Home Historical Novel Jala Mohini Ch18 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch18 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

72
0
Jala Mohini Ch18 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch18 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch18 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 18. அன்றிரவு

Jala Mohini Ch18 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

தமானா நதிக்கரையின் வெளேரென்ற மணற் பரப்பிலே, கொள்ளைக்காரர்களால் கட்டப்பட்ட குடிசைக் கெதிரிலே நின்றிருந்த பீம்ஸிங் அதிர்ஷ்டத்தை எண்ணிச் சபித்தார். தம்மைப் போன்ற பெரிய மேதைக்கு உபயோகப்படாத அந்த
அதிர்ஷ்டம் உலகத்தில் எதற்காக உலாவவேண்டும் என்பது அவருக்குப் புரியவில்லை. மனித வாழ்க்கையில் அனாவசியமாகக் குறுக்கிடும் அந்த அதிர்ஷ்டத்தை ஆண்டவன் உண்டு பண்ணியதும் சரியான செய்கைதானா என்பதில் கூட
அவருக்குப் பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. எத்தனையோ திறமையுடன் தாம் ஆராய்ந்து முன் யோசனையுடன் செய்த ஏற்பாடுகளையெல்லாம் தவிடு பொடியாக்கும் அதிர்ஷ்டம் எத்தனை கொடியது, அது மனித வர்க்கத்தில்
யோக்கியர்களாயிருப்பவர்களுக்கு எவ்வளவு தீமையை விளைவிக்கிறது என்று எண்ணிப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். யோக்கியர்களுக்குத் தீமை செய்வதோடு நில்லாமல் அயோக்கியர்களுக்கு அனுகூலத்தையும் அளிக்கிறதே
என்பதை நினைத்த பீம்ஸிங், தனி மனிதன் திறமைக்கு இடமில்லாமல் குருட்டு அதிர்ஷ்டத்துக்கே இடமுள்ள இந்த உலகம் இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான் என்று அதிர்ஷ்டத்தோடு உலகத்தையும் சேர்த்துச் சபித்துத்
தீர்த்துக் கட்டினார். அதிர்ஷ்டம் ஒன்றுமட்டும் குறுக்கிடாமலிருந்தால் தளபதியான தம்மை ஒதுக்கிக் கொள்ளைக் காரனான ரகுதேவிடம் பத்மினி பிரியம் வைப்பாளா என்று தமக்குள்ளேயே கேட்டுக்கொண்டதோடு நில்லாமல், “நாம்
அதிர்ஷ்டக் கட்டையாயில்லா விட்டால் இந்தக் கொள்ளைக்காரன் கையில் நாம் சிக்கியிருப்போமா?” என்று ஏங்கினார். ஜலமோகினியில் ஏறிய நாள் முதலாய் பத்மினிக்குத் தம்மிடமிருந்த பிடிப்பு சிறுகச் சிறுக விட்டுப் போவதையும்,
ஸித்தி அஹமத்தால் எந்த விநாடியிலும் ஏற்படக்கூடிய ஆபத்தும், அந்த ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற ரகுதேவ் ஒருவனாலேயே முடியும் என்ற நினைப்பும் பத்மினிக்கு ரகுதேவிடம் மதிப்பையும், மதிப்பிலிருந்து அன்பையும்
ஏற்படுத்திவிட்டதையும், அந்த அன்பு நாளுக்கு நாள் முற்றுவதையும் கண்ட பீம்ஸிங், ‘இதெல்லாம் அந்த அதிர்ஷ்டம் விளைவித்த அநியாயந்தானே’ என்று நினைத்துத் துக்கித்துத் துக்கத்தை ஆற்றிக்கொள்ள இயலாதவராய்த்
தத்தளித்தார். எத்தனை தத்தளித்தும் துரதிர்ஷ்டத்தின் இரும்புப் பிடி மட்டும் பீம்ஸிங்கை விடுவதாயில்லை. கரையில் இறங்கிய பிறகும், அது தனது பிடியை நாளுக்கு நாள் இறுக்கி மனோவேதனையை அதிகப்படுத்தியதே தவிர சிறிதும்
குறைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அது ஒவ்வொரு ரூபமாக எடுத்துச் சொல்ல வொண்ணாத் துன்பத்த அவருக்கு விளைவித்து வந்தது. அன்று காலை அது ஸித்தி அஹமத்தின் ரூபத்தில் வெகு வேகமாக அவரை நோக்கி வந்து
கொண்டிருந்தது.
அப்பொழுது அதிகாலையாயிருந்தாலும் வெயிற் காலத்தின் விளைவாக சூரிய வெப்பம் ஆரம்பத்திலேயே கடுமையாயிருந்தது. எதிரே சமுத்திரத்துடன் கலக்கப் பாயும் தமானாவின் தூயநீரும், அதைக் கலக்கவிடாமல் அடிப்பது போல்
பாசாங்கு செய்து தன்னை அணுக வரும் குழந்தையைச் செல்லமாகக் கன்னத்தில் தட்டும் தாயைப் போல் எதிரலைகளைக் கிளப்பி விட்டுத் தமானா நீருடன், மோதிக் கொண்டிருந்த பெரிய கடற்பரப்பின் அகண்டமான ஜலமும்கூட
கதிரவனின் கடுமையைச் சற்றும் குக்கச் சக்தியற்றனவாய்க் கிடந்தன. அந்த உஷ்ணத்தைத் தாங்க மாட்டாமல்தானோ என்னமோ கரையிலிருந்த வெள்ளை நாரைகள் சில தங்கள் அகல இறகுகளைத் திடீரென விரித்துக் கொண்டு
ஜிவ்வெனப் பறந்து தமானாவின் தண்ணீர் மட்டத்தில் உட்கார்ந்து அந்தச் சின்னஞ்சிறு அலைகளில் ஊஞ்சலாடின. மஞ்சள் மூக்குகளுடனும், பழுப்பு நிறச் சிறகுகளுடனும் கூடிய மைனாக்கள் கூட பறந்து செல்லாமல் மரங்கள் இருக்கு
மிடமாகப் பார்த்து நிழலோரத்தில் குறுநடை போட்டு அவ்வப்பொழுது கரையிலிருந்த விருந்தினர்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. மனோரம்மியமான இயற்கையின் அந்த இந்திர ஜாலங்களையெல்லாம் கண்ட பத்மினி மெய் மறந்து
நின்றாள். ஜலத்தில் தாவித் தாவி மீன் பிடிக்கும் நாரைகளையும் மரங்களோரத்தில் தன்னைப் பார்த்து விழித்த மைனாக்களையும் இன்னும் பலவித பட்சி ஜாலங்களையும் பார்த்த பத்மினி, எப்பேர்ப்பட்ட இந்திர லோகத்துக்கு
வந்திருக்கிறோம் என்று நினைத்து, எதிர் நோக்கிக் கொண்டிருக்கிற ஆபத்தைக்கூட லட்சியம் செய்யாமல் சந்தோஷத்தால் பூரித்துப் போனாள்.
அவள் கண்கள் ஓடிய இடங்களையும், பார்த்த பட்சி ஜாலங்களால் அவள் உள்ளத்தில் ஏற்பட்ட உவகையையும் முகபாவத்திலிருந்து தெரிந்துகொண்ட ரகுதேவ், “மைனாக்கள் உன்னைத்தான் பார்க்கின்றன பத்மினி” என்றான்.
இயற்கையிலேயே இணைந்து நின்ற பத்மினியின் உள்ளத்தில் அப்பொழுது பெண்மையின் இன்ப உணர்ச்சிகள் ஓங்கி நின்றமையால் புன்சிரிப்பு ஒன்றைக் கிளப்பி விட்டுச் சொன்னான், “வீணாகப் பரிகாசம் செய்யாதீர்கள்” என்று.
“பரிகாசமில்லை பத்மினி! தங்கள் இனத்தைப் போல் அழகிய கண்களுடன் மனித வர்க்கத்திலும் யாரோ இருக்கிறார்களே என்று அதோ தலையை இப்படியும் அப்படியும் திருப்பித் திருப்பி அந்த மைனா உன்னைத்தான் பார்க்கிறது”
என்று வேடிக்கையாகச் சொன்னான் ரகுதேவ்.
அவன் அப்படிச் சொன்னதில் பத்மினிக்கு வெட்கம் ஒருபுறமும், பெருமை ஒருபுறமும் தாங்க முடியவில்லை. மனித வர்க்கமே ஸ்தோத்திரத்தில் பிரியமுள்ளது. அந்த வர்க்கத்தில் பெண்கள் ஸ்தோத்திரத்தில் அசாத்தியப் பிரிய
முள்ளவர்கள். அதுவும் ஸ்தோத்திரம் அவர்கள் அழகைப் பற்றியதாயிருந்துவிட்டால் கேட்க வேண்டியதில்லை. எந்தப் பெண்ணும் புருஷனைப் புகழ்ந்ததாக நாம் கேள்விப்படுவதுமில்லை; படிப்பதுமில்லை. “புருஷசிங்கமே! உன்
கைகள் எவ்வளவு ஜோராயிருக்கின்றன. உன் முகலா வண்யந்தான் எத்தனை கவர்ச்சி!” என்று எந்தப் பெண்ணும் புகழ்ந்ததாக மனித சரித்திரத்தில் கிடையாது. அப்படி ஏதாவது புருஷனைப் பற்றிப் பெண்கள் நினைத்தாலும்
வாய்விட்டுச் சொல்லும் சுபாவம் அவர்களுக்குக் கிடையாது. ஸ்தோத்திரமெல்லாம் ஒரு கைப்பாடாகத்தான் நடக்கிறது. பெண்ணைப் பார்த்து ஆண், உன் குழல் இப்படி, விழி இப்படி, நடை இப்படி, இடை இப்படி என்று வர்ணிப்பதும்,
அந்த வர்ணனையை விரும்பாதவர்கள் போல், “உங்களுக்கு எப்பொழுதும் இந்தப் பேச்சுதான்” என்று பெண்கள் பாசாங்காக அலுத்துக் கொள்வதும், ஆண் பிள்ளையும் விடாமல் மேலும் மேலும் தான் நம்புவது நம்பாதது
எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லித் தன்னைப் பைத்தியமாக அடித்துக் கொள்வதும் ஈசுவர மாயையின் ஒரு பகுதி. அந்த மாயையில் ஈடுபட்டிருந்த ரகுதேவும் பத்மினியும் ஏதேதோ பேசிச் சிரித்தார்கள்.
“மைனாக்களின் சுபாவம்கூட உங்களுக்குத் தெரியும் போலிருக்கிறது” என்று பத்மினி கேட்டாள்.
“மைனாக்கள் என்ன, மற்ற பட்சிகளின் சுபாவம் கூடத் தெரியும்” என்றான் ரகுதேவ்.
“பட்சி சாஸ்திரம் படித்திருக்கிறீர்களா?”
“பட்சி சாஸ்திரம் படிக்கவில்லை. மனித சாஸ்திரம் படித்திருக்கிறேன்.”
“மனித சாஸ்திரம் படித்தால் பட்சிகளின் குணம் தெரியுமா?”
“நன்றாகத் தெரியும். மனிதர்களில் பட்சிகளைப் பார்க்கலாம். பட்சிகளில் மனிதர்களைப் பார்க்கலாம். ஈசுவர சிருஷ்டியில் உடல் வேற்றுமைதானே தவிர குணம் வேற்றுமை கிடையாது.”
“வேதாந்தியாகி விட்டீர்கள்.”
“வேதாந்தமும் வாழ்க்கையும் வேறல்ல, நன்றாகச் சிந்தித்துப் பார். அழகான பெண்களின் நடையில் மயிலின் சாயல் படர்ந்து கிடக்கிறது; குரலில் குயிலின் ஓசையைக் கேட்கிறோம்; விழிகளில் மானின் மிரட்சியைக் காண்கிறோம். பெண்
குலத்தின் ஒவ்வொரு சாயலிலும் ஒவ்வொரு பட்சியையும் மிருகத்தையும் பார்க்கிறோம்” என்று விளக்கினான் ரகுதேவ்.
அவன் சொன்னதைக் கேட்டு மிதமிஞ்சிய பூரிப்பால் கலீரென நகைத்த பத்மினி, “நல்ல வேதாந்தம் படித்திருக்கிறீர்கள்” என்று சொல்லி வெட்கமாக அவனை ஒரு பார்வையும் பார்த்தாள். அவர்கள் இன்பச் சம்பாஷணை யில்
குறுக்கிடாவிட்டாலும் உள்ளம் கொதித்து நின்ற பீம்ஸிங்கின் மனத்தைக் கோடாலி கொண்டு பிளக்க ஸித்தி அஹமத்தும் அவர்கள் நின்றிருந்த இடத்துக்கு வெகு வேகமாக வந்து சேர்ந்தான். அவன் கிட்டே நெருங்கும் போது பட்சிகளைப்
பற்றிப் பேசிக் கொண்டிருந்த ரகுதேவ், அவன் அணுகியதும் அவனைப் பார்த்தாலும் பார்க்காதது போலவே பாசாங்கு செய்து, “பத்மினி! பட்சி ஜாலங்களைக் கண்டு ஆசைப்பட்டுத் தனியாகக் காட்டுக்குள் போய் விடாதே. இங்கு துஷ்ட
மிருகங்களும் இருக்கின்றன” என்றான்.
ரகுதேவின் கடைசி வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே வந்த ஸித்தி அஹமத், “துஷ்ட மிருகங்களா! எங்கேயிருக்கின்றன?” என்று ரகுதேவைப் பார்த்துக் கேட்டான்.
“இங்கேதான்” என்று ரகுதேவ் பதில் சொன்னான்.
“இங்கேதான் என்றால்?”
“இந்தக் காட்டிற்குள்.”
“காட்டிற்குள் துஷ்டமிருகங்களிருந்தாலென்ன? இங்கு நாமில்லையா?”
“இருக்கிறோம்” என்று ரகுதேவ் சற்றுப் புன்முறுவலும் செய்தான். துஷ்டமிருகம் என ஸித்தி அஹமத்தைத்தான் ரகுதேவ் குறிப்பிடுகிறானென்பதை அறிந்த பத்மினிகூட புன்முறுவல் செய்தாள். முதல் கேள்விக்குப் பின்பே ரகுதேவை
விட்டுப் பத்மினியை விழுங்கி விடுவது போல் நின்ற ஸித்தி அஹமத் அவள் புன்முறுவலைக் கண்டதும் தலை கால் தெரியாமல் மதிமயங்கி அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான். இதைக் கவனித்த பீம்ஸிங்கின் கரம் சுபாவமாக
வாளிருக்கும் இடம் சென்று அங்கு வாளில்லாது போகவே இடுப்பைத் தடவிக்கொண்டு நின்றது. பீம்ஸிங்குக்கு இருந்த ஆத்திரத்தைவிடப் பன் மடங்கு அதிக ஆத்திரம் ரகுதேவுக்கிருந்தாலும் அவன் அதை வெளிக்குக் காட்டிக்
கொள்ளாமலே, “எங்கு போகிறாய் ஸித்தி அஹமத்?” என்று வினவினான்.
“குடிசைக்குள்ளே” என்றான் ஸித்தி அஹமத்.
“எதற்காக?”
“உன் மனைவிக்கு வேண்டிய வசதிகள் குடிசையில் இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க.”
“என் மனைவிக்கு வேண்டிய வசதிகளை நானே கவனித்துக் கொள்வேன்!”
“நான்தானே உங்களைக் கரைக்கு வரச் சொன்னேன். ஆகவே உங்கள் சௌகரியத்தைக் கவனிப்பது என் கடமையல்லவா?” என்று சொல்லிவிட்டுப் பயங்கரமாகச் சிரித்துக் கொண்டே பத்மினி விலகி நிற்கவே குடிசைக்குள்
நுழைந்துவிட்டான். குடிசையில் நுழைந்து அங்குள்ள ஏற்பாடுகளைக் கவனித்துவிட்டு வெளியே வந்த ஸித்தி அஹமத்தின் முகத்தில் ஆச்சரியம் பெரிதும் தாண்டவ மாடியதோடு அதில் ஓரளவு விஷமமும் கலந்திருந்தது.
“மனைவிக்கு வேண்டிய வசதிகளைச் சரியாகக் கவனித்துக் கொள்கிறாய் ரகுதேவ்” என்று சொல்லி மீண்டும் இடிஇடி என்று சிரித்தான்.
“மனைவியின் சௌகரியத்தைக் கவனிப்பது கணவன் கடமையல்லவா?” என்றான் ரகுதேவ் சாதாரணமாக.
“வாஸ்தவம். அந்தக் கடமையை நிறைவேற்ற நானும் என்னாலான உதவியை உனக்குச் செய்கிறேன்” என்றான் ஸித்தி அஹமத், மீசைக் கோடியைத் தடவி விட்டுக் கொண்டே.
அயோக்கியத்தனமான அந்தப் பேச்சினால் ரகுதேவின் உள்ளம் மிகக் கொதித்தெழுந்தாலும் தன்னை அடக்கிக் கொண்டு பதிலேதும் சொல்லாமல் மௌனமாக நின்றான். “ஏன் பதில் ஏதும் சொல்லாமல் நிற்கிறாய்?” என்று
வினவினான் ஸித்தி அஹமத்.
“நீ தனியாக வந்திருப்பதால்?”-கடுமையாக எழுந்தது ரகுதேவின் பதில்.
“தனியாக வந்தாலென்ன?”
“உன் அயோக்கியத்தனத்துக்கு நான் உனக்குச் சொல்லக்கூடிய பதிலை வாளைக் கொண்டுதான் சொல்ல வேண்டும்.”
“என்னை மிரட்டுகிறாயா?”
“மிரட்டும் சுபாவம் எனக்குக் கிடையாதென்பது உனக்கே தெரியும். இன்று நீ பேசியதை வேறு யாராவது பேசியிருந்தால் அவனை இந்த க்ஷணம் இங்கேயே கொன்று போட்டிருப்பேன்.”
“என்னை ஏன் கொல்லவில்லை?”
“நாம் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தால். பொக்கிஷக் கப்பல்கள் கைக்குக் கிடைக்கும் வரை நமது ஒப்பந்தம் உடையாதிருக்க வேண்டுமென்பது என் ஆசை. இதில் நம்மிருவர் நலன் மட்டுமன்று, மற்ற மாலுமிகளின் நலமும்
சிக்கியிருக்கிறதல்லவா? அதனால்தான் சும்மா இருக்கிறேன்.”
ஜலமோகினி தன்னிடம் பிடிபட்ட நாளாக ரகுதேவ் தனக்கும் தனது மாலுமிகளுக்குமிடையே பிளவு ஏற்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகிறான் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த ஸித்தி அஹமத், அவன் கடைசியாகச் சொன்ன
பதிலிலும் அதே தந்திரத்தைக் கையாளுகிறா னென்பதைப் புரிந்து கொண்டதும் சற்று எச்சரிக்கையடைந்தான். பத்மினிக்கு ஆசைப்பட்டுத் தான் பொக்கிஷக் கப்பல்களை இழக்கும் பக்ஷத்தில் தன் மாலுமிகளே தன்னைக் கொன்று
போட்டு விடுவார்கள் என்பதைச் சந்தேகமற உணர்ந்திருந்த ஸித்தி அஹமத், தான் அத்தனை நேரம் பேசியதை ரகுதேவ் தவறாக அர்த்தம் செய்து கொண்டதுபோல் பாசாங்கு காட்டி, “ரகுதேவ்! நீ ஆனாலும் பொறாமைக்காரன். உன்
மனைவிக்கு உடல் நிலை சரியாக இல்லையென்று சொன்னாயே, அதை முன்னிட்டுக் கட்டில், சிறு மஞ்சங்கள் முதலிய சாமான்களைக் கொடுக்கலாமே என்பதற்காக நான் சொன்னதை எத்தனைப் பிரமாதப்படுத்தி விட்டாய்” என்று.
சிரித்துக் கொண்டு சொல்லிவிட்டு வேகமாக வந்த வழியே சென்றான்.
அவன் போனதும் பீம்ஸிங் ரகுதேவை அணுகி, “அவனை நீங்கள் சும்மாவிட்டது பிசகு” என்று ஆரம்பித்தார். ரகுதேவ் அவரை மிக இகழ்ச்சியாகப் பார்த்து, “சும்மா விடாமல் என்ன செய்ய முடியும்?” என்று வினவினான்.
“இங்கு நாம் மூவர் இருக்கிறோம். அவன் தன்னந்தனியே வந்திருந்தான்.” என்று அர்த்த புஷ்டியுடன் இழுத்தார்!
அவர் எண்ணத்தைப் புரிந்துகொண்ட ரகுதேவ், “தனியாகத்தான் வந்தான். அவனைக் கொன்றும் இருக்க முடியும். அதில் இரண்டு ஆக்ஷேபணை.”
“என்ன?”
“முதலில் தனியாக வந்தவனை மூன்று பேராகச் சேர்ந்து கொண்டு கொல்லும் வீரம் ராஜபுத்ரனாகிய உமக்கிருக்கலாம். மகாராஷ்டிரனாகிய எனக்குக் கிடையாது. இரண்டாவதாக, இங்கு நாம் மூவர்; அவன் ஒருவன்தான். ஆனால்
பிறகு…”
“பிறகு?”
“மாலுமிகள் பலர். நாம் மூவர்.”
கோபத்தில் நிதானத்தை இழந்துவிட்ட பீம்ஸிங்கின் கட்டை மூளைக்கு அப்பொழுதுதான் கரையில் மாலுமிகளும் இருக்கிறார்களென்ற விஷயம் நினைவுக்கு வந்தது. அந்த நினைப்பு வரவே ரகுதேவுக்கு என்ன பதில்
சொல்வதென்று அறியாமல் திண்டாடிய பீம்ஸிங்கைப் பார்த்துச் சொன்னான் ரகுதேவ்: “பீம்ஸிங்! உம்மைக் கடைசி முறையாக எச்சரிக்கிறேன். நாமிருக்கும் ஆபத்தான நிலைமையில் உமது அசட்டுத்தனத்தைக் காட்டவேண்டாம். ஆத்திரம்,
சந்தேகம் இரண்டையும் நாம் உதறி ஒத்துழைத்தால்தான் இந்த நிலையிலிருந்து தப்ப முடியும்” என்று.
பீம்ஸிங் பதிலேதும் சொல்லாமல் தமது குடிசையை நோக்கிச் சென்றார். ரகுதேவும் ரஜினிகாந்தை அழைத்துக் கொண்டு வேறு அலுவல்களைப் பார்க்கக் கிளம்பினான்.
“பத்மினி! ஸித்தி அஹமத் உன்னை அடிக்கடி பார்க்க வருவான். அதற்காகச் சிறிதும் பயப்படாதே. நான் எந்த வேலையிலிருந்தாலும் ஒரு கண் இந்தக் குடிசையின்மீது தான் இருக்கும். நான் இல்லாத சமயத்தில் ஏற்படக்கூடிய ஆபத்து
ஒன்றுதான். பீம்ஸிங்கின் உளறல். ஸித்தி அஹமத் வரும்போது பீம்ஸிங்கைக் கூடியவரையில் பேசாமல் அடக்கி வை” என்று சொல்லிவிட்டு, ரஜினிகாந்த் பின் தொடர மாலுமிகள் வேலை செய்து கொண்டிருந்த இடத்தை நோக்கி
விரைந்து சென்றான். அவனுக்கு முன்பாகவே மாலுமிகளிருந்த இடத்தை அடைந்துவிட்ட ஸித்தி அஹமத், அவர்களில் இரண்டு பேர்களைக் கூப்பிட்டுத்தன் கூடாரத்திலிருந்த மஞ்சங்களில் சிலவற்றையும் பெரிய கட்டிலையும்
அதிலிருந்த மெத்தையையும் பத்மினி கூடாரத்துக்குத் தூக்கிக்கொண்டு போகும்படி உத்தரவிட்டான். பத்மினிக்கு வரிசைகள் இத்துடன் நிற்கவில்லை. தனக்காகப் பிரத்யேகமாக வைக்கப்பட்டிருந்த உணவுப் பதார்த்தங்களையும்,
காட்டிலிருந்து மாலுமிகள் கொண்டு வந்திருந்த பழ வகையறாக்களையும் ஸித்தி அஹமத் அனுப்பி வைத்ததோடு, தானும் இரண்டு முறைகள் வந்து அவள் சௌகரியத்தைப் பற்றி விசாரித்துப் போனான். ஒவ்வொரு முறையும்
அவன் வரும்போது பார்த்த பார்வையினால் வெட்கப்பட்டுக் குன்றிப் போனாலும், ஏதும் செய்யமாட்டாத பத்மினி, தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அவஸ்தைப்பட்டாள். தன் அவஸ்தையை வெளிக்காட்டினால், ஏற்கனவே
தன்னால் பல துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கும் ரகுதேவ் மனக் கஷ்டப்படப் போகிறானே என்று தன் கஷ்டத்தையெல்லாம் உள்ளடக்கி இவனுடன் சிரித்துப் பேசி மகிழ்வுடன் பொழுது போக்கினாள். பத்மினியின் சிரிப்பு வெறும்
வெளிவேஷமென்பதையும் ஸித்தி அஹமத்தின் வரத்துப் போக்கு அவள் உள்ளத்தைப் புண்ணாக அடித்துக் கொண்டிருந்ததையும் அறியாத பீம்ஸிங் அவள் சிரிப்பைப் பெரிதும் வெறுத்தார். ‘இவ்வளவு அயோக்கியர்களால் சூழப்பட்ட
சமயத்தில் சிரிப்பையும் கேலியையும் விடா திருப்பது வெட்கங்கெட்ட பெண் ஜன்மத்துக்குத்தான் முடியும்’ என்று மிகுந்த கோபமடைந்தார். அந்தக் கோபத்தை அடிக்கடி வெளிக்காட்டவும் அவர் தயங்கவில்லை.
ஒரு பக்கத்தில் ஸித்தி அஹமத்தால் ஏற்பட்ட பிடுங்கலும், இன்னொரு பக்கத்தில் பீம்ஸிங்கின் சந்தேகத்தால் ஏற்பட்ட ஹிம்சையும் பொறுக்க முடியாத மனோவேதனையைப் பத்மினிக்கு அளித்தாலும், ரகுதேவ் நடந்து கொண்ட
மாதிரியால் அவள் சகலத்தையும் சகித்துக் கொண்டாள். அவள் குடிசைக்கு ஸித்தி அஹமத் அன்று மூன்று நான்கு தடவைகளுக்கு மேல் வந்திருப்பான். அந்த மூன்று நான்கு தடவைகளும் ரகுதேவ் எங்கிருந்தோ திடீரெனக்
குடிசைக்கருகில் வந்து முளைத்துக் கொண்டிருந்ததையோ அப்படி ரகுதேவ் வராத சமயங்களில் ரஜினிகாந்த் வாசற்படியை மறைத்து நின்று, “எஜமான் குடிசையில் இல்லை” என்று மரியாதை தெரிவித்து, அவனைத் திருப்பி அனுப்பிக்
கொண்டிருந்ததையோ பத்மினி கவனிக்கத் தவறவில்லை. தன்னை மிக பந்தோபஸ்தாக ரகுதேவ் கவனித்து வருவதை மாத்திரம் தான் பத்மினி கவனித்தாளே தவிர, பீம்ஸிங்கும் தன் குடிசை மேல் வைத்த கண்ணை வாங்காமலிருப்பதை
அவள் அறியவில்லை. கரையில் அவர்கள் வந்த முதல்நாள் பொழுது இப்படிக் கழிந்து இரவும் சூழ்ந்துகொண்டது. பீம்ஸிங், ரகுதேவ், பத்மினி மூவரும் இராப் போஜனத்தை முடித்துக் கொண்டதும், பீம்ஸிங் ரகுதேவைத் தனியாகத்
தமது குடிசைக்கு அழைத்துக் கொண்டுபோய், “இரவு எங்கு படுப்பதாக உத்தேசம்?” என்று வினவினார்.
“பத்மினியின் குடிசையில்தான்.”
“நானும் வந்து கூடப் படுத்துக் கொள்ளட்டுமா?”
“வேண்டாம்!”
“ஏன் வேண்டாம்?”
“காரணமிருக்கிறது.”
“என்ன காரணம்?”
“உம்மிடம் சொல்லிப் பயனில்லை” என்று சொல்லி விட்டு, மாலுமிகள் இராச் சாப்பாட்டுக்குப் பிறகு பாடிக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்ற ரகுதேவ், அவர்களுடன் வெகு நேரம் பொழுது போக்கி விட்டுப்
படுக்கும் சமயத்துக்குத் திரும்பி வந்தான். மனத்திலிருந்த தாபத்தால் தூக்கம் பிடிக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த பீம்ஸிங், ரகுதேவ் திரும்பி வந்ததைக் கவனித்தார். அவன் வேகமாகப் பத்மினியின் குடிசையை நோக்கிச் சற்றுநேரம்
நின்றதையும், பிறகு கதவு திறக்கப்படுவதையும் கண்ட அவர் உள்ளம் வெடித்துவிடும் போலிருந்தது. அதுமட்டுமா? கதவு திறந்ததும் ரகுதேவ் உள்ளே சென்றான். அடுத்த விநாடி கதவு ஒருக்களிக்கவும் ஆரம்பித்தது.

Previous articleJala Mohini Ch17 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch19 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here