது என் கடமை என்று நினைத்து நான் இதுவரை என்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறேன். அது தங்கள் கடமைதான் என்று நினைக்கும் பட்சத்தில் நான் கரைக்குச்
செல்லவில்லை. நீங்கள் செல்லுங்கள்.”
“கரைக்கு எதற்காகப் போக வேண்டும்?”
“பத்மினியைக் காப்பாற்ற.”
“என்ன செய்ய வேண்டும்?”
“அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். ஸித்தி அஹமத் மாலுமிகளோடு நம்மையும் கரைக்கு வர உத்தரவிட்டிருக்கிறான். அத்துடன் கரைக்கு வந்தால் பத்மினியையும் கவனித்துக் கொள்வதாகச் சொல்லிப் போயிருக்கிறான்.
ஆகவே, கரைக்குச் சென்று அங்குள்ள மாலுமிகளைக் கொண்டு சரியான இடமாகப் பார்த்துப் பத்மினிக்குக் கூரை வீடு கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.”
“மாலுமிகள் நான் சொன்னால் கேட்பார்களா?”
“முயன்றுதான் பாருங்களேன்.”
பீம்ஸிங். சற்று நேரம் பதிலேதும் சொல்லவில்லை. பத்மினியைக் காப்பாற்றுவது சம்பந்தமாகத் தான் கிளப்பிய பிரச்சினை ஒருவிதமாயிருக்க, ரகுதேவ் வேறு மார்க்கத்தில் சம்பாஷணையைத் திருப்பிவிட்டதைக் கண்டு என்ன
பேசுவதென்று தெரியாமல் திண்டாடினார். அவர் திண்டாட்டத்தினால் ஏற்பட்ட எரிச்சலை ஏறத்தள்ளப் பத்மினியும் தூண்டுகோல் போட்டு, “ஏன்? கரைக்குப் போய் வாருங்களேன்” என்றாள்.
“நான் சக்கரவர்த்தியின் படையில் ஒரு தளபதி” என்று ஆரம்பத்தார் பீம்ஸிங்.
“அதைத்தான் நாங்கள் மறப்பதில்லையே” என்றான் ரகுதேவ்.
“இப்பொழுது அதைப்பற்றி ஏன் பிரஸ்தாபிக்கிறேன் தெரியுமா?”
“சொல்லுங்கள்.”
“கௌரவமான ஒரு தளபதி கொள்ளைக்கார மாலுமிகளுடன் சகஜமாகப் பழக் முடியாது என்பதைச் சுட்டிக் காட்டத்தான்.”
“அப்படிச் சுட்டிக் காட்டுவதால் இப்பொழுது இருக்கும் நிலைமைக்கு எப்படிப் பரிகாரம்? நீங்கள் கரைக்கு வராவிட்டால் எந்தக் கொள்ளைக்காரர்களை நீங்கள் வெறுக்கிறீர்களோ அவர்களை விட்டே ஸித்தி அஹமத் உங்களைக்
கரைக்கு இழுத்துச் செல்லுவான். உங்களை மட்டும் இழுத்துச் செல்லுவதானால் பாதகமில்லை. பத்மினிக்கும் அந்த ஆபத்து ஏற்பட்டால்?”
“எப்படிப் பாதுகாப்பது?” என்று சொல்லி விழித்தார் பீம்ஸிங்.
“அது புரியாதிருக்கும்போது அநாவசியமான கேள்விகளையாவது கேட்காதிருக்கலாமல்லவா?” என்று அதட்டலாகக் கேட்ட ரகுதேவ் மேற்கொண்டு மாடிப்படிகளின் அடியிலேயே அந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்க
இஷ்டமில்லாதவனாகப் பத்மினியை நோக்கி, “பத்மினி பயப்படாதே! கரையில் எனக்கு எந்த ஆபத்துமில்லை. பொக்கிஷக் கப்பல்கள் கைக்குக் கிட்டும் வரையில் ஸித்தி அஹமத்தும், அவன் சகாக்களும் என்னிடம் எச்சரிக்கையாகவே
நடந்து கொள்வார்கள்” என்று கூறி விட்டுப் பீம்ஸிங்கைச் சிறிதும் கவனிக்காமலே படிகளில் விடுவிடு’ என்று ஏறிச் சென்றுவிட்டான். படிகளில் ஏறிப் போய்க் கொண்டிருந்த அவனை வெறுப்புடன் பார்த்துவிட்டுப் பீம்ஸிங் மீண்டும்
அறைக்குள் நுழைந்தார். பத்மினி மட்டும் வெகுநேரம் வரை வாயிற்படியிலேயே சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்.
மேலே சென்ற ரகுதேவ் மாலுமிகளைப் படகு தயார் செய்யச் சொல்லி இட்ட கூச்சலும், அதைத் தொடர்ந்து சில நிமிஷங்களுக்கெல்லாம் படகு ஒன்று செல்வதைக் குறிக்கும் துடுப்புகள் ஜலத்தில் துழாவும் ஓசையும் அவள் செவிகளில்
விழுந்தன. ரகுதேவ் எத்தனை தைரியம் சொல்லிப் போயிருந்தும் அவள் மனம் மட்டும் அவனுக்கு என்ன நேர்ந்துவிடுமோ என்ற திகிலால் ‘திக்குத் திக்கு’ என்று அடித்துக் கொண்டிருந்தது.
அவள் திகிலுக்குச் சமமான ஆச்சரியத்தை அடுத்த சில விநாடிகளில் கரையிலிருந்த ஸித்தி அஹமத் அடைந்தான். ஜலமோகினியிலிருந்து தான் வந்ததும் வராததுமாக ரகுதேவும் கரைக்கு வந்துவிட்டதைக் கண்ட ஸித்தி அஹமத், தன்
இருப்பிடத்திலிருந்து கரையோரம் வந்து சேர்ந்தான். படகிலிருந்து ரகுதேவ் இறங்கியதும் அவனை நோக்கி, “ஏன் இவ்வளவு அவசரமாகக் கரைக்கு வந்து விட்டாய்?” என்று சந்தேகம் தொனிக்கும் குரலில் ஒரு கேள்வியையும் வீசினான்.,.
ரகுதேவ் உடனே அவனுக்குப் பதில் சொல்லாமல் தமானா கரைப் பிரதேசத்தையும் காடுகள் சிறிது அழிக்கப்பட்டதால் நீர்க்கரையை ஒட்டி அரைவட்டமாகக் கிடந்த மணற்பரப்பையும் கவனித்தான். ரகுதேவிடம் உள்ள பயத்தினால் அவன்
செய்கைகள் ஒவ்வொன்றிலும் ஏதோ திருட்டுத் தனம் இருக்கும் என்ற நினைப்புள்ள ஸித்தி அஹமத் “என்ன பார்க்கிறாய், ரகுதேவ்?” என்று மற்றும் ஒரு முறை வினவினான்.
“நாங்கள் இருப்பதற்கு வேண்டிய குடிசைகளை எந்தப் பக்கம் கட்டலாம் என்று யோசிக்கிறேன்” என்று ரகுதேவ் பதில் கூறினான்.
“என்னுடைய குடிசைக்குச் சற்றுத் தள்ளி அந்தப் பக்கம் கட்டலாமே” என்று ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினான் அஹமத்.
“அது சௌகரியப்படாது.”
“என்.”
“என் மனைவியும் தங்க வேண்டுமல்லவா?”
“உன் மனைவி என் குடிசைக்குப் பக்கத்திலிருப்பதால் நல்லதுதானே. மாலுமிகள் பக்கத்திலிருக்கிறார்கள் பந்தோ பஸ்து இருக்கும்?”
“என் மனைவியைக் காவல் காக்க ரஜினிகாந்த் இருக்கிறான். தவிர, அவளுக்குத் தேகநிலை சரியாயில்லை. மாலுமிகளின் இராக் கூச்சலிருந்தால் தூக்கமிருக்காது.”
ரகுதேவின் இந்த சால்ஜாப்பின் காரணத்தை ஸித்தி அஹமத் உணராமலில்லை. தன் நோக்கத்தை ஓரளவு ரகுதேவ் உணர்ந்து கொண்டே பத்மினியைத் தன் கண்ணில் காட்டாதிருக்க முயலுகிறானென்பதையும் புரிந்துகொண்டான்.
எப்படியிருந்தாலும் கரைக்கு வந்தால் தன் கையில் சிக்காமல் போகிறாளா என்ற தீர்மானத்தில், “சரி; உன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் குடிசைகளைக் கட்டிக்கொள்” என்று சொல்லி விட்டுத் தன் குடிசையை நோக்கிப்
போய்விட்டான்.
அடுத்த நிமிடம் ரகுதேவின் கம்பீரமான குரல் தமானாவின் கரைப்பிரதேசத்தில் பலமாக ஒலித்தது. மாலுமிகள் சிலரை அழைத்துத் தங்களுக்குக் குடிசைகளை எங்குக் கட்ட வேண்டும், எப்படிக் கட்ட வேண்டும் என்பதை விளக்கினான்.
ஸித்தி அஹமத்தும் இதர, மாலுமிகளும் மணற்பாங்கின் மேற்கு முனையில் தங்கியிருந்தார்கள். தங்களுக்குக் கிழக்கு முனையில் காட்டு ஓரமாக மூன்று குடிசைகளைக் கட்டுமாறு ரகுதேவ் உத்தரவிட்டான். அவன் சொற்படி மாலுமிகள்
வேலை தொடங்கினார்கள். இரவைச் சிறிதும் லக்ஷியம் செய்யாமல் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து கைப்பற்றிய பழைய லாந்தர்களை வெளிச்சத்துக்காகச் சில மரங்களில் கட்டிக் கொண்டும், ஈட்டிகளுக்கிடையில் பந்தங்களைக் கொளுத்தி
வைத்துக் கொண்டும் குடிசைகளை வெகுவேகமாக அமைக்கத் தொடங்கினார்கள். காட்டின் ஓரத்தேயிருந்த சில மரங்கள் குடிசைத் தூண்களுக்காகவும் சாரங்களுக்காகவும் வெட்டப்பட்டன. சிலர் பனைமட்டைகளை வெட்டித்
தள்ளினார்கள். சிலர் தென்னை மட்டைகளைக் கொண்டு வந்து கீற்று முடைந்தார்கள்.
கரையிலிருந்த மாலுமிகள் வேலை ஆரம்பித்த சில மணி நேரத்திற்குள் ஜலமோகினியிலிருந்த மாலுமிகளும் கரைக்கு வந்து அவர்களுடன் கலந்துகொண்டார்கள். நள்ளிரவுக்குள் மிக ரம்மியமான மூன்று குடிசைகள் கட்டி முடிந்தன.
இரவு முழுவதும் ரகுதேவ் ஜலமோகினிக்குச் செல்லவேயில்லை. பத்மினிக்குச் சகல வசதிகளுமிருக்கும் படியான வாசஸ்தலத்தை அமைப்பதிலேயே அவன் கண்ணும் கருத்துமாயிருந்தான். அடிக்கடி மாலுமிகளில் ஓரிருவரை
ஜலமோகினிக்கு அனுப்பிப் பத்மினிக்குத் தேவையான மஞ்சங்களையும், மேல்தளத்தில் அவளுக்கென அமைக்கப்பட்டிருந்த மெத்தையுடன் கூடிய சாய்வுப் படுக்கையையும் வரவழைத்து, அவள் குடிசையில் போடச் சொன்னான்.
அவன் ஏற்பாடுகளைப் பூராவாகச் செய்து முடிப்பதற்கும் பொழுது புலருவதற்கும் சரியாயிருந்தது.
இரவு முழுவதும் அவன் வராததால் கவலையுடனிருந்த பத்மினி விடியற்காலையிலேயே ஜலமோகினியின் மேல்தளத்துக்கு வந்து கரையை நோக்கினாள். கரையின் கிழக்குக் கோடியில் அழகிய மூன்று குடிசைகள் எழுந்து
விட்டதைக் கண்ட அவள் மனம் ரகுதேவை நினைத்து ஏங்கியது. தன் சௌகரியத்துக்காக அவர் இரவு முழுவதும் தூங்காமலே காலங்கழித்திருக்கிறாரே என்பதை நினைத்ததால் உள்ளத்தில் காதலும் பரிதாபமும் கலந்த உணர்ச்சி ஏற்பட்டு,
அந்த உணர்ச்சி பெருமூச்சாகவும் வெளிவந்தது. கரையில் தனக்காக அவஸ்தைப்படும் ரகுதேவையும், இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கிய பீம்ஸிங்கையும் அவள் மனம் மாறி மாறி எண்ணிப் பார்த்து, அவரிடம் சொல்ல வொண்ணா
வெறுப்பையும் அடைந்தது. இத்தகைய மாறுபட்ட எண்ண அலைகளால் தாக்கப்பட்ட உள்ளத்துடன் நின்றிருந்த பத்மினியை அணுகி வந்த ரஜினிகாந்த், “அம்மா! எசமான் நம்மையெல்லாம் கரைக்கு வரச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்”
என்று அறிவித்தான்.
“இதோ போய் என் ஆடைகளை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன், ரஜினிகாந்த்” என்று பதில் சொன்னாள் பத்மினி.
“தங்களுக்கு வேண்டியதையெல்லாம் எடுத்துக் கட்டி நானே படகில் வைத்துவிட்டேன்” என்றான் ரஜினிகாந்த்.
எள்ளென்பதற்கு முன்பாக எண்ணெய் என்று நிற்பதாலோ அல்லது அவன் ரகுதேவின் ஊழியன் என்பதாலோ சொல்ல முடியாது, கடந்த சில தினங்களில் ரஜினிகாந்திடம் பேரன்பு கொண்டிருந்தாள் பத்மினி. அவருக்கு அகப்படும்
வேலையாள்கூட எவ்வளவு கெட்டிக் காரனாயிருக்கிறான் என்பதைப் பன்முறை நினைத்துப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறாள். ஆகவே, ரஜினிகாந்தின் பேச்சுக்கு, மறு பேச்சு சொல்லாமல் அவனைத் தொடர்ந்து சென்றாள். அடுத்த
கால்மணி நேரத்தில் ரஜினிகாந்தும், பீம்ஸிங்கும், பத்மினியும் கரைக்கு வந்து சேர்ந்தார்கள்.
காலைக் கதிரவனின் கிரணங்கள் தமானா நதிப் பிரதேசத்தில் பாய்ந்து சூழ்நிலையை மிக மனோகரமாகச் செய்து கொண்டிருந்தன. உறங்கி எழுந்த காட்டுப் பறவைகளின் ‘கிலகிலா’ சப்தம் எங்கும் ஒலித்தது. முகத் துவாரத்தில் மோதிய
கடலலைகளின் ஓசைகூட மிக இன்பமாகக் கேட்டது! இயற்கையின் இன்பமான வனப்பில் மனத்தைப் பறி கொடுத்துச் சுற்றும் முற்றும் பார்த்தாள் பத்மினி. கரையில் காலை வைத்ததும் அவளை எதிர் கொள்ள வந்த ரகுதேவும்
பத்மினியின் பார்வையைத் தொடர்ந்து தன் பார்வையையும் ஓடவிட்டான்.
பிறகு, “ஆமாம் பத்மினி! அரபிக்கடல் பிராந்தியத்தின் ரம்மியமான பிரதேசங்களில் இதுவும் ஒன்று. காட்டுப் பிரதேசத்தின் ஒரு பகுதியை நாளைக்குச் சுற்றிக் காட்டுகிறேன். முதலில் குடிசையைப் பார்” என்று கூறி, அவள் கையைப்
பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான். அவர்களுக்கு முன்பாகவே குடிசைகளுக்கருகில் சென்ற பீம்ஸிங் அவற்றைப் பரீட்சை செய்து கொண்டிருந்தார்.
பத்மினி தனக்காக ஏற்பட்ட குடிசைக்குள் நுழைந்து அங்கு செய்யப்பட்டிருந்த சௌகரியங்களைக் கண்டு பிரமித்து மீண்டும் வாயிற்படிக்கருகில் வந்து கூரையைப் பிடித்துக்கொண்டு நின்றாள். அப்போது வாயிற்படிக்கு அருகே
பீம்ஸிங்கும் ரகுதேவும் தீவிரமான தர்க்கத்திலி றங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்த பத்மினி அவர்கள் சம்பாஷணையையும் உற்றுக் கேட்டாள்.
“மூன்று குடிசைகள்தானே இருக்கின்றன?” என்றார் பீம்ஸிங்.
“ஆம்” என்றான் ரகுதேவ்.
“அது பத்மினிக்கு” என்று பத்மினியிருந்த குடிசையைச் சுட்டிக் காட்டினார் பீம்ஸிங் மறுபடியும்.
ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் ரகுதேவ்.
“அது யாருக்கு?” என்று எதிரேயிருந்த குடிசையைக் காட்டிக் கேட்டார் பீம்ஸிங்.
“அது தங்களுக்கு. அதோ அந்தப் பக்கத்திலிருப்பது ரஜினிகாந்துக்கு.”
“நீங்கள் எங்கு தங்குவதாக உத்தேசம்?”
“என் மனைவியுடன்.”
இந்தப் பதிலைக் கேட்ட பீம்ஸிங் மிதமிஞ்சிய கோபத்தால் நிலைகுலைந்து போனார். அத்துடன் இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் தம்மைப்போல் கோபங்கொள்ளாமல் குடிசை வாயிலிலிருந்து பத்மினி ‘களுக்’ கென்று
சிரித்ததையும் கண்ட அவர் நாணமற்ற அவள் போக்கைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். பிறகு கோபத்தை உள்ளடக்கிக் கொண்டு சொன்னார்: “இதை நான் அனுமதிக்க முடியாது” என்று.
“தங்களை அனுமதிக்கும்படி யார் கேட்டது?” என்று ரகுதேவ் பதிலுக்கு வினவினான். அத்துடன் தமானா நதிக்கரையின் மற்றொரு கோடியைச் சுட்டிக்காட்டி, “பீம்ஸிங்! முட்டாள் தனத்தை இன்னும் சில நாட்களுக்கு நீர் மூட்டை கட்டி
வைக்காவிட்டால் நீரும் பத்மினியும் இங்கிருந்து தப்புவது குதிரைக் கொம்புதான். அதோ இருக்கும் பேர்வழிக்கு நம்முடைய பரஸ்பர உறவில் துளிச் சந்தேகம் வந்தால் போதும். அப்புறம் என்னையும உம்மையும் ரஜினிகாந்தையும்
சமாப்தி செய்தாலும் செய்யா விட்டாலும் பத்மினியை அவன் ஜாகைக்குத் தூக்கிச் செல்லத் தயங்கமாட்டான். சாதாரணமாகவே கரையில் பத்மினிக்குள்ள ஆபத்து மிக அதிகம்; அதை உமது முட்டாள் தனத்தால் விசிறிப் பெரிய ஜ்வாலையாக
அடிக்க வேண்டாம்” என்றான்.
அவன் சொல்வதிலிருந்த பூரா உண்மையை அடுத்த சில தினங்களில் பீம்ஸிங் உணர்ந்து கொண்டார். அடுத்து வரவிருந்த அபத்துக்கு அங்குரார்ப்பணம் செய்வதுபோல், மேற்குக் கோடியிலிருந்த ஸித்தி அஹமத் வெகு வேகமாக
அவர்கள் குடிசைகளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.
“அவன் ஏன் இங்கு வருகிறான்?” என்று பீம்ஸிங் வினவினார்.
“வந்ததும் புரிந்துகொள்வீர்” என்று வெறுப்புடன் பதில் கூறினான் ரகுதேவ்.

Previous articleJala Mohini Ch16 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch18 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here