Home Historical Novel Jala Mohini Ch2 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch2 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

121
0
Jala Mohini Ch2 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch2 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch2 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 2. வந்தவன் யார்?

Jala Mohini Ch2 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

சந்தர்ப்பங்கள் சம்பிரதாயங்களை மாற்றுகின்றன. ராஜ புத்ர மங்கையான பத்மினி மட்டும் விங்குர்லாவில் வளராமல் சொந்தப் பிரதேசமான ராஜபுதனத்தில் வளர்ந்திருந்தால், அவள் பரபுருஷர்களை ஏறெடுத்தும் பார்க்க முடியாது.
பர்தாவுக்குப் பின்னாலேயே பதினேழு பருவங்களையும் தாண்டியிருப்பாள். கோஷா ஸ்திரீயாக முகமூடி யிட்டு உலகத்திலிருந்து ஒதுங்கித் தனித்து வாழவேண்டிய அவசியத்தில் சிக்கியிருப்பாள். ஆனால், குலசம்பிரதாயத்தைத்
தகப்பனுக்குக் கிடைத்த உத்தியோக சந்தர்ப்பம் வேரறுத்து விட்டது. கோஷா இல்லாத சுதந்திரமான சுதந்திரப் பறவையாயிருந்தாள் பத்மினி. தவிர ஒரே பெண் ணானதால் தகப்பன் கொடுத்த செல்லமும் அந்தச் சுதந்திரத்தைச் சற்று
அளவுக்கு மீறியே விஸ்தரித்திருந்தது. ஆகவே பத்மினி, வந்த வாலிபனை வரவேற்றதிலோ, தனக்குப் பக்கத்திலுள்ள ஸ்தானத்தில் உட்கார அனுமதித்த திலோ வியப்பு ஏதுமில்லை. யாருக்கும் வியப்பில்லாத அந்தச் சம்பவம் சுயநலத்தின்
காரணமாக பீம்ஸிங்குக்கு மட்டும் வேம்பாக இருந்தது. அப்படி மனத்துக்குப் பிடித்தமில்லாத சூழ்நிலையில் அவர் தத்தளித்த சமயத்தில்தான் கப்பல் தலைவன் வாலிபன் பெயரை உச்சரித்து அவருக்கு இணையற்ற திகிலையும் பத்மினிக்கு
எல்லையற்ற மகிழ்ச் சியையும் அளித்தான். தங்களுடன் பிரயாணம் செய்ய வந்தவன் ரகுதேவ் பஸல்கார் என்று கேள்விப்பட்டதும், பீம்ஸிங் பயமடைந்ததில் ஆச்சரியம் சிறிதும் இல்லை. அவருக்குப் பயமேற்பட்டதன் காரணங்களைப் புரிந்து
கொள்ள வேண்டுமானால், பதினெட்டாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரத நாட்டின் மேற்குக் கரையோரம் இருந்த நிலையை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
போர்ச்சுகீஸியரும், டச்சுக்காரரும், ஆங்கிலேயரும் வர முற்பட்டதால் பதினேழாவது நூற்றாண்டின் இடையிலேயே முக்கியத்துவம் பெற்றுவிட்ட அரபிக்கடல் பிராந்தியம் பதினெட்டாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிகப் பிரபல
மடைந்துவிட்டது. இந்த முக்கியத்துவத்தை முதன்முதலாக உணர்ந்த சத்ரபதி சிவாஜி தனது ராஜ்ய எல்லையில் பல துறைமுகங்களை அமைத்துக் கடற் படையொன்றையும் சிருஷ்டித்து அரேபியா, பாரசீகம் முதலிய நாடுகளுடன்
வியாபாரம் நடத்தினார். அந்த வியாபாரத்தில் தம்மைத் தடுக்க முயன்ற மொகலாய கப்பல்களைச் சூறையாடவும் தொடங்கினார். நிலத்தில் மட்டுமின்றி ஜலத்திலும் சக்தி பெற்று வரும் சிவாஜியை அடக்க மொகலாய சக்கரவர்த்தியான
அவுரங்கசீப் தாமும் ஒரு கடற்படையை நிறுவி அவற்றை நடத்தி சிவாஜியைச் சமாளிக்க ஜன்ஜீராத் தீவிலுள்ள ஸித்திகளை ஏவினார்.
ஸித்தி என்ற பதம் ஸையத் என்ற பதத்திலிருந்து மருவி வந்தது. ஸையத் என்ற பதத்திற்குப் பிரபு என்று அர்த்தம். மகாராஷ்டிரர்கள் ஸையத் என்ற வார்த்தையைச் சரியாக உச்சரிக்காமல் ஸித்தி என்று உச்சரித்ததால் அந்த கூட்டத்தாருக்கு
ஸித்திகள் என்ற பெயரே சரித்திரத்தில் உலாவலாயிற்று. இந்த ஸித்திகள் அபிசீனிய நாட்டைச் சேர்ந்தவர்கள். பம்பாய்க்குத் தெற்கே நாற்பது மைல் தூரத்திலிருக்கும் ஜன்ஜீரா என்ற தீவைத் தங்களுள் வசமாக்கிக் கொண்டு வெகுகாலம் வரை
அரபிக்கடலை ஆட்சி புரிந்து வந்தார்கள். நன்றாகக் கறுத்து உயர்ந்து பார்ப்பதற்கு மிகப் பயங்கரமாயிருந்த இந்த அபிஸீனியர்கள் மிகச்சிறந்த மாலுமிகள், கடற்போரில் இணையற்றவர்கள் என்று பெயர் வாங்கியவர்கள். கொலை,
கொள்ளை, பெண்களைக் கற்பழித்தல் முதலிய பணிகளில் கைதேர்ந்தவர்கள். இப்பேர்ப்பட்ட பயங்கர, ஜாதியாரிடம் தனது கடற்படையை ஒப்புவித்தார் காருண்ய சக்கரவர்த்தி அவுரங்கசீப். இவர்கள் பலத்தை சிவாஜி மகாராஜா பெரிதும்
ஒடுக்கினார். என்ன ஒடுக்கியும் இவர்களுக்குப் பம்பாயிலிருந்து பிரிட்டிஷ் காரர்கள் இடைவிடாது அளித்து வந்த ஒத்தாசையால் இவர்களை ஜன்ஜீரா தீவிலிருந்து விரட்ட சிவாஜியால் இறுதிவரை முடியவேயில்லை. ஆனால் இப்பேர்ப்பட்ட
ஸித்திகளையும் ஒடுக்க ஒரு மகாராஷ்டிர வீரன் பிறந்தான். அவன் பெயர் கனோஜி ஆங்கரே. பம்பாயிலிருந்து பதினாறு மைல் தூரத்திலிருந்த காண்டேரித் தீவை தன் தளமாக அமைத்துக் கொண்டு கனோஜி ஆங்கரே பதினேழாவது
நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள் அரபிக் கடலில் இஷ்டப்படி திரிந்த மொகலாய கப்பல்களை மட்டுமின்றி பிரிட்டீஷ், போர்ச்சுகீஸ், டச்சு கப்பல்களையும் போரிட்டு முறியடித்துப் பெரிய கொள்ளைக்காரனென்று பெயர்
வாங்கியிருந்தான். சிவாஜியின் பேரனும் மகாராஷ் டிர மன்னனுமான ஷாஹுவுக்குக் கூடக் கீழ்ப்படியாமல் சுதந்திர புருஷனாகக் கடலில் திரிந்து கொண்டிருந்தான் கனோஜி ஆங்கரே. அத்தகைய ஆங்கரேயின் உபதளபதிதான்
ரகுதேவ்பஸல்கார். ரகுதேவ் பஸல்காரும் தனது தலைவனுக்குக் கிடைத்த பிராபல்யத்தில் பாதிக்கு மேலாகவே பெற்றிருந்தான். அவன் கடற்போர் திறமையைப் பற்றி எதிரிகளான ஸித்திகள் கூடப் புகழ்ந்தார்கள்.
இத்தகைய ஒரு கொள்ளைக்காரனிடம் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று வெலவெலத்தார் பீம்ஸிங். கடற்போரில் பிரக்யாதி பெற்ற ஒரு வீரனோடு பிரயாணம் செய்கிறோமே என்று ஆனந்தமடைந்தாள் பத்மினி. இந்தக்
கொள்ளைக்காரனுக்குச் சாதாரண வியாபாரம் நடத்தும் இந்தக் கப்பல் தலைவன் எப்படி நண்பனானான் என்று பீம்ஸிங் யோசித்தார்.
பின்னால் நிகழ்ந்த சம்பாஷணையால் கப்பல் தலைவன் அவர் சந்தேகத்தை அறவே நீக்கிவிட்டான். ரகுதேவின் தகப்பனார் தனக்கு நெருங்கிய நண்பரென்றும், ஆகையால் தான் கப்பலை அத்தனை நேரம் தாமதித்து ரகுதேவை அழைத்துச்
செல்ல ஒப்புக் கொண்டதாகவும் தலைவன் விளக்கினான். இதற்குப் பிறகு சம்பாஷணை கடற்போரைப் பற்றியும், ரகுதேவைப் பற்றியுமே திரும்பியது. அருகே தான் காட்டிய ஆசனத்தில் உட்கார்ந்த வாலிபனுக்காகக் கடைக்கண்களை
ஓட்டிய வண்ணம் பத்மினி பல கேள்விகளைக் கேட்டாள். அவள் கேட்ட கேள்விகளும், அவன் சொன்ன பதில்களும், இருவரும் சேர்ந்து அடிக்கடி சிரித்த சிரிப்பும் பீம்ஸிங்குக்குப் பெரிய வேதனையைக் கொடுக்கவே அவர் சம்பாஷணையில்
அடியோடு கலந்து கொள்ளாமல் உள்ளூறக் குமுறிக்கொண்டு மௌனம் சாதித்தார்.
“இவ்வளவு பெரிய மனிதருடன் பிரயாணம் செய்யும் பாக்கியம் கிடைக்குமென்று நான் புறப்படும்பொழுது நினைக்கவேயில்லை” என்றாள் பத்மினி, வாலிபனை நோக்கி.
“அப்படி நான் ஒன்றும் பெரிய மனிதனல்ல. என்னை விடப் பெரிய மனிதர் உங்களுக்குத் துணையாக வருகிறாரே” என்று பீம்ஸிங்குக்காகக் கண்களை ஓட்டினான் ரகுதேவ்.
பீம்ஸிங்கின் ஆகிருதியையே ரகுதேவ் குறிக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட பத்மினி நகைத்தாள். தம்மைச் சுட்டிக்காட்ட அந்தக் கொள்ளைக்காரனுக்கு என்ன உரிமை இருக்கிறதென்று தம்மைத்தாமே பீம்ஸிங் கேட்டுக்
கொண்டதன்றி அதைப்பற்றிப் பத்மினி நகைப்பதற்கு அதில் என்ன பிரமாத ஹாஸ்யம் இருக்கிறதென்றும் உள்ளூற எரிந்து விழுந்துகொண்டார். அவர் உள்ளக் குமுறல்களை அவர் முகபாவத்திலிருந்து உணர்ந்துகொண்ட பத்மினி
பேச்சை வேறு மார்க்கத்தில் திருப்பி, “உங்கள் பெயரைக் கேட்டதும் ஒரு கணம் திகைத்தே போனேன்” என்றாள்.
“ஏன்? பெயர் அவ்வளவு பயங்கரமானதா?” என்றான் ரகுதேவ் புன்முறுவலுடன்.
“பெயரல்ல பெயருடன் இணைந்த செயல்கள்” “என்ன செயல்கள்?”
“நீங்கள் பெரிய கொள்ளைக்காரனென்று ஜனங்கள் பேசிக் கொள்கிறார்களே?”
இதைக் கேட்டதும் பீம்ஸிங்கின் மனம் சற்று ஆறுதல் அடைந்தது. பத்மினி மெள்ள இந்த அயோக்கியனின் உண்மை சொரூபத்தை உணர முற்பட்டுவிட்டாள் என்று உள்ளூற மகிழ்ச்சியடைந்தார். அடுத்தபடி தொடர்ந்த சம்பாஷணை
அவர் மகிழ்ச்சியை அடியோடு போக்கடித்து விட்டது.
“கொள்ளையைத் தடுக்கக் கொள்ளையடிக்கிறேன்” என்றான் ரகுதேவ் பத்மினியை நோக்கி.
“திருட்டுக்கும் காரணமுண்டா?” என்றார் பீம்ஸிங் இடையில் புகுந்து.
“காரணமில்லாமல் உலகத்தில் காரியமேயில்லை. இதன் விளைவாகத்தான் ஹிந்து தத்துவங்களில் எது காரணம், எது காரியம் என்று ஆராய்ந்திருக்கிறார்கள். காரண காரியத்தைப் பற்றி ஸம்ஸ்கிருத இலக்கணமே இருக்கிறதே” என்று
ரகுதேவ் கூறினான்.
கொள்ளைக்காரன் வேதாந்தம் பேசுவதை பீம்ஸிங் ரசிக்கவில்லை. பத்மினிகூட அதை எண்ணிப் புன்முறுவல் செய்தாள். அவள் புன்முறுவலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ரகுதேவ், “நான் சொல்வது வேதாந்தமல்ல!
அனுபவத்தில் நான் கண்ட உண்மை. சரியாகப் பார்க்கப் போனால் அனுபவ உண்மைகளைத்தான் வேதாந்தம் கூறுகின்றது. உதாரணமாகப் பாருங்கள், வாழ்க்கையில் நான் யாரையும் கொள்ளையடிக்க விரும்பவில்லை… ஆனால்
கொள்ளைக்காரனாக மாறியிருக்கிறேன். ஏன்? இந்தக் காரியத்தில் நான் பிரவேசிக்கக் காரணம் என்ன?” என்று கேட்டான்.
“அதைத்தான் நானும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்றாள் பத்மினி.
“சொல்கிறேன் கேளுங்கள். ஜன்ஜீராத் தீவிலுள்ள ஸித்திகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா?”
ஸித்தி என்ற பெயரைக் கேட்டதுமே பத்மினி நடுங்கினாள். “அவர்களைப் பற்றிக் கேள்விப்படாமல் யார் இருக்க முடியும்?” என்று பதில் சொன்னாள்.
“அந்த ஸித்திகள் அரபிக் கடலிலும் சரி, கடலை அடுத்த மஹாராஷ்டிரப் பிராந்தியத்திலும் சரி, செய்து வரும் அக்கிரமம் சொல்லி முடியாது. அவர்கள் கொள்ளையடிக்காத கப்பல்களில்லை; கொளுத்தாத நகரங்களில்லை. தவிர…”
“தவிர… என்ன?”
“உங்கள் முன்பாகச் சொல்ல இஷ்டமில்லை. எத்தனை ஆயிரம் பெண்களின் கற்பு அவர்களால் அழிந்திருக்கிறது?”
பத்மினி இதற்கு ஏதும் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தாள். ரகுதேவ் மேலே பேசினான். “இந்தக் கொள்ளைக்காரர்களை மஹாராஷ்டிர மன்னர்கள் நிலத்தில் சமாளித்துவிட்டார்கள். ஜலத்தில் சமாளிக்க முடியவில்லை. அரபிக் கடலில்
அவர்கள் அடிக்கும் கொள்ளையையும் தடுக்க வேண்டியதாயிற்று. அதற்கு ஷாஹு மன்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. மன்னர் காப்பாற்ற முயலாதபோது மக்களே தங்களைக் காத்துக்கொள்ள முற்படுகிறார்கள். அவர்கள்
கொள்ளையைத் தடுக்க என்னைப் போன்றவர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் கொலையைத் தடுக்க நாங்களும் கொலை செய்ய வேண்டியதாயிற்று. இதிலிருந்து தெரிகிறதா காரியத்திற்கும் காரணத்திற்குமுள்ள
தொடர்பு” என்றான். இதோடு நிறுத்தாமல், “ஆனால், ஸித்திகளின் மூன்றாவது கைங்கரியத்தில் நாங்கள் இறங்கியதேயில்லை” என்று சொல்லி விட்டுச் சிரித்தான் ரகுதேவ்.
பெண்களை ஸித்திகள் கற்பழிப்பதைப் பற்றியே அவன் குறிப்பிடுகிறானென்பதை அறிந்து பத்மினியின் முகம் வெட்கத்தால் சிவந்தது. ஸித்திகள் பயங்கர நடவடிக்கைகளைப் பற்றி அவள் மேலே ஏதும் பேச இஷ்டப்படாமல் ரகுதேவை
நோக்கி, “எது எப்படியிருந்தாலும் உங்களைப் போன்ற ஒரு பெரிய கடல் வீரருடன் பிரயாணம் செய்ய நேர்ந்தது எங்களுக்குப் பெரிய பாக்கியந்தான்” என்றாள்.
“நான் அப்படிப் பெரிய கடல் வீரனுமல்ல. ஆனால், அத்தகைய பட்டம் அழகிய உதடுகளிலிருந்து உதிர்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது” என்றான் ரகுதேவ்.
இதைக் கேட்ட பத்மினி அதுவரை தாழ்ந்திருந்த தன் கண்களைச் சற்றே அவனை நோக்கி உயர்த்தி, “ஏது! போரில் மட்டுமல்ல, புகழ்ச்சியிலும் பின்வாங்க மாட்டீர்கள் போலிருக்கிறதே” என்றாள்.
ரகுதேவும் தன் கூரிய விழிகளை அவள் மேல் சற்று சஞ்சரிக்க விட்டான். அவன் கண்கள் பூவைச் சுற்றும் வண்டு போல் தன் அங்கங்களைச் சுற்றுவதைக் கண்ட பத்மினி மஞ்சத்தில் சிறிது அசைந்தாள். அந்த நெளிவின் அர்த்தத்தைப்
புரிந்துகொண்ட ரகுதேவ் மீண்டும் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான். சில விநாடிகள் கழித்து அவள் கேள்விக்குப் பதில் சொன்னான். “உண்மை சில வேளைகளில் புகழ்ச்சியாகத் தோன்றலாம்; இருந்தாலும் உண்மை
உண்மைதானே” என்றான். இதைச் சொல்லும் போது அவன் குரல் எவ்வளவு மிருதுவாகயிருந்தது என்பதைப் பத்மினி கவனித்தாள். சற்று முன்பு கப்பலில் ஏறி வரும்போது அதிகாரத்துடன் இரும்புச் சலாகையின் சத்தம்போல் ஒலித்த
அதே குரலில் இத்தனை மிருதுத்தன்மை எங்கிருந்து வந்தது என்று வியந்தாள். கடினத்தில் மிருதுத் தன்மையும் மிருதுத் தன்மையில் கடினமும் கலந்து நிற்க முடியுமா என்று ஆராய்ந்தாள். முன்பின் அறியாத அந்த வாலிபனைப் பற்றித்
தான் ஏன் அவ்வளவு ஆராய வேண்டும் என்ற நினைப்பு எழவும், அவள் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன.
எதைக் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அவள் கன்னங்களில் ஏறிய சிவப்பைக் கவனித்த பீம்ஸிங் அவர்களுடைய சம்பாஷணைக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் இடையில் புகுந்து, “இப்படியே பேசிக்கொண்டே போனால்
சாப்பிட வேண்டாமா! இருட்டி மணி இரண்டாகிறதே” என்றார்.
பேச்சின் சுவாரஸ்யத்தில் நேரம் போவது தெரியாமலிருந்த அவ்விருவரும் அப்பொழுதுதான் சுயநிலைக்கு வந்தார்கள். இருந்தபோதிலும் ரகுதேவ், “செவிக்குண வில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்று
பீம்ஸிங்குக்குப் பதில் கூறினான். இந்தத் தமிழ் வாக்கியத் தின் பொருளைப் புரிந்துகொள்ள முடியாமல் விழித்த பீம்ஸிங்குக்கு அர்த்தத்தை விளக்கும் முறையில் மீண்டும் சொன்னான் ரகுதேவ்: “இது திராவிட பாஷையிலுள்ள சிறந்த
செய்யுள். இதைத் திருவள்ளுவர் என்ற பெரியார் இயற்றியிருக்கிறார்.”
“உங்களுக்குத் திராவிட பாஷைகூடத் தெரியுமா?” என்று வினவினாள் பத்மினி.
“நன்றாகத் தெரியும். ஒரு வருஷம் தஞ்சை மாநகரில் இருந்திருக்கிறேன். மகாராஷ்டிர சாம்ராஜ்யம் தஞ்சை வரையில் நீடித்ததின் விளைவு இது.”
“விளைவுக்கென்ன, நல்ல விளைவுதானே” என்றாள் பத்மினி.
“எது நல்ல விளைவு?” என்று எரிந்து விழுந்தார் பீம்ஸிங்
“அறிவை அபிவிருத்தி செய்துகொள்ளுதல், பல பாஷைகளைத் தெரிந்து கொள்ளுதல்” என்று பத்மினி பதில் சொல்லிவிட்டு, மீண்டும் ரகுதேவை நோக்கி, “நீங்கள் சொன்ன வாக்கியத்தின் அர்த்தம் என்ன?” என்று கேட்டாள்.
குறளின் பொருளை மிக நன்றாக விளக்கினான் ரகுதேவ். “அர்த்தபுஷ்டியான பேச்சில் காது இன்பமடைகிறது. அத்தகைய இன்ப உணவு காதுக்குக் கிடைக்காத சந்தர்ப்பத்தில் மட்டும் வயிற்றுக்கு உணவு அளித்தால் போதும்.
அதாவது அழகிய பேச்சில் கிடைக்கும் இன்பம் அறுசுவை உண்டியில் கிடைக்காது என்பதுதான் செய்யுளின் அர்த்தம்” என்று விவரித்தான்.

.
“என்ன அழகான வாக்கியம்!”
“இந்த மாதிரி வாக்கியங்கள் திராவிட பாஷையில் ஏராளமாக இருக்கின்றன.”
“எனக்குச் சொல்லித் தருகிறீர்களா?”
இதைக் கேட்டதும் ரகுதேவ் சிரித்து, “உங்களுக்கு ஆனாலும் ஆசை அதிகம்” என்றான்.
“ஏன்?” என்று வினவினாள் பத்மினி.
“நான் உங்களுடன் பிரயாணம் செய்யப் போவதோ இரண்டே நாட்கள். அதற்குள் திராவிட பாஷையைக் கற்க ஆசைப்படுகிறீர்களே” என்றான் ரகுதேவ்.
இந்தப் பதிலைக் கேட்ட பத்மினியின் முகம் அந்தித் தாமரையெனக் குவிந்தது. இவன் தொல்லை இரண்டே நாட்களில் ஒழியும் என்ற எண்ணத்தினால் பீம்ஸிங்கின் முகம் காலைத் தாமரையாகக் காட்சியளித்தது.

Previous articleJala Mohini Ch1 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch3 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here